அம்மாவும் நீயே, அக்காவும் நீயே!

பாட்டு வரி தப்பாக இருக்கிற மாதிரித் தெரிகிறதா? :-) ட்ரிக்ஸிப் பெண்ணுக்கு ஒவ்வொரு வசந்தத்தின் போதும் மறவாமல் நினைவு வரும்... கூடு அமைப்பதற்கு. உணவாகக் கொடுக்கும் வைக்கோலை உண்ணாமல் சேமித்து, பிய்த்துப் பிய்த்து, வளைத்து வைத்துக் கூடு அமைக்கும். பிறகு தன் வாற்பக்கம் உள்ள ரோமத்தைப் பிடுங்கி மெத்தையாக்கும். அதன் பிறகு!! பொம்மை முயல்களில் ஒன்றை வாயில் கௌவிக் கொண்டு வந்து அதன் மேல் போடும். பொம்மையைத் தன் குழந்தையாகக் கொண்டு, சுத்தம் செய்யும்; இடைக்கிடையே இடம் மாற்றும். இது பற்றி ஒரு கவிதை! எழுதினேன் முன்பு. http://www.arusuvai.com/tamil/node/26884

ட்ரிக்ஸியின் மூன்றாவது வசந்தம் சமீபித்த தருணம் தோன்றிற்று, 'ட்ரிக்ஸிப் பெண்ணுக்கு ஒரு தத்துக் குழந்தை வாங்கிக் கொடுத்தால்!!!' க்றிஸ்ஸுக்கும் யோசனை பிடித்திருந்தது.

ட்ரிக்ஸி மினிலொப் வகை. சாதாரண முயற்குட்டியை வாங்கினால் ட்ரிக்ஸியை விடப் பெரிதாக வளரும். கூடு போதாமற் போகலாம்; ட்ரிக்ஸி எந்த விதத்திலும் அதன் சிறப்பான கவனிப்பு குறைந்ததாக உணர விடவும் கூடாது.

ட்ரிக்ஸியை வாங்கி வந்த அட்டைப் பெட்டியைக் கையோடு கொண்டு, கடை கடையாக ஏறி இறங்கினோம். பிடித்தமாக எதுவும் கிடைக்கவில்லை. கடைசியாக, ட்ரிக்ஸியை வாங்கிய கடையிலேயே எழுதிக் கொடுத்துவிட்டு வந்தோம். இனம் - மினிலொப், பால் - பெண், நிறம் - தனி வெள்ளை, வேறு குறிப்புகள் - சிவப்புக் கண் & தூக்கிய காது என்று படிவத்தில் நிரப்பினேன்.

தை மாத இறுதியில் ட்ரிக்ஸிக்கு வைக்கோல் வாங்கக் கடைக்குப் போன க்றிஸ் கைபேசியில் அழைத்தார், "இங்கு வெள்ளை முயல்கள் இரண்டு இருக்கின்றன. அவர்கள் அழைக்கும் சமயம் நாம் தொலைபேசியை எடுக்கவில்லையாம். இன்னும் ஒரு மணி நேரத்தில் கை மாறிவிடும் என்கிறார்கள். ஆனால் கண்களும் காதும் நினைத்தது போல இல்லை," என்றார். நான் பார்க்காமல் தூக்கி வரச் சொல்வது எப்படி! அயலில்தான் கடை. வீட்டிற்கு வரச் சொன்னேன். சட்டென்று தயாராகி, பெட்டியையும் எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.

கடைக் கூண்டில் கறுப்புக் கண்களோடும், மடிந்த காதுகளோடும் இருந்த இருவரும், மெலிந்தவர்களாக இருந்தார்கள். வலோற்காரமாக பால்குடி மறக்கடித்தது போல இருந்தார்கள். கண்களில் சின்னதாக ஒரு ஏக்கம், சிந்திய மூக்கு, அழுக்கான கால்கள் என்று நான் நினைத்ததற்கு எதிர்மாறாக இருந்தாலும் பார்க்கப் பரிதாபமாக இருக்க, எவர் மேல் (இருவரும் female தான்) என்று தெரிவு செய்ய இயலாமல் ஒருவரைத் தூக்கி பெட்டியில் போட்டுவிட்டு என் முன் நீட்டப்பட்ட தத்துப் பத்திரத்தைப் பூரணப்படுத்திக் கையொப்பமிட்டேன்.

சின்னதாக ஒரு சந்தேகம், ட்ரிக்ஸி ஏற்றுக்கொள்ளாவிட்டால்! கடித்துத் துரத்தினால்! 'கவனித்துக்கொள்ளுங்கள்,' என்கிற ஆலோசனையைத் தவிர இது பற்றி வேறு உருப்படியான தகவல் எதுவும் சொல்லவில்லை கடை விற்பனைப் பெண். சிந்தனையோடு வீட்டிற்கு வந்து மெல்ல வெளியே விட்டேன். ட்ரிக்ஸி ஆர்வ மேலீட்டால் இதைப் பின்தொடர, இது வெகுவாகப் பயந்து போயிற்று. முயல் போல் குதிக்க மறந்து இருவரும் பூனைப் பாதம் வைத்து, நாய்க் குட்டி நடை நடந்தனர். :-)

இரவு - கூட்டினுள் potty தட்டைச் சின்னவர் பயன்படுத்தியிருக்கிறார்; ட்ரிக்ஸி படுக்கும் இடத்திலும் ஈரமாக்கிவிட்டார். ட்ரிக்ஸிக்கு அதன் எல்லைக்குள் நாங்கள் நல்லதாகக் கூட எதுவும் செய்வது பிடிக்காது. நான் கூட்டிக் குவித்தால் மீண்டும் குப்பையெல்லாம் பொறுக்கி நாற்திசையும் வீசி வைக்கும் ஆள் அவர்.

காலை பாடசாலைக்குப் போகும் முன் எட்டிப் பார்க்க ட்ரிக்ஸி கதவோரம் ஒண்டிக் கொண்டு படுத்திருந்தது. ஆனால் சின்னவருக்கு சிறிய அறையிலிருந்து வெளியே வர அனுமதி கொடுக்கப்படவில்லை. இரண்டு நாட்கள் இப்படிப் போயிற்று. மூன்றாம் நாள் இருவரும் ஒரே தட்டில் உணவருந்தப் பார்த்தேன், சந்தோஷமாக இருந்தது.

இன்று நிலமை முற்றிலும் மாறிவிட்டது. [சின்னவர் பெயர் ட்ரேஸி. பெயர் சூட்டியது... ஜீனோ தி க்ரேட். :) ] ட்ரிக்ஸி பொறுப்பான அம்மாவாகிவிட்டார். ட்ரேஸியின் அருகேதான் எப்போதும் தூக்கம். நான் தொடப் போனால் தலையை குறுக்கே வைத்து மறிக்கிறார். சின்னவர் இடித்துக் கொண்டு தூங்குவார். பெரியவர் இவரது செவி, தலை, முதுகு, கால்கள் என்று எப்பொழுதும் சுத்தம் செய்தபடியே இருப்பார். பழுப்பாக என்னிடம் வந்தவர் இப்போது உஜாலா போட்டது போல ஆகிவிட்டார். :-) தனக்கான உணவைச் சின்னவர் பறித்தால் விட்டுக் கொடுக்கிறார் ட்ரிக்ஸி. காணாவிட்டால் தேடித் திரிகிறார்.

தாய்மை உணர்வு...அற்புதமானது.

5
Average: 5 (7 votes)

Comments

தாய்மை உணர்வு...அற்புதமானது. /// உண்மை..

மனதிற்கு மகிழ்ச்சி தரும் பதிவு! நல்லாப் பாத்துக்குங்க ரெண்டு பேரையும்!

அன்புடன்,
மகி

இவரிடம் காட்டினேன் உங்க முயல் படத்தையும், எங்க வீட்டு முயல் படத்தையும் ;) இரண்டும் ஒரே போல இருக்கிறது என்றார். உங்க ட்ரிக்ஸி குனத்திலும் எங்க ராஜா தான்.... மற்ற முயல் குட்டிகளிடம் மிகுந்த அன்பு எங்கள் ராஜாவுக்கு. அது ஆண், ஆனாலும் அன்பாக தாய் போல் பார்க்கும் குட்டி முயல்களை. நாங்க போய் குட்டிகளை தொட போனால் எங்களிடம் இருந்து அவற்றை பாதுகாக்கும். அவருக்கு துனைக்காக நாங்கள் வேறு ஒருவர் வீட்டில் இருந்து அவ்வப்போது குட்டி முயல்களை கொண்டு வந்து விடுவோம்... அவர்கள் கிளம்பும் வரை தாயாக இருந்து பாதுகாப்பார். ம்ம்... ஒவ்வொரு முறை ட்ரிக்ஸி ஃபோட்டோ நீங்க போடும் போது அவர் நினைப்பு தான் அதிகமாகுது. வீ மிஸ் ஹிம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இமா,
ட்ரிக்ஸியின் உணர்வை நன்கு புரிந்து கொண்டு செயல்பட்டு இருக்கீங்க‌.
ட்ரேசி தங்கை அல்ல‌ குழந்தை தான்.
இனி ட்ரிக்ஸி உங்களைத் தேடாது. அதற்கெனெ ஒரு துணை வந்துவிட்டது. தனிமை அதற்கும் போர் தானே.
வீட்டிலே செல்லப் பிராணி இருந்தால் நன்கு நேரம் போகும்.
'வலோற்காரமாக‌' அப்படி எண்டால் வலுக்கட்டாயமாகன்னு அர்த்தமா இமா?
ட்ரேசி எல்லா உணவும் சாப்பிட‌ ஆரம்பிச்சுட்டாங்களா...

இமாம்மா ட்ரிக்ஸியும், ட்ரேஸியும் அழகோ அழகு!!! சுத்திப்போடுங்க‌!

ஒன்றை ஒன்று ஏற்றுக்கொள்ளவேண்டுமே என‌, மற்றொரு தாயுள்ளம் ரொம்பவே தவிச்சிருக்கு!! தாய்மை உணர்வு....அற்புதமானதுதான்!

இதுவரை உங்கள் வீட்டில் செல்லமாக வலம் வந்த ட்ரிக்ஸி இப்போ அவர் செல்லத்திற்க்கக பொறுப்பானவராகி விட்டார் போலும் :)) தாயும் சேயும் அழகோ அழகு.

இரண்டு பேருக்கும் வித்தியாசம் ஏதுமில்லாமல் ரொம்ப அழகா இருக்காங்க..
ரொம்ப நல்ல பதிவுங்க..

நட்புடன்
குணா

//நல்லாப் பாத்துக்குங்க ரெண்டு பேரையும்!// :-) நான் என்ன பார்க்கிறது மஹி! சின்னப் பெண்ணை நான் தொடாம ட்ரிக்ஸி பார்த்துக்கறாங்க. சின்னவங்க கடைக்கண் பார்வை எப்பவும் கதவுலதான் இருக்கு. :-) ஓட்டமா உள்ள வந்து மாடியேறி இறங்கி... ;)) ஒரே கொண்டாட்டாமா இருக்கு. டயட்டிங் இல்லாம மெலிஞ்சுருவேன் போல இருக்கு. :-)
~~~~~~~~~
வனி... ஒரு ஆண் முயல் வாங்கி வளர்க்க ஆசை. ஆனால் பிறகு என் பாடு திண்டாட்டமாகிவிடுமோ என்று யோசனையாக இருக்கிறது. //அவர் நினைப்பு தான் அதிகமாகுது.// :-) இராதா பின்ன! நாய்க்குட்டி பூனைக்குட்டி போல எவ்வளவு பிரியமா இருக்கிறாங்க நம் மேல.

‍- இமா க்றிஸ்

//வலுக்கட்டாயமாக// :-) அதுவேதான் நிகிலா. //இனி ட்ரிக்ஸி உங்களைத் தேடாது.// அதுதான் இல்லை. முன்னை விட என்னிடம் பிரியமாக இருக்கிறார். அடிக்கடி பக்கத்தில் வந்து தடவி விடக் கேட்கிறார். கவனிக்காதது போல இருந்தால் என் பாதத்தை மூக்கால் தொட்டுத் தொட்டுக் கவனத்தை ஈர்க்க முயலுகிறார்.

// நன்கு நேரம் போகும்.// நான் வீட்டிலிருப்பது சொற்ப நேரம்தானே! அந்த நேரம் தனிமையில்லாமல் கழிகிறது.

//ட்ரேசி எல்லா உணவும் சாப்பிட‌ ஆரம்பிச்சுட்டாங்களா...// ஆமாம். ஆனால் அறிமுகமில்லாத உணவு என்றால் ட்ரிக்ஸி சாப்பிடுகிறாரா என்று பார்த்துவிட்டே சாப்பிட ஆரம்பிக்கிறார். :-)
~~~~~~~~
//சுத்திப்போடுங்க‌!// ;) நிஜமாவே அது எல்லாம் தெரியாது அனு. நம்பிக்கை இல்லை. :-) //ஒன்றை ஒன்று ஏற்றுக்கொள்ளவேண்டுமே// சண்டை வந்தால் திரும்பக் கொண்டுபோய்க் கடையில் கொடுக்கலாம் என்றார் க்றிஸ். நல்ல வேளை, அப்படி ஆகவில்லை. கருத்துக்கு நன்றி அனு. :-)

‍- இமா க்றிஸ்

//ட்ரிக்ஸி இப்போ அவர் செல்லத்திற்க்கக பொறுப்பானவராகி விட்டார் போலும்// :-) தேவைக்கு மேல் பொறுப்பாக இருக்கிறார். எனக்கே அனுமதி மறுக்கப்படுகிறது. :-))
~~~~~~~
//வித்தியாசம் ஏதுமில்லாமல்// இருக்கு குணா. பெருசுக்கு சிவப்புக் கண், நிமிர்ந்த காது, கூர் முகம். சின்னவருக்கு கறுப்புக் கண், தொங்கிய காது, சப்பை மூக்கு. :-) குணா ஒரு பொழுதும் செல்லப் பிராணிகள் வளர்த்தது இல்லையா!

‍- இமா க்றிஸ்

செல்லப்பிராணிகள் வளர்த்திருக்கேன்ங் மா :-)
நாய் & பூனை மட்டும்.

நட்புடன்
குணா

உங்க ட்ரிக்ஸி,காணாமல் போன என் பூனைக் குட்டி "நாவ்" வை நினைவு படுத்துது.செல்லப் பிராணிகளின் அசைவுகளைக் கொண்டே அவற்றின் தேவைகளைப் புரிந்துக் கொள்ளக் கூடியது அவற்றின் மீது உண்மையாய் அன்பு செலுத்துபவர்களால் மட்டுமே என்பது என் நிலைப்பாடு.

கருத்துக்கு நன்றி ஷிபா. :-) உங்கள் ப்ரொஃபைலிலும் 'பொழுதுபோக்கு' பகுதியில் பூனைக்குட்டி பற்றிக் குறிப்பிட்டு இருந்தீங்க. கெதியா Nav போல இன்னொரு ஆளைப் பிடியுங்க ஷிபா. :-)

‍- இமா க்றிஸ்

your welcome.இன்னும் 2 சுட்டீஸ் இருக்கு.ஆனாலும் அவன எங்களால் மறக்க முடியாது.அவன ஒரு பிள்ளையப் போல வளர்த்தோம்.

அழகிய பதிவு.. எனக்கும் செல்ல பிராணிகள் வளர்க்க ஆசை, நேரம் வாய்ப்பு எதுவும் கூடி வரவில்லை

- பிரேமா