தூதுவளை

அனைவருக்கும் எனதன்பு வணக்கங்கள் :)

தூதுவளை:

இத்தாவரத்தினை பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பிருக்கும். அறியாதவர் இருந்தால் அறிந்துகொள்ளவும், அறிந்தவர்கள் அறிந்தவற்றை பகிர்ந்து கொள்ளவும் உதவும் என நினைத்தே இச்சிறுபதிவினை உங்கள் முன் வைக்கிறேன்.

குழந்தை முதல் (1 1/2 வயதுக்குமேல்) பெரியவர்வரை சளிப்பிடித்தால் தூதுவளை இரசம் குடித்தால் அல்லது சாதத்தில் குழைய பிசைந்து உண்டால் சரியாகும் என்று அனைவரும் ஓரளவுக்கேனும் அறிந்திருப்போம்.
நெஞ்சு சளிக்கும் அருமருந்து என்று பாட்டிகாலம் முதல் கேள்விப்பட்டிருப்போம்.
இதனை வெயில் படும் இடத்தில் தொட்டியில் வைத்தாலே நன்கு வளர்ந்துவிடும்.
கொடிபோல் படரும் வகை என்பதால் படர்வதற்கு ஏதுவான இடத்தில் வைக்கவேண்டும்.
முல்லைக்கே தேர் கொடுத்த நமக்கு இதனை படரவைக்கவா சொல்லவேண்டும். தேர் அளவுக்கு வேண்டியதில்லை, சிறு குச்சிகளாலான பந்தல் அமைத்தாலே போதுமானது.
இச்செடியில் ரோஜா செடியில் உள்ளது போன்று (அளவில் சற்று சிறிது) இருக்கும். இலையிலும் முட்கள் இருக்கும்.

செடியில் இருந்து இலைகளை பறிக்கவே, சிறு கத்தரி உபயோகிப்பது மிகவும் நன்று. முள் குத்தாமல் இருக்க அதுதான் சரியான வழி.

இப்படி பக்குவமாக பறிக்கப்பட்ட இலைகளை எப்படி இரசம் வைப்பது என்பதைப்பற்றி இங்கு காண்போம்.

மிகவும் கவனமுடன் பறிக்கப்பட்ட இலைகளை நன்கு நீரில் அலசிவிட்டு, அதிலும் உள்ள சிறு முட்களை கத்தரியால் வெட்டிவிடவும். (சிறு கத்தரிக்கோல்தான் பயன்படும்)

பின்பு ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அரை ஸ்பூன் அளவு எண்ணைய் ஊற்றி, அதாவது பட்டும்படாமல் எண்ணைய் ஊற்றி லேசாக சூடானவுடன் தூதுவளை இலைகளைப்போட்டு நன்கு வதக்கி எடுக்கவும்.
வதக்கினால் மட்டும் போதும். தீய்ந்துவிடக்கூடாது. கவனம் தேவை.

பூண்டு 8 பல்,
சீரகம் 1 மேசைக்கரண்டி,
மிளகு 1 மேசைக்கரண்டி,
கறிவேப்பிலை 4 இணுக்கு
புளி சிறு நெல்லிக்காய் அளவு
தக்காளி 2(பெரியது, வேகவைத்தது)

தாளிக்க:
வற(ர):))மிளகாய் 1
கறிவேப்பிலை 1இணுக்கு
சின்னவெங்காயம் 1

செய்முறை:
தக்காளியை நன்கு கரைத்து வைக்கவும். புளியை நன்கு கரைத்து வடிகட்டி தக்காளி கரைசலுடன் கலந்து வைக்கவும்.

மிக்ஸியில் வதக்கியதூதுவளை இலைகளுடன் மேற்சொன்ன பொருட்களைப்போட்டு (பூண்டு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை) நன்கு அரைத்து எடுக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து சூடானவுடன் அரை ஸ்பூன் எண்ணைய் விட்டு கடுகு போடவும்.

கடுகு பொரிந்தவுடன் தாளிக்க கொடுத்த பொருட்களான சின்ன வெங்காயம் (இரண்டாக அரிந்தது) வறமிளகாய் (இரண்டாக கிள்ளியது) கறிவேப்பிலை ஆகியவற்றைப்போட்டு வதக்கி, மேற்சொன்ன தக்காளி, புளி கரைசல் மற்றும் அரைத்த விழுதினை சேர்க்கவும்.

கலவை நன்கு நுரைத்து வரும்பொழுது அடுப்பை நிறுத்தவும்.
சூடான தூதுவளை இரசம் தயார்!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பொறுமையுடன் தூதுவளை இரசத்தயாரிப்பினை படித்த உங்கள் அனைவருக்கும், இதோ இன்னும் ஒரு அருமையான குறிப்பூ :)

அதாவாது யாதெனில் "கறிவேப்பிலை சாதம்"

தேவையானவை:

பொலபொலவென வடித்த சாதம்.. ஒரு கப் (நல்லெண்ணய் சிறிது சேர்த்து சமைத்தால் உதிராக வரும்)
கறிவேப்பிலை.. இலைகளாக உதிர்த்தது 1 1/2 கப்
வறமிளகாய்... 4 (நான் 2 தான் போடுவேன்)
கடலைப்பருப்பு.. 2 மேசைக்கரண்டி
உளுந்துபருப்பு.. 2மேசைக்கரண்டி
சீரகம்.. 1மேசைக்கரண்டி
எள்... 1மேசைக்கரண்டி (கறுப்பு, வெள்ளை எதுவானாலும் சரி)
தாளிக்க:
சின்னவெங்காயம்.. 10 (பொடியாக நறுக்கியது)
வறமிளகாய்.. 1(இரண்டாக கிள்ளியது)
கறிவேப்பிலை.. 1 இணுக்கு

வாணலியில் 1 1/2 தேக்கரண்டி எண்ணைய் ஊற்றி முதலில் கடலைப்பருப்பையும் உளுந்து பருப்பையும் போட்டு சிவக்க வறுக்கவும்.
சிவந்து வரும் நிலையில் சீரகம், மிளகாய் போடவும்.
பின்பு கறிவேப்பிலை போட்டு மணம் வரும் வரை வதக்கவும்.
மொறுமொறுப்பாகிவிடும். ( தீய்வதல்ல, பச்சை கலரிலேயே இருக்கவேண்டும்). எள்ளை தனியாக வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவேண்டும்.

இவற்றை நன்கு ஆறவைத்து மிக்ஸியில் பொடித்து வைக்கவும்.
மீண்டும் வாணலியை அடுப்பிலேற்றி 1/2 தேக்கரண்டி எண்ணைய் ஊற்றி, காய்ந்தவுடன் கடுகு போட்டு பொரிந்தவுடன் தாளிக்க கொடுத்தவற்றை போட்டு தாளித்து எடுத்து வைக்கவும்.

வடித்த சாதத்துடன் பொடித்த கலவை, தாளித்த கலவையினை சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கலக்கவும்.
சுவையான கறிவேப்பிலை சாதம் தயார்.
குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பர். நெய் சேர்த்தால் கூடுதல் சுவை கிடைக்கும்.

புகைப்படம் மட்டுமே சுமார்!! சாதம் சுவை நல்லா இருக்கும்!!

மிக்க நன்றி _()_.

பின் குறிப்பு:
வறுத்த வேர்க்கடலையை ஒன்றிரண்டாக மிக்ஸியில் பொடித்தும் சேர்க்கலாம்.

5
Average: 5 (2 votes)

Comments

தூதுவளை, இந்த‌ செடியை வளர்க்கனும்னு ரொம்ப‌ ஆசப்பட்டு விதையெல்லாம் வாங்கி போட்டு பார்த்தேன். ஒன்னும் சரியா வரலை, நீங்க சொல்றத‌ பார்த்தா ஈசியா வளர்க்கலாம் போல‌ இருக்கு. அடுத்தமுறை முயற்சி செய்துபார்க்கனும்.

உங்க‌ குறிப்பு 2 ம் சூப்பர். படம் சுமாரா எல்லாம் இல்லை, நல்லாதான் இருக்கு.

ரசம் இங்க வரைக்கும் மணக்குது அருள்.சாதமும் தான்.ஹெல்தி

Be simple be sample

நல்ல‌ செய்தி. என் அம்மா தூதுவளை கருவாட்டுக்குழம்பு வைப்பார். உடலுக்கு நல்லது என்பார். ரசம் நான் கேள்வி பட்டது இல்லை. இந்த‌ முறையில் முயற்சி செய்து பார்க்கிறேன்.
அன்புடன்
தயூ

நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின்!!!

//அறிந்தவர்கள் அறிந்தவற்றை பகிர்ந்துக்கொள்ளவும்//
நான் சாதாரணமாக சொதி அல்லது ரசம் சமைத்து இறக்கும் முன்பாக தூதுவளை இலை சேர்ப்பேன். அரைத்த சம்பல் மிகவும் பிடிக்கும்.

பிடித்த இன்னொரு விடயம் - பழத்தைக் கொத்துக் கொத்தாக வெட்டி வீட்டினுள் தொங்கும் செடிகளில் மாட்டிவிடுவது. அழகாக இருக்கும். :-)

‍- இமா க்றிஸ்

இரண்டுமே நல்ல குறிப்பு... தூதுவளை இங்கு கிடைக்காது, கருவேப்பிலை சாதம் செய்திடலாம்..

கலக்குங்கோ...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

தூதுவளை கஷாயம் சளிக்கு மிகவும் நன்று.
ரசம் வைத்து அடுப்பிலிருந்து இறக்கும் சமயம் இலையைப் போட்டு ரசம் வைத்துள்ளேன்.
கறிவேப்பிலை சாதம் செய்து பார்க்கிறேன். ஹெல்தியான‌ குறிப்பு.:)

அருள் இரண்டுமே சத்தான ரெசிபி சூப்பர் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நல்ல குறிப்புகள். அம்மா வீட்டில் இருக்கு செடி. அம்மா செய்வாங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு அருள்,

தூதுவளை கிடைக்கிறது சிரமம்.

கருவேப்பிலை சாதம் செய்து பார்த்து சொல்றேன். ரெசிப்பிகள் இரண்டுமே நல்லா இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

அனு விதை போடுவதை விட சிறு செடியாக வாங்கி நட்டுவைய்யுங்கள், வளர்ந்துவிடும். நர்சரிகளில் செடி கிடைக்குது :) இந்த செடி பறவைகளின் அன்பளிப்பு :)
நானும் முன்னாடி விதைலாம் போட்டுப்பார்த்தேன் முளைக்கல. ஆனா இங்க இருக்கும் சிறு செடிகளை வேறு இடத்தில் பிடுங்கி நட்டாலும் நன்கு வளர்கிறது.

ரொம்ப ரொம்ப நன்றி அனு :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சரியாத்தான் சொல்லி இருக்கீங்க ரேவ்ஸ், உண்மைலுமே ரசம் ரொம்பவே மணந்துச்சு :) மிக்க நன்றி ரேவ்ஸ் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

தயூ, எனக்கு ரசம் மட்டுமே தெரிந்த குறிப்பு :) சட்னி கூட அரைத்ததில்லை, நீங்கள் சொல்லவும்தான் இதெல்லாம் யோசிக்க வைக்கிறது. நான் கருவாடு சமைத்ததில்லை, ஆனால் வேறு குழம்புகளில் போட்டுப்பார்க்கலாம் என்னும் ஆர்வத்தை தூண்டுகிறது தங்களின் இப்பின்னூட்டம் மிக்க நன்றி தயூ :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

இமா, நீங்களும் தயூவைப்போன்றே என்னுள் ஆர்வத்தை விதைத்துள்ளீர்கள் அடுத்தமுறை முயற்சிப்பேன்.
பழம் அம்மா வீட்டு வேலிகளில் நிறைய இருக்கும். இங்கு இன்னும் செடிகள் பெரிதாக வளரவில்லை.

//பழத்தைக் கொத்துக் கொத்தாக வெட்டி வீட்டினுள் தொங்கும் செடிகளில் மாட்டிவிடுவது. அழகாக இருக்கும். :-)//
உங்களின் இரசனை உலகறிந்த விசயம்தானுங்களே!!

மிக்க நன்றிங்க இமா :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

தூதுவளை கிடைக்கலேனாலும் கறிவேப்பிலை சாதம் செய்றேனு சொன்னது மிக்க மகிழ்ச்சி ப்ரேம்ஸ் :) மிக்க நன்றி தோழி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஆமாம் நிகி சளிக்கு மிகவும் நல்லது :) நான் இங்கு கூறியிருக்கும் முறையிலேதான் சமைப்பது வழக்கம். எப்படி இலையை அரைக்காமலே போடுவீங்களா?
கறிவேப்பிலை சாதம் செய்து பார்த்து சொல்லுங்க எப்படி இருந்ததுனு :) மிக்க நன்றி தோழி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஆமாம் சுவா, இரண்டுமே எனக்கு ரொம்ப பிடித்த சத்தான குறிப்பு :) மிக்க நன்றி தோழி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வனி மிக்க நன்றி :) அப்ப உங்களுக்கு எளிதா இந்த வகை ரசம் வெக்கலாம்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சீதாமேடம், தூதுவளை ஏதேனும் கீரைக்காரரிடம் சொல்லி வைத்துப்பாருங்கள் கிடைக்கலாம். இங்கு வல்லாரை, பொன்னாங்கண்ணி ஈஅரியவகை) போன்றவற்றை கீரைக்காரரிடம் சொல்லி வாங்கியதுண்டு.
மிக்க நன்றி சீதாமேடம் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அருள் அப்படியே போடலாம். அரைக்க‌ வேண்டாம்.

நன்றி நிகி :) அடுத்த முறை அப்படியே போடுறேன் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.