உறவுகளைக் காப்போம்

வாழ்க்கையில் நாம எதை வேணும்னாலும் மிஸ் பண்ணலாம், பிரச்னையில்லை, அதுக்கு ஒரு ஆல்டர்னேடிவ் இருக்கும்.

நல்ல வேலையில் சேராம, வந்த சான்ஸ் போயிடுச்சா, ஓ.கே. நினைச்ச அளவு பணம் சம்பாதிக்க முடியலையா, எப்படியும் இருப்பதை வைத்து வாழ்ந்துகிட்டுதானே இருக்கோம், ரைட்.

ஹெல்த் பிரச்னையா, மாத்திரை, மருந்து, ஆஸ்பத்திரின்னு பொழுது போய்கிட்டுதான் இருக்கு.

ஆனா, ஒன்ஸ் பிள்ளைகளோட அன்பை இழந்துட்டால், பின்னால மன வேதனை நமக்கு மட்டும் இல்ல, அவங்களுக்கும்தான்.

பெரியவங்க ரொம்ப சுலபமாக பிள்ளைகளை குறை சொல்லி, எல்லோருடைய அனுதாபத்தையும் பெற்றுக் கொள்ள முடியும். ஆனா பிள்ளைங்களுக்கு ஏற்படுகிற கில்டி ஃபீலிங் - அவங்க எதிர்காலத்தை, பிள்ளைகளோட பிள்ளைகளின் முன்னேற்றத்தை, தொடர்ந்து பாதிச்சுகிட்டேதான் இருக்கும்.

பிள்ளைகளை, நான் உனக்கு என்னெல்லாம் செய்தேன், நீ இப்படி இருக்கியே என்றெல்லாம் எமோஷனல் பிளாக்மெயில் செய்து, நம்ம கூடவே இருக்க வைத்து, நம் சொல்படி கேட்க வைத்து, நாம சாதிக்கப் போவது என்ன? எலாஸ்டிக் கயிறை ரொம்பவும் இழுத்தால், அது பட்டுனு அறுந்து போகிற மாதிரி, ஒரு லெவலுக்கு மேலே, அவங்க மனசில கொஞ்ச நஞ்சம் நம்ம மேலே இருக்கிற பிரியமும் போயிடும்.

கடைசி காலம் என்று ஒன்று வரும்போது, மகனும் மருமகளும்தான் நம்மைப் பார்க்கணும். வாழ்க்கை பூராவும் நல்லவங்களா இருந்த எத்தனையோ பெரியவங்க, நோயின் கொடுமையில் மிகப் பெரிய பிரச்னையாக மாறிப் போனவங்க இருக்காங்க. ஆரம்பத்திலிருந்து சவடால் பேர்வழியாக, சண்டி ராணியாக இருந்தவங்க, நோய்ப்படுக்கையில் விழுந்ததால், எனக்கா இப்படிங்கற அதிர்ச்சியில் வாய் மூடி, மௌனியானவங்களும் இருந்திருக்காங்க. ஆனால் அவங்களைப் பார்த்துக் கொள்கிற பொறுப்பில் இருக்கும் பிள்ளைகளின் சிரமத்தை யாருமே கண்டுக்கப் போறதில்லை. ஒரே வார்த்தையில் சொல்லிடுவோம், இது உன்னுடைய கடமை, அப்படின்னு, அது நிஜம்தான்.
ஆனா, பிராக்டிகலாக பார்த்தோம்னா, பெரியவங்களுக்குன்னு ஸ்பெஷல் அட்டென்ஷன் கொடுக்க வேண்டிய நேரத்திலதான், பிள்ளைகளும் மத்திய வயதில், அல்லது ரிடையர்மெண்ட் ஸ்டேஜில் இருப்பாங்க, தன்னுடைய பிள்ளைகள், பெண்ணுக்கு, வேலை, கல்யாணம்னு இரண்டு பக்கமும் அவங்களுக்கு நெருக்கடிதான்.

சரி, நல்லபடியாக பெரியவங்களை கரையேற்றியாச்சுன்னு மன நிம்மதி கிடைக்குமான்னா அதுதான் இல்லை. பெரும்பாலும் மனைவி, பிள்ளைகள், உறவினர்களிடமிருந்து விமரிசனமும் சலிப்பும் வெறுப்பும்தான் கிடைக்கிறது.
அப்படிப்பட்ட நம்முடைய இறுதிக்காலத்தில் நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு கொடுக்கப் போகிற சிரமத்தை நினைச்சுப் பார்த்து, இப்ப அவங்களை கொஞ்சம் சுதந்திரமாக இருக்க விடலாமே.

இன்னிக்கு தேதியில ஆண்களுக்கு ஆஃபிஸில் தினமுமே டென்ஷன்தான், போராட்டம்தான். டாப் பொசிஷனில் இருந்தாலும், தினமும் சீட்டுக்கு அடில யாரும் வேட்டு வைக்கலியேன்னு செக் பண்ணிட்டே இருக்க வேண்டியிருக்கு. மிட் லெவல்னா, அடுத்த லெவலுக்கு முன்னேற, சிறப்பாக பெர்ஃபார்ம் பண்ணனும், காலேஜில் படித்தது போதும்னு இருக்க முடியாதே, ஸ்கில்ஸ், லேட்டஸ்ட் டெக்னாலஜி எல்லாம் அப்டேட் பண்ணிட்டே இருக்கணும், ஆஃபிஸ் பாலிடிக்ஸ் சமாளிக்கணும்(இதான் ரொம்ப ரொம்ப முக்கியம்). முன்பு மாதிரி, படிச்ச்சாச்சு, வேலை கிடைத்து விட்டது, இதுதான் என்னுடைய சீட் வொர்க், வருஷத்துக்கு இன்கிரிமெண்ட், அப்பப்போ பிரமோஷன், இப்படி சிம்பிள் STRUCTURED CAREER PATH கிடையாது இப்போ. வீட்டு அட்மாஸ்ஃபியர் நிம்மதியாக இருந்தால் முன்னேற்றத்துக்கு அது மிகப் பெரிய உதவி. மருமகள் வேலை பார்க்கிறவராக இருந்தால் அவருக்கும் இதே கதைதான்.

இந்த மாதிரி ஒரு அட்மாஸ்ஃபியரில் கணவன், மனைவி இரண்டு பேரும் ஒன்றாக செலவு செய்யக்கூடிய நேரமே ரொம்பக் குறைவு. ஒருத்தர்கிட்ட இன்னொருத்தர் பேசுவதே கம்மியாகுது. இதில் நாமும் ஏன் நடுவில் இருந்து தொந்தரவு கொடுக்கணும்?

நாங்க என்ன நந்தி மாதிரி நடுவிலா உட்கார்ந்திருக்கோம், அவங்க பாட்டுக்கு அவங்க இருக்காங்க, நாங்க பாட்டுக்கு நாங்க இருக்கோம்னு சொல்வதாக இருந்தால், அதை, தனிக் குடித்தனமாகவே இருக்கலாம்தானே.

ஒரு பக்கம் பெரியவங்க, சின்னவங்க எல்லோருமே விட்டுக் கொடுத்து, பொறுமையாக இருந்து கொண்டு, சகித்துக் கொண்டு, இப்படி ஒரே வீட்டில் இருப்போம், அல்லது நீ யாரோ நான் யாரோ, அம்மா அப்பாவை முதியோர் இல்லத்தில் விடுவது அல்லது முகத்தில் கூட முழிக்க மாட்டோம் அப்படின்னு இரண்டு எக்ஸ்ட்ரீம் ஆக இருக்கறதை விட, பட்டும் படாமலும் தனிக் குடித்தனமாகவே இருக்கலாமே.

எனக்கு என்ன தோணுதுன்னா, உள்ளூரில் தனியாக இருக்கறவங்க, பெரியவங்களுக்கு ஒரு சலுகை கொடுங்க. ரொம்பத் தள்ளி இல்லாமல், கொஞ்சம் பக்கத்தில், குடியிருந்தாங்கன்னா நல்லது. ஏன்னா, பெரியவங்களுக்கு இருக்கற பெரிய பிரச்னை, தனிமைதான். அதோட பேரப்பிள்ளைகளை பார்க்கணும்ங்கற பாசம் அவங்களுக்கு ரொம்ப முக்கியம். அப்பாவுக்கு லேசாக வேர்க்குது, இடது தோளில் வலிக்குது, அப்படின்னா அம்மாவுக்கு பயத்தில் உடனே பையனைத்தான் கூப்பிடத் தோணும். அம்மாவுக்கு லைட்டாக தலை சுற்றுது, படபடப்பாக இருக்குன்னா அவ்வளவுதான், அப்பா மாதிரி ஒரு பயந்தாங்கொள்ளியை பார்க்க முடியாது.

கூப்பிடு தூரத்தில் பிள்ளைகள் இருக்காங்கன்னா அது ஒரு தைரியம்தான். பெரியவங்களும் பிள்ளைகளுக்கு, வேலைக்குப் போகும் மருமகளுக்கு, தங்களால் முடிந்த உதவியை செய்யலாம்.

இங்கே அம்மா வீட்டுக்குப் போறதைப் பற்றின பதிவுகள் படிச்சேன். அம்மா வீட்டுக்குப் போவது மட்டும் இல்லை, தீபாவளிக்குப் பட்டுப்புடவை எடுக்கறது, ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்குப் போறது, மேல படிக்கறது, வேலைக்குப் போவது, முக்கியமாக பேரக் குழந்தைகள் படிப்பு விஷயத்தில், டிரஸ் விஷயத்தில் தலையிடுவது இதெல்லாம் நடக்கத்தான் செய்கிறது.

இந்த மாதிரி விஷயங்களில் நீங்க உங்களுக்கு சரின்னு படுவதை செய்யுங்க. அதே சமயம், மாமனார் மாமியாருக்கு, இதை நான் செய்வது, என்னுடைய மனத்திருப்திக்கு, மற்றபடி உங்க பேச்சு கேட்கக் கூடாதுங்கற எண்ணத்தில் இல்லை, நான் உங்ககிட்ட வைத்திருக்கும் அன்பும் மரியாதையும் குறையாது, அது வேற இது வேற, அப்படிங்கறதை அவங்களுக்கு புரிய வைங்க. எப்படின்னு கேக்கறீங்களா?...

அம்மா வீட்டுக்குப் போகணும்னு சொல்றீங்க, அவங்க வேணாம்னு சொல்றாங்க, ஆனா, நீங்க டிக்கட் எடுத்தாச்சு, என்ன ஆகும்?

அவங்க முகத்தை உம்முன்னு வச்சுகிட்டு, ஜாடை பேசிட்டு இருக்காங்க. அல்லது நேரடியாகவே என்னை மதிக்கறதில்லைன்னு திட்றாங்க.

நீங்க எப்படி ரியாக்ட் செய்வீங்க?

ஏற்கனவே உங்களுக்கு அவங்க பெர்மிஷன் குடுக்கலைன்னு டென்ஷன். இப்போ அவங்க பேசினதும், கணவர்கிட்ட முகத்தைக் காமிச்சுட்டு, பல்லைக் கடிச்சுகிட்டு ... ரூமுக்குள்ள கட்டில்ல தொப்புன்னு விழுந்து அழறது, புலம்பறது, பிஸ்கட் கேக்கற குழந்தை முதுகில ரெண்டு அடி... இதெல்லாமா.

அமைதியாக இருங்க. அவங்க முகம் கொடுத்து பேசலைன்னாலும் நீங்க தொடர்ந்து பேசுங்க. அவங்களுக்கு பிடிச்சதை சமைச்சு வைங்க. அவங்க கேக்கலைன்னாலும், ஊருக்குப் போனதும் உங்களுக்கு ஃபோன் செய்யறேன்னு சொல்லுங்க.

பெரியவங்களை அவங்களோட குறைகளோட அக்ஸெப்ட் பண்ணிக்குங்க.
எவ்வளவோ செய்துட்டீங்க, இது செய்ய மாட்டீங்களா!!!

டைம் கிடைக்கிறதைப் பொறுத்து, அடுத்த பதிவு போட முயற்சி செய்கிறேன்.

டிஸ்கி: ப்ளாக் எல்லாம் படிக்கறப்ப‌, மீள்பதிவு அப்படின்னு ஒரு வார்த்தை படிச்சிருக்கேன்.

அதாவது என்னன்னா, புதுசா எதுவும் தோணலைன்னா, பழைய‌ பதிவையே மீண்டும் திருப்பிப் போடறது:)

"ரீப்ளே" அப்படின்னும் சொல்லலாம்.

முன்பெல்லாம் ஒவ்வொரு இழையிலும் மாங்கு மாங்குன்னு டைப் செய்த‌ நாட்கள் நினைவுக்கு வருது.

அதுவும் ஒரு பொற்காலம், ஹூம்!!

பொன்னாள் அது போலே வருமா இனிமேலே!!!

இந்தப் பதிவை நான் எழுதிய‌ இழையின் லிங்க் இங்கே.

http://www.arusuvai.com/tamil/node/2980?page=3

5
Average: 4.7 (7 votes)

Comments

சமீபத்தில் ஒரு மீட்டிங் ல‌ பேமிலி கெட்டுகெதர் என்னும் தலைப்பில் பேச‌ நேர்ந்தது.
ஒரு சம்பவத்தை குறிப்பிட்டு பேசினேன்.
ஒரு அண்ணன், தங்கை அவன் வெளினாட்டில் ரொம்ப‌ வசதியாயும், தங்கை இங்கே சென்னையில் சுமாராகவும் வாழ்கிறார்கள். பல‌ வருடத்துக்கு பின் குடும்பமாக‌ சென்னை வரும் அண்ணன் தங்கை வீட்டில் தங்காமல் ஹோட்டலில் ரூம் எடுத்து தங்குகின்றான். தற்செயலாக‌ கடைவீதியில் தன் அண்ணனைப் பார்த்த‌ தங்கை அவன் தன் வீட்டுக்கு வராதது குறித்து வருந்துகிறாள்.
தங்கையின் வீட்டில் வசதி குறைவு, ஏசி இல்லை தன் குடும்பத்தினருக்கு அது சரிவராது என்பதை காரணமாக‌ அவன் கூறுகின்றான். ஒரு நாள் மாலையில் சற்று நேரம் வருவதாக‌ கூறுகின்றான்.
சின்னஞ்சிறு வயதில் ஒன்றாக‌ வளர்ந்த‌தை அப்போது இருந்த‌ பாசத்தை எண்ணி தங்கை மனம் வாடுகிறாள்.
இன்றைய‌ சூழல் இது தான்.
பேசி முடித்த‌ பின் நான் என்னையே சுய‌ பரிசோதனை செய்து கொண்டேன்.
எங்கள் வீட்டில் உறவினர்களுடன் ஒரு பேமிலி கெட்டுகெதர் போட‌ ஏற்பாடு செய்தேன்.
ஒரு காலகட்டத்தில் உறவுகளுக்காக‌ மனம் ஏங்குகிறது.
இன்னொரு சம்பவத்தையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் சீதா
எனக்குத் திருமணமான‌ புதிதில் என் மாமியார் பகலில் தூங்கக் கூடாது என்று என்னிடம் கூறியிருந்தார்.
நான் தூங்கி விட்டேன்.
மாமியாரும் என் கணவரிடம் சொல்லப் போவதாக‌ கூறினர்.
அன்று என் கணவர் வந்ததும் நான் அவரிடம், " அம்மா சொன்னதை மீறி நான் தூங்கி விட்டேன். இப்போது சாப்பிடும் போது உங்களிடம் கூறுவார்கள். நீங்களும் என்னை சத்தம் போடுங்கள். நானும் இனி தூங்க‌ மாட்டேன்" என்றேன். நான் அவ்வாறு கூறக் காரணம் என் கணவர் அம்மா செல்லம்.எனவே, என்னால் அம்மாவுக்கும், பிள்ளைக்கும் இடையே எந்த‌ மனக்கசப்பும் வரக்கூடாது என்பதில் நான் உறுதியாக‌ இருந்தது தான்.
அப்படியே என் கணவரும் திட்ட‌ நானும் லேசா தலைவலி அதனால் தூங்கிவிட்டேன். இனி தூங்க‌ மாட்டேன் என்று கூறினேன்.
உடனே என் மாமியார் மனம் சமாதானமாக‌ "தலைவலின்னா தூங்கலாம்மா.பகலில் தூங்குவது வீட்டுக்கு ஆகாது. அதனால் சொன்னேன். மற்றபடி தலைவலின்னா தூங்கக் கூடாதுன்னு சொல்லமாட்டேன்" என்றார்.
அதன்பின் நானும் என் ,மாமியாரும் ஒற்றுமையாக‌ ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டவராக‌ கூட்டுக் குடும்பமாக‌ இருந்தோம்.
.

அன்பு நிகிலா,

பெரியப்பா, சித்தப்பா, அத்தை, மாமா போன்ற‌ உறவுச் சொற்கள் எல்லாம் ஆன்ட்டி, அங்கிள் என்ற‌ இரண்டு பொது வார்த்தைகளுக்குள் அடங்கி விடும் போலிருக்கிறது.

ஒருவருக்கொருவர் கம்பேர் செய்துக்காம‌ இருந்தாலே எல்லா மனக் கசப்புகளையும் தவிர்த்து விடலாம்னு நினைக்கிறேன்.

சம்பந்தப்பட்ட‌ சகோதர‌ சகோதரிகள் மட்டுமல்லாமல், சுற்றியிருக்கும் உறவினர்களையும் சமாளிக்க‌ வேண்டியிருக்கே.

உறவுச் சிக்கல்களை சமாளிப்பதுதான் இன்றைய‌ உலகின் மிகப் பெரிய‌ டாஸ்க்.

ஒண்ணு மட்டும் உறுதியாத் தெரியுது. எல்லோருக்கும் எல்லா சொந்த‌ பந்தமும் வேண்டியிருக்கு.

பூனைக்கு யார் மணி கட்டுவது என்கிற‌ மாதிரி, தயக்கம் எல்லாப் பக்கமும் இருக்கு.

உதிரிப் பூக்களை எடுத்துத் தொடுத்து, மாலையாக்கும் கலையைத் தெரிந்த‌ மனசுக்காரர்களை எதிர்பார்த்து, எல்லோரும் காத்திருக்காங்க‌.

மாமியாருடன் ஏற்பட்ட‌ சின்ன‌ மாறுதலைக் கூட‌, மிக‌ அழகாக‌ ஹேண்டில் செய்திருக்கீங்க‌. இந்த‌ மாதிரி அனுபவங்களை எடுத்துச் சொல்லுங்க‌, கண்டிப்பாக‌ எல்லோருடைய‌ மனசிலும் பதியும். நல்லதே நடக்கும்.

சுய‌ பரிசோதனை - நானும் செய்கிறேன், ஆனா, 'வாட் நெக்ஸ்ட்? என்ன‌ செய்வது, எப்படி செய்வது? அதுதான் புரியலை.

காலம் எல்லாவற்றையும் சரி செய்யும். நம்புவோம்.

அன்புடன்

சீதாலஷ்மி

//முன்பெல்லாம் எல்லார் வீட்டுலயும் கன்னாபின்னான்னு சண்டை சச்சரவு வரத்தான் செய்யும். ஆனா, அப்புறம் திரும்ப எல்லோரும் அப்படி ஒண்ணு நடக்கவே இல்லங்கற மாதிரி, எல்லா நல்லது கெட்டதுலயும் விட்டுக் கொடுக்காம பழகிட்டுதான் இருப்பாங்க. இப்ப எல்லாமே உடனே, பேச்சு வார்த்தையே இல்லாம போயிடுது//
இது லின்க் ல‌ இருந்த வாசகம் சீதா. உண்மை.

இதைப் பெரியவங்க‌ தான் எடுத்துச் சொல்லி சரி பண்ணனும். உறவுகள் வேணும்னு நினைக்கணும். இன்னிக்கு நமக்கு வேண்டாமென்று தோன்றினாலும் நளைக்கு நம் குழந்தைகட்கு அந்த‌ உறவுகள் வேணும்.

//ஒருவருக்கொருவர் கம்பேர் செய்துக்காம‌ இருந்தாலே எல்லா மனக் கசப்புகளையும் தவிர்த்து விடலாம்னு நினைக்கிறேன்//
அது மட்டுமன்று சீதா .உறவுகளிடமிருந்து எதிர்பார்ப்புகளையும் குறைத்துக் கொள்ளலாம் .எதிர்பார்த்து அது கிடைக்காத‌ போது மனக்கசப்பு வருகிறது.

மனம் விட்டு பேசுவதால் விரிசலை சரி செய்யலாம். ஆனால்,இருதரப்பும் அதற்கு தயாராக‌ வேண்டும். ம் ....காலம் சரிசெய்யும். நம்புவோம். காத்திருப்போம்.

நானும் ஒரு லின்க் தரேன். இதிலே தோழி ரம்யா கார்த்திக் அருமையாக‌ எழுதிருப்பார்கள்.
http://www.arusuvai.com/tamil/node/22684

படிச்சிட்டேன். கட்டுரை சூப்பர். திரும்பப் படித்துக் கருத்துச் சொல்ல ஈவ்னிங் வரேன்.

‍- இமா க்றிஸ்

ஹாய்,

ந‌ல்ல‌ பயனுள்ள‌, அர்த்தமுள்ள‌ பதிவு. பெண்,மகளாக‌, சகோதரியாக‌ விட்டுகொடுத்து வாழமுடியா விட்டாலும் பரவாயில்லை.[இங்கு அம்மா விட்டுக்கொடுத்து சரி செய்துவிடுவார்கள்]. ஆனால் மருமகள், மாமியார் பதவியில் விட்டுக்கொடுத்து வாழ்ந்தோம் என்றால் அந்த‌ குடும்பம் அன்பின் சொர்க்க‌ பூமியாக‌ இருக்கும். அன்பால் சாதித்து காட்டு. எப்படியும் கணவர் தன் அம்மாவுக்கு செலவு செய்வார்தான். நாம் தடுத்தால் நமக்கு தெரியாமல் செய்துவிடுவார். ஏன் நாமே அந்த‌ செலவை கணவருடன் சேர்ந்து செய்தால் நமக்கும் ந்ல்ல‌ பெயர் கிடைக்கும் தானே.

//ஒரு தாய் நாலு பிள்ளைகளை வளர்கிறாள், ஆனால் நாலு பிள்ளைகள் சேர்ந்து ஒரு தாயை காப்பாற்றுவதில்லை//என்பார்கள். அங்கு பெற்றோர் புரிந்துக்கொள்ள‌ வேண்டும். நம்மையும் பாதுகாத்து , தன் குடும்பத்தையும் கவனிக்கும் நிலையில் பிள்ளை உள்ளான் என்பதை புரிந்துக்கொள்ள‌ வேண்டும். முதியோர் இல்லம் என்பதை இழிவாக‌ பார்க்கக்கூடாது. அதுவும் ஓர் புதிய‌ அனுபவமாக‌ ஒத்துக்கொள்ளும் மனம் நமக்கு இருக்க‌ வேண்டும். எல்லா பிரச்சனைக்கும் காரணம் சகிப்பு தன்மை இல்லாமை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாமையே.இதை புரிந்து வாழ்ந்தாலே போதும். குடும்பமும் நன்றாக‌ இருக்கும், உறவுகளும் உரிமையுடன் பழகும்.

ரஜினிபாய்

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

உறவுகளைப் பற்றி அழகா சொல்லி இருக்கீங்க.

எல்லா புகழும் இறைவனுக்கே

இந்த காலத்திற்கு அனைவருக்கும் வேண்டிய பதிவு,

அன்பு நிகிலா,

ரம்யா கார்த்திக்கின் கருத்துக்கள் ரொம்ப‌ நல்லா இருந்தது.

ஆனா ஒரு விஷயம் எனக்கு என்ன‌ தோணுதுன்னா, ரம்யாவைப் போன்ற‌ இளைய‌ தலைமுறையினர் இதைச் சொல்லும்போது, அதே ஏஜ் க்ரூப்பில் இருப்பவங்க‌ சகஜமாக‌ எடுத்துக்குவாங்க‌. அதே, யாராவது பெரியவங்க‌ சொன்னா, இதெல்லாம் இந்தக் காலத்துக்கு சரிப்படாதுன்னு சொல்வாங்கன்னு நினைக்கிறேன்:)

உண்மையில் எனக்கே இந்தப் பதிவைப் படிச்சப்ப‌,(நான் எழுதினதாக‌ இருந்தாலும் கூட‌) தேவையான‌ விஷயமாக‌ இருந்தது.

எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தைக் குறைக்கும் என்பது நிஜம்தான். நடைமுறையில் கடைபிடிக்க‌ சிரமமாக‌ இருக்கு. பழகணும்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு இமா,

பிடிச்சிருந்ததா, நேரம் இருக்கும்போது வாங்க‌. வெயிட் பண்றேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு ரஜினி மேடம்,

விட்டுக் கொடுத்து வாழ்வதின் சிறப்பை அருமையாக‌ சொல்லியிருக்கீங்க‌. எல்லோரும் தெரிந்து கொள்ள‌ வேண்டிய‌, கடைப் பிடிக்க‌ வேண்டிய‌ அருமையான‌ விஷயங்களைத் தந்திருக்கீங்க‌. மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு ரேமு, அன்பு இந்திரா,

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்கள் ஒவ்வொன்றும் அருமைங்க.
மீள்வாசிப்புக்கு ஏற்ற பதிவு. :-) ரொம்ப நன்றிங்க

நட்புடன்
குணா

சீதாமேடம்,
//ஒன்ஸ் பிள்ளைகளோட அன்பை இழந்துட்டால், பின்னால மன வேதனை நமக்கு மட்டும் இல்ல, அவங்களுக்கும்தான்.// மிகவும் ஆழமான, உண்மையான வரிகள்.
நிறைய விசயங்களை உணர்த்தி செல்கிறது உங்களோட வரிகள்.

//டைம் கிடைக்கிறதைப் பொறுத்து, அடுத்த பதிவு போட முயற்சி செய்கிறேன்.// எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறோம்.
நல்ல பதிவுக்கு மிக்க நன்றி சீதாமேடம் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஒரு மாசம் கழிச்சுத்தான் எனக்கு ஈவ்னிங் வந்திருக்கு சீதா. :-)

அருமையான கருத்துகள். அட்வைஸ் போல இல்லாம அழகா எழுதி இருக்கிறீங்க. நிச்சயம் சின்னவர்களுக்குப் பயன்படும். பழைய த்ரெட் படித்தேன். அங்கு இருந்தாலும் நீங்கள் இப்படி மீள் இடுகையாகப் பதிவிட்டது நல்லது.

‍- இமா க்றிஸ்