யார் சார்ந்திருப்பது யாரை

சில வருடங்களுக்கு முன்னால், சென்னையில் ‘மங்கையர் மலர்’ குழுவினர் நடத்திய ஆண்டு விழாவில், அவர்கள் நடத்திய பட்டிமன்றத்தில் பங்கு பெற்றேன்.

இது இரண்டாவது முறை. இதற்கு முன்னால், மதுரையில் அவர்கள் நடத்திய விழாவில், திரு.கு.ஞானசம்பந்தம் அவர்கள் தலைமையில், ’ஜாதகம் - சாதகமா, இல்லையா’ என்ற தலைப்பில் பேசியிருக்கிறேன்.

இது தவிர, ஜெயா டி.வி. நடத்திய மகளிர் மட்டும் நிகழ்ச்சிகளிலும் பட்டிமன்றத்தில் பேசியிருக்கிறேன்.

பொதிகை டி.வி.யிலும் ‘வாதம் விவாதம்’ நிகழ்ச்சிகளில் இரண்டு முறை பங்கெடுத்துக் கொண்டு, பேசியதுண்டு.

’அறுபது ப்ளஸ் வயடில் தன் துணையை அதிகம் சார்ந்து வாழ்வது - ஆண்களா? பெண்களா?’ என்ற தலைப்பில் ‘ஆண்களே’ என்ற தலைப்பில் பேசினேன்.

நடுவராக இருந்தவர் திரு.டெல்லி கணேஷ் அவர்கள்.

இந்தப் பட்டிமன்றத்தில் பேசிய குறிப்புகள் ஃபைலில் இருந்தது. இங்கே உங்களுடன் பகிர்ந்து கொண்டு, உங்கள் கருத்துக்களையும் தெரிந்து கொள்ள ஆவல்.

இதோ நான் பேசிய கருத்துக்கள்:(வந்துட்டாய்ங்கம்மா, வந்துட்டாய்ங்க என்று குரல் கேட்கிறது. அமைதி! அமைதி!!!)

அதிகம் சார்ந்திருப்பது ஆண்களே!!!

10 - 20 வயதில் பள்ளி/கல்லூரி நண்பர்களை சார்ந்து இருக்கிறார்கள் ஆண்கள்.

20 - 40 வயது வரை, அலுவலகம், தொழில் முன்னேற்றம், பணம் சம்பாதிப்பது, ஸ்டேடஸ் உயர்த்திக் கொள்வது - இதில் கவனம். இதனிடையே மனைவி - கணவனின் தேவைகளில், தோள் கொடுத்து, துணை நிற்கிறாள்.

40 - 60 வயது வரை - பிள்ளைகளின் எதிர்காலம், தனது ரிடயர்மெண்ட் பற்றிய ப்ளான் என்று மெச்சூரிட்டி ஆரம்பிக்கும் காலம்.

60 வயது ஆகும்போது - பெற்றவர்கள் அனேகமாக தெய்வ பதவி அடைந்திருப்பார்கள். உடன் பிறப்புகள் அவரவர் வயதிற்கேற்ப, கடமைகளில் கண்ணாகி இருப்பார்கள். அலுவலக நண்பர்களிடம் அதிகம் பேச, பகிர, விஷயம் எதுவும் இல்லை. பிள்ளைகளோ - அவர்களது வாழ்க்கையைத் துவங்கி இருப்பார்கள்.

கண்ணையும் கருத்தையும், நேரத்தையும் முழுமையாக ஆக்கிரமிப்பது மனைவிதான்.

காலையில் - இன்னும் எழுந்திருக்கலையா? என்ற கேள்வி கேட்பதில் ஆரம்பித்து, அடுக்களைக்குள் பத்து முறை எட்டிப் பார்த்து, சட்னிக்கு தேங்காய் கீறிக் கொடுத்து, கடுகு வெடிக்கும்போது, தோள் வழியாக எட்டிப் பார்த்து, இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றலாம், என்று - கடுப்படித்து....

மனைவியுடன் டி.வி. ரிமோட்டுக்கு மல்லுக்கு நிற்பார்கள். அவர் அலுத்துப் போய், பத்திரிக்கையை கையில் எடுத்துக் கொண்டு, ஹாலுக்குப் போனால், இவர் டி.வி.யை அணைத்து விட்டு, பின்னாலேயே வருவார்.

தப்பித் தவறி, உறவினர் வீட்டுக் கல்யாணம், மகள் வீட்டுக்கு ரெண்டு நாள் பயணம் என்று வந்து விட்டால் - அவ்வளவுதான், என்ன ஒரு சிடுசிடுப்பு, எத்தனை கேள்விகள்.

இப்ப போகலைன்னா என்ன, அப்புறமா ரெண்டு பேருமாக அடுத்த மாசம் போகலாமே என்று தடுப்பார்கள்.

வேற வழியே இல்லை, அனுப்பித்தான் ஆகணும் என்றால், அவங்க போய் வந்த பிறகு - வீட்டைப் பார்க்கணுமே.

வாங்கி வைத்த வாழைப்பழம் கறுத்துப் போய் கிடக்கும். தயிர் பாத்திரம் காலி. சாப்பிட்டுத் தீர்ந்ததால் அல்ல. ஃப்ரிஜ்ஜில் வைக்க மறந்து போய், புளித்து, தூக்கிப் போட்டிருப்பார்கள்.

நியூஸ் பேப்பர் திசைக்கொரு பக்கமாகப் பறந்து கிடக்கும். கேட்டால், நேரம் இல்லை, கோயிலில் கொஞ்சம் டைம் ஆகிட்டுது, வாக்கிங் போகும்போது மறந்துட்டேன் என்பார்கள்.

அவ்வளவு ஏன், தினமும் மனைவியிடம் மாத்திரை எடுத்துக் கொடு என்று ஞாபகப்படுத்தி, எடுத்துக் கொடுக்க வைத்து, சாப்பிடுகிற விடமின், ப்ரஷர் மாத்திரைகளை, மறக்காமல், மறந்திருப்பார்கள்.

மொத்தத்தில், மனைவி இல்லாமல், இவர்களால் காலையில் தலை துவட்டிய துண்டு காயப் போடுவது கூட முடியாது.

5
Average: 5 (3 votes)

Comments

அன்பு சீதா
மங்கையர் மலர், ஜெயா, பொதிகை டிவி ம் கலக்குறீங்க‌.
உங்க‌ எழுத்துக்களில் ஒரு நேர்த்தி, பக்குவம் இருக்கும். சரியான‌ நபரைத் தான் செலக்ட் பண்ணி இருக்காங்க‌.
வாழ்த்துக்கள்.

இருபது வயது வரை ஆண் பெண் பேதம் தெரியலை எனக்கு. ரெண்டு பேருக்குமே பெத்தவங்க‌ சப்போர்ட் தேவைப்படுது.

அதுக்கு அப்புறம் ஆண்கள் மனைவியின் சப்போர்ட் இல்லேன்னா திணறிப் போவாங்க‌. ஆனால், அதை வெளிக்காட்ட‌ அப்படி ஒரு தயக்கம்.
அதுவும் ஓய்வுக்குப் பின் தனது கருத்தை பகிர்ந்து கொள்ள‌ ஒரு பேச்சுத் துணையா மனைவி இல்லேன்னா தவிச்சுப் போவாங்க‌.

கடைசி காலத்தில் மனைவியை தவறவிட்டவங்க‌ நிலைமையோ இன்னும் ரொம்ப‌ பரிதாபம். ரொம்பவும் தனிமையா ஃபீல் பண்ணுறதும் ஆண்கள் தான். அவங்களால‌ தன்னைத் தானே கவனிச்சுக்கவும் முடியாம‌ ஒரு வேண்டாத‌ பொருளா ஆயிட்ட‌ மாதிரி ஒரு நிலைமையா உணர்றாங்க‌.

ஆனால், பெண்கள் அப்படி அல்ல‌.
அவங்களுக்கு ரிடயர்மெண்டே கிடையாது. சமையல் வேலை எப்பவும் உண்டு. குழந்தை வளர்ப்பு எப்பவும் உண்டு. அதனால் தனிமை தெரியாது. ஏதாவது ஒரு வேலையை இழுத்துப் போட்டு செய்ய‌ ஆரம்பிச்சிருவாங்க‌. அப்படியே நேரம் போயிடும்.

எந்த‌ சூழலிலும் தன்னை மாற்றிக் கொள்ளும் பக்குவம் பெண்களுக்கு உண்டு. அது ஆண்களுக்கு கொஞ்சம் கம்மி தான்.

ஒரு ஆண் தன் தொழிலில் முன்னேற்றம் அடையறான்னா அதில‌ அவனோட‌ மனைவியின் பங்கு பெருசா இருக்கும்.
ஆனால், அதே சமயம் எத்தனை ஆண்கள் தன் மனையின் முன்னேற்றத்துக்கு உதவி பண்ணுவாங்கன்னு நினைக்கீங்க‌.
மனைவி தன்னை விட‌ அதிகம் சம்பாத்தியம் செய்தாலே சகித்துக் கொள்ள‌ முடியாத‌ ஆண்களும் உண்டு.

இதுக்கு என்ன‌ காரணம்னு சொன்னால்.,
மனோவலிமை ஆண்களை விட‌ பெண்களுக்கே அதிகம்.... அந்த‌ ஒன்றே காரணம்.
மனவலிமை அதிகம் இருக்கும் பெண்களை, ஆண்கள் சார்ந்து வாழணும்கிறது நியதி தானே....
சரிதானே நான் சொல்றது. நாமளே சொல்லாட்டா எப்படி???

சீதாம்மா, எல்லா சேனல்களிலும் ஒரு ரவுண்டு வந்திருக்கிறீர்கள்!! சூப்பர்!! வாழ்த்துக்கள்!!

சின்ன‌ வயதில் அம்மாவை சார்ந்தே வளர்ந்த‌ பிள்ளைகளும், திருமணத்தின் பின் மனைவியைச் சார்ந்தே இருக்கும் ஆண்களுமே, முதுமையிலும் (முற்றிலும் மனைவியைச் சார்ந்து)அப்படி இருப்பார்கள்னு நினைக்கிறேன்! சின்ன‌ வயதில் கஷ்டப்பட்டு முன்னேறிய‌ ஆண்களும்(எல்லா வேளைகளையும் தானே செய்ய‌ பழகியவர்கள்), திருமணத்திற்கு பிறகு மனைவிக்கு அனைத்து விதத்திலும் உதவியாகவும், உறுதுணையாகவும் இருக்கும் ஆண்கள், முதுமையிலும் கொஞ்சம் வித்தியாசப்பட்டே இருக்கிறார்கள்! இது என்னுடைய‌ மிகச்சிறிய‌ அனுபவத்தில் நான் கண்டது!!

60 வயதிற்குப்பின் நீங்கள் சொல்லியிருக்கும் அத்தனை விஷயங்களையுமே ஒரே வீட்டில் பார்த்திருக்கிறேன்!! இதையே 35 வயது நடக்கும் பல‌ வீட்டில் பார்த்திருக்கிறேன்!!:)))))

ஆனால் அதிகமான‌ ஆண்கள் நீங்கள் சொல்லியிருப்பதுபோல்தான் நடந்துகொள்கிறார்கள்!

சில நேரம் பெண்கள் தான் எப்போதும் யாரையாவது சார்ந்திருக்கிறார்கள், தனித்து எதையும் செய்யும் தைரியம் இருப்பதில்லை என்று தோன்றும். சில நேரம் நீங்க சொல்ற மாதிரி ஆண்கள் எப்போதும் எல்லா விஷயத்துக்கும் நம்மையே சார்ந்திருப்பதாக தோன்றும். ஆனா அது வீடு, பிள்ளைகள் இது போல விஷயத்தில் தானே சீதா... அவங்க வேலை, அவங்க சேமிப்பு இது போல விஷயங்களில் நம்ம ஒப்பீனியன் கூட கேட்காத ஆண்கள் பலர் உண்டு தானே? முழுமையா சார்ந்திருக்கிறார்கள்னு நினைக்க முடியல.

ம்ம்... எனி வே... மேடம் ஏகப்பட்ட சேனலை சுற்றி வந்திருக்கீங்க ;) இதுக்கு எப்ப ட்ரீட் வைக்க போறீங்க?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா