இலையுதிர் காலமும் உதிரிப் பூக்களும்

காலங்கள் தப்பிப் போகிறது. இங்கு பனிக் காலமாக இருந்தாலும்... இன்னமும் இலையுதிர் காலம் தொடர்கிறது.

செயற்கை மலர்கள் வீட்டை அலங்கரிக்க ஓர் சுலபமான வழி. அழகுக்கு அழகு; செலவு குறைவு. தினமும் கவனித்துச் சீர் செய்ய வேண்டியது இல்லை. ஆனால் நாட்பட்டுப் போனால்!

ஒவ்வொரு தவணை விடுமுறையிலும் தவறாமல் செயற்கைப் பூக்களுக்கு நீராட்டுவிழா நடத்துவேன்.

செய்வது..
* பெரிய ப்ளாஸ்டிக் வாளியில் நகச்சூட்டு நீர் நிரப்பி போதுமான அளவு ஷாம்பூ போட்டுக் கலந்து பூக்களை அப்படியே காம்பில் பிடித்து தலைகீழாக உள்ளே இறக்கி அலசுவேன். கைகளால் பூக்களைப் பிடிப்பதில்லை, துணி சிலும்பிவிடும். இடமும் வலமும்; மேலும் கீழுமாக அலச அழுக்கெல்லாம் கழன்று விடும்.
* வாளியை அலம்பிவிட்டு மீண்டும் நீர் நிரப்பி சில துளிகள் fabric conditioner அல்லது hair conditioner விட்டுக் கலந்து பூக்களை அலம்புவேன்.
* அப்படியே காற்றில் வடிய விடுவேன்.
கழன்று போன சில பாகங்கள் மீந்திருக்கும். அவற்றைப் பரப்பி உலரவிடுவேன். பிறகு மாட்டிக்கொள்ளலாம்.

பூக்கள் அலுத்துப் போனால் அல்லது இதற்குமேல் பயன்படுத்த இயலாது என்கிற நிலைக்கு வந்தால் கூட, அழகாக இருக்கும் அவற்றைத் தூக்கிப் போட மனம் வருவதில்லை. பாடசாலையில் எப்போதாவது கைவினை செய்யும் சமயம் பயன்படுத்தலாம் என்று சேமித்து வைப்பதுண்டு.

சில வருடங்கள் முன்பு யூ ட்யூப்பில் கண்ணில் பட்ட கைவினை ஒன்று பிடித்திருந்தது. சாதாரணமாக, தேடிப் போய்ப் பார்ப்பதில்லை எதையும். அது என் கற்பனையைக் கட்டுப்படுத்துவதாக ஒரு எண்ணம் இருக்கிறது. தற்செயலாகக் கண்ணில் படுபவற்றை ரசித்துவிட்டுப் போவேன். பாடசாலைக்கு ஆகும் என்றால் மட்டும் குறித்துக் கொள்வதுண்டு. சில கைவினைகள் வேறு சிந்தனையை மனதில் உண்டுபண்ணும். பொருள் கிடைக்கிறதே என்று செய்து பார்ப்பவையும் உண்டு.

இது... செய்முறையை முழுமையாகப் பார்க்காவிட்டாலும் ஆக்கம் சுலபமாக மனதில் ஒட்டிக் கொண்டதால் முயற்சித்துப் பார்த்தது. ஒரு உயரமான பாத்திரத்தைச் சுற்றி உதிரி இலைகளை ஒட்டுவது மட்டுமே வேலை. (கண்ணாடி அல்லது ப்ளாஸ்டிக் சாடியானால் ஹாட் க்ளூ வைக்க வேண்டும்.) மேல் வரியிலிருந்து ஒட்ட ஆரம்பிக்க வேண்டும். முதல் வரி இலைகளில் பாதி உயரம் பாத்திரத்தின் விளிம்பிற்கு மேலாக வரவேண்டும். இரண்டாவது வரி ஒட்டும் சமயம் இடைவெளிகளில் இலைகள் வருவது போல ஒட்ட வேண்டும். அடியில் இடைவெளி தெரியும் என்று முன்பே மூளை சொல்லிற்று. அதனைப் பச்சை ராஃபியா ஒட்டி மறைக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஒட்டிய பின்னால் பார்க்கப் பிடிக்கவில்லை. ;( அழகைக் கெடுப்பது போல இருந்ததால், அதைப் பிரித்துப் போட்டுவிட்டு பச்சை ஃப்ளோரல் டேப்பை இரண்டு வரிகளாக ஒட்டிக் கொண்டேன்.

இப்படி ஒரு பூச்சாடி இருந்தால், இலைகள் இல்லாமல் பூக்கள் மட்டும் தனியாகக் கிடைக்கும் சமயம் கவலையில்லை. பத்திரமாக வைக்கப் போகிறேன். இங்கு சாடியில் சொருகியிருப்பவை உலர்ந்த சோளப்பூக்கள் - 2013 தை மாத விளைச்சல்.

யூ ட்யூப்பில் இந்தக் கைவினையைச் செய்து காட்டிய பெண்மணி யார் என்பது நினைவுக்கு வரவில்லை. என் கண்ணில் மீண்டும் அந்தக் கைவினை படவும் இல்லை. ;(
யாராக இருப்பினும், அவருக்கு என் நன்றி.

இப்படிச் சின்னவர்களையும் செய்ய வைக்கலாம், ப்ரிங்கிள்ஸ் டப்பாவில் க்ராஃப்ட் க்ளூ கொண்டு ஒட்டவைக்கலாம். பென்சில் போட்டு வைக்க உதவும். விரும்பினால் உள்ளே ஒரு போத்தலை வைத்து நீர் நிரப்பி பூச்சாடியாகவும் பயன்படுத்தலாம்.

பூக்கள் நிறையச் சேர்ந்துவிட்டன. எத்தனை காலம் இப்படியே வைத்திருப்பது! எப்போவாவது ஒரு நாள் பயன்படுத்தாமலே தூக்கிப் போடப் போகிறேன். அதற்குள் ஏதாவது செய்தாக வேண்டும். கிடைத்த பிரம்புத் தட்டில் சில பூக்களையும் இலைகளையும் ஒழுங்குபடுத்தி ஹாட்க்ளூ கொண்டு ஒட்டினேன். சின்னதாக ஒரு ஜோடிப் பறவை இருந்தது. அவற்றையும் சேர்த்து ஒட்டிவிட்டேன். தட்டின் பின்பக்கம் ஒரு கொக்கியை ஒட்டினேன். அழகான சுவரலங்காரம் கிடைத்தது. இதை எங்கள் அறைக் கதவின் வெளிப்பக்கம் ஒட்டலாம் என்று எண்ணம். :-)

மீண்டும் உதிரும் வரை இருக்கட்டும்.

Average: 5 (5 votes)

Comments

இமா அம்மா,
ரொம்ப‌ அழகா இருக்கு,
வேஸ்ட் பூ கூட‌ மறுபடியும் உயிர்த்தெழுந்தது உங்களால் அழகாக‌.....

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

//அழகாக இருக்கும் அவற்றைத் தூக்கிப் போட மனம் வருவதில்லை// நானும் இப்படித் தான் சேர்த்து வச்சிருப்பேன்.
ரெண்டுமே அழகு.
அதுவும் அந்த‌ பிரம்பு தட்டில் உள்ள‌ பறவைகள் ரெண்டும் ஒன்றோடொன்று பேசிக் கொள்வதைப் போல‌ இருக்கு

நானும் ஒவ்வொரு சம்மர்லயும் (கோடை விடுமுறை) இதைத்தான் செய்வேன்.

"ப்ளாஸ்டிக் பூக்களுக்கு ஒரு புதுக்குளியல்"

"நகச்சூட்டு நீர் நிரப்பி" கைபொறுக்கும் சூடுன்னு சொல்வோமே அப்படியா?

பிளாஸ்டிக் பூக்களைவிட‌ உங்கள் சோளப்பூ, மிகவும் அழகாக‌ உள்ளது.

முதலில் மூவர் கருத்துகளுக்கும் என் நன்றி.

ஹாய் சுபி! //உங்களால்// :-) இது பலரும் பண்ணுறதுதான். கீழ நிகிலா கூட சொல்லி இருக்காங்க பாருங்க. :-)
`````````````
//நானும் இப்படித் தான் சேர்த்து வச்சிருப்பேன்.// என்ன பண்ணுவீங்க? உங்க ஐடியாவையும் தெரிந்துகொள்ள ஆசை நிகிலா. //பறவைகள் ரெண்டும் ஒன்றோடொன்று பேசிக் கொள்வதைப் போல‌// அப்படித்தான் நினைத்து வைத்தேன். :-) ஒன்று இமா, ஒன்று க்றிஸ். ;)
```````````````
//"நகச்சூட்டு நீர்// ஆமாம், //கைபொறுக்கும் சூடு// தான் அனு. //சோளப்பூ// அழகுதான் இல்ல! வார்னிஷ் அல்லது கோல்ட் ஸ்ப்ரே செய்தால் இன்னும் அழகாக இருக்கும் போல. அடுத்த வருட விளைச்சலின் பின் முயற்சி செய்து பார்க்க வேண்டும்.

‍- இமா க்றிஸ்

கடைசி தட்டில் ஒட்டியிருப்பது ரொம்ப அழகு. நல்ல ஐடியா. என்கிட்ட நிறைய இருந்தது, ஆனா எங்கன்னு தான் தெரியல. பிரிக்காத எதாவது பேக்கிங்ல இருக்கா, இல்ல மாலேவில் இருந்து வரும்போது தூக்கிப்போட்டாச்சான்னு நினைவுக்கு வரல. தேடிப்பார்க்கிறேன், கிடைச்சா செய்து அனுப்பறேன் படம் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சகோதரி,
பூக்களை விட‌ உங்கள்//கொஞ்சும் தமிழ் அழகு//தமிழ் நடை அழகுக்கே உங்க‌ பதிவை பல‌ முறை படிப்பேன். அழகு தமிழ்பா. [நான் பேஸ் புக்கில் இல்லைங்க‌]
ரஜினிபாய்

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

இன்று கொஞ்சம் ஸ்ச்கூல்ல கொண்டுபோய் போட்டாச்சு வனி. நிறைய சேர்த்து வைச்சு என்ன செய்யப் போறேன். //அனுப்பறேன் படம்// ;)) இப்படி ஒரு படம் அனுப்பித்தான் ஃப்ரெண்ட் ஆனோம். மறக்கல வனி. ;)))
~~~~~~~~~~~~~~~~~
ரஜினி.. ;) தமிழ் என்றாலே அழகுதானே! கருத்துக்கும் உங்கள் பதிலுக்கும் என் அன்பு நன்றி.

‍- இமா க்றிஸ்

இமா பூக்களை அழகா காயவைச்சிருக்கீங்க, ஒரு கொடியில் பல வண்ண மலர்கள்:)

//ஷாம்பூ போட்டுக் கலந்து// புடவைகளுக்கும், உலர்சலவை துணிகளுக்கும் இது போலத்தான் செய்வேன்.
மலர்களுக்கு இடையில் இரு பறவைகள் அழகு.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.