குடியும் குடித்தனமும் - சுதர்ஷினி ரவி பிரசன்னா

என்னங்க‌ சாப்பிட்டீங்களா?

ம்ம்... சரி அப்புறம் பேசுறேன் மறுமுனையில் போன் கட்.

ஹும்.. பெருமூச்சுடன் போனையே பார்த்துக்கொண்டிருந்தாள் மகேஸ்வரி. இதே இரண்டு வருடத்துக்கு முன் என்றால்.....

என்னங்க‌ சாப்பிட்டீங்களா?

ம்...சாப்பிட்டேன், நீ சாப்பிட்டியா? கத்தரிக்காய் பொரியல் சூப்பர்... இன்னைக்கு ஈவினிங் ஷாப்பிங் போவோம் நான் 5 மணிக்கு வந்திருவேன். ரெடியா இரு. ஒகே.. பை..மா செல்லம் வைக்கிறேன்.

இந்த‌ இரண்டு வருடத்தில் எத்தனை மாற்றம்? ஒரு குழந்தை பிறந்த‌வுடன் இப்படி ஒரு மாற்றமா? நான் என்ன‌ அசிங்கமாகிட்டேனா? குண்டாகிட்டேனா? கண்ணாடியில் ஒரு தடவை தன்னை பார்த்துக்கொண்டாள். இல்லையே முன்பு இருந்ததைவிட‌ நல்லா தான் இருக்கேன். வெயிட் 5 நாட்களுக்கு முன்பு தான் செக் பண்ணினேன். அதே 50 கிலோ தான்.

இதென்ன‌ பைத்தியக்காரத்தனம்.. அவருக்கு ஆபிசில் வேலை அதிகம் இருக்கும். அந்த‌ நேரத்துல‌ நான் கால் பண்ணினா கொஞ்சிக்கிட்டா இருப்பாங்க‌... மனதைத் தேற்றிக்கொண்டு வேலையில் ஈடுபட்டாள்.

என்னதான் மனதைத் தேற்றினாலும் இதயத்திற்கும், வயிற்றுக்கும் நடுவில் ஒரு உருண்டை ஓடிக்கொண்டிருந்ததை நிறுத்தத்தான் முடியவில்லை மகேஸ்வரியால். தன் ஒரு வயது குழந்தை சபரீஸ‌னின் சிரிப்பிலும் விளையாட்டிலும் அவனை கவனிப்பதிலும் மனதை செலுத்திய‌ பின் அந்த‌ உருண்டையை காணவில்லை.

உண்மைதான் என் மகன் சபரீஸ‌ன் மட்டும் பிறந்திருக்காவிட்டால் நான் இந்நேரம் அங்கொடையில் (இந்தியா: தமிழ் நாட்டில் கீழ்ப்பாக்கம் போல‌ இலங்கையில்) தான் இருந்திருக்கணும் என்று நினைத்துக்கொண்டாள்.

பகல் 2.00 மணி மகனுக்கு உணவு ஊட்டிவிட்டு தூங்க வைத்துக் கொண்டிருந்தாள். அவன் தூங்கியதும் மனம் மீண்டும் குழம்பத் தொடங்கியது. இது இன்று நேற்றல்ல‌ ஒரு 7 மாதமாக‌ இப்படித்தான். தன் கணவன் கலைவேந்தன் தன்னை விட்டு விலகி போவதாகத் தான் தெரிகிறது. 3 வருடம் காதலித்து இணைந்தவர்கள் தான் கலைவேந்தன் மகேஸ்வரி இருவரும்.

காதலிக்கும் போதே தெரியும் தன்னவனின் நண்பர்கள் வட்டம் பெரியது என்றும், நண்பன் என்றால் எதையும் செய்வான் என்றும், நண்பர்களுடன் சேர்ந்தால் குடிப்பான் என்றும் தெரியும். எல்லாம் தெரிந்தும் இவனைத்தான் கட்டுவேன் என்று பிடிவாதம் பிடித்து கட்டிக்கொண்டாள். காதல் கண்ணை மறைத்துவிட்டது என்று சொல்வதா? இல்லை கல்யாணத்துக்குப் பிறகு தன் அன்பால் அவனை மாற்றிவிடலாம் என்ற‌ மகேஸ்வரியின் அதீத‌ நம்பிக்கை என்று சொல்வதா?

இந்த‌ நண்பர்களை நினைத்தால் பற்றிக்கொண்டு வரும் மகேஸ்வரிக்கு. நேரம் காலம் தெரியாமல் போன் செய்து மச்சான் எங்க‌ இருக்க‌? இந்த‌ கேள்விக்கு பதில் சொல்வதற்கு அவன் எழும்பி வெளியே சென்றுவிடுவான். திரும்பி வரும் போதே ஏதோ ரொம்ப‌ அவசரமான வேலை போல‌ வந்து மகேஸ் கொஞ்சம் வெளில போய்ட்டு வாறேன். இவளின் பதிலுக்கு கூட‌ காத்திராமல் போய்விடுவான். பிறகென்ன இரவு 12, 1 மணி தான்.

தினமும் இதே நிலை தான். வெறுத்துவிட்டது மகேஸ்வரிக்கு. தன்னுடனும், மகனுடனும் டைம் ஸ்பெண்ட் பண்ண‌ கஷ்டம் இவருக்கு. ஃப்ரண்ட்ஸுடன் எவ்வளவு நேரம் என்றாலும் டைம் ஸ்பெண்ட் பண்ண‌முடியும். அப்படி என்னதான் பேசுவாங்களோ 12, 1 மணி வரை. நினைக்க‌ நினைக்க‌ மனசு முழுக்க‌ வெறுப்பும், கோபமும் கவலையுமாயிருந்தது.

தினமும் அவன் வந்ததும் சண்டை போட்டு கத்துவாள். அவன் குடிதிருக்கும் நேரம் எவ்வளவு தான் சண்டை போட்டாலும், விடிந்ததும் அதைப் பற்றியே மறந்துவிட்டு கதைத்துவிட்டு போய் அன்றும் அதே மாதிரி தான் வருவான். தினமும் குடித்துவிட்டு வ‌ருபவ‌னிடம் சொல்லிச் சொல்லி வெறுத்துவிட்டாள். அவன் குடித்திருக்காத‌ நேரம் பார்த்து இதைப் பற்றி கதைக்க‌ வேண்டும் என்று நினைத்துக் கொள்வாளே தவிர‌ பேசியதில்லை.

நேரம் மாலை 5.00 மணி கணவன் வேலை விட்டு வரவேண்டிய‌ நேரம். ஆனால், வந்ததோ அவனிடமிருந்து போன் கால்.

மகேஸ் இன்னைக்கு வர‌ கொஞ்சம் நேரமாகும்.

என்ன‌ விசயம்ங்க‌?

இல்ல‌ எங்க‌ கம்பெனி உதவி பணிப்பாளர் இன்று எங்க‌ கம்பெனியிலிருந்து விலகி கனடா போறார் அதான் பார்ட்டி.

சரி... கவனமா நேரத்தோட‌ வீடு வந்து சேருங்க‌. கோபமாக‌ சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள்.

தன் கணவன் நைட் சாப்பாட்டுக்கு வரப்போறதில்லை. தனக்கும், மகனுக்கும் மட்டும் செய்து சாப்பிட்டுவிட்டு பேசாம‌ தூங்கிடுவோம் என்றால் இந்த‌ பாழாய் போன‌ மனது அப்படி அவ்வளவு சீக்கிரம் தூங்க‌விடுவ‌தாய் இல்லை. கவனமா வந்து சேரனும் கடவுளே.. குடிச்சிட்டு ட்ரைவ் பண்ணிக்கொண்டு வாராரே விபத்து ஏதும் நேராமல் நல்லபடியா வந்து சேரனுமே. ட்ராஃபிக் போலீஸ் பிடிக்காம‌ இருக்கணுமே. குடிச்சிட்டு யாருடனும் வாய் தர்க்கம் பண்ணிக்கொண்டிருக்க‌ கூடாதே. இப்படி பல‌ யோசனைகள் பயங்கள் மகேஸ்வரியைப் போட்டு தாக்கிக்கொண்டிருந்தன‌.

இரவு 12 மணி. இன்னும் வரலையே... இரத்தம் லேசாக‌ உரையத்தொடங்கியது.. கால் பண்ணி பார்த்தால் என்ன?

ஹலோ.. என்ன‌? வாறேன் போனை வை........

போன் கட்டானது... அந்த‌ பக்கம் இருந்த‌ சத்தம் அவன் இன்னும் பார்ட்டியிலிருந்து கிளம்பவேயில்லை என்பதை சொல்லியது.

வந்த‌ ஆத்திரத்தில் இவர் என்ன‌ ஆனால் எனக்கென்ன‌ என்னைப் பற்றி கவலைப்படாதவரைப் பற்றி நான் ஏன் கவலைப்படனும். நான் தனியா இங்க‌ பிள்ளையை வைத்துக்கொண்டு இருக்கிறேன். ஏதாவது ஒரு அவசரம் என்றாலும் என்ன‌ செய்வாள் என்று கூட‌ நினைத்து பார்க்க‌ முடியாதளவுக்கு பார்ட்டி, ஃப்ரண்ட்ஸ், குடி... ச்சே.... நான் தூங்குறேன் வந்தால் கதவை தட்டுவார் தானே..

ஆஸ்பிட்டலில் பிள்ளையைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறாள்.

டாக்டர் என்ன‌... இப்ப எப்படி இருக்கிறார்?...

ட்ரிங்க் அன்ட் ட்ரைவ்... என்று எதோ ஆங்கிலத்தில் அவர் சொல்லிக்கொண்டு போக‌.. முகத்தில் கட்டுடன் கணவன்.

ஐயோ கடவுளே.. என்று அலறிக்கொண்டு எழும்பினாள்... கடவுளே கனவு.

உடல் முழுதும் வியர்த்துக் கொட்டியது மகேஸ்வரிக்கு. நேரம் சரியாக‌ 12.45 மனது திக் திக் என்று அடித்துக் கொண்டது. மீண்டும் தன் செல்போனை எடுத்து போன் பண்ணினாள். அந்த‌ பக்கம் ரிங் போய்க்கொண்டிருக்க நோ ஆன்சர். மீண்டும் ட்ரை பண்ணினாள். ரிங் போய்க்கொண்டிருக்க நோ ஆன்சர். பயத்தில் உடம்பில் உயிர் இல்லாத‌ நிலை. மனசும் உடம்பும் நடுங்க‌ ஆரம்பித்தது.

என்னவாகியிருக்கும் ஏன் ஆன்சர் பண்ணல‌, போலீஸில் மாட்டிக்கொண்டாரா? அவங்க‌ போனை பிடுங்கி வைத்திட்டாங்களா? இல்ல‌ ஏதாவது விபத்தோ? வாகனம் ஒரு பக்கம், தன் கணவன் ஒரு பக்கம், போன் ஒரு பக்கம் இருக்குமோ? ஐயோ கடவுளே.. ச்சே அப்படி இருக்காது. போனை மிஸ் பண்ணிட்டாரோ... சரி திரும்ப‌ போன் பண்ணி பார்ப்போம்.

த‌ நம்பர் யு ஹேவ் டயல் இஸ் கரண்ட்லி ஸ்விட்ச்டு ஓஃப். ப்ளீஸ் கால் அகய்ன் லேட்டர்.. மூச்சே நின்று விடும் போலிருந்தது மகேஸ்வரிக்கு.

சரியாக‌ இரவு 1.30 மணி கேட் கதவு திறக்கும் சத்தத்தை தொடர்ந்து கார் கதவு மூடும் சத்தம் கேட்டதும் அப்பாடா வந்துவிட்டார் என்று பெருமூச்சு விட்டாள் மகேஸ்வரி.

கதவை திறந்ததும் வீட்டுக்குள் வந்தவன் சபரீஸ் தூங்கிட்டானா? நீ சாப்பிட்டியா? என‌ கேட்க‌.

ஆமாம்.. நைட் 1 மணி வரை சாப்பிடாம‌ தூங்காமத்தான் இருப்பாங்க‌.. கோபமாக‌ பேசிவிட்டு, போன் ரிங்க் போனுச்சு ஏன் ஆன்சர் பண்ணலை? எத்தனை தடவை போன் மண்ணினேன். அப்புறம் போன் ஸ்விட்ச் ஓஃப்.

இல்ல‌ போன் சைலன்ஸில் இருந்தது. அப்புறம் சார்ஜ் இல்லாமல் ஒஃப் ஆகிட்டது போல. நான் தான் வர‌ லேட் ஆகும்னு சொன்னேன் தானே. நீ ஏன் சும்மா போன் பண்ணிக்கொண்டிருந்த‌ என்று சர்வ‌ சாதாரணமாக‌ கேட்வனிடம்,

இவ்வளவு நேரம் வரை தன் மனம் பட்ட‌ பாட்டை சொல்லத்தான் முடியுமா? சொன்னால் தான் அவர் புரிந்துக்கொள்வாரா?

அடுத்த நாளும் தொடங்கியது. இதை இப்படியே விடக்கூடாது. இன்று பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும். வரட்டும் என்று காத்திருந்தாள். அதிசயமாய் அன்று 5.30க்கு வீட்டுக்கு வந்த‌ கலைவேந்தனை கண்டதும் மகிழ்ச்சியில் அப்பா வந்துட்டார்.. அப்பா வந்துட்டார் என்று குழந்தை சபரீஸ்சை தூக்கிக்கொண்டு ஓடினாள். இந்த‌ மாதிரி அவன் சீக்கிரம் வீட்டுக்கு வரும் வேளைகளிலெல்லாம் அவளின் சந்தோசத்தை வார்த்தைகளினால் சொல்ல‌ முடியாது.

டீ குடிக்கிறீங்களா? பிஸ்கட் சாப்பிடறீங்களா? என்று அடுக்குவாள்.

அன்றும் அப்படித்தான். அப்பாவைக் கண்டதும் சபரீஸனும் தாவிக்கொண்டு அப்பாவிடம் ஓடினான்.

இப்படியே தினமும் இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்.... நான் இன்று எப்படியும் பேசிவிட‌ வேண்டும் என்று நினைத்ததையும் பேசத் தோன்றவில்லை மகேஸ்வரிக்கு. ஏன் அதைப் பற்றி பேசி இந்த‌ நேரத்தில் சண்டை போட்டு.. இப்ப‌ இருக்கின்ற‌ சந்தோசத்தையும் கெடுத்துக் கொள்வானேன். அதைப்பற்றி பேசி திரும்ப‌ கோபித்துக் கொண்டு குடிக்க‌ போய்விட்டால் அப்புறம் என்ன‌ செய்வது? இப்படி நினைத்தே அவன் வீட்டில் இருக்கும் சந்தர்ப்பங்களில் அவனிடம் இதைப் பற்றி பேசுவதை தவிர்த்திருக்கிறாள்.., பிறகு அன்றே பேசியிருக்கலாமே என்றும் தவித்திருக்கிறாள்.

சரியாக‌ மாலை 6.30 ஹாலில் அமர்ந்து டீவி பார்த்துக்கொண்டு மகனுடன் விளையாடிக் கொண்டிருந்தவனுக்கு போன் கால் வந்தது. வீட்ல தான்டா மச்சான்.. இந்த‌ பக்கம் சொன்ன‌ பதிலிலிருந்து அந்த‌ பக்கம் எங்க‌ இருக்கடா மச்சான் என்றே கேட்கப்பட்டிருக்கும் என்று உணர்ந்து இரவு உணவு தயாரித்துக் கொண்டிருந்த‌ மகேஸ்வரி ஹாலுக்கு வந்தாள். விடக்கூடாது இன்று போக‌ விடக்கூடாது என நினைத்தாள்..

போன் பேசிவிட்டு வேகமாக‌ எழுந்தவன் மகேஸ். கொஞ்சம் வெளில போய்ட்டு வாறேன்.

எங்க‌ போறீங்க‌.. என்னங்க‌ நீங்க‌ இன்று தான் வேலை விட்டு சீக்கிரம் வந்தீங்க‌. கொஞ்சம் எங்களோட‌ இருங்களேன். எங்க‌ கூட‌ டைம் ஸ்பெண்ட் பண்ண‌ உங்களுக்கு கஷ்டமா இருக்கா? ஏங்க‌ இப்படி பண்றீங்க உங்களுக்கு ஃப்ரண்ட்ஸ் தான் முக்கியம்னா அவங்களோடே இருக்க வேண்டியது தானே எதுக்கு உங்க‌ளுக்கு பொண்டாட்டி பிள்ளை? கல்யாணத்திற்குப் பிறகு குடிக்கமாட்டேன்னு சொன்னீங்க தானே... உங்களுக்கு ஒரு பிரச்ச‌னைன்னா உங்க‌ ஃப்ரண்ட்ஸ் தான் வந்து உதவுவாங்க பார்த்துக் கொண்டிருங்கள்.

அவங்களை பற்றி ஒன்னும் சொல்லாத..

ஆமா உங்க‌ ஃப்ரண்ட்ஸ் பற்றி சொன்னால் மட்டும் கோபம் பொத்துகிட்டு வந்திடும். உங்களுக்கு எதுக்கு நானும் பிள்ளையும். எவ்வளவு காலத்திற்கு இப்படியே இருக்க‌ போறீங்க‌?

நான் இப்படித்தான் இருப்பேன். உனக்கு தெரிஞ்சு தானே கட்டிக்கிட்ட‌. இப்ப‌ என்ன? உனக்கு எதும் கஷ்டம் கொடுக்குறேனா? உனக்கு தேவையானதையெல்லாம் வாங்கி கொடுக்குறேன் தானே. பிறகென்ன‌???

தேவையானதையெல்லாம் வாங்கி கொடுத்துட்டா போதுமா... அது மட்டுமா ஒரு புருஷனின் கடமை? நீங்க‌ லேட்டா வரப்பயெல்லாம் நான் எவ்வளவு பயந்துக் கொண்டிருப்பேன்னு உங்களுக்கு சொன்னா புரியாது.

எதுக்கு பயப்படற‌ நான் என்ன‌ சின்ன‌ பிள்ளையா?

என்னை பற்றி விடுங்க. உங்க‌ பிள்ளையோட‌ டைம் ஸ்பெண்ட் பண்ணுங்க‌. அவனும் உங்களைக் கண்டா எவ்வளவு சந்தோசப்படறான்னு பார்க்குறீங்கதானே?

நீ அதைப் பற்றி பேசாத‌. அதெல்லாம் எனக்கு தெரியும். நீ சொல்ல‌த் தேவையில்ல‌. நான் இப்படின்னு தெரிஞ்சுதானே கட்டிகிட்ட இப்ப‌ என்ன‌? என் கூட‌ இருக்க‌ முடியாட்டி போ என்று கத்திவிட்டு வெளியே போய்விட்டான்.

பீரிட்டு வந்த‌ அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டே மகனை தூக்கி அணைத்துக் கொண்டாள். போய்விட‌ முடியும் தான். வேணாம்.. நீயும் உன் வாழ்க்கையும் என்று போய்விட‌ முடியும் தான். தான் படித்த‌ படிப்புக்கு ஒரு வேலை தேடிக்கொண்டு பேசாமல் போய்விடலாம் தான். ஆனால் அவன் மேல் தான் வைத்த அன்பு அப்படிப்பட்டதில்லையே... என்னதான் சண்டை போட்டாலும், கோபப்பட்டாலும், அவரைவிட்டு போகனும் என்று ஒரு நாளும் நினைத்ததில்லையே. திருத்தனும் என்றுதானே நினைத்திருக்கிறாள்.

அவருக்குத்தான் என் மேல் காதல் இல்லை. நான் தேவை இல்லை என்றால் என‌க்கும் காதல் இல்லைன்னு நினைத்துக் கொண்டாரா? மனசு அழுதது... வலித்தது...

நான் பயந்தது போலவே நடந்து விட்ட‌தே.. இப்ப‌ நான் என்ன‌ செய்வேன் கதறிக்கொண்டு ஒடினாள் ஆஸ்பிட்டலுக்கு.

பயப்படற‌ மாதிரி ஒன்றும் இல்லை. கால்ல‌ கட்டு போட்டிருக்கு. முகத்தில் தான் கண்ணாடித் துகள்கள் இருக்கு. அதை எடுத்திடலாம். பெயின் இருக்கும். உடம்பில் ஆல்கஹால் இருக்கறதால் அது இறங்க‌ மருந்து கொடுத்திருக்கோம். ஹீ இஸ் ஓகெ டுமாரோ வீ கேன் டிஸ்சார்ஜ்.. என்று டாக்டர் சொன்னப் பிறகு தான் மகேஸ்வரிக்கு மூச்சுவிட‌ முடிந்தது.

இதுக்குத் தானே தலையால அடிச்சிக்கிட்டேன். இப்ப புரியுதான்னு கத்தவேண்டும் போலிருந்த‌ மனதை அடக்கிக் கொண்டு கட்டிலில் படுத்திருந்த‌ கணவனை அமைதியாக‌ பார்த்துக் கொண்டிருந்தாள். கண்கள் மட்டும் கலங்கி கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

அப்பா... என்று ஓடி வந்த‌ சபரீஸனை அப்பாக்கு சுகமில்லைதானே.. அப்பா சரியானதும் விளையாடுவார் என்று தூக்கிக் கொண்டாள்.

கம்பெனி வாகனம் என்ப‌தால் கம்பெனியின் நிர்வாகத்திற்கு பதில் சொல்ல‌ வேண்டி இருக்கும் என்று சுரத்தே இல்லாமல் பேசிய‌ கணவனை என்ன‌ பதில் சொல்வது என்று தெரியாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

கணவனின் போனின் ரிங் டோனை வைத்து கால் பண்ணுவது இந்தியாவிலிருக்கும் தன் மாமியார் தான் என்பதை யூகித்து போனை எடுத்தாள்.

ஹலோ.. என்னடிம்மா என் பிள்ளை எப்படி இருக்கான். இப்படி ஒரு விபத்து என்று கேள்விப்பட்டதும் பதறிப்போய்டேன். அவனை பக்கத்திலிருந்து பார்த்துக்க‌ எனக்கு முடியலையே..

இல்ல‌... பயப்படாதீங்க‌ அத்தை, ஒன்னும் பிரச்சனை இல்லைன்னு டாக்டர் சொல்லிருக்கார்.

என்னம்மா... உன்னால‌ எம்பிள்ளையை கவனமா பார்த்துக்க‌ முடியலையே? அவன் குடிப்பான் தான். அவனை திருத்தி நல்ல‌படியா பார்த்துக்க‌ வேண்டியது நீ தானே.. உன் பொறுப்பு தானே? உனக்கு சாமர்த்தியம் போதாதுடி. இப்பயாவது நல்லா பார்த்துக்க‌. நான் அடுத்த‌ மாசம் வாறேன். என் பிள்ளை எங்க‌ போனை அவன்கிட்ட‌ கொடு.

போனை கலவேந்தனிடன் கொடுத்துவிட்டு, பொங்கி வந்த‌ அழுகையை கட்டுப்படுத்த‌ முடியாமல் எழுந்து பாத் ரூமுக்கு போய் ஒரு மூச்சு அழுதுவிட்டு வந்தாள்.

எனக்கு சாமர்த்தியம் போதாதாம் உங்க‌ அம்மா சொல்றாங்க‌.. அவங்க‌ புருஷனையே அவங்களுக்கு திருத்த‌ முடியலை இப்பதான் எனக்கு சொல்ல‌ வந்துட்டாங்க‌. உங்களையும் ஒழுங்கா கண்டிச்சி பொறுப்பா வளர்க்கலை இப்ப‌ என்னை குறை சொல்றாங்க‌ பார்த்தீங்களா? நான் உங்களுக்கு சொல்லலையா? இப்படி இருக்காதீங்க‌ என்று சண்டை போடலையா? நீங்க‌ கேட்கலை. இப்ப‌ பாருங்க‌ நீங்க செய்ற‌ பிழைகளுக்கு என்னை தான் குறை சொல்றாங்க‌.

சரி சரி விடு.. விடு.. மகேஸ்.

கலைவேந்தன் ஓரளவு குணமடைந்தும், கம்பெனி நிர்வாகம் கலைவேந்தனை வேலையிலிருந்து நீக்கியும் இன்றுடன் சரியாக‌ 7 நாட்கள் ஆகிவிட்டது. கம்பெனி வாகனத்தை முறையற்ற‌ முறையில் பயன்படுத்தியமை, இரவு வேளையில் கம்பெனி வாகனத்தை பயன்படுத்தியமை, வேறொரு நபருக்கு வாகனத்தை செலுத்துவதற்கு அனுமதித்தமை, மது பாவித்திருந்தமை இவையே அவன் மீது சுமத்தப்பட்ட‌ குற்றச்சாட்டுக்கள்.

இனி என்ன‌ செய்வது... நான் வேலைக்கு போகட்டுங்களா?

நான் அந்தளவு கையாலாகாதவன் ஆகிடல. கொஞ்சம் பொறு. இன்னொரு வேலை தேடிக்கிறேன்.

இதுக்குத் தானெ நான் பயந்தேன். இந்த‌ மாதிரியெல்லாம் ஆகிடுமோ என்று தானே நான் பயந்தேன். அன்னைக்கு நான் சொன்னதும் அப்படி கத்திட்டு போனீங்க‌.. இப்ப என்னாச்சு பார்த்தீங்களா? அன்று எங்கேயும் போகாம‌ எங்களுடன் இருந்திருந்தால் இப்படி ஆகியிருக்குமா? ஏங்க‌ உங்களுக்கு என்னை பிடிக்கலையா? வாகனத்தை ஓட்டிய‌ உங்க‌ நண்பர் இப்ப‌ எங்க‌ ஒரு சத்தத்தையும் காணோம். அவராலதானே உங்களுக்கு இந்த‌ நிலை. வேலையும் போச்சு. இப்ப ஓடி வந்தாரா? உதவி செய்ய‌ ம்...?

உங்களுக்கு ஒரு பிரச்சனைன்னா நேரடியா பாதிக்கப்படறது நானும், உங்க‌ பிள்ளையும் தான். உங்க‌ நண்பர்கள் இல்ல. இனியாவது திருந்த‌ப் பாருங்க‌... ப்ளீஸ்... குடிச்சி குடிச்சி எங்க‌ வாழ்க்கையை அழிக்காதீங்க‌...

இல்லமா நான் இப்படியெல்லாம் நினைக்கலை... அதற்கு மேல் பேச முடியாமல் நிறுத்திக் கொண்டான் கலைவேந்தன்.

..........

அங்க‌ இருக்கும்போது தெரியல‌.. இங்க‌ இவ்வளவு தூரத்தில் இருக்கும் போது தான் உங்க‌ பக்கத்தில் இருக்க‌ முடியலையேனு ஏக்கமா இருக்கு. பக்கத்தில் இருக்கும் போது அருமை தெரியாது என்று சும்மாவா சொல்வாங்க‌. நான் எவ்வளவு மிஸ் பண்ணிருக்கேன்னு இப்ப‌ புரியுதுமா.

உன்னை ரொம்ப‌ கஷ்டப்படுத்திருக்கேன். இப்ப‌ என்ன‌ செய்ய‌? இழந்த‌ நாட்களை மீண்டும் பெற‌முடியாது. எல்லாம் என் முட்டாள்தனம். இப்ப‌ நம்ம‌ மகனுக்கும் 4 வயது. அவனை நான் ரொம்ப‌ மிஸ் பண்றேன். போனில் அவன் குரலை கேட்கிறப்ப‌ என் மனசு ஒரு பக்கம் சந்தோசப்படாலும் மறுபக்கம் ஏங்கித்தான் போகுது. அவனுடைய‌ குழந்தை பருவத்தில் இந்த‌ அப்பாவுக்கு இடம் இல்லாமல் போய்விட்டது.

சவுதி அரேபியாவிலிருந்து வந்திருந்த‌ கணவனின் கடிதத்தில் இருந்த‌ வரிகளைப் படித்தவளின் கண்கள் குளமாகியிருந்தது. அந்த‌ விபத்துக்கு பிறகு வேலை தேடுவது குதிரைக்கொம்பானது. எந்த‌ கம்பெனிக்கு போனாலும் முன்ன‌ வேலை செய்த‌ இடத்திலிருந்து விலகியதற்கான‌ காரணம் கேட்கப்பட்டது.

உண்மையை மறைத்தாலும் அவர்களுக்கு எப்படியும் தெரிய வந்துவிடும். முடியாத‌ பட்சத்தில் நான் வெளிநாட்டுக்கு போய் வேலை செய்யப் போகிறேன் என்று கலைவேந்தன் சொன்ன‌போது வாடிப் போயிருந்த தன் கணவனின் முகம் இன்னும் அப்படியே தன் நினைவில் இருக்கிறது.

கண் கெட்ட‌ பிறகு சூரிய‌ நமஸ்காரமா? அப்போ நான் சொல்லும் போதே கேட்டிருக்கலாம் தானே. இப்ப‌ அங்கிருந்து ஃபீல் பண்ணி என்ன‌ செய்ய‌ என்று அவனிடம் கேட்க‌ வேண்டும் போல் தோன்றினாலும் இந்த‌ பழைய‌ கதையெல்லாம் சொல்லி அவனை இன்னும் ஏன் கஷ்டப்படுத்துவானேன் என்று,

அன்பின் கணவருக்கு,

இன்னும் ஒரு வருடம் தானே... கவலைப்படாதீங்க‌. எல்லாம் சரியாகிடும்.. நம்ம‌ எதிர்காலத்தை பற்றி நினைச்சு சந்தோசப்படுங்க‌... என்று தன் கணவனைத் தேற்றிக் கடிதம் எழுத‌ ஆரம்பித்தாள் மகேஸ்வரி.

Comments

ஹாய் சுதர்ஷினி... வரவர எழுத்து மெருகேறிக்கொண்டே வருகிறது. பாராட்டுக்கள். தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.

கடிதத்தை //அன்பின் கணவருக்கு,// என்றில்லாமல் வேறு விதமாக ஆரம்பித்திருக்கலாமோ!

‍- இமா க்றிஸ்

அன்பை மட்டுமே பேஸா வைத்து எழுதப்படும் உங்க கதைகள் படிக்க அருமை. இந்த கதை ரொம்பவே நல்லா இருக்கு. கதையோடு நம்மையும் ஒன்றிவிட செய்கிறது உங்க எழுத்து. கலக்குங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கதை ரொம்ப நல்லாயிருக்குங்க. . அன்பை வைத்து அழகான கதை.. ரொம்ப அருமைங்க. .

நட்புடன்
குணா

கதை ரொம்ப‌ அருமை. இருக்கும் பொழுது அருமை தெரியாமல் தொலைத்து விட்டு ஏங்குவதை நன்றாக‌ சொல்லி இருகிங்க‌.

கடிதத்தை //அன்பின் கணவருக்கு,// என்றில்லாமல் வேறு விதமாக ஆரம்பித்திருக்கலாமோ!
என்று இப்போ தோன்றுகின்றதுதான் அக்கா,
வனி அக்கா, குணா2962, விஜிகார்திக் ரொம்ப‌ நன்றி உங்க‌ கருத்து+பாரட்டுக்கு.

very nice and long story.continue this great job.

Supera irukku