எலி வளையானாலும் தனி வளை

சுவாதிக்கு சொந்தமாக வீடு கட்டி குடியேற வேண்டும் என்பது நீண்டகால அவா.
சுகுமாருக்கோ வீடு கட்டுற செலவுல வேறு எதிலாவது முதலீடு செய்தால், அந்த பணம் பெருகும், அதைவிட்டு விட்டு இப்படி பணத்தை முடக்குவதில் என்ன இலாபம் இருக்கு என்று இலாப நஷ்ட கணக்கு சொல்லி வீடு கட்டும் திட்டத்தை தள்ளி வைப்பதிலேயே குறியாக இருந்தான்.

அதுவுமில்லாம நமக்கு என்ன வயசாச்சு இப்ப புடிச்சு வீடு வாசல் தோட்டம் தொறவுனு சொல்லிக்கிட்டே இருக்க. நம்ம குழந்தை இன்னும் ஸ்கூல் போக ஆரம்பிக்கல, அவனுக்கு எங்க ஸ்கூல் கிடைக்குதோ அதுக்கு தக்கவாறு வீடு மாற்றிக் கொள்ளலாம்.
இதெல்லாம் சொந்த வீட்ல நடக்கிற வேலையா. பக்கத்தில இருக்க ஏதோ ஒரு ஸ்கூல்லதான் சேர்க்க முடியும், நம்ம கனவு பள்ளில(??) சேர்க்க முடியுமா?

இப்ப பாரு மாசாமாசம் வாடகை கொடுத்தா போதும் வேறு எந்த பிக்கல் பிடுங்கலும் இல்லை.
வீட்டு முதலாளியே கரண்டு பில், தண்ணீ பில் னு கட்டிடறாரு, நமக்கு அலைச்சல் இல்லை பணத்தை கொடுத்தா போதும், வேலை முடிஞ்சது என்று சொல்லி சுவாதியை சமாதானப்படுத்துவதில் தனது முழு கெட்டிகாரத்தனத்தையும் காட்டிக் கொண்டிருந்தான்.

ஆனாலும் சுவாதிக்கு கனவு இல்லம் மனதில் கனன்று கொண்டே இருந்தது.

வீட்டில் இருந்தே வேலை செய்து கொண்டிருந்த படியால், சுவாதிக்கு அலைச்சல் குறைவு, அதே போல் நிம்மதியும் குறைவு.

நல்ல மாப்பிள்ளை மட்டும் கிடைத்தால் பத்தாது, மாமியாரும் நல்லவராக இருக்க பல ஜென்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்பதை போல, வீடு மட்டும் சௌகர்யமாக இருந்தால் போதாது, வீட்டு முதலாளியம்மா கனிவானவராக இருக்க வேன்டும் என்பது மிக முக்கியம்.

அமைதியாக வேலை பார்க்க நினைக்கும் சுவாதிக்கு, அதுவும் குழந்தையை தூங்க செய்துவிட்டு கிடைக்கும் சொற்ப நேரத்தில் தனக்கான ப்ராஜெக்டை முடிக்க வேண்டும் என்னும் ஆவலாதியுடன் கணினி முன் கண்ணும் கருத்துமாக அமரும் நேரத்தில்,

ஏம்மா.. சுவாதி காலைல வாசல் பெருக்கி கோலம் போடலியாம்மா, அதான் முறைவெச்சு ஆளுக்கு ஒரு வாரம்னு சொல்லியிருக்கேனே, இந்த வாரம் நீதானே, ஏன் பண்ணல?
வீட்டு முதலாளியம்மா கர்ஜனைக்குரலில் கேட்டுக்கொண்டே வந்தார்.

அம்மா அது வந்து... அது வந்து.. இன்னிக்கு முதல் நாள்கிறதால மறந்துட்டேங்மா,.. நாளைல இருந்து மறக்காம போட்டுடறேன்.

என்னமோ போ, வயசு புள்ள வெடியால வெட்டு வெடுக்குனு எழுந்து வாசப்பெருக்கி கோலம் போடவேண்டாமாக்கும்...

இதுக்கு மின்னாடி குடியிருந்த புள்ள, கோழி கூப்பிட எழுந்து வாசப்பெருக்கி அழகா நெளிக்கோலம் போடுமாக்கும், அவ்வளவு அழகா இருக்கும்.

வெசாலக்கெழமை ஆனா வாசலுக்கு பச்ச சாயம் போட்டு வளிக்கோணுமாக்கும், ஞாபகம் வெச்சுக்க.

சுவாதிக்கோ கோபம் பொத்துக்கொண்டு வரும், ஆனால் அதெல்லாம் வீட்டு ஆட்களிடம் மட்டுமே செல்லும், அடுத்தவர் முன்னால் கண்ணில் வியர்வை மட்டுமே ஊறும்.

குழந்தை சிணுங்கவே சுவாதியைவிட்டு வீட்டு முதலாளியம்மாவும் அகல, ஆரம்பிக்க நினைத்த வேலையும் அப்படியே போட்டுவிட்டு ஓடினாள். இனி மதிய உணவு முடித்து, அப்படி இப்படி என்று நேரம் வெகுவேகமாக ஓடிவிடும். வேலை எப்படி முடிப்பது.

ச்சே எல்லாமே ஸ்பாய்ல்....

அவர் வரட்டும் பேசிக்கிறேன், என மனதில் கறுவிக்கொண்டே அடுப்பில் வைத்த பொரியலை கறுவாமல் தாளிப்பதில் மும்மரமானாள்.

மணி ஒன்று ஆகவும், வேலைகளை முடித்துவிட்டு கணவனுக்காக காத்திருந்தாள் சுவாதி.

கணவன் வந்த உடன் சாப்பாடு பரிமாறிக்கொண்டே காலையில் நடந்த நிகழ்வுகளைக் கூறினாள்.

இதுக்கு ஏன் இவ்வளவு வருத்தப்படுற சுவாதி. நம்ம வீடா இருந்தா செய்யமாட்டோமா?
இல்ல நம்ம வீட்டு மனுஷங்க இது போல கூறினால் ஏற்றுக் கொள்ளத்தான் மாட்டமா?
அவங்க கஷ்டப்பட்டு கட்டி வாடகைக்கு விட்டிருக்காங்க, குடித்தனக்காரர்கள் சுத்தமா வெச்சிருக்கணும்னு சொல்றதுல என்ன தப்பு?

இல்லேங்க தண்ணிய அளவா புழங்கு, கரண்டு பில் சப்மீட்டர் நீங்க அதிகமா பயன்படுத்தினா, மெயின் மீட்டருக்கும் அதிகமா வருது அப்படி இப்படினு சொல்லிட்டே இருக்காங்களே இதெல்லாம் கஷ்டமா இருக்கு.

மேலும் உறவினர் வருகை ஆகாதாமே? அதுவும் வந்த உடனே போய்டணும், வெளில இருக்கிற செருப்பை வெச்சலாம் கணக்கு எடுக்கிறாங்க.... கேட்டா, செப்டிக் டேங்க் அளவா இருக்கு, இத்தனை ஆள் வந்தா தாங்காதுனு வேற சொல்றாங்க.. இதெல்லாம் கேட்கணும்னு என்ன இருக்கு, கையிருப்பு கூட கொஞ்சம் பேங்க்ல லோன் வாங்கினா நமக்கே நமக்குனு சொந்த வீடு வாங்கிடலாம் தானே!!

சுதந்திர காற்றை சுவாசிக்கலாம்தானே!!

நாம ஆசைப்பட்டபடி பெயிண்ட் பண்ணலாம், தேவையான வசதிகளை பண்ணலாம், தோட்டம் போடலாம். என அடுக்கி கொண்டே போன சுவாதியை கூர்ந்து நோக்கினான் சுகுமாரன்.

அவன் மனதிலும் வீட்டு கனவு உதயமாகியது.
திருமணத்திற்கு முன்பாக சிறுக சிறுக சேமித்து ஒரு கிரவுண்ட் நிலம் நகருக்கு ஒதுக்குபுறமாக வாங்கிப் போட்டிருந்தான்.

அதை அவ்வப்பொழுது சென்று பார்ப்பதோடு, விலை மதிப்பையும் தெரிஞ்சு கொள்வதோடு விட்டுவிடுவான். அந்த காலி மனையில் வீடு கட்டிடலாம் என இருவரும் பேசி தீர்மானித்தனர்.

முதலில் வீட்டின் வரைபடத்தை ஆயத்தம் செய்தனர். கூட ஒரு குடித்தனம் வாடகைக்கு வைத்துக்கொண்டால் பாதுக்காப்பாக இருக்குமே என எண்ணி அதற்கான செலவு தொகையையும் சேர்த்து பட்ஜெட் ரெடி பண்ணினர்.

ஒரு நல்ல நாளாக பார்த்து பாலக்கால் போட்டு வேலையை துவக்கினர். இவர்கள் நினைத்ததைவிட செலவு கூட ஆனது. இருந்தும் மனம்தளராமல் அனைத்து வேலைகளையும் ஜரூராக முடித்தனர். உறவு மற்றும் நண்பர்களை அழைத்து மிகவும் சிறப்பாக கிரஹப்ரவேசமும் நடத்தினர். வந்திருந்த அனைவரும் வீட்டின் அழகை பாராட்டி சென்றனர்.

அழகான தோட்டம், அதில் அனைத்து வகையான வாசனை மலர்ச்செடிகளும் வைக்கப்பட்டன.

வாடகை குடித்தனக்காரருக்கு எந்த குறையும் இருக்கக்கூடாது என பார்த்து பார்த்து அனைத்து வசதிகளும் செய்யப்பட்டது.

இவர்கள் குடி வந்து 2 மாதங்கள் கழித்து வாடகைக்கு வீடு தேடி வருபவர்களில் மனதுக்கு இணக்கமாக தோன்றிய கணவன், மனைவி, குழந்தை என இவர்களை போலவே இருந்த ஒரு குடும்பத்தை வாடகைக்கு அமர்த்தினர்.

ஒரு வருடங்கள் உருண்டோடியது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் மாலை தேநீர் அருந்திக்கொண்டு வார வேலைகளையும், நடந்தவைகளையும் அசைபோடுவது வழக்கம்.

இப்பலாம் உனக்கு மிக மகிழ்ச்சியா இருக்கும் இல்லையா சுவி?

ம்ம்

அட ஏன் சுரத்தே இல்லாம இருக்கிறாப்பில இருக்கு..,

இல்லங்க.... நாம வாடகை வீட்ல இருந்தப்ப வீட்டுக்காரம்மா சொன்னதெல்லாம் நாம சொல்லக்கூடாதுனு நினைச்சு, அதன்படியே நடக்கணும்னு தீர்மானம் போட்டிருந்தேன். இந்த தீர்மானம் சரியில்லையோனு தோணுது.

ஏன் என்னாச்சு???

குழந்தைக்கு சாதம் ஊட்டுறாங்க, தோட்டத்தில செடி கொடிய காமிச்சு, ஆனா மீதியான சாப்பாடு, மிளகாய் எல்லாம் அங்கயே போட்டுடறாங்க, செடிகளுக்கு தண்ணி பாய்ச்சும்போது களை எடுக்கும்போதெல்லாம் பார்க்கவே கஷ்டமா இருக்குங்க.

நேத்து குழந்தை விளையாடிட்டே தண்ணி குழாயை திறந்து விட்டுருச்சு, அதைப்பத்தி கவலையே படாம, கண்டிக்காம இருக்காங்க...

தினக்காலண்டர் மாட்டக்கூட ஆணியேதான் அடிப்பேனு சொல்றாங்க, நாம அங்கிருந்தப்ப ஸ்டிக்கர் ஹேங்கர்ல தானே மாட்டுவோம்....
எதேச்சையா நான் புத்தகம் வாங்கலாம்னு வீட்டுக்குள்ள போனேன் பார்த்தா பெருக்கவே இல்லாம, ஒரே குப்பை கூளமா இருக்குங்க...

கேட் திறந்தா மறுபடி தாழ் போடாம அப்படியே விட்டு வைக்கிறாங்க, செடியெல்லாம் ஆடு கடிச்சிடுது...
இப்படியே அடுக்கிக்கொண்டே போன மனைவியை குறும்பு சிரிப்புடன் நோக்கினான் சுகுமாரன்

இதுக்குத்தான் நான் சொல்லவேணாம்னு நினைச்சிட்டிருந்தேன்.. நீங்களே வாயை பிடுங்கி எல்லாத்தையும் கேட்டுட்டு இப்ப என்ன நமட்டு சிரிப்பு வேண்டிக்கெடக்கு..

இல்ல சுவி....நாம வாடகைக்கு இருந்த போது உனக்கு உடம்பு முடியாம போனப்ப வீட்டுக்காரம்மா கஞ்சி வெச்சுக்கொடுத்து, ரொம்ப அக்கறையா கவனிச்சாங்களே மறந்துட்டியா?

நம்ம குழந்தைக்கு உடம்பு முடியலேன உடனே அவங்க குழந்தைக்கே ஆனாப்பில துடிச்சுப்போனாங்களே மறந்துட்டியா?

ஒரு முறை நான் வெளியூர் போய்ட்டு வர தாமதம் ஆனதாலே உன்னைய எப்படிலாம் சமாதானப்படுத்தி கவனிச்சிக்கிட்டாங்க.. இன்னும் இது போல நிறைய சொல்லலாம்தானே!!
ஒரு பாதுக்காப்போட இருந்தோம்தானே!! பெத்தவங்க கூட இல்லேங்கிற கவலைய மறக்கசெய்தாங்கதானே?

இக்கரைக்கு எப்பவும் அக்கரை பச்சையாதான் தெரியும்.

இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகல, குழந்தைக்கு ஊட்டிய சாதம் விழுந்தா எடுக்கணும்னு சொல்லு, இல்லேனா குருவிங்க சாப்பிடட்டும்னு விடு. எதுலாம் பிடிக்கலியோ அதையெல்லாம் மென்மையா எடுத்துச்சொல்லு.

100/100 எல்லாவிதத்திலும் மிகச்கச்சிதமான மனிதர்கள் யாரும் கிடையாது.

இருக்கிறதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இருந்தால் எப்பவும் சந்தோஷமா இருக்கலாம்.
அதுக்காக வீடு கட்டியதை வீண் என்று எப்பவும் சொல்லமாட்டேன். வீட்டுக்காரங்க தொல்லைக்காக வீடு கட்டினோம், இப்ப இப்படி இருக்கேனு நீ நினைப்பதால்தான் விஷயம் மிகப்பெரிசா தெரியுது.
நம்ம சந்தோஷத்திற்காக வீடு கட்டினோம்னு நினைச்சால் மனசு சந்தோஷமாகிடும்.

கொஞ்சம் கொஞ்சமாக சுவாதியின் மனசு சந்தோஷகாற்றை சுவாசிக்க ஆரம்பித்தது.

சுகு ஒரு நாள் நாம குடியிருந்த வீட்டுக்குப்போய் அவங்களை எல்லாம் பார்த்துட்டு வரலாமா. இந்த வீட்டுக்கு வந்தப்புறம் இது வரை ஒரே ஒரு முறைதான் போய்ட்டு வந்தோம்.

வீட்டுக்காரம்மாவ எனக்கு பார்க்கணும் போலவே இருக்கு....

சரி போலாம் சுவி...

அம்மா பசிக்குது என கூறிக்கொண்டே வந்த மகனுக்கு பசியாற்ற சமயலறை நோக்கிச்சென்ற மனைவியை மகிழ்ச்சியுடன் நோக்கினான் சுகுமாரன்.

5
Average: 4.8 (4 votes)

Comments

"எலி வளையானாலும் தனி வளை வேண்டும்" என்ற பழமொழியை ரொம்ப அருமையா கதையில் சொல்லிட்டீங்க,
முடிவும், கருத்துக்களும் ரொம்ப அருமைங்க, வாழ்த்துக்கள் :-)

நட்புடன்
குணா

அருள் அக்கா,
ம்ம் உங்க வலைப்பதிவு கருத்து நல்லா இருக்கு.

குழந்தைக்கு ஊட்டிய சாதம் விழுந்தா எடுக்கணும்னு சொல்லு, இல்லேனா குருவிங்க சாப்பிடட்டும்னு விடு.

இருக்கிறதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இருந்தால் எப்பவும் சந்தோஷமா இருக்கலாம்.

தப்பா நினைக்காதிங்க,
சின்ன டவுட் தனி வளை இப்படியா, இல்லை இப்படி வருமாக்கா தனி வலை யா

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

குணா தம்பிங், உங்களோட வாழ்த்திற்கும்,பாராட்டிற்கும் மிக்க நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சுபி மிக்க மகிழ்ச்சியா இருக்கு, கதையை படித்து வரிகளை எடுத்துச்சொல்லிய விதம் :)

இதில தப்பா நினைக்க ஏதுமில்லை தோழி :)
எலிவளை (எலிப்பொந்து, எலிவங்கு) தான் சரி, சிலந்தி வலைக்குத்தான் நீங்கள் சொல்லும் 'லை' போடவேண்டும்.
மிக்க நன்றி சுபி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

எதார்த்தமான கதை...உங்க பாசிடிவ் அப்ரோச் ரொம்ப நல்லா இருக்கு...

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

எதார்த்தமான கதை அருள். இருக்கறதை எல்லாம் விட்டுட்டு எது இல்லையோ அதை நினைச்சு ஏங்குவது மனித குணம். அதை மாத்திக்கிட்டாலே சந்தோஷமா இருக்கலாம்னு அழகா சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள் அருள் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நல்ல கதை அருள் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

சூப்பர் அருள்.

‍- இமா க்றிஸ்

அன்பு அருட்செல்வி,

சொந்த வீட்டில் வசிக்கலையே என்ற ஏக்கம் இன்னும் அதிகமாகிட்டுது இதைப் படிக்கும்போது.

கோவை மண் வாசனை மணக்கும் எழுத்து நடை. மிகவும் நன்றாக இருக்கு.

ட்ரெயின்ல போறப்ப, உங்க ஊர்ப் பக்கம், வாசல்கள் சாணி தெளித்து, பளிச் பளிச்சென்று மஞ்சள்+பச்சை நிறத்தில் இருப்பதைப் பார்த்து வியந்திருக்கிறேன்.

எங்க ஊர்ப் பக்கமும் சாணி கரைச்சு, தெளிப்பாங்க, ஆனால் இந்த நிறத்தில் இல்லையேன்னு தோணும்.

அப்புறம்தான் கோவையில் வாசல் தெளிக்கவென்றே சாணிப் பவுடர் என்று ஒன்று கிடைக்கும், அதைக் கரைத்துத் தெளிப்பதனால், அந்த நிறம் என்று ஒரு தோழி சொன்னாங்க.

நீங்க விசாலக் கிழமை பச்சை என்று குறிப்பிட்டிருப்பது அதைத்தானே.

அன்புடன்

சீதாலஷ்மி

எதார்த்தமான கதை ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க அருள் வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கதையை பாராட்டியமைக்கு மகிழ்ச்சி கலந்த நன்றி ராஜி :)

கவி.. :) சரியாச்சொன்னீங்க, ஒரு பக்கம் சொன்னதை அழகா இரு வரில சொல்லிட்டீங்க :) உங்களோட பதிவுகள் படிக்க காத்திருப்போர் பட்டியலில் நானும் உண்டு :) மிக்க நன்றி கவி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

பிந்து மகிழ்ச்சி கலந்த நன்றி :)

இமா ஊக்கப்படுத்தியமைக்கு மிக்க நன்றிங்க :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வீடு கட்டும்வரை அந்த ஆசை அதிகமா இருக்கும். கட்டிய பிறகு எங்கும் வெளியூர் போக வேண்டி இருந்தால் கைக்குழந்தையை தனியா விட்டுட்டு வந்தமாதிரியே இருக்கும். கூடிய விரைவில் அழகிய வீடு அமைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் :)

ஆமாங்க கோவைல மட்டுமே பச்சைசாயம், பக்கத்து மாவட்டங்களில் மஞ்சள் சாயம் மட்டுமே!! பச்சை சாயம் கைல பட்டா ஒருவாரம் போகவே போகாது. அரசாங்கமே இப்பொழுது பச்சை சாயம் தடை பண்ணிட்டாங்க, அது மிகுந்த விஷத்தன்மை உள்ளது என்பதால், அதனால் இப்பொழுதெல்லாம் மஞ்சள் மட்டுமே மாட்டுசாணம் உடன் கலந்து வாசலில் மெழுகுவது வழக்கம் :)

//விசாலக் கிழமை பச்சை என்று குறிப்பிட்டிருப்பது அதைத்தானே.//
வியாழக்கிழமை அன்று வீடு சுத்தம் செய்து, வாசலுக்கு சாணியும் பவுடரும் போட்டு அழகா மெழுகுவது வழக்கம். அடுத்தநாள் வெள்ளி கோவிலுக்கு போக, சாமி கும்பிட ஏதுவாக இருக்கும் என்பதால் :)
மிக்க நன்றிங்க :)

சுவா மிக்க நன்றி :) உற்சாகம் அளிக்குதுப்பா உங்க பதிவு :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அருள்
சூப்பர் கதை
நூறு சதவீதம் பெர்ஃபெக்டான மனிதர்களை காண முடியாது
ஒவ்வொருவரிடமும் இருக்கும் நல்ல குணங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்

யதார்த்தமான நடை.ஒரே விஷயம் வெவ்வேறூ காலகட்டத்துல வேறூ மனநிலைய தருது அதை சூப்பர சொல்லிட்டிங்க

Be simple be sample

அருள் மிகவும் அற்புதமாக கதை எழுதி இருக்கீங்க..:) பாராட்டுக்கள் அருள்.
மனித வாழ்வில் வீடு கட்டுவதற்கு,மிகப் பெரும் செலவும் உழைப்பும் தேவைப்படும். எல்லோருடைய மனதிலுமே சொந்த வீடு கட்டும் ஆசை இருக்கும், அது நிறைவடையும் போது கிடைக்கும் சந்தோசமே தனி தான். அந்த ஆசை நிறைவேறினாலும் உங்க கதையின் கதாநாயகியைப் போல் வேண்டாத கவலைகளை சுமந்து கொண்டு நிறைய மனிதர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள், ஏதோ கதாநாயகன் தெளிவு படுத்தியதால் கவலை விட்டது... இல்லையென்றால் நிலைமை கஸ்டம் தான்...;)
//
இருக்கிறதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இருந்தால் எப்பவும் சந்தோஷமா இருக்கலாம்.// மறுக்கமுடியாத வரிகள்
நல்ல கதைக்கு வாழ்த்துக்கள் அருள்..

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

உங்கள் கதை மிகவும் அருமையாக இருந்தது.

uver story is simple and best.selfsatisfaction is very important to human
being. thut's makes life peaceful.

mudeyathu enbavan muttaal

mudeyuma enbavan sombayri

mudeyum enbavan manithan.

nan manithenda
rajinibai

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

அருள் கருத்தான கதை, நிறைய சுவாதிங்களும் இருக்காங்க அதைப் போல நிறைய சுகுமார்களும் இருக்காங்க தான் அருள் take life as it comes எல்லாராலும் அப்படியே ஏத்துக்க முடியறது இல்ல அருள் உடனே முடியலைனாலும் பல பேர் முயற்சி செய்துட்டு தான் இருக்காங்க,
ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க அருள் நிறைய புது வார்த்தைகள் பழக்கவழக்கங்கள் தெரிஞ்சுகிட்டேன், சாணம் தான கரைச்சு தெளிப்பாங்க அது என்ன பச்ச சாயம் //பச்ச சாயம் போட்டு வளிக்கோணுமாக்கும்//

நிகிலா ஆமாம்ப்பா, நாமே 100க்கு 100 சரியா இருப்பமானு தெரில, ஆனா மத்தவங்க இருக்கணும்னு எதிர்பார்ர்ப்போம்....
வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி ..:)

ரேவ்ஸ்.. மிக்க நன்றி :) நாம குழந்தையா இருக்கும் போது நம்ம பெற்றோர் கண்டிக்கும் போது கஷ்டமா இருக்கும், ஆனா இப்ப நம்ம பிள்ளைங்க நாம சொல்லும் போது கேட்கலனா கஷ்டமா இருக்கும்.... இது ஒரு தொடர்கதை.. :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சுமி ஆமாம்பா, நீங்கள் சொன்னது ரொம்ப சரி.... உழைப்பினால் உருவாகும் இல்லம் நிச்சயம் சந்தோஷமே!!
மிக்க நன்றி சுமி வருகைக்கும் , கருத்திற்கும் :)

பாலபாரதி மிக்க நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மிக்க நன்றி மேடம் :)

உமா உங்க கருத்து படிக்கும் போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு :)
கலர்பொடி யத்தான் அப்படி சொல்லி இருக்கேன்..
மிக்க நன்றி உமா வருகைக்கும், பதிவிற்கும்..:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அருள் கதை நல்லா இருக்கு, எனக்கு ரொம்ப நாட்களா இதே எண்ணம் தான் எலி வளையானாலும் தனி வலை வேண்டும் என்பது,
எந்த எதிர்பாப்பும் இல்லாம வருவதை ஏத்துக்கிட்டோம்னா வறுத்தம் இருக்காதுல சரியா சொல்லி இருக்கீங்க அருள்.
தொடர்ந்து எழுதுங்க அருள் உங்க கதை படிக்க ஆர்வமா இருக்கு

Good comment

வீடு கண்ணு முன்னாடி வந்து போயிடுச்சுப்பா,பாஸிடிவா எடுத்துக்க சொல்லி கொடுத்து இருக்கீங்க, சூப்பர்

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

நல்லா இருக்கு கதை :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா