வீட்டுக்கு வீடு வாசல் படி - தாமரைச்செல்வி

“அப்பப்பா….பா மழை இப்படியா பெய்யணும். குடை வச்சிருந்தும் வேஸ்ட்” என்று முனகியவாரே கேட்டை திறந்து கொண்டு வந்தாள் முகிலா. முட்டிக்கு கீழ் முழுவதும் நனைந்திருந்தது. சேறு வேறு காலின் பின்பகுதியில் கோலமிட்டிருந்தது. குடை பிடித்திருந்தாலும் முகத்திலும் சில மழைத்துளிகள் ஒட்டியிருந்தது. 15 வயது பெண் முகிலா. ஆனால் பார்க்க 10ஆம் வகுப்பு படிப்பவள் போல் இல்லை, 12ஆம் வகுப்பு படிப்பவள் போல் இருந்தாள். கலையான முகம், மாநிறம், நேர் வகிடு எடுத்து இரட்டை ஜடை போட்டிருந்தாள். முகத்தில் அந்த பருவத்திற்குரிய பருக்கள் நான்கைந்து இருந்தன.

அட… கதைக்கு போவோம். இப்படியே வர்ணித்துக் கொண்டிருந்தால் எப்படி?

குடையை மடக்கி கதவு ஓரத்தில் வைத்து விட்டு, செருப்பை கழட்டி விட்டு உள்ளே நுழைய எத்தனித்தாள்.

“பாப்பா… அப்படியே உள்ளே வராதம்மா. வாசல்ல தண்ணியிருக்கு பாரு. கால் அலம்பிட்டு உள்ள வாம்மா.”

இது பாட்டியின் அன்பான குரல். வயதில் முதுமையும், பேச்சில் குழந்தையுமாய், வயதின் சுருக்கங்கள் முகத்தில் தெரிந்தாலும், அவர் மிகவும் அழகுதான். சிறு குழந்தைகளுக்கு பாட்டி ஒரு வரப்பிரசாதம்.

“ம்...ம்...”
என்று சொல்லி விட்டு வாளியை நோக்கி நடந்தாள். பாட்டியின் பேச்சு சத்தமும் அவள் பின்னால் தொடர்ந்தது.

“உங்கம்மா இப்பதான் மாஞ்சு, மாஞ்சு வீட்டை துடைச்சி விட்டிருக்கா. அதுல அழுக்காயிருமில்ல”. வீட்டின் உள்ளே நுழைந்து களைப்பில் சோபாவில் உட்காரப் போனாள்.

“ஏய்… ஏய்… என்னடி பண்ண போற?” இது அம்மாவின் அதட்டலான குரல்.

“என்னம்மா… உட்காரப் போறேன்” என்றாள் சலிப்போடு.

“இப்படியே ஈரத்தோடையா சோபாவுல உட்காரப் போற? போடி … போயி துணி மாத்திக்கிட்டு, கை, கால், முகமெல்லாம் கழுவிட்டு வா.”

குப்பென்று கோபம் வந்தது முகிலுக்கு.

“நானே களைச்சு போயி வாரேன். இப்ப சோபா தான் முக்கியமா போச்சு. கொஞ்ச நேரம் உட்கார்ந்திட்டுப் போனா தான் என்ன” என்று மனதிற்குள்ளேயே பொருமிக்கொண்டு, போய் உடை மாற்றிக் கொண்டு வந்தாள்.

“பாப்பா… இந்தா காபியை குடி. தலையை கொஞ்சம் துவட்டிக்கோடி. ஜலதோஷம் பிடிக்கப் போகுது”

“சரிம்மா” என்று சொல்லிக் கொண்டு காபியை வாங்கிக் கொண்டு சோபாவில் போய் உட்கார்ந்தாள். டீவியை ஆன் பண்ணி கார்ட்டூன் பார்க்க ஆரம்பித்தாள்.

“இப்படி குளிர்ல காபியை குடிச்சிகிட்டே டீவி பார்க்கிற சுகமே தனி தான். ஏ….ன் பாட்…டி”

“சரியா போச்சு போ. காபியை குடிச்சிக்கிட்டு போய் படிக்கிற வழிய பாரு. எங்க காலத்துல எல்லாம் இந்த டீவி பொட்டியெல்லாம் யார் கண்டா. இந்த குளிருக்கெல்லாம் அரிசிப் பொரி வறுத்து, சுக்கு காபியோட சாப்பிடுற சுகமே தனி தான். வாசல்ல உட்கார்ந்துகிட்டு, மழைய பாத்துக்கிட்டே குடிப்போம். இப்ப என்னடான்னா மழை அது பாட்டுக்கு பேஞ்சுக்கிட்டு இருக்கு. யாரு கண்டுக்கிறா? எத சொல்லியும்…

“அய்யோ பாட்டி நிறுத்துறீங்களா. கொஞ்ச நேரம் சும்மா இருங்க. அப்பா வர வரைக்கும் பார்த்துகிறேன்.”

டீவிக்குள்ளேயே மூழ்கி இருந்தவளுக்கு திடீரென்று ஒரு குரல் கேட்டு திரும்பிப் பார்த்தாள்.

“அம்மா… அம்மா…”

முகிலாவின் 7 வயது பையன் வருண் பள்ளி வேனிலிருந்து இறங்கி ஓடி வந்தான்.

“அட பழைய நியாபகங்களை நினைத்து அசை போடுவது ரொம்ப சந்தோஷமான விஷயம் தான்” என்று தன் பள்ளிப் பருவ நினைவுகளை உதறி விட்டு எழுந்தாள்.

“டேய்… அங்க எங்கடா போற ஷூ காலோட!, வீட்டுக்குள்ள வந்ததோட இல்லாம சோபாவுல வேற ஏறி குதிக்கிறியா!...”

“இறங்குடா கீழ…”

“ச்சோ… ஷூவுல உள்ள மண்ணெல்லாம் சோபாவில” என்று செல்லமாகத் திட்டிக் கொண்டே அவனருகில் வந்து ஷுவை கழற்றி விட்டாள்.

“போம்மா… உனக்கு என்ன விட இந்த வீடும், சோபாவும் தான் முக்கியமா போச்சி. என் மேல பாசமே இல்ல உனக்கு” என்று செல்லமாக கோபித்துக்கொண்டு தன் அறைக்குச் சென்ற மகனைப் பார்த்து குபீரென்று சிரித்து விட்டாள். தன் பழைய நினைவுகளை அசை போட்டபடி.

Comments

நல்லா இருக்குங்க :) இப்ப உள்ள பிள்ளைகள் எதுக்கும் அடங்குறதில்லையா, இல்லை நமக்கு தான் நம்ம அப்பா அம்மா போல வளர்க்க தெரியலயோ.. தெரியல. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கதை ரொம்ப நல்லாயிருக்குங்க ..வீட்டுக்குவீடு வாசப்படி ரொம்ப உண்மை..
ரொம்ப அருமைங்..

நட்புடன்
குணா

வனி நாமும் நம் பிள்ளைகள் போலத்தான் இருந்தோம். என்ன அப்போது நாம் வெளியில் போய் விளையாட்டு, குறும்புத்தனமெல்லாம் பண்ணுவோம். பெற்றோர்க்கு தெரியாது. இப்போது பிள்ளைகள் நம் கண் முன்னாலேயே செய்வதால் அதிகமாகத் தோன்றுகிறது.

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

ரொம்ப நன்றி குணா.
வலை தளத்தில் மட்டும் "ங்..." உபயோகப்படுத்துகிறீர்களா? இல்லை நிஜத்திலும் இப்படிதானா?
இந்த கேள்வியை ரொம்ப நாளா கேட்கனுன்னு நினைச்சேன்.. கேட்டுட்டேன்

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

//வலை தளத்தில் மட்டும் "ங்..." உபயோகப்படுத்துகிறீர்களா? இல்லை நிஜத்திலும் இப்படிதானா?
இந்த கேள்வியை ரொம்ப நாளா கேட்கனுன்னு நினைச்சேன்.. கேட்டுட்டேன் //
:-) ஹிஹி.. இணையத்திலோ, நேரிலோ பெரியவர்கள் ,எல்லோரிடமும் "ங்" பயன்படுத்துவேன்ங்க.. சில இடங்களில் இப்போது இருக்கிற எந்த மாவட்டம் என்றே கண்டுபிடிகக முடியாதபடி எல்லோராலும் பேசப்படும் அலங்கார தமிழ்தான்ங்க.. :-)

நட்புடன்
குணா

//சேறு வேறு காலின் பின்புறம் கோலமிட்டிருந்தது//-வர்ணனை அருமை
//வயதில் முதுமையும்,பேச்சில் குழந்தையும்//----பாட்டிக்கு நல்லதொரு விளக்கம்
நாம் நமது குழந்தைகளை கோபிக்கும் போது நாம் அந்த வயதில் எப்படி நடந்து கொண்டோம் என்பதை நினைத்து பார்த்தால் தெரியும்.
கதை ரொம்ப அழகு தாமரை

//நாம் நமது குழந்தைகளை கோபிக்கும் போது நாம் அந்த வயதில் எப்படி நடந்து கொண்டோம் என்பதை நினைத்து பார்த்தால் தெரியும்.//
அதன் விளைவே இந்த கதை.
நாம் திட்டும் போது பிள்ளைகளின் ஆசையும் முடக்கப்பட்டு விடுகிறது. சேட்டை குழந்தைகளின் அடையாளம்.
//கதை ரொம்ப அழகு தாமரை//
ரொம்ப நன்றி நிகிலா

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

//சேட்டை குழந்தைகளின் அடையாளம்.//
உண்மை தான் தாமரை..அதனை ரசிக்க‌ கற்றுக் கொள்ள‌ வேண்டும்.
குழ‌ந்தைகளின் நியாயமான‌ ஆசைகளை ஏற்றுக் கொள்ள‌ வேண்டும்.

கதை ரெம்ப‌ அருமை.

கதை சிம்ப்ளி சூப்பர், தாமரை. குழந்தைகள் வீட்டில் இருக்கும் போது செய்யும் சிறிய சேட்டைகள் கூட பெரிதாகாவே நமக்கு தெரிந்தாலும், கொஞ்சம் நேரம் அவர்கள் இல்லையெனிலும் நம்ம மனசு இருக்குதே அவங்களையே சுற்றி சுற்றி வந்து கொண்டேயிருக்கும்.

naan என் அம்மாவிடம் சைததுபொல் இருந்தது பலய‌ நினைவுகல்

kutties settai kovam varum.but antha timela kovatha velaki vachitu rasikanum....unmathane

ரொம்ப நன்றி ரத்னா.

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

நன்றி வாணி. சரியாகச் சொன்னீர்கள்

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

நன்றி வைஷ்ணவி. இப்போதும் நாம் குழந்தைகள் தான்.

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

நன்றி வந்தனா. குழந்தைகளின் குறும்புத்தனம் ரசிக்க வைக்கும்.

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

how to upload my story in this website. please answer me.

கதையை எப்படி இந்த இடத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.தயவு செய்து உடனே பதிலை அனுப்பவும்.

சகோதரி அவர்களுக்கு,

உங்களது படைப்பை arusuvaiadmin அட் ஜிமெயில் டாட் காம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

கதை அனுப்புகின்றவரின் சொந்த ஆக்கமாக இருக்க வேண்டும். வேறு எங்கும் வெளியாகி இருக்கக்கூடாது என்ற விதிகளுக்கு உட்பட்டு, வெளியிடும் தரத்தில் இருப்பின் இங்கு நிச்சயம் வெளியாகும்.

thanks for your information

Nice story.