மங்களூர் பன்ஸ்

தேதி: July 12, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (3 votes)

 

மைதா மாவு / கோதுமை மாவு - 1 - 2 கப்
பழுத்த வாழைப்பழம் (பெரியது) - ஒன்று (அல்லது) 2 சிறிய பழங்கள்
தயிர் - 2 மேசைக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி
சர்க்கரை / வெல்லம் - 3 மேசைக்கரண்டி
பேக்கிங் சோடா - கால் தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி (விரும்பினால்)
உப்பு - சிறிது
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

வாழைப்பழத்தை கரண்டி / ஃபோர்க்கின் பின்பகுதியால் மசித்து, அத்துடன் தயிர், சர்க்கரை, உப்பு, நெய், பேக்கிங் சோடா மற்றும் சீரகம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்க்கவும். (இதில் சிலர் சீரகத்திற்கு பதிலாக மிளகு தூள் சேர்ப்பார்கள். எனக்கு விருப்பமில்லை என்பதால் இரண்டையுமே சேர்க்கவில்லை).
சேர்த்தவற்றை கரண்டியால் நன்றாகக் கலக்கவும்.
அதனுடன் சிறிது சிறிதாக மைதா மாவு / கோதுமை மாவைச் சேர்த்து பிசையவும். (தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. வாழைப்பழம் மற்றும் தயிர் கலவையே போதுமானது. தேவைப்பட்டால் சிறிது சிறிதாக அரை தேக்கரண்டி அளவு தண்ணீர் விட்டு பிசையவும்).
பூரி மாவு பதத்திற்கு கெட்டியாக வரும் வரை பிசைந்து, மாவின் மேல் சிறிது எண்ணெய் தடவி மூடி 8 மணி நேரம் வைக்கவும். (நெய் சேர்த்துப் பிசைய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நெய் சேர்க்காமலும் பிசையலாம். மாவின் மேல் பகுதி உலர்ந்து போய்விடாமல் இருப்பதற்குத் தான் எண்ணெய் தடவ வேண்டும். அதற்குப் பதிலாக மாவின் மேல் ஈரத்துணியைப் போட்டு மூடி வைக்கலாம்).
கடாயில் எண்ணெயைக் காயவிட்டு, மாவில் சிறு உருண்டைகளாக எடுத்து சற்று தடிமனான பூரியாகத் திரட்டி எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும். (மாவு உருண்டையை பூரியாகத் திரட்டும் போது மாவு தொட்டுக் கொள்ளத் தேவையில்லை, ஒட்டாமல் தேய்க்க நன்றாகவே வரும். உங்களுக்கு சுலபமாக இல்லையெனில் சிறிது மாவில் பிரட்டி தேய்க்கலாம்).
அதிகமாக சிவக்காமல் உள்ளே வேக மிதமான தீயில் வைத்து பொரிக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் தீய்ந்து போகும். இரண்டு பக்கமும் திருப்பி போட்டு சிவக்க வேகவிட்டு எடுக்கவும். வெந்ததும் உள்ளே இப்படி பஞ்சு போல காணப்படும்.
மாலை நேர சிற்றுண்டிக்கு சுவையான மங்களூர் பன்ஸ் தயார். தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

மங்களூர் சென்ற போது சுவைத்த அந்த ஊர் ஸ்பெஷல் பன் இது. உணவகங்களில் ஒரு பூரிக்கு மேல் சாப்பிட முடியாத அளவுக்கு பெரியதாக இருந்தது. வீட்டில் செய்பவர்கள் சிறியதாகவே செய்கிறார்கள். இந்த அளவில் செய்தால் 12 - 15 சிறிய பன்கள் கிடைக்கும்.

இந்த பன் செய்து 3 / 4 நாட்கள் வரை வைத்திருக்கலாம். சர்க்கரை சேர்த்தாலும் இனிப்புச் சுவை அதிகமிருக்காது. சட்னி இல்லாமல் சாப்பிடுவது சிரமம்.

ஹெல்தி வெர்ஷன் விரும்பபுபவர்கள் கோதுமை மாவு பயன்படுத்தலாம். மாவு சேர்த்து பிசையும் போது மாவை அப்படியே அளந்து சேர்க்கத் தேவையில்லை, பூரி மாவின் பதம் வரும் வரை, மாவை சிறிது சிறிதாகச் சேர்த்து கைகளால் பிசைந்து கொண்டே வந்தால், சரியான பதம் வந்ததும் மாவு சேர்ப்பதை நிறுத்திவிடலாம்.

மாவு பூரி மாவு பதத்தில் கெட்டியாக இருப்பது அவசியம். அப்போது தான் 8 மணி நேரம் வைத்திருந்து எடுக்கும் போது சரியான பதத்தில் இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மங்களூர் பன்ஸ் சூப்பர், பன் கொஞ்சம் சாஃப்டா தானே இருக்கும் இது மொறுப் மொறுப்பாக உள்ளது, மங்களூர் கர்நாடாக மாநிலத்தில் தானே உள்ளது.

Super vani akka. sugar ennum adhigam serthu kollalama.soda mavu serthal soft a varuma.

ரம்யா ஜெயராமன்

மங்களூர் பன்ஸ் சூப்பரா இருக்கு வனி. செய்து பார்க்க ஆசை. நிறைய அயிட்டம்ஸ் பெண்டிங்ல இருக்கு டைம்தான் கிடைக்கமாட்டேங்குது. ட்ரை பண்றேன்.;-)

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி :)

பாலபாரதி... கர்நாடகாவே தான் :) மொரு மொருன்னு இருக்காதுங்க, சாஃப்ட்டா தான் இருக்கும். கீழிருந்து இரண்டாவது படம் பார்த்தா தெரியும், பன் போல தான் இருக்கும்.

ரம்யா... உங்க விருப்பம் போல சுகர் சேர்க்கலாம், இனிப்பா அப்படியே சாப்பிடலாம். இது இனிப்பு வகை இல்லை, சட்னி வைத்து சாப்பிடுவாங்க இங்க. அதனால் சுகர் குறைவா சேர்க்கறாங்க. :) ட்ரை பண்ணுங்க. ரொம்பவே சாஃப்ட்டா தான் இருக்கும்.

உமா... மெதுவா நேரம் கிடைக்கும் போது செய்து பாருங்க :) நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நேற்று ஈவ்னிங் இந்த பன் செய்தேன்.. வெல்லம் சேர்த்து செய்தேன். டேஸ்ட் நல்லா இருந்துச்சு.. ஆனால் உள்ள மட்டும் லைட்டா கொழ்கொழப்பா இருந்துச்சு.. ஏன்னு தெரியலை.. ஆனாலும் எல்லாமும் காலியாகிட்டு..

கலை

வெல்லம் சேர்த்து இதுவரை ட்ரை பண்ணதில்லை. எதனால் கொழ கொழப்பாச்சுன்னு புரியல. மே பி.. நல்லா வேகும் முன் எடுத்திருப்பீங்கன்னு நினைக்கிறேன். வெல்லம் சேர்த்தா கலர் சீக்கிரம் ப்ரவுன் அகிடும், அதை பார்த்து எடுத்திருப்பீங்கன்னு நினைக்கிறேன். சிறு தீயில் வைத்து நல்லா வேக விடனும். அடுத்த முறை சர்க்கரை சேர்த்தே ட்ரை பண்ணிப்பாருங்க கலை. செய்து பார்த்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா