விழிகள்

காலை இளஞ்சூரியன் தங்க நிறதத்தில் தக தகக்க, மரகதப் பச்சை புல்வெளியில் உறங்கி கிடந்த பனித்துளிகள் மெல்ல மெல்ல தம் உறக்கம் தெளிந்து, சோம்பல் முறிக்க தொடங்கின.

நீல வண்ணமும், சிவப்பும், கருப்பும் கலந்த வர்ணத்தை பூசிக்கொண்டு அழகு காட்டும் மரங்கொத்தி ஜிவ்வென பறந்து போனது.
தோட்டத்து புல்வெளியில் பூத்துக்கிடந்த சூர்யகாந்தி மலரில் விதை கொய்ய பச்சைகிளிகள் தன் சிவந்த கொவ்வை நிற மூக்கினை அழகுகாட்டிக்கொண்டு சர்ரென பறந்து வந்து அமர்ந்தன.

அவை அமர்ந்த இடத்தை மிகவும் உற்று நோக்கினால் மட்டுமே பார்வைக்கு கிட்டும்.
அணிற்பிள்ளையோ அதுக்கும் இதுக்குமாய் அழகுகாட்டிக்கொண்டு ஓடத்தொடங்கின.

தவளைச்சத்தம் அடியோடு மறைந்து போயிற்று.

மயிலொன்று அழகு நடனம் புரிந்து கொண்டிருந்தது. அதன் வர்ணத்தை இன்னதென்று சொல்லமுடியாத படி அழகு. பச்சையா, நீலமா? பட்டுப்போன்ற மென்மையான கழுத்து. இறகினிலே சொல்லத்தெரியாத வர்ணம்.
ஆஹா, இவையெல்லாம் காண கண்கோடி வேண்டும். இவற்றை நாம் காண உதவும் கண்களுக்குத்தான் நன்றி சொல்லியாக வேண்டும்.

கண்கள் மூளைக்கு புத்துணர்ச்சியூட்டும் கருவியாகும். இருட்டில் அடைந்துகிடந்தால் மூளை எளிதில் சோர்வடைந்துவிடும்.
பார்த்ததையே பார்த்துக்கொண்டிருந்தால் போரடித்துவிடும்.

சத்தான ஆகாரம் எடுத்து உடலை புத்துணர்வாக்குகிறோம். ஆனால் அதனூடே இயற்கை வளங்களை கண்கொண்டு காணும் போது, அந்த சத்து பலமடங்காகத்தான் பெருகுகின்றது.
'எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்' அந்த சிரசினிலே கண்ணே பிரதானம்.
அப்ப மூக்கு, காதெல்லாம் தேவையில்லையா? என்ற கேள்வி எழுந்து மறையும்.
எல்லா உறுப்புகளுமே மிகவும் இன்றியமையாதவைதான்.
ஆனால் மனித உடலுக்கு வெளியுலகத்தினூடான தொடர்புக்கு கண்தான் முக்கிய பணியாற்றுகின்றது.

சிறப்புமிக்க கண்களை பராமரிக்க எளிதான வழிகள் உண்டு. மிகவும் எளிதான கண் பயிற்சிகள் கைகொடுக்கும்.
நான் செய்யும் சில பயிற்சிகள்:

நீண்டநேரம் கணினி திரையை பார்க்கும்போதும், சோர்வாக உணரும் போது, கணினித் திரையிலிருந்து விழித்திரையை விலக்கி தூரத்து காட்சிகளை பார்ப்பதுண்டு.

தூரத்தில் கிடைக்கும் காட்சி பச்சை நிறகாம இருந்தால் மிகவும் போற்றத்தக்கது.
அது டில்லி முள்ளு (கொடவேலா முள்ளு, வேலிமுள்ளு) முளைச்சு கிடக்கும் இடமா இருந்தாலும், விழிகளை தூரத்திலே ஓட்டுவது நலம்தான்.
இப்பலாம் கட்டிடம்தான் கண்ணுக்குத்தெரிகிறது :(

கண் இமைகளை இடைவெளி விடாமல் 50 எண்ணிக்கை அளவு திறந்து மூடுவது.

கடிகாரச்சுற்றாக விழிகளை ஓட்டுவது. கடிகாரச்சுற்றுக்கு எதிர்பதமாக விழிகளை ஓட்டுவது.
இவை முறையே 10 சுற்றுக்கள் செய்வதுண்டு.

விழிகளை மேலும் கீழுமாக 10 சுற்றுக்கள்.

பக்கவாட்டில் விழிகளை 10 தடவைகள் ஓட்டுவது.

அதேபோல் காலை இளஞ்சூரியவெளிச்சம் விழிகளை மூடியாவாறு விழுமாறு நிற்பது. (சிலர் கண் திறந்து உற்று நோக்கலாம் என சொல்வதுண்டு, ஆனால் அதில் ஏதும் விழித்திரைக்கு ஆபத்து இருக்குமோ என்ற நோக்கில் அவ்வாறு பார்ப்பதில்லை).

கடைசியாக, முதல் புகைப்படத்தில் இருக்கும் சிறு குவளையில், சுத்தமான நீர் நிரப்பிக்கொண்டு விழிகளை அதனுள்ளே வைத்து ஒவ்வொரு விழிக்கும் மூன்று முறை என்ற கணக்கில் கழுவுவது.
ஒவ்வொரு முறையும் நீர் மாற்றி கழுவுவேன்.
இவை வாரம் மூன்று முறை மட்டுமே செய்வதுண்டு.
இதன் காரணமாக கண்களில் உள்ள மிக நுட்பமான இரத்த நாளங்களும் புத்துணர்ச்சி பெறும் என்று இயற்கைமுறை மருத்துவமுறையில் கூறினர்.
இது எனக்கு மிகவும் நல்ல முறையில் பலன் கொடுப்பதால் இதனை தவறாமல் செய்து வருகிறேன்.

மிகவும் பொறுமையாக படித்த உங்கள் அனைவருக்காகவும் இதோ ஒரு பழரச குறிப்பு:

முதன் முறையாக இந்த பழத்தை பார்த்த பொழுது முலாம்பழம் என நினைத்தேன். ஆனால் முலாம்பழம் வேறு விதமாகத்தானே பார்த்து இருக்கிறோம் என ஐயமும் எழுந்தது.
ஆனால் கடைக்காரரோ இது முலாம்பழமேதான் என சத்தியம் பண்ணாத குறையாக கடையைவிட்டு துரத்துவதிலேயே குறியாக இருந்தார்.
ஆமா வாங்குற எட்டணா பழத்துக்கு ஆயிரத்தெட்டுக் கேள்வி சும்மா நொய்யி நொய்யினு கேட்டா யாருக்குத்தான் கோபம் வராது சொல்லுங்க.

ஆங்கிலத்தில் Muskmelon அப்ப தமிழ் மொழியில் முலாம்பழமா?
அப்ப முலாம்பழம் வேறு மாதிரியல்லவா இருக்கும்.
யாருக்கேனும் இது பற்றிய விளக்கம் தெரிந்தால் கூறுங்களேன்.

சரி பெயரை கூறும் உங்கள் அனைவருக்கும் இந்த முலாம் பழரசம்...

(ரசம்னாலே ஏனோ மிளகு, சீரகம், பூண்டு கணபொழுதில் மனக்கண்ணில் தோன்றி மறைகிறது)

முதலில் பழத்தை இரண்டாக வெட்டிக்கொள்ளவேண்டும்.
பின்பு உள்ளிருக்கும் விதைகளை கவனமுடன் எடுக்கவேண்டும்.
வெள்ளரி விதை போன்றே இருக்கிறது.

அவ்விதைகளை வறுத்து சாப்பிடலாம் என நினைக்கிறேன்.

ஆனால் அது போல் செய்து உண்டதில்லை. ஒரு தட்டு நிறைய விதைகள் கிடைத்தது.

நம் கைவினையாளார்களிடம் கிடைத்திருந்தால், அது நல்லதொரு கைவினையாக உருமாற்றம் அடைந்து அறுசுவையை அலங்கரித்திருக்கும்.
சும்மா சொல்லக்கூடாதுங்க, நிறையவே விதைகள். காயவைத்து எடுத்து வைத்தேன். ஆனால் தோடத்தில் நிழல் அதிகம் இருப்பதால் அதை பயிரிடும் எண்ணத்தை கை விட்டுவிட்டேன்.

சரி பழத்தை இரண்டாகவெட்டி எடுத்து ,விதைகள் எல்லாம் எடுத்தாயிற்று அல்லவா.
இப்பொழுது ஒரு ஸ்பூனால் உள்ளிருக்கும் சதைப்பற்றான பகுதிகளை எடுத்து, மிக்ஸியில் போடவும்.
கூட கொஞ்சம் நாட்டுசர்க்கரை சேர்க்கவும். கொஞ்சம் மீன்ஸ் 2 ஸ்பூன் போட்டா போதும்.
இனிப்பு அதிகம் சேர்க்கிறவர்கள் கூட கொஞ்சம் சேர்த்து போட்டுக்கோங்க.

தண்ணீர் 1/2 டம்ளர் அளவு ஊத்திக்கோங்க.

விருப்பட்டால் பால் சேர்த்துக்கொள்ளலாம்.

நான் பால் சேர்க்கவில்லை.
அனைத்தையும் போட்டு ஒரு சுற்று விடவும். பிறகு வேறு பாத்திரத்திற்கும் மாற்றவும்.

பின்பு அக்கூழை அவரவர்க்கு பிடித்தமான வடிவத்தில் உள்ள கண்ணாடி குவளையில் ஊற்றவும். பின்னர் உடனேவும் அருந்தலாம்.
இல்ல சில்லுனு குடிக்கணும்னா ஃப்ரிட்ஜ்ல வெச்சும் அருந்தலாம். இதெல்லாமே அவங்கவங்க இஷ்டம் :)

பெரியவங்க முதல் சிறியவங்க வரை குடிக்க உகந்த பானம். சர்க்கரை போடாமலும் குடிக்கலாம்.

நன்றிகூறி இப்பதிவினை இத்துடனே முடிக்கிறேன் நன்றி! நன்றி! :)

5
Average: 5 (3 votes)

Comments

ஹாய்,
//கண்ணிற்கு பழரசம் விருந்து, பழரசம் வயிறுக்கு விருந்து.//அழகான‌ பதிவு. பாராட்டுக்கள்.

ரஜினிபாய்

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

அருள் அக்கா,
ரொம்ப‌ அவசியமான‌ பதிவு, அனைவருக்கும் தேவையான‌ பதிவும் கூட‌....
முலாம் பழம் இப்பதான் கேள்வி படுறேன், இங்க‌ எங்க‌ கிடைக்கும்னு விசாரிக்கிறேன் அக்கா.....

கண்களுக்கான‌ பயிற்சி அப்ப அப்ப‌ செய்றதுண்டு, தொடர்ந்து செய்ய‌ முயற்சி பண்றேன்,

வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் கூட‌ அவசியம்னு சொல்றாங்க‌, கண்களின் சூடு குறையுமாம்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

Mulam pazham kirni pazham madhiri erukkum ana taste vera madhiri erukkum unga pazharasam super mmm

நானும் உள்ளங்கையில் நீர் நிரப்பி கண்களைக் கழுவுவதுண்டு.
கண்பயிற்சி சிலசமயம் செய்வேன்.
கடைசி படம் அழகு. உங்க‌ வீட்டு சமையல் மேடையா?
ஒரு பீப்பாய் நிறைய‌ ஜூஸ் வைத்துக் கொண்டு பெரிய‌ பாப்பா இருப்பது போலவும்,
ஒரு டம்ளர் ஜூஸ் வைத்துக் கொண்டு பொம்மை இருப்பது போலவும்
மாறுபட்ட‌ தோற்றம்.:)
அருமை

நலமா ...

அருமையான‌ பதிவு ..

// அவ்விதைகளை வறுத்து சாப்பிடலாம் என நினைக்கிறேன் //

ஹ்ம்ம் கண்டிப்பாக‌ வருத்து சாப்பிடலாம் .. டேஸ்ட்டாகவும் இருக்கும்
அம்மா இந்த‌ விதையை வெயில் ல‌ காய‌ வச்சு உரிச்சுட்டு வறுத்து காரம் உப்பு போட்டு ஒரு ரெசிபி பண்ணுவாங்க‌ நல்லா இருக்கும்..
நீங்க‌ அடுத்த‌ முறை வாங்கும்போது ட்ரை பண்ணி பாருங்க‌...

ஹ்ம்ம் ஏற்கனவெ இத‌ நான் சாப்பிட்டு இருக்கேன் அக்கா
ஆனா ஜூஸ் ஆ சாப்பிட்டது இல்லை. அந்த சதைபகுதிலாம் எடுத்து அப்படியே சர்க்கரை சேர்த்து கிளறி ஃப்ரிட்ஜ்ல வெச்சு சாப்பிட்டு இருக்கேன்.

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அருள்... //நான் செய்யும் சில பயிற்சிகள்:// படித்ததும் யோசித்துப் பார்த்தேன். முறைத்துப் பார்ப்பது, கண்ணால் சிரிப்பது எல்லாம் கண்ணிற்கான பயிற்சிகளில் அடங்காதோ! இவைதான் அடிக்கடி பண்றேன். :) நல்ல இடுகை.

அந்தக் கிண்ணம் போல ஒன்று எங்கள் வீட்டிலும் இருந்தது. கண்ணில் தூசு விழுந்தால் கண்ணைக் கழுவப் பயன்படுத்துவோம்.

‍- இமா க்றிஸ்

பதிவில் ஆரம்ப வர்ணனைகளே ரொம்ப அருமைங்க.
கண்களைப்பற்றிய பயிற்சியும், அதன் அவசியமும் விளக்கமும் நல்லா இருக்குங்.

நட்புடன்
குணா

மிக்க நன்றி ரஜினிமேடம் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சுபி, முலாம்பழத்திற்கு வேறு பெயர் இருக்கிறதோ என்னவோ, எதுக்கும் கேட்டுப்பாருங்க.
//வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் கூட‌ அவசியம்னு சொல்றாங்க‌, கண்களின் சூடு குறையுமாம்// நானும் கேள்விப்பட்டிருக்கேன். அன்றைய தினம் பகல் தூக்கம் அறவே ஆகாதாம். தலையில் நீர்கோர்த்துக்கும்னு சொல்வாங்க.

மிக்க நன்றி சுபி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

முலாம்பழம் உட்பகுதி சற்று வெண்மை நிறத்துடன் இருக்கும். இது ஆரஞ்சு நிறத்தில் இருக்கவே, இது முலாம்பழமா இருக்குமா? இல்லையானு சந்தேகம். ஒருவேளை இது கிர்ணியாக இருக்குமோ, நான் பார்த்ததில்லை இதுவரை. மிக்க நன்றி அர்ச்சனா :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அன்பு அருள்,

நல்ல‌ பதிவு. படிச்சிட்டு இருக்கப்பவே, நீங்க‌ சொன்ன‌ மாதிரி, டக்குன்னு(இதுதான் உங்க‌ டக்கா அப்படின்னு கருணாஸ் வாய்ஸ் கேக்குதா) தலையைத் திருப்பி, தூரத்துப் பச்சையை (தூரத்துப் பச்சை கண்ணுக்கு அழகு - ஹை, பழமொழி) பாத்துக்கிட்டேன்.

கண்ணில் தூசி விழுந்தால் கழுவுவதற்கு அந்த‌ சின்னக் குமிழ் உபயோகிச்சதுண்டு. ரெகுலராக‌ கண் கழுவுவதும் நல்ல‌ யோசனை.

அன்புடன்

சீதாலஷ்மி