ப்ராக்கோலி பருப்பு உசிலி

தேதி: April 9, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

ப்ராக்கோலி பூக்க‌ள் - 2 க‌ப்
கடலைப்பருப்பு - அரை கப்
காய்ந்த‌‌ மிள‌காய் - 6 (அ) 7
பெருஞ்சீரகம் - ஒரு தேக்க‌ர‌ண்டி
க‌டுகு - அரை தேக்க‌ர‌ண்டி
உளுத்தம் பருப்பு - முக்கால் தேக்கரண்டி
சீரகம் - முக்கால் தேக்கரண்டி
பெருங்காய‌ம் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - ஒன்று (அ) இரண்டு தேக்கரண்டி
க‌றிவேப்பிலை - சிறிது
உப்பு - சுவைக்கேற்ப‌


 

ப்ராக்கோலிப் பூக்களைச் சுத்தம் செய்து தண்ணீரை வடியவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடலைப்பருப்பைக் கழுவி சிறிது த‌ண்ணீர் ஊற்றி 30 - 40 நிமிடங்கள் ஊற‌ வைக்கவும்.
ஊறவைத்த கடலைப்பருப்புடன் காய்ந்த மிளகாய் (4 அல்லது 5), பெருஞ்சீரகம் மற்றும் சிறிதளவு உப்புச் சேர்த்து, சிறிது நீர் விட்டு சற்று கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.
அரைத்த பருப்புக் கலவையை கிண்ணத்தில் போட்டு மைக்ரோவேவ் அவனில் வைத்து 2 நிமிடங்கள் வேக வைக்கவும்.
2 நிமிடங்களுக்கு பிறகும் பருப்புக் கலவை வேகாதது போல இருந்தால் சிறு கரண்டியால் கலந்துவிட்டு மீண்டும் சில நொடிகள் மட்டும் அவனில் வைத்தெடுக்கவும். (வேகும் நேரம் மைக்ரோவேவ் அவனைப் பொறுத்து மாறுபடும். அதனால் கொஞ்சம் கொஞ்சமாக நேரத்தை அதிகரித்து சரியாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்). வெந்ததும் பருப்புக் கலவை கை பொறுக்கும் சூட்டுடன் இருக்கும் போதே கைகளால் உடைத்துவிட்டு உதிர்த்துக் கொள்ளவும்.
கடாயில் சிறித‌ள‌வு எண்ணெய் விட்டு சூடான‌தும், க‌டுகு போட்டுப் பொரிந்ததும், உளுத்தம் பருப்பு சேர்த்து ச‌ற்று சிவ‌க்க‌விட‌வும். அதனுடன் இரண்டாக கிள்ளிய காய்ந்த‌‌ மிள‌காயைச் சேர்த்து, சீரகம், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் அனைத்தையும் சேர்க்கவும். பிறகு நறுக்கி வைத்துள்ள ப்ராக்கோலித் துண்டுகளைப் போட்டு, ஒரு சில நிமிடங்கள் வதக்கி, காய்க்கு தேவையான உப்புச் சேர்த்து கலந்துவிட்டு மூடி போட்டு குறைந்த தீயில் வேகவிடவும்.
5 - 6 நிமிடங்களில் காய் சற்று வெந்ததும், உதிர்த்து வைத்துள்ளப் பருப்புக் கலவையைச் சேர்க்கவும்.
நன்கு கலந்துவிட்டு சில நிமிடங்கள் மூடி போடாமல் வதக்கி இறக்கவும்.
சுலபமான, சுவையான ப்ராக்கோலி பருப்பு உசிலி தயார்.

இதே முறையில் பீன்ஸ், கொத்தவரங்காய் மற்றும் வாழைப்பூ போன்ற மற்ற காய்களிலும் பருப்பு உசிலி செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பேக் வித் ப்ரொக்கலி.... ;) கலக்குங்க. வெல்கம் பேக் சுஸ்ரீ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பு நல்லாஇருக்கு.செய்து பார்க்கிரேன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அருமையான குறிப்பு... (படங்கள் ரொம்ப அழகு)
வாழ்த்துகள்!

ப்ரோகலியில் உசிலியா வித்தியாசமா இருக்கே சுஸ்ரீ, நான் பீன்ஸ்ல மட்டும் தான் செய்திருக்கேன். இதையும் முயற்சிக்கிறேன்.

சுஸ்ரீ குறிப்பு நல்லா இருக்கு, அவசியம் செய்துபார்க்கணும் :)
கடலை பருப்பு நிறம் மஞ்சளாக இல்லாமல், சிவந்த நிறமாக தெரிகிறதேஏன்?

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

பார்க்கும் போது சாப்பிடனும் போல இருக்கு. அருமையான குறிப்பு.

எங்க வீட்ல அடிக்கடி ஃப்ரொக்கொலி சமைப்பேன், அடுத்த முறை இது போல செய்து விடுகிறேன் சுஸ்ரீ, மைக்ரோவேவில் உசிலிக்கு பருப்பை வேகவைப்பது எனக்கு புதிது.

சுவையான ஆரோக்கியமான குறிப்பு கொடுத்ததுக்கு வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
செய்யதுகதீஜா.

உசிலி நல்லாருக்கு சுஸ்ரீ. படங்கள் பளிச். சூப்பர்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

வெகு நாளைக்கப்புறம் நான் அனுப்பிய குறிப்பை உடனே வெளியிட்ட அறுசுவை அட்மின் & குழுவிற்கு மிக்க‌ ந‌ன்றி! :-)

அன்புடன்
சுஸ்ரீ

வ‌னி,
அனேகமா எப்ப‌வுமே என் குறிப்பில் முத‌ல் ப‌திவு உங்க‌ளோட‌துதான்! :-) தேங்க் யூ சொ மச் ஃபார் தெ வார்ம் வெல்க‌ம் வ‌னி! :-)

--

முசி,
பாராட்டிற்கு ந‌ன்றி! கண்டிப்பா செய்து பாருங்க, பிடிச்சி இருந்ததான்னு வந்தும் சொல்லுங்க.

--

விப்ஜி,
பாராட்டிற்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

உமா,

பாராட்டிற்கு ரொம்ப நன்றி! நானும் பீன்ஸ்ல செய்வதுண்டு, அதனால அப்படியே ப்ராக்க‌லிலயும் ட்ரை பண்ணினேன். கண்டிப்பா முடியும்போது செய்துப்பாருங்க உமா.

---

அருள்,

பாராட்டிற்கு மிக்க ந‌ன்றி! கண்டிப்பா செய்து பாருங்க, அப்படியே எப்படி இருந்ததுன்னும் வந்து சொல்லுங்க அருள்.

கடலைபருப்பு சிவந்த நிறமாவா தெரியுது? ஆமா, முதல் படத்தில மஞ்சளாதான் இருக்கு இல்ல?! இரண்டாவது படத்தில், பக்கத்தில் இருக்கும் மிளகாய் கலர்பட்டு அவங்களும் கொஞ்சம் சிகப்பா ஜொலிக்கறாங்களோ?! :) இல்லை கேமரா லைட்டிங்ங்கும் காரணமா இருக்கலாம்.

---

பாலபாரதி,

பாராட்டிற்கு மிக்க‌ நன்றி! :)

அன்புடன்
சுஸ்ரீ

வாணி,

இங்கேயும் அதேதான், ப்ராக்க‌லி ந‌ல்லா கிடைக்கும், நானும் நிறைய சமைப்பேன்! அப்புற‌ம் முடியும்போது செய்துப்பார்த்து சொல்லுங்க.

மைக்ரோவேவில் உசிலிக்கு பருப்பு வேக வைப்பது என் அலுவலகத்தோழி ஒருவரிடம் இருந்து கற்றுக்கொண்டது. ரொம்பவும் சீக்கிரமா உசிலி தயார் செய்துவிடலாம், எக்ஸ்ட்ரா பாத்திரம் கழுவும் வேலையும் மிச்சம்! :-)

---

கதீஜா,

பாராட்டிற்கும் வாழ்த்துக்க‌ளுக்கும் ரொம்ப‌ ந‌ன்றி!

----

உமா

பாராட்டிற்கு மிக்க ந‌ன்றி! அப்படியா படமும் நல்லா இருக்கா, நன்றி! :-)

அன்புடன்
சுஸ்ரீ