நாங்களும் விபரம் தான்

பனிக்கால வீடு

ஒரு வின்டர் காலம். எங்கள் வீட்டில் சமையல் அறையில் பாத்திரங்கள் கழுவும் தொட்டி அடைத்துக் கொண்டது. கோடை காலம் எனில் தண்ணீரை வாளியில் கொண்டு போய் வெளியில் ஊற்றலாம். இது கொஞ்சம் கஷ்டமான, நடைமுறைக்கு சாத்தியமில்லாத விடயம் தான். என் கணவர் வேலையிலிருந்து வரும் வரை சமாளித்தால் பிறகு அவர் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையிலும் இடி விழுந்தது. ஏனெனில், அவர் வேலையால் வந்த நேரம் இரவு 9 மணி.
வெளியில் பனி கொட்டத் தொடங்கியது. மைனஸ் குளிர். மலை போல குவிந்த பனி குளிரை இன்னும் அதிகமாக்கியது. வாளியில் மொண்டு தண்ணீரை வெளியே ஊற்றுவது மிகவும் சிரமமான காரியமாக இருந்தது. காலையில் எழுந்ததும் முதல் வேலையாக எடுடா போனை, அழுத்துடா நம்பரை என்று தொலைபேசியில் குறிப்பிட்ட கம்பனியை அழைத்தாயிற்று. அவர்களும் நாங்கள் வருவோம், ஆனால் வரமாட்டோம் என்ற ரீதியில் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். 4 - 5 அடி பனியில் வருவது மிகவும் சிரமம். தெருக்களில் இன்னும் மலை போல குவிந்திருந்த பனியில் வருவது சாத்தியமல்ல. ஒரு வழியாக மதியம் அளவில் மெயின் ரோடுகள் மட்டும் ஓரளவுக்கு சுத்தமாகி இருந்தது. ஆனால், கிளை ரோடுகளில் பனியை அகற்ற குறைந்தது 2 நாட்களாவது ஆகும். எங்கள் வீடு மெயின் ரோடிலிருந்து சில அடிகள் தூரத்தில் இருந்தபடியால் ஓரளவு சுத்தமாக இருந்தாலும், எங்கள் வீட்டின் முன்பு குவிந்திருந்த பனியை அகற்ற திணறிப் போனோம்.

முதல் பிரச்சினை, அள்ளிய பனியை கொட்ட இடமில்லை. இரண்டாவது நாங்கள் பனியை அள்ளி தெருவின் ஓரமாக கொட்ட, தெருக்களில் மேழும், கீழும் ஓடித் திரிந்த பனி அகற்றும் வண்டிகள் மீண்டும் பனியை எங்கள் பக்கம் குவிக்க, கடுப்பாகிய நான் குளிரினால் ஒழுகிய மூக்கினையும் பொருட்படுத்தாமல், பனி அகற்றும் வண்டி ஓட்டுநரை கெஞ்ச, அவர் மனமிரங்கி என் ட்ரைவேயில் இருந்து பனியை அகற்றி விட்டு போனார்.
ரோடுகள் கொஞ்சம் சுத்தமாகவும், நாங்கள் அழைத்த கம்பெனி வாகனம் எங்கள் வீட்டின் முன்பு பார்க் பண்ணவும், எனக்கு நெஞ்சில் தண்ணீர் வந்தது. அதன் பிறகு தான் இன்னும் தலைவலி காத்திருந்தது என்று எனக்கு அப்போது விளங்கவில்லை.
வந்தவர் பெயர் மார்க் என்று ஞாபகம். மார்க் 6 அடி உயரம், 3 அடி அகலம். அவர் சொன்னார், எங்கள் கம்பெனி பாலிஸி வீட்டுக்கு வருவதற்கு மட்டும் 200 டாலர்கள் சார்ஜ் பண்ணுவோம். அதன் பிறகு ஒவ்வொரு அரை மணி நேரமும் 50 டாலர்கள். சில வேளைகளில் அரை மணி நேரத்தில் வேலை முடியலாம், அல்லது 2 மணி நேரமும் ஆகலாம், என்றார்.
நான் இந்த தண்ணீர் பைப்பினை கழற்றி, அதில் இருக்கும் அடைப்புகளை அகற்றி, ஒரு நீளமான கம்பியினை இதன் வழியாக செலுத்தி, அழுக்குகள், சாப்பாட்டு பொருட்கள் எல்லாவற்றினையும் சாக்கடையில் தள்ள வேண்டும். இதில் இருக்கும் ஒரு சிரமம் தேங்கும் தண்ணீரை வாளியில் நிரப்பி, வெளியில் கொண்டு போய் ஊற்ற வேண்டும்....என்னது தேங்கும் தண்ணீரை வெளியே கொண்டு போய் ஊற்ற வேண்டுமா? எனக்கு மார்க்-ஐ பார்க்க, பார்க்க இதெல்லாம் எப்படி சாத்தியம் என்று விளங்கவில்லை. மார்க் சப்பணமிட்டு அமர்ந்திருந்தார். அவரின் உடல் எடையினை நினைத்து தான் என் கவலை எல்லாமே.

நான் அவரிடம் சொன்னேன், ராசா, நீங்க கஷ்டப்படவே வேண்டாம். நீங்கள் வாளிகளில் தண்ணீரை நிரப்பி மட்டும் வையுங்கள். எழுந்து நடந்து போய்..எதுக்கு ரிஸ்க்! நான் குடு குடுவென ஓடிப் போய் வாளிகளை காலி பண்ணுவேன், என்றார். அவர் மிகவும் மகிழ்ந்து போனார். அப்படியா செல்லம், மிக்க நன்றி என்றார்.
என் கணவர் முறைத்தார். உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை என்று அவர் பார்வை சொன்னது. இதுக்கெல்லாம் பின்வாங்கும் பரம்பரையா! நான் ஒரு நிமிடத்தில் செய்யும் வேலையை மார்க் செய்ய குறைந்தது 4 நிமிடங்கள் ஆகும். நான் பத்து நிமிடங்களில் 10 வாளிகளை காலி பண்ணி விடுவேன், ஆனால், பாருங்கள் மார்க்... என்று கணக்கு பாடம் நடத்தினேன் என் கணவருக்கு. அவர் என்னவோ பண்ணித் தொலையுங்கள் என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட்டார்.
என் உதவியினால்(!) மார்க் வேலையினை 2 மணி 40 நிமிடங்களில் முடித்து விட்டார். கால்குலேட்டரை எடுத்து அழுத்தினார். ஏதோ நம்பர்களை அழுத்துவதும், பிறகு என்னைப் பார்ப்பதுமாக இருந்தார். கண்ணு, இன்று வேலைக்கான தொகை 280 டாலர்கள். ஆனால், உன் உதவியினை மெச்சி உனக்கு 20% டிஸ்கவுன்ட் என்றார்.
காலையிலிருந்து பனியை அகற்றிய அசதி, பிறகு அழுக்குத் தண்ணீரை ஓடி, ஓடி வெளியில் கொண்டு போய் ஊற்றிய அசதி, தலைவலி ஒரு பக்கம், ஒழுகும் மூக்கு மறுபுறம் என்ற எல்லா பிரச்சினையும் அந்த 20% டிஸ்கவுன்டில் ஒரு நிமிடம் மறைந்து போனது. அவரை வழி அனுப்பி விட்டு, சோஃபாவில் போர்வையினை போர்த்துக் கொண்டு படுத்துவிட்டேன். மதியம் என்ன சாப்பாடு என்று என் கணவர் கேட்டது பின்னர் குளிர்சாதன பெட்டியினை குடைந்தது எதையும் நான் கண்டு கொள்ளவில்லை. உங்களுக்கு நான் 56 டாலர்கள் சேமித்து கொடுத்து இருக்கிறேன். சந்தோஷப்பட்டுக் கொள்ளுங்கள் என்றேன். இது உனக்குத் தேவையா? என்று வடிவேல் பாஸையில் தன்னை தானே திட்டியவாறே ஏதோ சமைக்க ஆரம்பித்தார் என் கணவர்

5
Average: 5 (6 votes)

Comments

கடுப்ஸான விஷயத்தை ரசனையோட சொல்லுறதுக்கு வானதிக்கு ஈடு வானதிதான். ;))
இங்கயும் இதே கதைதான். ;) எங்களுக்கு வேலை தெரியும் என்பதால் இவங்கள் செய்யுறதைப் பார்க்க பொறுமை இல்லாமல் இருக்கும். லைசன்ஸ்ட் ஆட்கள் செய்ய வேண்டிய வேலை. வேலை ஆக வேணும் எண்டால்... பேசாமல் ரசிக்க வேண்டியதாகக் கிடக்கு.

பரவாயில்லை, டிஸ்கௌண்ட் ஆகுதல் போட்டிருக்கிறார் மார்க். ;)

‍- இமா க்றிஸ்

பனிகாலத்தில் பிரச்சனையில் மாட்டிக் கொண்டால் எல்லாமே இங்கு டபுள் செலவு தான். இருந்தாலும் அவ்வளவு எளிதில் வர மாட்டார்கள். ஆம்புலன்ஸ் கூட வரமுடியாமல் அவசர நோயாளிகள் வீட்டிலிருந்து சிரமப் பட்டதுண்டு:((
ம்ம்... எப்படியோ சமாளித்து சாதித்து விட்டதோடு விலை குறைப்பையும் பெற்றுக் கொண்டாயிற்று. உங்க விவரம் நல்லாவே ஒர்க்கவுட் ஆகியிருக்கு :))

படிக்க‌ நல்லா ஹாஸ்யமா எழுதி இருக்கீங்க‌. நீங்க‌ விபரம் தான் ஹா..ஹா...
ம் ..இங்கே எங்களுக்கு பனிப் பிரச்சனையே கிடையாதே.:)
எந்நாடு சென்றாலும், நம் நாடு போலாகுமா......

உங்களூக்கு எவ்வளவு சிரமமா இருந்துருக்கும்ன்னு தெரியுது. இப்ப ரசனையோடு எழுதி எங்க லைக்கை அள்ளிட்டிங்க. லாஸ்ட்ல டிஸ்கவுண்ட் சூப்பர்.

Be simple be sample

வாணி நீங்கள் அனுபவித்த சிரமத்தை இப்படியும் சுவாரஸ்யமா எழுத முடியும்னா உங்களால தாங்க முடியும் :)

வெளீநாடுகளிலில் பனி பெய்யும் பொழுது எடுத்த போட்டோஸ் தோழிகள் போடும் போது பார்க்க எத்தனை அழகுன்னு வியந்திருக்கேன் ஆனால் அதை அனுபவிக்கும் பொழுதுதான் எவ்வளவு கஷ்டம் என்று புரிகிறது :o

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அன்பு வானதி,

வெளி நாட்டு வாழ்க்கை என்றால் எல்லோருக்குமே அது சொகுசான சொர்க்கம் என்று ஒரு எண்ணம் வரும். ஆனா, நீங்க அங்க படும் பாடு, அம்மாடியோவ்.

இங்கே லேசாக குளிரடித்தாலே, புலம்புத் தள்ளுகிறோம். அங்கே எப்படித்தான் சமாளிக்கிறீர்களோ.

அது வெறும் டிஸ்கவுண்ட் அல்ல, உங்க உழைப்புக்குக் கிடைத்த ஊதியம்.

சுவாரசியமான விவரிப்பு.

அன்புடன்

சீதாலஷ்மி

ம்ம்... இதெல்லாம் பெரிய போராட்டாம் தானில்ல வெளிநாடு சிலவற்றில். //அது வெறும் டிஸ்கவுண்ட் அல்ல, உங்க உழைப்புக்குக் கிடைத்த ஊதியம்.// - நான் சீதாவை வழி மொழியறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பனியுடன் போர் நடத்தி முடிச்சிட்டீங்க போல :-) நல்ல பகிர்வுங்.

நட்புடன்
குணா