படித்ததில் பிடித்ததில் முயன்றது

சென்ற வாரத்தில் ஓர் நாள், ஒரு தேவைக்காக பாடசாலைப் புத்தக அறையிலிருந்த கைவினைப் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன். கண்ணில் பட்ட ஒரு கைவினைக் குறிப்பு என் கவனத்தைக் கவர்ந்தது. 'உணவு மூடி' - 'Food Cover ஒன்றிற்கான அந்தக் குறிப்பில் படங்கள் கோட்டுச் சித்திரங்களாக வரையப்பட்டிருந்தன.

கணனி, அது, இது என்று எதையாவது வாங்கும் போது கிடைக்கும் அட்டைப் பெட்டிகளை வீசுவதற்கு முன்னால் கைபிடிகளைப் பிடுங்கி வைத்துக் கொண்டு தான் வீசுவேன். அப்படிச் சேர்த்த கைபிடிகள் சில என்னிடம் ஏற்கனவே இருந்தன.

பிரதானமான பகுதிக்கு என்ன விதமான பெட்டியைப் பயன்படுத்தலாம் என்று சிந்திக்க, முதலில் மனதில் வந்தது ஐஸ்க்ரீம் பெட்டி தான். வீட்டுப் பாவனைக்காக அலங்காரம் எதுவும் இல்லாமல் மிக எளிமையாக, முன்பே இதே விதமாக செய்திருக்கிறேன். ஆனால்... ஐஸ்க்ரீம் பெட்டி சிறிதாக இருக்குமே! ஒரு தட்டைக் கூட மூடி வைக்கப் போதாதே!

"மிஸ், ஐஸ்க்ரீம் பெட்டியை விட ட்ரான்ஸ்பேரண்ட் கண்டெய்னரை வைத்துச் செய்தால்தானே உள்ளே வைக்கும் உணவு தெரியும்!" என்னுடன் கூட ஒத்தாசைக்கு வந்திருந்த மாணவி அபிப்பிராயம் தெரிவித்தார்.

பாடசாலையில் 'மின்சார அறை' என்று ஒன்று உண்டு. பெயருக்குத் தான் மின்சார அறை. அங்கே பலதும் கிடைக்கும். தேடிப் பார்க்க, கேக் பெட்டி ஒன்று கிடைத்தது. அதில் ஒட்டியிருந்த கடதாசிகளைக் கிழித்து, உரித்து, பசையை நீக்கிச் சுத்தம் செய்வது... நினைத்த வேகத்தில் கைவிட்டேன் அந்த எண்ணத்தை.

இரண்டு நாட்கள் கழித்து அதே மாணவி என்னைத் தேடி வந்தார். "மிஸ்... வீட்டுக்குப் பக்கத்துக் கடையில் Mesclun பெட்டி கிடைத்தது. அந்தக் க்ராஃப்டுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று எடுத்து வந்தேன்," என்றார். இளம் சாலட் கீரைகள் வரும் பெரிய பெட்டி அது. பெட்டிகள் எங்கள் தேவைக்கு மேலேயே கிடைத்தன.

எதையும் முதலில் நான் ஒரு தடவை செய்து பார்க்காமல் சின்னவர்களைச் செய்ய வைப்பதில்லை. செயல்முறைச் சிக்கல்கள் எனக்குத் தெரிய வர வேண்டும். சின்னவர்களுக்கு ஏற்றபடி சில விடயங்களை மாற்ற வேண்டி வரும்.

அப்படி முயற்சி செய்து பார்த்த கைவினையை, படிமுறைகள் அதிகம் இல்லாத காரணத்தாலும், 'இது 100% என் சிந்தனையில் உதித்த யோசனை,' என்று உரிமை கோர இயலாததாலும், இங்கு தொட்டுக்கொள்ளத் தருகிறேன். :-)

தேவையான பொருட்கள்

பெரிய க்ளியர் ப்ளாஸ்டிக் பெட்டி
நெய்ல் பாலிஷ் ரிமூவர் & பஞ்சு
ப்ளாஸ்டிக் கைபிடி (தேவையானால் அதன் பின் இணைப்பு)
க்ராஃப்ட் நைஃப்
மார்க்கர்
பொருத்தமான க்ளூ
அலங்கரிக்க லேஸ், ரிப்பன் & ரிப்பன் ரோஜாக்கள்

செய்முறை

1. மூடி தேவையில்லை. பெட்டியை மட்டும் சுத்தம் செய்து கழுவி, உலர வைக்கவும். (கடதாசிகளை உரித்து எடுத்த பின்னால் க்ளூ அடையாளம் இருந்தால், 'நெய்ல் பாலிஷ் ரிமூவர்' தொட்டுத் துடைத்தால் போய்விடும்.)
2. பெட்டியைத் திருப்பிப் போட்டு, அதன் நடுவில் கைபிடியை வைத்து, அதை எங்கு சொருக வேண்டும் என்பதை மார்க்கரால் குறித்துக் கொள்ளவும்.
3. அடையாளம் செய்த இடத்தில் க்ராஃப்ட் நைஃபால் கீறி வெட்டவும். பெட்டியின் உள் உயரத்திற்குப் புத்தகங்களை அடுக்கி அதன் மேல் ஒரு தடித்த அட்டை அல்லது க்ராஃப்ட் மாட் போட்டுவிட்டு பிறகு வெட்டினால் வேலை இலகுவாக இருக்கும்.
4. கைபிடியை வெட்டிய கோட்டின் வழியே சொருகி அதற்கான பின் இணைப்பு இருந்தால் அதையும் மாட்டிவிடவும்.
5. லேஸ், ரிப்பன், பூக்கள் போன்றவற்றை ஒட்டி அலங்கரிக்கவும். (உணவு மூடி என்பதைக் கவனத்திற் கொண்டு அலங்கரிக்கும் பொருட்களைத் தெரிந்து கொள்ளவும். க்ளிட்டர், confetti, கற்கள் போன்ற சிறிய பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம்.)

க்ளூ - பெட்டி & அலங்கரிக்கும் பொருட்களின் தன்மைக்கு ஏற்ற க்ளூவைத் தெரிந்து கொள்ளுங்கள். இரசாயனப் பொருட்களின் வாசனை வராததாக இருப்பது நல்லது.
--------
ஒரு தடவை இதைப் பாடசாலைக்குக் கொண்டு போய்க் காட்டி செய்முறையை விளக்கிவிட்டால் சின்னவர்கள் தங்கள் கற்பனையையும் கலந்து விதம் விதமாகச் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். என் உதவி அதிகம் தேவையிராது. நான் தேவையான பொருட்களை மட்டும் சேகரிக்க உதவினால் போதும்.

இந்த மூடியை 'ஸ்டாஃப் ரூம்' மேசையில் வைக்கலாம் என்றிருக்கிறேன். உடையும் வரை அங்கு இருக்கட்டும்.

Average: 5 (5 votes)

Comments

நல்ல‌ ஐடியா குடுத்திருக்கீங்க‌, நன்றி இமாம்மா.

இந்தமாதிரி நிறைய‌ பொருட்கள் சேர்த்துவைத்துள்ளேன், அதை வைத்து என்ன‌ செய்யறதுன்னு தெரியாமலே. எதையும் அவ்வளவு சீக்கிறம் தூக்கிபோட‌ மனம்வராத‌ காரணத்தினால் மட்டுமே.
அறுசுவை இருக்கும் தைரியத்தினால் என்றும் சொல்லலாம். நான் சேர்த்துவைத்துள்ள‌ பொருளைவைத்து, கண்டிப்பா யாராவது ஒருவர் ஏதாவது ஒன்று செய்யக் கற்றுக்கொடுத்துவிடுவீர்கள்.

உங்கள் உணவு மூடி மிக‌ அழகாக‌ உள்ளது.

நல்ல‌ கிரியேட்டிவிட்டி உங்களுக்கு,
ரொம்ப‌ நல்லா வந்து இருக்கு 'உணவு மூடி' - 'Food Cover

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

உங்க கைப்பட்டால் எல்லாமே அழகுதான் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

குட் ஐடியா.. செம‌ ஈசி. வெரி யூஸ்புல்.:)

உணவு மூடி ரொம்ப புதுமையாகவும், அழகாகவும் இருக்குங்க :-)

நட்புடன்
குணா

அன்பு இமா,

அழகா இருக்கு.

தொடர்ந்து ஸ்டூடண்ட்ஸ் இதே போல‌ செய்து பாத்திருப்பாங்கன்னு நினைக்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

இமா ரொம்பவே நல்லா இருக்கு.

//ஒரு தடவை இதைப் பாடசாலைக்குக் கொண்டு போய்க் காட்டி செய்முறையை விளக்கிவிட்டால் சின்னவர்கள் தங்கள் கற்பனையையும் கலந்து விதம் விதமாகச் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். என் உதவி அதிகம் தேவையிராது..// கொடுத்துவைத்த சிறார்கள் :) ஒரே தடவையில் புரியவைக்கும் ஆசிரியை கிடைத்திருக்கிறார் அல்லவா!!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.