மாமியாருக்கு ஒரு சேதி மருமகளுக்கு ஒரு சேதி

அன்புத் தோழிகளுக்கு,

மேலே கொடுத்திருக்கும் தலைப்பு - ஒரு பழைய பாடலின் ஆரம்ப வரி

”மாமியாளுக்கு ஒரு சேதி
இதை மதிச்சு நடந்தா மரியாதி

மருமகள் தன்னை பெருமைகளுடனே
வாழ வைப்பது புது நீதி

மருமகளெல்லாம் எருமைகளா
அந்த மாமியாருக்கு அடிமைகளா

அத வயசானவங்க புரிஞ்சுக்கணும்
நம்ம வாலிப மனச தெரிஞ்சுக்கணும்

பழசா போன பாத்திரமெல்லாம்
பரணையின் மேலே ஒதுங்கிக்கணும்

கிட்டத்தில் நின்னா சிரிச்சா என்று
கேள்வி கேட்க கூடாது

தட்டி மறைவில் காதை கொடுத்து
ஒட்டு கேட்க கூடாது

ஊதுவத்திய பொருத்தும் போது
உஸ்ஸுன்னு பெருமூச்சாகாது

பஞ்சண மெத்தைய விரிக்கும் போது
பக்குன்னு இரும கூடாது

சாவியை மருமகள் கையில் கொடுத்து
ஜப மாலை தன்னை எடுத்துக்கணும்”

சாமி பக்கணும் கோவில் போகணும்
நம்ம சந்தோஷத்துக்கு
டைம் கொடுக்கணும் கொடுக்கணும்”

இவை அந்தப் பாடலின் சில வரிகள்.

மருமகள்களோட எதிர்பார்ப்புகளில் முக்கியமானவை எல்லாம் இந்த வரிகளில் தெரிகின்றனதானே.

இழையின் தலைப்பில் ஏற்கனவே அந்தக் காலத்தில் வானொலியில் நிகழ்ச்சி நடந்ததாம். ஏராளமான மாமியார்கள் மருமகள்கள் கடிதங்கள் அனுப்பினார்களாம்.

தலைப்பு நான் சொல்ல நினைச்சதுக்கு ஒட்டி இருந்ததால, அதையே எடுத்துப் போட்டுட்டேன்.

அறுசுவைக்கு தினமும் வர்றேன். மன்றத்தில் இழைகளில் பதிவு கொடுக்கணும் என்று ஆர்வத்தோட பார்க்கிறேன்.

பெரும்பாலானவை தமிங்கிலத்தில். கஷ்டப்பட்டு அவற்றைப் படித்தாலும், மருத்துவ உதவி சம்பந்தமாக, அல்லது குழந்தைப் பேறு சம்பந்தமாக இருக்கு.

பதில் சொல்லத் தயக்கமா இருக்கு.

இன்னும் சில இழைகள் - ‘வாழ்க்கையே வெறுத்துப் போச்சு’, மாமியார் வீட்டில் பிரச்னை, அம்மா வீட்டில் பிரச்னை’ என்று இருந்தன. பதில் சொல்லலாமான்னு நான் நிதானமா(!)யோசிக்கறதுக்குள்ள, இழைகள் காணாம போயிடுது.

எனக்கு என்ன ஒரு சந்தேகம்னா, என்னை மாதிரி மாமியார் ஆனவங்க, அல்லது ஆகப் போறவங்க யாருமே அறுசுவைல இல்லையா? இல்லையா? இல்லையா?(எக்கோ எஃபக்டுங்கோ!!!)

இருந்தாங்கன்னா, அவங்க பார்வையிலிருந்து இந்தப் பிரச்னைகளுக்கு ஒரு பதிவு கிடைக்குமே. அல்லது அந்த வயசில் இருக்கிறவங்க, இவற்றைப் படிக்கறப்ப, தங்களை மாத்திக்க ஒரு வாய்ப்பாக அவங்களுக்கு அமையுமே.

எல்லா விஷயங்களிலும் ரெண்டு பக்கமும் இருக்கே.

சரி, விஷயத்துக்கு வர்றேன். (யாருப்பா அங்க, இன்னும் விஷயத்துக்கே வரலையான்னு விஷமமா சிரிக்கிறது:):):))

இந்த இழையில மாமியார் மருமகள் ரெண்டு பக்கத்துல இருந்தும் வந்து பேசுங்க.

முடிந்தவரைக்கும் உங்க சொந்தப் பிரச்னையா சொல்லாம, என் ஃப்ரெண்டுக்கு நடந்தது, எனக்குத் தெரிஞ்சவங்க வீட்ல இந்த மாதிரி, இந்த மாதிரி, இப்படி இப்படி(அன்பே ஆருயிரே படத்துல எஸ்.ஜே.சூர்யா வாய்ஸ்ல படிங்க) அப்படி அப்படின்னு சொல்லுங்க. பதில் சொல்றவங்க(எதிர்க்கறவங்க) எல்லாரும் தயக்கமில்லாம பேச சௌகரியமா இருக்கும்.

நல்ல தீர்வுகள், வழி நடத்தல்கள், எல்லாம் தெரிஞ்சுக்கலாம்னு ஆர்வமாக இருக்கேன்.

இன்னொன்னு, ஆரம்பிச்சு வச்சுட்டு, ஒரு ஓரமாக, நானும் பார்வையாளராக இருக்கேன். அப்பப்ப, வந்து, என்னோட கருத்துக்களையும் சொல்றேன்.

ரெடி, ஸ்டார்ட் ம்யூசிக்!

அன்புடன்

சீதாலஷ்மி

//எனக்கு என்ன ஒரு சந்தேகம்னா, என்னை மாதிரி மாமியார் ஆனவங்க, அல்லது ஆகப் போறவங்க யாருமே அறுசுவைல இல்லையா? இல்லையா? இல்லையா?// இங்கருந்தும் எக்கோ எஃபக்டு கேட்குதா சீதா!

அதே சந்தேகம்தான் எனக்கும். மனதுக்குள்ள கேட்டுட்டே இருப்பேன் ஏன் இப்படி! என்று. எந்த ஸ்டேஜ்ல மருமகளுக்கு ஃப்ரீடம் கிடைக்குது! மாமியார் இறந்த பின்னாலா! ஏன் அதே மருமக்கள், பிறகு தன்னைப் போல தன் வீட்டுக்கு வரவங்க சிரமப்படக் கூடாதுன்னு நினைக்கல!!

ஒவ்வொரு இழை பார்க்கிறப்பவும் நினைப்பேன்... சீதா வர மாட்டாங்களா என்று.

//நிதானமா(!)யோசிக்கறதுக்குள்ள, இழைகள் காணாம போயிடுது.// என்று நானும் அவசர அவசரமா போட்டுட்டு போய்ருவேன். பிறகு வந்து பார்த்தால் இன்னொரு விஷயம், முன்னால விட்டுப் போயிருந்ததைச் சொல்லியிருப்பாங்க. அவரவர் பிரச்சினை அவரவருக்கு. ஆனால் சங்கிலித் தொடராகிப் போகும் நிகழ்வுகள் எங்காவது உடைக்கப்பட வேண்டும். ஒரு மாமியார் முன்வந்து நல்லபடி ஆரம்பித்து வைத்தால் அந்தப் பரம்பரையில் தொடர்ந்து வரும் மருமக்கள் அபப்டியே எடுத்துப் போக இடமிருக்கிறது.

என் மாமியார்... ஏற்கனவே நிறைய இடத்தில் சொல்லியிருக்கிறேன், என்னைத் தன் பெண்ணுக்கு மேல் நேசித்ததாகத்தான் சொல்வேன். யாரானாலும் நேசிப்பார் அதனால் எல்லோராலும் நேசிக்கப்படக் கூடிய பெண்மணி அவர். நான் என்று மட்டுமல்ல என் சகலை கூட இதையேதான் சொல்லுவார். என் தாயாரும் நல்ல மாமியார்தான். மருமக்களை மக்களாக நினைப்பவர்கள்; எந்த விடயத்திலும் மூக்கை நுழைக்க மாட்டார்கள்.

சுதந்திரம் என்றால் நான் அன்பவித்தது போன்ற சுதந்திரத்தை வேறு எந்த மருமகளாவது அனுபவித்திருப்பார்களாவென்று நினைப்பேன். மணமான புதிதில் வீட்டுக்குத் தினமும் வருவார். நான் முற்றம் முழுவதும் பெருக்கிக் காய்ந்த இலைகுழைகளைக் குவித்திருப்பேன். என் நகம் அழுக்காகும், உடைந்து போகும் என்று தானே சொல்லிவிட்டு எல்லாவற்றையும் அள்ளிப் போடுவார். இப்போது போலவே அப்போதும், திரைச்சீலைகள், சோஃபா குஷன் கவர் என்று எதையாவது தைத்துக் கொண்டு இருப்பேன். தானும் கூட அமர்ந்து தைக்க ஆரம்பிப்பார்.

என்னைப் பற்றிப் பெருமையாக அவர் மற்றவர்களிடம் பேசியிருப்பது தற்செயலாகத் தெரியவரும் போது வியந்திருக்கிறேன். அவர் நம்பிக்கை அவருக்கு. என் நம்பிக்கைகளை எப்பொழுதும் மறுத்ததில்லை. அவர்களைப் பார்த்து வளர்ந்த எனக்கு என் வருங்கால மருமக்களை அவர்கள் நாடு, மொழி கடந்து நேசிக்க முடிகிறது. என் மாமியார் பற்றி நினைக்கும் இந்த நொடி கூட, மனது கனத்துக் கண்ணில் நீர் நிறைகிறதே! ;( http://www.arusuvai.com/tamil/node/27805 படித்துப் பார்க்காதவங்க படித்துப் பார்க்கலாம். என் மனதில் என் மாமியாருக்கு எத்தனை உயர்வான இடம் கொடுத்திருக்கிறேனோ அதை விட ஒரு மடங்கு அதிகம் என் மருமக்கள் மனதில் பிடித்தாக வேண்டும். அல்லாவிட்டால்... என் வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லாது போய்விடும்.

எங்க பிள்ளைகள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்படதற்காக, செலவு செய்து படிக்க வைப்போம், வேலை எடுத்துக் கொடுப்போம், சேமித்தும் கொடுப்போம். நல்ல இடத்தில் இணையும் தேடிக் கொடுப்போம். ஆனால் மருமக்கள் சந்தோஷமாக இல்லாவிட்டால் பிள்ளைகளின் சந்தோஷமும் கெட்டுப் போய்விடும் என்பதைச் சிந்திக்க மட்டும் சிலர் மறுப்பது ஏன்! இது நாணயத்தின் மறுபக்கம்; மருமக்கள், மறு மக்கள் என்பது ஏன் மறந்து போகிறது! சுயநலமாகச் சிந்தித்தால் கூட மருமக்களை நன்றாக நடத்த வேண்டியதற்கான ஒரு காரணம் இருக்கிறது. மூப்பு அடையும் சமயத்தில் என்ன ஆகும்! பிள்ளைகள் எப்படிச் சந்தோஷமாகப் பார்ப்பார்ப்பார்கள்! முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். :-)

//உங்க சொந்தப் பிரச்னையா சொல்லாம,// :-) பிரச்சினை இல்லாததால் தைரியமாகத் தன்மையிலேயே சொல்லிவிட்டேன். // மாமியார் மருமகள் ரெண்டு பக்கத்துல இருந்தும் வந்து பேசுங்க. // ;) நானே இரண்டுமாக இருந்து பேசியிருக்கிறேன். :-) என் எழுத்து இங்கு யாரையாவது சிந்திக்க வைத்திருந்தால், நிச்சயம் சந்தோஷப்படுவேன்.

‍- இமா க்றிஸ்

அருமையான‌ தலைப்பு.
ஆனால், யாரும் வரக்காணோம்.
எல்லோரும் கருத்துப் போர் புரிய‌ வாங்களேன்.
மினி பட்டி மாதிரி இருக்கட்டுமேன்னு காத்திருக்கேன் ஆவலோடு.

என்னோட‌ மாமியார் பற்றி நானும் சொல்லி இருக்கேன். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் பிரச்சனையே இல்லை.
ஒரு நாளும் அவர் என்னோட‌ சுதந்திரத்தில் தலையிட்டதில்லை. அப்படி ஒரு மாமியார் கிடைக்க‌ நானும் கொடுத்து வச்சிருக்கணும்.

என் தங்கை சொல்லுவாள். "அக்கா, நீ ரொம்ப‌ லக்கி. புகுந்த‌ வீட்டில் எல்லோருமே நல்லா அமைஞ்சிருக்காங்கனு."

உண்மையா நேசிக்க‌ ஆரம்பிச்சீங்கன்னா எதையும் தப்பா எடுத்துக்க‌ மாட்டீங்க‌. சரியா புரிஞ்சிக்குவீங்க‌.

பிடிக்காத‌ பெண்டாட்டி கை பட்டால் குற்றம். கால் பட்டால் குற்றம் நு சொல்லுவாங்க‌. வெறுப்போடு பார்த்தால் எல்லாமே தப்பா தான் தெரியும். அதையே விருப்போடு பார்த்தால் சரியா புரிஞ்சிக்குவீங்க‌.

//எனக்கு என்ன ஒரு சந்தேகம்னா, மாமியார் ஆனவங்க அல்லது ஆகப் போறவங்க யாருமே அறுசுவைல இல்லையா? இல்லையா? இல்லையா?//

சீதா, இமா எல்லோரும் ஒரு நாள் மாமியார் ஆகித் தானே ஆகணும். இன்றைய‌ மறுமகள் நாளைய‌ மாமியார் தானே. அதனால‌, மாமியார் ஆகப் போறவங்க‌ தான் அறுசுவையில் உள்ள‌ எல்லோருமே.

அதை இன்னிக்கு புரிஞ்சுகிட்டா போதும்.
http://www.arusuvai.com/tamil/node/22684 படிச்சுப் பாருங்க‌.
புரிதலும், விட்டுக் கொடுக்கும் மனோபாவமும் போதும்னு நினைக்கேன்.

வாங்க வாங்க... எங்க ஆளையே காணோம் என்றிருந்தேன், பின்னாடி இப்படிப்பட்ட சிந்தனைகள் இருந்தது தெரியாமல் போயிற்றே!!

மாமியாரோ மருமகளோ எல்லாம் பெண்கள் தானே ;) பெண்கள் பல வகை:

1. தான் அத்தனை மறியாதையாக மாமியாரை பார்த்து பயந்த காலம் நினைவில் இருந்து, தன் மருமகளும் தன்னை பார்த்து பயந்து மறியாதை தர வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு ரகம்.

2. தன் கணவரும் தன் பேச்சை கேட்க வேண்டும், தன் பிள்ளையும் தன் பேச்சையே கேட்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் ஒரு ரகம்.

3. தன் கணவர் தன் பேச்சை மதித்து தனக்கு சுதந்திரம் கொடுத்தது போல தன் மகனும் அவன் மனைவியை மதிக்க வேண்டும், அவளுக்கு சுதந்திரமும் மகிழ்ச்சியும் தர வேண்டும் என்பவர் ஒரு ரகம்.

4. தன் கணவர் தன் பேச்சை கேட்கவில்லை, தன்னை மதிக்கவில்லை, தனக்கு முதலுரிமை தரவில்லை... அப்படி இருக்க பிள்ளையாவது தன் கட்டுப்பாட்டில் தன் மனைவி பக்கம் சாயாமல் என்றும் தனக்கே முன்னுறிமை தந்து தன் சந்தோஷத்தை முதன்மையாக கருத வேண்டும் என்று எண்ணுபவர் ஒரு ரகம்.

5. மேலே சொன்ன எதுவே இல்லாமல் பிள்ளைகள் தாயாரை சரியாக ஹேண்டில் பண்ண தெரியாம, மருமகளை அவர்கள் முன் தூக்கி வைத்து ஆடுவதால் மனதளவில் மருமகளை விரோதியாக பார்க்க துவங்கிவிடும் மாமியார்கள் ஒரு ரகம். முக்கால் வாசி அம்மா பிள்ளையாக இருந்தவர்கள் மனைவி வந்த பின் அவளை தாயிடம் ரொம்ப உயர்த்தி பேசும் போது இந்த பிரெச்சனை அதிகம் ஏற்படும்.

6. அம்மா பிள்ளையாக தன் தாயோடு ஒப்பிட்டு மட்டம் தட்டிக்கொண்டே இருக்கும் கணவனால் தன் பிள்ளையாவது தன்னை உயர்வாக பேச வேண்டு என்று மாமியார் மேல் வெறுப்பும், மருமகள் வந்ததும் தன் மகனை கா(கை)ப்பா(ப)ற்றி வைத்துக்கொள்ளும் எண்ணமும் உள்ளவர்கள் ஒரு ரகம்.

தான் பட்ட கஷ்டம் தன் பிள்ளைகளுக்கு வர போகிறவர்கள் அனுபவிக்க கூடாது என்பவர்கள் வெகு குறைவு.

அப்பாடா... மூச்சு முட்டுது... மக்கள் பல விதம், அவர்களுக்கு ஏற்றபடி பிரெச்சனைகள் பல விதம். ஆசை தான் எல்லா மருமகளூக்கும்.. தன் பிறந்து வீடு போல ஒரு புகுந்து வீடு வேண்டும் என்பது :) ஆனால் உள்ளே போய் அம்மா என்றவளை “அத்தை என அழைக்க வேண்டும், மரியாதை தர வேண்டும், இது உன் தாய் வீடு அல்ல, அங்கு போல் இங்கே இருக்க கூடாது” என்று சொல்பவர்கள் இன்றும் உண்டு. நான் எல்லா வகை மாமியார் மருகளையும் ஓரளவு பார்த்துட்டேன். அன்பே உருவாய் இருந்த மாமியாருக்கு பிசாசு போல வந்து குடும்பத்தையே பிரிக்கும் மருமகள், பிசாசு போல மாமியாருக்கு அடங்கி ஒடுங்கியே வாழ்க்கையில் நிம்மதியை தொலைத்த மருமகள், மருமகளுக்கு சுதந்திரம் தரும் மாமியார், மாமியாரை நேசிக்கும் மருமகள்.... நேரில் அன்றாடம் இது போல மக்களை பார்த்துகிட்டே தான் இருக்கேன். இன்னும் நிறைய பேசுவோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

////////எனக்கு என்ன ஒரு சந்தேகம்னா, மாமியார் ஆனவங்க அல்லது ஆகப் போறவங்க யாருமே அறுசுவைல இல்லையா? இல்லையா? இல்லையா?///// ;)))))))))

ஸ்கூல்ல பசங்களுக்கு ஒரு விளையாட்டு வைப்போம் நிகிலா. ஒருத்தர் காதுல ரகசியமா எதையாச்சும் சொல்லுவோம். அதை அவங்க பக்கத்துல இருக்கிறவங்க காதுல சொல்லணும். கடைசி ஆள் திரும்ப ஆசிரியர் காதுல சொல்லணும். அப்போ செய்திக்கு கண்ணு, காது, மூக்குல்லாம் புதுசா இருக்கும். :-)

இங்க முதலாம் ஆளே முக்கியமான வார்த்தையை சென்சார் பண்ணிட்டீங்க! ;) சில வார்த்தைகளுக்கு இரண்டாவதாக ஒரு அர்த்தமும் வரும் நிகிலா. :-)

//எல்லோரும் ஒரு நாள் மாமியார் ஆகித் தானே ஆகணும். இன்றைய‌ மறுமகள் நாளைய‌ மாமியார் தானே. அதனால‌, மாமியார் ஆகப் போறவங்க‌ தான் அறுசுவையில் உள்ள‌ எல்லோருமே.// அவ்வ்! யார் சொன்னாங்க இல்லைன்னு! அதையேதானே நானும் சொன்னேன்!!

‍- இமா க்றிஸ்

Mamiar marumagal uravu en sirapaga ilai?. Mamanar marumagan prachanai athigama en varuvathu ilai? .because pengalin guname karanam. En payyan ,en veedu , en urimai endru ilamal irunthal prachanai varathu. Mamiar matum alla marumagalum vittu kuduthu nadaka vendum. Naan apadi than, en mamiar manasu nogum padi ethavathu seithal udane kova pada maten. Ithe vaarthai en Amma sonaal ena seiven endru ninaipen. Udane ennai samaathanam paduthi kolven. Migavum manasu sangada padum padi pesinal , manathai veru vishayathil seluthuven.nammal mudintha varai uravugalai kayapaduthamal irukalam.

//இங்க முதலாம் ஆளே முக்கியமான வார்த்தையை சென்சார் பண்ணிட்டீங்க! ;) சில வார்த்தைகளுக்கு இரண்டாவதாக ஒரு அர்த்தமும் வரும் நிகிலா. :-)//

ஆஹா, இமா இந்த‌ விளையாட்டு ரொம்ப‌ நால்லாருக்கே. கண்ணு , காது, மூக்கு எல்லாம் உருவாகிறதைப் பார்க்க‌ முடியாம‌ போச்சே. (வீட்ல‌ நிறைய‌ குட்டீஸ் இருக்கும் போது விளையாடிப் பார்க்கணுமே).

இப்போ தான் ஒரு தோழி போனில் சொல்லிட்டு இருந்தாங்க‌. அவங்க‌ மருமகள்கிட்ட‌ முதல்லேயே சொல்லிட்டாங்களாம்.

"எதுவானாலும் என்கிட்ட‌ நேர்லயே சொல்லு. நானும் உன்கிட்ட‌ நேர்லயே சொல்லுறேன். நம்ம‌ ரெண்டு பேருக்கும் இடையே வேறு யாரும் வர‌ வேண்டாம். நான் செய்யறது ஏதாச்சும் உனக்குப் பிடிக்கலேன்னா உன் புருஷன்கிட்ட‌ கூட‌ சொல்லாம‌ என்கிட்டயே நேர்லயே சொல்லு. தப்பா இருந்தா சரி பண்ணிடலாம். அதை விட்டு வேறு ஒருவர் மூலமா என்கிட்ட‌ வரும் போது அதுக்கு கண்ணு, காது, மூக்கு எல்லாம் சேர்ந்து முளைச்சிருக்கும்"

இதுவும் சரின்னு தான் தோணுது..

ரொம்ப நாள் கழித்து எனக்கு பேச வாய்ப்பு அளித்த நடுவருக்கு நன்றி.

(மறுபடியும், மறுமுறை - மருமகள் / மறுமகள் (எது சரி, காரணம்))

மாமியார், மருமகள் அதிகார பகிர்வுக்கு பிரச்சனையே டிஸ்டேன்ஸ் தாங்க. அதாங்க ஜெனெரேசன் கேப்.

போன தலைமுறை மருமகள்கள் (கரண்ட் மாமியார்) தன் மாமியாரிடம், கணவரிடம் சரணாகதி ஆகிருந்தாள். இதன் சதவீதம் அதிகம். மருமகள்/ மனைவி என்பதற்கான ஒரு அர்த்தம் கற்றிருந்தாள். அதை மிகச்சரியாக கடைப்பிடித்திருந்தாள். உதாரணமாக ஆண்களுக்கு (கணவனுக்கு/ மகனுக்கு) சாப்பாடு பரிமாறுதல். அதில் மிகச்சிரத்தை இருந்தது.

இப்படி இன்னும் சிறிய, சிறிய நிறைய, நிறைய மிகச்சிரத்தை பணிகளை மாமியார்/ மானனார்/ கணவன்/ மகனுக்கு செய்திருந்தாள். இப்படியே போன தலைமுறை மருமகள்கள் இப்போதைய மாமியாராக மாற, தான் படித்த மருமகள்/ மனைவி அர்த்தம் இக்கால மருமகள்களிடம் இல்லாததும், அதனை பயிற்று வைக்க முடியாததும் அவர்களின் மனதில் ஒருவித எரிச்சலை தோற்றுவிக்கிறது. அதுவே மருமகளின் ஒவ்வொரு செயலிலும் ஒப்பீடும், சலிப்பும் ஏற்பட்டு, மனதினை காயப்படுத்தும் வார்த்தைகளாய் வெளிவருகிறது. (நிறைய மருமகள்களை காலம் நல்ல மாமியாராகவும் மாற்றியும் இருக்கிறது)

என்னோட கணிப்பு படி, அடுத்த தலைமுறை மாமியார்/ மருமகள்கள் நண்பிகள் போன்று மாறுவார்கள். நீங்க என்ன சொல்லுரீங்க நடுவரே.

உன்னை போல் பிறரை நேசி.

நல்ல‌ தலைப்பு

மாமியார்கள் எல்லாம் மருமகளை தன்மகள் போல‌ நினைக்கனும், மருமகள் எல்லாரும் தன் மாமியை அம்மா போல‌ நினைத்தால் எந்த‌ பிரச்சனையுமே வராதுன்னு சொல்வாங்க‌! உண்மையில் எல்லாராலும் அப்படி நினைக்க‌ முடியுதா?? இல்லை முடியுமா?? வெகு சிலரால் மட்டுமே அப்படி முடியுதுன்னு நினைக்கிறேன்!
//என் மனதில் என் மாமியாருக்கு எத்தனை உயர்வான இடம் கொடுத்திருக்கிறேனோ அதை விட ஒரு மடங்கு அதிகம் என் மருமக்கள் மனதில் பிடித்தாக வேண்டும். அல்லாவிட்டால்... என் வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லாது போய்விடும்// இப்படி எல்லா மாமியாரும் நினைத்துவிட்டால் எந்த‌ பிரச்சனையுமே இருக்காதுன்னு தோனும்! ஆனால் சில‌ இடங்களில் மருமகள்கள் வீட்டுக்குள் வரும்போதே, விரோத‌ மனப்பான்மையை உள்ளுக்குள் வளர்த்துக்கறாங்க! மாமி எவ்வளவு தங்கமானவராக‌ இருந்தாலும், அதை மருமகள் புரிந்துகொள்ளவில்லை என்றால்? எல்லாமே வீண்தான்!! இதுபோல் நிறைய‌ பார்த்திருக்கிறேன்! இப்படிப்பட்ட‌ பிரச்சனைகளில் அந்தபெண்ணின் தாய்வீட்டின் பங்கு நிறைய‌ இருக்கும்! பெண் நல்லபடியா எல்லாருடன் சேர்ந்து வாழனும்கிறதைவிட‌, தன்பெண்மட்டும்தான் சந்தோஷமா இருக்கனும்னு நினைக்கிற‌ அம்மாக்களும் பிரச்சனைக்கு காரணமா இருக்காங்க‌!!

இன்னும் சில‌ இடங்களில், மருமகள் தன்தாய்வீடு போலவே, புகுந்தவீட்டையும் நினைக்கனும்னு குறிக்கோளுடன்தான் இருப்பாங்க‌! ஆனா மாமியும், நாத்தனாரும் அந்த‌ பெண்ணை என்னவோ, ஒரு விரோதிபோலவே நினைப்பாங்க‌!!
மொத்தத்தில் 2 கையும் தட்டினாதான் ஓசைவருங்கிறாப்போல‌, 2 பேரும் நினைத்தால் மட்டுமே சுமூகமாக‌ வாழமுடியும்!
2 பேரும் ஒரேமதிரி கருத்துள்ளவங்களா இருந்தா ஒட்டி உறவாடலாம் ஒன்றும் பிரச்சனை இல்லை!! அப்படி இல்லாத‌ பட்சத்தில் "சம்சாரம் அது மின்சாரம்" படத்துல‌ கிளைமேக்ஸ்ல‌ ஒரு லயலாக் வருமே, படம் பார்த்தவங்களுக்கு தெரிந்திருக்கும்! அதுபோல‌ இருந்துட்டா பிரச்சனையை தவிர்க்கலாம்னு தோனும்!!

யார் பத்தி பேசலாம்ன்னு முதல்ல ஒரு குழப்பம்.

எனக்கு மாமியாரே இல்லயே. இதுக்கு எப்படி ஸ்மைலி போடறது. சிரிச்சா மாதிரி போட்டா மாமியார் இல்லனா அவ்வளவு சந்தோஷமா, இல்ல சோகம் போட்டா அம்புட்டு நல்லவலா நீன்னு கேள்வி வரபடகூடாது..

சரி பக்கத்துவீட்டு கதையையாவது சொல்லலாம்ன்னு பார்த்தா எங்க தெருவில் யாருக்குமே மாமியார் இல்ல. ( என்ன கொடுமைடா சாமி)

அதனால நீங்க பேசுங்க நான் பார்த்துக்கறேன். நல்ல தலைப்பு சீதாம்மா .

Be simple be sample

மேலும் சில பதிவுகள்