விலையற்ற செல்வம்......பெண்...

மார்ச் 8 மகளீர் தினம், ஓ இப்படி ஒரு நாள் இருக்கா என்றே சில‌ வருடம் முன் தான் தெரிந்தது. இத்தனை வருஷமா தெரியாமலே போச்சே, படிச்சது எல்லாம் பெண்கள் பள்ளியில் தான், கற்று கொடுக்கும் இடத்தில் இப்படி ஒரு நாளின் பெருமையயும் கற்று கொடுத்திருக்கலாமே என்று தோன்றியது.....

நிறைய பேருக்கு இப்படி ஒரு நாள் இருப்பதே தெரியவில்லை, தெரிந்தவர்கள் பெரிதாய் கண்டு கொள்வது இல்லை தான், பெண்ணா பிறந்து ரெம்பவே சாதிச்சிட்டோம் ஸ்பெஷலா கொண்டாட.....ஒரு சலிப்பு நிறைய பேரிடம் இல்லாமல் இல்லை!!

உண்மையிலும் பெண்கள் மதிக்கபடறாங்களா? அவர்களின் சிந்தனைக்கும் செயலுக்கும் மதிப்பு உள்ளதா? என்ன தான் பெண் நாட்டை ஆட்சி செய்தாலும் வீட்டுக்கு அடங்கி தான் ஆகனும், கருத்து சுதந்திரம் இன்னிக்கு எத்தனை வீடுகளில் இருக்கு ? ஒரு பொண்ணு முடிவு எடுத்தா சரியா இருக்கும் என்கிற நம்பிக்கை எத்தனை பேருக்கு இருக்கு? பெண்கள் எந்த அளவுக்கு முன்னேறிகிட்டு இருக்காங்களோ அதே சமயத்துல அவர்களை பத்தி ஒரு தவறான கண்ணோடமும் வேகமாக முன்னேறிக்கிட்டு தான் இருக்கு!!

என்ன சாதித்து விடவில்லை இன்று பெண்கள்? எல்லா துறைகளிலும் இருக்காங்க, அதிகமா படிக்கறாங்க, வேலைக்கு போறாங்க, சுயமா முடிவு எடுக்கறாங்க...சுதந்திரமாய் இருக்காங்க....இதெல்லாம் அந்த காலத்தோட ஒப்பிட்டு பார்க்கும் போது சாதனை இல்லையா ? இல்லையே....

சுதந்திரம் இருக்கு, சமையலறையில் மட்டும்...எத்தனை பெண்களுக்கு வாய்ப்பு இருக்கிறது தன் கருத்துகளை முன் வைக்க,ஊரையே வழி நடத்தும் பெண்ணாக இருந்தாலும் வீட்டுக்குள் வழி நடத்தும் உரிமைகள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.. தனக்கென ஒரு பெண் யோசித்தால் அவளின் தரம் தாழ்த்தப்படுகிறது..இதெல்லாம் இல்லை என்று ஏற்று கொள்ள முடியவில்லை...

உரிமைகளில் கிடைக்காத சுதந்திரம் உடையில் கிடைத்ததாலோ என்னவோ சிலரால் ஒட்டு மொத்த பெண் சமுதாயமும் மரியாதையை இழந்து கொண்டிருக்கிறது.....காட்சி பொருளை போல தானே இன்று ஊடகங்கள் காட்டுகிறது.........பெண்களை காட்சி பொருளா காட்டுற மாதிரியான டீவி நிகழ்ச்சிகள், பாடல்கள், விளம்பரங்கள் இதையெல்லாம் தடுத்தாலே பெண்கள் மேல இருக்க தவறான கண்ணோட்டம் குறையுமான்னு மனசுல ஒரு கேள்வி வந்துச்சு,பதில் தெரியல தான்...

பெண்ணை எதிர்த்து போட்டியிட்டால் ஜெயிக்க முடியாது என்பதால் தானோ அடக்க பார்க்கிறார்கள்?சிந்திப்போம்...

கண்ணுக்குள் பல கனவுகள் கண்டு
அவை மண்ணுக்குள் மடிவதை கண்டு
கண் கலங்குவாள் காரிருளில் - ஆனால்
பகலவனின் ஓளி பாரியில் வரும் பொழுது
புன்னகை அணிந்து வரவேற்க காத்திருப்பாள்
இல்லத்தில் இல்லை என்ற சொல்லை
இல்லாமல் ஆக்கவே தன்னை இயக்குவாள்
பெண்கள் அழுது சாதிப்பவர்கள் இல்லை
அழுகின்றவர்களயெல்லாம் சாதிக்க வைப்பவள்
என்று உணர வைப்பாள்
பெண்ணுக்கு நிகர் பெண் என்பதால் தானோ
பெண்ணுக்கு எதிரி பெண் என்று பேச வைத்தாள்?

அவளின் சிந்தனைகள் சிறுகதைகள்
பொறுமையில் பொறுமல்கள்
விரல் நுணிகளில் நுட்பங்கள்
கண்ணீரில் துணிச்சல்கள்
இரக்கத்தில் இன்னல்கள்
தட்டி கொடுக்கவில்லை என்றாலும்
தலை நிமிர்ந்து வாழ்ந்தாள்
சகலத்திலும் சகாப்தம் படைத்தாள்
பெண்ணுக்காய் காவியம் எழுத வேண்டாம்
காயபடுத்தாமல் கைக்கொடுக்கலாம்...
அனைத்து தோழிகளுக்கும் மகளீர் தின வாழ்த்துகள்!!!

Average: 5 (4 votes)

Comments

\\பெண்ணை எதிர்த்து போட்டியிட்டால் ஜெயிக்க முடியாது என்பதால் தானோ அடக்க பார்க்கிறார்கள்//
முற்றிலும் உண்மை !!!!

\\பெண்ணுக்காய் காவியம் எழுத வேண்டாம்
காயபடுத்தாமல் கைக்கொடுக்கலாம்...//
சிந்திக்க தூண்டும் வரிகள்,

மிக நன்று

அருமையான விளக்கங்கள்...
// பெண்கள் அழுது சாதிப்பவர்கள் இல்லை
அழுகின்றவர்களயெல்லாம் சாதிக்க வைப்பவள்
என்று உணர வைப்பாள்
பெண்ணுக்கு நிகர் பெண் என்பதால் தானோ
பெண்ணுக்கு எதிரி பெண் என்று பேச வைத்தாள்//
ரொம்ப அருமைங்.. வாழ்த்துக்கள்

நட்புடன்
குணா

அன்பு ரேணுகா,

சமையலறையில் சுதந்திரம் கிடைப்பது கூட‌ சந்தேகம்தான் நிறைய‌ வீடுகளில்.

யாருக்கு என்ன‌ பிடிக்கும் என்பதைப் பார்த்து பார்த்து சமைக்கும் அம்மாவிடம் யாரும் கேட்பதில்லையே = உனக்கு என்ன‌ பிடிக்கும் அம்மா? என்று.

உங்க‌ கவிதை அருமை. நீங்க‌ இணைத்திருக்கும் படங்களின் விளக்கங்களும் மிகவும் அருமை.

அன்புடன்

சீதாலஷ்மி

நிதர்சனமான‌ உண்மை பளிச்சிடுது உங்கள் வார்த்தைகளில்... கவிதையும் அருமை.... வாழ்த்துக்கள்...

ஹாய்,

.இல்லத்தில் இல்லை என்ற‌ சொல்லை இல்லாமல் ஆக்குபவள் பெண்////////.. உண்மையான‌ உண்மைங்க‌.///தட்டிகொடுக்காவிட்டாலும் த்லை நிமிர்ந்துவாழ்வாள்,///அதுதான் பெண்.சிந்தனை அருமைங்க‌.

ரஜினிபாய்

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

பலர் மனதிலும் உள்ள கேள்விகள் தான்... பதில் தான் என்றும் கிடைக்குமோ தெரியல. சமையல்கட்டில் கூட இன்று சுதந்திரம் இல்லை தானே... மற்றவர் விருப்பம் போல தானே செய்யறோம்? நமக்கு பிடிச்ச உணவு எதுன்னு கூட கல்யாணம், பிள்ளைகள்னு ஆனதும் மறந்தே போகுதே. அவங்களுக்கு பிடிக்காது, இவங்களுக்கு பிடிக்காதுன்னு நம்ம ரசனையை நாமே ஒதுக்க வேண்டிய கட்டாயம் வந்துடுதே. நல்ல கவிதை வரிகள் ரேணு. சூப்பர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரேணு அக்கா,
அருமையான‌ பதிவு,
எல்லாரோட‌ ஏக்கமும் உங்கள் பதிவில் தெரிகிறது.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

ரேணுகா ,மிகவும் அருமையான கருத்து..படங்களும் விளக்கமும் சூப்பர்..முக்கியமா கவிதை கலக்கல் எல்லா வரிகளுமே முத்துக்கள்!
தாமதமாய் இன்றுதான் படிக்கிறேன்..வாழ்த்துக்கள்
அன்புடன்
இளா

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

//சகலத்திலும் சகாப்தம் படைத்தாள்
பெண்ணுக்காய் காவியம் எழுத வேண்டாம்
காயபடுத்தாமல் கைக்கொடுக்கலாம்...//

உண்மைதான் ரேணு பெண்கள் காயப்படப்படத்தான் காவியம் தோன்றுகிறாதுபோலும்.காயம் கொடுக்காமல் காவியம் படைக்க‌ வழி பிறக்கும் நாள் பெண்கள் அனைவரும் வெற்றிகண்டநாள். வாழ்ஹ்த்துக்கள் ரேணு.