ஜவ்வரிசி பூரண கொழுக்கட்டை

தேதி: August 29, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

நைலான் ஜவ்வரிசி - ஒரு கப்
கடலைப்பருப்பு - கால் கப்
பொடித்த வெல்லம் - கால் கப்
தேங்காய் துருவல் - கால் கப்
ஏலக்காய் - 3
உப்பு - 2 சிட்டிகை


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். ஏலக்காயைப் பொடி செய்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியைப் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் கடலைப்பருப்பைப் போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
ஜவ்வரிசி ஊறியதும் எடுத்து தண்ணீரை வடித்துவிட்டு மிக்ஸியில் போட்டு அரைக்கவும். இடையில் ஒரு முறை கிளறிவிட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஊற வைத்த கடலைப்பருப்பை வேறொரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் வேக வைத்தெடுக்கவும். அதிலுள்ள தண்ணீரை வடித்துவிட்டு மிக்ஸியில் போட்டு ஒரு முறை அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 3 மேசைக்கரண்டி அளவு தண்ணீர் ஊற்றி, வெல்லத்தைப் போட்டு கரையவிடவும். வெல்லம் கரைந்ததும் மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும்.
நாண் ஸ்டிக் கடாயில் நெய் ஊற்றி, தேங்காய் துருவலைப் போட்டு வறுத்தெடுத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் வடிகட்டிய வெல்லக் கரைசலை ஊற்றி, அரைத்து வைத்துள்ள கடலைப்பருப்பு, தேங்காய் துருவல் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறவும்.
நன்கு கிளறிவிட்டு பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டுவரும் பொழுது ஏலக்காய் பொடி சேர்த்துக் கிளறி இறக்கிவிடவும். கடலைப்பருப்பு பூரணம் தயார்.
அரைத்து வைத்துள்ள ஜவ்வரிசியுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து பிசைந்துக் கொள்ளவும். பிசைந்த கலவையில் ஒரு பெரிய எலுமிச்சை அளவு உருண்டையாக எடுத்து வாழை இலையில் வைத்து சற்று பெரிய வட்டமாகத் தட்டி, அதில் சிறிது பூரணத்தை வைத்து அப்படியே இலையை மடித்து மூடவும். மீதமுள்ள ஜவ்வரிசி கலவையிலும் இதே போல் கொழுக்கட்டைகளைத் தயார் செய்து கொள்ளவும்.
இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தி, தயார் செய்து வைத்திருக்கும் கொழுக்கட்டைகளை இலையோடு இட்லி தட்டில் வைத்து வேகவிட்டு எடுக்கவும்.
சுவையான ஜவ்வரிசி பூரண கொழுக்கட்டை தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அருமையான‌ குறிப்பு அக்கா,
ஜவ்வரிசி பூரணா கொழுக்கட்டை ஈசி அன்ட் டேஸ்டியா இருக்கும் போல‌....

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

வாழைஇலைல மணமான கொழுக்கட்டை சூப்பர்.

Be simple be sample

இதுவரை கடலைப்பருப்பு, தேங்காய் பூரணங்கள் தான் தெரியும் இது என்ன புதுசா இருக்கு ஜவ்வரிசி புரணமா வித்தியாசமா இருக்கே. நல்லாவும் இருக்கு நீலா பார்க்கவே. மாவு இருக்கு ஈவினிங் பசங்களுக்கு செய்து கொடுக்கறேன்.