தனிமைக் கோலம்

அறுசுவையில் கோலப் பகுதி புதிதாக வந்தாலும் வந்தது, இமாவின் நிம்மதி போயே போச்சு. ;)

தினமும் ஆறு மணி ஆனதும், "வெளியாகி இருக்குமே! பார்க்க வேண்டுமே!" என்று மனது பரபரக்கிறது.

கொஞ்சம் பொறாமைதான். :-) எல்லா இடமும் பலகையும் கம்பளமுமாகக் கிடக்க நான் எங்கே கோலம் போடுவதாம்! வெளியே இறங்க முடியாதபடி காற்றும் மழையும் வேறு.

வீட்டில் எனக்கு மட்டும்... விடுமுறை. தனிமை.... அவ்வ்!! இப்போ ஏன் சம்பந்தமில்லாமல் பிரியசகியின் அந்தக் கவிதை நினைவுக்கு வருகிறது! :-) தலைப்பு... தனிமையோ! பார்க்க வேண்டும்.

நான் தனித்திருக்கும் போது விருப்பமாகச் செய்யும் வேலை ஒன்று உண்டு. solitaire விளையாடப் பிடிக்கும் எனக்கு. இது கணனி விளையாட்டு அல்ல. போர்ட் கேம். கைக்கடக்கமாக மரத்தாலானது ஒன்று கொசுவர்த்தி அட்டைப் பெட்டியில் வைத்திருப்பேன். பிறகு க்றிஸ் தன் கையால் ஒன்று செய்து கொடுத்தார். இது... சின்னவர் எனக்காக ஏழு வருடங்களுக்கு முன் வாங்கிக் கொடுத்தது. நியூஸிலாந்து ரிமுவில் கடைந்தது.

விளையாடும் விதம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆரம்பிக்கும் போது நடுக் குழியில் காய் இருக்கக் கூடாது. எந்தப் பக்கத்தாலும் வெட்டலாம். முடிகிற சமயம் ஒரேயொரு காய், அதுவும் அந்த நடுக் குழியில் மீதம் வர வேண்டும்.

பத்தொன்பது, இருபது வருடங்களுக்கு முன்பு ரூபவாஹினியில் 'ஹிருட்ட முவாவென்' என்னும் சிங்களத் தொலைக்காட்சித் தொடர் ஒன்று பிரபலமாக இருந்தது. அந்த நாடகத்தையே 'Chakablas' என்றுதான் சொல்லுவோம். இந்த விளையாட்டிற்கு நாடகக் கதாபாத்திரங்கள் பயன்படுத்திய பெயர் அது. பல அத்தியாயங்களில் முக்கிய கதாபாத்திரமே solitaire விளையாட்டுத்தான் என்கிற அளவுக்கு இருக்கும். நாட்டில் பட்டி தொட்டி எல்லாம் solitaire புகழ் பரவிற்று.

சிலர் 'இடியப்ப நாடகம்' என்பதுவும் உண்டு. :-) அப்போதெல்லாம் சமையலறைகளிற் தொழிற் சிக்கன உத்திகள்... ;) (அப்படித்தான் பாடசாலையில் மனையியற் பாடத்தில் கற்பித்தார்கள்.) பெரிதாக இல்லை. காஸ் அடுப்பு கூட எங்கள் வீட்டிற்கு வந்திராத காலம் அது. இந்த நாடகத்தில் இடியப்பம் பிழியும் பெரிய மெஷின் ஒன்று வரும். புதினமாக இருக்கும் பார்க்க.

எல்லோரும் விளையாட்டை விளையாட்டாகப் பார்க்க, எனக்கு குழிகளின் அமைப்பு கோலத்திற்குப் புள்ளி வைப்பதை நினைவுபடுத்தும். ஊரில் அடிக்கடி நான் போடும் கோலங்களில் ஒன்று இன்று உங்கள் பார்வைக்கு.

தரை இல்லாவிட்டால் என்ன! கறுப்பாக ஒரு 'டைல்' வீட்டிற்குக் கீழே பேஸ்மண்ட்டில் கிடந்தது. தூக்கி வந்து கழுவிக் காய வைத்தேன். வெண்கட்டியும் கிடைத்தது. கோலம் போட்டு சற்று நேரம் ரசித்தேன்.

நடுவில் பூசணிப்பூ வைக்காவிட்டால் எப்படி!!! தோட்டமே இல்லாத இந்தக் குளிர் காலத்தில் அதற்கெல்லாம் எங்கே போவது என்று விட்டுவிட மனதில்லை. வல்லவளுக்குப் புல்ல்... ம்ஹும்! play doughவும் அரசாணிப்பூ. ;))
செய்முறை கேக்காதீங்க. வேண்டுமானால் கேக் பூ பாருங்க. --> http://www.arusuvai.com/tamil/node/25736

இந்தக் கோலத்தில் புள்ளி வைத்திருக்கும் முறையை எப்படி விபரிப்பது! ( நேர்ப்புள்ளி என்பது மட்டும் தெரிகிறது.) யாராவது சொல்லிக் கொடுக்குமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.

என் கோலங்களின் சேமிப்பு இது. பதின்ம வயதுகளில் படிப்போடு கூட இப்படியான வேலைகளிலும் ஈடுபட்டு வந்தேன். மங்கையில் வந்த கோலப் பக்கங்களைக் கிழித்துக் கட்டி வைத்திருந்தேன். (யாருக்கோ புத்தகம் கட்டக் காட்டித் தருவதாகச் சொன்னேன். அடியோடு மறந்து போனேன். என்னை இனி நம்பாதீங்க யாரும். ;) ) அட்டையின் உறை... என் கலியாணத்திற்குக் கிடைத்த அன்பளிப்பொன்றைச் சுற்றி வந்த கடதாசி. கொடுத்தவர் பெயர் உள்ளே குறித்திருக்கிறது. :-)

மொத்தமாக ஒரு பெட்டி டாட்டாய்ஸ் சுற்ற வைத்த சுபத்ராவுக்கு இந்த இடுகையும் மேலே உள்ள கோலமும் சமர்ப்பணம். :-)

5
Average: 5 (8 votes)

Comments

ரசித்துப் படித்தேன்.. :-) எனக்கும் solitaire விளையாடப் பிடிக்கும். கோலம் போடவும் பிடிக்கும். பூ வைத்திருக்கும் கோலத்தை 7 புள்ளி, 3 வரிசை, 3 ல் நிறுத்தனும் னு சொல்வாங்க... வேற விதமாகவும் சொல்வாங்களான்னு எனக்குத் தெரியலை..

// தரை இல்லாவிட்டால் என்ன! கறுப்பாக ஒரு 'டைல்' வீட்டிற்குக் கீழே பேஸ்மண்ட்டில் கிடந்தது. தூக்கி வந்து கழுவிக் காய வைத்தேன். வெண்கட்டியும் கிடைத்தது. கோலம் போட்டு சற்று நேரம் ரசித்தேன்.// சூப்பர் ஐடியா... அதிலும் அரசாணிப்பூ (play dough) வைச்சுருப்பது ஹைலட்...

அந்த புக்ல இருக்கும் ஸ்டார் கோலம் ரொம்ப பிடிக்கும் :-)

கலை

//7 புள்ளி, 3 வரிசை, 3 ல் நிறுத்தனும்// ஓகே. நன்றி கலை.
//ஸ்டார் கோலம்// அதெல்லாம் போட்டுப் பார்க்கிறது இல்லை. இமா புக்ல மட்டும் பார்த்து ரசிக்கிறது. ;) எப்பவாவது போடலாம். அத்தனை நீளத்துக்கும் புள்ளி நேராக வருமா! சந்தேகம்தான். ;(

‍- இமா க்றிஸ்

ஒரு கட்டுரை ஒராயிரம் நிகழ்வு பதிவுகள்.
கட்டுரையில் ஒரு கவிதை அறிமுகம். பிரியசகியின் கவிதை, தனிமை இராத்திரி..( கவிதையை தேடி நான் படிக்க, மனசு கனக்கிறது, காதலின் சுகத்தை மென்மையாகவும்,பிரிவின் துயரை நெஞ்சைப்பிழியும் சோகத்தோடும் சொன்னது, மறக்க முடியாதது) நியூஸிலாந்து ரிமு மரத்தில் கடைந்தது. ரூபவாஹினி, ஃபாண்டன்ட் பூக்கள் & இலைகள் செய்முறை.
உங்கள் கட்டுரை படித்தது, காலேஜ் பரீட்சைக்கு படித்ததை நினைவுபடுத்தியது. புத்தகம் மட்டும் படித்தால் சுத்தமாக புரியாது. கூடவே, டிக்ஹ்னரி, ரெபரென்ஸ் புக் எல்லாம் வேண்டும். அதுமாதிரிதான்உ ங்கள் கட்டுரையோடு, கூகுள் (நியூஸிலாந்து ரிமு), அறுசுவை கவிதை, அறுசுவை நீங்களும் செய்யலாம். (ரூபவாஹினி ரெபரென்ஸ் தேவை படல நானும் சின்ன வயசில் பாத்திருக்கேன். வீட்டு அண்டனால வரும். சண்டே தமிழ் பாட்டு பார்த்ததா நினைவு.) (Chakablas - கூகுள் translate -டே கை கொடுக்கல.ஆனா ஒரு கேம்ன்னு மட்டும் தெரிது.)
\\அட்டையின் உறை... என் கலியாணத்திற்குக் கிடைத்த அன்பளிப்பொன்றைச் சுற்றி வந்த கடதாசி. கொடுத்தவர் பெயர் உள்ளே\\ பிறகு க்றிஸ் தன் கையால் ஒன்று செய்து கொடுத்தார்.\\ அப்பாடா இத மட்டும் தான் உடனே கண்டு பிடிக்க முடித்தது.
இமாம்மா அருமை, அருமை. தகவல் களஞ்சியம் நீங்க. அப்பப்ப கொஞ்சம், கொஞ்சம் தூவி விடுங்க.

உன்னை போல் பிறரை நேசி.

;) கவிதைக்கு கருத்தை அங்கேயே சொல்லி இருக்கலாம்ல! ;)) இங்க தேடி வந்து படிப்பாங்களா?

நான் என்ன பண்ணட்டும்! இப்படியே எழுதிப் பழகியாச்சு. அங்க லிங்க் போட்டு பழக்கம். இங்க கொடுக்க முடியாது. அப்பிடியே விட்டுருறேன். ஆர்வம் இருக்கிற க்றிஸ் போன்றவங்க எப்பிடியும் தேடிப் படிப்பீங்கன்னு தெரியும். ;))

//ஒரு கேம்ன்னு மட்டும் தெரிது.// இது பழங்காலத்து விளையாட்டு. டீவீ ரேடியோ எல்லாவற்றுக்கும் முற்பட்ட காலத்தையது. தனி ஆள் பொழுது போக விளையாடுவது.

சமீபத்துல இந்தியத் தொலைக் காட்சி விளம்பரம் ஒன்றில் பார்த்தேன். ஏதோ ஒரு பொருளோடு இலவச இணைப்பாக வந்திருந்ததாக நினைவு. வேறு பெயர் சொன்னார்கள்.

‍- இமா க்றிஸ்

கோலம் அழகு :) சொல்லித்தான் அந்த பூ செய்ததுன்னு தெரிஞ்சுது. நிறைய விஷயம் க்றிஸ் பதிவில் சொன்னதை வெச்சு தான் புரிஞ்சுது. கலக்குங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்கள் தனிமைக்கோலம் என் வாழ்க்கையின் பல விசயங்களை ஞாபகத்துக்கு கொண்டுவந்தது.
1.எனக்கு சின்ன வயசில மிகவும் பிடித்த கேம் SOLITAIRE ,இப்ப என் பையனுக்காக பேங்களூர்ல தேடிப்ப்பிடிச்சு வாங்கிக்க்குடுத்தேன், அவனுக்கும் அதுல ரொம்ப விருப்பம் வந்துடுத்து.
2,உங்கள் கோலமும் அழகு, கோலம்போட எடுத்துக்கொண்ட முயற்சியும் அழகு. எனக்கு கோலம் போடவே வராது, ஆனாலும் கர்ப்பமா இருக்கும்போது ஏதாவது செய்யனும்னே கோலம்போட கற்றுக்கொண்டு எப்பவும் ஏதாவது கோலம் போட்டுட்டே இருப்பேன் (பார்த்துதான்),அதோட விளைவு இப்ப என் பையன் பெயின்ட்டிங், ஆர்ட் & க்ராஃப்ட்ல கலக்குரான் (எங்க குடும்பத்துல இதெல்லாம் யாருக்குமே வராத விசயம்). உங்களின் அனைத்து கைவினைகளுமே இப்பொழுது என் புக்மார்க்கில் அனைத்தும் என் பையனுக்காக.
3, நானும் இப்படி நிறய கோல புத்தகங்களை சேமித்து வைத்துள்ளேன்,எனக்குதான் பார்க்காம கோலம் போடத் தெரியாதே!
4, கோலத்துக்கு நடுவில் அந்த பூ சூப்பர்.
5,உங்கள் தனிமைக்கோலம் என் வாழ்க்கைக்கோலத்தை ஞாபகப்படுத்தியது, நன்றி இமாம்மா.

solitaire விளையாட்டு எனக்கும் ரொம்ப பிடிக்கும், நானும் சின்ன பிள்ளையாக இருக்கும் போது விளையாடியது, இப்ப உங்க மறுபடியும் நினைவுக்கு வந்துவிட்டது,
நீங்கள் போட்ட கோலம் அழகாக உள்ளது,

இமா உங்க ப்ளாக்கை படித்தால் நல்ல நிறைய தகவல்களும் நினைவுகளும் நிறைந்ததாக இருக்கு, கோலம் அழகா இருக்கு, பூசணிப்பூ நிஜம் போலவே இருக்கு. இந்த விளையாட்டு ப்ரைன் விட்டா இல்லையா இமாம்மா

ப்ரெய்ன் விட்டா - இப்போ வந்த பெயர். எல்லோரும் புத்திசாலிகளாக இருக்க விரும்பும் காலம் இது. :-)

solitaire தான் அதன் உண்மைப் பெயர். தனிமையைக் குறிக்கும் ஆங்கிலச் சொற்களான 'slitary,' 'solitude' என்பவற்றின் அடிப்படையில் வந்த பெயர். ஐரோப்பிய வாழ்க்கை முறையில் காம்பிங், தனிமை எல்லாம் நிறைய இருந்திருக்கிறது.

‍- இமா க்றிஸ்

நன்றி வனி. ;))
பூ மட்டும் இல்ல. அதுக்குக் கீழ ஒரு குட்டி பச்சைக் குவியலும் இருக்கு. தெரியல படத்துல. :-)

‍- இமா க்றிஸ்

அருமையான பதிவு இமா! கோலம் - ‍விளையாட்டு - தனிமை - கவிதை - ரூப‌வாஹினி - கோலம் - பூ - கோலங்கள் என்று நீங்கள் சம்பவங்களை ஒன்றோடொன்று கோர்த்து எழுதிய விதமே மிக அருமை!. படிக்க ப‌டிக்க நிறைய நினைவுகளை எனக்குள் கொண்டு வந்தது. :‍) கோலம்னா, சின்ன வயது முதற்கொண்டே எனக்கும் ரொம்ப, ரொம்ப‌ பிடிக்கும். நிறைய போட்டிருக்கேன். இப்ப இங்கே வந்து மிஸ் பண்ணும் சில விஷயங்களில் இதுவும் ஒன்று... அச்சச்சோ, என் டாட்டாய்ஸ் பற்ற வைச்சிட்டா இந்த ஒரு பதிவு போதாது போலருக்கே, வேற எங்காவது தொடர்கிறேன்! :‍‍) அப்புறம் உங்களோட அந்த play dough பூ சான்ஸே இல்லை, அச்சு அசலா நிஜப்பூ போலவே இருக்கு இமா, சூப்பர்ர்!! நன்றி இமா!

அன்புடன்
சுஸ்ரீ

//(எங்க குடும்பத்துல இதெல்லாம் யாருக்குமே வராத விசயம்)// எங்க உறவினர் பக்கம் இது பழக்கமே இல்லை. எங்க ஊர்ல இந்துக்களே கூட வெகு அபூர்வமாகத்தான் வீட்டில் கோலம் போட்டுக் கண்டிருக்கிறேன். பாடசாலை, அலுவலக நிகழ்வுகளிலானால் பெரிதாக கோலம் போடுவார்கள். இப்போ எல்லாம் மாறி இருக்கும். எல்லோருக்கும் ரசனைகள் கூடி இருக்கு.

‍- இமா க்றிஸ்

;)) உங்களுக்குப் பத்திச்சா! ;)
நான் மிஸ் பண்ணுவது கோலம் போட்டால் ரசிக்க ஆட்கள் போதாததை. வாசல்ல போட்டா நிறையப் பேர் ரசிப்பாங்க. உள்ள போட்டா நாமதான். விருந்து சமயம் போடலாம். அப்போ இருக்கிற வேலைகள்ல ரெடியானாலும் போட முடியுறது இல்ல. ;(

‍- இமா க்றிஸ்

அந்த குழி, மார்பிள் பலகை ஒன்று வீட்டில் இருந்தத ஞாபகம் இப்ப காணவில்லை. கோலம் எனக்கு பெரிய ஈர்ப்பு இருந்ததில்லை. பார்த்து ரசிப்பதோடு சரி. கோலம் போடுவதில்லை.
வாணி

நன்றி பாலபாரதி. உங்களுக்குப் பதில் சொல்லாமல் மிஸ் பண்ணி இருக்கிறேன். ;(

ஹாய் வாணியம்மா! லீவா! அடிக்கடி அறுசுவையில் காண்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

‍- இமா க்றிஸ்

Solitaire நாங்களும் விளையாடிருக்கோம்ங்க :-) சிறுவயதில்..
கோலம் நல்லாயிருக்குங்க ..

நட்புடன்
குணா

;) எங்கயோ அஞ்ஞாதவாசம் போயிருந்து இப்போ வந்து ஒண்ணா எல்லாத்துக்கும் கமண்ட்!! :-) நன்றி மகன்.

‍- இமா க்றிஸ்