வீட் பாக் (Wheat Bag)

தேதி: January 12, 2015

5
Average: 5 (2 votes)

 

பருத்தித் துணி - (50 செ.மீ x 16 செ.மீ) x 2
கோதுமை - 900 கிராம்
தையல் இயந்திரம் & துணிக்கேற்ற நிற நூல்
மெஷரிங் டேப்
டெய்லர்ஸ் சாக்
ரூலர்
கத்தரிக்கோல்
க்ளிப்ஸ் / பின்ஸ்
தையலூசி & நூல்
புனல்

 

தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.
துணியில் மேலே சொல்லப்பட்ட அளவில் இரண்டு துண்டுகள் வெட்டி எடுக்கவும். அவற்றின் புறப்பக்கங்கள் வெளியே இருக்குமாறு போட்டு, சேர்த்துப் பின் செய்து கொள்ளவும். (இரண்டும் வெவ்வேறு துணியிலிருந்து எடுத்ததாக இருந்தாலும் பரவாயில்லை. பருத்தித் துணியாக இருப்பது அவசியம்).
சிறிய பக்கங்கள் ஒன்றில், துண்டுகள் இரண்டையும் தனித்தனியே வெளிப்புறம் மடித்து நூலோடவும்.
நீளமான பை போல வருமாறு மெஷினின் பொருத்தி எடுக்கவும்.
மூலைகள் இரண்டிலுமிருந்து முக்கோண வடிவில் சிறு துண்டுகள் வெட்டி நீக்கிவிட்டு, அவற்றின் இரண்டு பக்கங்களிலும் ஒவ்வொரு சிறிய வெட்டு வெட்டிவிடவும்.
பையை சரியான பக்கம் திருப்பிக் கொண்டு மூலைகளிரண்டையும் கத்தரிக்கோல் முனையால் சரிசெய்துவிடவும்.
வாய்ப் பக்கத்தைத் தவிர்த்து மீதி மூன்று பக்கங்களிலும் ஒரு மில்லி மீட்டர் உள்ளே தள்ளி, ஒரு வரி தையல் போடவும்.
கிடைக்கும் பையில் 16 செ.மீ இடைவெளிகளில் குறுக்காக இரண்டு கோடுகள் வரைந்து கொள்ளவும்.
தானியத்தை மூன்று சமபாகங்களாகப் பிரித்துக்கொள்ளவும்.
பையின் வாய்ப் பகுதியில் புனலை வைத்து, ஒரு பங்கு தானியத்தை உள்ளே கொட்டவும்.
தானியங்கள் பையின் அடியில் சேர்ந்திருக்கும்.
அதை அடுத்துத் தெரியும் கோட்டிலிருந்து 2 செ.மீ உள்ளே தள்ளி ஒரு வரி நூலோட்டம் போடவும்.
வரைந்த கோட்டின் மேல் மெஷின் தையல் போட்டுவிட்டு நூலோட்டத்தைப் பிரிக்கவும். இப்படியே இரண்டாவது பகுதியையும் ஒரு பங்கு தானியத்தால் நிரப்பி தைத்துவிடவும்.
வாய்ப் பக்கம் இருக்கும் நூலோட்டத்திற்குச் சிறிது தள்ளி இன்னொரு நூலோட்டம் தைத்துக் கொள்ளவும். ஒரு பக்கம் இரண்டு விரல் அளவு (புனல் நுழைவதற்கு ஏற்ற அளவு) விட்டு நூலோடவும். நூலோட்டம், கோதுமை மணி புகாத அளவு சிறிதாக இருக்க வேண்டும்.
மீதி தானியத்தையும் நிரப்பிவிட்டு திறந்திருக்கும் பக்கத்திலிருந்து தைக்க ஆரம்பிக்கவும். முன்பு மீதிப் பக்கங்களைத் தைத்தது போல, வெளி ஓரத்திலிருந்து ஒரு மில்லிமீட்டர் உள்ளே தள்ளித் தைத்துவிட்டு நூலோட்டங்கள் இரண்டையும் பிரித்துவிடவும்.
மெஷின் தையல்கள் ஆரம்பிக்கும் போதும் முடிவுகளிலும் Lock Stitch போடுவது அத்தியாவசியம். அல்லாவிட்டால் கோதுமை இடம் மாறிப் போகலாம்; பையும் பிரிந்து போகலாம். தைக்கும் போது கோதுமை மணிகள் மெஷின் பாதத்தில் மாட்டிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளவும். கோதுமையின் பாரம் பையை ஒரு பக்கம் இழுக்கப் பார்க்கும். அவ்வப்போது கவனித்து நேராக்கி விட வேண்டும்.
தசை வலிகளுக்கு இந்த வீட் பாக் ஒத்தடம் சிறந்த நிவாரணம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்