சோன்பப்டி

நான் சிறு வயதில் அன்பான ஒரு இஸ்லாமியர் வீட்டில் இந்த சோன்பப்டி என்ற இனிப்பின் செய்முறையை பார்த்த சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால் உங்களுக்கு சரியான இந்த இனிப்பின் செய்முறை குறிப்பை தரமுடியவில்லை. ஆனால் அதன் செய்முறையை மட்டும் கூறுகின்றேன்.
என்னென்ன பொருட்களை சேர்த்தார்கள் என்று நினைவில்லை. குழம்பாக ஏதோ சூடான ஒரு கலவையை ஒரு பெரிய அதாவது மிகவும் பெரிய அலுமினிய தட்டில் ஊற்றினார்கள். பிறகு அதை ஒரு சிறிய உருட்டு கட்டைகளை பிடித்துக் கொண்டு நான்கு மூலையிலிருந்து பிடித்து இழூத்தார்கள். அப்பொழுது அந்த சர்க்கரை கலவையானது சவ்வு மிட்டாய் போல் விரிந்து பிடியை விட்டவுடன் மீண்டும் சுருங்கும். அதை பார்க்க வெள்ளை நிறத்தில் பளபளபான வட்டமான ஒரு பாம்பைப் போன்று காட்சியளித்தது.இதைப் போல் எவ்வளவு நேரம் செய்தார்கள் என்று தெரியவில்லை. வெகு நேரம் கழித்து தட்டில் அதை உதிர்த்தப்பின் பின் பஞ்சுப் போன்ற சூடான சோன்பப்டியை எங்களுக்கு சாப்பிட தந்தார்கள். அனால் இப்பொழுது எந்த முறையில் தயாரிக்கின்றார்கள் என்று தெரியவில்லை.
எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்த சம்பவத்தையும் உங்களிடம் கூறுகின்றேன்.1973 என்று நினைக்கின்றேன், நானும், என் அப்பா மற்றும் என் அண்ணன் ஆகிய மூவரும் ஆற்க்காட்டிலிருந்து தாம்பரத்திற்க்கு மோட்டார் பைக்கில் சென்றுக் கொண்டிருந்தோம். வழியில் அடை மழை வந்து விட்டது. அப்பொழுது நெடுஞ் சாலையின் மிக அருகில் உள்ள ஒரு வீட்டில் சென்று சிறிது நேரம் ஒதுங்கி இருந்துவிட்டு வந்து வண்டியைப் பார்த்தால் மரத்தில் சாய்த்து நிறுத்தப் பட்டிருந்த வண்டி மண் சரிவு ஏப்பட்டு பெட்ரோல் முழுவதும் ஒழுகி வண்டி ஸ்டார்ட் ஆக வில்லை. இரவு நேரமாகி விட்டது. என் தந்தையோ ஏதாவது லாரி பிடித்தாவது போய்விடுகின்றோம் என்று எவ்வளவோ கூறியும் அந்த அன்பான குடும்பத்தினரின் வற்புருத்துதளால். அவர்கள் வீட்டெலேயே தங்கி, உண்டு உறங்கி காலை பலகாரத்தையும் முடிக்க வைத்து தான் எங்களை அனுப்பி வைத்தார்கள். நான் அது போன்ற விருந்தோம்பலையும்,அன்புள்ளங் கொண்டவரையும் நான் இது வரையில் என் வாழ்நாளில் சந்தித்தது கிடையாது. என் அப்பாவும் இந்த சம்பவத்தை அடிக்கடி நினைவுக்கூறுவார். அதன் பிறகும் அந்த வழியில் போகும் போதெல்லாம் அவர்களை கண்டு நலம் விசாரித்து வந்தார். இந்த சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்துக் கொண்டதற்க்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறிக் கொள்கின்றேன் நன்றி.

மேலும் சில பதிவுகள்