ஸ்ப்ரவுட்டட் இராகி இட்லி & தோசை

தேதி: October 31, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

இராகி - 2 கப்
குண்டு உளுந்து - அரை கப்
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
நெய் (அ) எண்ணெய்


 

இராகியை தண்ணீரில் நன்கு நான்கைந்து முறை களைந்து, கல் அரித்து இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் நன்றாக ஊறியிருக்கும். பிறகு மேலும் இரண்டு அல்லது மூன்று முறைகளாவது களைந்து, தண்ணீரை சுத்தமாக வடித்துவிட்டு காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
மற்ற தானியங்களைப் போல் இராகி ஒரே நாளில் முளைவிடுவதில்லை. அதனால் கூடுதலாக சில மணி நேரங்கள் அப்படியே வைத்திருக்கவும். உளுந்தையும் வெந்தையத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கழுவி, 3 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊறவிடவும்.
க்ரைண்டரில் முளைகட்டிய இராகியைப் போட்டு அரைத்தெடுத்துக் கொள்ளவும்.
பிறகு ஊற வைத்த உளுந்தையும், வெந்தயத்தையும் அரைத்து எடுக்கவும்.
உளுந்து மாவுடன் இராகி மாவைச் சேர்த்து, உப்பு போட்டு கையினால் நன்கு கலந்து வைக்கவும். (ஆறிலிருந்து எட்டு மணி நேரங்களில் மாவு புளித்து இட்லி, தோசை செய்வதற்கு ஏதுவாக இருக்கும். அவரவர் வசிக்கும் இடங்களின் தட்பவெப்பத்திற்கு ஏற்ப நேரம் மாறுபடும். புளித்த மாவு அரைத்து வைத்த போது உள்ள அளவைவிட, பாத்திரத்தில் உயர்ந்து (பொங்கி) இருக்கும்).
இட்லி தட்டில் லேசாக நெய் அல்லது எண்ணெய் தடவி, மாவை எடுத்து இட்லிகளாக ஊற்றி வேக வைக்கவும். (மினி இட்லி பாத்திரத்தில் தண்ணீர் விரைவில் கொதிக்கத் துவங்கிவிடும். அதனால் இட்லியும் விரைவில் வெந்துவிடும்).
வெந்ததைச் சரிபார்த்து இட்லியை எடுக்கவும். (இட்லிகளை எடுப்பதற்கு முன்பாக ஒரு தட்டில் தண்ணீர் ஊற்றி, அதில் இட்லி தட்டின் பின்பகுதி லேசாகப் படும்படி வைத்தெடுத்து, இட்லிகளை எடுத்தால் மிகவும் எளிதாக வரும்). தோசைக்கல்லை சூடாக்கி எண்ணெய் தடவி, இதே மாவை தோசையாகவும் சுட்டெடுக்கலாம்.
ஹெல்தி & டேஸ்டி ஸ்ப்ரவுட்டட் இராகி இட்லி & தோசை ரெடி. சட்னி, சாம்பாருடன் பரிமாறவும்.

இராகியில் கால்சியம் சத்து நிறைந்துள்ளதால் எலும்புகள் உறுதிபட மிகவும் உதவுகிறது. வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டிய சிறுதானிய வகைகளில் இராகியும் ஒன்று.

இராகியில் சிறு கற்கள் மற்றும் தூசுகள் இருக்கக்கூடும். அதனால் ஊற வைப்பதற்கு முன்பும், ஊறிய பிறகும் நன்றாக களைந்து, கல் அரித்து முளைகட்ட வேண்டும்.

நன்றாக வேக வைக்காமல் உண்டால் வயிற்றுப்போக்கு ஏற்படும் வாய்ப்புள்ளது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஸ்ப்ரவுட்டட் இராகி இட்லி & தோசை .. வெரி வெரி ஹெல்தி ரெசிபி... ரொம்ப நல்ல குறிப்பு.. டயட் இருக்குறவங்க ஃபாலேவ் பண்ணா நிச்சயம் வெயிட் குறையும்.... சூப்பர் டிஷ் :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நல்ல‌ ஆரோக்கியமான‌, சுவையான‌ குறிப்பு...

உங்க‌ இட்லி தட்டு சூப்பரா இருக்கு அருள்......

முதல் ஃபோட்டோவில் நல்ல‌ சிவப்பா அழகா இருந்த‌ ராகி, அடுத்த‌ ஃபோட்டோவில் கருத்துப் போயிருச்சே! இப்ப‌ தெரியுது, அழகுக்கும், ஆரோக்கியத்துக்கும் சம்மந்தமில்லைன்னு!........:))))))

கனி கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றி :) குழந்தைகளுக்கு இது போன்று முளைகட்டிய இராகியை அரைத்து மிதமான வெயிலிலே உலர்த்தி பவுடராக்கி கஞ்சியாகவும் கொடுப்பதுண்டு. எலும்புகள் உறுதியாக வளர்வதற்கு மிகவும் நல்லது.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அனு பதிவிற்கு மிக்க நன்றி :) மினி இட்லி செய்வதற்கு மட்டுமே எடுப்பேன். மத்தபடி துணிபோட்டு இட்லிவார்க்கும் முறைதான். ஆனா என்ன காலை அவசரத்தில போட்டோ எடுக்கும்படியாவதால் சரியாக எடுக்கமுடிவதில்லை.

கடைசி வரி அழகா சொல்லி இருக்கீங்க :) ஆனா படம் வெளிச்ச வித்யாசத்தை வெளிச்சம் போட்டு காட்டிடுச்சு :)))

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

குறிப்பினை வெளியிட்ட அட்மின் அண்ணா & டீமிற்கு மிக்க நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.