கதம்பம்

மிக நீண்ட இடைவெளிக்கு பின் இன்று மீண்டும் வனி விஷயத்தோட வந்திருக்கேன் :) என்னடா போஸ்ட்டே போடல ரொம்ப நாளான்னு இருந்தது, சரி தினம் பார்க்கும் எத்தனை விஷயம் இருக்கு, பேசலாம் தானே? இப்போ பரபரப்பா ஃபேஸ்புக்ல ஒரு பெண்ணின் படம் போட்டு இந்த பெண்ணை பற்றி தப்பான செய்தி வந்தது அப்படி இப்படின்னு போடுறாங்க. கூடவே பெண்களே உங்கள் புகைப்படத்தை எங்கையும் பகிர்ந்துக்காதீங்கன்னு எச்சரிக்கை வேற. சரின்னு விட்டா இன்னைக்கு ஒரு ஆர்டிகல் படிச்சேன். அதுல வாட்ஸப்ல நம்ம நண்பர்கள் லிஸ்ட்ல இருக்கவங்களே நம்ம மேல கோபம்னா நம்ம படத்தை தப்பா பயன்படுத்திட கூடும் என்றார்கள். இதுல ஹைலைட் என்ன தெரியுமா... இதனால் பெண்ணின் வாழ்க்கையே “???” ஆயிடுமாம். செட்டிங் மாற்று அதை மாற்று இதை மாற்று முடிஞ்சா படமே போடாம இரு ரொம்ப நல்லதுனு ஆயிரம் அட்வைஸ். நல்ல வேளை எல்லாரும் முகமூடி போடுங்கன்னு சொல்லாம விட்டாங்க. படிச்சு படிச்சு எனக்கு மூச்சு முட்டுதுய்யா... நிறுத்துங்க நிறுத்துங்க. இதுவும் கூட ஆணாதிக்கம் தானோ?! எனக்கு அப்படி தான் தோணுது. சரி விடுங்க எனக்கு எப்பவுமே அடக்குமுறை பிடிப்பதில்லை... அதனால் தப்பு தப்பா தோணுதோ என்னவோ ;) [நீ உன் படத்தை எங்க போட்டன்னு யாரும் கேட்க கூடாது] புகைப்படம் நாம போட்டா தானா? அதான் இப்ப பொது இடங்களில் அவங்களே நம்மை அறியாம எடுத்துக்கறாங்களே.

ஒரு ஆணை பிடிக்கலன்னா நாமும் கூட இனி ”இவர் திருடர்” என்று அவர் புகைப்படத்தை பரப்பிவிடலாம் போலவே. பின் “ஆண்களே உஷார்”னு போஸ்ட் போடுவாங்களோ?! ம்ஹூம்... போட மாட்டாங்க, நம்ம ஊரில் மானம் மறியாதை எல்லாம் காப்பாற்ற வேண்டியது பெண் மட்டும் தானே? எனக்கு ஒரு டவுட்டு... பல சினிமா புகழ் பெண்கள், பிரபலங்களின் படங்களின் கீழே கீழ்த்தரமா கமண்ட் பண்ணும் ஆண்களை பார்க்கிறேன், இதனால் அவங்க வாழ்க்கை எல்லாம் என்னாச்சு? அந்த கமண்ட்ஸை சீ போன்னு போட்டுட்டு போக பணம் வேண்டுமா? மிடில் க்ளாஸ் மாதவன் தான் மனைவியை, சகோதரியை, வீட்டு பெண்ணை அடக்கி ஒடுக்கி சந்தேக கண்ணோடு வைக்கிறானா? என்ன என்னவோ கேள்விகள் மனதில் எழுது. பதில் தான் இல்லவே இல்லை. சரி இதெல்லாம் விடுங்க... உண்மையில் நாமெல்லாம் சுதந்திரமா இருக்கோமா? சுதந்திரம்னா முதல்ல என்னப்பா? எனக்கு புரியலயே. சுயமாக சிந்தனை, சுயமாக முடிவெடுத்தல், கட்டுப்பாடு இல்லாத வாழ்வு?? எது சுதந்திரம்? சுயமாக முடிவெடுத்தல்... இங்கையே நம்ம சுதந்திரம் காணாம போகுதே! நம்மில் எத்தனை பேர் நாமா முடிவெடுக்கறோம்? கல்யாணம் ஆகும் வரை அப்பா அம்மா அண்ணன் கட்டுப்பாடு, அப்பறம் கணவன் மற்றும் அவர் குடும்பத்தார், வயதானா மீண்டும் வீட்டில் உள்ள ஆண் பிள்ளை பிடியில்! ம்ம்... காலையில் எழுந்தா என்ன டிஃபன் பண்றது என்பதில் துவங்கி, பிள்ளைகள் கல்யாணம் வரை ஆணின் முடிவாக தான் தோண்றுகிறது. எல்லாரும்னு சொல்லி இங்க நான் சிக்க விரும்பல... அட்லீஸ்ட் அதிக சதவிகிதம்னு சொல்லலாம். :)

வேலைக்கு போகும் பெண்கள் கூட சுதந்திரமா இல்லை. வேலைக்கு போறதா வேணாமா, எந்த வேலைக்கு போவது என எல்லாமே அவங்க தான் முடிவு பண்றாங்க. பலர் சம்பாதிக்கிறதை கணவரிடம் கொடுத்துட்டு செலவுக்கு வாங்கிட்டு போறங்க! இதுக்கு ஏன்மா சுய சம்பாத்தியம்னு கேட்க தோண்றும். வீட்டு செலவுகளில் பங்கெடுப்பது வேறு, அது அவசியம், இல்லன்னா வேலைக்கு போய் என்ன சாதிக்கிறோம்? ஆனா வாங்குனதை அப்படியே அவரிடம் கொடுப்பது, அவர்கிட்ட செலவுக்கு வாங்குறது.. ம்ஹூம், சரி இல்லையே.

பெண்களுக்கு எதிரா செயல்படுவது எல்லாம் ஆண்கள் தான்னு சொல்லக்கூடிய நிலையில் நாம இல்லை. முதல் உதாரணம் மாமியார் நாத்தனார் பிரெச்சனை. பெண்ணுக்கு பெண்ணே எதிரி தான். பல பெண்கள் அடுத்தவர் புகழ், பேர், முன்னேற்றம், மகிழ்ச்சி என எல்லாத்தை கண்டும் புகையத்தான் செய்யறாங்க. உலகத்துல (??) சாரி நம்ம நாட்டுல நிறைய மனநிலை பாதிக்கப்பட்டவங்க அதிகமாயிட்டாங்களோ? அட என்னங்க ஷாக் ஆகறீங்க? பைத்தியமா இருக்கவங்க மட்டும் தான் மனநிலை பாதிக்கப்பட்டவங்களா? இல்லைங்க. இப்படி சரியான சிந்தனை இல்லாத மனிதர்கள் எல்லாம் மனநிலை பாதிக்கப்பட்டவர்களா தான் எனக்கு தெரியறாங்க. போட்டி பொறாமை இல்லாத உலகம் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்?! அட நாம கஷ்டப்பட்டாலும் மற்றவராவது மகிழ்ச்சியா இருக்கட்டும்னு நினைக்கிற மனசு எங்கங்க போச்சு நமக்குலாம்?

பெண்களுக்கு வரும் துன்பம் எல்லாம் அடுத்தவர் வார்த்தை தாங்க. எல்லாவற்றையும் தாங்கும் இதயம் கொண்ட பெண்ணுக்கு ஏனோ நோக மற்றவர் பேசும் வார்த்தைகளை தாங்கும் சக்தி குறைந்து போகிறது. என்ன சாதிக்க போறோம் அடுத்தவருக்கு துன்பம் தந்து? மற்றவர் தப்பானவர் என்று சொல்லி நாம உயர்ந்தவர் ஆகிவிட முடியுமா? முடியாதுங்க. யாரையும் குறை சொல்லி யாருக்கும் லாபம் இல்லை, மற்றவருக்கு நஷ்டம் வேணுமானால் ஏற்படலாம். சிந்திச்சு பாருங்க, அப்போ பெண்கள் படத்தை தப்பா பயன்படுத்தினாலும் அவள் வாழ்வு வீனாகாது, அவளை சுற்றி அன்பானவர்கள் இருக்கும் போது எப்படிங்க அவளுக்கு அவமானமும், அழிவும் ஏற்படும்? எந்த துன்பத்தில் இருந்தும் அவள் மீண்டு வர மாட்டாளா? சும்மா பெண்ணை கட்டுப்படுத்த முயற்சி பண்ணாம அவளுக்கு எந்த பிரெச்சனை வந்தாலும் உடன் இருந்து பலம் சேருங்க. பெண் என்றால் கட்டுப்பட வேண்டியவள் எனும் பழைய பஞ்சாங்கத்தை மூட்டை கட்டி போடுங்க. அவளது பாதுகாப்பு என்பது தன்னை காத்துக்கொள்ள தேவையான பாதுகாப்பு உணர்வு தானே தவிற புகைப்படத்தில் ஒன்றுமில்லை. யாரோ தைரியமற்ற கோழை, பின்னால் குத்துபவருக்காக நாம் நேசிப்பவரின் விருப்பங்களை சுதந்திரத்தை அழித்து சிரகொடித்து வீட்டில் பூட்டுவதா? சிந்தியுங்கள்.

5
Average: 4.4 (7 votes)

Comments

ம்ம்.//பெண்களுக்கு எதிரா செயல்படுவது எல்லாம் ஆண்கள் தான்னு சொல்லக்கூடிய நிலையில் நாம இல்லை. முதல் உதாரணம் மாமியார் நாத்தனார் பிரெச்சனை. பெண்ணுக்கு பெண்ணே எதிரி தான். பல பெண்கள் அடுத்தவர் புகழ், பேர், முன்னேற்றம், மகிழ்ச்சி என எல்லாத்தை கண்டும் புகையத்தான் செய்யறாங்க// .சரியா சொன்னீங்க‌ ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பெண் திருந்தினாலும் முழு நாடே திருந்தின‌ மாதிரி தாங்க‌ பெண்கள் தைரியசாலிகலாக்னும்

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

நீங்க சொல்வதும் உண்மைதான்ங்க. உங்கள் பதிவு அத்தகைய பதிவுகளுக்கு நல்ல பதில் தரும்படி உள்ளது.
நல்ல பகிர்வுங்க.

நட்புடன்
குணா

நல்ல‌ பதிவு வனி....

///நாம கஷ்டப்பட்டாலும் மற்றவராவது மகிழ்ச்சியா இருக்கட்டும்னு நினைக்கிற மனசு எங்கங்க போச்சு நமக்குலாம்?/// அடுத்தவர்கள் கஷ்டப்படுவதைப் பார்த்து ஆனந்தம் அடைபவர்களே அதிகம்ங்க‌!

////எல்லாவற்றையும் தாங்கும் இதயம் கொண்ட பெண்ணுக்கு ஏனோ நோக மற்றவர் பேசும் வார்த்தைகளை தாங்கும் சக்தி குறைந்து போகிறது. //// அதனால்தான் பூபோன்ற‌ மனசுன்னு சொல்றாங்க‌! ஆனால் ஏனோ அந்த‌ பூவும் சில‌ சமயம் அடுத்த‌ பூ வாசம் வீசுவதை விரும்புவதில்லை!

ஒவ்வொரு வரியும் நிதர்சனமான‌ உண்மை. தேவையான‌ நல்ல‌ பதிவு,
எனக்கு பதிவிட‌ வார்த்தைகளே வரலை வனி. கோபமா வருது. ;(

நீங்க சொன்னது நானும் படிச்சுருக்கேன். என்னவோ நாமளாம் பெட்டிகுள் பூட்டிவைக்கிற பொருளாதான் பார்க்கிறாங்க. எப்பவும் நாம யார் பேச்சுகேட்டுதான் நடக்கணும்ன்னு எழுத?படாத விதியோ. அட முகப்புத்தகம் யூஸ் பண்ணறதுக்குகூட அனுமதி வாங்குன்னு கூட சில தோழிகள் சொல்லறாங்க. என்னவோ போங்க. நானும் வழிமொழிகிறேன் உங்க கருத்துக்களை.

Be simple be sample

முதல் பதிவுக்கு மிக்க‌ நன்றி :) எனக்கு ஒரே குழப்பம், நாம‌ தான் இப்படிலாம் எக்குத்தப்பா யோசிக்கறோமோன்னு ;) ஆமாம்னு சொல்ல‌ 4 பேர் கூட‌ இருக்குறது கொஞ்சம் தைரியம் தான் இல்லையா :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்ன‌ நாம‌ பதில் கொடுத்து என்ன‌ பண்றது குணாங்க‌... பெண்களுக்கு முழு சுந்தந்திரம் கொடுக்கும் அறுசுவையில் தானே பதில் கொடுக்க‌ முடியுது?? மற்ற‌ பத்திரிக்கைகள், இணையதளங்கள் எல்லாம் ஆணாதிக்கமாவே இருக்கே... இன்றும் இது போல‌ ஒரு பதிவை படிச்சேன்... பதில் சொல்ல‌ கை பரபரங்குது... ஆனா அங்க‌ இருக்க‌ கும்பலுக்கு எல்லாம் புரியுமா? :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க‌ நன்றி :) உண்மை... அதிகமான‌ மக்கள் அடுத்தவங்க‌ கஷ்டத்தை பார்த்தா சந்தோஷப்படுறாங்க‌. தானே கஷ்டப்படுறவங்க‌ கூட‌ தன்னை போல‌ கஷ்டப்படுற‌ ஒருவரை பார்த்தா நிம்மதியடையறாங்க‌. அதனால் தான் மன நிலை நிறைய‌ பேருக்கு சரியில்லன்னு சொன்னேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//எனக்கு பதிவிட‌ வார்த்தைகளே வரலை வனி// ‍ குழப்பாதீங்கோ... நானே ஒரு மாதத்துக்கும் மேல‌ இந்த‌ நிலையில் இருந்து இப்ப‌ தான் கொஞ்சம் கொஞ்சமா வெளிய‌ வரேன். ;)

//கோபமா வருது// ‍ எனக்கு இப்பவும் எப்பவும் வருதே... என்ன‌ பண்ண‌ ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நம்ம‌ ஊரில் முக்கால் வாசி ஆண்கள் பெண்ணை அடக்கி ஆட்சி பண்ண‌ நினைக்கிறவங்க‌ தான்... அப்படியே யாராவது ஒரு நல்லவர் ஆணா கம்பீரமா பெண்ணையும் சக‌ மனிதனா மதிச்சு மதிப்பு கொடுத்தா அவனை "பொண்டாட்டிக்கு அடங்கினவன்" நு கிண்டல் பண்ணி சந்தோஷப்படும்.

எனக்கு தெரிஞ்சு கொஞ்சம் நாள் முன் முகபுத்தகத்தில் எப்போதும் எழுதுபவர் ஒருவரின் அக்கவுன்டை திருடி அவர் ஐடியில் இருந்தே அவர் காலமாகிட்டார்னு பதிவு போட்டாங்க‌. அவர் 12 மணி ராத்திரிக்கு அலரிப்போய் தன் புகைப்படத்தை போட்டு நான் உசுரோட‌ தான்டா இருக்கேன்னு பதிவு போட்டார் ;) படிச்சதும் நிஜமாவே நெஞ்சு வலிக்காம‌ இருந்துதோ என்னவோ!!

உடனே அவரோ அவர் நண்பர் பக்கத்தில் இருந்தவங்களோ ஃபேஸ்புக் பயன்படுத்துவதை விட்டாங்களா? இல்லையே... அது ஏன் பெண் என்றால் மட்டும், மற்றவர் வார்த்தை வாழ்க்கையை அழிக்கும்னு சொல்றாங்க‌? உன் குடும்பத்து பெண் பற்றி உனக்கு தெரியாதா? யாராவது தப்பா சொன்னா விரட்டிவிட போறியா? ஒன்னும் புரியல‌.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என் மனதில் உள்ளதை அப்படியே சொல்லிவிட்டீர்கள் வனி. மன‌ பாரம் சிறிது குறைந்து விட்டது.

think positive

வனி நீங்க சொன்ன ஒவ்வொரு வரியும் என்க்கு மட்டுமல்ல.எல்லாருக்கும் நடக்குரத நேரா பார்த்து சொன்னாபோலயிருக்கு உன்மையான வரிகள்

அன்பு வனி,

மனசுல தோணினது எல்லாத்தையும் கொட்டிட்டீங்க.

ஆயிரம்தான் சொன்னாலும் எழுதினாலும், பெண்கள் ஜாக்கிரதையாக இருந்துதான் ஆகணும் வனி.

நீங்க சொல்லியிருக்கிற மாதிரி, பொது வாழ்க்கையில் இருக்கும் பிரபலமான பெண்கள், அவங்களுக்கு வரக் கூடிய நெகடிவ் கமெண்ட்ஸ், பயமுறுத்தல்கள் எல்லாத்தையும் எதிர் கொள்ளக் கூடிய பண பலம், ஆள் பலம் எல்லாத்துக்கும் மேல மனோதிடத்தோட வர்றாங்க. மிடில் க்ளாஸ் பெண்கள் அதே மாதிரி துணிச்சலா இருக்கணும்னு நினைக்கிறது, புலியைப் பாத்து பூனை சூடு போட்டுக் கொள்ளும் கதையாக ஆகிடும்.

காரணம் நீங்க சொன்னதுதான். நம்மால நம்மைச் சுத்தி இருக்கும் நண்பர்கள் உறவினர்களுடைய விமரிசனத்தையே தாங்கிக்க முடியாது. அப்புறம் எங்கிருந்து வெளியில் இருந்து வரும் விமரிசனத்தையும் ப்ரச்னைகளயும் எதிர் கொள்வது.

அன்புடன்

சீதாலஷ்மி

கீதா & நிசா... கருத்துக்கு மிக்க நன்றி :)

சீதா... நீங்க சொல்வது உண்மை, பெண்கள் எச்சரிக்கையா இருக்க வேணும் அவங்க பாதுகாப்புக்கு. ஆனால் நண்பர்களாக பழகினவங்க கூட எதிரி ஆகி முதுகில் குத்தும் போது அவங்களை எதிர்க பணம் எதுக்கு? மனசு போதும். இன்னைக்கு இந்த பெண்ணின் அடிப்படை வீக்னஸை பயன்படுத்தி தான் பல குற்றங்கள் நாடு முழுக்க அரங்கேருது. பெங்களூரில் சமீபத்தில் நடந்த கொல்லை சம்பவங்கள் கூட குடும்பத்து பெண் தான் மிரட்டும் ஆயுதமாயிற்று. நீங்க சொல்ற மாதிரி மற்றவர் வார்த்தை காயப்படுத்தக்கூடாதுன்னு தான் சொல்றேன். சுற்றி இருப்பவர்கள் சப்போர்ட் பண்ணா அந்த மனோ பலம் பெண்ணுக்கு கிடைக்கும்னு நான் நம்பறேன் சீதா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி சிஸ்ஸோட கோபம் எனக்கு பிடிச்ச ஒண்ணு எப்பவுமே. கோபம் பிடிக்குதான்னு கோபப் படாதீங்க வனி சிஸ்.
அந்த கோபத்துல ஒரு நியாயம், ஒரு சமுக அக்கறை, கொஞ்சம் பெண்ணியம் எல்லாம் கலந்து இருக்கும் போது எப்படி அந்த கோபம் பிடிக்காம போகும்.
எந்த ஒரு பிரச்சனையிலும், பிரச்சனை செய்தவருக்கு தான் தண்டனை கிடைக்கும். ஆனா, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு மட்டும்தான், பாதிக்கப்படுபவருக்கு நிறைய அறிவுரை கிடைக்கும்.
நின்னு, கவனிச்சி, யோசிச்சா,
ஆண்கள் ரொம்ப சாமர்த்தியமா, அவங்க ஆணாதிக்கத்துக்கு, அது தொடர்ந்து இருக்கிறதுக்கு பெண்களையே ஏஜென்டா வச்சிருக்காங்க.. அவங்க, அம்மாவா, மாமியாரா, பாட்டியா இருந்து, ஆணாதிக்கம் அடுத்த அடுத்த தலைமுறைக்கு கடந்து போய்கிட்டே இருக்கு.
மனைவியா இருந்து கணவனிடம் சம உரிமை வாங்கிற நாம, நம்மோட மகன், மகள்கள்ல மகனுக்கு கொஞ்சம் ஆண் என்கிற உரிமை கொடுக்கிறோமோ? கொஞ்சம், கொஞ்சோண்டு?
அந்த கொஞ்சோண்டு ஆணுக்கு (மகனுக்கு) தான் பெண்ணை விட உயர்ந்தவன் அப்படிங்கிற எண்ணம் கொடுக்குதோ?
தனியா கணவன் மனைவியா இருவர் மட்டும் வீட்ல இருக்கும் போது சமையலில் உதவுறவர், அம்மா வீடு போனால் வரும் தயக்கம் அம்மாவால் புகட்ட பட்ட ஆண் (உயர்ந்தவன்) எண்ணம் வருவதுதானோ?

(இக்கால அம்மாக்கள் குழந்தை வளர்ப்பில் ஆண், பெண் பாகுபாடு காட்டாது இருந்தால், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வர வாய்ப்பு உண்டு. நம் தலைமுறை இல்லையென்றாலும் அடுத்த, அதற்கடுத்த தலைமுறை ஆண், பெண் பாகுபாடு இல்லாமல், குற்றங்கள் இல்லாமல் போக வாய்ப்பு உண்டு)

சமுதாயம் மாறாத வரை, குறைந்த பட்சம் இக்கால அம்மாக்கள் மாறாத வரை, நமக்கு நிறைய அறிவுரைகள் 'கொட்டி'க்கொண்டே இருக்கும்.

உன்னை போல் பிறரை நேசி.

ரொம்ப சரியா சொன்னீங்க... ஆணாதிக்கம் என்பது ஒரு பெண்ணால் ஊட்டி வளர்க்கப்பட்டு, பெண்ணால் பின்னாளில் மருமகளை அடக்கி வைக்க ஆயுதமாக பயன்படுத்தப்படுவதே. ஆனால் அது மனைவி என்பவளோடு நிற்பதில்லை... சுற்றி இருக்கும் பெண்களையே துச்சமாக மதிக்கும் மனப்போக்கை வளர்த்து விடுகிறது. என்னிடம் பெண் என்று மட்டமாக நடத்தாமல் என்னை மதித்து நடத்துபவர் எல்லாம் நல்ல தாயால் வளர்க்கப்பட்டவராகவே தெரிவார்கள் எனக்கு. ஒரு பெண்ணை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டிய ஒரு பெண், தாய் என்ற ஸ்தானத்துக்கு வந்ததும் அதை மறந்து போனால், தன் கடமையை செய்ய மறந்தால் சமூகத்தில் பெண்ணுக்கு எதிரான குற்றங்கள் குறைய வாய்ப்பே இல்லாமல் போகிறது. நம்ம சஙதியாவது இந்த குற்றத்தை செய்யாமல் இருக்கணும்னு இறைவனை வேண்டிக்கறேன்.

//கொஞ்சம் பெண்ணியம் // - பொதுவா வீட்டில் என்னை இவர் “பெண்ணியவாதி, தீவிரவாதி” என்பார். ;) எதாவது பெண்ணுக்கு எதிரான விஷயம் என்றால் என் வாதம் எப்படி இருக்கும் என்று சரியாக அறிந்தவர் என்றே சொல்ல வேண்டும். நன்றி க்றிஸ் :) அடிக்கடி வாங்க, காணாம போனா சிரிக்க வைக்கிறது யாராம் எங்களை??

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுதந்திரமாக முடிவெடுப்பதைப் பற்றியும், அதிலே எது சரி, எது தவறு என்பதையும் சிறு வயதிலிருந்தே கற்று கொடுக்க வேண்டும். அவர்களுக்கு அதைப் பற்றி தெளிவு இல்லாத பட்சத்தில் இரு பாலருக்குமே பிரச்சனைகள் விளைவதுண்டு. அதில் பாதிப்பு என்னவோ பெண்களுக்குத்தான் அதிகம்.
ஆண், பெண் பாகுபாடன்றி வளர்க்கப் பட்டால் தான் பெண்ணடிமை மாற வாய்ப்புண்டு.

மிக்க நன்றி :) இந்த வளர்ப்ப்பு முறை இப்ப பலரும் ஃபாலோ பண்றாங்க, பார்ப்போம் எதிர் காலம் எப்படி இருக்குன்னு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா