படம் பாக்கலாம் வாங்க

200 ரூபாயை எப்படியெல்லாம் உருப்படியாக செலவு செய்திருக்கலாம்?

பத்திரிக்கையில் வரும் விமரிசனங்களை நம்பி, சினிமாவுக்குப் போகலாமா?

ரசனைகள் மாறி விட்டனவா? உலகம் மாறி விட்டதா?

அல்லது எனக்குத்தான் வயதாகி விட்டதா?

சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசறேனேன்னு தோணுதா?

விளக்கமாகவே சொல்றேன்.

சென்ற வாரம் ‘என்றென்றும் புன்னகை’ என்ற தமிழ் திரைக் காவியத்தைப் பார்த்து விட்டு வந்ததால்தான் – இந்த புலம்பல்கள்!

பத்திரிக்கைகளில் இந்தப் படத்தைப் பற்றி, ஆஹா, ஓஹோ என்று எழுதியிருந்ததைப் படித்து விட்டு, படத்துக்குப் போய், நொந்து போய் விட்டோம்.

படம் ஆரம்பித்ததில் இருந்து எல்லோரும் குடிக்கிறாங்க, குடிக்கிறாங்க, குடிச்சுகிட்டே இருக்காங்க.

ஹீரோவுக்கு ஈகோ, நண்பர்களுடன் சண்டை, அப்பா கூட வருஷக்கணக்காக பேச மாட்டார், இப்படிப்பட்ட ஹீரோவைத்தான் கதாநாயகிக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. அது ஏங்க அப்படி? இதே குண நலன்கள்(!) இருக்கிற வில்லனை மட்டும் வெறுக்கிறீங்களே, ஏன்?

அதுவும் எப்படி? அமெரிக்க மாப்பிள்ளையைக் கூட வேணாம்னு சொல்லிட்டு – தப்பு, தப்பு – வேணாம்னு சொல்லலை, ஹீரோ கூட சண்டை வந்ததும் அமெரிக்க மாப்பிள்ளை கூட நிச்சயதார்த்தம் நடத்திக் கொள்கிறார், அப்புறம் – க்ளைமாக்ஸில், ஹீரோ மன்னிப்பு கேட்டதும், இந்த அமெரிக்கத் தம்பி அப்படியே அம்போன்னு விடப் படுகிறார்.

அருவருப்பான வசனங்கள், காட்சி அமைப்புகள் – இவையெல்லாம்தான் நகைச்சுவையா? இது தவிர, பத்திரிக்கைகள், முக நூலில் வந்த ஜோக்குகளை எல்லாம் வெட்கமே இல்லாமல் படத்தில் பயன்படுத்திக் கொண்டு, அதற்கு நாம் சிரிக்க வேண்டும் என்று வேறு நினைக்கிறார்கள் போலிருக்கு.

ஸ்லாப்ஸ்டிக் காமெடி என்று நகைச்சுவையில் அபாரமான ஒரு வகை உண்டு. சார்லி சாப்ளின், அப்புறம் நம்ம ஊரில் நாகேஷ் இவங்க எல்லாம் நிறையப் படங்களில் இந்த வகையில் அற்புதமாக திரையில் கொண்டு வந்திருப்பார்கள்.

(சர்வர் சுந்தரம் படத்தில் நாகேஷ் – ஒரு ஐந்து பைசா நாணயத்துடன் நம்மை சிரிக்க வைத்திருப்பார், நினைவு இருக்கிறதா?)

இந்த வகையை அபத்தமாக முயன்றிருக்கிறார்கள் இந்தப் படத்தில். எரிச்சல்தான் வருகிறது.

பட விமரிசனங்களில் – அனேகமாக எல்லாப் பத்திரிக்கைகளிலும் க்ளிஷேதான் – மெல்லிசை மனதை வருடுகிறது, அயல் நாட்டுப் படப் பிடிப்பு கண்களுக்குக் குளிர்ச்சி – இப்படி.

நிஜத்தில் எந்த ஒரு பாடலும் மனதில் தங்கவில்லை. அப்புறம் படப் பிடிப்பு – இன்றைய காமிராக்களின் மூலம் துல்லியமான காட்சி அமைப்புகளை நிச்சயம் பார்க்க முடியும். சந்தோஷமான காட்சியோ, துக்கமோ எதுவாக இருந்தாலும் டாப் ஆங்கிளில் இருந்து எடுக்க வேண்டும் என்று யார் ஆரம்பித்து வைத்தார்களோ தெரியவில்லை, கண்கள் வலிக்கிறது – திரும்ப திரும்ப இப்படியான காமிரா கோணங்களைப் பார்க்கும்போது.

பாடல் காட்சிகள் – நிறைய ஷாட்களுடன் எடுப்பது என்ற ஒரு பேசிக் ஐடியாவில் படம் பிடித்திருக்கிறார்கள், ஆனால், எதையும் ரசிக்க முடியாமல் வேகமாக ஷாட்கள் நகர்கின்றன.

பசங்க படத்தில் ஒரு பாடல் காட்சியைப் பார்த்திருப்பீர்கள். ‘ஒரு வெட்கம் வருதே, வருதே’ என்ற பாடல். நிறைய ஷாட்கள், பாடலுக்குள்ளேயே 2-3 சிறுகதைகளுக்கு உண்டான விஷயங்கள் இருக்கும். படத்தில் மழை வரும்போது, நாமும் அந்த மழையை உணர்ந்திருப்போம், நாயகி, ரிலாக்ஸ்ட் ஆக, மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டு, நகச்சாயம் பூசிக் கொண்டு, ஜன்னல் ஓரமாக நிற்கும் போது, அந்த சூழ்நிலைக்குள் நாமும் இருப்பது போல உணர முடியும்.

ஆனால், இந்தப் படத்தில் – பாடல் காட்சிகளின் போது, கொட்டாவிதான் வருகிறது.

மிகப் பெரிய நுணுக்கங்கள் தெரியாத பாமர ரசிகர்களும் ரசிக்கும்படியாக இருக்க வேண்டும், அப்படி இருந்தால்தான், படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும்.

இப்ப சொல்லுங்க – ஆரம்பத்தில் நான் கேட்டிருக்கும் கேள்விகள் சரிதானா?

5
Average: 4.2 (5 votes)

Comments

நான் அக்கானே விளிக்கிறேன் :)
நானும் பார்த்தேனே!! நொந்தேனே!! வெந்தேனே!!

நகைசுவை.. வார்த்தையே அழகா இருக்கு இல்லீங்களா, ஆனா காத பொத்திக்கிட்டேதான் பார்க்கணும். வேணா கண்ணை மூடிக்கலாம். கைய வெச்சு மூட முடியாது. அதான் காதை பொத்திட்டு இருக்கீங்களே!!
இப்பலாம் சந்தோஷம்னாலும் பாட்டிலு, துக்கம்னாலும் பாட்டிலு..ஒரே பாட்டில் சத்தமாவே இருந்துச்சுங்க.
இனிமே நல்ல வார்த்தை கெட்ட வார்த்தைனு பிரிச்சு பார்க்காம ஏகதேசமா எல்லா வார்த்தைகளையும் ஒரே வார்த்தையா அறிவிச்சு இருக்காங்க போல இருக்கு. நமக்கு அது தெரியாம டிக்கட் வாங்கிட்டு போய் "நுரையீரல் பஞ்சு போன்று மென்மையானதி"லிருந்து பார்த்தம்னா எப்படி.. தப்பு நம்ம மேல வெச்சுக்கிட்டு பழி சொல்றாப்பில ஆகிடும் இல்லீங்களா? :(

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

படம் பார்க்கலைங்க, ஆனா உங்கள் எழுத்தைப்படித்த பிறகு படம் சரியில்லைனு தெளிவா புரியுதுங்க,
ஏற்கெனவே படித்த ஜோக்ஸ் படத்தில் காமெடி என்று வருவது கொடுமைதான்ங்க, தற்பொதைய சினிமா உலகின் அவலங்களை தெளிவா சொல்லியிருக்கீங்க,
இதே மாதிரி "அறுசுவை உறுப்பினர் எழுதிய கதையில் வந்த காமெடி சமீபத்தில் ஒரு படத்தில் வந்ததுங்க"

நட்புடன்
குணா

நான் உண்மையை சொன்னா என் ரேஞ்சை மாத்திப்புடாதீங்க. நாங்க எல்லாம் கேங்கா தான் போனோம். படம் பார்த்து எல்லாருமே கெக்க புக்கென்னு சிரிச்சோமும் கூட. ஆனா கடைசியில் என்னோட கமண்ட் இது தான் “படம் காமெடி தான்... ஆனா உனிவர்சல் காமெடி இல்ல, ‘A’ காமெடி. கொஞ்சம் குறைச்சிருக்கலாம்.”

நீங்க சொல்ற மாதிரி இப்ப எல்லாம் ஹீரோன்னா எம். ஜி. ஆர், சிவாஜி இல்லை. அடிதடி பண்ணும் ரவுடி, கூலிக்கு கொலை பண்ணும் கையாள், ரோட்டோரம் தகராறு பண்ணும் பக்கிங்க, நல்ல குணம்னா என்னன்னே தெரியாமா தண்ணிய போட்டுட்டு சண்டைக்கு நிக்குறவங்க... இவங்களாம் தான் இன்னைக்கு ஹீரோ. கேட்டா எதார்த்தைத்தை வெச்சு கதை எடுக்கறாங்களாம்!!! எதார்த்தத்தில் இப்படி ஒரு ஆளை எவளாவது லவ் பண்ணா பைத்தியம்னு சொல்லணும். சினிமாவில் ஒன்னும் சொல்றதுக்கு இல்ல.

சந்தானம் காமெடி பாதி அடுத்தவங்களை அசிங்கமா திட்டி சிரிக்க வைப்பது தான், அவர் ரசிகர்களுக்கு தப்பா தோனும்னு சொல்றதுக்கு இல்லை. இப்ப நிஜ வாழ்க்கையிலும் மக்களின் ரசனை மாறி வருதுன்னு தான் எனக்கு தோணுது. பத்திரிக்கைகள் மட்டுமில்லை, பல ஆன்லைன் தளங்களும் டாப் ரேட் கொடுத்திருக்கு இந்த மூவிக்கு ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எப்பவும் திருடன் கதாபாத்திரத்துல ஹிரோவா நடுச்சா அவர் நல்லவர்தான்.அது போல் அமெரிக்காவில் இருந்து மாப்பிள்ளை வரதே ஹீரோவுக்கு விட்டு கொடுக்கதான.இதுல்லாம் சினிமா நியதி.

Be simple be sample

சீத்தாம்மா படம் பாக்க அழைச்சீங்களே சரி நல்ல படம் காட்டபோறீங்கன்னு நினைச்சேன் கடைசில மொக்கையா :o
சரி நீங்க 200ரூபாய் உருப்படியான செலவு செய்யலைன்னாலும் இதை படிக்கறவங்க உஷாரா இருக்க வழி வகுத்துருக்கீங்களே வாழ்த்துக்கள்ங்க மா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அன்பு அருட்செல்வி,

உங்க பதிவைப் படிச்சுட்டு, வாய்விட்டு சிரிச்சுட்டேன். நொந்து போறதையும் நகைச்சுவையா சொல்ல முடியுது உங்களால.

இந்தப் படத்தில் நகைச்சுவை மொக்கையா இருக்கறதைக் கூட, போனாப் போகுதுன்னு விட்டுடலாம்.

ஆனா, இப்ப வர்ற படங்களில் எல்லாமே - தமிழ் நாட்டு இளைஞர்கள் எப்பப் பாத்தாலும் குடிச்சுகிட்டேதான் இருப்பாங்க என்கிற மாதிரி எடுக்கறாங்களே, அதுதான் ரொம்ப எரிச்சல்/வேதனையா இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு வனி,

இந்தப் படத்தைப் பத்தி, விமரிசனங்கள் எல்லாமே பாராட்டித்தான் எழுதியிருக்காங்க. நாந்தான் கொஞ்சம் நிறையவே எதிர்பார்த்துட்டேன் போல:(

சந்தானம் காமெடி எனக்கு ரொம்பவே பிடிக்கும் வனி. பாஸ் என்ற பாஸ்கரன் படத்துல அசால்டா செய்திருப்பார்.

அதே மாதிரி வினய் கூட ஒரு படத்துல ஒரு வசனம் சொல்வாரே - ‘ நான் வேணா அடுத்த தடவை அவங்கள வோடஃபோன்னு தும்ம சொல்றேன்னு’. நல்லாவே இருக்கும். கவுண்டமணியை இமிடேட் பண்றாரோன்னு சில சமயம் தோணும், ஆனாலும் ஓகே.

இந்தப் படத்தில் வரும் நகைச்சுவை - ஊஹூம், ஊஹூம்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு ரேவதி,

ஆமாம், அமெரிக்க மாப்பிள்ளை என்பதே இப்ப ஒரு காமெடி ஆகிடுச்சு. அதுக்குன்னே அப்பாவியாக ஒரு நடிகரை நடிக்க வச்சுடறாங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு குணாங்,

புதுசா எதுவும் சொல்லலைன்னாலும், அதை ரசிக்கிற மாதிரி சொல்லியிருந்தால் பரவாயில்ல். முடியல, குணாங், முடியல.

அறுசுவை காமெடியை படத்திலும் காப்பி அடிக்க ஆரம்பிச்சுட்டாங்களா? ம், என்னத்தை சொல்ல.

படம் சரியில்லன்னு சொல்றத விட, எனக்குப் பிடிக்கல குணாங். வனி நல்லா இருக்குன்னு சொல்லியிருக்காங்க பாருங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு ஸ்வர்ணா,

ஹி, ஹி, ஏதோ என்னால ஆன உதவி:):)

எப்படியும் இன்னும் 2-3 மாசத்துல - ஏதாவது சேனல்ல, ‘ புத்தம் புதிய திரைப்படம்’னு போடத்தானே போறாங்க. பேசாம வெயிட் பண்ணியிருந்திருக்கலாம் நான்.:(

அன்புடன்

சீதாலஷ்மி

சீதாம்மா படம் பார்க்கலாம் வாங்கன்னு சொல்லிட்டு தியேட்டருக்கு இனிமேல் விமர்சனங்களை நம்பி போகக் கூடாதுன்னு பளிச்சுன்னு ஒரு ரிபோர்ட் கொடுத்துட்டீங்க.. சூப்பரு, நானெல்லாம் டோரண்ட்ஸ்ல படம் பார்க்கற ஆளு, நல்ல வேல இன்னைக்கு நைட்டு இந்த கிரகத்தத்தான் பார்க்கலான்னு முடிவு செய்துருந்தேன், தப்பிச்சேண்டா சாமி.. அறிவுக் கண்ண பளிச்சுன்னு திறந்து வெச்சதுக்கு டபுள் தேங்ஸ்..:)
//மிகப் பெரிய நுணுக்கங்கள் தெரியாத பாமர ரசிகர்களும் ரசிக்கும்படியாக இருக்க வேண்டும், அப்படி இருந்தால்தான், படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும்.// ஆணித்தரமான உண்மை..
//ஆரம்பத்தில் நான் கேட்டிருக்கும் கேள்விகள் சரிதானா?// நீங்க பெரியவங்க.. நாலும் தெரிஞ்சவங்க.. நீங்க கேட்டா அது சரியாத் தான் இருக்கும், வேற அப்பீலே இல்ல... வாழ்த்துக்கள் சீதாம்மா..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

//வனி நல்லா இருக்குன்னு சொல்லியிருக்காங்க பாருங்க.// - நான் எப்போ நல்லா இருக்குன்னு சொன்னேன்???!!! “A” படம்னு சொன்னா நல்லா இருக்குன்னு சொன்னதா அர்த்தமா? 3:) சென்னையில் தான் இருக்கேன்... ஆட்டோ அனுப்பிடுவேன் வீட்டுக்கு... மகளே உஷார்!!! அட்ரஸ் தெரிஞ்ச ஆள்னு நினைவு இருக்கட்டும். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு சுமி,

உங்களோட சிக்னேச்சர் வாசகமே, சொல்ல வேண்டிய எல்லாத்தையும் சொல்லிடுச்சு!

ஆமா, பத்திரிக்கை விமரிசனங்களை எல்லாம் விட, நாம படம் பாத்து வர்ற அனுபவம் இருக்கு பாருங்க....

என்னத்த சொல்ல :):)

பதிவுக்கு நன்றி, சுமி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு வனி,

சாரி, வனி, உங்க பதிவை முழுசாப் படிக்காம எழுதிட்டேன், இனிமே வரிக்கு வரி, எழுத்துக்கு எழுத்து படிச்சுடறேன், சரிதானே

ஆட்டோ அனுப்பறதோட இல்லாம, நீங்களும் அதே ஆட்டோவில் வந்துடுங்க வீட்டுக்கு. :):):)

அன்புடன்

சீதாலஷ்மி

உங்கள் விமரிசனம் படித்த பின் படம் பார்க்கவே தோன்றவில்லை.

‍- இமா க்றிஸ்

சீதாலக்ஷ்மி மேடம்,
இந்த படத்தை பார்த்துவிட்டு நானும் கூட நீங்கள் கேட்ட அதே நாலாவது கேள்வியை தான் கேட்டேன்... ஏனென்றால் இங்கே அருகிருக்கும் பல நட்புக்களுக்கும் அந்த படம் மிகவும் பிடித்திருந்தது ;-) ஏன் வீட்டிலேயே என்னை தவிர மீதி இரண்டு பேருக்கும் பிடித்திருந்தது :-(

எனக்கு படம் பிடிக்கவில்லை ஆனால் இரண்டு பாடல்கள் மட்டும் பிடித்திருந்தது :D

மற்றபடி உங்களின் விமர்சனம் 100 / 100

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

அன்பு இமா,

ஓரளவுக்காவது நல்லா இருந்தால் கூட, சுமார், பரவாயில்லை என்று சொல்லலாம், நல்லா இல்லை என்பதை விட, படம் பார்த்த பின் அலுப்புதான் மிஞ்சியது.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு பிந்து,

நீங்க சொல்வது சரியே. படம் நல்லா இல்லைன்னு நாம் சொன்னால், உனக்குத்தான் ரசிக்கத் தெரியலை என்று சொல்லி விடுவார்களோ என்று தோன்றுகிறது.

ஆஹா! 100/100!

ஆத்தா! நான் பாஸாயிட்டேன்!

நன்றி, பிந்து!!

அன்புடன்

சீதாலஷ்மி