சொல்லவா வேண்டாமா

என்னடா தலைப்பே விவகாரமா இருக்கேன்னு தோணுதா?

சில விஷயங்களை ஷேர் பண்ணனும்னு நினைக்கிறேன், ஆனா படிக்கறவங்க எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியலை. அதுதான் தயங்கிகிட்டே இருந்தேன். இப்ப சொல்லலாம்னு தைரியப்படுத்திகிட்டு ஆரம்பிக்கிறேன்.

எச்சில், பத்து, பசை – இந்த வார்த்தைகளெல்லாம் வீட்டில் வயசான பாட்டிகள் சொல்லிக் கேட்டிருப்பீங்க. இவையெல்லாம் ஏதோ மூட நம்பிக்கை, பழங்காலப் பழக்கம் என்கிற மாதிரி ஒரு அபிப்ராயம் வந்து விட்டது. ஆனால் இதில் எவ்வளவோ விஷயங்கள் அடங்கியிருக்கு.

“அண்ணாக்கக் குடி” அப்படின்னு சொல்வாங்க. அந்த வார்த்தைக்கே இப்ப அர்த்தம் தெரியாது. செந்தமிழில் மொழிபெயர்ப்பதானால் – ‘அண்ணாந்து குடி’ என்று பொருள்(!)

தண்ணீர், காஃபி, பால் – இவற்றையெல்லாம் தம்ளரில் குடிக்கும்போது, உதடுகளில் படாமல், தலையை கொஞ்சம் மேலே தூக்கி, வாயைத் திறந்து, உதடுகளில் தம்ளர் படாமல், ஊற்றி(!!) குடிக்க வேண்டும்.

இதை நானே செய்வதில்லை என்று முதலில் உண்மையை ஒத்துக் கொள்கிறேன். எனக்கு காஃபியை கொஞ்சம் கொஞ்சமாக, துளித் துளியாக சிப் பண்ணி, ரசித்துக் குடிக்கணும்.

ஆனால் தண்ணீரை பாட்டிலில் இருந்தோ, செம்பில் இருந்தோ குடித்தால், எச்சில் படாமல்தான் குடிக்கிறேன்.

ஸ்கூலில், காலேஜில், ஆஃபிஸில் – எல்லோரும் எல்லோருடைய டிஃபன் பாக்ஸையும் ஷேர் பண்ணிக்குவோம். நானுமே அப்படி செய்திருக்கிறேன்.

இதில் நட்பும், உரிமையும், அது தருகிற சந்தோஷமும் சேர்ந்து இருக்கும்.

குழம்பு சாதம், பொரியல், தயிர் சாதம், பிரியாணி, இட்லி, காரத் துவையல், மிளகாப்பொடி, நெய் சோறு என்று எத்தனை வெரைட்டி இருந்தாலும் அத்தனையும் ஒன்றாகக் கலக்கும்.

அதே மாதிரி, வீட்டிலோ, விருந்து நடக்கும் இடத்திலோ, முக்கியமாக ஹோட்டல்களில் பஃபே நடக்கும் இடங்களிலோ எல்லாப் பாத்திரங்களிலும் இருக்கும் உணவுகளை - நாம் சாப்பிடும் கையால் கரண்டிகளைத் தொட்டு எடுப்பதும், பரிமாறும் கரண்டிகள் நம்முடைய (சாப்பிட்டுக் கொண்டிருக்கும்) தட்டில் பட்டு, பரிமாறிக் கொள்வதும் சரியா?

இப்படி எல்லோருமே செய்யறாங்கன்னு சொல்லவில்லை. ஆனால், இதைப் பற்றிய அவேர்னெஸ் குறைவாக இருக்கோன்னு நினைக்க வேண்டியிருக்கு.

நண்பர்கள் ஷேர் செய்து சாப்பிடும் விஷயத்தில் முக்கியமான ஒன்று – அவை எல்லாமே அளவாக டிஃபன் பாக்ஸில் வரும் உணவுகள். அந்த வேளை சாப்பாடு முடியும்போது, தயாரித்த உணவுகளும் அந்தப் பொழுதுடன் தீர்ந்து விடும். அடுத்த வேளைக்கு மிச்சம் வைக்கப் படுவதில்லை.

ஆனால் வீட்டில், ஹோட்டலில், பெரிய பாத்திரங்களில் மொத்தமாக இருக்கும் உணவுகள் அப்படியல்ல.

தொடர்ந்து பலரும் சாப்பிடுவதற்காக, குறைந்த்து 3 மணி நேரத்தில் இருந்து ஐந்து மணி நேரம் வரை பரிமாறப்பட வேண்டியிருக்கும்.

தயிர், மோர் இவையெல்லாம் நாட்கணக்கில் (2 நாள் வரை) பாதுகாப்பாக இருக்கக் கூடியவை.

எண்ணெய், நெய் இவையெல்லாம் வாரக் கணக்கில் ஒரே பாத்திரத்தில் இருக்கும்.

ஊறுகாய் வகைகள் – மாதக் கணக்கில் – ஏன் – வருடக் கணக்கில் கூட – ஒரே பாத்திரத்தில் கெட்டுப் போகாமல் இருக்கும்.

மிளகாய்ப் பொடியுடன் கலந்து கொள்ள நல்லெண்ணெய் கிண்ணம் இருந்தால், அதை இடது கையால், ஸ்பூனில் எடுத்து, தட்டில் படாமல், ஊற்றிக் கொள்ள வேண்டும்.

பருப்பு/பருப்புப் பொடியுடன் சாதத்தில் ஊற்றிக் கொள்ள நெய்க் கிண்ணம் இருந்தால் அதற்கும் இதே முறைதான்.

உப்புக் கிண்ணத்துக்கு இந்த ரூல் ஸ்ட்ரிக்ட்லி அப்ளைட்.

பொதுவாகவே ஒவ்வொரு உணவுக்கும் தனித் தனியான கரண்டிகள் இருக்க வேண்டும். தேங்காய் சட்னி எடுத்த அதே கரண்டியால் புளிக் குழம்பையோ மிளகாய்த் துவையலையோ எடுத்தால் குழம்பு/துவையல் சீக்கிரமே ஊசிப் போய் விடும்.

ஊறுகாய் பாத்திரத்தில் அதற்கென்று இருக்கும் கரண்டிகளை மட்டுமே உபயோகிக்க வேண்டும். இல்லையென்றால் மொத்தப் பண்டமும் பாழாகி விடும்.

பால், மோர், தயிர், ஊறுகாய், எண்ணெய், நெய் இவற்றில் மற்ற சமைத்த உணவுப் பண்டங்கள் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படிப் பட்டால் - இவற்றில் பூசணம் பூத்து விடும். உபயோகிக்க முடியாது.

இப்போது வரும் சாஸ் அயிட்டங்களும் கூட இதே போலத்தான்.

அடுப்பு பக்கத்தில் தோசை மாவு/பால் இருந்தால், அதில் அடுப்பில் தாளித்துக் கொண்டிருக்கும் தேங்காய் போட்ட பொரியலோ சாம்பாரோ தெறித்து விட்டால் போச்சு, பால், மாவு இவையெல்லாம் கெட்டுப் போய் விடக் கூடும்.

ஹோட்டல்களில் பரிமாறுபவங்க இப்ப க்ளவுஸ் போட்டுக் கொண்டு பரிமாறுகிறாங்க. ஆனால், சாப்பிடுபவர்கள் மேஜை மேல் இருக்கும் சட்னித் தூக்கு/சாம்பார் வாளியில் இருந்து, சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அதே கையால் எடுத்துக் கொள்வதோ அல்லது சாப்பிடும் தட்டில் கரண்டி படுவது போல, பரிமாறிக் கொள்வது சரியில்லைதானே.

இப்பவெல்லாம் வீட்டில் சின்ன சின்ன விருந்துகளில், சமைத்த பண்டங்களை, டைனிங் டேபிளின் மீது வைத்து விட்டு, விருந்தினர்கள் அனைவருமாக, பஃபே முறையில் எடுத்துப் போட்டுக் கொண்டு சாப்பிடும் முறை வழக்கமாகி வருகிறது.

இது நல்லதுதான், அவங்க அவங்களுக்கு பிடிச்சதை, போதுமான அளவு, தானாகவே பரிமாறிக் கொள்ளலாம்.

இப்படி டேபிளின் மீது வைக்கும்போது – உப்பு, தயிர், மோர், நெய், ஊறுகாய் போன்ற(நாள்பட இருக்கும்) பொருட்களை, ஒரு பக்கமாக, அதற்கு உண்டான ஸ்பூன்களுடன் வைத்து விடலாம்.

இட்லி, தோசை, சப்பாத்தி, நான், பூரி போன்ற பதார்த்தங்களை, ஒரு பக்கமாக – எடுத்துப் போட்டுக் கொள்ள ஏதுவாக – இடுக்கிக் கரண்டியுடன் வைக்கலாம்.

சாதம், சாம்பார், ரசம், கூட்டு, பொரியல் இவற்றிற்கெல்லாம் தனித்தனியாக, தோதான கரண்டிகள் இருக்க வேண்டும்.

சிப்ஸ், வற்றல், வடகம் இவற்றுக்கும் - எடுத்துப் போட்டுக் கொள்ள, பொருத்தமான, ஏந்தலாக இருக்கும் ஸ்பூன்கள் தேவை.

முக்கியமாக, நாமே பரிமாறிக் கொள்ளும்போது, நம் தட்டில் படாமல் போட்டுக் கொள்ள வேண்டும்.

அதே போல எடுக்கும் பொருட்கள், மற்ற உணவுப் பண்டங்களில் சிந்தி விடாமல், ஜாக்கிரதையாக எடுக்க வேண்டும்.

ஒரு உணவு கெட்டு விட்டால், பணம் பாழாவது மட்டுமல்ல, தெரியாத்தனமாக அதை நாம் சாப்பிட்டால், நம் வயிறு, ஆரோக்கியமும் கூடவே பிரச்னைக்கு உள்ளாகும்தானே.

சில வீடுகளில், பிஸ்கட், சிப்ஸ், மிக்ஸர், முறுக்கு, போன்றவற்றை, ஒரே தட்டில் அழகாக அடுக்கி, எல்லா விருந்தினர்களும் எடுத்துக் கொள்ள தோதாக, டீபாயின் மீது கொண்டு வந்து வைக்கிறார்கள்.

இவற்றை எடுத்து சாப்பிடும்போது, பக்கத்திலேயே கொஞ்சம் டிஷ்யூ வைப்பது நல்லது. கொஞ்சம் எடுத்து சாப்பிட்டால், கையைத் துடைத்துக் கொண்டு, அடுத்த பண்டத்தை எடுக்கலாம்.

மொத்த்த்தில், டேபிள் மேனர்ஸ் என்பது ஹோட்டலில் மட்டுமல்ல, வீடுகளிலும் முதலிலிருந்தே சுத்தமாகவும் பதமாகவும் பரிமாறி, சாப்பிட, பழக்கப்படுத்திக் கொள்வது நல்லது.

4
Average: 3.6 (5 votes)

Comments

தப்பே இல்லை. உங்களுக்கு என் ஆதரவு 100 % உண்டு சீதா. :-)

//சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அதே கையால் எடுத்துக் கொள்வதோ அல்லது சாப்பிடும் தட்டில் கரண்டி படுவது போல, பரிமாறிக் கொள்வது சரியில்லைதானே.// சரியில்லை என்பதற்கு மேல் சீதா. தப்பு என்பேன். எனக்கு ஏதாவது தொற்றி இருக்கலாம். அதை இன்னொருவருக்கு (பலருக்கு!) கடத்திவிடப் போகிறேன். இதையே இன்னொருவர் எனக்குச் செய்தால்!!

//சாதம், சாம்பார், ரசம், கூட்டு, பொரியல் இவற்றிற்கெல்லாம் தனித்தனியாக, தோதான கரண்டிகள் இருக்க வேண்டும்.// பரிமாறும் இடத்தில் இவற்றின் முன்னால் தட்டு வைப்பதற்கு இடமும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தட்டை வைத்துவிட்டு போட்டுக் கொள்ளலாம். அல்லாவிட்டால்... வலக் கையால் தட்டைப் பிடித்துக் கொண்டு இடது கையால் பரிமாறிக் கொள்ள வேண்டும். இது கொஞ்சம் சிரமம். அதுவும்... டிஸ்போஸபிள் தட்டு வளைந்துகொண்டால் ரசம் சேலையில்தான்.

//எடுக்கும் பொருட்கள், மற்ற உணவுப் பண்டங்களில் சிந்தி விடாமல், ஜாக்கிரதையாக எடுக்க வேண்டும்.// ;) பல சமயம் முன்னால் பரிமாறுகிறவர்களைப் பார்க்க.... 'இந்தப் பாத்திரத்தில் கோழிக் குழம்பு / மாமிசம் சிந்தியிருக்குமோ!' என்று தோன்றுவதைத் தவிர்க்க இயலுவதில்லை. அந்த எண்ணம் வந்தால் என் தட்டிலுள்ள மீதி உள்ளே இறங்கச் சிரமப்படும். :-)

இந்தத் தலைப்பு நானும் எழுத நினைத்து, உங்களைப் போலவே, 'இங்கு எழுதலாமா! வேண்டாமா!' என்று விட்டிருந்த தலைப்புத்தான். :-) ஆனால் அரை மனதாக வேறு எங்கோ சொல்லியிருக்கிறேன் என்பதாக நினைப்பு. எழுத நினைத்தவை இன்னும் சற்று அதிகம். எப்போதாவது (அடுத்த மன உந்துதலில் போது) கொட்டி வைப்பேன்.

‍- இமா க்றிஸ்

நானும் உங்கள் கட்சிதான்...... கண்டிப்பாக‌ சொல்லத்தான் வேண்டும்.....

//எச்சில், பத்து, பசை – இந்த வார்த்தைகளெல்லாம் வீட்டில் வயசான பாட்டிகள் சொல்லிக் கேட்டிருப்பீங்க. இவையெல்லாம் ஏதோ மூட நம்பிக்கை, பழங்காலப் பழக்கம் என்கிற மாதிரி ஒரு அபிப்ராயம் வந்து விட்டது. ஆனால் இதில் எவ்வளவோ விஷயங்கள் அடங்கியிருக்கு// பழங்காலங்களில் சொல்லப்பட்ட‌, கடைபிடிக்கப்பட்ட‌ அனைத்துவிஷயங்களிலுமே "ஏதோ ஒரு நன்மை இருக்கும்" என்பது என் கருத்து!
//சாப்பிடுபவர்கள் மேஜை மேல் இருக்கும் சட்னித் தூக்கு/சாம்பார் வாளியில் இருந்து, சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அதே கையால் எடுத்துக் கொள்வதோ அல்லது சாப்பிடும் தட்டில் கரண்டி படுவது போல, பரிமாறிக் கொள்வது சரியில்லைதானே// கண்டிப்பாக‌ சரியில்லை.....

//ஒரு உணவு கெட்டு விட்டால், பணம் பாழாவது மட்டுமல்ல, தெரியாத்தனமாக அதை நாம் சாப்பிட்டால், நம் வயிறு, ஆரோக்கியமும் கூடவே பிரச்னைக்கு உள்ளாகும்தானே// அனைவரும் அறியவேண்டிய‌ விஷயம்!

அன்பு சீதா
நல்ல‌ விஷயம் தான். இதைச் சொல்ல‌ தயக்கம் தேவையில்லை.
ஒவ்வொரு உணவுக்கும் தனித்தனி கரண்டியை அதன் அருகிலேயே ஒரு சிறு தட்டில் வைக்கணும்.
தனித் தனி கரண்டி வைத்துவிட்டால் ஒன்றை மற்றதில் போட‌ மாட்டாங்க‌.

//எல்லாப் பாத்திரங்களிலும் இருக்கும் உணவுகளை - நாம் சாப்பிடும் கையால் கரண்டிகளைத் தொட்டு எடுப்பதும், பரிமாறும் கரண்டிகள் நம்முடைய (சாப்பிட்டுக் கொண்டிருக்கும்) தட்டில் பட்டு, பரிமாறிக் கொள்வதும் சரியா?//

நிச்சயம் சரியில்லை. வலது கையால் சாப்பிட‌ ஆரம்பித்த‌ பின் இடது கையால் தான் தேவையானதை எடுக்கணும்.
அதுவும் தட்டில் கரண்டி படவே கூடாது.
யாராவது நின்று பரிமாறி உதவி செய்தால் வசதியாக‌ இருக்கும். இந்தப் பக்கம் அப்படித் தான். சிலர் நின்று உதவி செய்வார்கள்.

ஹாய்,
உங்க‌ பதிவு பயனுள்ள‌ பதிவுங்க‌.ஆனால் நாம் சொல்லினால், ஏற்றுக் கொள்ளும் மனசுத்தான் யாருக்கும் இல்லை. 'சொல்லவா, வேண்டாமா''பதிவு எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.நன்றிமா.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

சொல்ல வேண்டிய விஷயம், படிக்கிறவங்க புரிஞ்சுக்க வேண்டிய விஷயம். சீதா பேபி... உங்களை விட தெளிவா இதை யாரும் சொல்லி இருக்க முடியாது... சூப்பர் :) அருமையா சொல்லிருக்கிங்க, எல்லாமே தெளிவா தனி தனி பாய்ண்ட்டா, புரியும்படியா. எனக்கு என்னவோ சின்னதில் இருந்து டிஃபன் பாக்ஸ் ஷேர் பண்ற விஷயம் பிடிக்காது... கொஞ்சம் அதிகமாவே எச்சில் பார்ப்பேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப பயனுள்ள பதிவுங்க. ஒவ்வொரு வகையான உணவுப்பொருளும் கெட்டுப்போகாமல் இருக்க கொடுத்த டிப்ஸ் அருமையாக
தொகுத்து கொடுத்திருக்கீங்க. பயனுள்ள பதிவுங்.

நட்புடன்
குணா

அன்பு இமா,

தாங்க்யூ இமா.

விருந்துகளில் மட்டுமில்ல, எல்லோரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடறப்ப, சின்ன வயசுல இருந்தே, இதெல்லாம் சொல்லி, பழக்கியிருக்காங்க. ஆனா, இன்னிக்கு சர்வ சாதாரணமா, சாப்பிட்டுக் கொண்டிருக்கும் கையாலயே, எல்லாத்தையும் எடுக்கறப்ப, ரொம்ப ரொம்பவே சங்கடமாக இருக்கு.

எப்பவாச்சும் வர்றவங்ககிட்ட எப்படி சொல்றதுன்னு ஒரு தயக்கம் வேற.

உறவினர் வீட்டுக்கு வந்த விருந்தினர் ஒருத்தங்க அவங்களோட ஃப்ரெண்ட்ஸ், அவங்க வீட்டுக் குழந்தைகளையும் கூட்டிட்டு வந்திருந்தாங்க. அந்தக் குழந்தை இன்னொரு குழந்தையோடு விளையாடறப்ப, ஏதோ ஒரு வார்த்தை சொல்லி, இந்தக் குழந்தையைத் திட்டுச்சு. குழந்தைக்கு அர்த்தம் தெரியாதுதான், ஆனா, இப்படியெல்லாம் பேசக் கூடாதுன்னு நாமதானே சொல்லணும், அந்த வீட்டுத் தலைவி அதை சொல்லப் போக, அந்தக் குழந்தையோட அம்மாவுக்கு வருத்தமாகிடுச்சு.

சொன்னவங்களுக்கு ஏண்டா சொன்னோம், நமக்கு இது தேவையான்னு ஃபீல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.

இங்கே சொல்றப்ப, பொதுவாக சொல்ல முடியுது. படிக்கும் தோழிகள் அவங்களையும் அறியாமல் இருக்கும் பழக்கங்களை மாத்திக்குவாங்கன்னு தோணிச்சு. அதான் சொல்லிட்டேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு அனு,

இது சொல்ல வேண்டிய விஷயம்தான், சொல்லித்தான் தெரியணுங்கறது கிடையாது. வீட்டில் குழந்தைகளிடம் ஆரம்பத்தில் இருந்தே பழக்கப் படுத்தி, வழக்கமாக ஆக்க வேண்டியது.

குழந்தைகளிடம், காலில் செருப்பு போட்டுக்கோ, ஈரக் காலைத் துடை, தலையைத் துவட்டு, இதெல்லாம் தினசரி சொல்லி சொல்லி செய்ய வைப்பது போல, சாப்பாட்டில், சாப்பிடும் இடத்தில் இப்படி இப்படி இருக்கணும்னு சொல்லிட்டா நல்லது.

ஆனா, என்ன ஆகுதுன்னா, ஸ்கூல், காலேஜ் போனதும், இப்படியெல்லாம் சுத்தம் பார்ப்பது பத்தாம்பசலித்தனம் என்றொரு எண்ணம் உருவாகிடுது போல.

பெரியவங்க சொன்னா - ‘ஆமா, உங்க ஆசாரத்துக்கு ஒரு அளவே இல்லயா’ அப்படின்னு ஒதுக்கறது ஃபேஷனா இருக்கு.

பதிவுக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி அனு.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு நிகிலா,

கரெக்டா சொன்னீங்க, சுத்தம் என்பதுதான் இதில் முக்கியமான பாயிண்ட்.

கெட்டுப் போன ஊறுகாய், ஊசல் வாடை வந்த வத்தக் குழம்பு, இதெல்லாம்தான் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கிடுச்சு:):)

அதே போல, ஹோட்டலில் பஃபேயின் போது, பாத்திரத்திலிருந்து பரிமாறிக்கறவங்க இப்படி செய்தால், என்னால் அதிலிருந்து எதுவும் எடுத்துக்க மனசு வர மாட்டேங்குது. அதிலயும் பெரிய ஹோட்டல்களில் வெஜ், நான் வெஜ் இரண்டும் இருக்கறப்ப, எப்படி நாம சாப்பிடுவது?

பதிவுக்கும் கருத்துக்கும் நன்றி நிகிலா.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு ரஜினி மேடம்,

நாம சொல்றதை சொல்லி வைப்போம், உடனே இல்லன்னாலும், சொல்லும் விஷயத்தைப் பத்தி, ஒரு அவேர்னஸ் வரும்தானே.

பதிவுக்கும் கருத்துக்கும் நன்றி ரஜினி மேடம்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு வனி,

டிஃபன் பாக்ஸ் ஷேரிங் அந்த வேளையோடயே முடிஞ்சுடும். ஆனா, பாத்திரத்தில் மிச்சம் இருக்கும் சாப்பாட்டை, உப்பை, ஊறுகாயை, எடுத்து வச்சு, உபயோகப்படுத்தணுங்கறப்ப, சில விஷயங்களில் கவனமாக இருந்தே ஆகணும் இல்லையா.

பதிவுக்கும் கருத்துக்கும் நன்றி வனி வசு.(ச்ச்சும்மா - உங்க புதுப் பெயரை சொல்லிப் பாத்தேன்:):):))

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு குணாங்,

இது ஆரம்பம்தான். உணவுப் பண்டங்களைப் பாதுக்காப்பது பற்றி, இன்னொரு பதிவு ரெடியாகிட்டிருக்கு.

பதிவுக்கும் கருத்துக்கும் நன்றி குணாங்.

அன்புடன்

சீதாலஷ்மி

நிச்சயம் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் தான். நானும் ஸ்கூலில் பங்கிட்டு சாப்பிட்டுள்ளேன், இதைப் பற்றியெல்லாம் அப்போது யோசித்ததில்லை. இங்கு உணவகங்களில் பெரும்பாலும் எல்லா உணவுகளுக்கும் தனித்தனி கரண்டிகள் வைத்திருப்பார்கள் நாமும் சாப்பிட கரண்டி, மற்றும் போர்க் உபயோகிப்பது வழக்கம்.
பார்ட்டிக்கான டிப்ஸ் யூஸ்புல். நீங்கள் சொன்னது நல்லதே :-)

அன்பு வாணி,

இன்னிக்குதான் உங்க பதிவைப் பார்த்தேன்.

பதிவுக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி வாணி.

அன்புடன்

சீதாலஷ்மி