ஸ்வேதாவும் அம்மாவும் - சுதர்ஷினி ரவி பிரசன்னா

இந்த அம்மா எப்பவும் இப்படித்தான், என்ன‌ சொன்னாலும் எதிராத்தான் பேசுவாங்க‌, என்ன‌ சொன்னாலும் புரிஞ்சிக்கவே மாட்டாங்க‌, அவுங்க சொல்றதுதான் சரி எனக்கு ஒன்னும் தெரியாதாம் என்று புலம்பிக்கொண்டிருந்த‌ ஸ்வேதாவை சரி விடு உன் அம்மா உன் நல்லதுக்குதானே சொல்லிருப்பாங்க‌ என்று தேற்றிக்கொண்டிருந்தாள் யமுனா.

இல்லடி இந்த‌ விசயம் மட்டுமில்ல‌ எப்ப‌ எதை செய்தாலும் இப்படித்தான், எதிராதானே பேசுவாங்க‌, எனக்கும் நல்லா சூடாகிரும்....

இது எப்பவும் ஸ்வேதாவுக்கும் அவள் அம்மாவுக்கும் நடக்கும் பிரச்சனைதான், தன் நல்லதுக்காக‌ தானே அம்மா சொல்கிறாள் என்று யோசிக்காமல் தான் சொல்வதுதான் சரி என்ற‌ மனோபாவத்தில் ஸ்வேதா இருந்தாலும் சில‌ நேரங்களில் அது சரியாகவும் ஆகிவிடுவதுண்டு

சிறு வயது முதலே தலை வாரி பின்னல் போடுவதிலிருந்து, உடை அணிவதிலிருந்து, டியூசன் போவதிலிருந்து இதே பிரச்சனைதான் இதே முரண்பாடுதான் இருவருக்குள்ளும், இப்போ கம்ப்யூட்டர் க்ளாஸ் போவதிலும் இதே பிரச்சனை.

இங்க‌ பக்கத்திலிருக்கும் "சின்டெக் கம்ப்யூட்டர் க்ளாஸுக்கு" போவதற்கு நான் கம்ப்யூட்டரே படிக்காமலே இருக்கலாம், அது ஒரு க்ளாஸாடி? அங்கதான் போகனுமாம். எனக்கு "டிப்ளோமெடிக் கம்ப்யூட்டர் சென்டருக்கு" போகனும்டி அங்க‌ படிச்சா நல்ல‌ வர்த் சர்டிஃபிகட் கிடைக்கும் நல்ல டீச்சர்ஸ் இருக்காங்க‌, என்ன ஒரு வன்ஹவர் பஸ்ல‌ ட்ராவல் பண்ணனும், இந்த‌ அம்மா அதுக்காகதான் வேண்டாம் வேண்டாம்னு அடம் பிடிக்கிறாங்க‌ நான் என்ன‌ சின்னப்பிள்ளையா கவனமா போய்ட்டுவர‌ எனக்கு தெரியாதா?

பொரிஞ்சி தள்ளிக்கொண்டிருந்தாள் ஸ்வேதா.
‍‍‍.....

என்னங்க‌ பிள்ளையை அவ்வளவு தூரம் அணுப்பனுமா? இங்க‌ இருக்கிற‌ கம்ப்யூட்டர் தானே அங்கயும் இருக்கு? காலம் கெட்டு கிடக்கு. எனக்குனா விருப்பமேயில்லைங்க‌ என்ற‌ மனைவி லக்ஷ்மியை, தொடங்கிட்டியா? உனக்கும் ஸ்வேதாவுக்கும் டெய்லி ஒரு பிரச்சனை ஏன் அவ‌ விருப்பத்துக்கு இப்படி முட்டுக்கட்டை போடற‌ அங்க‌ போய் படிக்கட்டும் என்று மனைவியை அடக்கினார் ஆறுமுகம்.

என்னவோ போங்க‌ பொம்பளை பிள்ளை, என் மனசு எப்பவுமே திக்கு திக்குனுதான் இருக்கு இதுனாலேயேதான் அவள‌ இப்படி உடுத்தாத‌, அப்படி பண்ணாதனு விரட்டிக்கிட்டிருக்கேன். அன்னைக்கு பாருங்க‌ ஜீன்ஸ் டீ சர்ட் தான் போடுவேனு அடம் பிடிச்சி போட்டுகிட்டு போறா, முடியை தூக்கி போனி போட்டுகிட்டு, ச‌ட்டை உடுத்தி பின்னல் போட்டுகிட்டு போன்னு சொன்னா, நீ போம்மா உன்னோட‌ ஒரே தொல்லைனு சொல்றா. அவ‌ ஃப்ரண்ட்ஸ் எல்லாம் இப்படித்தான் போட்றாங்களாம், இவ‌ பின்னல் போட்டுகிட்டு போனா கிண்டல் பண்றாங்களாம்.

மற்றவங்க‌ கவனத்தை கவர்ர‌ மாதிரி நாம இருக்கனுமா சொல்லுங்க‌? சொன்னா நான் அவளுக்கு தொல்லை, என்று விசும்பினாள் லக்ஷ்மி.

மனைவியை தேற்றியவர் கொஞ்சம் நாமலும் இந்த காலத்துக்கு எற்ற‌ மாதிரி அவங்கள‌ விட்டுத்தான் பிடிக்கனும், ஒரேடியா இருக்கி பிடிச்சா, பிய்ச்சுகிட்டு போகத்தான் பார்ப்பாங்க, ரொம்ப‌ கண்டிஷன் போடாத‌, ஸ்வேதா நல்லா படிக்கனும் அவ‌ ஸ்டடிஸ்ல‌ பெஸ்ட்டா இருக்கனும் அவ்வளவுதான் என்றார் ஆறுமுகம்.
‍‍‍.......

அம்மா இந்த‌ வீக்கெண்ட் என் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் நுவ‌ரெலியா போக‌ ப்ளான் பண்ணிருக்காங்கம்மா, உயர் தர‌ பரீட்சையின் கடைசி பாடத்தை எழுதிவிட்டு வீட்டுக்குள் நுழைந்த‌ ஸ்வேதா சொன்ன‌ முதல் வார்த்தை இதுதான். அதை கண்டு கொள்ளாமல் பரீட்சை எப்படி என்றால் லக்ஷ்மி.

ம் நல்லா எழுதிருக்கேன்மா 'A' வரும்மா என்று சொல்லிவிட்டு, போடிங்ள‌ தங்கி படிச்ச‌ ஃப்ரண்ட்ஸ் எல்லாம் அடுத்த‌ மன்டே அவங்க‌ அவங்க‌ ஊருக்கு போய்டுவாங்கம்மா அப்புறம் எங்கே அவங்களை பார்க்கிறது. அதான் நுவரெலியா போக‌.... என்றவள் தன் தாயின் முகம் போன போக்கை பார்த்ததும் நிறுத்தினாள்.

நான் போக‌ கூடாது அதை தானே சொல்லப்போறீங்க‌ என்று தன் புத்தகத்தை தொப்பென்று போட்டுவிட்டு அழுதுக்கொண்டு ஓடிய‌ ஸ்வேதாவை லக்ஷ்மியும் தேற்ற‌வில்லை....

அழுது ஒன்னும் ஆகப்போறதில்லை, நீ போக‌ கூடாது, என்னது இது புது பழக்கம். எதை சொன்னாலும் ஒரு சிடு சிடு பதில், அழுகை, கோபம் என்ன நினைச்சிட்டிருக்க நீ. இப்படியே போனால் போற இடத்தில் நல்லா மொத்து படுவ‌ பொம்பளை பிள்ளையா அடக்கமா இரு.

உன் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் போனால் போகட்டும் நீ பேசாமலிரு, இது என்ன‌ கஸ்டம்? உன் பெரியம்மா மகள் மதுமிதாவும்தான் போன‌ வருடம் பரீட்சை எடுத்தா அவ‌ இப்படியெல்லாமா செய்தா? நம்ம‌ குடும்பத்திலே இதெல்லாம் பழக்கமில்லை, சொன்னா புரிஞ்சிக்க‌....

நான் வரலடி, அம்மா வேண்டாம்னு சொல்றானு சொல்லும்போதே துக்கம் நெஞ்சை அடைத்தது ஸ்வேதாவுக்கு. என்னடி நீ அப்ப நாங்கள்ளாம் போறோம், இனி எப்ப சந்திக்க‌ போறோமோ தெரியல‌, ஒரே கேம்பஸ் கிடைச்சா சரி இல்லாட்டி என்று கட்டிக்கொண்டு அழுதனர் யமுனாவும் ஸ்வேதாவும்.
.......

நாங்கள் எல்லாரும் நல்லா என்ஜாய் பண்ணினோம், நீ இல்லாதது தான் குறையாக‌ இருந்தது.. "நுவரெலியா சீதை அம்மன் கோவில்ல வைத்து உன் நினைவாகவே இருந்தது இங்க‌ வரனும்னு நீ எவ்வ‌ளவு ஆசைப்பட்ட‌..! யமுனாவிடம் இருந்து வந்திருந்த கடிதத்தில் இருந்த அந்த வரிகளை பத்து தடவைகளுக்கு மேல் படித்திருப்பாள்.

வெறுப்பாய் இருந்தது அம்மாமேல், ஏன் தான் இவங்களுக்கு மகளாய் பிற‌ந்தேனோ ச்சே.. என் இஷ்டத்திற்கு ஒன்னும் செய்யவிடறதில்லை...... எங்காவது போய்டா என்ன‌? அப்ப‌யாவது என் அருமை தெரியுதானு பார்ப்போம். நான் என்ன‌ செய்தாலும் தடைதான். ஒரு விஷேசம் என்றால் சொந்தகாரர் எல்லாம் வந்திருப்பாங்க‌ என் வயசு பிள்ளைகள் எல்லாம் பாடுவாங்க‌ ஆடுவாங்க‌ நான் மட்டும் பேசாமலிருக்கனும், கேட்டா பிள்ளை வளர்த்தது சரியில்லைனு சொல்றதுக்காகவே பலர் கண்கொத்தி பாம்பா பார்த்துகிட்டு இருக்காங்க‌ளாம்.

அன்டைக்கு பிரியா வீட்டுக்கு போனப்ப‌ அவ‌ அம்மா அவகிட்ட‌ நடந்துகிறத‌ பார்கிறப்ப‌ எனக்கு உண்மையாகவே பிரியா மேல் பொறாமையாதானே இருந்தது. அவ‌ ஸ்கூல் விட்டு வந்ததும் அவள‌ கொஞ்சிறதும், டிவி பார்த்து கிண்டல் பண்ணி சிரிக்கிறதும். அம்மா பிள்ளை மாதிரியா இருக்காங்க‌, ஃப்ரண்ட்ஸ் மாதிரி இல்ல‌ இருக்காங்க‌.. நம்மள‌ மட்டும் மற்ற‌ பிள்ளைகளோட‌ கம்பேர் பண்றாங்க‌ நாங்களும் மற்ற‌ அம்மாக்களோட‌ கம்பேர் பண்ணினா அப்ப‌ தெரியும் இவங்களுக்கு.... ச்சே நான் எங்காவது போய் தொலையுறேன்.

இருங்க‌ உங்களுக்கு ஒரு வேலை செய்றேன்... என்று எண்ணியவாறு கிளம்பியவள் பஸ் ஸ்டாண்டுக்கு வரும் வரை எங்கே போகிறோம் என்ற‌ எண்ணமே வராதவளாக நேரே கொழும்பு பஸ்ஸில் ஏறி அமர்ந்தாள். அவிஸ்ஸாவல்லை தாண்டிதான் கொழும்பு பஸ் போகும் அவிஸ்ஸாவல்லையில்தான் தன் நண்பி அனிதா இருக்கிறாள் அவளுடைய‌ வீட்டு போன் நம்பர் தான் எடுத்து வந்திருந்த‌ தன் ஆட்டோகிராஃப்பில் அவள் வடித்த‌ நட்பு வரிகள் இருந்த‌ தாளில் இருந்தது.

மாலை 5.00 மணி அவிஸ்ஸாவல்லை பஸ் ஸ்டேன்டில் இருந்த‌ கமியூனிகேசனில் இருந்து அனிதா வீட்டு போன் நம்பருக்கு டயல் செய்து களைத்து போன‌ பின் தான் மனதில் பயம் புகுந்தது. அம்மா மேல் இருந்த‌ கோபத்தில் வந்துவிட்டோம், இப்ப‌ அனிதா வீட்டில் யாரும் இல்லை போல‌... கடவுளே..!

என்னங்க‌ ஸ்வேதாவை காணோம்ங்க‌, நான் அப்பவே சொன்னேன் அவள‌ ரொம்ப‌ கண்ட்ரோல் பண்ணாத‌, கண்ட்ரோல் பண்ணாதனு கேட்டாதானே என்றவாறு தன் நண்பனை அழைத்துக்கொண்டு தேட சென்ற‌ ஆறுமுகத்தை தொடர்ந்த‌ லக்ஷ்மியின் புலம்பலை அவர் கவனிக்கவில்லை.

ஐயோ கடவுளே என் பெண் எங்கிருக்கிறாளோ, என் பொண்ணுக்கிட்ட‌ நான் ரொம்ப‌ கண்டிப்பா நடந்துகிட்டேன், என் தப்புதான் ஃப்ரண்ட்ஸோட‌ போகணும்னு சொன்னப்பவே சரினு சொல்லிருக்கலாம், எதை செய்தாலும் அவள‌ தடுத்திருக்கேன், அவ‌ நல்லதுகாகனு நினைச்சி இப்ப அவள‌ தொலைச்சிட்டு நிக்கிறேனே, என் பொண்ணு மற்ற‌ பிள்ளைகள் மாதிரியா இல்லையே நல்லா படிப்பா, எப்பவும் மற்ற‌ பிள்ளைகளை விட‌ தான் பெஸ்ட்டா இருக்கனும்னு நினைப்பா, எதை செய்தாலும் என்கிட்ட‌ சொல்லிட்டுதானே செய்வா, கொஞ்சம் முன்கோபி வெடுக்கென்று பேசுவாள் மற்றபடி என் பொண்ணு தங்கமே.. அவள புரிஞ்சிக்கலையே, இவர் சொன்னதையும் கேட்கலையே.. இப்ப‌ நான் என்ன‌ செய்வேனு கதறி அழுதாள்.

நேரம் மாலை 5.25, ஹலோ.. கொஹெத‌ யன்டோன‌ காவஹரி ஒயனவத‌? (ஹலோ எங்க‌ போகனும், யாரையாவது தேடுறியா?) என்று கேட்டு பல் இளித்த‌ ஆட்டோகாரனிடம் "நெஹ‌ மகே மாமா பொலிஸ் கன்ஸ்டபில் தெங் எனவா கிவ்வா" (இல்லை என் மாமா போலீஸ் கான்ஸ்டபில் இப்ப‌ வருவேனு சொன்னார்) என்று வலுகட்டாயமாக‌ வரவழைத்துக்கொண்ட‌ தைரியத்தில் பதிலளித்து ஆட்டோக்காரனை விரட்டினாலும்

யாருடா மச்சான் இது, புதுசா இருக்கு, நல்ல‌ ஜீன்ஸ் டீ சர்ட், செம‌ கட்டைடா மச்சான்" பச்சை நிறமே பச்சை நிறமே இச்சை மூட்டும் பச்சை நிறமே" என்று தன் உடையின் நிறத்தைப்பற்றி பாடியவாறு வந்த‌ இளைஞர் கூட்டத்தை கண்டதும் பயத்தில் இரத்தம் உறைந்து உடம்பில் உயிர் இல்லாத‌ உணர்வு, அம்மா அம்மா என்று நெஞ்சு பதற‌ தொடங்கியது.. விறு விறு என்று நடந்து அருகிலிருந்த‌ சர்ச்சிக்குள் நுழைந்து விட்டாள்.

அம்மா என் நல்லதுக்காகத்தானே அனைத்தும் சொல்வாள், எனக்கு சுகமில்லை என்றால் பக்கத்தில் இருந்து பார்த்துகிட்டு தான் சாப்பிடக்கூட‌ மாட்டாள், நான் கண்விழிச்சி படிச்சா அம்மாவும் விழிச்சிருப்பாள், நான் சாப்பிடாம ஸ்கூல் போக‌ ரெடியாகினால் என் பின்னாடியே வந்து ஊட்டி விடுவாள் அப்பல்லாம் போம்மா ஒரு நேரம் சாப்பிடாட்டி செத்தா போய்டுவாங்கனு எத்த‌னை நாள் கத்தியிருப்பேன், ஸ்கூல்லருந்து வீட்டுக்கு போக‌ கொஞ்ச‌ம் லேட் ஆகினா வாசலிலே பார்த்திட்டிருப்பாள்.. கொஞ்சம் லேட் ஆனா என்ன‌ அதுக்கு இப்படி வாசலிலே நிக்கனுமா இங்கதானே வருவாங்கனு வெடுக்கென்று பேசிவிட்டு சென்ற‌ சந்தர்ப்பங்கள், ஸ்கூலுக்கு வழியனுப்பும்போது கவனமா போய்ட்டுவா என்று சொல்லும் அம்மாவிற்கு கவனமாதான் போவாங்க‌ என்பதே தன் பதிலா இருக்கும்.. அம்மா இப்ப‌ புரியுதுமா நீ பதறுவது எதுக்குனு புரியுதுமா. அம்மா எனக்காகவே வாழும் என் அம்மா... சர்ச்சில் அமர்ந்து அழுதாள்.. இனி என் அம்மாவை பார்பேனா...? ஒரு கணம் தான் இந்த‌ எண்ணம் வந்ததும் உடனே வீட்டுக்கு போகனும்னு துடித்தாள் ஸ்வேதா.

பிரியா எங்க‌ அப்பா கிட்ட‌ இந்த‌ நம்பருக்கு பேச‌ சொல்லு. 20 நிமிடத்தில் அங்கு வந்த‌ அப்பாவின் நண்பர் சிவராமனை கண்டதும் தனக்கு போன் பேச‌ தந்த‌ ஆன்டியிடம் நன்றி சொல்லிவிட்டு அங்கிள் என்று ஓடினாள், வான் வண்டியில் இருந்த ஸ்வேதாவுக்கு தன் வீடு நெருங்க‌ நெருங்க அம்மாவை நினைத்து பயத்தில் உடம்பு நடுங்கியது.

வீட்டு வாசலிலே அழுதுக்கொண்டு நின்ற‌ அம்மாவை கண்டதும் அம்மா.. சாரிம்மா என்று அழுதபடி வண்டியிலிருந்து ஓடி வந்த‌ மகளை ஓடி வந்து கட்டி பிடித்து முத்தமிட்டு நனைத்தது அம்மாவின் கண்ணீர். இருவரின் கண்ணீரும் இருவரின் மனமாற்றங்களை படம் பிடித்து காட்டியதை அப்பாடா என்ற‌ பெருமூச்சுடன் பார்த்துக்கொண்டிருந்தார் ஆறுமுகம்.

Comments

அருமையான கதை படிக்க படிக்க சுவாரசியாம இருந்தது அந்த அம்மாவிற்கும் மகளுக்கும் இருக்கும் அன்பு அவள் பிரிந்த பின்னர் தான் அவளுக்கு தெரிய வந்தது. சூப்பர்.

கதை ரொம்ப யதார்த்தமா வந்திருக்கு சுதர்ஷினி.
அருமையான படைப்பு
நல்ல கரு
சொல்லியவிதம் அருமை

கதை ரொம்ப நல்லாயிருக்குங்க. .
அம்மா-மகள் அன்பை ரொம்ப சிறப்பா சொல்லியிருக்கீங்க. .
வாழ்த்துக்கள் ங்க..

நட்புடன்
குணா

உங்க மூன்று பேருக்கும் ரொம்ப‌ நன்றிங்க‌, வாசித்திட்டு கருத்து சொன்னதற்கு ரொம்ப‌ நன்றிங்க‌.

எனது இரண்டாவது கதையை வெளியிட்ட‌ அறுசுவை நிர்வாகத்திற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
நன்றி

கதை அழகாக இருக்கு சுதர்ஷினி. எழுதின விதமும் பிடித்திருக்கிறது.
பிழையாக எடுக்க மாட்டீங்கள் என்னும் எண்ணத்தோடு ஒரு சின்ன அபிப்பிராயம்... ஆட்கள் கதைக்கிற இடங்களில் மேற்கோள்குறி போட்டு எழுதினால் வாசிக்க லேசாக இருக்கும். இன்னும் சுவாரசியமாகவும் இருக்கும்.

பி. கு
நீங்கள் தேடின ஆள் பிஸிதான். கட்டாயம் வருவாங்க நேரம் கிடைக்கும் போது. :-)

‍- இமா க்றிஸ்

ரொம்ப‌ நன்றிங்க‌ உங்க‌ கருத்துக்கு. இதுல‌ பிழையா எடுத்துக்க என்ன இருக்கு, உண்மையை சொல்லப்போனால் இப்படியான அபிப்ராயங்கள், கருத்துக்கள்தான் வளரும் கலைகளுக்கு கலைஞருக்கு அவசியம். நிச்சயமாய் என் பிழையை திருத்தி கொள்கின்றேன். ரொம்ப‌ நன்றி இமா உங்க‌ அட்வைஸ்கு.

;)) என்னது!! 'க்றீஸ் மனிதன்' மாதிரி இமா க்றீஸா! ம். நடத்துங்க, நடத்துங்க. ;))

‍- இமா க்றிஸ்

"அச்சச்சோ ரொம்ப‌ சாரி" i இரண்டு தடவை ப்ரெஸ் ஆகிட்டது. சாரி இனி இமா என்று மட்டும் சொல்றேன். சாரி கோவிச்சிக்காதீங்க இமா.

கதை மிகவும் அருமை, ஒரு இளம் தாயின் பயமும், டீன்னேஜ் மகளின் புறக்கனிப்பும், பின்பு ஒரு சிறு நிகழ்வால் இருவரும் ஒருவரை ஒருவர் புறிந்துக் கொள்தலும் நல்லா எழுதிருக்கிங்க‌. வாழ்த்துக்கள்.

சுதர்ஷினி அக்கா,
உங்கள் கதை இயல்பா, ரொம்ப‌ அழகா இருக்கு ......

நிதர்சனமான‌ உண்மையும் கூட‌, எப்பவுமே கூட‌ இருக்கப்ப‌ தெரியாத‌ ஒருத்தவங்க‌ அருமை சிறு பிரிவினாலா கண்டிப்பா உணரமுடியும் .

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

நன்றி நிஷா.

நிதர்சனமான‌ உண்மையும் கூட‌ // உண்மைதான் அந்த‌ வயதில் இருக்கும் ஒரு முரண்பாட்டு குணம் தலைமுறை இடைவெளியை உருவாக்கிவிடுகிறது. அதை குறைப்பது எமது கடமைதானே

அருமையான கதை... போன கதையை விடவும் ரொம்ப நல்லா இருக்கு. பிள்ளை பெற்றோர் பாசத்தை மையமா வைக்கிறீங்க... நல்லா இருக்கு. ஆட்கள் பேசும் இடங்களை தனியா எடுத்துக்காட்டுங்க சுதர்ஷினி, படிக்க நல்லா சுலபமா இருக்கும். நடப்பதை பார்ப்பது போன்ற உணர்வும் தரும். கருத்து தான்... தவறாக எடுக்க வேண்டாம். :) இன்னும் நிறைய எழுதுங்க. படிக்க காத்திருக்கோம். தாமதமான பதிவுக்கு மன்னிக்க வேண்டும், சொந்த வேலைகள் அதிகமாயிட்டு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அக்கா ரொம்ப‌ நன்றி, உங்க‌ comment வரலையேனு பார்த்துக்கிட்டிருந்தேன். தவறாக‌ எடுக்க என்ன‌ இருக்கு, உங்க‌ எல்லோரினதும் உண்மையான‌ விமர்சனங்கள்,அபிப்ராயங்கள் தான் எனக்கு வேண்டும். அப்போதுதான் சிறந்த‌ படைப்புக்களை பதிவிடலாம்.
எத்தனையோ வருடங்களாக‌ கதை எழுத வேண்டும் என்று ஆசை, என்னால் முடியுமா, எல்லோரும் ஏற்றுக்கொள்வார்களா, Indian writers மாதிரி எழுத‌ முடியுமா..? என்று பல‌ தயக்கங்கள். சரியான‌ களமும் கிடைக்கவில்லை. இப்படி ஒரு இணையத்தளம் எனக்கு களம் அமைத்து கொடுத்தது மிக‌ மிக‌ மகிழ்ச்சியாய் இருக்கிறது. இந்தியாவுக்கு வந்து உங்க‌ எல்லோரையும் பார்க்க‌ ஆசையாக‌ இருக்கிறது.
பி.கு
உங்க‌ கருத்து வருவதற்கு முன்னமே இன்னொரு கதையை அட்மின்கு அனுப்பிவிட்டேன், அதில் நீங்கள் சொன்ன‌ "ஆட்கள் பேசும் இடங்களை தனியா எடுத்துக்காட்டுங்க"// என்ற‌ விடயம் உள்வாங்கப்படவில்லை. "சொல்லியும் இவ‌ கேட்கலையேனு" தவறாக‌ எடுத்துக்கொள்ளாதீங்க‌. நிச்சயமாய் அடுத்தடுத்த‌ கதைகளில் நிச்சயம் நீங்க‌ சொன்னதை follow பண்றேன். மேலும் பிழைகள் இருந்தால் கண்டிப்பா சுட்டிக்காட்டுங்கள் அக்கா.
நன்றி.
சுதா

ஒரு பிரெச்சனையும் இல்லை :) அப்படி எல்லாம் தப்பா நினைக்க மாட்டோம். நீங்க மாற்ற விரும்பினாலும் அட்மினுக்கு அதை உடனே வெளியிட வேண்டாம் மாற்றம் செய்து அனுப்புகிறேன் என்று ஒரு மெயில் தட்டி விட்டால் போதும். நீங்க மாற்றி திரும்ப அனுப்பும் வரை காத்திருப்பாங்க. அட்மினில் இது போல உதவிகள் நிச்சயம் செய்வாங்க.

நீங்க இலங்கையை சேர்ந்தவரா? அப்படின்னா ஏன் இந்திய எழுத்தாளர்கள் போல எழுத விரும்பறீங்க? எனக்கு எழுத்தாளர்கள் பற்றித் தெரியாது, ஆனால் உங்க இலங்கை தமிழ் வாசிக்க பிடிக்கும், எனக்கு மட்டுமில்லை இங்கே பலரும் அதை விரும்புவாங்க. அப்படியும் முழுக்க இலங்கை தமிழ் வரும் படி ஒரு கதையை அனுப்புங்க. :) வாசிக்க காத்திருக்கோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா