சினிமாவுக்குப் போகலாமா

சினிமாவுக்குப் போகணும் என்று சொன்னதும், ஆன்லைனில் டிக்கெட் புக் பண்ணிடலாம், குடிக்கறதுக்கு கூல்ட்ரிங்க்ஸா அல்லது காஃபியா, சாப்பிடறதுக்கு பாப்கார்ன், ஐஸ்க்ரீம், சமோசா எது வேணும், எல்லாம் ஆன்லைனில் புக் பண்ணிட்டால் சீட்டுக்கே வந்துடும் என்று கேட்பார் மகன்.

இன்று எல்லாமே விரல் நுனியில் என்று ஆகி விட்ட்து. மிஸ் ஆகிற ஒரே விஷயம், சினிமாவுக்குப் போவது என்பது திருவிழா மாதிரி ஒரு ஃபீல் வருமே அதுதான்.

சினிமா என்பது எனக்கு எப்பவுமே பிடித்தமான விஷயம். ஒரு படம் நல்லா இல்லைன்னால் கூட, அந்தப் படத்தை முழுசாக(அதாவது படம் ஆரம்பத்தில் டைட்டில் போடுவதில் இருந்து, வணக்கம் போடுவது வரை) – பார்த்து விட்டு, அப்புறம்தான் நல்லா இருக்கு, இல்லை, சுமார் என்றெல்லாம் பேசுவோம் வீட்டில். ஆனா சினிமா என்பது எப்பவுமே போர் அடித்ததே இல்லை. படம் பேத்தலாக இருந்தால் கூட, கிண்டல் விமரிசனங்கள் பண்ணி, ரசிப்போம்.

அதுவும் மதுரையில் சினிமாவுக்குப் போவது என்பது – ஒரு திருவிழா மாதிரி.

அதெல்லாம் ஒரு காலம்.

சிறுமியாக இருந்த போது, கூட்டமாக படத்துக்குப் போவோம். தியேட்டரில் எங்களது முதல் வேலை – பாட்டுப் புஸ்தகம் வாங்குவதுதான். மலிவு விலை எடிஷன் – 10 பைசா, கொஞ்சம் க்வாலிடியாக இருக்கும் புஸ்தகம் – 25 பைசா வரை இருக்கும்.

புத்தகத்தில் – கதைச் சுருக்கம், நடிகர்கள், டைரக்டர், இசையமைப்பாளர் விவரங்கள் அச்சிடப்பட்டிருக்கும். பாடல் வரிகள், பாடியவர்கள் பெயருடன் கொடுக்கப் பட்டிருக்கும்.

கதையை சுருக்கமாகப் போட்டு விட்டு, ‘மீதியை வெள்ளித் திரையில் காண்க’ என்று முடித்திருப்பார்கள்.

அதாவது, கண்டெண்ட் ஒன்றுதான். மலிவு விலை புத்தகம் – சாதா பேப்பரில் – ரோஸ், பச்சை, மஞ்சள் என்று இருக்கும்.

ஸ்பெஷல் எடிஷன் – தரமான பேப்பரில் வித்தியாசமாக அச்சிடப்பட்டிருக்கும்.

உதாரணத்துக்கு – வியட்னாம் வீடு படத்தின் பாட்டுப் புத்தகத்தை, வீடு வடிவத்தில் வெளியிட்டிருந்தார்கள்.

இவற்றை வாங்கி, ஒரு கலெக்‌ஷனாக வைத்திருப்போம். சினிமாப் பாடல்களை மனப்பாடம் செய்வோம்.

திருமணம் ஆன பிறகு, சினிமாவுக்குப் போவது, ஒரு பெரிய அவுட்டிங். ஏகப்பட்ட ப்ளான்கள் நடக்கும்.

கணவருக்கு 9 மணி நேர வேலைதான். இப்ப மாதிரி, 12-14 மணி நேரமும் ஆஃபிஸ் ஆஃபிஸ் என்பதெல்லாம் அப்ப கிடையாது. மாத பட்ஜெட்டில் ஒன்று அல்லது இரண்டு படத்துக்குத்தான் அனுமதி. இது பணம் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் இல்லை, ’ஓயாம சினிமாவுக்குப் போறது, அது என்ன பழக்கம்? அவங்க வீட்டுல – புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும், ஒரு சினிமா விடாம போய்ப் பாத்துருவாங்க’ – என்று கல்யாண வீடுகளில் மண்டை உருட்டலில் பெயர் அடிபடும்.(இந்த மண்டை உருட்டுதல் பற்றி, ஒரு தனிக் கட்டுரையே எழுதணும்).

அதனால், சம்பளம் வந்த முதல் வாரத்தில், என்ன படம் போவதென்பதை, அதற்கு முந்தின வாரமே டிஸ்கஸ் பண்ணுவதில் ஒரு ஆர்வம்.

சினிமாவுக்குப் போவது என்று முடிவாகி விட்டால், அடடா, என்ன பரபரப்பு? என்ன சந்தோஷம்?

என்ன புடவை கட்டுவது, அந்தப் புட்வைக்கு மேட்சிங் ப்ளவுஸ் ரெடியாக இருக்கா என்று பார்த்து வைப்பது. அன்றைக்குண்டான வேலைகளை, சீக்கிரமே சுறுசுறுப்பாக முடித்து வைப்பது, அப்புறம் 4 மணியானதும், காஃபி போட்டு, குடிச்சுட்டு, முகத்தை, சோப் போட்டு, தேய் தேய் என்று தேய்த்து அலம்பி, பவுடரை அப்பி, கண்மை, பொட்டு, தலையில் பூ, என்று கன ஜோராக படத்துக்குக் கிளம்பிய நாட்கள் நினைவுக்கு வருகிறது.

பஸ்ஸில் கிளம்பி, தியேட்டரில் க்யூ வரிசையில் நிற்கும்போது, டிக்கெட் கிடைக்கணுமே என்று கவலையாக இருக்கும். நமக்கு முன்னால் நிற்கும் கூட்ட்த்தைப் பார்த்துக் கவலைப்பட்டு விட்டு, நமக்குப் பின்னால் வரும் வரிசையைப் பார்த்து, சந்தோசப்பட்டுக் கொள்வது உண்டு.

மதுரையில் திரையரங்குகளில் திரை போட்டிருக்கும் ஸ்கீரினின் முன்னால். முதல் பெல் அடித்ததும், சைடில் விலகும். முதன் முதலில் ஜெகதா தியேட்டர் என்ற திரையரங்கில்தான், அலங்காரத் திரை. அதன் கீழ் முனைகளில் வண்ண விளக்குகள், வித்தியாசமான ம்யூசிக் உடன், அது கொஞ்சம் கொஞ்சமாக மேலே போகும். ஆஹா, அந்த அற்புதத்தை(!) பார்ப்பதற்காகவே, அங்கே என்ன படம் ஓடினாலும், ஓடிப் போய்ப் பார்த்தோம்.

சுப்பரணியபுரம் படம் பாத்திருப்பீங்களே – மதுரை திரையரங்கை அப்படியே காட்டியிருந்தாங்க. தரை டிக்கெட் – 40 பைசா, 60 பைசா, 80 பைசா. அங்கெல்லாம் போவது கிடையாது. பீடி வாசனை அடிக்கும். ஊஹும்.

மாடியில் 1 ரூபாய் 15 பைசா, 1 ரூபாய் 45 பைசா, அதிக பட்சம் 2 ரூபாய் 50 பைசா. மத்திமமாக உள்ள மாடி டிக்கெட் எடுப்பது வழக்கம். எப்பவாவது கூட்டமாக இருக்கு, என்று 2.50 ரூபாய் டிக்கெட் எடுக்க நேர்ந்தால், ஒரு பக்கம் செலவாகிடுச்சே என்ற உணர்வு, இன்னொரு பக்கம் ஹை க்ளாஸ் டிக்கெட்டில் படம் பார்க்கிறோம் என்ற பெருமிதம்!

இண்டர்வெல்லில், முறுக்கு, கடலை இவ்வளவுதான். அல்லது வீட்டிலிருந்தே கொழுக்கட்டை, தேங்குழல் இப்படி செய்து எடுத்துட்டுப் போய் சாப்பிடுவதும் உண்டு.

அப்பவெல்லாம் படங்கள் 100 நாட்கள், 175 நாட்கள் என்று ஓடும். 25வது வாரம் என்று போஸ்டர் ஒட்டுவார்கள். தினத்தந்தியில் முழுப் பக்க விளம்பரம் வரும்.

சில பல படங்கள் ரிலீஸாகி கொஞ்ச நாட்கள் கழித்து, சிறிய தியேட்டர்களில் மறுபடியும் திரையிடுவார்கள். கணேஷ் தியேட்டர் இந்த மாதிரி திரையரங்குகள் இதற்கென்றே உண்டு. டிக்கெட் விலை இங்கே இன்னும் குறைவாக இருக்கும்.

எங்கள் வீட்டுக்கு அருகில், சராசரிக்கும் குறைவான வருமானம் உள்ள, உழைக்கும் வர்க்கம் வசிக்கும் பகுதி உண்டு. அந்தப் பகுதி மக்கள் சாயங்கால வேளையில் பூ, பொட்டு வைத்து உற்சாகமாக்க் கிளம்பினார்கள் என்றால், பக்கத்துத் தியேட்டரில் வாத்தியார் படம் ரிலீஸ் என்று தெரிந்து கொள்ளலாம்.

கொஞ்சம் கொஞ்சமாக தியேட்டர்கள் மாறின. சினிப்ரியா காம்ப்ளெக்ஸில் – அட - மெட்ராஸ் மாதிரி ஒரே இடத்தில் 3 த்யேட்டராமே என்று ஆச்சரியம். ருசிப்ரியா என்று ஹோட்டல் இருக்குதாம், படம் முடிஞ்சதும் அங்கேயே சாப்பிடலாமா? என்று ஆசை ஆசையாக பேசிக் கொண்டது நினைவுக்கு வருகிறது. ரெஸ்டாரெண்ட், ஃபுட் கோர்ட் என்ற வார்த்தையெல்லாம் தெரியாது. சாப்பிடும் இடம்னா அதுக்குப் பேர் ஹோட்டல் அவ்வளவுதான்.

இன்றைக்கும் மதுரையில் மூத்த தலைமுறையினர் – ஹோட்டலை, க்ளப் என்றுதான் சொல்வார்கள். அதுவும் க்கிகளப் என்று ஒரு வித்தியாசமான உச்சரிப்பில் சொல்வாங்க.

சமீபத்தில் மதுரை போயிருந்தபோது, மால் மற்றும் ஐனாக்ஸ் தியேட்டர்கள் எல்லாம் வந்திருந்த்தைப் பார்த்து ரொம்ப ஆச்சரியமாகி விட்ட்து.

மாலில் – நூடுல்ஸ், பிஸ்ஸா என்றெல்லாம் ஃபுட் கோர்ட் – அதில் கூட்டமான கூட்டம். நம்ம மதுரைதானா என்று தோன்றியது.

நல்ல வேளை – எப்போதும் சாப்பிடும் குஜராத்தி ஹோட்டல் – அங்கே வழக்கமான அன்பான உபசரிப்பு என்று சாப்பிட்ட்தும்தான் திருப்தியாக இருந்த்து.

காலம் மாறுகிறது – இன்னும் என்னென்ன புதுமைகள் வரப் போகிறதோ தெரியவில்லை. பார்ப்போம், ரசிப்போம்.

5
Average: 4.8 (6 votes)

Comments

என்னதான் காலம் மாறினாலும்... அது எல்லாம் சுவைதான் சீதா. நானும் ஆயிரக் கணக்கில் பாட்டுப் புத்தகங்கள்.. அதே பழுப்பு, ஒற்றை நிற புத்தகங்கள். :-)
எங்கள் வீட்டுக்குச் சமீபமாக ஒரு திரையரங்கு இருந்தது. எக்ஸாம் டைம் இரவு படிக்கிறேன் என்று இருப்பேன்... கதைவசனம், பாட்டு... பாட்டு சத்தமா கேட்கும்.

சில படங்களின் பெயர் கேட்டாலே கூட ஒரு கதையும் நினைப்பு வரும்.

எங்க ரெஜிஸ்ட்ரேஷனுக்கு இரண்டு நாள் கழிச்சு படம் பார்க்க கிளம்பினோம். அன்று தான் முதல்முதலா தியேட்டருக்கு சேலைல போனேன். பார்க்க நினைத்தது நீல மலர்கள். என் சேலைலயும் நீல மலர்களோட போனேன். அங்க போனா படத்தைத் தூக்கிட்டாங்க. கடைசில பார்த்தது... காதலிக்க நேரமில்லை. :-)

இன்னும் நிறை கதை இருக்கு. நினைவுகளைத் தூண்டி விட்டதற்கு... நன்றி சீதா. :-)

‍- இமா க்றிஸ்

இந்த அனுபவம் எனக்கு இல்ல :) நான் படமே திருமணத்துக்கு பின் தான் பார்க்கறேன். அதுவும் இது போல மால்... ம்... நான் எங்கையுமே என்ன ட்ரெஸ்னு யோசிச்சுலாம் கிளம்பினதே இல்ல, அதனால் அதுவும் அடிபட்டுப்போகுது. நீங்க எல்லாம் நல்லா அனுபவிச்சு படம் பார்த்திருக்கீங்கன்னு புரியுது ;) நான் இப்ப தான் இரண்டு நாள் முன் கத்தி பார்த்தேன். அங்கிள்காகவே பார்த்தோம்... இவர் பார்க்குறவங்களை எல்லாம் இவரா இவரா என்று கேட்டுகிட்டே இருந்தார். தாடியில் அடையாளம் தெரியல இவருக்கு, சீரியல்லன்னா இவரே என்னை கூப்பிட்டு “உன் ஃப்ரெண்ட் ஹஸ்பண்ட்” என்பார்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சீதா

என்னை அப்படியே அந்த‌ காலத்திற்க்கு கொண்டு போய்வி்ட்டீர்கள்

think positive

ஆமா சீத்தாம நீங்க சொன்னதுல முக்காவாசி நா அனுபவிச்சிறுக்கேன் அதயெல்லாம் நினைத்தா ரொம்ப சந்தோசமா இருக்கு மா ஆனா இப்ப மால்கு எல்லாம் போனா டீசன்ட் அப்டின்ற பேர்ல நல்ல காமெடி வந்தாகூட யாரும் நல்ல சிரிக்க மட்டேங்குறாங்க என்னதான் பண்றதோ...by dhana

அக்கா அனுபவித்து படம் பார்ப்பிங்க போலேருக்கு. ..ஸ்கூல் படிக்கும்போது.நான் படத்துக்கு போனும்னா வரமாட்டேன் னு அழுது அடம்பிடிப்பேன்...

ஏன்னா சண்டை போடுவாங்க, கத்தியால் குத்துவாங்கன்னு அழுது அடம்பிடித்தேன்.
பயங்கர தலைவலி அதோட சண்டையில்லாத படத்துக்கு கூட்டிட்டு போறேன் னு வி ஐ பி
படத்துக்கு போனோம். ஞாபகபடுத்தீட்டிங்க அந்த காலத்தை. ........

இப்ப கடைசியாக தீபாவளி அன்று கத்தி படம் மாயாஜால்ல பார்த்தோம்.
இந்த படத்திலையும் கத்தியால் குத்தி இறந்துடுவாங்க அதை நான் பார்க்கவில்லை. ....

அன்பு தோழி. தேவி

சீதா நீங்க சொல்ர அனுபவம் எனக்கும் சின்னவயசில உன்டு நாங்க ஒரு கூட்டமா சினிமாக்கு போரது இப்ப உள்ளவங்களுக்கு எங்க கூட்டம் பிடிக்குது.ப்ரைவசி எதிபார்கிராங்க.நம்ம தனியாபோலாம் இத்தனை பேர் கூடல்லாம் போய் படம் பார்க்குரதுக்கு வீட்டிலேயே பார்க்கலாம்னு இப்ப உள்ள் சிறுசுங்க சொல்லிடுராங்க அதுனாலதான் தியேட்டர் கூட மாரிடுச்சு இப்ப உள்ள கலாசாரத்த்க்கு தகுந்தாபோல.நான் ஊரில் இருக்கும்போது தியேட்டரில் படம் பார்த்தது வாலி பார்த்தேன்.இங்க துபாய் வந்து பார்த்தது சிவாஜி இப்பல்லாம் படப்பேர் இப புது நடிகர் நடிகை யாரையுமே தெரியுமே என்பொன்னு சொன்னாதான் புரியுது எவ்லோ மாற்றம் பாருங்க

சினிமாவிற்கு சென்ற அனுபவங்கள் படிக்க ரொம்ப இனிமையா இருக்குங்க.
கோர்ட் வாசற்படி மிதிக்காதவர்கள் கூட ஃபுட்கோர்ட் வாசற்படி மிதியாமல் இன்று இருப்பார்களா? என்பது சந்தேகம்தாங்க. மாற்றம் ஒன்றே மாறாதது என்பதே நினைவிற்கு வரும்படியான பதிவு.
ரொம்ப அருமைங் :-)

நட்புடன்
குணா

ரொம்ப அருமையாக இருந்தது இந்த பதிவு ரசித்து அனுபவித்து எழுதியிருக்கீங்க நானும் சின்ன வயசுல நிறைய பாட்டு புத்தகம் வாங்கி அம்மா அப்பாக்கு தெரிஞ்சா உதை விழும்னு பாடபுத்தக பை குள்ள ஒளிச்சு வெச்சு யாருக்கும் தெரியாமல் மொட்டை மாடியில் படித்த சாரி பாடிய அனுபவம் உண்டு அஞ்சு அஞ்சு படமா சேர்த்து ஸ்டெபில் பண்ணி வெச்சிருக்கேன் பின்னர் SPB குரலில் 600 பாடல்கள் இளையராஜா இசையில் 600 பாடல்கள் சோகமான 600 பாடல்கள் இப்படி பெரிய புத்தகமா வரும் எங்க காலத்தில் ஒரு பட புக் 1ரூ, 600 பாடல்கள் புக் 18ரூ அதையும் வாங்குவேன் இன்னும் ஞாபக பொக்கிஷமா பழைய பெட்டிக்குள்ள இருக்கு, தியேட்டர் அனுபவம் ரொம்பவே குறைவு ஹாஸ்டலில் சனி இரவு ஃப்ரி நைட் அப்ப பார்த்தது தான் சாதா டிக்கேட் 10ரூ ஸ்பெசல் மாடி டிக்கேட் 15ரூ, பசுமை நிறைந்த நினைவுகள் நன்றி.

அன்பு இமா,

நான் கூட நினைப்பேன், தியேட்டருக்குப் பக்கத்திலேயே வீடு இருந்தா வசனம் எல்லாம் கேட்டுகிட்டே இருக்கலாமேன்னு. அவ்வளவு ஆசையா இருக்கும், வசனம் மனப்பாடம் பண்றதுக்கு.

அதே போல‌, ஒலிச்சித்திரம் கேட்பது(சினிமாவின் முக்கியமான‌ வசனங்களை ரேடியோவில் ஒலிபரப்புவாங்க‌), அப்புறம் பேசும்படம், பொம்மை போன்ற‌ பத்திரிக்கைகளில் படத்தின் கதை வசனத்தை சுருக்கமாக‌ வெளியிடுவாங்க‌, அதையும் விழுந்து விழுந்து படிப்பேன்.

இலங்கை வானொலியில் படங்களுக்கான‌ 15 நிமிட விளம்பர‌ நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்படும் வசனங்களைக் கூட‌ விடாமல் கேட்போம்.

நீல‌ மலர்கள் படத்துக்கு நீலப் பூக்கள் அச்சிட்ட‌ புடவை - இமா ஆல்வேஸ் ராக்ஸ்!

காதலிக்க நேரமில்லை - இங்க்லீஷ்ல ரெண்டு விதமா சொல்லலாம் - "there is no time to love"

அல்லது

'ALL TIME IS FOR LOVE, NO NEED TO HAVE SEPARATE TIME'.

சாரி, கொஞ்சம் ஓவராகிடுச்சா:):)

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு வனி,

இப்ப எல்லாருமே மாலில் இருக்கும் தியேட்டர்களில்தானே படம் பாக்கறாங்க. எனக்கென்னவோ மால்களில் இருக்கும் குட்டி குட்டியான தியேட்டர்களில் படம் பாக்கறப்ப, பஸ்ஸுக்குள்ள உக்காந்திருக்கிற மாதிரி இருக்கும்.

ஆசியாவிலேயே பெரிய தியேட்டரான ‘தங்கம் தியேட்டர்’ மதுரையில்தான் இருக்கு.(இருந்தது?) அவ்வளவு பெரிய தியேட்டர்களில் படம் பார்த்துட்டு, எந்தத் தியேட்டருக்குப் போனாலும் சின்னதாதான் தெரியுது.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு கீதா,

பழைய நினைவுகள், என்னிக்கும் நினைச்சுப் பார்க்க, சுகமானவைதான் இல்லையா.

பதிவுக்கு மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு மிதுன்சஞ்சித்,

நல்ல அப்சர்வேஷன் உங்களுக்கு. இப்பல்லாம் சினிமாவுக்கு வர்றவங்க, படம் முடிஞ்சதும் ட்விட்டர்ல, ஃபேஸ்புக்ல எப்படியெல்லாம் கிண்டல் அடிக்கலாம்னு நினைச்சுகிட்டேதான் படம் பாக்கறாங்கன்னு நினைக்கிறேன். அப்புறம் எங்க நகைச்சுவையை அனுபவிச்சு, சிரிக்கப் போறாங்க.

பதிவுக்கு நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு அஷ்வத் தேவி,

நானும் படங்களில் சண்டைக் காட்சி வந்தா பயப்படுவேன், கத்தியால குத்தற மாதிரி, ஷூட் பண்ற மாதிரி, சீன்கள் வந்தா, கண்ணை மூடிக்குவேன்.

பழைய படங்களில் கடைசியில் வணக்கம் போடறப்ப, எல்லோரும் சிரிச்சுகிட்டே போஸ் குடுப்பாங்க, அது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

பதிவுக்கு மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு நிஸா,

நீங்க சொல்வது உண்மைதான். படம் பாக்கறப்ப, உறவினர்கள், குடும்பத்தினர், அல்லது அக்கம்பக்கத்துக்காரங்களாவது சேர்ந்துதான் சினிமாவுக்குப் போவாங்க.

விடுமுறைன்னாலே, எத்தனை சினிமாவுக்குப் போகலாம், எந்த எந்தப் படத்துக்குப் போகலாம்னு ப்ளான் நடக்கும்.

பதிவுக்கு மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு குணாங்,

அழகாச் சொல்லிட்டீங்க - ஃபுட் கோர்ட் போகாதவங்களே இல்லைன்னு. சினிமாவுக்குப் போறது மட்டுமில்லை, வர்றப்ப, அங்கயே சாப்பிட்டுட்டு, வீட்டுக்கு வந்து நிம்மதியாத் தூங்க முடியுதே. முன்பெல்லாம், வீட்டுக்கு வந்து சாப்பிடுறதுக்கு, சாப்பாடு செய்து வச்சுட்டுப் போகணும். இப்ப அந்த வேலை மிச்சம்.

பதிவுக்கு மிகவும் நன்றிங்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு பெனாசிர்,

எல்லோருக்குமே இந்தப் பாட்டுப் புத்தகம் கண்டிப்பாக ஒரு கிரேஸ் இருக்கும். என்னதான் பாட்டுக் கேட்டாலும், வரிகளும் வார்த்தைகளும் நமக்கு நல்லாத் தெரியறப்ப, இன்னும் ரசிக்க முடியும்.

சினிமாவில் பாடல்கள் தேவையா, செயற்கையாக இருக்கு அப்படின்னு கருத்துக்கள் படிக்கறப்ப, எனக்கு என்ன தோணும் தெரியுமா?

சினிமாவில் தேவையோ இல்லையோ, நம்ம வாழ்க்கைக்கு கண்டிப்பாக சினிமா பாடல்கள் வேண்டியிருக்கு. எத்தனை எத்தனை பாடல்களை சிச்சுவேஷனோடு பொருத்திப் பார்க்கறதும், அந்தப் பாடல் சம்பந்தப்பட்ட படத்தின் நினைவுகளை, மீண்டும் நினைச்சுப் பாக்கறதும் - நினைவுகள் என்றும் வேண்டும்தானே.

உங்க மலரும் நினைவுகளும் அருமையாக இருக்கு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

இப்பவும் படம் பார்க்க மால்க்குதான் வந்துருக்கோம்.பையனுக்காக...நாமதான் சின்ன வயதில் படம் பார்க்கமல் இருந்துட்டோம்.

அவுங்களாவது என்ஜாய் பண்ணட்டும்....
இதுதான் நான் தியேட்டரில் பார்க்கின்ற 10ஆவது படம். ...

நன்றி ப்பா நான் எவ்வளவு மிஸ் பண்ணிருக்கேன் னு தெரியிது. ....

அன்பு தோழி. தேவி

சீதா அக்கா இப்பகூட சண்டை சீன் கத்தி குத்துர சீன் லாம் பார்க்கலை அறுசுவை யில் பதிவு போட்டுட்டு இருக்கேன். .நன்றி அக்கா எனக்கு பதில் போட்டதுக்கு

அன்பு தோழி. தேவி

நான் சின்ன வயசில் நீங்க சொல்ற மாதிரியான தியேட்டர்ல படம் பார்த்திருக்கேன்.அதுவும் சொந்தங்கள் எல்லாரும் சேர்ந்த்துதான் சினிமாவிற்கு போவோம்.எங்க கிராமத்தில் இருந்து 4 கி.மீ தூரம் தள்ளிதான் தியேட்டர்.இரவில் திரும்பி வர பேருந்து கிடையாது.அதனால் எங்கள் வீட்டில் சினிமா என்றாலே எல்லா சொந்தமும் சேர்ந்து மாட்டு வண்டியில் போய் சினிமா பார்த்துட்டு வருவோம்.போகிற வழியின் இரு பக்கமும் புளியமரம் இருக்கும்.போகும்போதே மாமாவை புளியங்காய் பறித்து தர சொல்லி படம் பார்த்துக்கொண்டே சாப்பிட்டதை நினைத்தாலே இனிக்கிறது.

எல்லா புகழும் இறைவனுக்கே

சீதாமேடம் எங்க ஊர்ல இருந்து 3 கிலோமீட்டர் தூரத்துல ஒரு தியேட்டர் இருந்தது. அதைய தியேட்டர்னுலாம் சொல்லமாட்டோம். சினிமா கொட்டாய் (கொட்டகை)னு தான் சொல்வோம்.
சினிமா ஆரம்பிக்கும் அறிகுறிய தெரிவிப்பதற்காக " மருதமலை மாமணியே முருகையா" னு பாட்டுதான் முதலில் போடுவாங்க.
அந்த தியேட்டர்ல புது படம் மாத்துவதை எப்படி தெரிவிப்பாங்கனு தெரிமா? ஒரு மாட்டு வண்டில (ஒத்தை மாட்டு வண்டி) ஒருத்தர் வந்து ஊருக்குள்ள சுவத்தில சினிமா போஸ்டர் ஒட்டிட்டு போவார்.

சினிமானா ஏதோ சுத்தி பார்க்கும் இடம்போலனு நினைச்சிட்டிருந்தேன். ஒரு திருமணத்திற்கு (கோபி) போயிருந்தப்ப எங்கத்தைதான் என்னை முதன்முதலா ஒரு சினிமாக்கு அழைச்சிட்டு போனாங்க. அந்த படத்து பேர் என்னன்லாம் தெரில, ஆனா அதில ஒரு சீன் மட்டும் ஞாபகம் ஒரு குட்டை போன்ற ஒரு இடத்தில ஒருத்தர் தூண்டில் வெச்சு (அப்ப அதுக்கு பேர் தூண்டில்னும் தெரியாது, குச்சி போல எதையோ வெச்சு) மீன் பிடிச்சிட்டிருந்தார்.

சினிமானா இப்படி திரைல வரும் என்பதே அப்பதான் எனக்கு தெரியும். அதுக்கு முன்னாடிலாம் எங்கண்ணா அடிக்கடி சினிமாக்கு போவாங்க, எங்கம்மா எதுக்கு இப்படி இருட்டுல போய்ட்டு வந்துட்டுனு திட்டுவாங்க. ஆனா நான் அப்பலாம் நினைப்பேன் ஏதோ ஒரு இடத்தை சுத்தி பாப்பாங்க போலிருக்கு. அங்க லைட்லாம் எரிய விட்டிருப்பாங்க போல, ஆனா அதையே ஏன் திரும்ப திரும்ப போய் பார்க்கணும் என்று நினைச்சிருக்கேன்.

எங்க வீட்ல சினிமா போறதுனா மாட்டு வண்டிலதான் போவோம். எங்க வீடு தோட்டத்துக்குள்ள இருந்ததும், பஸ் ஒருநாளைக்கு 2 முறை மட்டுமே வரும் என்பதுமே காரணமாகும்.
அதே போல படம் பார்க்க செல்வது மட்டுமே ஞாபக்ம் இருக்கும் , வரது தெரியவே தெரியாது. தூங்கிடுவேன். இதுவரை 2 ஷோ சினிமா போனதேயில்ல.

இரட்டை மாட்டு வண்டில( எருது) ஏன் மாட்டுவண்டினு பேரோ தெரில?
பலகைமேல வைக்கபில் (வைக்கோல்)போட்டு அதுக்கு மேலே கெட்டியான ஜமுக்காளம் விரிச்சு போட்டு அது மேல உக்காந்துட்டு போவோம். அது ஒரு இளவேனிற்காலம். எப்படி நினைச்சாலும் திரும்ப வரவே வராது.

பள்ளிக்கூடத்தில படிக்கும் போது பள்ளியில் அழைத்து சென்றதுதான் முதன்முறையாக தியேட்டரில் சென்று படம்பார்த்தது. டாரோ ஒரு ட்ராஹனின் மகன், எங்களையும் வாழவிடுங்கள் (குரங்கு படம்).

திருமணத்திற்கு பிறகு என்னவர் வீரா படத்திற்கு அழைத்து சென்றார். எனக்கா ஒரே பிரமிப்பு, என்ன இது எல்லாரும் இவ்வொளோ பெரிசு இருக்காங்கனு ஆச்சர்யப்பட்டுக்கொண்டே படம் பார்த்தேன்.

என்னோட்ட ஆச்சர்யத்தை சொல்லிட்டே போனா என்னோட பின்னூட்டம் ஒபிஸிட்டி ஆகிடும். அதுனால போதும்னு நிறுத்திக்கிறேன். அழகான பதிவிட்டு எல்லோரின் மனதையும் நடந்து வந்த பாதையை பார்க்கவெச்சிட்டீங்க :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அன்பு சீதா
பழைய‌ நினைவுகள். நினைத்தாலே இனிக்கும்.
இந்த‌ மாதிரி சீன் எல்லாம் எங்க‌ அம்மா சொல்லிக் கேட்டுருக்கேன்.தெருவில் பத்து பேராவது சேர்ந்து டூர் போறது போல‌ சினிமாக்கு போவதாக‌ சொல்லுவாங்க‌.
பக்கத்து வீட்டு அத்தையால‌ லேட்டாகி முதல் காட்சி மிஸ் ஆயிடும்னு அம்மா சொல்லி இருக்காங்க‌.
ரீல் அறுந்து போயி படம் இடையில் கட் ஆகும் கதையையும் அம்மா சொல்லி இருக்காங்க‌.

பாட்டி வீடு அப்படின்னா, அம்மா வீட்டுப் பக்கம் அதே உழைக்கும் வர்க்கம் உண்டு. அவங்க‌ எல்லோரும் ஆளுக்குக் கொஞ்சம் காசு போட்டு ட்ரக்கர் பிடித்து பக்கத்து டவுனுக்குப் போயி படம் பார்ப்பாங்க‌. மறுதினம் பாட்டும் விமர்சனமும் தூள் பறக்க‌ தெருவில் நெடுனேரம் களைகட்டும்.
நாங்க‌ எல்லோரும் எங்க‌ வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருப்போம்.

நான் சிறுமியாக‌ இருக்கும் போது அதிகம் சினிமா போனதில்லை. ஆனால், பாட்டுப் புத்தகம் தேடி பிடித்து வாங்கியிருக்கேன். பாடல்களை மனனம் செய்திருக்கேன்.

திருமணத்திற்கு பின்னும் அதிகம் சினிமா போவதில்லை.
நிறைய‌ விஷயங்களில் பழைய‌ சந்தோசம் இப்போ மிஸ்ஸிங். எல்லாமே சாதாரணமாகி விட்டது.
"கத்தி" கவனமா பார்க்கப் போறேன் சீதா. அடையாளம் கண்டுபிடிச்சிடுவேன். வாழ்த்துக்கள்.

அன்பு அஷ்வத் தேவி,

ஆஹா, சினிமா தியேட்டர்ல இருந்து, பதிவு போட்டுட்டு இருக்கீங்களா, ரொம்ப தாங்க்ஸ்பா.

பழைய சினிமாக்களில், நிறைய சோக சீன் எல்லாம் வரும். எனக்கு கண்ணீர் கொட்டும். எங்க வீட்டுல அவங்க என்ன சொல்வாங்க தெரியுமா?

படத்துல நடிக்கறவங்க காசு வாங்கிகிட்டு அழற மாதிரி ஆக்ட் பண்றாங்க, நீ என்னடான்னா, காசு கொடுத்துட்டு நிஜமாவே அழுதுட்டு இருக்கியே அப்படின்னு திட்டுவாங்க :):)

படத்தை எஞ்ஜாய் பண்ணுங்க, படம் எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க அப்புறமா.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு ரேமு,

படத்துக்குப் போறது ஒரு அனுபவம்னா, சொந்த பந்தமெல்லாம் சேர்ந்து போறது இன்னும் உற்சாகம்தானே.

புளியங்காய் மட்டுமல்ல, புளிய இலையைக் கூட, ருசித்துப் பார்க்க சொல்லித் தந்திருக்காங்க. லேசான புளிப்பும், இருக்கா இல்லையான்னு தெரியாத இனிப்புமா இருக்கும்.

இப்பல்லாம் குழந்தைகள்கிட்ட அப்படி சொல்ல, பயமாயிருக்கு. அவங்க பாட்டுல கண்ணில் படும் இலையை எல்லாம் பறிச்சு, சாப்பிட்டுட்டாங்கன்னா என்ன செய்யறதுன்னு.

பதிவுக்கு மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு அருட்செல்வி,

எவ்வளவு விஷயங்களை அடுக்கடுக்காக சொல்லியிருக்கீங்க. சூப்பர். நீங்க ஒரு தனி வலைப் பதிவாகவே போடலாம். அவ்வளவு மேட்டர் வச்சிருக்கீங்க.

எங்க மதுரையிலும், மீனாட்சி தியேட்டரில் படம் ஆரம்பிக்கறதுக்கு முன்னால, ‘வினாயகனே வினை தீர்ப்பவனே’ பாடல், சீர்காழி கோவிந்தராஜனின் கணீர் குரலில் ஒலிப்பதைத்தான் முதல்ல ஒலிபரப்புவாங்க.

நீங்க எழுதினதைப் படிக்கும்போது, இன்னும் நிறைய விஷயங்கள் நினைவுக்கு வருது. இன்னும் எழுதியிருக்கலாமேன்னு தோணுது.

பதிவுக்கு நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு நிகிலா,

மதுரையைப் பொறுத்தவரைக்கும் மார்னிங் ஷோ காலையில் 11 மணிக்கு - இதுக்கு பெரும்பாலும் காலேஜ் கட் அடிச்சுட்டு வர்ற மாணவர்கள் வருவாங்கன்னு சொல்வாங்க.

மதியம் 2 மணி காட்சி - இந்த ஷோவுக்கு அக்கம்பக்கம் பெண்கள் சேர்ந்து வர்றவங்க வருவாங்க. 5 மணிக்கு வீட்டுக்குத் திரும்பிடலாம்.

ஈவினிங் ஷோ - புதுசா கல்யாணம் ஆனவங்க, குடும்பத்தோட(அப்பல்லாம் குடும்பம்னா கூட்டுக் குடும்பம் - அண்ணன், அண்ணி, அக்கா, அத்தான், தம்பி, அப்பா, அம்மா எல்லோரும் சேர்ந்து இருப்பது)வர்றவங்க வருவாங்க.

செகண்ட் ஷோவும் போனது உண்டு.

நீங்க சொல்வது போல, படம் பார்த்து விட்டு, மத்தவங்ககிட்ட கதை சொல்வது உண்டு. அதிலும் படத்துல வர்ற அதே வசனம், அதே தொனியில் பேசறவங்க நடுவில் உக்காந்து சொன்னாங்கன்னா, சுத்தி, பெரிய ரசிகக் கூட்டமே இருக்கும்.

சின்ன சின்ன விசேஷங்கள் - காதுகுத்து, பிறந்த நாள், சடங்கு, நிச்சயதார்த்தம் இந்த மாதிரி ஃபங்க்‌ஷன்களில் பொதுவாக நெருக்கமான உறவினர்கள் கூட்டம் மட்டும் இருக்கும். மதியம் சாப்பாட்டுக்கு அப்புறம், ஹாலில் கொஞ்சம் வயதானவங்க குட்டித் தூக்கம் போடுவாங்க. குட்டீஸ் எல்லாம் வாசலில் விளையாடுவாங்க. நடுத்தர மற்றும் இளம் வயதினர் அவங்கவங்க பார்த்த படத்தின் கதையை சொல்வாங்க. நடு நடுவில் அவங்களோட விமரிசனம், பாராட்டு எல்லாம் பிரமாதமா இருக்கும்.

ம், என்னென்னவோ படங்கள் கண்ணுக்கு முன்னால ஓடுது!

கத்தி படம் பாத்துட்டு சொல்லுங்க, அங்கிள் சில சீன்களில்தான் வர்றாங்கன்னு சொன்னாங்க வனி. நாங்க இனிதான் பாக்கணும்.

பதிவுக்கு மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

உங்கள் பதிவை படிக்கும் போது ரொம்ப ரொம்ப சுவராசியமாக இருக்கு ப்பா.ரொம்ப அனுபவிச்சிருக்கீங்க...

புளியங்காய் ன்னு சொன்னதும் எச்சில் ஊறுதுப்பா

அன்பு தோழி. தேவி

ஆமாம்மா புளிய இலை மாதிரி பூவும் சாப்பிட்டிருக்கேன்.புளியம்பிஞ்சுடன் உப்பும்,மிளகாய்தூளும் சேர்த்து சாப்பிட்டா சூப்பரா இருக்கும்.

நீங்க சொல்றது ரொம்ப சரிம்மா.இப்போ உள்ள குழந்தைகளுக்கு பிஸ்ஸா,பர்கர்ன்னு சொன்னாதான் தெரியும்.

எல்லா புகழும் இறைவனுக்கே

ஆமாக்கா.ரொம்ப அனுபவிச்சு வாழ்ந்திருக்கேன்.நான் பிறந்தது கிராமம்.இது மட்டுமில்லை.விடுமுறைன்னா நாள் முழுக்க குளத்தில் ஆட்டம்,கூட்டாஞ்சோறு சமைப்பது,கொடிக்கா காய்,சூரப்பழம்,காரக்காய் பறிச்சு சாப்பிடுறதுன்னு சொல்லிகிட்டே போகலாம்.மொத்தத்தில் எங்க கிராமத்தில் நானும் என் தோழிகளும் வாழ்ந்த வாழ்க்கையை வைத்து ஒரு படமே ஓட்டலாம்.

எல்லா புகழும் இறைவனுக்கே

படித்தவுடன் நிறைய‌ பழைய‌ விஷயங்கள் நியாபகத்துக்கு வந்துடிச்சி....

எங்க‌ அம்மா, பெரியம்மா எல்லாம் இப்படிதான் சினிமாக்கு கிளம்பி போவாங்க‌! சின்னவங்களான‌ எங்களையெல்லாம் வீட்டிலேயே விட்டுவிட்டு.......அப்ப‌ நான் ரொம்ப‌ ஏக்கத்தோட‌ பார்த்திட்டிருப்பேன்! கேட்டா இதெல்லாம் சின்ன‌ பசங்க‌ பார்க்கிற‌ சினிமா இல்லைன்னு சொல்லுவாங்க‌!

நாங்கல்லாம் சினிமா பார்க்க‌ ஆரம்பித்தபிறகு, கூட்டமா ஒரு கேங்கா போறதுதான் எனக்கு ரொம்ப‌ பிடிக்கும்...சினிமா பார்க்கபோறதே அந்த‌ சந்தோசத்துக்குத்தானே!
இப்ப‌ கூட‌ ஊருக்கு பேசிட்டு இருந்தப்ப‌ கேட்டேன், திரும்ப‌ எப்ப‌ அப்படி கூட்டமா சினிமா பார்க்க‌ போறோம்னு!

எனக்கு இன்னொரு விஷயம் தெரியனுமே! சொல்லுவீங்களா? உங்க‌ கணவர் நடிகரா? கத்தி படத்துல‌ நடிச்சிருக்கிறாரா? யாருன்னு சொல்லுங்களேன்? இப்பதான் அந்த‌ படம் பார்த்தேன்! தெரிந்து பார்க்கனும்னு மிக‌ மிக‌ ஆவலாயிருக்கு!

மதுரையில‌ சினிமா பார்க்கிறது ஒரு வித்தியாசமான‌ அனுபவம் போல‌! ரொம்ப‌ நல்லாயிருக்கும் போல‌ இருக்கே!!!

என்னொட‌ எல்லா ஞாபங்களும் அப்படியே உங்களோட‌ ஒத்துப்போகுதே எப்படி!!!!!!

///எங்க ஊர்ல இருந்து 3 கிலோமீட்டர் தூரத்துல ஒரு தியேட்டர் இருந்தது. அதைய தியேட்டர்னுலாம் சொல்லமாட்டோம். சினிமா கொட்டாய் (கொட்டகை)னு தான் சொல்வோம்./// நாங்களும் சினிமா கொட்டாய்னுதான் சொல்லுவோம்!

///எங்க வீட்ல சினிமா போறதுனா மாட்டு வண்டிலதான் போவோம். எங்க வீடு தோட்டத்துக்குள்ள இருந்ததும், பஸ் ஒருநாளைக்கு 2 முறை மட்டுமே வரும் என்பதுமே காரணமாகும்.
அதே போல படம் பார்க்க செல்வது மட்டுமே ஞாபக்ம் இருக்கும் , வரது தெரியவே தெரியாது. தூங்கிடுவேன்.
இரட்டை மாட்டு வண்டில( எருது) ஏன் மாட்டுவண்டினு பேரோ தெரில?
பலகைமேல வைக்கபில் (வைக்கோல்)போட்டு அதுக்கு மேலே கெட்டியான ஜமுக்காளம் விரிச்சு போட்டு அது மேல உக்காந்துட்டு போவோம். அது ஒரு இளவேனிற்காலம். எப்படி நினைச்சாலும் திரும்ப வரவே வராது.///// இது எல்லாமே அப்படியே எனக்குள் இருக்கும் அழிக்க‌ முடியாத‌ ஆனந்தமான‌ அனுபவங்கள்! இப்படி சினிமாக்கு கிளம்பற‌ நாட்கள் எல்லாம் தீபாவளி, பொங்களை விட‌ பெரிய‌ பண்டிகைகள் எங்களுக்கு!!!

///பள்ளிக்கூடத்தில படிக்கும் போது பள்ளியில் அழைத்து சென்றதுதான் முதன்முறையாக தியேட்டரில் சென்று படம்பார்த்தது./// நான் பார்த்த‌ முதல் படம் மைடியர் குட்டிச்சாத்தான்னு நினக்கிறேன்!