மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு...

என்னுடைய முதல்பதிவாக இதை எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். எழுத முடியாமல் போய்விட்டது.
இந்த கட்டுரையின் வாயிலாக எனக்கு ஆரம்பள்ளியில் எண், எழுத்து கற்றுத்தந்த எனது ஆசிரியருக்கு நன்றி சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

நான் இப்படி கணினியில் எழுதுவேன் என்றோ, இது போல் ஒரு பிரபலமான வலைத்தளத்தில் என் கருத்துக்களையும், எண்ணங்களையும் பதிப்பேன் என்றோ கடந்த வருட ஆரம்பம் வரை கனவிலும் நினைத்ததில்லை. இந்த இடத்தில் அறுசுவைக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதன்முதலாக பள்ளிக்குசென்ற நாட்கள் பசுமரத்தாணி போல் இன்னும் என்னுள் அமர்ந்திருக்கிறது. குறைந்த வயதிலேயே பள்ளியில் சேர்க்கப்பட்டேன். பள்ளி என்பது வெறும் எழுத்துக்களை மற்றும் கற்றுத்தராமல் கூடவே வாழ்க்கைக்கான கல்வியையும் கற்றுத்தருவதாக அமைந்திருந்தது. அதற்கு காரணம் திரு. சுந்தரம் ஆசிரியர் அவர்கள் (தலைமை ஆசிரியர்). அன்பு கலந்த கண்டிப்பானவர். மிக எளிமையானவர். தும்பை பூ போன்று வெள்ளை நிற கதர்வேட்டியும், சட்டையுமே அவரது எளிமையை பறை சாற்றுவதாக இருக்கும்.

பள்ளிக்குள் இருக்கும் காலி இடங்களெல்லாம் அவரின் முயற்சியால் மரங்களும், பூக்களும் பூத்து குலுங்கும் சோலையாக திகழ்ந்தது. செம்பருத்தி, இராமவனம் போன்ற செடிகளுக்கு அங்கு பஞ்சமே இராது. மைதானத்தில் புங்கன் மரங்கள் நிழல் பரப்பிக் கொண்டிருக்கும் எப்போதும்.

தினமும் மாணவ, மாணவியர் அந்த செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். வாரம் ஒருநாள் சிறு சிறு களைகள் எடுப்பது துப்புரவு பணிகள் ஆகியவை நடைபெறும்.
தென்னைமரக்கன்றுகளும் நடப்பட்டு அதற்கு தனித்தனி குழு அமைத்து தண்ணீர் பாய்ச்ச களை எடுக்க என்று நியமனம் செய்வது உண்டு.
வீட்டில் இருக்கும் செடிகளுக்கு நீர்பாய்ச்சவோ, துப்புரவுபணிகள் மேற்கொள்ளுகிறோமோ இல்லையோ பள்ளிச்செடிகளுக்கு அன்றாடம் பணி செய்வது நடக்கும். செடிகளின் மீது இன்றளவும் பற்று வருவதற்கு காரணம் சிறு பிராயத்தில் எங்கள் ஆசிரியர் போதித்த பாடமே என்றும் சொல்லலாம்.

ஒரு முறை அவர் மாண(வி)வர்களாகிய எங்களிடம் சொல்லிய வார்த்தைகள் இப்பொழுதும் கூட என்காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
"நீங்கள் பெரியவர்களாகி திருமணம் முடித்து வரும் போது உங்கள் கணவரிடம், குழந்தைகளிடம் இது நான் வைத்த மரம் என்று கூறவேண்டும் என்று கூறுவார். ஒவ்வொரு மரத்தையும் பார்வையிட்டு அதற்கான மதிப்பெண்களும் வழங்குவார்.
அந்த வயதான முகமும், அனுபவம் மிக்க பேச்சும் நிறைய கற்று தந்தன. ஆனால் அப்பொழுது எல்லாம் அவை முக்கியத்துவம் வாய்ந்த வார்த்தைகளாக தெரியவில்லை. எங்களையும் அறியாமல் நல்ல விஷயங்களை எங்கள் மனதில் பதிய வைத்துவிட்டார்.

(தற்சமயம் எங்கள் ஊரில் விழா நடந்தது. அப்பொழுது அவ்வழியாக செல்லும் போது எனக்கு நினைவுகள் பின்னோகி சென்று விட்டன. என் அம்மா வீட்டிற்கும் பள்ளிக்கும் தூரம் குறைவு ஆனால் வழி வேறு ஆதலால், பல வருடங்கள் கழித்தே அந்த வழியில் சென்றேன். குறைவான மரங்கள் மட்டுமே இருந்தன.)

மிகவும் முரண்டு பிடிக்கும் மாணாக்கர்களுக்கு மிகக் கண்டிப்பானவர் என்றே சொல்லலாம். வீட்டில் பள்ளிக்கு வராமல் அடம்பிடிக்கும் மாணவர்களை அவர்களின் பெற்றோரே ஆசிரியரிடம் சொல்லி தண்டனை வழங்குமாறு இழுத்து வரும் நிகழ்வுகளும் நடந்ததுண்டு.

கெட்ட வார்த்தை பேசும் மாணாக்கர்களுக்கு அவர் அளிக்கும் தண்டனை மிகவும் நூதனமானது, என்னவென்றால் சாதத்திற்கு போடுவதற்கு சத்துணவு மையத்தில் கல் உப்பு வைத்திருப்பார்கள், அதை அள்ளி பேசிய மாணவனின் வாயினுள் போட வேண்டும். அதுவும் யாரை நோக்கி அவர் அந்த வார்த்தைகளை பிரயோகித்தாரோ அவராலேயே போடப்படும்!!

அதே போல் மாணாக்கர்கள் அடித்துக்கொண்டால், யாரை அடித்தாரோ அவராலேயே மண்டையில் நறுக்கென கொட்டு வைக்கச் சொல்லுவார்.
சமீபத்தில் கூட ஏதோ ஒரு திரைப்படத்தில் இந்நிகழவை பார்த்தவுடன் எனக்கு என் ஆசிரியர்தான் நினைவுக்கு வந்தார்.
வீட்டுப்பாடம் படிக்காமலோ, எழுதாமலோ வந்தால் யார் யார் எழுதவில்லையோ அவர்களை இரண்டிரண்டு பேராக காதைப் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போடச் சொல்லுவார்.
4ஆம் வகுப்பு 5 ஆம் வகுப்புக்கு அவர் ஆசிரியராக இருந்தார். அந்த வருடங்களில் தான் நான் எழுத படிக்கவே ஆரம்பித்தேன். மதிய உணவு இடைவேளையின் போது கட்டாயம் மனக்கணக்கு அல்லது டிக்டேஷன் டெஸ்ட்டுகள் நிச்சயம் உண்டு.

அதே போல் மதிய உணவானது அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ண வேண்டும்.
அதாவது வகுப்பறையின் சுவர் ஓரத்தில் சதுரமாக அனைவரும் அமர வேண்டும். வகுப்பறைகள் பெரிய அளவினதாக இருக்கும். இரண்டு வகுப்புகள் சேர்ந்தது ஒரு அறையாக இருக்கும்.

கீழே மரப்பெஞ்சுகள் போடப்பட்டிருக்கும் 3 ஆம் வகுப்பு வரை, ( சம்மணமிட்டு அமரும் வகையில்) 4, 5 ஆம் வகுப்புகளுக்கு சற்று உயரமான மரப்பெஞ்சுகள் போடப்படிருக்கும்.

உணவு உண்ணும் முன்பாக கடவுள் வாழ்த்து பாடுவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

அதே போல் சாதம் சிந்தாமல் சாப்பிட வேண்டும். கீழே கொட்டுவதற்கு அனுமதி கிடையாது. என்ன உணவு என்பதையும் நோட்டமிடுவார்.

தோட்ட வேலை செய்யும் நாட்களில் அனைவருக்கும் கோதுமை கஞ்சி வழங்கப்படும். கட்டாயம் அனைவரும் அருந்த வேண்டும் இல்லையேல் கண்டிப்பார்.

ஆயுத பூஜை காலங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கும். 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே உள்ளதால், கடைசி வருட மாணவர்கள் என்ற பெருமையும் கூட சேர்ந்து கொள்ளும். ஆயுத பூஜைக்கு தேவையான சுண்டல், பொரிகடலை, பூஜை சாமான்கள் வாங்குவதற்கு அழைத்துசெல்வார். வீட்டில் அதுபோல அந்த வயதில் யாரும் அழைத்து செல்ல மாட்டார்கள்.

பெரும் குஷியுடன் ஒரு படி உயர்ந்துவிட்ட எண்ணத்துடன் ஆசிரியருடன் பஸ்ஸில் சென்று தேவையான பொருட்கள் வாங்குவது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.

ஆயுத பூஜையன்று புத்தகங்களை பள்ளியிலேயே வைத்து பூஜை செய்து, அடுத்த நாள் மறுபூஜை செய்து அனைவரும் பெற்றுக்கொள்ளவேண்டும்.
ஊர் பெரியவர்கள் அனைவருமே ஆஜராகிவிடுவர். கலர் காகிதங்கள் எல்லாம் கட்டி பள்ளியே புது வித தோரணையுடன் விளங்கும்.

அதேபோல் தினமும் காலையில் பள்ளி மைதானத்தில் கொடிக்கம்பத்தை சுற்றிலும் மாணவ மாணவியர் நிற்க வைக்கப்படுவர்.
அந்த கொடிக்கம்பத்தின் படியில் நின்று தினமும் ஒருவர் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும், மற்றவர்கள் பின் தொடர்ந்து பாடவேண்டும். கூடவே உறுதி மொழியும் உண்டு.

மாலையில் தேசிய கீதம் பாடி கொடியை அவிழ்த்து அழகாக மடித்து வைத்துவிடவேண்டும். இதெல்லாமே சீராக எந்த தவறுமின்றி நடந்துவிடுமளவுக்கு மாணவர்களுக்கு போதித்து விடுவார் ஆசிரியர்.

மேலும் இது போல் மாணவர்களுக்கு பயிற்றுவிப்பதால் மேடைபயம் இன்றியே இருந்தோம் என்றும் சொல்லலாம். ஆனால் எதுவுமே நடைமுறையில் இருந்து கொண்டே இருந்தால்தான் கைவசப்பெறும் இல்லையா? இப்பொழுதெல்லாம் மேடையை பார்த்தாலே பயமாக இருக்கிறது.

நான் பள்ளி மாறிச்செல்லும்போது அப்பள்ளிகளில் எல்லாம் திங்கள், வெள்ளி மட்டுமே கொடியேற்றுவார்கள்.

தினமும் கொடியேற்றும் வழக்கம் எல்லா பள்ளிகளிலும் இருப்பதாக தெரியவில்லை.

இப்பொழுதெல்லாம் பள்ளிகளில் வகுப்பறையிலேயே ப்ரேயர் முடித்துவிடும் நிலை கூட உண்டு என்று தெரிகிறது.

நாம் செலவளித்து, குழந்தைகள் கூடவே நாமும் படித்து கொண்டிருக்கும் இந்நேரத்தில் சில மாற்றங்களை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும், ஆனால் அடிப்படையையே மறந்து விட்டு வெறும் ஏட்டு சுரைக்காயை மட்டும் வைத்துக்கொண்டு எத்தனை நாளைக்கு கறிசமைக்க முடியும்?

அவர் இறந்து பலவருடங்கள் உருண்டோடிய நிலையில், அவரால் ஆரம்பக்கல்வி பயிற்றுவிக்கப்பட்ட நான் அவரைப்பற்றிய கருத்துக்களை பதிந்துள்ளேன் என்பது அவருக்கு தெரிய நியாயமேயானால், அவரின் புன்சிரிப்பு தவழும் முகத்தில் நிச்சயம் பெரிதான ஒரு புன்னகையை பூக்க வைப்பார்.

Average: 5 (3 votes)

Comments

நல்ல பதிவு. ஒவ்வொருவருக்கும் ஆரம்ப பள்ளி ஆசிரியர்(யை) என்பவர் எப்பொழுதும் நினைவுகூரத்தக்கவர். எனக்கு என்னுடைய தேவகி டீச்சர். என்னுடைய சிறு வயது பள்ளி நினைவுகளை சந்தோஷமாக அசைபோட வைத்துவிட்டது உங்கள் பதிவு. நன்றி.

இதில் இராமவனம் என்ற செடியைப் பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். நான் கேள்விப்பட்டதில்லை. அதைப்பற்றி கொஞ்சம் சொல்லவும். உங்களுடன் பேசுவது எனக்கு மிகவும் சந்தோஷம்.

அன்புடன்
ஜெயா

எனக்கும் என் பள்ளி பருவம் ஞாபகம் வந்துவிட்டது. மிக்க நன்றி
அன்புடன் நிர்மலா

அருள் அருமையான பதிவு அனைவருக்கும் பள்ளி பருவம் என்பது மறக்கமுடியாத நினைவுகள்
எனக்கும் என் ஆசிரியைகள் லீமாசகாயம்,ஜீவா டீச்சர் நினைவு வருகிறது :)
உங்களோடு எங்களையும் பள்ளி பருவத்திற்க்கு கொண்டு சென்றதற்கு நன்றியுடன் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரொம்ப அருமையான பதிவுங்க,
பழைய நினைவுகளும் படிக்க இனிமைங்க, :-)
வாழ்த்துக்கள்ங்க

நட்புடன்
குணா

அருமையான பதிவு, உங்க சார்பா இதனை எல்லா ஆசிரியர்களுக்கும் சமர்பிக்கிறேன், அந்த அளவு நெஞ்சை நெகிழச் செய்துவிட்டது. எனக்கும் ஆரம்பப் பள்ளி ஆசிரியைனா என்னோட முதல் வகுப்பு முதல் 5 வகுப்பு வரை வகுப்பு ஆசிரியையா வந்த கோகிலா டீச்சர் தான் நியாபகத்துக்கு வர்றாங்க. ஆனா அவங்க இப்போ இந்த உலகில் இல்லை, நான் 11வது படிக்கும் போது புற்றுநோய் எனும் காலன் அவங்களை எங்க கிட்ட இருந்து ப்றித்துவிட்டான்,அந்த நாளை மறக்கவே முடியாது, அவர்களுக்கு குழந்தைகளும் இல்லை, ஆனா அவர்களின் இறுதி யாத்திரையில் கல்ந்த எல்லோருமே அவர்கள் வயிற்றில் பிறவாத மாணவ மணிகள் தான்.எனக்கு சிறு வயது ரோல் மாடலே அந்த டீச்சர் தான்.. என் பள்ளிப் பருவத்தை தட்டி எழுப்ப உதவிய உங்கள் கட்டுரைக்கு எனது நன்றி.தொடர்ந்து எங்கள் மனக் கதவை உங்கள் எழுத்து மூலம் திறக்க வாழ்த்துக்கள் அருள்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

அன்பு அருட்செல்வி,

மாதா பிதா குரு தெய்வம் என்று சொல்வாங்க.

குருவுக்கு நீங்க செய்திருக்கும் இந்த சமர்ப்பணம் அருமை.

அன்புடன்

சீதாலஷ்மி

அருள். எனக்கும் என் பள்ளி ஆசிரியை நியாபகம் வந்துடுச்சு அருமையான பதிவு செல்வி

Be simple be sample

Anbu thozhikku,
Nan arusuvai neenda natkalagave vasithu varukiren.ungal pathivu ennui mudhalil karuthu therivikka thundiyathu.Nan paditha palliyil lidiyal endra asiriyai innum en ninaivil irukkirar. Lkg mudhal 8m vaguppuvarai udan irunthar.avarice pillar policy ennui parthukonda asiriyaiku yen anbaiyum engender samarpikkeren

எனக்கும் என் பள்ளி பருவம் ஞாபகம் வந்துவிட்டது. மிக்க நன்றி

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

தங்களின் பதிவு மீண்டும் என் வலைப்பதிவில் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. மிக்க நன்றி தோழி :)

இராமவனம் என்று கூறமாட்டோம், இராமகோணம் என்றுதான் கூறுவோம்.
(பேச்சு வழக்கில்) இதற்கு வேறுபெயர் பிச்சி பூவாக இருக்குமோ என சந்தேகமாக உள்ளது. நன்றாக தெரிந்து கொண்டு பதில்தருகிறேன். பார்த்தால் புகைப்படம் எடுத்து இக்கட்டுரையில் இணைக்கிறேன்.
இரவில் மலரும், நல்ல வாசனையாக இருக்கும். பார்ப்பதற்கு முல்லை பூ போலவே இருக்கும். செடி நன்கு படரும் தன்மையுடையது. காலையில் புளியம்பூ போல் ஆகிவிடும். வாசனையும் போய்விடும்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நிச்சயம் யாருமே பள்ளி பருவத்தை மறக்கவே முடியாது :)
பதிவிட்டமைக்கு மகிழ்ச்சி கலந்த நன்றிகள் நிர்மலா :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நிச்சயமா ஞாபகம் வரும் சுவா :) கவலைகள் ஏதுமின்றி துள்ளித்திரிந்த பருவமல்லவா. ஆம் ஆசிரியர்கள் பெயர், அவர்களின் பரிவான வார்த்தைகள் அனைத்துமே மறக்க முடியாத நினைவுகள்தான் இல்லையா :)
மிக்க நன்றி சுவா :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மிக்க நன்றி குணா ங்க :) எப்பொழுதும் மறக்கமுடியாத நினைவுகள்தான் பள்ளி பருவம் என்பது, தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றிங் தம்பிங் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சுமி தங்களின் பதிவு மனதை கனக்கச்செய்து விட்டது தோழி.....:(
தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி சுமி.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஆமாங்க அப்பலாம் ஆசிரியர்களை தெய்வமாவே மதிப்போம்.
இப்பக்கூட என்குழந்தைகள் பாடத்தில் ஏதேனும் தவறாக இருக்கும்போல என திருத்தம் செய்தால், இல்லை நீங்கள் சொல்வதுதான் தவறு, என் டீச்சர் எப்பொழுதும் தவறாக சொல்லமாட்டார்கள் எனக்கூறுவதுண்டு.

மிக்க நன்றி தங்களின் உற்சாகமூட்டும் பதிவு இன்னும் நிறைய எழுதவேண்டும் என்னும் ஆவலை உண்டு பண்னுகிறதுங்க சீதாமேடம்:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ரேவ்ஸ் மிக்க நன்றிப்பா :) கடந்த காலத்தை நினைக்க வைத்தேன் எனக்கூறுவது மிக்க மகிழ்சியளிக்கிறது தோழி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

உங்களை பதிவிட தூண்டியது என்பதிவு என்பது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது தோழி:)

நான் ஒருவிசயம் கூறினாள் தவறாக எடுக்கமாட்டீர்கள்தானே, தங்களின் பதிவை தமிழில் எழுதியிருந்தால் இன்னும் இனிமையாக மனதுக்கு இதமாக இருக்கும் தோழி, தயவு செய்து முயற்சிப்பீர்களா? மிகவும் எளிதாக எழுதிவிடலாம்.

தங்கள் ஆசிரியர் பெயர் சொல்லி இருக்கிறீர்கள் ஆனால் எனக்கு உச்சரிக்கவே தெரியவில்லை தோழி :(
நான் ஏதேனும் தவறாக கூறியிருந்தால் மன்னியுங்கள் ரஞ்சனி.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

தங்களின் பகிர்விற்கு மிக்க நன்றி சுபி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

Happy to read your reply. Sorry friend I don't know how to reply in Tamil.

எனக்குத்தான் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது :) (சாரி வெச்சிருங்க தீபாவளியப்ப நானே வந்து வாங்கிகொள்கிறேன் :))

தோழி கீழே வலது கைப்பக்கம் 'தமிழ் எழுத்துதவி' னு இருக்கு பாருங்க, அதை க்ளிக் பண்ணினா 2 பெட்டி வரும் அதில ஒரு பெட்டில இங்கே எழுதியது போலவே தமிங்கிலத்தில் எழுதினால் அழகான தமிழில் வார்த்தைகள் தோன்றும். காப்பி பேஸ்ட் பண்ணிடுங்க. மிகவும் எளிது :) முயற்சி பண்ணுங்க ரஞ்சனி :)
மிக்க நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

தங்கள் உதவிக்கு நன்றி. என் அசிரியை பெயர் லிடியா.கண்டிப்பாக உங்கலுக்கு சாரி திபாவளிக்கு.;:.

பள்ளி நிகழ்வுகளை நினைவூட்டிய அருளுக்கு மிக்க நன்றி...
உங்களுக்கு கிடைத்த ஆசிரியர் போலவே எனக்கு 2 ஆசிரியைகள். திருமதி.திரிபுரசுந்தரி மற்றும் திருமதி.ஜெயலெட்சுமி.

கலை

சிவரஞ்சனி மிக்க நன்றி :) ஆசிரியை பெயர் அழகா இருக்குங்க.
கலை வாங்க மிக்க நன்றி:) சிறுபிராயத்தில் நடந்தவை எப்பொழுதுமே மறக்கமுடியாதவைதானே!! ஆசிரியர்கள் ஏணி போல ஏற்றிவிட்டு கீழேயே நிற்பர், என எப்பவோ படித்த வரிகள் ஞாபகம் வருது கலை :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

எனக்கும் என் பள்ளி பருவம் நினைவுக்கு வந்துவிட்டது. என் தோழிகள், ஆசிரியர்கள் எல்லாம் மறக்க முடியாத நினைவுகளாக, இருக்கிறது.

அருமையான பதிவு அருள் :-)

//முதன்முதலாக பள்ளிக்குசென்ற நாட்கள் பசுமரத்தாணி போல் இன்னும் என்னுள் அமர்ந்திருக்கிறது.//
எப்படி இதெல்லாம்? சூப்பர்ங்க!

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

பாலபாரதி வருகைக்கும் , கருத்திற்கும் மிக்க நன்றி :)

பிந்து மிக்க நன்றி :) பசுமரத்தாணி நிறைய முறை வாக்கியத்தில் அமைத்து எழுதுகவில் எழுதி இருக்கேன். அதனால் சரளமா வந்துடுச்சு... மிக்க மகிழ்ச்சி..:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.