முக்கிய அறிவிப்பு - உங்கள் அறுசுவை டாட் காம் யாஹூ நிறுவனம் வசமாகின்றது.

அன்பு அறுசுவை நேயர்களுக்கு,

வணக்கம். இது சந்தோசமான செய்தியா, வருத்தமான செய்தியா என்று வகைப்படுத்த முடியவில்லை. என்னைப் பொறுத்தமட்டில் இரண்டும் கலந்த கலவையாய் இருக்கின்றது. உங்கள் அனைவரின் ஆதரவுடன் பத்து ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வரும் நமது அறுசுவை தளம், வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் வருடப்பிறப்பு தினத்தில் இருந்து, என்னுடைய நிர்வாகப் பொறுப்பில் இருந்து யாஹூ நிறுவனம் (tamil.yahoo.com) வசம் செல்கின்றது.

இது திடீரென எடுக்கப்பட்ட முடிவு அல்ல. 2013 பிப்ரவரி மாதத்தில் இதற்கான முதல் கட்ட பேச்சு வார்த்தைகள் தொடங்கியது. பிறகு பல்வேறு தடங்கல்கள், ஆலோசனைகள், பேரங்கள் என்று ஒரு வருட காலத்திற்கு மேல் தொடர்ந்து நிறைய நடந்து வந்தது. எதுவுமே உறுதியாகாத நிலையில் யாரிடமும் எதையும் என்னால் தெரிவிக்க முடியவில்லை. இந்தத் துறையில் என்னுடன் மிகவும் நெருக்கமாக உள்ள ஒன்று இரண்டு பேரிடம் மட்டுமே இது குறித்து ஆலோசனை செய்ய முடிந்தது.

யாஹூ நிறுவனம் தனது தமிழ் தளத்திற்கு தினமலருடன் டை-அப் செய்துள்ளது உங்களில் பலருக்கு தெரிந்து இருக்கலாம். செய்தி தவிர்த்து மேலும் பல பகுதிகள் அந்த தளத்தில் இருந்தாலும், சமையல் பகுதி இல்லாத நிலையில், அறுசுவை சமையல் குறிப்புகளை அங்கே கொடுப்பது சம்பந்தமாக முதல் கட்ட பேச்சு வார்த்தை தொடங்கியது. இங்கே இருக்கும் குறிப்புகளை அங்கே பகிர்ந்துகொள்வதில் எனக்கு விருப்பம் கிடையாது. இதனால் ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தைகள் எந்த முடிவையும் எட்டாமல் முடிவுற்றது. தொடர்ந்து பலச்சுற்று பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு, ஒரு கட்டத்தில் முழு தளத்தையும் யாஹூவுடன் இணைப்பது என்பது முடிவாயிற்று. இந்த முடிவை எட்டவே சில மாதங்கள் ஆயிற்று. அது முடிவான பிறகும் சில சிக்கல்கள் நீடித்தன. இதற்கிடையில் அறுசுவை தளம் மாற்றியமைக்கப்பட்டு புதுப் பொலிவுடன் வெளியான பிறகு இதற்கான மதிப்பு அதிகரித்தது. அதற்கு பிறகு நடந்த பேச்சுவார்த்தைகள் எனக்கு சாதகமாக இருந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி நிர்வாக மாற்றம் உறுதி செய்யப்பட்டது.

வரும் 4 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தி ரெயின்ட்ரீ ஹோட்டலில் (The raintree hotel) நடைபெறும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், இந்த இணைப்பிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கின்றது. இது ஒரு விழாவாக இருக்காது. ஒரு அறிவிப்பிற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு என்ற அளவில்தான் நடைபெறும். அதனால் எல்லோரையும் அங்கே அழைக்க இயலாது. மிகக்குறைந்த எண்ணிக்கையில் சிலரை அழைத்து வரலாம் என்று எனக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. எனது குடும்பத்தினர் தவிர இன்னும் சில அறுசுவை உறுப்பினர்கள் என்னுடன் அங்கே இருப்பார்கள்.

அறுசுவை தளம் யாஹூ தளம் வசமாவதில் உண்டாகும் நன்மை தீமைகள் என்னென்ன?

இந்த கேள்வி எல்லோர் மனதில் வரலாம் அல்லது இது குறித்த சந்தேகங்கள் வரலாம். எனவே இது சம்பந்தமாக சில விசயங்களை நான் தெளிவுப்படுத்த விரும்புகின்றேன்.

முதலில் இது ஒரு நிர்வாக மாற்றமே. என்னுடையப் பொறுப்பில் இருந்த தளம் ஒரு பெரிய நிறுவனம் வசம் செல்கின்றது. அட்மின் என்று இங்கே அதிகாரம் செய்து கொண்டிருந்த என்னுடைய தொல்லைகள் எதுவும் இனி உங்களுக்கு இருக்காது. :-) பத்து வருடங்களாக நான் இந்த தளத்தை நடத்திக் கொண்டிருந்தாலும் இதற்கான என்னுடைய சிரமங்கள் நிறைய பேருக்கு நன்கு தெரியும். அறுசுவையில் எத்தனையோ விசயங்களை செய்ய நினைத்தாலும், ஆட்பற்றாக்குறை, நேரமின்மை, உபகரணங்கள் இன்மை என்று பல காரணங்களால் நான் நினைத்தவற்றை செய்ய இயலாது போயிற்று. ஆனால் சற்று கூர்ந்து கவனித்தால் இத்தனை காரணங்களுக்கும் பின்னால் ஒரே ஒரு மூலக்காரணம் மட்டுமே இருப்பது தெரியும். அது பொருளாதாரப் பற்றாக்குறை. பொருளாதாரம் இருந்தால் நான் செய்ய நினைத்த அனைத்தையுமே, ஏன் அதற்கு மேலுமே எளிதாகச் செய்யலாம். ஆனால் என்னுடைய நிலையில் இருப்பதை வைத்துக்கொண்டு, எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை வகுத்துக்கொண்டு அதற்குள் என்ன செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்ய முடிந்தது. இனி அந்த நிலை இருக்காது. ஒரு பெரிய நிறுவனம் இதை எடுத்துக்கொள்ளும்போது மேலே குறிப்பிட்டவை எல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்ற நிலை உருவாகும். அதன் விளைவாய் அறுசுவை பலமடங்கு புதுப்பொலிவு அடையும். எதிர்கால அறுசுவைக்கு இதுதான் உகந்தது.

இந்த நிர்வாக மாற்ற பேச்சுவார்த்தையில் நான் முக்கியமாக தெரிவித்த விசயம், அறுசுவை உறுப்பினர்களின் சுதந்திரம் எந்த வகையிலும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதுதான். அதற்கு அவர்கள் பக்கமிருந்து வந்த பதில், உங்களைவிட நாங்கள் இந்த விசயத்தில் அனுபவம் வாய்ந்தவர்கள். இன்னும் சொல்லப்போனால், நீங்கள் அவர்களுக்கு சுதந்திரமே கொடுக்கவில்லை. நாங்கள் அதை கண்டிப்பாக கொடுப்போம் என்றார்கள். உண்மையிலேயே இப்படிச் சொன்னார்கள். நிச்சயம் அது நடைபெறும் என்று நம்புகின்றேன். நான் இங்கே நிறைய விசயங்களை கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றேன் என்பது உண்மைதான். அது எனக்கே நன்றாகத் தெரியும். அதற்கு காரணம், ஒரு வித பயம். சில நேரங்களில் இங்கே நடைபெறும் சின்னச் சின்ன விசயங்கள்கூட எனக்கு பெரிய பாதிப்பைக் கொடுப்பதாக இருந்தது. அந்த பாதிப்புகளை தாங்கும் வலிமையற்றவனாகவே நான் இருக்கின்றேன். இதன் காரணமாகவே விதிமுறைகள் என்ற பெயரில் நிறைய கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்து, சில நேரங்களில் சர்வாதிகாரிபோல் நடந்து கொண்டு இதனை நடத்தி வந்திருக்கின்றேன். இதனால் சிலருக்கு மனவருத்தம் இருந்திருக்கலாம். எனக்குமே சில நேரங்களில் இருந்திருக்கின்றது. ஆனால், இந்த தளம் வெற்றிகரமாக இத்தனை ஆண்டுகள் தொடர்வதற்கு அந்த கட்டுப்பாடுகள் ஒரு முக்கிய காரணம் என்பதை நான் நிச்சயம் உணர்கின்றேன்.

எனவே, உறுப்பினர்கள் எந்த காலத்திலும் வித்தியாசமாக உணராமல், எப்போதும் போல் இது உங்கள் அறுசுவை தளம் என்று உணரும் விதமாக இந்த மாற்றங்கள் இருக்கும் என்று உறுதியளிக்கின்றேன். அட்மின் என்று சொல்லிக்கொண்டு நான் இனி கோலோச்ச மாட்டேன். என்னுடைய தொல்லைகள் இருக்காது. :-) ஆனால் பாபு என்ற பெயரில் ஒரு சாதாரண, சக உறுப்பினராக நான் இருக்கு வரை அறுசுவையில் தொடர்வேன். என்னுடைய பங்களிப்புகள் ஏதேனும் ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் இருந்தால் அதை அவர்கள் வெளியிடுவார்கள். நான் விதிகளுக்கு உட்பட்டு மன்றத்தில் உரையாடினால் என்னை ப்ளாக் செய்யாமல் அனுமதிப்பார்கள் என்று நம்புகின்றேன். :-) ஆகவே இந்த மாற்றத்தால் நன்மைகள் மட்டுமே இருக்குமே தவிர, தீமைகள் என்று எதுவும் இருக்காது.

இந்த நிர்வாக மாற்றம் எல்லாம் உறுதியாகி, இந்த விசயத்தை எனது நெருங்கிய நண்பருக்கு தெரிவித்த போது அவர் கேட்ட முதல் கேள்வி, 'இப்போது உன்னுடைய மனநிலை எப்படி இருக்கின்றது?'

இந்த பதிவின் தொடக்கத்தில் நான் தெரிவித்துள்ளபடி என்னவென்று சொல்ல இயலாத ஒரு மனநிலையில் இருக்கின்றேன். பெற்ற மகனை விற்ற அன்னை மாதிரியான மனநிலை ஒரு பக்கம். நட்ட விதை மரமாகி காய்த்து அதன் பலனை அனுபவிப்பது மாதிரியான இன்னொரு மனநிலை. வெற்றி அடைந்தது மாதிரியான ஒரு மனநிலை. எதையோ இழப்பதைப் போன்ற ஒரு மனநிலை. மொத்தத்தில் ஒரு மனநோயாளி ஆவதற்கு தகுதியுடைய மனநிலை என்று சொல்லலாம். :-)

இந்த அறுசுவை தளம் ஆரம்பித்தபோது, என்னுடன் முன்பு இணைய துறையில் பணிபுரிந்த என் நண்பர்களிடம் தெரிவிக்கும்போது எல்லோருமே இதைத் தவறாமல் குறிப்பிடுவார்கள். தளத்தை நன்றாகக் கொண்டு வந்து bawarchi டாட் காம் போல் நல்ல விலைக்கு விற்றுவிடு என்பார்கள். இதனை ஆரம்பித்தபோது இதை விற்பதைப் பற்றியெல்லாம் யோசிக்கவில்லை. ஆனால், இதன் மூலம் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் சில வருடங்கள் கழிந்த பிறகுதான் அது அவ்வளவு எளிதான விசயம் அல்ல என்பது தெரிய வந்தது. ஒரு கட்டத்தில் இதை மேற்கொண்டு நடத்த இயலாமல் நான் தடுமாறியபோது அறுசுவை நேயர்கள் பொருளுதவி அளித்து, விழுந்துவிடாமல் தாங்கிப் பிடித்ததை எல்லாம் நான் எந்த காலத்திலும் மறக்க மாட்டேன். என் வாழ்க்கையில் ஒரு கொடுமையான காலக்கட்டம் அது.

அறுசுவை ஆரம்ப காலத்தில் இருந்தே இதை வாங்குவதற்கு அவ்வபோது சிலர் ஆர்வம் காட்டியிருக்கின்றார்கள். அந்த நேரங்களில் எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. சில நேரங்களில் இதைக் கொடுத்துவிடுவோம் என்று நான் நினைப்பேன். அப்போது ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். இப்படியேத்தான் காலங்கள் ஓடின. இன்று ஒரு நல்ல நிலையில், நல்ல முடிவை எடுத்திருக்கின்றேன் என்று எனக்குத் தோணுகின்றது. இந்த முடிவை எடுப்பதில் எனக்கு குழப்பங்கள் இருக்கவில்லை. எல்லாம் முடிந்த பிறகு ஏதோ ஒன்று என் கையை விட்டு நழுவிச் செல்வது போன்ற வருத்தம் இருந்தாலும், மற்ற விசயங்கள் எல்லாம் மகிழ்வைத் தருகின்றது. யோசித்துப் பார்த்தால் நான் இழப்பது அட்மின் என்ற அதிகார உரிமையை மட்டும்தான் என்பது தெரிகின்றது. எத்தனை கைகள் மாறினாலும் இதன் நிறுவனர் நான் என்கின்ற பெயர் மாறப்போவதில்லை. மற்றபடி ஒரு உறுப்பினராக நான் அறுசுவையில் எப்போதும் போல் இருப்பதற்கு தடை எதுவும் வரப்போவதில்லை. ஒரு அண்ணாவாக, தம்பியாக இங்கே என் சகோதர, சகோதரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பேன் என்பதை இங்கே உறுதியாக தெரிவிக்கின்றேன். (தளம் அவர்களது முழுப்பொறுப்பிற்கு செல்லும் வரை நானே இங்கே அட்மினாக இருப்பேன் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன்.)

இந்த சந்தோசம் + வருத்தம் கலந்த செய்தியை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த இழை. அறுசுவை பங்களிப்பாளர்கள், உறுப்பினர்கள் சம்பந்தமாக இன்னும் சில விசயங்களைத் தெரிவிக்க வேண்டும். அதை மற்றொரு இழையில் தெரிவிக்கின்றேன். சில உடனடி மாற்றங்கள் அறுசுவையில் இருக்கும். அதைப் பற்றியும் அந்த இழையில் தெரிவிக்கின்றேன். எல்லோருக்கும், எல்லாவற்றிற்கும் நன்றி தெரிவித்து ஒரு பெரிய பதிவிட வேண்டும் என்று விரும்பினேன். அப்படி செய்தால் ஏதோ கை கழுவி விட்டு செல்வது போல் இருக்கும் என்பதால், இங்கே நன்றி தெரிவித்து என்னை பிரித்துக்கொள்ள விரும்பவில்லை.

என்றும் உங்களுடன்
பாபு

இந்த செய்தி எனக்கு அதிர்ச்சியாகத்தான் உள்ளது, இதற்க்கு என்ன சொல்வதுன்னு எனக்குத் தெரியவில்லை

அறுசுவை தளத்தை துவங்கிய உங்களுக்கு மிக்க நன்றி அது மட்டும் இல்லாது இத்தளம் இன்னும் சிரப்புர அமையனும் என்று தானே இம்முடிவை எடுத்தீர்கள் அதை நினைத்தாலே உங்களை பாராட்டனும்னு தோனுது எல்லாவற்றிற்கும் மேல் நீங்கள் எம்முடன் சக உறுப்பினராக இருப்பன் என்றது மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

சந்தோஷம்+வருத்தம் கலந்த செய்தி ஆச்சரியத்துடன் மகிழ்ச்சியை அளித்தாலும் அட்மின் ஆக நீங்கள் இருக்கமாட்டீர்கள் என்ற செய்தி வருத்தமளிக்கிறது. பாபுவாக உடன் இருப்பீர்கள் என்பது ஆறுதல் அளிக்கிறது.
அறுசுவை தனது அடுத்தகட்ட பயணத்தை மேலும் சிறப்பாக துவங்கப்போகிறது என்பது மகிழ்சசியே..

நட்புடன்
குணா

ஆஹா ஒரு குறிப்பை தேட புகுந்தேன் இப்படி ஒரு செய்தி....யாரும் நம்பிடாதீங்க ஏப்ரில் ஃபூலுக்கு ஏமாத்த பாக்குறார்:D

ஆம் இது ஏப்ரல் பூல் தான் 100%
சுபா

be happy

ஆரம்பத்திலேயே டவுட்டு.. இருந்தாலும் இன்னைக்கு நம்ம தினமாச்சே.. அரைகுறை மனதுடன் பதிவிட்டால் ;-)

நட்புடன்
குணா

பார்த்த உடனே நானும் அப்படித்தான் நினைத்தேன்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஹாய்,
இந்த் செய்தி ஏப்ரல் முட்டாள்தின‌ செய்தியாக‌ இருந்ததாலும் சந்தோஷம்./////இல்லை உங்களின் நோக்க‌ இலட்சியத்தின் அடுத்த‌ வேற்றிபடியை தொடுகிறீர்கள் என்றாலும் மிக‌ சந்தோஷமே .ஆல் ஈஸ் வெல்

ரஜினிபாய்.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

தளிகா சிஸ்டர்,

வாங்க, இன்னைக்கு வந்து இப்படி ஒரு போஸ்டிங் போட்டு ஏப்ரல் ஃபூல் ஆகணுமா.. :-) இந்த பதிவு போடுறப்பவே வீட்டுல கேட்டாங்க. இன்னைக்கு இப்படி சொன்னீங்கன்னா இதை யாரும் நம்புவாங்களா.. ஏப்ரல் ஃபூல் பண்றாங்கன்னு நினைச்சுக்கமாட்டாங்களான்னு.. நான் அதுக்கு சொன்னேன் அது ஒருவிதத்துல எனக்கு நல்லதுதான். அப்படி நம்புறவங்களை நான் ஏப்ரல் ஃபூல் பண்ணின மாதிரி இருக்கட்டும்னு.. :-)

இப்ப புரிஞ்சதா.. யார் ஏப்ரல் ஃபூல் ஆனாங்கன்னு.. ;-)

அட்மின் பாபு அண்ணா,

உண்மை என்ன‌?

நீங்க‌ மனக்குழப்பத்துல‌ இருக்கீங்களோ இல்லையோ, இப்ப‌ நம்ம‌ தோழிகள், தோழர்கள் ரொம்ப‌ குழப்பத்துல‌ தான் இருக்காங்க‌.....

இது ஏப்ரல்ஃபூல் (100% )செய்தியா இருந்தா ரொம்ப‌ சந்தோஷம் தான் .......

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

மேலும் சில பதிவுகள்