முதல் அடி வைப்போம்

என்ன வளம் இல்லை இந்நாட்டில்.... எல்லா வளமும் இருக்கு. ஆனாலும் ஏன் இன்னமும் முன்னேறிய நாடாக முடியவில்லை?

நம் நாட்டின் மிகப்பெரிய வளம் மக்கள் வளம். அதுவே நம் பலமும் பலவீனமும். நம் நாடு முன்னேற தடையாக இருப்பது அரசியல்வாதி, அரசு, அதிகாரிகள்னு ஆயிரம் தடைக்கற்களை நாம் சொன்னாலும், அதுவே உண்மையாக இருந்தாலும் கூட அதில் மாற்றம் கொண்டு வருவது யாரால் முடியும்? அது யாருடைய பொறுப்பு? சாமானிய மக்களாகிய நம் கைகளில்தானே இருக்கிறது.

என்னடா நாம என்ன பண்ணிட முடியும்னு நினைக்கறீங்களா? புரட்சி போராட்டம் எல்லாம் பண்ணப் போனா நம்ப வீட்டை யார் பார்த்துக்கறது அப்படீன்னு தோணுதா? புரட்சி போராட்டம் எல்லாம் பண்ண வேண்டாம். நம் கடமையை நாம் ஒழுங்காக நேர்மையாக செய்தால் போதுமே. நாம என்ன தப்பு பண்ணினோம் ஒழுங்காகத்தானே இருக்கோம். இவ என்னடா நம்மையே குறை சொல்றாளேன்னு நினைக்கறீங்களா? அரசு, அதிகாரிகள், அரசியல்வாதிகள் இவங்க எல்லாம் எங்க இருந்து வராங்க. நம்மைப்போன்ற பொதுமக்கள்தானே அவர்களும். அவர்கள் மட்டும் தனி குணநலன்களோடு ஆகாயத்தில் இருந்து குதித்து விடவில்லையே? அப்போ தவறு எங்கே ஆரம்பிக்குது? நம்பகிட்ட இருந்துதாங்க. சின்ன சின்ன தவறுகள், விதிமுறை மீறல்கள் தவறில்லைன்னு நாம ஆரம்பிக்கறோம். அது படிப்படியாக உயர்ந்து அவரவர் பதவிக்கும் அதிகாரத்துக்கும் ஏற்ப தவறுகளும் விதிமுறை மீறல்களும் அதிகரித்துக் கொண்டே போகுது.

வாக்களிப்பதோடு என் கடமை முடிந்து விட்டது இனி எல்லாம் அரசின் கடமை அப்படீன்னு நாம நினைக்கிறோம். (சிலர் வாக்களிக்க கூட முன்வருவது இல்லை. கேட்டால் என் ஒரு வாக்கு என்ன பெரிய மாற்றம் கொண்டு வந்து விடும் ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்று தத்துவம் பேசுவார்கள்) அரசு அப்படீங்கறது என்னங்க? நீங்க நான் எல்லாரும் சேர்ந்ததுதான் அரசு. அரசு ஒரு திட்டம் அறிவிக்குதுன்னா அதை அவரவர் நிலையில் சரியாக கடைபிடித்தால்தானே அந்த திட்டம் முழுமையாக நிறைவேறும். என்னடா மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடறேன்னு நினைக்கறீங்களா?

ஒரு சில உதாரணங்கள் சொல்றேன். ப்ளாஸ்டிக் பையின் தீமையை அறிந்து அரசு ப்ளாஸ்டிக் பைகள் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு கொண்டு வந்திருக்கிறது. ஆனால் நம்மில் எத்தனைபேர் அதை கடைபிடிக்கறோம்? சாமான்கள் வாங்க நம் வீட்டிலிருந்து ஒரு துணிப்பை கொண்டு செல்லலாமே? சில வருடங்களுக்கு முன்னால் அப்படித்தானே சென்றோம். இப்போ துணிப்பை கொண்டு செல்வது கவுரவக் குறைச்சல் ஆகிவிட்டது.

தூய்மை இந்தியா திட்டம் இப்போ கொண்டு வந்திருக்காங்க. அரசியல் தாண்டி சாதாரண பொதுமக்களா இந்த திட்டத்துக்காக நாம் ஒவ்வொருவரும் என்ன செய்திருக்கிறோம். விளக்குமாற்றோடு ஒரு சிலர் ஃபோட்டோக்கு போஸ் கொடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டதோடு கடமை முடிஞ்சு போச்சுதுன்னு அடுத்த வேலையை பார்க்க கிளம்பியாச்சு. சரியான கழிப்பிட வசதியே இல்லாத நாட்டுக்கு இந்த திட்டம் ஒரு கேடான்னு நல்லா வக்கணை மட்டும் பேசறோம். என் வீட்டையும் என் தெருவையும் நான் சுத்தமா வச்சிருப்பேன்னு ஒவ்வொரு குடிமகனும் நினைத்தால் இந்த தேசத்தை தூய்மையாக்க ஒரே ஒரு நாள் போதுமே. ஆனால் செய்ய மாட்டோம். குப்பை போட்டால் தண்டனைன்னு சட்டம் கொண்டு வந்தாலும் மாட்டிக்கொண்டால் அதிலிருந்து எப்படி தப்பிக்கலாம்னுதான் யோசிப்போம். ஆனால் நாட்டில் சுத்தமே இல்லைன்னு மூஞ்சியை சுழிப்போம்.

இப்போதெல்லாம் நகராட்சியே குப்பைகளை வீடுகள் தோறும் வந்து குப்பை வாங்கிட்டு போறாங்க. மட்கும் குப்பை மட்காத குப்பைன்னு பிரிச்சு போடச் சொல்றாங்க. ஆனால் பெரும்பாலும் யாருமே செய்வதில்லை. நாம ஏன் இப்படி இருக்கோம் :(

எல்லாமே அரசுதான் செய்யணும்னா ஒரு குடிமகனா நாம எதுக்கு இங்க உட்கார்ந்துட்டு இருக்கோம். நாம நமது கடமையை ஒழுங்காக செய்யாமல் அரசை குறை சொல்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை.

சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சி என்னை ரொம்பவே யோசிக்க வைத்தது. வியட்நாமை சேர்ந்த ஒரு சுற்றுலாப் பயணியை சிங்கையை சேர்ந்த வியாபாரி ஒருவர் ஏமாற்றி விட்டார். பணத்தை திரும்ப பெறுவதற்காக அந்த பயணி மண்டியிட்டு கெஞ்சும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. தன் நாட்டின் மானம் காப்பாற்றப் பட வேண்டும் என்பதற்காக சிங்கையை சேர்ந்த இன்னொருவர் அதே சமூக வலைத்தளங்கள் மூலம் நிதி திரட்டி அந்த சுற்றுலாப் பயணிக்கு அளிக்க முன்வந்தார். ஆனால் அந்த சுற்றுலாப்பயணி பணத்தை ஏற்க மறுத்து பெருந்தன்மையாக நடந்து கொண்டார். ஆனால் சக சிங்கப்பூரர் செய்த தவறுக்காக இன்னொரு சிங்கப்பூரர் செய்த இந்த செயல் நிச்சயம் அந்த சுற்றுலாப்பயணிக்கு சிங்கப்பூரைப் பற்றியும் சிங்கப்பூரர்களைப் பற்றியும் நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தியிருக்கும். அரசு அந்த கடைக்காரரை தண்டித்துக் கொள்ளட்டும் என்று இருக்காமல் தன் நாட்டுக்கு அவப்பெயர் வந்துவிடக்கூடாது என்று இந்த குடிமகன் செய்தது பாராட்டத் தகுந்த செயல் அல்லவா! இந்த தேசப்பற்று நமக்கு இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நம் நாடு என்றோ வல்லரசாகியிருக்குமே.

இப்போ ஒரு சின்ன கேள்வி பதில் நாம எல்லாரும் கலந்துக்கணும்.

1. குழந்தைகளுக்கு நல்லதுகெட்டது சொல்லி, கெட்டது செய்யக்கூடாதுன்னு சொல்லி கொடுக்கறோமா? ஆம்/இல்லை
2.பொது இடங்களை சுத்தமா வைத்துக் கொள்ள வேண்டும்னு சொல்லிக் கொடுத்து நாமும் அதை பின் பற்றுகிறோமா? ஆம்/இல்லை
3. ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும்னு சொல்லிக் கொடுத்தும் நாமும் அதை கடை பிடிக்கறோமா? ஆம்/இல்லை
4.வெளியில் செல்லும் போது குப்பையை (அ) குப்பைத் தொட்டி தேடி அதில் போடுகிறோமா? (ஆ )குப்பைத்தொட்டியே இல்லை அதனால் ரோட்டில் போடுகிறோமா? (இ) இல்லை அந்த குப்பையை வீட்டுக்கு எடுத்து வந்து குப்பையை அதற்கான இடத்தில் சேர்க்கிறோமா?
5. சாலை விதிகளை முறையாக கடைபிடிக்கிறோமா? ஆம்/இல்லை
6. சிலநேரங்களில் ஆபத்தில்லாத விதிமுறை மீறல்கள் தவறில்லை என நினைக்கிறோமா? ஆம்/இல்லை
7. அரசின் திட்டங்களை நம் அளவில் நாம் செய்ய முன்வருகிறோமா? ஆம்/இல்லை

இந்த கேள்விகளுக்கெல்லாம் நம் பதிலை வைத்து நாமே நம்மை எடை போட்டுக் கொள்வோம். நம் மீது தவறிருந்தால் திருத்திக் கொள்வோம். தனிமனித ஒழுக்கம் இருந்தால் மட்டுமே நாடு முன்னேற முடியும். அதற்கான முதல் அடியை எடுத்து வைப்பது நமது வீட்டில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும்.

5
Average: 4.7 (3 votes)

Comments

ரொம்ப நாளைக்கு பின் அருமையான பதிவோடு வந்திருக்கீங்க :) வாழ்த்துக்கள். இப்படி அடிக்கடி லீவ் விடாம வாங்க.

//சிலர் வாக்களிக்க கூட முன்வருவது இல்லை. கேட்டால் என் ஒரு வாக்கு என்ன பெரிய மாற்றம் கொண்டு வந்து விடும் ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்று தத்துவம் பேசுவார்கள்// - நானும் அப்படி ஆளு தான், இதுவரை ஓட்டு போடல :) எதாவது குறை சொன்னா என்னவர் கேட்பார்... “ஓட்டு போடாத நீ அவங்களை எல்லாம் குறை சொல்ல கூடாது”னு. சரின்னு வாயை மூடிக்குவேன். அரசியல் பற்றியும், எலக்‌ஷன்ல நிக்கிறவங்க பற்றியும் போதிய அறிவு இருக்குறதில்லை எனக்கு, அதனால் போடுறது ரிஸ்க்ன்னு விட்டுடுவேன். சாக்கு தான்... ஆனா ஏனோ போட்டதில்லை.

//சிலர் வாக்களிக்க கூட முன்வருவது இல்லை. கேட்டால் என் ஒரு வாக்கு என்ன பெரிய மாற்றம் கொண்டு வந்து விடும் ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்று தத்துவம் பேசுவார்கள்// - மற்ற கேள்விகளுக்கு ஆமாம், ஆனா இதுக்கு இல்லை தான். சிக்னல் போட்டா நான் நின்னாலும் பின்னாடி இருக்கவனெல்லாம் போலீஸ் இல்லன்னு என்னை தாண்டி விர்ரு விர்ருன்னு போகும் போது அங்க நிக்க சங்கடப்பட்டு சில நேரம் நானும் அவங்களோடு போவது உண்டு. ஹெல்மட் இல்லாம போய் ஃபைன் கட்டினது உண்டு (ஆனா நிச்சயம் எதுக்காகவும் லஞ்சம் கொடுத்ததில்லை). சில நேரம் புது இடம் சிக்னல் கவனிக்காம கடந்து போனது உண்டு :(

ஃபீல் பண்ணுவேன், ஆனா சில நேரம் அவாய்ட் பண்ண முடியாம போகுது. குப்பை எல்லாம் எப்பவும் ரோட்டில் போட மாட்டேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தினமும் காய் வாங்கும் போது கூடை எடுத்துட்டு போயிடுவேன். முடிந்தவரை கேரிபேக் வாங்கறதில்லை.
எல்லா தேர்தல்லயும் கரெக்டா ஓட்டுப் போட்டுடுவேன்.

//நம் கடமையை நாம் ஒழுங்காக நேர்மையாக செய்தால் போதுமே.// எனக்கு நம்பிக்கை இருக்கு கவி. நான் சரியா தான் இருக்கேன்.

தெருவில் தண்ணீர்க் குழாயில் வீணா ஒழுகுறதை என்னால் பார்த்துட்டு சும்மா போக‌ முடியாது. ஸ்டாப் பண்ணுவேன். ஆனா, குழாயே உடைந்திருந்தால் அது என் கைமீறிய‌ செயல்ன்னு போயிடுவேன்:(

நல்ல‌ பதிவு கவி

நல்ல‌ பதிவுக்கு முதழில் வாழ்த்துக்கள்.

///அரசு, அதிகாரிகள், அரசியல்வாதிகள் இவங்க எல்லாம் எங்க இருந்து வராங்க. நம்மைப்போன்ற பொதுமக்கள்தானே அவர்களும். அவர்கள் மட்டும் தனி குணநலன்களோடு ஆகாயத்தில் இருந்து குதித்து விடவில்லையே? அப்போ தவறு எங்கே ஆரம்பிக்குது? நம்பகிட்ட இருந்துதாங்க. சின்ன சின்ன தவறுகள், விதிமுறை மீறல்கள் தவறில்லைன்னு நாம ஆரம்பிக்கறோம். அது படிப்படியாக உயர்ந்து அவரவர் பதவிக்கும் அதிகாரத்துக்கும் ஏற்ப தவறுகளும் விதிமுறை மீறல்களும் அதிகரித்துக் கொண்டே போகுது./// உண்மை... உண்மை

இதை படிக்கும்போது ஒரு சினிமா டயலாக் ஞாபகத்துக்கு வருதுங்க‌... ஒரு பைசா திருடினா தப்பா? இப்படி ஒவ்வொரு பைசாவா ஒவ்வொருத்தரும் (அத்தனை கோடி மக்களும்) திருடினா?

நம்ம‌ நாட்டில் இருக்கிற‌ ஒவ்வொருத்தரும், தன்னோட‌ சின்ன‌ சின்ன‌ தவறுகளை திருத்த‌ முயற்சித்தாலே போதுங்க‌! நம்ம‌ நாடு எவ்வளவோ முன்னேறிடும்!

நீங்க‌ சொல்லியிருக்கிறதுல‌ 99% நான் யோசித்து செய்யறதுதான்! ஆனா அந்த‌ 1% ? சில‌ சமயங்களில் சவாலாகவே இருக்கு!

முதல் பதிவுக்கும் கருத்துக்கும் நன்றி வனி :)

குட் கேர்ள் நீங்க. இனி வரும் தேர்தல்களில் ஓட்டும் போடணும். அப்பதான் வெரி குட் கேர்ள் :)
என் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவே கஜினி படையெடுத்து போன மாதிரி முட்டி மோதி சேர்த்து கடந்த தேர்தலில் வோட்டும் போட்டுட்டேன் :) ஆனால் இன்னும் அடையாள அட்டை கிடைக்கவில்லை. அதையும் வாங்கிடுவேன் சீக்கிரம். என் ஓட்டு என் உரிமை :)

சிக்னலில் நீங்க சொல்ற பிரச்சினை இருக்குதான். நாம வெய்ட் பண்ணினாலும் பின்னாடி வர்றவங்க நம்மைத்தாண்டி போகும் போது நாம கேணை மாதிரி நிற்பதாக தோன்றினாலும் கண்டுக்காம சிக்னலுக்கு வெய்ட் பண்ணுங்க. ஒருவித மனத்த்ருப்தி இருக்கும். நம்மைப்பார்த்து ஒன்றிரண்டு பேர் சிக்னலை மதித்து நம்மோடு நிற்கவும் வாய்ப்பு இருக்கு.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நல்ல குடிமகள் நீங்க நிகி. சந்தோஷமா இருக்கு. வாழ்த்துக்கள்.

//தெருவில் தண்ணீர்க் குழாயில் வீணா ஒழுகுறதை என்னால் பார்த்துட்டு சும்மா போக‌ முடியாது. ஸ்டாப் பண்ணுவேன். ஆனா, குழாயே உடைந்திருந்தால் அது என் கைமீறிய‌ செயல்ன்னு போயிடுவேன்:(//

சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு ஒரு ஃபோன் போட்டு சொல்லிடுங்க. சரிசெய்யப்படும் வாய்ப்பு நிச்சயமா இருக்கு.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி அனு.

//இதை படிக்கும்போது ஒரு சினிமா டயலாக் ஞாபகத்துக்கு வருதுங்க‌... ஒரு பைசா திருடினா தப்பா? இப்படி ஒவ்வொரு பைசாவா ஒவ்வொருத்தரும் (அத்தனை கோடி மக்களும்) திருடினா?//

நிஜம்மாவே இப்படி திருடினாருங்க ஒரு வங்கி ஊழியர். வாடிக்கையாளர் கணக்கிலிருந்து 10 பைசா 20 பைசா என்று திருடியிருக்கார். சில்லறை விவகாரமாச்சே யாரும் கவனிக்கவில்லை. லட்சக்கணக்கில் சுருட்டியிருக்கார். கணக்குத்தணிக்கையில் சிக்கிக் கொண்டார்.

//நீங்க‌ சொல்லியிருக்கிறதுல‌ 99% நான் யோசித்து செய்யறதுதான்! ஆனா அந்த‌ 1% ? சில‌ சமயங்களில் சவாலாகவே இருக்கு!//

99% செய்ய முடிஞ்ச நம்மால் மீதி அந்த 1% செய்ய முடியாதா என்ன. நிச்சயம் நம்மால் முடியும் அனு. வரும் தலைமுறையிலாவது நம் தேசம் வளம் கொழிக்கும் தேசமாக மாறும். நிச்சயம் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நச்சென்று ஒரு இடுகை. மிக அவசியமான இடுகை. பாராட்டுக்கள் கவி.

ஒவ்வொருவரும் தன்தன் பங்கைச் சரியாகச் செய்ய வேண்டும். அல்லாவிட்டால் எதுவும் ஆகப் போவது இல்லைதான்.

‍- இமா க்றிஸ்

நல்ல‌ பதிவு கவி. எல்லா கேள்விகள்க்கும் என் பதில் ஆம். சுயநலத்தில் பொதுநலம். அதுதான் இ்பபொழூது தேவை.

think positive

ஹாய்,

///தனிமனித‌ ஒழுக்கம் இருந்தால் மட்டுமே நாடு முன்னேற‌ முடியும்//சும்மா நச்சுனு பதிவு கொடுத்து இருக்கிறீர்கள். உங்க‌ பொது நல‌ சிந்தனைக்கு பாராட்டுக்கள்.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

\\நாம நமது கடமையை ஒழுங்காக செய்யாமல் அரசை குறை சொல்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை.//
அரசாங்கத்தைப் பார்த்து கொலை, வன்முறை செய்பவர்களை தண்டியுங்கள் என்று கேள்வி எழுப்புவதில் நியாயம் உண்டு.
ஆனால் நம் கடமையை செய்யாமல் அரசை குறை கூறுவது நிச்சயம் நியாயமில்லை.

நீங்கள் குறிப்பிட்ட சிங்கப்பூர் சிங்கார சிங்கப்பூராய் மாறியிருப்பதற்க்கு என்னவோ அவர்களின் அரசும் முக்கிய காரணம் வகிக்கிறது. காரணம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

சுய பரிசோதனை பதில்கள்.
அனைத்தும் ஆம். ஆனால் நீங்கள் மேலே குறிப்பிட்ட பிளாஸ்டிக் பை விஷயத்தில் இங்கேயும், நம் ஊரிலும் சூப்பர் மார்க்கெட்ட்ற்க்கு துணிப் பைகளை எடுத்து செல்வதுண்டு, ஆனால் ஜவுளி கடைகளுக்கு இல்லை, ஏன் என்று தோணியதே இல்லை :(

முதல் அடி வைப்போம், எவரையும் அடிக்காமல் .
சிந்திக்க வைக்கும் பதிவு.

வெல்கம் பேக் கவி. அவசியமான் பதிவு. சின்ன சின்ன சுயபரிசோதனையில் நம்ம சுயம் தெரிந்துவிடும். ஆனால் ஏற்றுக்கொள்ளமுடியாத உண்மைகள் இருக்கும். நாம கொஞ்சம் மாறினாலே நாடு நிறைய மாறும்.

Be simple be sample

நன்றி இமாம்மா :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கருத்துக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி கீதா :).

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பாராட்டுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரஜினிபாய் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வாணி :)
//அரசாங்கத்தைப் பார்த்து கொலை, வன்முறை செய்பவர்களை தண்டியுங்கள் என்று கேள்வி எழுப்புவதில் நியாயம் உண்டு.//

நிச்சயம் நியாயம் உண்டு. நமக்கு அந்த உரிமையும் உண்டு. ஆனால் எல்லாமே அரசு செய்யட்டும் என்று இருப்பதுதான் தவறு.

சமீபகாலமாக பொதுசமூகத்தின் மனநிலை மாற்றம் பயம் கொள்ள வைக்கிறது. சிறு விதிமுறை மீறல்களும், லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் அப்படி ஒன்றும் பெரிய தவறில்லை என்ற மனோபாவம் வந்துவிட்டது. இந்த மனநிலை மாற்றம்தான் பெரிய பெரிய தவறுகளுக்கு வழி வகுக்கிறது.

வன்முறை... இன்று நமது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் சினிமாக்களும் வன்முறையை விலாவாரியாக காட்டுகிறது. பெண்ணை போகப்பொருளாக சித்தரிக்கிறது. சினிமா தயாரிப்பவரும் இயக்குபவரும் நடிப்பவரும் கூட நம்மைப்போன்ற பொதுமக்கள்தான். பொறுப்புணர்ச்சி இல்லாமல் செய்வதன் விளைவு சமூகத்தில் எதிரொலிக்கிறது.

நம் நாட்டில் இல்லாத தணிக்கைச் சட்டங்களா? ஆனால் அதை செயல் படுத்தும் பொறுப்பில் இருப்பவனும் நம்மில் இருந்து வந்தவர்தானே. அவருடைய பொறுப்பை தட்டிக்கழித்ததன் விளைவுதான் பெரியவர்கள் கூட பார்க்கத்தகாத சினிமாக்களும் ‘யு’ சர்ட்டிஃபிகேட்டோடு வெளிவருகிறது.

அன்று நம்முடைய தெருக்களில் புதிதாக ஒருவர் வருகிறார் என்றால் யார் என்ன என்று விசாரிப்பார்கள். ஒரு பையன் பெண்ணை கிண்டல் செய்கிறான் என்றால் தட்டிக் கேட்பார்கள். இன்று கண்முன்னே அநியாயம் நடந்தாலும் எனக்கு நடக்காதவரை அது என்னை பாதிக்காதவரை தலையிட மாட்டேன் என்றுதானே நம்மில் பெரும்பாலானோர் இருக்கிறோம்.

எத்தனை சட்டங்கள் வந்தாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் அதை செயல்படுத்த முடியும்.

சிங்கப்பூரைப் பொறுத்தவரை அரசின் கடுமையான சட்ட திட்டங்களோடு பொதுமக்களின் முழு ஒத்துழைப்பும் இருந்ததால்தான் அது அதன் இன்றைய நிலையை அடைந்திருக்கிறது.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி ரேவ்ஸ்.
//நாம கொஞ்சம் மாறினாலே நாடு நிறைய மாறும்.//

கண்டிப்பாக ரேவ்ஸ்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நல்ல சமூகவிழிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவு.
முதல்முறையாக வாக்குரிமை வந்ததுமுதல் இன்றுவரை ஒருதேர்தல் வாக்களிக்க தவறவிட்டதில்லைங்க, தேர்தல் நாளில் காலையில் நேரத்தில் புறப்பட்டு வாக்களித்து விரலில் மையிட்டு வந்தாலே ஒரு சந்தோஷமும் பெருமையாக இருக்கும்ங்க. 4 வருடமும் அதிகமா பைக் பயணம்தான்ங்க, இன்று வரை விதிகளை மீறியதாக எதற்கும் ஃபைன் கட்டியதில்லைங்க,
டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களுக்கு செல்லும்போது துணிப்பைதான், அது போதவில்லை என்றால் அட்டைப்பெட்டிகளில் அடைத்து மெஷினில் கட்டி தருவார்கள். வண்டி வாகனங்களில் முன் வைப்பதற்கும் எளிது. பிளாஸ்டிக்பை தேவையும் இருக்காதுங்க,
விதிகளை அதிகமா கடைபிடித்தால் நம்மை ஏதோ வேற்றுக்கிரகவாசி மாதிரி பார்க்கப்படுவது இங்கு வாடிக்கையான ஒன்று. அதெல்லாம் கண்டுக்காம போனால் மட்டுமே, ரூல்ஸ் ராமானுஜம், பஞ்சுவால்ட்டி பரமசிவம் போன்ற பெயர்களிலிருந்து தப்பிக்கமுடியும்ங்க :-)
நல்ல பதிவுங்

நட்புடன்
குணா

இப்போ நாட்டுல‌ நடக்குறத‌ அப்படியே படம் புடிச்சு காட்டுது உங்க‌ பதிவு. திருடனாய்ப் பார்த்து திருடாவிட்டால் திருட்டை ஒழிக்க‌ முடியாது அப்ப்டின்னு சொல்லுவாங்க‌, ஆனா நம்ப‌ நாட்டுல‌ ஒட்டு மொத்த‌ பேருமே ஏதாவதொரு சின்ன‌ விசயத்தில‌ திருடனாத் தான் இருக்கோம்.( வனி பதிவுல‌ சொன்ன‌ ட்ராபிக் விசயம் போல‌) நம்ம‌ நாமே திருத்திக்கிட்டா நாடு தன்னாலே முன்னேறிடும் கவி.
//தனிமனித ஒழுக்கம் இருந்தால் மட்டுமே நாடு முன்னேற முடியும். அதற்கான முதல் அடியை எடுத்து வைப்பது நமது வீட்டில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும்.//மறுக்க‌ முடியாத‌ உண்மை. நல்ல‌ பதிவு, வாழ்த்துக்கள் கவி..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

அன்பு கவிசிவா,

இப்படியெல்லாம் உண்மையை சொல்லச் சொன்னா நாங்க என்ன பண்றது?

சரி, குட்டித் தலை கேக்கறப்ப பதில் சொல்லாம இருக்க முடியுமா?

1. ஆம்.

2. ஆம்.

3. ஆம்.

4. சில சமயம் அ, சில சமயம் ஆ, எப்பவாவது இ.

5. ஆம்.

6. ஆம்.

7. பெரும்பாலும் - இல்லை.

அப்புறம் - ப்ளாஸ்டிக் கவர் - மிகவும் குறைக்க முயற்சிக்கிறோம் கவி. அந்த அவேர்னெஸ் இருக்கு. இவ்வளவு ஜாக்கிரதையா இருந்தே, வீட்டில் இவ்வளவு கவர் சேருதேன்னு ஆச்சரியமாகவும் இருக்கு.

நல்ல பதிவு. பாராட்டுக்கள்.

அன்புடன்

சீதாலஷ்மி

//
முதல்முறையாக வாக்குரிமை வந்ததுமுதல் இன்றுவரை ஒருதேர்தல் வாக்களிக்க தவறவிட்டதில்லைங்க, தேர்தல் நாளில் காலையில் நேரத்தில் புறப்பட்டு வாக்களித்து விரலில் மையிட்டு வந்தாலே ஒரு சந்தோஷமும் பெருமையாக இருக்கும்ங்க. 4 வருடமும் அதிகமா பைக் பயணம்தான்ங்க, இன்று வரை விதிகளை மீறியதாக எதற்கும் ஃபைன் கட்டியதில்லைங்க,//

ரொம்ப சந்தோஷமா இருக்குங்க தம்பி. வாழ்த்துக்கள்.

//விதிகளை அதிகமா கடைபிடித்தால் நம்மை ஏதோ வேற்றுக்கிரகவாசி மாதிரி பார்க்கப்படுவது இங்கு வாடிக்கையான ஒன்று. அதெல்லாம் கண்டுக்காம போனால் மட்டுமே, ரூல்ஸ் ராமானுஜம், பஞ்சுவால்ட்டி பரமசிவம் போன்ற பெயர்களிலிருந்து தப்பிக்கமுடியும்ங்க :-)//

நாம என்ன செய்தாலும் ஏதாச்சும் சொல்லத்தான் செய்வாங்க. அதனால் நாம நல்லதையே செய்வோம் :)

ரொம்ப நன்றி குணா.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//ஒட்டு மொத்த‌ பேருமே ஏதாவதொரு சின்ன‌ விசயத்தில‌ திருடனாத் தான் இருக்கோம்.// நம்ம தலைமுறை அதை உணர ஆரம்பிச்சுட்டோம் இனிமேல் திருத்திக் கொள்ள வேண்டும். நிச்சயம் நாளைய தலைமுறை இன்னும் சிறப்பாகவே இருக்கும்.
நன்றி சுமி.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நீங்க பாசாகிட்டீங்க சீதாம்மா :). நம் அளவில் எடுக்கும் சிறுமுயற்சிகள் நிச்சயம் நல்ல பலனை கொடுக்கும். சிறு துளி பெரு வெள்ளம்னு சேமிப்புக்கு மட்டும் இல்லாமல் இங்கேயும் சொல்லலாம்ல :)
நன்றி சீதாம்மா.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!