தோசைக்கல்லை பழக்கும் முறை

புது தோசைக்கல்லை பழக்குவது என்பது அனைவருக்கும் கைவந்த கலையாகிவிடாது.

அழிச்சாட்டியமாக தோசைக்கல்லை விட்டு அகலாத தோசையை, கடைசிவரை பூ போல எடுக்க முடியாமல், குரங்கு பிய்த்த பூமாலையாய் மாற்றிய கதை அனேகம் பேர் வாழ்க்கையில் சந்தித்த ஒரு நிகழ்வாகவே இருந்திருக்கும்.

அதுவும் இரும்பு தோசைக்கல் ஆசையாக வாங்கிவிட்டு அதனிடம் போராடிக்கொண்டிருப்போருக்கான பதிவு இது.

பழைய தோசைக்கல் சப்பாத்தி சுட்ட கோவத்தால், தோசையை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. கடந்த வாரம் வார்ப்பு இரும்பு(cast-iron) தோசைக்கல் ஒன்று வாங்கினோம்.

மிகவும் அழகாக தோசை வருகிறது.
ஆனால் அதற்கு முன்பாக தோசைக்கல்லிற்கு போட்ட மேக்கப்பை இங்கு கூறுகிறேன்.

தோசைக்கல் வாங்கின உடனே அதனின் நடுச்சென்டரில் இருக்கும் ஸ்டிக்கரை, மிதமான சூடு செய்து அகற்ற வேண்டும்.

ஆனாலும் அதில் இருக்கும் பசையானது, பூரணமாக விலகாது. கைகளில் ஒட்டுவது போலவே இருக்கும்.
அதற்காக பெரும்பாலோர் செய்யும் தவறு யாதெனில், ஸ்கிரப்பர் போட்டு நன்கு தேய் தேய் எனத்தேய்த்து விடுவதே ஆகும்.

அப்படி செய்யுங்கால், தோசைக்கல் அவ்விடத்தில் தன் இயல்பு நிலையில் இருந்து திரிந்து, சொர சொரப்பாக மாறிவிடுவதுடன், தோசை மாவு அவ்விடத்திலிருந்து வெளியேறாமல் மறியல் செய்துவிடும்.

ஆனால் அந்த பசையை அழகாக வெளியேற்ற ஒரு நல்ல டிப்ஸ் உள்ளது. பென்சில் அழிப்பான் கொண்டு பசை இருந்தவிடத்தை தேய்த்தால், பசை இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

அதற்கு பின்பு ஸ்பான்ஞ்சால் பாத்திரம் தேய்க்கும் சோப்பினால் தேய்த்தால் கல்லில் இருக்கும் அழுக்கு அகன்றுவிடும்.

அதன் பிறகு அடுப்பில் தோசைக்கல்லை ஏற்றி மிதமான தீயில் வைக்கவேண்டும்.
பொடி உப்பை கல் முழுவதும் பரவும்படி தூவி, உப்பு பொன்நிறமானவுடன் அடுப்பை நிறுத்தவேண்டும்.

தோசைக்கல் சூடு ஆறியவுடன் உப்பினை துணியினால் துடைத்து எடுத்துவிடவேண்டும்.

அதன் பிறகு இரண்டு, மூன்று சொட்டுக்கள் சமையல் எண்ணைய் விட்டு கல்முழுவதும் பரவும்படி துடைக்கவேண்டும்.

அப்படியே வைத்துவிடவேண்டும்.

தோசை சுடும் முன்பாக அந்த எண்ணையை நன்றாக சோப் தடவிய (பாத்திரம் தேய்க்கும்) ஸ்பாஞ்சினால் கழுவி விட்டு, தோசை ஊற்றினால் கல்லில் ஒட்டாமல் தோசை வரும்.

முதலில் முட்டை தோசை, ஆம்லெட் ஆகியவற்றை முயற்சி செய்தால் கூடுதல் பலன்கிடைக்கும்.

ஒவ்வொரு முறை தோசை சுடும்போதும், பெரிய வெங்காயத்தின் மூக்கு பகுதியை வட்டமாக நறுக்கிவிட்டு, அதனை கல் சூடான பிறகு தேய்த்து தோசை சுட்டால் மிகவும் நன்றாக தோசை வரும்.

முடிந்த வரை சப்பாத்திக்கும், தோசைக்கும் தனித்தனியான கல் வைத்திருப்பது நன்று.

இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால் நான்ஸ்டிக்கைப் போன்றே ஒட்டாத முறையில் சுவையான இரும்புக்கல் தோசை சுட்டு சாப்பிடலாம்.

தோசைக்கல் நன்கு கெட்டியாக இருக்கும்படி பார்த்து வாங்கவேண்டும். அப்பொழுதுதான் தோசை நன்கு வரும்.

இண்டோலியத்திற்கும் இம்முறையையே பின்பற்றலாம்.

நீங்களும் உங்கள் தோசைக்கல்லை பழக்கிய முறைகளை பகிருங்களேன்!!

நன்றி!!.

5
Average: 4.8 (4 votes)

Comments

Naan indalium kallai thaan use pandren.. vaangiya pudhithil egg nalla kalakkittu dosai kal full ah padum padi spread pannittu eduthen...oil nalla apply panninen. next dosai arumaya vandhathu.. chappattiyum adhe kallil thaan seiven.. rotti pottu mudithathum.. nalla kal muluthum oil apply seithu apdiye vaiththu viduven. Next time dosa or chappatti podum pothu eduthu kaluvi vittu use panna aarambipen.super ah varum....

அன்பு அருள்
நான் முதலில் முட்டை ஆம்லெட் செய்து தான் கல்லைப் பழக்குவேன்.

தோசைக்கும், சப்பாத்திக்கும் தனித் தனி கல் வைக்காவிட்டால் தோசை கோவிச்சுக்கும் .பிரெஸ்டீஜ் பார்க்கும். கல்லிலே இருப்பேன்னு அடம் பிடிக்கும்.
நடுவிலே குழிந்த‌ அடைக்கல்லை விட‌, தோசைக்கு தோசைக்கல்லே பொருத்தமானது.

நானும் சமீபத்தில் தான் வார்ப்பு இரும்பில் தோசைக்கல் ஒன்று வாங்கினேன். தோசை ஹோட்டல் தோசை மாதிரி வருது.

ஆனால், அருள் இரும்பு வாணலி ஒன்றும் வாங்கினேன். அதிலே கீரைப் பொரியல் செய்தால் கருப்பா கலர் மாறி வருது. அது வார்ப்பு இரும்பு அல்ல‌. தனி இரும்பு. துவர்ப்பு சுவையுள்ள‌ உண‌வு கலர் மாறும்னு நெட்ல‌ போட்டுருக்கு. சமைத்ததும் உணவை வேறு பாத்திரத்துக்கு மாற்றி விடுவேன். கீரைப் பொரியலில் சேர்த்த‌ தேங்காய் கூட‌ கலர் மாறுது.
அதிலே சமைக்கலாமா ? எப்படி? சொல்லுங்க‌ அருள்.

மணமான‌ புதியவர்களுக்கு தேவையான‌ பதிவு. நானும் ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டப்பட்டேன். என்னிடம் இன்டாலியம் தான் இருக்கு. அதுல‌ இரண்டுமே நன்றாக‌ வரும். எனக்கு இரும்பில் வாங்க‌ ஆசைதான். எது வாங்க‌ வேண்டும் என்று தெரியவில்லை.
\\அது வார்ப்பு இரும்பு அல்ல‌. தனி இரும்பு. \\ எப்படி பார்த்து வாங்குவது நிகிலா.

அன்புடன்
ஜெயா

துர்கா உங்களோட கருத்து நல்ல பயனுள்ளதாக இருக்கு. சப்பாத்திக்கும் தோசைக்கும் ஒரே கல்லில் சுடும்போது எனக்கு சரி வரலே, இனி உங்க யோசனையை பயன்படுத்திப்பார்க்கிறேன். மிக்க நன்றி! :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நிகி மிக்க நன்றி :) நானும் இரும்பு வாணலி வைத்துள்ளேன். அதில் எந்த சமையல் செய்தாலும் உடனே வேறு பாத்திரத்துக்கு மாற்றிடுவேன். நீங்க சொல்வது மாதிரியேதான் கலர் மாறிடும். உடனே மாத்திடுவதால் கெடுதல் இல்லேனுதான் நினைக்கிறேன். ஆனால் முழுமையா தெரிலப்பா.

//வார்ப்பு இரும்பில் தோசைக்கல் ஒன்று வாங்கினேன்.// எத்தனை இஞ்ச் வாங்கினீங்க? நான் 10 இஞ்ச் வாங்கி இருக்கேன். 12 இஞ்ச் வாங்கி இருக்கலாம்னு இப்ப தோணுது. முதல்ல ஏன் 10 தேர்ந்தெடுத்தேனா, விளிம்பு இல்லாத கல்தான் ஏற்கனவே இருந்தது. அதனால் அது கொஞ்சம் பெரிசா தெரிஞ்சுது. கல்லோட முழு அளவையும் பயன்படுத்தலாம். 12 வாங்கினா அடுப்பைவிட எக்ஸ்ட்ராவா நீட்டிட்டு இருக்கும் பகுதில மாவு வேகாது, உள்ள தீஞ்சுடும்னு நினைச்சு வாங்கல.

இப்ப விளிம்பு பகுதி இருப்பதால குட்டி தோசையாத்தான் சுடமுடிது. ஆனா தோசை அழகா வருது :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஜெயா மிக்க நன்றி :) cast-iron என கேட்டு வாங்குங்கள், எல்லா பெரிய பாத்திரக்கடைகளிலும் கிடைக்கும்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஜெயா
எங்க‌ ஊரிலே உருக்கு தோசைக்கல்லுனு வார்ப்பு இரும்பை சொல்லுறாங்க‌. அது வேகமா கீழே விழுந்தால் ரெண்டா உடையும்னு சொன்னாங்க‌. நல்ல‌ கனமா பார்த்து வாங்குங்க‌. அடிப்பிடிக்காது. தோசை பிரவுனிஷா வரும். சுவையும் நல்லா இருக்கும். இரும்பை விட‌ வார்ப்பு (உருக்கு) வெயிட் ஜாஸ்தியா இருக்கு பா.

தனி இரும்பில் சப்பாத்தி கல் வைத்திருக்கேன்.' ஆதூ ப்யூற் இரும்பு எனவே கீழே போட்டாலும் உடையாது.
இண்டாலியத்தில் அடைக்கல் வைத்துருக்கேன்.

அருள்
நான் 10 இன்ச் கல்லு வாங்கினேன். விளிம்பு இருக்கு. கல்லு முழுசும் பரப்பி சுட்டுருவேன். ஹோட்டெல் தோசை மாதிரி பரப்ப‌ முடியுது. சூப்பர‌ வருது.:)

நானும் இப்ப ஹோட்டெல் தோசை மாதிரியே சுடுறேன், நல்லா வருது. மிக்க நன்றி நிகி:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

:-) சூப்பர் நடை. ;) எழுத்தினூடே இழையோடிய நகைச்சுவையை ரசித்தேன். :-)

‍- இமா க்றிஸ்

எங்க வீட்ல ஸ்ட்ரிக்டா எண்ணெய் இல்லாத சப்பாத்தி, அதினால அதுக்கு Non-stick தவா. இதுவரை தவாவில் டிரை சப்பாத்தி தவிர வேரேதும் செய்ய பயன் படுத்தியதில்லை. ஆறு ஆண்டுகள் ஆகியும் தவா புதிதாகவே உள்ளது.
தோசைக்கு இரும்பு கல். - தோசை சுட்டு முடிந்ததும் எண்னெய் தடவிய டிஷ்யூ கொண்டுதேய்ப்பது மட்டும் தான். 9 வருடங்கள் ஆகியும் அப்படியே இருக்கு. :)
தோசைக் கல்லை கழுவக் கூடாதுன்னு கேள்விப் பட்டுள்ளேன்.
உண்மையான்னு தெரியலை.

அருமையான பதிவு அருளு தோசைக்கல் வாங்குறது பெரிசுல்ல அதை பழக்கி அழகா தோசை சுட்டு எடுக்கறதுக்குள்ள அடடா போதும்டான்னு சொல்லுவாங்க ;)

தோசைக்கல் பழக்கும் முறை பற்றி நீங்க சொல்லியிருப்பது மிகவும் உபயோகமானது இங்க புது கல்லு வாங்கி பழக்குவதற்கு கல்லில் சாதம் வடித்த கஞ்சியை தொடர்ந்து 4 நாட்களுக்கு தினம் ஊற்றி வைக்கனும்னு சொல்லுவாங்க

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இமா ரசித்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வாணி சப்பாத்திக்கு நேரிடையா தணலில்(க்ரில் வைத்து) அப்பப்ப சுட்டு எடுப்பேன்.
மத்தபடி தோசையும், சப்பாத்தியும் ஒரே கல்தான். அதுனால கோச்சுக்கிட்டு மக்கர் பண்ணிடுச்சு. ரொம்பவும் ஸ்கிரப் பண்ணாம மிதமா தேய்ச்சு கழுவி எண்ணை பூசி வெக்கிறேன். என்ன அவ்வப்பொழுது ஒரு பெரியவெங்காயம் பலி கொடுத்தாத்தான் ஆச்சுனு. அடம் புடிக்குது. உங்களோட கருத்துக்களுக்கு மிக்க நன்றி வாணி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சுவா சும்மா சொல்லக்கூடாது பழகிறதுக்குள்ள கொஞ்சம் பெரும் பாடுத்தான். உங்களோட முறை இப்பதான் கேள்விப்படுறேன்ப்பா. நல்ல உபயோகமான தகவல் மிக்க நன்றி சுவா :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நான் இன்டாலியத்தில் குழி பணியார சட்டி வாங்கினேன்.அதை எப்படி பழக்குவது.

யாராவது தெரிந்தவர்கள் பதில் கூறவும்.pls