சோறும், சோறு சார்ந்த இடமும் - கிறிஸ்மஸ் ராபர்ட்ஸ்

"சோறும், சோறு சார்ந்த இடமும் (சமையலும், சமையல் சார்ந்த இடமும்)"

ஏய்! குட்டி வாண்டு அந்த பாத்திரத்தை எடு...
என்னங்க... அந்த சீனிய கொஞ்சம் எடுங்க..
ஏய்! அத தொடாத...
ஏய்..ய்..ய்... அதை அதிகம் கொட்டக் கூடாது... அப்ரண்டீஸ்... அமைதியா நான் சொல்லுறத மட்டும் தான் செய்யணும். அதிகப் பிரசங்கித்தனம் கூடாது.

என் சமையலறை அல்லோல, கல்லோலப்பட்டது ஏன்னு கேக்குறீங்களா?

எல்லாம் வனி சிஸ்டரோட எக்லெஸ் வெனிலா அவன்லஸ் கேக் செய்யுறதுக்காகத் தான்.

என்ன தான் அவன் இல்லாது செய்யுறதா இருந்தாலும், என்னவன் இல்லாது செய்யக்கூடாதுன்னு உத்தரவு.

அட இது என்னடி? பெரிய கதையா இருக்குன்றீங்களா?

பெரிய கதை தான். சொல்லுறேன் கேளுங்க. (என்ன பண்ணுறது? கொசுவர்த்தி ஒன்ன கொளுத்தி போடுங்க).

அதான் நம்ம சமையல் பத்தி தெரியும்ல. அறுசுவைல சேர்ந்த புதுசுல கேக், குக்கீஸ்னு அவன்ல செய்ற மெனுகளைப் பார்த்துட்டு, ஆர்வமாகி அவன் வேணும்னு என்னவர்கிட்ட கேட்டேன்.

அவர் என் சமையல் சாகசத்தை தெரிந்தவர் என்பதால் அவனுக்கு அனுமதி மறுத்தார்.

"அட என்னங்க நீங்க, போன வாரம் தான அறுசுவைல பார்த்து (ஆலு ஸ்நாக்ஸ் - நன்றி வனி சிஸ்டர்) உருளைக்கிழங்குல முறுக்கு செய்து தந்தேன். நீங்களும் எவ்வளவு ருசியா இருக்குன்னீங்க. நல்லா இருக்குன்னு கமெண்ட் போட்டோமே" என்றேன்.

"'ஆம்" என்று தலையசைத்து ஆமோதித்தார்.

“அதே மாதிரி, அப்படியே ருசியா செஞ்சிரலாம். படம் போட்டுருக்காங்க. எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணி, அவன்ல வைக்கிறதுக்கு முன்னாடி சந்தேகம் வந்தாக்கூட கேட்கலாம். உடனே ரிப்ளை பண்ணுவாங்க. (அப்பப்ப சனி, ஞாயிறுல ஈ ஆடுறத நா சொல்லலியே). அவ்ளோ ஈசி போங்க..” ஒரு வழியா பாடம் எடுத்து சம்மதிக்க வைத்தேன்.

மூன்று நாட்களில் வந்தது அவன்.

2 நிமிஷம் இல்லங்க. பதினஞ்சே செகண்ட்ல நூடுல்ஸ் ரெடி. பாருங்க சோளத்த 3 வது நிமிஷம் வேக வச்சிட்டேன். பாப் கார்ன் வீட்டிலேயே ரெடி.

எல்லாம் நல்லாத்தான் வந்தது.

திடீரென புட்டு சாப்பிட ஆசை வர (செய்முறை வசதி தெரிந்த ஆசை) பச்சரிசி, தேங்காய்ப் பூ, சர்க்கரை, நெய் எல்லாம் கலந்து வேகமாய் வேக வைக்க அவனில் வைத்தேன்.

எனது கணிப்புப்படி மாவும் சர்க்கரையும் கலந்து, சிறிது லிக்யூடாக மாறி பின்பு வேகும். (எல்லாம் நம்ம ஆறாம் அறிவு பண்ணுற அலம்பல்).

பெட் ரூமிலிருந்து புத்தகம் படித்தவள், ஐந்து, பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை வந்து, வந்து பார்த்தேன்.

ம்ஹும்.. எதுவும் மாறலியே...

அடுத்த முறை கூடுதலாக ஐந்து நிமிடம் கொடுத்து, 15 நிமிடங்கள் கழித்து வந்து பார்க்கலாம் என நினைத்து உட்கார்ந்தேன்.

ஒரு பத்து நிமிடங்கள் தாண்டி போயிருக்கும்.

திடீரென 'டுப்' பென்று சத்தம் கேட்டது. ஓடிச் சென்று சமையலறையை எட்டிப்பார்த்தேன்.

எனது ஆசைப் புட்டு ஒன்று கரிக்கட்டையாய் என் காலுக்கு அருகில் புகைந்தது. அவனைப் பார்த்தேன். அனைத்து புட்டுகளும் சிதறிக் கிடக்க அனைத்திலும் புகை மண்டலம். அவசரமாய் பவரை ஆஃப் செய்து பார்த்தேன்.

அவனுக்கு ஒன்றும் பெரிய காயமில்லை. சிறிது கண்ணாடிச் சிதறல் தான். ஆனால், என் ஆசை புட்டுத் தான் கரித்துண்டாகிவிட்டது. அப்போதே அவனைத் தனியாக பயன்படுத்த தடா வந்தது.

இது மட்டுமல்ல. இன்னொரு சாகசமும் இருக்கு. அதையும் கேட்டுக்கோங்க.

(என்..ன...து... கொசுவர்த்தி எரிஞ்சி, முடிஞ்சி போச்சா? கவலைப்படாதிங்க.. இன்னொன்னு கொளுத்திக்கோங்க).

ஏதோ சின்ன வயசுல தூர்தர்சன்ல பார்த்தது. (சண்டே சமையல்னு நினைக்கிறேன்) அதாங்க நம்ம வசந்த் & கோ அண்ணாச்சி கூட சாப்பிட்டுட்டு ‘’ம்ம்ம், நல்லா இருக்கு’’ ன்னு சொல்வாரே.

அதுல ஒரு குறிப்பு வெண்ணிலா கேக். அவன் தேவையில்ல. ரவை, பால், சர்க்கரை, வெண்ணிலா எசன்ஸ், முட்டை, நெய் எல்லாம் போட்டு அடிச்சு, கிண்டி, ஒரு பதம் வந்ததும் (நாம என்ன தான் பரமபதம் பிடிச்சாலும் பதம் மட்டும் வரமாட்டேங்குது) இறக்கி பெரிய டிரேயில ஊத்தி ஆறவிட்டா வெண்ணிலா கேக் ரெடி. வெட்டி (எதை?) எடுத்து சாப்பிடலாம்.

நானும் ந..ம்பி செஞ்சேன். வாசனை எல்லாம் தூக்கல். டிரேயில ஊத்தி, ஆறவிட்டு பீஸ் போட கத்திய விட்டேன்.

ம்ஹும்... கேக் மேல கோடு கூட போட முடியலியே. கத்தியும், வெட்டுன ஆளும் சரியில்லன்னு என்னவர கூப்பிட்டேன்.

அவரும் வந்து ட்ரை பண்ண.. ம்ஹும்... கடைசியில் சுத்தியல், உளி கொண்டு ட்ரேயை தான் பீஸ் போட்டோம்.

ஆனாலும் சுவை சூப்பர்... (எப்படியா? சுத்தியல், உளி வச்சி பீஸ் போட்ட ட்ரேயையும், கேக்கையும் தனியாக்கிட்டோம்ல). இப்ப தனியாக புதிய முயற்சிக்கும் தடா.

இதோ, இப்போ…

ஏற்கனவே எழுதி வைத்த வனி சிஸ்டரோட எக்லெஸ் வெனிலா அவன்லஸ் கேக் குறிப்பைப் பார்த்து செய்து முடித்தேன். வேக வைத்து வெளியில் எடுக்க, வாசனையும், வடிவமும் அற்புதம்.

சாதித்தே விட்டாள் கிரிஸ்!!!

ஆற வைத்து பங்கு போட்டு சாப்பிட ஆரம்பித்தோம். இரண்டே நிமிடத்தில் முதல் ரவுண்டு முடிந்தது. ஆரம்பித்தோம் இரண்டாவது ரவுண்டு.

திடீரென யோசித்த அவர் கேட்டார், ''நீ ஏதோ கேக் தான செய்றேன்னு சொன்ன?"...

அவர் கேட்டதும் தான் மூளைக்கு உதித்தது. ஆமால்ல, கேக் தான செஞ்சோம். இப்ப கொஞ்சம் பிஸ்கட் மாதிரில்ல வந்திருக்கு. (மறுபடியும் வழக்கம் போல் மிக்ஸிங் பிராப்ளம் தான் போல). விடுவோமா என்ன... சமாளிப்போம்...

"அட இல்லங்க... இது எக்லெஸ் வெனிலா அவன்லஸ் குக்கீஸ். கேக் மெத்தடுல செய்ற குக்கீஸ். குக்கீஸ் மாதிரி சின்னதா ரவுண்ட், ரவுண்ட்டா செஞ்சா அவன்ல வச்சி எடுக்கணும். வேணும்னா இதையே அவன்ல வைச்சு எடுப்போமா?".

அதிர்ச்சியுடன் என்னையும், அவனையும், கேக்கையும் மாறி மாறிப் பார்த்தார்கள் அவரும், குட்டி வாண்டுவும்.

Comments

Unga kathai padithal yaara irrunthalum kavalai maranthu sirika dhan thonum..... nice story sis....

வந்தனா.., கதைய படித்து வாழ்த்துனதுக்கு நன்றி.

உன்னை போல் பிறரை நேசி.

\\நிகழ்ச்சி பேரு 'சாப்பிடவாங்க' சரியாசொல்லிட்டேனா, நிகழ்ச்சி மறந்துடுச்சு, ரெசிபி மட்டும் நியாபகம் இருக்கா\\

அட ஆமாங்க நிகழ்ச்சி பேரு சாப்பிடவாங்க தான். ரெசிபிய நான் சின்ன வயசிலயும் ட்ரை பண்ணி இருக்கேன். அதான் நினைவு இருக்கு. நன்றி தோழி.

உன்னை போல் பிறரை நேசி.

ja123, திவ்யா நன்றி தோழி கதைய படிச்சி, பாராட்டுனதுக்கு.

உன்னை போல் பிறரை நேசி.

படிச்சிட்டு மிகவும் ரசித்தேன்

நடப்பதெல்லாம் நன்மைக்கே