நில் கவனி யோசி

முன்பு எங்கோ எவரோ ஒரு சிலரிடம் இருந்த ப்ரொஃபஷனல் கேமரா இப்போது எல்லோர் கையிலும் சர்வ சாதாரணமாகிப்போனது. இது தப்பில்லை, உண்மையில் பலரும் வாங்கும் நிலையில் இருக்கிறார்கள் என மகிழத்தான் வேண்டும். பெரிய கல் போல இருந்த மொபைல் இன்று உரு மாறி எல்லோர் கையிலும் உலா வருகிறது. இதுவும் நல்ல மாற்றமே. ஆனால் இந்த மாற்றங்கள் மனிதனிடம் எப்படி மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது? இது என் பார்வை மட்டுமே... சரியோ தவறோ உங்கள் கருத்தை நீங்கள் சொல்லலாம்.

பேசுவதற்கு மொபைல் என்பது போய் இப்போது மொபைல் இல்லாமல் ஒன்றுமே ஆகாது என்ற நிலை வந்திருக்கிறது. கேமரா இல்லாத மொபைல் எல்லாம் இனி வரவே போவதில்லை, வந்தாலும் யாரும் வாங்கப்போவதில்லை. அவ்வளவு முக்கியமானவை ஆகிப்போயிற்று. இந்த புகைப்படம் எடுக்கும் பைத்தியங்கள் கையில் இருக்கும் கேமரா, மொபைல் கேமரா கண்ணில் இருந்து பொது இடங்களில் தப்பிப்பது குதிரைக்கொம்பாகி வருகிறது. உண்மையில் இயலாத காரியமாகி வருகிறது என்றே சொல்ல வேண்டும். நம் புகைப்படம் யார் யார் எங்கெங்கே ஷேர் செய்து வருகிறார்கள் என்பது நமக்கே தெரியவில்லை. பொது இடத்தில் பிறர் அனுமதியின்றி அவரை புகைப்படம் எடுக்கும் உரிமையை இவர்களுக்கு யார் தந்தார்கள் என்பது தான் புரியவில்லை. அப்படி ஏதும் சட்டமிருக்கிறதோ? ”புகை பிடிக்க தடை” போல “புகைப்படம் எடுக்க தடை” என பொது இடங்களில் போர்ட் தேவைப்படும் நிலை உருவாகி வருகிறது.

பெங்களூரில் சில மாதங்கள் முன் பெண்களை அனுமதியின்றி புகைப்படம் எடுத்த ஒரு காவல்துறை அதிகாரியை போட்டு கும்மிட்டாங்க... இந்த நிலை வெகு விரைவில் மற்ற ஊரிலும் வர வேண்டும் என்பதே என் விருப்பம். கேண்டிட் ஃபோட்டோஸ். ஒருவரை அவர் அறியாமல் புகைப்படமெடுத்து பப்லிக்காக வெளியிடுவது மன்னிக்க முடியாததாகவே எனக்குப்படுகிறது. வளர்ந்து வரும் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்தே சூம் செய்து சாலையில் செல்லும் பெண்ணை படமெடுக்கிறார்கள்!! அந்த பெண் அறிவாளா? எப்படி சாத்தியப்படும்? இது எந்த வகையில் நியாயம்? இவர் பகிர்ந்து கொள்ளும் பொது தளத்தில் வரும் அனைவரும் அந்த புகைப்படத்தை கலை ரசனையோடு தான் பார்க்கிறார்களா? கலை ரசனையோடு கூட அடுத்த வீட்டு பெண்ணை பார்க்க இவர்களுக்கு என்ன உரிமை? தவறாக பயன்படாதா? என்ன உறுதி அவர்களுக்கு? தன் வீட்டு மனிதர்கள் இல்லை என்பதை தவிற!

மொபைல் கேமரா செய்யும் அட்டூழியம் இப்போது எல்லை மீறி வருகிறது. ஒரு உயிர் போகிற நிலையிலும் மொபைலில் வீடியோ எடுக்கிறார்கள். முன்பு ஒரு கயிற்று பாலம் அறுந்து விழுந்து பல மாணவர்கள் உயிரை பலி கொண்டது. முழு வீடியோ எடுக்கப்பட்டிருந்தது. சில கல்லூரி மாணவர்கள் டேமில் நீர் திறந்தது தெரியாமல் நடு பாதையில் நின்று அடித்துச்செல்லப்பட்டனர். முழு வீடியோ டிவி, யூ டூப் என எல்லாவற்றிலும் பகிரப்பட்டது. இப்போதோ புலி அடிப்பதை முழுமையாக படமெடுத்திருக்கின்றனர். மனிதனே... உன்னை விட அந்த புலி எவ்வளவோ தேவல. ஒரு உயிர் போகும் நிலையில் உங்களால் எப்படியப்பா கேமராவை பிடித்து கொண்டு நிற்க முடிகிறது? நீங்களும் உங்கள் வீடியோவும் பிரபலமாவதில் அப்படி என்ன காட்டுத்தனமான வெறி உங்களுக்கு? அந்த வீடியோவை முழுமையாக எடுத்தவர்களாகட்டும், அதை ஷேர் செய்து மற்றவர்களுக்கு அனுப்பியவர்களாகட்டும்... மனிதம் இல்லாத மிருகமாகவே எனக்கு தெரிந்தனர். எப்படி முடிகிறது? இப்படி ஒரு நிலையில் மனிதன் காப்பாற்ற நினைப்பான், அல்லது பயத்தில் கண்ணை மூடிக்கொள்வான். இவை இரண்டுமின்றி நின்று நிதானமாக வீடியோ எடுக்க அரக்க மனதால் மட்டுமே முடியும். மனிதனால் முடியாது. செய்தவர் யாரும் மனிதனாக இருக்க இயலாது.

இரண்டொரு நாள் முன்பு பெங்களூரில் பொது இடத்தில் இரண்டு பெண்களை ஈவ் டீசிங் செய்த ஆண்களிடம் அந்த பெண்களுக்கு பிரெச்சனை ஆகி இருக்கிறது. கூடி இருந்த 50க்கும் மேற்பட்ட மக்கள் அந்த பெண்களுக்கு உதவ முன் வரவில்லை... அது கூட பரவாயில்லைங்க, அந்த பிரெச்சனையை வீடியோவும் ஃபோட்டோவும் எடுத்திருக்குறாங்க! ”மனுஷனா நீ?” என நானாக இருந்தால் ஓங்கி விட்டிருப்பேன். அவங்க வீட்டு பெண்கள் என்றாலும் இதையே செய்வார்களா? புலி கூட்டில் வேறு ஒருவராக இல்லாமல் இவன் விழுந்திருந்தாலும் வீடியோ எடுத்திருப்பானோ? போய் விழுந்தவரும் படம் எடுக்கும் ஆவலில் விழுந்தவர்... அதை புகைப்படம் எடுத்தவனும் அதே ஆவலில் இருந்தவன்! சில ஆங்கில படங்களில் மன்னர் யாரையாவது கைதியாக்கி அவனை பொது இடத்தில் வைத்து மிருகத்தை திறந்து விடுவதாகவும், இதை சுற்றி இருக்கும் அந்த நாட்டு மக்கள் ஆவலோடு பார்ப்பது போலவும் கண்டது உண்டு. எப்படி அந்த காலத்தில் இப்படி இருந்தார்கள் என்று எண்ணி இருக்கிறேன். இன்று அந்த நிலையே மீண்டும் வருகிறது என்ற அச்சம் உருவாகிறது.

மனதில் ஒரு வலி... இவர்களை எல்லாம் காணும் போது! நம்மை சுற்றி மனிதர்கள் இருக்கிறார்கள் என்று இனி எந்த தைரியத்தில் வெளியே போவது? வாழ்வில் நடக்கும் அல்லது பார்க்கும் சில நிகழ்வுகள் நம் தைரியத்தை கொன்று விடும், சில நிகழ்வுகள் கோழையை கூட துணிந்தவனாக்கி விடும். ஆனால் இப்போது நம்மை சுற்றி நடக்கும் இது போன்ற தவறுகளை நாம் தட்டிக்கேட்கா விட்டால்... நிச்சயம் ஒரு நாள் கோழையாகி கூட்டில் அடைபட்டது போல பொது இடங்களுக்கு போகவே அஞ்ச நேரிடும். முடிந்தால் இது போன்ற படங்கள், வீடியோக்களை வைரஸ் போல பரப்புவதையாவது கை விடுங்கள். மனிதத்தன்மை இல்லாமல் போனாலும், இது போன்ற விஷயங்களை ஷேர் செய்து மிருகமாகாமல் இருங்கள். அன்பு ஒன்றே உலகை மாற்றும் வல்லமை பெற்றது. பணம் புகழ் எல்லாம் என்றாவது நம்மை விட்டு போகக்கூடியது. இதை என்றாவது உணர்ந்தால் பூமித்தாய் உன்னை இத்தனை நாள் சுமந்ததில் ஒரு அர்த்தமிருக்கும்.

5
Average: 5 (2 votes)

Comments

//இது போன்ற படங்கள், வீடியோக்களை வைரஸ் போல பரப்புவதை// உண்மைதான் வனி. பரப்பும் நோக்கம் என்ன! இவர்கள் சாதிக்கப் போவது என்ன!

இதுவே அந்தப் பையன் என் குடும்பத்தில் ஒருவராக இருந்தால் இந்த மாதிரியான ஷேர்கள் & அவற்றுக்குக் கிடைத்திருக்கும் கமண்ட்டுகள்... என்னை எவ்வளவு தூரம் பாதித்திருக்கும்!! ;(

அந்த மரணத்தை விட நீங்கள் சொன்ன விடயம்தான் என்னையும் பாதித்தது. ;(

‍- இமா க்றிஸ்

முன்பெல்லாம் சாலை ஓரம் யாரும் அடிபட்டு கிடப்பதை சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறவர்களை கண்டால் பொல்லாத கோபம் வரும். ஒரு மனிதன் ரத்தத்தில் மிதப்பதை வேடிக்கை பார்க்கும் கல் மனசு என எண்ணியிருக்கிறேன். ஆனால் இபோதோ... ம்... ஒன்னும் சொல்றதுக்கில்ல இமா. இவங்க முன் ஒரு பெண்ணை கற்பழித்தாலும் வீடியோ தான் எடுப்பாங்க. மானம், மனம் இரண்டுமே இல்லாத மனிதர்கள்(??? மிருகங்கள்).

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா, இதைப் பத்தி உங்க கருத்தை தெளிவா சொல்லி இருக்கீங்க. நிறைய விஷயத்தில் நீங்க உங்க கருத்துக்களை தைரியமா சொல்றதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாயிருக்கும். சமீபத்தில் தான் இதைப் பற்றி நானும் பேசிக் கொண்டிருந்தேன். இப்படி எடுத்துப் போடற வீடியோவைப் பார்த்து, "ஏண்டா, உதவாம வீடியோ எடுக்க எப்படிடா மனசு வந்ததுன்னு யாரும் கேட்டால், நாங்க அப்படி எடுத்ததாலதான் நீங்க பார்த்து விஷயம் தெரிஞ்சுக்கறீங்கன்னு பதில் சொல்வாங்க. ஏன் இதுக்கு முன்னாடிலாம் யாரும் இப்படிலாம் நடக்கும்னு தெரியாமலா இருந்தாங்க.

குழந்தைகளை சித்திரவதை செய்யறது, விபத்து, கொலைனு இப்படிப்பட்ட வீடியோவை ரசிச்சுப் பாக்கற மனோவியாதி உள்ளவங்க இப்பலாம் நிறைய இருக்காங்க போல. ஃபேஸ்புக்கில் வர்ற வீடியோவையெல்லாம் பார்க்கும்போது, ஏய் லூசு, புள்ளையைக் காப்பாத்தாம வீடியோ எடுத்துட்டு அதை வேற இங்கே வெக்கமில்லாம ஷேர் பண்றியேன்னு தோணும். எங்களுக்கு தெரிந்த ஒருவர், நியூசில் நிறைய பேர் செத்துட்டதா காண்பித்தால் ரொம்ப சந்தோஷப்படுவார். சில சமயம், சே! 100 பேர்தான் செத்தாங்களான்னு சோகமா சொன்னதை கேட்டிருக்கிறேன். அதுபோல் இந்த கேமரா மேனியாவும் ஒரு சைக்கோத்தனம்தான். இதுல நிறைய பேருக்கு பி.சி. ஶ்ரீராம் ரேஞ்சுக்கு திறமை இருக்கறதா நினைப்பு வேற. பர்மிஷன் இல்லாமலேயே போட்டோ எடுக்கறதை நிறுத்த ஒரு வழியும் இருக்கறதா தோணலை. திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

மிக மிக‌ முக்கியமான‌ பதிவு.....யார் எப்படி போனால் எனக்கென்ன‌ ?நான் பிரபலமாகணும்ன்ற‌ அல்ப‌ ஆசை மனிதத்தை கொன்று கொண்டே இருக்குது

கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த‌ கலவை நான் "
மிருகம் கொன்று.. மிருகம் கொன்று கடவுள் வளர்க்கபார்க்கின்றேன் ...ன்றது மாறி

கடவுள் கொன்று கடவுள் கொன்று மிருகம் வளர்க்கபார்க்கின்றேன்றது தான் உண்மை ஆகி வருகிறது..:(

இப்போதைக்கு தேவைப்படும் நல்ல‌ சூடான‌ பதிவு......

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ஹாய்,

//பூமித்தாய் உன்னை இத்தனை நாள் சுமந்ததில் அர்த்தமிருக்கும்///பொருள் பொதிந்த‌ உண்மையான‌ வார்த்தைகள்.உங்கள் பதிவில் ஆதங்கம் புரிகிறது.

ரஜினிபாய்

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

சரியான வார்த்தையை பிடிச்சீங்க... காலையில் உள்ள கோபத்தில் தட்டியதே தவிற யோசித்து நிதானமாக போட்ட பதிவில்லை. உங்க வார்த்தையை படிச்சதும் “பெர்ஃபக்ட். பொருத்தமான பெயர்” என்று தோண்றியது. “மனோவியாதி, சைக்கோத்தனம்” உண்மை.

இவங்களை திருத்த இயலாது தேவா... ஆனால் நிச்சயம் இவர்களை எதிர்கலாம். இது போன்ற வீடியோக்களை பகிராமல், கமண்ட் பண்ணாமல் விடலாம். நான் நிச்சயம் அதை தான் பண்றேன். அதை பிரபலப்படுத்தாம விட்டாலே இது போல எடுக்கும் எண்ணம் குறையும்.

நீண்ட இடைவெளிக்கு பின் உங்கள் பதிவை என் இழையில் கண்டது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது தேவா. மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

”கடவுள் கொன்று கடவுள் கொன்று மிருகம் வளர்க்கபார்க்கின்றேன்” ஏற்கனவே வளர்ந்து கிடக்கு இளா... மனுஷங்க மிருகமா மாறிட்டாங்க இப்பவே. :(

உங்க பிசி வேலைகளுக்கு நடுவே பதிவிட்டமைக்கு மிக்க நன்றி இளா :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

கோபம் தான்... அளவுக்கு அதிகமான கோபம். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து கொடி பிடிக்கறாங்க, மெழுகுவர்த்து ஏத்தி போய் சேர்ந்த ஆத்மாவுக்கு வணங்குறாங்க. ஆனா உயிரோடு இருக்கும் போது? பெண்ணுக்கு கண் முன் நடக்கும் பிரெச்சனைக்கு துணை நிக்காம படமெடுக்கறாங்க. ஒரு ஆத்மா பிரியும் நேரம் படமெடுக்கறாங்க. அப்பறம் கொடி பிடிப்பதெல்லாம் போலி தானே? ஏன் இந்த நடிப்பு!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பலருடைய கோபத்தை சொல்லிட்டிங்க வனி. போட்டோ ஆர்வம் இப்ப அடுத்தவங்க அந்தரங்கத்தையும் எடுக்கணும்ன்னு அளவுக்கு மனித மனம் மாறிடுச்சு. புலி அடித்து கொல்லறத விடியோ எடுத்த நேரம் அனைவரும் அதன் கவனத்தை திசை திருப்பிருக்கலாம். யார் கைலயாவது மொபலை பார்த்தாலே பயம் நிச்சயம் மனசுல பரவுது . இப்ப புதுசா ஃசெல்பி எடுக்கறதும் நிறைய ஆபத்து நிறைஞ்சுருக்கு.

Be simple be sample

உங்க‌ பதிவு பலபேரோட‌ மனசுல‌ இருக்கிற வேதனையின் வெளிப்பாடு. நான் அந்த‌ செய்தியை பார்க்கும்போது நினைத்தேன், நம்மளால‌ ஒரு நிமிடம்கூட‌ இதை பார்க்கமுடியாம‌ சேனலை மாற்றுகிரோமே, இந்த‌ மாதிரி விஷயங்களை எப்படி இவர்களால் படம் எடுக்கமுடிகிறதுன்னு?

//இப்படி ஒரு நிலையில் மனிதன் காப்பாற்ற நினைப்பான், அல்லது பயத்தில் கண்ணை மூடிக்கொள்வான். இவை இரண்டுமின்றி நின்று நிதானமாக வீடியோ எடுக்க அரக்க மனதால் மட்டுமே முடியும். மனிதனால் முடியாது// மனிதத்தன்மை குறைந்து அரக்கத்தன்மை அதிகமாயிட்டுதான் வருதுபோல‌...

மனிதன் புது புது டெக்னாலஜிகளை கண்டுபிடித்து எவ்வளவுதூரம் மார்தட்டிக்கொள்கிறானோ, அவ்வளவுதூரம் அதனால் வரும் கேடுகளையும் அனுபவித்து வேதனைப்படவேண்டியதுதான் சாபக்கேடு போல!

பள்ளிக் குழந்தைகளுக்கு மொபைல்போன் வாங்கிக்கொடுப்பதினால் வரும் பின்விளைவுகளை, எத்தனை படங்களிலும் செய்திகளிலும் பார்க்கிறோம். இருந்தாலும் எத்தனைபேர் பெருமைக்காக‌ வாங்கிக்கொடுத்துவிட்டு, இதனால் அடுத்தவர்களையும் சிரமப்படுத்துகிறார்கள்?

இன்றைய‌ வாழ்க்கை சூழலில் நாம் மிகவும் வேகமாகவும், தீர்க்கமாகவும் போய்க்கொண்டிருக்கிறோம். அனால், நாம் போகும் பாதை சரியானதுதானா?அது தான் கேள்விக்குறி?? எந்த ஒரு அறிவியல் கண்டு பிடிப்பிலும் நன்மையும் தீமையும் சரி விகிதம் கலந்தே இருக்கிறது. இன்று செல்ஃபோன் கலாச்சாரம் கொள்ளை நோய் போல எல்லா தரப்பு மக்களிடமும் பரவி விட்டது...:( நிச்சயமாக இதில் நன்மைகள் இருந்தாலும் எத்தனை பேர் அதனால் ஏற்படும் தீமைகளையும் உணர்ந்திருக்கிறார்கள்??
நீங்கள் உங்கள் பதிவில் சொல்லியுள்ளது போல செல்ஃபோனுடன் காமிராவும் இணைந்து பல பாதிப்புகள் உண்டாக்குகிறது. பெண்களை அவர்களுக்குத் தெரியாமல் அனுமதியின்றி படம் எடுப்பது. அதை பலருக்கு அனுப்புவது , ஆபாசமாகப் படம் எடுப்பது மிரட்டுவது. ஆபாசப் படங்களை பரப்புவது,சாவதை கூட‌ படம் எடுத்து சம்பாதிப்பது... என பல செல் குற்றங்கள் தொடரத்தான் செய்கிறது...:( நாம் சம்மந்தப் படாதவரை நமக்கு அது வெறும் செய்தியே...:(
//நம்மை சுற்றி மனிதர்கள் இருக்கிறார்கள் என்று இனி எந்த தைரியத்தில் வெளியே போவது? // நிதர்சனமான உண்மை வனி..

இன்றைய‌ காலத்தில் அந்த‌ பூமித் தாய் நேரே காட்சி தருவாளானால் அவளையும் போகப் பொருளாய் படம் எடுத்து யூடூபிலும் முகப் புத்தகத்திலும் அரங்கேற்றம் செய்து லைக் வாங்க‌ ஒரு கூட்டம் அலைந்து கொண்டு தான் இருக்கும் வனி..:(

தவறு செய்பவர்களை கண்டிக்கும், தண்டிக்கும் எண்ணம் நாம் நேரடியாக பாதிக்கப்படும்போது மட்டும் தான் நமக்கு வருகின்றது. அனால் நடக்கும் தவறுகளுக்கு, நாமும் ஒரு காரணம் என்பதை நாம் மறுக்கவே முடியாது. சாவும், துக்கமும் அனைவருக்கும் பொதுவானதுதான் என்பதை எல்லோரும் என்று உணர்கிறார்களோ அன்று இது போல தவறுகள் திருத்தப்படலாம்..மாற்றப்படவேண்டியது தனிமனித எண்ணங்களையும் அதனால் விளைந்த பழக்கங்களையும் தான். அது தான் சமுதாயத்தின் செயல்பாடுகளை தீர்மானிக்கின்றது.... இன்றைய‌ நாட்டு நடப்புக்கு ஏற்ற‌ அருமையான‌ பதிவு வனி. வாழ்த்துக்கள்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

"மனிதம் புதைந்து சடங்கள் உலாவிக் கொண்டிருக்கின்றன" :((

வேறென்ன சொல்ல ??

புலி சம்பவத்தின் போது நான் மனதில் நினைத்த‌தையே நீங்களூம் சொல்லி இருக்கீங்க‌.
ஆனால், நிச்சயம் அதே இடத்தில் :'இறைவா இவனைக் காப்பாற்று:' என்று வேண்டிய‌ மனிதர்களும் இருப்பார்கள் வனி.
பொது இடங்களில் போட்டோ எடுக்கப்படுவதை தடுக்க‌ இயலாத‌ சூழல் வந்துவிட்டது.
முடிந்தவரை நாம் கவனமுடன் இருப்பதைத் தவிர‌ வேறு வழியில்லை:(

சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நல்ல பதிவுங்க.
ரொம்ப தெளிவாக இன்றைய நிலையை சொல்லியிருக்கீங்க.
ரொம்ப அருமைங் & நன்றிங்க.

நட்புடன்
குணா

ரொம்ப சரியா சொல்லீருக்கீன்க வனி.. உங்க பதிவு இந்த மாதிரி கெவலமான மன நிலையில் படம் எடுக்கும் எல்லருக்கும் ஒரு பாடமாக இருக்கும். Selfy எடுக்கிறென் என்று ஏதிரில் இருபவ்ர்கலை படம் எடுக்கும் கெவலமான மன நிலைமை இப்பொது சாதரணமாக எல்ல பொது இடங்களிளும் நடக்கிறது

All is Well

அன்பு வனி,

இப்பல்லாம் எல்லா விஷயத்திலயும் எல்லோருக்கும் உணர்வுகள் மரத்துப் போச்சுன்னுதான் தோணுது.

நாம‌ ஜாக்கிரதையா இருந்துக்க‌ வேண்டியதுதான்.

அன்புடன்

சீதாலஷ்மி

வனி நல்ல சொல்லி இருக்கீங்க. வனப்பகுதிகளுக்கு சுற்றுலா போறவங்க சும்மா இருக்காம, யானை தலை தென்பட்டா போதும் நின்னு அதனை உசுப்பேத்திவிட்டு துரத்தவைக்கிறதை தினமும் பேப்பர்ல படிக்கிறேன்.

ஒவ்வொரு வரியும் ரொம்ப ஆழமான கருத்துக்களை சொல்லி இருக்கு வனி.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஊருக்குள்ள நடமாடவே பயமா இருக்கு... இம்முறை ட்ரெயினில் ஊரில் இருந்து வந்தேங்க, டபுள் டக்கர். இறங்க வேண்டிய இடம் வந்ததும் ஒருவன் நின்னு மொபைலில் வீடியோ எடுக்கறாங்க ட்ரெயினில் சுத்தி... எல்லாரும் உட்கார்ந்திருக்காங்க, யார் அந்த சுதந்திரம் கொடுத்தது? யாருமே ஏன்பா வீடியோ எடுக்கறன்னு கேட்கல... :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இது டெக்னலஜியால் வந்தது மட்டும் இல்லைங்க... நீங்க சொல்வது போல் மனுஷனோட தன்மை மாறீட்டே வருது... :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இப்ப இருக்க நிலையில் யாரும் எதையும் உணர்வதாக தெரியவில்லை... உணர்ந்தாலும் திருந்த வாய்ப்பு இருப்பதாகவும் தெரியல. எங்கையோ சவுதியில தண்டனைன்னு ஒருவனை கொல்றதை காட்டினா கை தட்டுறாங்க... வேணும், இது போல குற்றத்துக்கு இப்படி தண்டனைன்னு... அதுவுமே அரக்க மனம் தானே? அவன் உண்மையில் குற்றவாளியா என்பது நமக்கு தெரியுமா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சரியா சொன்னிங்க... :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வேண்டிக்கிறவங்க எல்லா இடத்திலும் இருக்க தான் செய்யறாங்க நிகி.. அந்த மக்கள் இப்ப எனக்கு பிரெச்சனை இல்லை... இப்படி இதையெல்லாம் படமெடுப்பவர்கள் அதிகமாவது தான் வருத்தம் தருகிறது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) நீங்க எல்லாம் இளையவர்கள்.. பாதுகாப்பா பார்த்துகங்க நாட்டை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி... உண்மை தான் கண் முன் மொபைலை தூக்கினாலே முகத்தை மூடிக்க வேண்டி வரும் போல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நம்ம எவ்வளவு உஷாரா இருக்குறதுன்னே இப்பலாம் புரியல சீதா...

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குசும்பு.. சொம்மா இருக்க மாட்டாம சீன் போட்டு வாங்குறது. வேற என்னத்த சொல்ல இது போல ஆட்களை :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா