கம்ப்யூட்டரில் ஒரு கல்லுப் பிள்ளையார்

விநாயக சதுர்த்தி அன்று கொழுக்கட்டை, கோலம் என்று கொடுக்க இயலாவிட்டாலும் பொருத்தமாக ஒரு பதிவாவது வெளியிடலாம் என்னும் எண்ணத்தில் எப்போதோ தயாராகத் தட்டி வைத்திருந்த இடுகை இது. தவிர்க்க இயலாத காரணங்களால் சற்றுத் தாமதமாகத்தான் வெளியிட முடிகிறது.

சிறுவயது முதலே எனக்குப் பாலமுருகனை விட பிள்ளையாரை அதிகம் பிடிக்கும். இருவரையும் கும்பிடுவது கிடையாது. கலையழகு மிக்க ஓவியங்கள், சிலைகள் தான் இப்படி ஒரு பிடிப்பு வரக் காரணம். பிள்ளையாரை அழகில்லாமல் காட்டவே முடியாது என்று தோன்றும். என் வரைதற் திறமை வயது முதிர்ச்சியோடு மாறிப் போக, நான் வரையும் பிள்ளையார் உருவங்களிலும் குழந்தைத் தன்மை குறைந்து தெரிவதை அவதானிக்க ஆரம்பித்தேன். பிறகு அவரை வரைவதை விட்டுவிட்டேன். ஆனாலும் ரசிக்கப் பிடிக்கும்.

எங்கே பிள்ளையாரைப் பார்த்தாலும் தன்னால் சிந்தனையில் 'பிள்ளையார், பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார்' பாடல் ஒலிக்க ஆரம்பித்து... தொடர்ந்து இரண்டு நாட்களாவது ஓடிக் கொண்டிருக்கும்.

கூட்டுச்சேரா நாடுகள் மகாநாடு இலங்கையில் (16 – 19 ஆகஸ்ட் 1976) நடந்த சமயம், நாட்டிலிருந்த அனைத்துப் பெரிய பாடசாலை Band வாத்தியக் குழுக்களையும் ஒருங்கிணைத்து, வந்தவர்களுக்கு ஒரு வரவேற்பு ஏற்பாடு செய்தது அப்போதைய அரசு. நான் அப்போது எங்கள் பாடசாலை ஜூனியர் பாண்ட்டில்தான் இருந்தேன். சீனியர்களுக்கு மட்டும்தான் அரசு அனுமதி கிடைத்தது. அபூர்வமாகக் கிடைக்கும் அனுபவம் அல்லவா! அதிபர் சின்னவர்கள் சிலரையும் அழைத்துப் போக விரும்பினார் போல. சட்டென்று பழக்கி எடுக்க நேரம் போதவில்லை. சங்கீதக் கருவிகளும் இல்லை. மரக்காஸ், ட்ரையங்கிள் என்று சுலபமான தாள வாத்தியங்களுடன் நாங்களும் பெரியவர்களோடு கூட்டுச் சேர்ந்தோம்.

மகரகம ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் எங்களுக்குத் தங்கும் வசதி செய்து கொடுக்கப்பட்டிருந்தது. பதினான்கு வயது குட்டி இமா பேசாமடந்தை. என் பெரிய சிரமம்... என் கூந்தல். சாதாரணமாக எதையுமே வேகமாகச் செய்ய வராத எனக்கு, செபா இல்லாமல், முழங்காலுக்குக் கீழ் நீண்டிருந்த சடைப் பின்னல்கள் இரண்டையும் பிரித்து வாரி மீண்டும் பின்னுவது பிரம்மப் பிரயத்தனமாக இருந்தது. வீட்டில் எனக்கெனத் தனி அறையில் வாழ்ந்து பழகிவிட்டு மற்றவர்கள் முன்னால் குளிப்பது, ஆடை மாற்றுவது எல்லாம் பெரும் சங்கடமாக இருந்தது. இந்தக் கவலைகளே முழு மனதையும் ஆக்கிரமித்திருந்ததால், அறையில் கூட இருந்த ஏழு பேரில் யாரோடும் ஒட்டாமல் அவர்கள் நடவடிக்கைகளையும் விளையாட்டுகளையும் வேடிக்கை !!! பார்த்தேன்.

பொழுது போகாமல் அறையை விடாமல் சுத்தம் செய்வேன். திடீரென்று ஒரு நாள் சொல்லிக் கொள்ளாமல் அதிபர் எங்கள் அறைகளுக்கு விஜயம் செய்தார். அறையைச் சுத்தமாக வைத்திருந்தமைக்காக எங்கள் அறை மாணவிகளுக்குப் பரிசு கிடைத்ததும் மூத்தவர் ஒருவரது கவனம் என் மேல் திரும்பிற்று. எனக்கு நன்றி சொன்னார்; என்னைக் கரிசனமாய்க் கவனிக்கவும் ஆரம்பித்தார். சந்தோஷமாக இருந்தது.

ஆரம்பம் முதற்கொண்டே... நான் தனித்திருக்கும் சமயம் இன்னொரு தோழி என்னை அவர்கள் வழியில் இழுக்கும் முயற்சியிலிருப்பார். ஆங்கிலோ இந்தியர் என்பீர்களே, அவர்கள் போலத்தான் இவரும். இவர்களை நாங்கள் Burghers என்போம். ஆங்கில மொழி மூலம் கற்கும் வகுப்பில் இருந்தாலும், தமிழ் முதலாம் மொழி போலவே, எழுதப் படிக்க, பேச நன்றாக வரும் இவருக்கு. எப்பொழுதும் பேசாமல் அமர்ந்திருக்கும் என்னைக் 'கல்லுப் பிள்ளையார்' என்பார். :-) முதல்முதல் முகநூலில் அழைப்பு அனுப்பிய போது கூட "ஹாய் கல்லுப்பிள்ளையார்" என்றுதான் செய்தி வந்தது. :)

~~~~~~~~~~~~~
பார்த்து ரசிக்க...
இந்த இடுகையிலுள்ள படங்கள் மாபலிபுரம் சென்றிருந்த சமயம் தெருவோரம் சுட்டவை. அப்போது தோன்றிற்று... இந்தியாவில் ஓரிரண்டு வருடங்கள் வந்து வாழக் கிடைக்குமானால், என் வீட்டில் ஒரு பிள்ளையாரையாவது வாங்கி வைக்க வேண்டும். :-)

பார்த்துப் பயனடைய...
அறுசுவையில் கைவினைப் பகுதி ஆரம்பித்தது இந்தக் குறிப்போடுதான் என்பதாக ஞாபகம். இங்கு செண்பகாவின் பிள்ளையார் செய்முறை இருக்கிறது. http://www.arusuvai.com/tamil/node/5567

5
Average: 5 (4 votes)

Comments

அந்த அழகான குட்டி கல்லுபிள்ளையார் போட்டோவும் போட்டிருக்கலாமே. ;)

Be simple be sample

யாரு யாரு கல்லுப் பிள்ளை??? ஆக்டிவா இருக்க‌ மக்களை எல்லாம் நாங்க‌ அந்த‌ பேர் சொல்லி அழைப்பதில்லை. ;)

பிள்ளையார் எந்த‌ வடிவில் எப்படி இருந்தாலும் அழகு தான்... என்னுடைய‌ ஃபேவரட் ஆளு :) வினாயகரை எங்க‌ கண்டாலும் வாங்கி வந்து வெச்சுடுவேன் வித‌ விதமா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பிள்ளையாரும், பதிவும் நல்லா இருக்குங்க.
உங்கள் புதுப்பெயரும் நல்லா இருக்குங் :-)

நட்புடன்
குணா

கல்லுபுள்ளார் அழகா இருக்கார். இமா, நானெல்லாம் சொன்னவேலையே செய்யமாட்டேன். அதுக்காக அடிக்கடி சின்ன வயசில வாங்குற திட்டுல, 'புடுச்சு வெச்ச புள்ளாராட்ட' அப்பிடியே உக்காந்திருங்கிற வார்த்தை அம்மாட்ட இருந்து வரும்.
//விநாயக சதுர்த்தி அன்று கொழுக்கட்டை, கோலம் என்று கொடுக்க இயலாவிட்டாலும் பொருத்தமாக ஒரு பதிவாவது வெளியிடலாம் என்னும் எண்ணத்தில் எப்போதோ தயாராகத் தட்டி வைத்திருந்த இடுகை இது.// ரொம்ப நன்றி இமா:)

//பதினான்கு வயது குட்டி இமா பேசாமடந்தை.// இப்பவும் அப்படித்தானே, ஓரிரு வார்த்தைகளூடாகவே, விசயத்தை புரிய வெக்கிறீங்க.
எனக்கு இந்த பதிவு ரொம்ப புடுச்சிருக்கு இமா :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

//அழகான குட்டி கல்லுபிள்ளையார் போட்டோ// அதானே மேல போட்டிருக்கேன்!! ;))

‍- இமா க்றிஸ்

//ஆக்டிவா இருக்க‌ மக்களை// :-) இமா முன்னால அப்படி இருக்கல வனி. இது பிறகு வந்த ஆக்டிவனஸ்.

‍- இமா க்றிஸ்

//புதுப்பெயரும் நல்லா இருக்கு// :-) நன்றி. இது பழைய பெயர். :-)

‍- இமா க்றிஸ்

//ஓரிரு வார்த்தைகளூடாகவே, விசயத்தை புரிய வெக்கிறீங்க.// ஆஹா! :-))

//எப்போதோ தயாராகத் தட்டி வைத்திருந்த இடுகை// ஆமாம் அருள். முன்ன மாதிரி நேரம் கிடைக்கிறது இல்ல இப்போல்லாம்.

‍- இமா க்றிஸ்

இமாம்மா அந்த‌ காலத்தில் உங்கள் கூந்தல் நீண்டு வளர‌ என்னவெல்லாம் செய்தீர்கள் என்று கூற முடியுமா Please மா?

சுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..!!

;))))))

//உங்கள் கூந்தல் நீண்டு வளர‌ என்னவெல்லாம் செய்தீர்கள்//

நியூசிலாந்துல இருந்து ஸ்பெஷலா செம்மறி ஆட்டுக் கொழுப்பு இறக்குமதி செய்து உருக்கி ஒரு எண்ணெய் பண்ணுவாங்க செபா. அது மட்டும்தான் வைப்பேன். ஸ்கூலால வீட்ட வந்ததும் இறுக்கிப் பின்னி சடை நுனில ஒரு கல்லை கட்டி தொங்க விட்டிருவேன். ஆட்கள் கண்ணு பட்டுரும் என்று யார் முன்னாடியும் லூஸ் ஹேர் விட்டுட்டுப் போக மாட்டேன். இப்பிடில்லாம் சொல்ல ஆசைதான். ஆனா....
நான் ஒண்ணும் பண்ணலயே. செபாவுக்கு வெட்டணும்னு தோணினா வெட்டி விடுவாங்க. அவங்க வெட்டாம விட்டதும் வளர ஆரம்பிச்சுது. எண்ணெய்... செபா காய்ச்சுற எண்ணெய்தான். அதுனால வளர்ந்துது என்று பொய் சொல்ல மாட்டேன். இது பரம்பரை என்று நினைக்கிறேன்.

ஒரு வைட்டமின் சொல்லட்டா! B positive. ;D

கஷ்டம் நிறைய இருந்துது. ஸ்கூல்ல படிக்கிற சமயம் சைக்கிள் சக்கரத்துல மாட்டிக்காம கழுத்தைச் சுற்றிப் போட்டுட்டுப் போவேன். கலியாணத்திற்கும் எழுத்திற்கும் கொண்டை போட சிரமப்பட்டோம். பக்கத்து வீட்டு ஆன்டி அழகா போட்டு விட்டாங்க. என் முகத்தை விட பெருசா இருந்துது. கோவில்ல இருந்து வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரம் கழிச்சு பாரம் பொறுக்காம ஒவ்வொரு சுருளா நழுவ ஆரம்பிச்சுது. நொடிக்கொரு தடவை ஒரு ஹேர்பின்னை அழுத்தி விட்டுட்டே இருந்தேன். கர்ராக இருந்தது. ஹாஸ்பிட்டல்ல படுக்கையா இருந்த சமயமும் ரொம்ப சிரமமாப் போச்சு.

எதுவும் அளவோட இருந்தால்தான் நல்லது. :-)

‍- இமா க்றிஸ்

//நியூசிலாந்துல இருந்து ஸ்பெஷலா செம்மறி ஆட்டுக் கொழுப்பு இறக்குமதி செய்து உருக்கி ஒரு எண்ணெய் பண்ணுவாங்க செபா. அது மட்டும்தான் வைப்பேன். ஸ்கூலால வீட்ட வந்ததும் இறுக்கிப் பின்னி சடை நுனில ஒரு கல்லை கட்டி தொங்க விட்டிருவேன். ஆட்கள் கண்ணு பட்டுரும் என்று யார் முன்னாடியும் லூஸ் ஹேர் விட்டுட்டுப் போக மாட்டேன். இப்பிடில்லாம் சொல்ல ஆசைதான். ஆனா....// குசும்பு....... :-

பி பாசிட்டிவ் வா? அது எதுல‌ எப்படி கிடைக்கும் இமாம்மா?கொஞ்ச நாளாவது நிறைய முடி வளர்க்கனும்னு ஆசையா இருக்கு அதான்

சுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..!!

//என் முகத்தை விட பெருசா இருந்துது.// : )) அந்த‌ போட்டோ போடுங்களேன் மா. நாங்களும் பார்த்து ரசிப்போம் ல‌? : )
அன்புடன்
தயூ

நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின்!!!

//பி பாசிட்டிவ் வா? அது எதுல‌ எப்படி கிடைக்கும் இமாம்மா?// அவ்வ்வ்! முடியலயே! ஒரு e போடணும் B பின்னால. போட்டுட்டுப் படிச்சுப் பாருங்க. எங்க கிடைக்கும்னு புரியும் ;D
//கொஞ்ச நாளாவது நிறைய முடி வளர்க்கனும்னு ஆசையா இருக்கு// புரியுது. நிஜமாவே ஐடியா இல்ல டெல்சி. உங்களுக்கு என்ன வயசு? ரொம்ப குட்டிப் பொண்ணுன்னா கொஞ்ச காலம் விடாம பாப் வெட்டிட்டு பிறகு வளர விட்டுப் பாருங்க. நிறைய பழங்கள் சாப்பிடுங்க. ப்ரோட்டீன் போதுமான அளவு சேர்த்துக்கங்க. அடிப்படைல... ஆரோக்கியமான சம உணவு எடுக்கிறதுதான் சீக்ரட்.

‍- இமா க்றிஸ்