ஹோம் நர்ஸ்கள்

ஹோம் நர்ஸ் இப்பலாம் பார்த்தீங்கனா இந்த வாசகம் அடங்கிய பலகைகள் நகர்ப்புறங்களில் மூலைக்கு மூலை தென்படும்.
பத்திரிகைகளிலும் விளம்பரங்கள் பார்க்கலாம்.

நாடுவிட்டு நகர்விட்டு, ஊர் விட்டு உறவு விட்டு வரும் விழுதுகள் தங்களின் வேர்களுக்கு நீர் விட இது போன்ற நிறுவனங்களை நாட வேண்டிய நிலை ஏற்படுகிறது. சூழ்நிலை கைதியாகிப்போன விழுதுகள்தான் இந்நிறுவனங்களின் வாழ்வாதாரம்.

எல்லா நிறுவனங்களையும் குறை கூறமுடியாது. நல்ல நேர்மையான அமைப்புகளும் இருக்கின்றன, ஆனால் அவற்றின் எண்ணிக்கையோ மிகச் சொற்பம்.

ஒரு நல்ல கல்லூரியில் நான்கு ஆண்டுகள் தொழில்முறை பட்டப்படிப்பு படித்த மாணவர்கள் வாங்கும் ஆரம்ப சம்பளத்தை விட கணிசமான அளவு அதிகம் பெறுபவர்கள் ஹோம் நர்ஸ்கள்.

ஹோம் நர்ஸ் என்றவுடன் ஏதோ இவர்கள் இந்த வேலையில் பயிற்சி எடுத்து, நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் என்ற கற்பனையை வளர்த்தீர்களேயானால் அது மிகவும் தவறு.

இந்த வேலை பற்றியே ஏதும் அறியாதவர்கள், அதாவது நோய்வாய்ப்பட்ட பெரியோர்களையோ அல்லது குழந்தை பெற்ற பச்சிளம் தாய்மார்களையோ கவனிக்கும் வேலையில் இதற்கு முன் அமராதவர்கள்.

இவர்களை வேலைக்கு அமர்த்தவேண்டுமானால் சம்பந்தப்பட்ட நிறுவனரிடம், நம் தேவைகளைச் சொல்லி பணம் கட்டி பதிந்து வைக்க வேண்டும்.
நாம் சென்ற வேளை நல்ல வேளையாக இருப்பின் நல்ல நர்ஸ் கிடைப்பார்.
நர்ஸ் நர்ஸ் என்று கூறுகிறேனே என்று கூகுள் இமேஜ் தட்டிப்பார்த்து நீங்களாக ஒரு கற்பனை செய்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.

பிரஷர், சுகர் செக் பண்ணுவாங்க என்றோ, தேவைப்பட்ட உடற்பயிற்சிகளை அவ்வப்பொழுது செய்து விடுவார்கள் என்றோ கனவிலும் நினைத்து விடாதீர்கள்.

இவர்களின் வேலை நாம் செய்து கொடுக்கும் உணவை நாம் இல்லாத நேரங்களில் நோய்வாய்ப்பட்டவருக்கு கொடுக்க வேண்டும். இயற்கை உபாதைகளுக்கு சரியான வழிவகை செய்ய வேண்டும்.

சில நிறுவனங்கள் தெள்ளத்தெளிவாக ஆட்களிடம் சொல்லி அனுப்பி விடுகின்றனர். அதாவது நோயாளியை பார்ப்பது மட்டுமே கடமை, சிறு சிறு வேலைகள் கூட தாங்கள் செய்யக்கூடாது, அதனால் சமையலுக்கு உதவியாக வெங்காயம் நறுக்கவோ, காய்கறி நறுக்கவோ அனுமதி இல்லை.
அவர்களின் டயட் விபரத்தையும் நமக்கு தெளிவு படுத்தி விடுகின்றனர்.
சோப்பு, ஷாம்பு, பாய், தலையணை, போர்வை போன்றவைகளை நாம்தான் வழங்க வேண்டும்.
அவர்கள் செய்யும் வேலை சரியில்லை என திருத்துவதாக எண்ணி ஏதேனும் சொன்னோமேயானால் அவ்வளவுதான் மனதில் வைத்திருந்து நம்மை அல்ல நாம் யாருக்காக இவ்வளவு கஷ்டப்படுகிறோமோ அவர்களை நோகடித்து விடுவர்.
அதனை உணர்ந்து வேறு ஆள் மாற்றினால் அவர்கள் செட்டாக இரண்டு வாரங்கள் ஆகும்.
மீண்டும் அதே தொல்லை வரும்.

சில சமயம் நோயாளியை விட வரும் செவிலியர் அதிகமான உடல் உபாதையுடனும், உடல் பருமனாலும் கஷ்டப்படுகின்றனர்.
சிலரோ எரியும் வீட்டில் பிடுங்குபவர்களாக இருக்கின்றனர்.
சதா சர்வ காலமும் செல்போனை காதில் சுமந்தபடியே இருக்கும் பெண்கள். அவர்களின் செல்போன் சேவைக்கட்டணத்தையும் அவ்வப்பொழுது உயிர்ப்பிக்க வேண்டிய வேலையும், செலவும் நம்முடையதே!!!

இது போன்ற வேதனையை அனுபவித்த, அனுபவிக்கும் தோழிகளே தங்களின் அனுபவங்களையும் பகிருங்களேன்!!

மேலும் சில பதிவுகள்