கங்குன் கூனி பிரட்டல்

தேதி: February 21, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

கங்குன் - 2 கட்டு
கூனிக் கருவாடு - ஒரு மேசைக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
மோர் மிளகாய் - 2
பூண்டு - 3 பல்
கடுகு - கால் தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
ஆலிவ் ஆயில் - 2 தேக்கரண்டி


 

தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
கீரையை ஆய்ந்து கழுவி தண்ணீரை வடிய விடவும். நீர் வடிந்த பின் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இலைக் காம்புகள், பிஞ்சுத் தண்டுகள் அனைத்தையும் சமையலில் சேர்க்கலாம். தண்டுகளைச் சிறிய துண்டுகளாக அரிந்து எடுக்கவும்.
பூண்டைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறி வைக்கவும்.
கடாயில் அரைவாசி எண்ணெயை ஊற்றி நறுக்கிய வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.
வெங்காயம் வெளிர்நிறமானதும் கீரை, பச்சை மிளகாய், கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், சிறிது உப்பு (இறுதியில் மோர்மிளகாய் சேர்க்கவிருப்பதால் இப்போது உப்பு தேவையான அளவை விட சற்றுக் குறைவாகவே சேர்க்க வேண்டும்.) சேர்த்துப் பிரட்டி மூடி வேக விடவும். இடைக்கிடையே சிறிது நீர் தெளித்துப் பிரட்டி விடவும்.
கீரை வெந்துகொண்டு இருக்கும் சமயம், மற்றொரு அடுப்பில் மீதி எண்ணெயை விட்டு, கடுகு சீரகம் தாளிக்கவும்.
மோர் மிளகாயை கிள்ளிப் போட்டு, அது அரைப் பதமாகப் பொரிந்ததும் சுத்தம் செய்த கூனி, கறிவேப்பிலை சேர்த்துப் பொரிய விடவும்.
வெந்த கீரையில் தாளித்ததைக் கொட்டிப் பிரட்டி இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஆஹா எனக்கு பிடிச்ச‌ கூனி. ஆனால் நான் பச்சைதான் சாப்பிட்டிருக்கிறேன். கருவாடு சாப்பிட்டதில்லை. இங்கு கிடைக்குமான்னு தெரியல்ல‌.

ஆனா இந்த‌ \\கங்குன்\\ கேள்விப் பட்டதில்லையே. வேறு ஏதேனும் பெயர் இருந்தால் தெரிய‌ படுத்தவும்.

அன்புடன்
ஜெயா

இலங்கையில் தமிழர் கங்குன் என்போம். சிங்களத்தில் கங்குங் என்பார்கள். என் கொரியன் மாணவர் வீட்டில் கங்கொங் என்று சொல்லுவார்கள். நான் வாங்கிய சைனீஸ் கடையில் ong choy என்று போட்டிருந்தார்கள். ஆங்கிலத்தில் - water spinach.

பூ... பார்க்க அடம்பன் கொடியில் வரும் பூ போல, வற்றாளைப் பூ போல இருக்கும். சமையலுக்குப் பயன்படுத்தியது போக மீதியை நீரில் போட்டு வைத்து வேர் பிடிக்க ஆரம்பித்ததும் நட்டுவிடலாம். ஈரலிப்பான நிலத்தில் நன்கு வளரும்.

தாவரவியற் பெயர் - Ipomoea aquatica

செந்தமிழ்ச்செல்விக்குத் தமிழ்ப் பெயர் தெரியும். இதைப் பற்றி, எப்போதோ எங்கோ பேசிய நினைவு.

‍- இமா க்றிஸ்

இமா அக்கா
இது ஒரு நல்ல பிரட்டல் நான் இது வரை பார்த்த இல்லை ஆனால் சூப்பராக
இருக்கு கங்குன் கேள்வி பட வில்லை ரோம்ப நல்ல இருக்கு. நன்றி.
அன்புடன்
Fazinisa

இமா அம்மா உங்கள் குறிப்புகள் அனைத்தும் வித்தியாசமாக உள்ளது. கக்குன் நான் கேள்விபட்டது இல்லை. இப்போ தான் முதன் முதலில் பார்க்கிறேன். சூப்பரா செய்திருக்கீங்க. கூனி கருவாடு என்றால் என்ன? கங்குன் என்றால் என்ன அம்மா?? இது இலங்கையில் அப்படி சொல்வாங்களா.. சென்னையில் இது கிடைக்குமா? இதுவரை கேள்விபட்டது இல்லையே அம்மா?

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

இந்தியால இருக்கு என்று கவி சொல்லி இருக்காங்க. தளீ ஊர்ல பண்ணைக் கீரை என்பாங்களாம் இதை. இந்தத் த்ரெட்ல சொல்லியிருக்காங்க இருவரும். - http://www.arusuvai.com/tamil/node/16176

கூனிக்கருவாடு என்பது, காயவைத்த இறால்க்குஞ்சுகள்.

‍- இமா க்றிஸ்

கூனி கருவாடு சைதாப்பேட்டை (சென்னை) யில் கிடைக்கிறது. இது இறாலில் ஒரு வகை. ஆண்டுக்கு ஒருமுறை (ஒருசில‌ நாட்கள் மட்டுமே) ஃப்ரெஷ்‍-ஆக‌ கிடைக்கும். மற்ற‌ காலங்களிலெல்லாம் இந்த‌ க்ருவாடு கிடைக்கும். இதை சென்னா கூனி என்று பாண்டிச்சேரியில் சொல்வாங்க‌. கூட்டமாக‌ வரும்போது ஒரு கப்பலையே கவிழ்த்து விடும் என்று எங்க‌ அப்பா சொல்வாங்க‌.

அன்புடன்
ஜெயா

நான் மிகப் பொடிதான நெத்திலி கருவாடை எண்ணெயில் கிரிஸ்பியாக பொரித்து பருப்பு சேர்த்த கீரை கூட்டின் மேல் தூவி விடுவேன். இந்த குறிப்பை பார்த்ததும் அது தான் நினைவிற்க்கு வந்தது.
water spinach எங்கு (இங்கே தான்) தேடியும் கிடைக்கல. water cress என்று இருக்கு, ஆனால் அது சாலட்-ல் பயன் படுத்துவது.
ஸ்பினாச் கீரையிலும் இது போன்று செய்யலாம் தானே.