அறிவு கொழுந்தும் ஆண்ட்ராய்டு ஃபோனும்

அறிவுக்கொழுந்துவிற்கு தன் கணவர் பெரும்பாலான நேரங்களை போனிலேய செலவிடுவது போன்றே தோன்றும்.

இந்த செல்போன யாரு கண்டுபிடிச்சாங்களோ தெரில, விருந்து விசேசம் ஆகட்டும், சினிமா தியேட்டர் ஆகட்டும், நொடிக்கொருமுறை எடுப்பதும், வைப்பதுமாக என்ன இருக்கு அப்படி என்று புலம்புவதில் அலாதி ப்ரியம்(?) கொண்டவர் அறிவு கொழுந்து.

இப்பலாம் எங்க பார்த்தாலும் ஒண்ணு கழுத்தை சாய்ச்சிட்டு இருக்காங்க, இல்ல தலை குனிந்து வேறொரு உலகத்தில மூழ்கிடுறாங்க.

அக்கம் பக்கம் நடக்கிறது என்னனே தெரிறது இல்ல....

என்பது போன்ற ரீதியில் ப்ரியமான வார்த்தைகளை அவ்வப்பொழுது தன் ஆற்றாமையின் காரணமாக வெளியிடுவார் அறிவு கொழுந்து.

இதில் கூட்டணி அமைக்க ஆள் கிடைத்தால் நல்லா இருக்குமே என்று கூட நோட்டமிடுவதும் உண்டு.

அலுவலகம் விட்டு வந்தால் தன்னிடம் பேசாமல் உள்ளங்கையில் ரேகை பார்ப்பது போல அமர்ந்து இருக்கும் கணவரை பார்க்கும் போது அடிக்கடி உள்மனதில் புயல் கிளம்பும்.
உள்ளே வீறுகொண்டு எழும் புயலின் தாக்கம் அவ்வப்பொழுது வெளியில் கொஞ்சம் தலைகாட்டும்.

ஆனால் அறிவுகொழுந்தின் கணவருக்கோ அது ஒன்றும் பெரிதாக தோன்றாது.

ஒரு மனுசன் அலுவலகம் விட்டு வந்தா இப்படி உள்ளங்கையவே உத்து பார்த்திட்டு இருந்தா, நீங்களே சொல்லுங்க யாருக்காச்சும் புடிக்குமா என்ன?

இதன் காரணமாக மெதுவாக வீசிய வெப்ப காற்று, அனலடிக்க தொடங்கியது.

இதற்கு என்ன வழி என்று ஆராய தொடங்கிய அறிவுகொழுந்துவின் ஆத்துக்காரரின் இஞ்சினியர் மூளையானது, வெகு வேகமாக வேலை செய்து 'முள்ளை முள்ளால் எடுக்கும்' கான்செப்டில் இறங்கி தன் மனைவிக்கு ஆசையாக வாங்கி கொடுப்பதாக கூறிக்கொண்டு, தொணதொணப்பிலிருந்து விடுதலை என்னும் எண்ணத்தில் ஒரு ஆண்ட்ராய்டு போனை, அறிவுகொழுந்துவின் பிறந்தநாள் பரிசாக அளிக்கபோவதாகவும், அதனை ஃப்லிப்கார்டில் வாங்கப்போவதாகவும் கூறினார்.

ஏனுங் மாமா, இந்த கார்ட் அந்த கார்ட்னு பணத்தை புடுங்கிட்டு, பொருளை அனுப்பாம உட்டுடப்போறான், என்கிற நியதில் 1008 சந்தேகங்களை கேட்டு, அவற்றிற்கான பதிலில் திருப்தியும் அடையாமல் இருந்தார் அறிவு கொழுந்து.

இப்பிடியே அல்லாரும் கடைக்கு போகாம பொருள் வாங்கினா, கடைக்காரர்களோட நிலமை என்னாவது என்னும் கோணத்தில் சீரிய சிந்தனையில் ஆழந்தார்.

புக் பண்ணியாச்சு ஒருவாரத்துக்குள்ள வந்துடும் என்று கூறினார் Mr.அறிவு .

இரண்டு நாட்கள் கழித்து, மாலைவேளையில் அறிவுகொழுந்துவின் நண்டுசிண்டு, ஊட்டுக்கார் என மூவரும் வெளியில் பேசிச்சிரித்தபடி இருந்தனர் .

அறிவுக்கொழுந்துவோ இரவு உணவு தயாரிக்கும் வேலையில் மிகவும் கவனமுடன் இருந்தார்.

என்ன இன்னிக்கு சிரிப்பு பலமா இருக்கு, தினமும் உள்ளங்கைய குருவி கொத்துறாப்பிலயே கொத்திட்டுல இருப்பாரு, என்ற ஐயமுடன்..

என்ன மூணு பேரும் கொள்,கொள்னு சிரிச்சிட்டு இருக்கீங்க என்று வினவினார்.

நண்டுவும்சிண்டுவும் அப்பா வாயை அடக்குவதிலே குறியாக இருந்தனர்.

அப்பா அப்பா பேசாம இருங்பா, என வேண்டுகோள் விடுத்துக்கொண்டிருந்தனர்.

அறிவுக்கொழுந்துவிற்கு ஏககடுப்பு ஏறப்பார்த்தது. அது என்ன நம்மை ஓரங்கட்டிட்டு, மூணு பேருக்கும் இரகசியம் வேண்டிக்கெடக்கு.

வரும் ஆபத்தை முன்கூட்டியே உணர்ந்த அறிவுகொழுந்துவின் கணவர்..

ஒண்ணுமில்ல அறிவு, போன் புக் பண்ணினமில்ல வந்துடுச்சு. மதியமே அலுவலக முகவரிக்கு வந்துடுச்சு.
சரி உன் பிறந்தநாள் அன்னிக்கு வியப்பூட்டும் பரிசா கொடுக்கலாமேனு திட்டம் போட்டோம்.
ஆனா நீதான் என்ன என்னனு துருவி துருவிக் கேட்டு இப்ப வியப்பில்லா பரிசா ஆக்கிட்டே என்று கூறினார்.

ஓ அப்படியா..

உள்ளூர சந்தோசம் எழுந்தாலும் வெளியில் காட்டினால் நல்ல மனைவிக்கு அழகா என்ன?

அப்படியே ரொம்ப மகிழ்ச்சி என்று கூறினால், அப்ப நான் போன் பயன்படுத்தும் போதெல்லாம் பழிச்சுக்கிட்டே இருந்தியல்லோ, என்று கணவர் கேட்டுவிட நேருமல்லவா, கண நேரத்தில் பல எண்ணங்கள் அடுக்கடுக்காய் எழவே, நோ ரியாக்‌ஷனுடன் இருந்தார் அறிவு.

என்ன அறிவு ஒண்ணும் பெரிசா ரியாக்‌ஷன காணாம். உனக்கு போன் வாங்கினதுல சந்தோசம் இல்லீயாக்கு..

போனை பற்றிய அனைத்து விவரங்களையும் எடுத்துக்கூறினார்.

இதில லேட்டஸ்ட் வெர்ஷன் கிட்கேட் 4.4.4 இருக்கு தெரியுமா..சூப்பர் மாடல்..நல்ல ஸ்பீட்..

அறிவுகொழுந்துவிற்கு இந்த வெர்ஷன் பற்றியெல்லாம் எப்பொழுதும் கவலை இருந்ததில்லை.

மைக்ரோ சிம் என்பதால் வாங்கிய உடனே இயக்கமுடியவில்லை.

அதனால என்ன இப்பத்திக்கு அதில என்னென்ன இருக்கிறது என்பதை ஆராய வேண்டும் என்னும் அவா மேலோங்கியது.

இருந்தும் சந்தோசத்தை வெளியில் காட்டாமல், கணவர் அலுவலகம் சென்ற உடன் எடுத்து எடுத்து பார்த்துக்கொண்டிருந்தார்.

வீட்டிலிருக்கும் பூக்களை படம் எடுப்பதிலேயே அரைநாள் செல்வானது.

மதிய உணவுக்கு கணவர் வரும் வேலையில் தலைவலியால் தயிர்சாதம் மட்டுமே செய்ய முடிந்ததாக கூறிக்கொண்டார்.

கேட்லாக் படிக்கவும், அதிலிருந்த தகவல்களை உத்து உத்து பார்ப்பதிலுமே முக்கால்வாசி நேரம் செலவானது.

கெரகம்புடுச்சவனுக, இந்த கேட்லாக கொஞ்சம் பெரிய எழுத்தில எழுதினா என்னவாம், என இடையிடையே செல்போன் கம்பெனிகாரரை வசைபாடிக்கொண்டே படித்தார்.

மாலையில் அவசர அவசரமாக குழந்தைகள் வரும்முன்பாக, சமையலை முடிக்க எண்ணி தீவிரமாக உழைக்க ஆரம்பித்தார்.

வீடு வந்து சேர்ந்த நண்டுவும்சிண்டுவும் அம்மாவின் போனை இயக்குவதில் நான் முந்தி நீ முந்தி என்ற போட்டியில் இருந்தனர்.
அவர்களுக்கு சிற்றுண்டியும், பூஸ்ட்டையும் கொடுத்துவிட்டு, படிக்க அறிவுறுத்திவிட்டு, போனை எடுத்து அமர்ந்து கொண்டார்.

கணவர் வரும் போது வந்ததைக்கூட கவனியாது போல, இரை எடுக்கும் குருவியாக பொட் பொட்டென போனை தட்டிக்கொண்டிருந்தார் அறிவு கொழுந்து.

இரவு வேளை உணவாவது நல்ல முறையில் இருக்குமா என்ற நப்பாசையில் வந்த கணவரிடம்..

ஏனுங் மாமா, உப்புமா செய்யுட்டுமா?

உப்புமாவா?? சரி அதையே பண்ணிடு...

சொல்லிவிட்டு திரும்பி பார்த்தால்..... அறிவு கொழுந்து மும்முரமாக போனில் லயித்து இருந்தார்.

அறிவு உப்புமானு ஏதோ சொன்னியே, அதை செய்துடுறியா, ரொம்ப பசிக்குது....

இருங் மாமா ஒரு நிமிசம், இந்த போன்ல உங்கு போன்ல இருக்கிறாப்பில இல்லியே, கால் பண்ணும் போது ரொம்ப வெசையா போகுது, லேசா விரல் பட்டாலே கால் போய்டுது...

Mr.அறிவுக்கோ பசியில் கோபம் கொப்பளிக்க ஆரம்பித்தது, அவனவன் பசியோட கத்திட்டு இருக்கான், கால் போச்சு கை போச்சுனு வேய்க்கானம் பேசிட்டு இருக்கியா..
இந்த போன தூக்கி எங்காச்சி போடணும் என செம கடுப்படித்தார்.

இத இதைத்தானுங் மாமா நானும் எதிர் பார்த்தேன், எனக்கும் இப்படித்தானே இருந்திருக்கும்.

நாலுநாளா தண்ணி வரல, என்னனு கூப்பிட்டு கேளுங்கனு கரடியா கத்திட்டு இருந்தனே, கொஞ்சமாச்சி நெனச்சிருப்பீங்களா?

பின்னாடி வாழையெல்லாம் மழைக்கு சாஞ்சு கெடக்கு, அதைய நாமளேவாச்சி எடுத்து போடணும், இல்லை ஆளையாச்சி கூப்பிடணும், ஒருவாரமா சொல்லிட்டு இருக்கேன் கேட்டீங்களா? வெளிய வேற அது ஊருது, இது ஊருதுனு பயமுறுத்துறாங்க, எங்காச்சி உள்ள வந்து அண்டிக்கிச்சுனா என்னாவறது...

இதெல்லாம் சொன்னதாச்சி உங்குளுக்கு நாபகம் வந்துச்சாங் மாமா..

அடுக்கிக்கொண்டே போன அறிவுக்கொழுந்தை ஒரு மார்க்கமாக பார்த்தார் கணவர்.

இப்ப அதுக்கெல்லாம் பழி வாங்குறியா என்ன?

ஏனுங் மாமா, இப்பிடி பொசுக்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிப்போட்டீங்க.

எங்களுக்கான நேரத்தை செல்போன் ஆக்கிரமிக்குதுனு கொஞ்சம் அங்கலாப்பா இருந்துச்சு, அதான் அப்படி சொன்னேன். இந்த செல்போனுக்கு இவ்வளவு முக்கியத்துவமானு ஒரு நெனப்பு ஓடுச்சு அதான் சொல்லிப்போட்டேன்.

Mr: அறிவுக்கு மிகவும் கஷ்டமாகிவிட்டது. இவ்வளவும் மனசில வெச்சுக்கிட்டு சிரிச்ச (?!) முகத்தோட நடமாடும் தெய்வத்தை இத்தனை நாளா நம்மை அறியாமலே புண்படுத்தி விட்டிருக்கிறோமே என்று.

இத்தனை எண்ணங்கள் ஊடுருவிச்சென்றாலும் இந்த உப்மாவை மட்டும் ஏனோ, ஏற்றுக்கொள்ள மனம் மறுத்தது.

அறிவு எதாவது தோசை மாதிரி செஞ்சுடேன். மாவு இருக்கா, இல்லேனா ரெடிமேட் மாவு வாங்கிட்டு வரட்டா, தேங்கா சட்னி போதும்... என்ற ரீதியிம் கணவர் பேசவே...

அறிவுகொழுந்துவிற்கு சிரிப்பு அடக்க முடியவில்லை, உப்மா வெகுவாக வேலை செய்கிறதே என எண்ணிக்கொண்டே, ஹாஹா என சிரித்தார்.

அதேனுங் மாமா உங்குளுக்கும் உப்புமாக்கு ஏழாம் பொருத்தம், உப்புமானா உடனே தெறிச்சு ஓடப்பார்க்கிறீங்க.

இன்னிக்கு ஆலு பராத்தாவும், எக்கிரேவியும் செய்திருக்கேன் எனக்கூறிக்கொண்டே பராத்தாவையும், எக்கிரேவியையும் பரிமாற ஆயத்தமானார்.

பின்குறிப்பு:

அதெப்படி வாசனையே இல்லாம சமைக்க முடிஞ்சுது, இதெப்படி இப்படி ஆச்சுதுனு அதெப்படி அப்படி ஆச்சுதுனு கேள்விலாம் கேட்காதீங்க, இத்தோட கதை முடிஞ்சுது, அறிவுகொழுந்து வுடு ஜூட் :))

மிகமுக்கிய பின்குறிப்பு:

இது முற்றிலும் கற்பனை கதை.

(சாரி கதைக்கும் கதாசிரியருக்கும் சம்பந்தம் இல்லேனு சொன்னா கதையே என்னோடது இல்லேனு ஆகிடும். அதுனால சிறு திருத்தம் செய்து. அவ்வரிகளை நீக்கிவிட்டேன். வாசகப்பெருமக்களே மன்னித்தருள்க)

5
Average: 4.8 (4 votes)

Comments

அருள் போன் மட்டுமல்ல‌. இந்த‌ இடத்தை லேப்டாப்பும் பிடிக்கின்றது.
இதில் உள்ள‌ நிறைய‌ சம்பவங்கள் எல்லோர் வீட்டிலும் நடப்பவையே.
ஆனாலும்,அறிவுக்கொழுந்து சமையலை கோட்டை விடாம‌ கனகச்சிதமா முடிச்சிட்டாங்களே.
கில்லாடி தான்

அன்பு அறிவுக்கொழுந்து சாரி சாரி அன்பு அருட்செல்வி,

செம்ம‌ ஹ்யூமர்!! சிரிச்சுகிட்டே படிச்சேன், படிச்சுகிட்டே சிரிச்சேன்.

உங்க‌ ஊரு பக்கம் நாங்க‌ வந்தா அந்த‌ ஆண்ட்ராய்டு ஃபோன்ல‌ என்னையும் ஒரு போட்டோ புடிங்க‌.

அன்புடன்

சீதாலஷ்மி

உண்மையில் நல்லா ரசிக்கும்படியா(ரசிச்சு சிரிச்சேன்) இருந்தது உங்க‌ அறிவுக்கொழுந்து கதை.

Mr.அறிவு மட்டும் இல்லை, எல்லார் வீட்டிலும் இருக்கிற‌ நண்டு,சிண்டெல்லாம்கூட‌ இப்படிதான் சுத்துறாங்க‌!

//கதைக்கும் கதாசிரியருக்கும் எந்த வித சம்பந்தமுமில்லை.
முற்றிலும் கற்பனை கதை// நம்பமுடியவில்லை * 10 (எக்கோ வாய்ஸ்)
:‍‍‍-)))))

இன்னொருவிஷயம் ,இந்த‌ கார்ல‌, பைக்ல‌ எல்லாம் தலைய‌ ஒருபக்கமா சாச்சுகிட்டே ஃபோன்ல‌ பேசிட்டு போறவங்களை மன்னிக்கவே முடியாது.அவர்கள் கஷ்டத்துக்கு உள்ளாகிறதோட‌ இல்லாம‌, அடுத்தவங்களையும் சேர்த்து பாதிக்குது இது.

நிகி //இந்த‌ இடத்தை லேப்டாப்பும் பிடிக்கின்றது// அப்படியா சொல்றீங்கோ, இருங்கோ அதுக்கும் ஒரு கதை எழுதிடுவோம் :))))

//ஆனாலும்,அறிவுக்கொழுந்து சமையலை கோட்டை விடாம‌ கனகச்சிதமா முடிச்சிட்டாங்களே.
கில்லாடி தான்// பேர்லயே அறிவு இருப்பதால இருக்கும்னு நினைக்கிறேன் நிகி, ஒரு வேளை கிச்சன் வாஸ்துபடி இருக்குதோ என்னவோ :))))

கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி தோழி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

//அன்பு அறிவுக்கொழுந்து சாரி சாரி அன்பு அருட்செல்வி,// வந்துட்டாங்கைய்யா, நாம பின்குறிப்புக்கு, பின்குறிப்லாம் போட்டு எழுதுனாலும் கண்டுபுடிச்சாப்பிலயே போட்டு வாங்குறது. நாங்களாம் அஜரமாட்டம்ல...

//உங்க‌ ஊரு பக்கம் நாங்க‌ வந்தா அந்த‌ ஆண்ட்ராய்டு ஃபோன்ல‌ என்னையும் ஒரு போட்டோ புடிங்க‌.// அவிய்ங்க எங்கிங்க எங்கூர்ல கெட்க்காக, அவிய்ங்க ஏதோ மேட்டுப்பட்டியோ, கோரிப்பாளையமோ என்னமோ சொல்லிட்டீல்ல இருந்தாய்ங்க... அவிய்ங்க போன்ல போட்டா புடிக்க எங்கிட்ட எதுக்குங் கேட்கிறீங் :))))

படிச்சிட்டு சிரிச்சதுக்கு ரொம்ப நன்றி சீதாமேடம் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அனு ...//கதைக்கும் கதாசிரியருக்கும் எந்த வித சம்பந்தமுமில்லை.
முற்றிலும் கற்பனை கதை// நம்பமுடியவில்லை * 10 (எக்கோ வாய்ஸ்)
:‍‍‍-)))))... இப்படிலாம் சொல்லி குண்டுபோடப்படாது :))

//Mr.அறிவு மட்டும் இல்லை, எல்லார் வீட்டிலும் இருக்கிற‌ நண்டு,சிண்டெல்லாம்கூட‌ இப்படிதான் சுத்துறாங்க‌!// சரியா சொன்னீங்க அனு.

///இன்னொருவிஷயம் ,இந்த‌ கார்ல‌, பைக்ல‌ எல்லாம் தலைய‌ ஒருபக்கமா சாச்சுகிட்டே ஃபோன்ல‌ பேசிட்டு போறவங்களை மன்னிக்கவே முடியாது.அவர்கள் கஷ்டத்துக்கு உள்ளாகிறதோட‌ இல்லாம‌, அடுத்தவங்களையும் சேர்த்து பாதிக்குது இது./// நல்லாவே சொன்னீங்க, நானும் நிறைய நோட் பண்ணி இருக்கேன். போன் பேசிட்டே போனா எங்கிருந்து சாலைவிதிகளை பின்பற்றமுடியும். :(

மிக்க நன்றி அனு :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

எல்லா வீட்டுலயும் அறிவுகொழுந்துக்கள் இருக்கிறாங்க. சூப்பரா சொன்னிங்கபா.

Be simple be sample

இரண்டு நாளா என் லேப்டாப் சர்வீஸுக்கு போயிட்டு... கதையை படிச்சும் பின்னூட்டம் தர‌ முடியாம‌ இருந்தேன். ஆக்ஷுவலா நானும் ட்ராவல் பண்ணும்போது மொபைலை அப்படி தான் பார்ப்பேன் ;) எங்க‌ வீட்டில் இது அப்படியே உல்டா. எனக்கும் மேலே சிரிச்சு சிரிச்சு படிச்சதா போஸ்ட் போட்ட‌ அம்மணிக்கும் 1 நாள் கம்பியூட்டர் உட்கார்ந்தா நாங்க‌ ஆளே சீக்காளியா போவோம். சரி அதை விடுங்க‌... இன்னைக்கு கடன் லேப்டாப், என்னவர் 2 நாளா என் முகத்தை பார்க்க‌ சகிக்காம‌ அவருடையதை கொடுத்திருக்கார். நல்ல உண்மைக்கதையை தந்த‌ உங்களுக்கு எங்க‌ பாராட்டுக்கள் அறிவு கொழுந்து.

ஊசி குறிப்பு: இதுல‌ எல்லாம் பிழை கண்டுபிடிக்க‌ அனுமதி இல்லைங்க‌.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹா, ஹா... நல்லா சிரிக்கிறாப்புல இருந்தது எழுத்துநடை. சூப்பர்..சூப்பர். கதையா இது, கருத்து சொல்ற பாடம். ஆனாலும் நம்ம அறிவு கொழுந்துக்கு எவ்வளவு அறிவு பாருங்களேன். \\இவ்வளவும் மனசில வெச்சுக்கிட்டு சிரிச்ச (?!) முகத்தோட நடமாடும் தெய்வத்தை இத்தனை நாளா நம்மை அறியாமலே புண்படுத்தி விட்டிருக்கிறோமே என்று.\\ Mr.அறிவு அவர்களின் அறிவு கண்ணையே திறந்து வச்சிருக்காங்க. ஆனாலும் என் நன்றி என்னவோ, தலைவலி தயிர்சாதம் மற்றும் ஏனுங் மாமா உப்புமாவுக்கு தான் போகுது.

உன்னை போல் பிறரை நேசி.

நகைச் சுவை மிக்க பதிவு, ரசித்துப் படித்தது. படிக்க படிக்க இனிமை அருள். இப்பல்லாம் உங்க பதிவுகளை நான் ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன்.

வீட்டுக்கு வீடு வாசல் படி தான். அதிலும் இந்த Whats app அப்படின்னு ஒன்னு இருக்கே, அப்பப்பா எத்தன Groups.நட்பு வட்டங்கள் என ஒன்று, கணவர்/மனைவி குடும்பம் ஒன்று, அம்மா வழி சொந்தங்கள், அப்பா வழி சொந்தங்கள் அப்படின்னு பட்டியல் நீண்டு கொண்டேயிருக்கு. வீட்ல காலையிலிருந்து இரவு படுக்கைக்கு செல்லும் வரை எல்லொருக்கும் பதில் சொல்வதற்க்கும், கமென்ட் போடுவதற்க்குள்ளும் போதுமென்றாகி விடுகிறது. தூரத்திலிருக்கும் உறவுகளுடன் ஒரு பிணைப்பு என ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவே இருப்பினும் மறு பக்கம் கணவன் மனைவி , குழந்தைகள் என உறவுகளுக்கான நேரத்தை திருடி விடுவது மைனஸ்தான்.
எங்க வீட்டு கதையே வேறுதாங்க. எனக்கென்று ஒரு ஐ பேட் பரிசளித்தார் என்னவர். ஆனால் உபயோகிப்பதென்னவோ அவர்தான், கேட்டால் நீயிருக்கிற பிஸியில உனக்கு எங்கம்மா இதற்க்கெல்லாம் நேரமிருக்கு என்று வேற பதில். கையில ஃபோன் இல்லேன்னா டாய்லெட் கூட வர மாட்டங்குதுன்னா பாருங்களேன். பாஸ் கோட் போட்டு வைச்சிட்டதால நண்டுக்கு தடா, ஆனாலும் ஒரு முறை பாஸ் கோடை கண்டு பிடித்து விட்டது நண்டு.நம்ம கையிலிருக்கும் மூன்றே மாத சிண்டு கூட அதையேத்தான் உற்று உற்றுப் பார்க்குது.
அப்புறம் ஒரு மேட்டர் உங்க வீட்ல Sorry "அறிவுகொழுந்து வீட்ல" இந்த உப்புமா மாதிரி எங்க இல்லத்தில் மதியம்னா புளிக் குழம்பு, டின்னர்க்கு கோதுமை தோசை இந்த இரண்டும் ஊடலின் வெளிப்பாடுகள் :-)

\\அதெப்படி வாசனையே இல்லாம சமைக்க முடிஞ்சுது// - சமைச்சிருக்காங்களே நம்ம அறிவு கொழுந்து
அங்க தான் கதா நாயகியோட அறிவு கொழுந்து விட்டு எறிகிறது :)))

ரொம்ப‌ நல்லா இருந்ததுங்க‌.
இப்படி ஒரு நாள் உப்புமால‌ எல்லாரும் திருந்திட்டா எவ்வளவு நல்லா இருக்கும் :)

நகைச் சுவை மிக்க நல்ல‌ பதிவு.

உங்கள் பதிவு நகைச்சுவையென்றால், அதன் பின்னூட்டங்களும் படிக்க‌ சுவாரசியமாக‌ இருக்கிறது. எப்பொழுதும் உங்கள் பதிவை படித்தால் மனம் இலேசாகிவிடுகிறது.

அன்புடன்
ஜெயா

ரேவ்ஸ் சாரிப்பா, ரொம்பநாள் எடுத்து பதிலளிக்கிறதுக்கு. அறிவு கொழுந்து இல்லாத வீடு உண்டா என்ன? :)) ரொம்ப நன்றிப்பா :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வனி, //ஆக்ஷுவலா நானும் ட்ராவல் பண்ணும்போது மொபைலை அப்படி தான் பார்ப்பேன் ;) // நானும் இப்படித்தான் பார்ப்பேன் :)
என்னவர் போனை வைத்தாலே, அடுத்த நிமிடம் நான் எடுத்துடுவேன். இன்னும் எங்கூட்டுல மஞ்சப்பை (ஒய்ஃபை) வாங்கல வனி:))

//நல்ல உண்மைக்கதையை தந்த‌ உங்களுக்கு எங்க‌ பாராட்டுக்கள் அறிவு கொழுந்து. // ஒரு கதை எழுதினா, கதைய படிச்சமா சிரிச்சமானு இருக்கணும். கதாசிரியரையே(!!??), கதாபாத்திரமா சித்தரிக்கிறது...கலாய்க்கிறது, இதெல்லாம் ஆவாது ஆமா.. நானெல்லாம் ரொம்ப ரொம்ப நல்ல புள்ளையாக்கும் :))

//ஊசி குறிப்பு: இதுல‌ எல்லாம் பிழை கண்டுபிடிக்க‌ அனுமதி இல்லைங்க‌.// அழுவாச்சி வருத்து.....

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

//இது முற்றிலும் கற்பனை கதை.// ;)) நம்பிட்டேன். :-)

‍- இமா க்றிஸ்

க்றிஸ்மஸ் சிஸ், எங்கப்பா போனீங்க, உங்களோட கதை படிச்சு சிரிச்சு சிரிச்சு கண்ல தண்ணியே வந்துடுச்சு .(சோறும் சோறு சார்ந்த இடமும்) நீங்களே பாராட்டும் போது ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கு :)
//Mr.அறிவு அவர்களின் அறிவு கண்ணையே திறந்து வச்சிருக்காங்க. ஆனாலும் என் நன்றி என்னவோ, தலைவலி தயிர்சாதம் மற்றும் ஏனுங் மாமா உப்புமாவுக்கு தான் போகுது.// ஹாஹா......நல்லாச்சொன்னீங்க போங்க :))

ரொம்ப நன்றிங்க :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வாணி, நன்றி! நன்றி!
உங்களைத்தான் பார்த்து நாளாச்சு.. குட்டி விடுறதில்லையா.. அவங்ககூட நேரம் சரியா இருக்கும்னு நினைக்கிறேன் :)

நிறைய நேரங்களை இந்த எலக்ட்ரானிக் பொருட்கள் திருடுவது என்பது உண்மையே, ஆனா என்ன தெரிஞ்சே திருடு கொடுக்கிறோம். முதல்ல எல்லாம், மாலை நேரம் ஷட்டில் கார்க் விளையாடுவது ஒரு பெரும் பொழுது போக்கா இருக்கும். இப்பலாம் இதற்கான நேரமே இல்லை. அதுவும் வார இறுதிகள் பொருட்கள் வாங்க செல்வது, பிறகு வந்தா டிவினு ஓடிடுது.

//ஒரு முறை பாஸ் கோடை கண்டு பிடித்து விட்டது நண்டு.நம்ம கையிலிருக்கும் மூன்றே மாத சிண்டு கூட அதையேத்தான் உற்று உற்றுப் பார்க்குது.// ஹாஹா..... கிட்டத்திலிருந்து பார்ப்பது போன்ற ஒரு உணர்வு :))

//அப்புறம் ஒரு மேட்டர் உங்க வீட்ல Sorry "அறிவுகொழுந்து வீட்ல" இந்த உப்புமா மாதிரி எங்க இல்லத்தில் மதியம்னா புளிக் குழம்பு, டின்னர்க்கு கோதுமை தோசை இந்த இரண்டும் ஊடலின் வெளிப்பாடுகள் :-)// இதெல்லாம் இல்லேனா, வாழ்க்கை ருசிக்காது, இல்லீங்களா? வாணி :)))

//அங்க தான் கதா நாயகியோட அறிவு கொழுந்து விட்டு எறிகிறது :))// நிஜமாவே இதைப்படிச்சு, ரொம்பவே சிரிச்சேன்ப்பா, டைமிங்கா அடிச்சூடுறீங்க பாருங்க, அங்கதான் நீங்க நிக்கிறீங்க. :))

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மிக்க நன்றி விஜி :)
//இப்படி ஒரு நாள் உப்புமால‌ எல்லாரும் திருந்திட்டா எவ்வளவு நல்லா இருக்கும் :)// ஏங்க இதெல்லாம் ஒருநாள்ல நடக்கிற விசயம்னு சொல்லி இருக்கனா? அப்படி ஒரு நாள்ல எல்லாம் நல்லது நடந்துடாது :))

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஜெயா எப்படி இருக்கீங்க, நலமா:)
ரொம்ப ரொம்ப நன்றி, நீங்க சொல்லி இருக்கும் வார்த்தைகள் ரொம்பவே உற்சாகமூட்டுது, நன்றி தோழி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

இமா,//;)) நம்பிட்டேன். :-)// நீங்கள் நம்பியதை நானும் நம்பிட்டேன் :)))
மிகவும் நன்றி தோழி:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

தலைப்பை பார்த்ததுமே புரிஞ்சிடுச்சே கண்டிப்பா இது உங்களோடதுதான்னு
எங்க அறிவுகொழுந்துக்குதான் எம்புட்டு அறிவு ;)
ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க அருள் சூப்பர்ர்ர்ர்ர் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

தலைப்பை பார்த்த உடனே புரிஞ்சிடுச்சா? இருங்க அடுத்த முறை புரியாத மாதிரி தலைப்பு வெக்கிறேன் :))) மிக்க நன்றி சுவா :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.