புத்தாண்டு இன்ன பிற

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

நான் இங்கு பளிச்சுனு புத்தாண்டு வாழ்த்துகளை இப்போ சொல்லிட்டேன். ஆனா இதை சொல்வதற்குள் எனக்கு ஏற்பட்ட குழப்பம் இருக்கு பாருங்க.. அதை சொல்ல முடியுல, அதான் எழுத வந்துட்டேன்.

வழக்கம் போல காலையில் எழுந்து தொலைக்காட்சி பொட்டியில் கண் விழித்தால் சன் டிவியில் பிறந்தநாள் கொண்டாட்டம், கலைஞர் தொலைக்காட்சியில் சித்திரை திருநாள், ஜெயா டிவியில் தமிழ் புத்தாண்டு, விஜய் டிவியில் தமிழ் புத்தாண்டு. குழப்பமே இதில் எதை எடுக்க? இதில் சன் டிவியில் வரும் விளம்பரங்களில் புத்தாண்டு சிறப்பு தள்ளுபடினு. என்னடா நீங்க ஒன்னு சொல்லுறீங்க வர விளம்பரம் ஒன்னு சொல்லுது. கடைசியா தமிழக முதல்வர் சொன்ன தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை கொண்டு இன்னிக்கு தமிழ் புத்தாண்டு தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு எல்லாருக்கும் Happy Tamil New Year Wishes சொல்லிக்குறேன். ஏன்னா வெள்ளையா இருப்பவங்க பொய் சொல்ல மாட்டாங்களாம். இதுக்கும் மின்சார தடைக்கு சதி செயல் தான் காரணம் என்பதற்கும் சம்மந்தம் கிடையாதுங்கோ.

தொலைக்காட்சி என்று சொன்னதும் தான் ஞாபகத்துக்கு வருது இந்த ரியாலிட்டி ஷோக்களின் இம்சை. இந்த இம்சைகளின் உச்சக்கட்டமாக நான் தனிப்பட்ட முறையில் பார்ப்பது விஜய் டிவியில் வரும் ஒல்லி பெல்லி நிகழ்ச்சி. புதுசா யோசிப்பதில் தப்பு இல்லை ஆனா ஒரு தினுசா யோசிச்சு இருக்காங்க பயபுள்ளங்க... என்னத்த சொல்ல.

இது போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் சொல்லப்படும் சில வாக்கியங்கள் அபத்தங்களின் எல்லாம் பெரிய அபத்தமாக இருக்கும். ஆனால் நாம் அந்த அபத்தங்களை தொடர்ந்து ஆதரவு அளித்துக் கொண்டே வருகிறோம் என்பதற்கு அந்த நிகழ்ச்சிகளுக்கு கிடைக்கும் ஆதரவும், விளம்பரங்களும், ஓட்டுகளும் தெரியப்படுத்துகிறது. அதிலும் இந்த ஓட்டுகள் மூலம் அவர்கள் சம்பாத்திக்கும் பணத்தை கணக்கு போட்டால் கண்ணை கட்டுது. அதிலும் நம் மக்கள் இதில் ஓட்டு போட செம ஆர்வமாக இருந்து இருக்கிறார்கள் என்பதை அதற்கு கிடைக்கும் ஓட்டுக்களே காட்டுகிறது. சும்மா புகுந்து விளையாடி கோடிக்கணக்கான ரூபாய்யை கொட்டிக் கொடுக்கிறார்கள். இதே ஆர்வத்தை ஓட்டு போடவும் காட்டுவார்கள் என்று நம்புவோமாக.

மதிப்பெண் எடுக்க கட்டாயப்படுத்திய பெற்றோர் கூட்டம் இப்போது இது போன்ற டிவி நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள தன் பசங்களை கட்டாயப்படுத்துவதாக கேள்வி. Peer Pressure. தங்கள் விருப்பங்களை செயல்படுத்தும் கருவியாகவே குழந்தைகளை பார்க்கும் வரை இது சோகம் தொடர தான் செய்யும்.

இந்த சமூகம் ஜெயிப்பவர்களுக்கு மட்டுமே சொந்தம் அதனால் நீ ஜெயித்தே ஆக வேண்டும் என வெறியை மறைமுகமாக இந்த ரியாலிட்டி நிகழ்ச்சிகள் திணித்து கொண்டு இருப்பதாக என் எண்ணம். இது கொஞ்சம் அதிகப்பட்சமான கற்பனையாக இருக்கலாம், ஆனால் ஒரு பாட்டு போட்டியில் வெற்றி வேண்டி தினசரிகளில் அரைப்பக்கம் விளம்பரம் கொடுக்க வேண்டிய அளவு போட்டியாளர்களை இறங்கி வந்து இருப்பதை பார்க்கும் போது இது தொடர் கதையாக மாறாமல் இருக்க மனம் வேண்டுகிறது.

ரியாலிட்டு தான் இப்படி இருக்கு, இந்த தொடர்கள் எல்லாம் எப்படி இருக்குனு பார்த்தால் பல சேனல்களில் ஒரே வடக்கத்திய வாசமா இருக்கு. எந்த விதத்தில் யோசித்து பார்த்தாலும் அது இங்குட்டு செட் ஆகாதே அப்புறம் எப்படி தான் இந்த டப்பிங் சீரியல்களுடன் நம் மக்கள் ஒத்துப் போகிறார்கள் என்பது பெரிய விந்தை தான். ஆனால் அதில் ஒரே ஒரு சந்தோஷம், அந்த ஆரம்ப கால டப்பிங் சீரியல்கள் போல் "நீங்க இருக்கீங்களா நல்லா னு" பேசாம உருப்படியான டப்பிங்கா இருக்கு.

நேரடி சீரியல்கள் பக்கம் பார்த்தால், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற கணக்கா தெய்வம் தந்த வீடு ஒரு சீரியல், அதில் வரும் மாமியாரின் உடை அலங்காரத்தை பார்த்தால் இது தமிழ் சீரியல் தானானு சந்தேகம் வருது, இல்லை நமக்கு தான் தமிழ்நாட்டின் நிலைமை தெரியாமல் இருக்கானு தெரியல. ஆனா ஒன்னு அந்த சீரியலுக்கு தெய்வம் தந்த வீடு னு யாரு டைட்டில் வச்சாங்களோ அவங்களை அந்த தெய்வமே மன்னிக்காது.

என்னமோ போடா மாதவா... ஏதுக்கு தொலைக்காட்சிய பாக்கனும், அப்புறம் குறை சொல்லனும். தொலைக்காட்சி பெட்டியை இடியட் பாக்ஸ் னு வெள்ளைக்காரன் சும்மாவா சொல்லி இருப்பான். இது எல்லாம் டோட்டல் வேஸ்ட் ஆப் டைம் ஐ சே...

இன்னும் இரு நாளில் ஐபிஎல் ஆரம்பிக்க போகுதாம். அட! ஆமாங்க... நான் சென்னை சூப்பர் கிங்க்ஸ்... நீங்க?

5
Average: 5 (8 votes)

Comments

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ;) நாங்க எல்லாம் யார் சொன்னாலும் எங்க பாட்டி சொன்னதை விடுறதே இல்லை... இவிங்க என்னடா சொல்றது புதுவருட பிறப்பில்லைன்னு அப்படின்னு அதை கொண்டாடிகிட்டு தான் இருக்கோம். //ஏன்னா வெள்ளையா இருப்பவங்க பொய் சொல்ல மாட்டாங்களாம். // - அப்படின்னா நாம எல்லாம் பொய் சொல்வோமா?? பாபு அண்ணா கேட்டா ஃபீல் பண்ணப்போறார் ;)

சீரியல் ஒன்னு விட்டுவைக்கிறதில்ல போல... ரியாலிட்டி ஷோஸ்... அந்த ஒல்லி பெல்லி விளம்பரமே சகிக்கல... எப்படி பார்த்தீங்க :( ஒருவேளை இப்படி எழுதுறதுக்காகவே எல்லாத்தையும் பார்ப்பீங்களோ!!! எனக்கு விஜய் டிவி இதுக்காகவே பிடிக்காது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். விஜய் டிவி வர ஒரு சீரியலையும் விடுறது இல்லை போல எல்லாம் சீரியலையும் பாப்பீங்க போல. தெய்வம் தந்த வீடு சரியா சொன்னீங்க போங்க நானும் ரொம்ப நாள் ல இதை சொல்லனும் இருந்தேன் ஆனால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கல நீங்க சொல்லீட்டீங்க ஆமாம் அந்த சீரீயலுக்கு அந்த டைட்டீல் வைத்து யாரு தெரியல தெரிந்தால் நானும் உங்களுக்கு சொல்லுறேன் உங்களுக்கு தெரிந்தால் நீங்க எனக்கு சொல்லுங்க. கண்டிபா நீங்க சொன்ன மாதிரி ஓட்டு போடவும் ஆர்வத்தை காட்டுவோம். அது நம் கடமை ஆயிற்றே. நானும் சென்னை சூப்பர் கிங்க்ஸ்.

உங்களுக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சிவா சார்.....

ஆளுக்கு ஒரு பேரு வைச்சு நம்மல குழப்புனாலும் கூட குழம்பாம நாம தமிழ் புத்தாண்டை சிறப்பாகக் கொண்டாடிட்டோம்ல..

//மதிப்பெண் எடுக்க கட்டாயப்படுத்திய பெற்றோர் கூட்டம் இப்போது இது போன்ற டிவி நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள தன் பசங்களை கட்டாயப்படுத்துவதாக கேள்வி// உண்மை தான்...

பெற்றோர் கூட்டம் இப்போ மாறிட்டே வருது.. நாம படிப்பு, விளையாட்டு, பாட்டு, நடனம் என எல்லாவற்றிலும் ஃபர்ஸ்ட் இருக்கனும்னு பிள்ளைகள் நினைக்குறாங்களோ இல்லையோ, பெற்றோர்கள் ரொம்பவே நினைக்குறாங்க.. (பேச்சே சரியா வராத குழந்தைகளை பாட்டு பாட வைக்குறாங்க... பாவம் அந்த பிள்ளைகள்)..

//தெய்வம் தந்த வீடு ஒரு சீரியல், அதில் வரும் மாமியாரின் உடை அலங்காரத்தை பார்த்தால்// அந்த உடை அலங்காரத்தை பார்ப்பதற்காகவே பலர் அந்த சீரியல் பார்க்குறாங்க சிவா சார்..

கலை

சிவா சார் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், ஆட்சி மாறும் போது அவங்க விருப்பத்துக்கும் வசதிக்கும் விரோதத்துனாலயும் தமிழ் வருடப்பிறப்ப மாற்றி வச்சுக்குறாங்க நமக்குலாம் சித்திரை 1 தான் எப்போதுமே வருடப்பிறப்பு.

ரியாலிட்டி ஷோஸ்ல எதாவது ஒரு எபிசோட பரபரப்பா ஆக்கிவிட்டு அவங்க நல்லா காசுபார்த்துடுறாங்க அது தெரியாம இந்த பெற்றோர்களும் பிள்ளைகளும் தான் பலியாடா இருக்காங்க. இதுக்கு சமீபத்தில் கிச்சன் சூப்பர் ஸ்டார்ல நடந்த பைனல்ஸ் அய்யோ என்னா பில்டப்பு. குழந்தைகள்கிறதையே மறந்துடுறாங்க.

ரொம்ப ஒரு அதிர்ச்சியான விஷயம் என்னன்னா இந்த டப்பிங் சீரியல்ஸ் அதிகம் பார்க்கறது சின்ன பசங்க தான் எப்படி அவங்கல அட்ராக்ட் பண்ணிருக்குன்னு தெரியல.

ஹாய்,
/////எதுக்கு தொலைக்காட்சியை பார்க்கனும்..குறைசொல்லனும்.தொலைகாட்சி பெட்டி ஒரு இடியட் பாக்ஸ்./////இன்னும் இரண்டு நாளில் ஐபில் ஆரம்பம்.நான் கண்டிப்பா டிவி பார்ப்பேன் ணூ /////////////வடிவேல் பாணியில் காமெடி கொடுத்தது தாங்க‌ புத்தாண்டு சிறப்பு செய்தி.

ரஜினிபாய்

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்ங்க , இடியட் பாக்ஸை அதிகம் பார்க்கறது இல்லீங்க :-)

//இன்னும் இரு நாளில் ஐபிஎல் ஆரம்பிக்க போகுதாம். அட! ஆமாங்க... நான் சென்னை சூப்பர் கிங்க்ஸ்... நீங்க?//
கிரிக்கெட்டே பிடிக்காதுங்க :-)

நட்புடன்
குணா

//சீரியல் ஒன்னு விட்டுவைக்கிறதில்ல போல... ரியாலிட்டி ஷோஸ்... அந்த ஒல்லி பெல்லி விளம்பரமே சகிக்கல... எப்படி பார்த்தீங்க :( ஒருவேளை இப்படி எழுதுறதுக்காகவே எல்லாத்தையும் பார்ப்பீங்களோ!!!//

பின்ன இந்த சமூகம் நம்ம கருத்து எதிர்பாக்குதுல. கடமையாற்ற வேண்டிய கடமை இருக்குல ;)

சீரியல் பார்ப்பதில்லை. ஆனால் இது போன்ற அபத்தங்களை அவ்வபோது பார்ப்பதுண்டு. சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி கூட பார்க்க நேரிடும் என்றால் பாருங்களேன் எங்களின் சமூக கடமையுணர்ச்சியை :)

//விஜய் டிவி வர ஒரு சீரியலையும் விடுறது இல்லை போல எல்லாம் சீரியலையும் பாப்பீங்க போல. //

எதையும் முழுவதாக பார்ப்பது கிடையாது, சேனல்கள் மாற்று போது கண்ணில் படுவது தான். நடுஇரவு 2 மணிக்கு எல்லாம் சீரியல் வருது. அப்படி என்ன தான் இந்த சமூகத்துக்கு சொல்ல வராங்க என்று சில நிமிடங்கள் நோக்கியதின் விளைவே இப்பதிவு.

//அந்த உடை அலங்காரத்தை பார்ப்பதற்காகவே பலர் அந்த சீரியல் பார்க்குறாங்க சிவா சார்..//

இது வேறையா... இப்படி தான் நாம் பல நேரம் நிதர்சனத்தை விட்டு தள்ளி இருக்கோம் என்பது இது போன்ற நேரங்களில் புரிகிறது.

நட்புடன்
நாகை சிவா

"Follow your heart and your dreams will come true."

//இந்த டப்பிங் சீரியல்ஸ் அதிகம் பார்க்கறது சின்ன பசங்க தான் எப்படி அவங்கல அட்ராக்ட் பண்ணிருக்குன்னு தெரியல.//

ம்ம்ம்ம்ம். கொஞ்சம் வித்தியாசமாக இருப்பதால் இருக்குமோ என்னவோ.

//வடிவேல் பாணியில் காமெடி கொடுத்தது தாங்க‌ புத்தாண்டு சிறப்பு செய்தி.//

ஆமாங்க, காமெடியாக இருப்பதே நலமாக படுகிறது பல நேரங்களில். அதான் வடிவேல், ரஜினி எல்லாம் ஜெயா டிவியில் வந்தததை கூட காமெடியாகவே எடுத்துக் கொண்டேன்.

//இடியட் பாக்ஸை அதிகம் பார்க்கறது இல்லீங்க//

:))

//கிரிக்கெட்டே பிடிக்காதுங்க //

என்ன விந்தை!

நட்புடன்
நாகை சிவா

"Follow your heart and your dreams will come true."

புத்தாண்டு வாழ்த்துக்கள். நம ஊர் சேனல் எதுவும் இல்லாததால் நீங்க குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் பற்றித் தெரியவில்லை. கிரிக்கெட் பார்ப்பதையும் விட்டு ரொம்ப காலமாச்சு சிவா சார்

ஹாய்,

ஜெயா டிவியில் வடிவேல்,ரஜினி வந்தது ////////வாழ்க்கையில் இது எல்லாம் சகஜம்ப்பா.நாம் ஒருத்தர் காமடியானாக‌ இருந்து பலரை சிரிக்க‌ வைப்பதும் ஒரு சேவை தாங்க‌.பதில் கொடுத்தமைக்கு நன்றி.

ரஜினிபாய்

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

அச்ச்சோ பல கொடுமைகளீன் அரங்கேற்றம் ஆச்சே எல்லாம்

Be simple be sample

நேரம் இல்லாமல் இருந்தப்பவும் ஒரு க்யூரியாஸிட்டி. 'யார் போடாட்டாலும் சிவாண்ணா புத்தாண்டு போஸ்ட் போட்டிருப்பாங்களே! செக் பண்ணலாம்' என்று வந்து எட்டிப் பார்த்தேன். இருந்துச்சு! :-) சிவாவுக்கும் என் வாழ்த்துக்கள்.

நான் பெருசா பார்க்குறது இல்ல. ஆனால் நாட்டு நடப்பு! தெரிஞ்சிருக்கணும் என்கிறதுக்காக எல்லாவற்ரையும் நுனிப் புல் மேய்வது உண்டு. //அபத்தங்களை தொடர்ந்து ஆதரவு அளித்துக் கொண்டே வருகிறோம் என்பதற்கு அந்த நிகழ்ச்சிகளுக்கு கிடைக்கும் ஆதரவும், விளம்பரங்களும், ஓட்டுகளும் தெரியப்படுத்துகிறது.// உண்மைதான். பிறகு புலம்போ புலம்பு என்று புலம்புவோம், "டீவீ காரங்க அது பண்ணி இருக்கலாம். ஜட்ஜஸ் இது பண்ணாம இருந்து இருக்கலாம்." என்று.

சூப்பர் சிங்கர் தொடர்ச்சியாக என்று இல்லாவிட்டாலும் சின்னவர்களை ரசிக்கவென்று விருப்பிப் பார்ப்பது உண்டு. நேற்று காதுல பட்ட விஷயம் கேட்க கவலையா இருந்துது. ;( செலக்க்ஷனுக்காக முதல்நாள் சாயந்திரம் ஐந்து மணில இருந்து வந்து காத்துட்டு இருக்காங்களாம் குட்டீஸ். மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துது. இதுக்கு ஏதாவது மாற்று ஏற்பாடு இருந்திருக்கலாம்.

சரி அதை விடுங்க. ஒரு அன்பு வேண்டுகோள்... இனிமேல் வாரம் ஒரு போஸ்ட்டாச்சும் போடணும் சிவாண்ணா.

‍- இமா க்றிஸ்

சிவா சார், உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, ஜுனியர் சூப்பர் சிங்கர்க்கான போட்டிக்கு, ஆள்(குழந்தை) தேர்வு நடைபெற்றது. ஜட்ஜாக(!?) வருபவர்கள் ஏற்கனவே பங்கேற்று வெற்றிவாகை சூடியவர்கள். ஒரு குழந்தையிடம் ஒரு ஜட்ஜ் கேட்கிறார், ஏண்டா(?)
(இங்கலாம் பிறந்த குழந்தையகூட அவன்,இவன் என ஏக வசனம் சொல்வது மிக அரிது, சரி அது ஊர்பழக்கம், ஒவ்வொரு ஊர்லயும் ஒர்மாதிரி பேச்சு வழக்கு இருக்கும், அது பெரிய குறை என்று சொல்லமுடியாது)
'உன் பல்லெல்லாம் சொத்தையா இருக்கு, சாக்லெட் நிறைய சாப்பிடுவியா?"
'சரி சரி பாடு!!'
பாட வந்த குழந்தை மறுத்துவிட்டு ஓடிப்போய், அவரின் தாயிடம் தஞ்சம் அடைந்தது, கூடவே , பாடச்சொல்றதை விட்டுட்டு, பல்லு சொத்தையப்பத்தி பேசுறாங்க, நான் பாடமாட்டேன்'
என்ன சொல்லியும் கேட்கவில்லை.
பிறகு வேறொரு ஜட்ஜ் கேட்கவும் அழகாக பாடினார்.
இடையில் அந்த முதல் ஜட்ஜ் வந்து ஏண்டா, நான் சொன்னா பாடமாட்டியா, பாடுடா என அதட்டவும், கோபமுற்ற அந்த சுட்டி பையன்( அதிக பட்சமாக யூகேஜி படிக்கலாம்) நான் பாடமாட்டேன் போ!! என கூறிவிட்டது.

உங்க பதிவு படித்ததும் எனக்கு அந்த குட்டி பையந்தான் ஞாபகம் வந்தார்.

ஒல்லி பெல்லி எங்க போய் முடியுமோ தெரில, இப்ப காரை கட்டி இழுக்க சொல்லும் எபிசோடுக்கான விளம்பரம் பார்த்தேன், பார்க்கவே பாவமாக இருக்கிறது.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சிவா.

உங்க இன்ன பிற நம்ம தொலைக்காட்சியின் அவலங்களை நல்லா புட்டு புட்டு வைத்தது. //புதுசா யோசிப்பதில் தப்பு இல்லை ஆனா ஒரு தினுசா யோசிச்சு இருக்காங்க பயபுள்ளங்க... என்னத்த சொல்ல.... // உண்மையை சொல்லனும்னா விஜயில் வரும் பல ஷோக்கள், காப்பி அடிக்கப்படுகிறது என்பதே உண்மை, உதாரணம் : ஒல்லி பெல்லி (இங்கே நடக்கும் பிஃக்கஸ்ட் லூசர்ஸ்), கிச்சன் சூப்பர் ஸ்டார் (மாஸ்டர் செஃப்) அப்புறம் அதை பார்த்து அடுத்தடுத்த சேனல்களும் காப்பி அடிக்கின்றன, சின்னசின்ன பேர் மாற்றங்களுடன்(!) நான் விஜயில் வரும் டான்ஸ் ஷோஸ் விரும்பி பார்ப்பதுண்டு, ஆனால் அப்பப்ப சில வாரங்களில் அவர்கள் எடுத்துக்கொள்ளும் தீமும், அதற்கான அவர்களது உடையும், நடன அசைவுகளையும் பார்த்து, இதை நம்ம ஊரில் சின்ன குழந்தைகளும் சேர்ந்து பார்க்கிறார்கள் என்று அறிந்து, ரொம்பவும் ஆடிப்போயிட்டேன். பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை தரமான நிகழ்ச்சிகளை மட்டுமே பார்க்க அனுமதிக்கவேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து. இன்னும் எவ்வளவோ புலம்பத்தோணுது, நல்லாதான் பேரு வைச்சாங்க, 'இடியட் பாக்ஸ்'னு! :) ஸ்மார்ட்டா தெரிவு செய்யத்தவறினால் நிச்சயம் நம்மை ஆக்கிடுவாங்கபோல‌!

அன்புடன்
சுஸ்ரீ

அன்பு சிவா,
தாமதமான புத்தாண்டு வாழ்த்துக்கள்!
என்னதான் சொன்னாலும், முக்கால்வாசி மக்களின் முக்கால்வாசி நேரத்தை ஆக்ரமிப்பதே தொ(ல்)லைக்காட்சி தானே! சில பேர் டிவி இல்லைன்னா செத்தே போயிடுவேன்னுவாங்க.

அன்புடன்,
செல்வி.

அன்பு சிவா,

புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி.

கருத்து சொல்லணுங்கறதுக்காகவே டி.வி. பாப்பீங்களா?!!!

'அடடா, உங்க‌ கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாப்பா'!!!(என்ன‌ பண்ண, அறுசுவைக்கு வந்தாலே, விவேக் மற்றும் பலரின் வாய்ஸ் என் காதுல‌ கேக்குது:):)

அன்புடன்

சீதாலஷ்மி