என் சமையலறையில் 1

நம் குடும்பத்தினரின் ஆரோக்கியம் நம் சமையலறையில் உள்ளது. இயற்கையான‌ உணவுமுறைகளை கடைப்பிடித்தால் நோய் வருவதை அனேகமாக‌ தடுத்து விடலாம். நமது உடலிலும் எதிர்ப்புசக்தியை பெருக்கிக் கொள்ளலாம்.

உணவகங்களில் உணவு வாங்குவதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. உணவு மட்டுமல்ல‌ சமையலுக்குத் தேவையான‌ பொடி வகைகளைக் கூட‌ கடையில் வாங்காமல் நாமே தயாரிப்பது மிகவும் நல்லது.

என் சமையலறையில் நான் தயாரித்து வைத்திருக்கும் பொடி வகைகளைப் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

முதலில் மங்களகரமான‌ மஞ்சட்பொடி.

கடையில் வாங்கும் பாக்கெட் மஞ்சட்பொடியில் மரத்தூளும் கலருக்காக‌ கெமிக்கலும் சேர்க்கிறார்கள். கடையில் விற்பனை செய்யப்படும் மஞ்சட்பொடியை தவிர்த்து இனி நாமே மஞ்சட்பொடியை தயாரிக்கலாம்.

அரைக்கிலோ துண்டு மஞ்சளை வாங்கி வெயிலில் நன்கு உலர்த்தி மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். நூறு கிராம் அளவு எடுத்து கிச்சன் டிராயரிலும் மீதியை ஃபிரிஜிலும் வைத்து விடுங்கள். வண்டு விழாது. தீரத்தீர‌ எடுத்துக் கொள்ளலாம். நாமும் கலப்படத்தில் இருந்து தப்பிக்கலாம்.

அடுத்து வர்றவங்க‌ காரத்தின் ராணியான‌ மிளகாய்ப்பொடி . இதிலும் எடைக்காக‌ செங்கல் பொடி கலப்பதாக கூறுகின்றார்கள். கலருக்காக‌ சில‌ கெமிக்கல்ஸ். எதற்கு வம்பு.

அரைக்கிலோ மிளகாய் வற்றலை வாங்கி வெயிலில் நன்கு உலர்த்தி காம்பை மட்டும் ஒடித்து விடவும். கிரீடம் (ராணியிடமே) மிளகாயிலேயே இருக்கட்டும். மிஷினில் அரைத்து பாதியை ஃபிரிஜிலும் மீதியை கிச்சன் டிராயரிலும் ஸ்டோர் செய்யவும். சுத்தமான‌ மிளகாய்ப்பொடி ரெடி.
இது போலவே மல்லிப்பொடியும் தயாரிக்கலாம்.

ஐம்பது கிராம் நல்ல‌மிளகை லேசாக‌ வறுத்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொண்டால் நல்ல‌ நல்லமிளகுப் பொடி கிடைக்கும். அப்படியே சீரகப்பொடியும் செய்யலாம்.

பனங்கற்கண்டை மிக்சியிலிட்டு பொடித்து வைத்துக் கொண்டால் நினைத்தவுடன் கற்கண்டு மிளகுப் பால் தயாரிக்கலாம்.

சாம்பார் பொடி, கறிமசால் பொடி, ரசப்பொடியும் நீங்களே தயாரித்து உங்கள் கைவரிசையை காட்டுங்கள்.

காரக்குழம்பு மற்றும் மீன்குழம்புக்கு பொருத்தமான‌ குழம்புப் பொடியை என்னோட‌ பாட்டியம்மா தயாரிக்கும் முறையை இங்கே கூறுகின்றேன்.

மஞ்சள் ‍= நாலு துண்டு
மிளகாய் வற்றல் ‍ = கால் கிலோ (வெயில் உலர்த்தவும்)
தனியா (மல்லி) = கால் கிலோ
கடுகு = நாற்பது கிராம்
மிளகு = 3 தேக்கரண்டி
சீரகம் = இருபது கிராம்
வெந்தயம் = ஒரு தேக்கரண்டி
சோம்பு (பெருஞ்சீரகம்) = இரண்டு தேக்கரண்டி (விரும்பினால்)
கடலைப்பருப்பு = இரண்டு மேஜைக்கரண்டி
துவரம்பருப்பு = இரண்டு மேஜைக்கரண்டி
கறிவேப்பிலை = சிறிது

அனைத்தையும் பக்குவமாக‌ வறுத்து மிஷினில் கொடுத்து அரைத்துக் கொண்டால் இரண்டு மாதத்திற்கு குழம்புப் பொடி ரெடி.
தான்க்ஸ் பாட்டிம்மா:)))

அடுத்து வருபவர் பெருங்காயம். சொல்லும் போதே காற்றில் மணம் வீசுது.
அனேகமா நீங்க‌ எல்லோருமே காயப்பொடி தான் வாங்குவீங்கன்னு நினைக்கிறேன்.
இனிமே கட்டிக்காயம் வாங்கி ஈரப்பதமாக‌ இருந்தால் சிறியதாக‌ நறுக்கி மூன்று நாட்கள் அப்படியே ஒன்றோடொன்று ஒட்டாமல் வைத்து உலர்த்திக் கொள்ளலாம்.
நன்கு உலர்ந்ததும் மிக்சியில் இட்டு ரெண்டு சுற்று சுற்றினால் காயப்பொடி கிடைக்கும். கலப்படமில்லாத‌ மணமிக்க‌ பொடியாக‌ இருப்பதை உணரலாம்.

இப்படியே மாவு வகைகளையும் நாமே தயாரிக்கலாம். அதைப் பற்றி இன்னொரு பதிவில் பார்ப்போம்.

இனி முடிந்தவரை இந்தப் பொடிவகைகளை பாக்கெட் பாக்கெட்டாக‌ கடையில் வாங்கி அடுக்காமல் நீங்களே தயாரிக்க‌ முயலுங்கள்.

உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்:))))) ....

5
Average: 4.5 (4 votes)

Comments

ஆரோக்கியமான பதிவு நிகி வாழ்த்துக்கள் :) நான் எப்பவும் மிளகாய் தூள் மல்லி தூள் வாங்கி காயவைத்து மிசினில் கொடுத்த அரைச்சு வச்சுப்பேன். மஞ்சள்,காயப்பொடி அரைப்பதில்லை இனி அதையும் செய்யனும்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

போஸ்ட் சுப்பர்ப் நிகி. ஆரோக்கியமான விடயம். மீதியையும் தொடருங்கள்.

‍- இமா க்றிஸ்

அருமையான‌ பதிவு. அப்படியே பருப்பு பொடியும் இட்லி பொடியும் கூட‌ சொல்லி இருக்கலாம்.

இட்லி பொடி:

கடலை பருப்பு - 1 டம்ளர்
உளுத்தம் பருப்பு - 1/2 டம்ளர்
துவரம் பருப்பு - 1/4 டம்ளர்
மிளகு - 2 ஸ்பூன்
காய்ந்த‌ மிளகாய் - 10
பெருங்காயம்‍ - சிறுதுண்டு
பூண்டு - 10 பல்

பருப்பு வகைகள் எல்லாவற்றையும் தனி தனியாக‌ வெறும் வாணலில் வறுத்து மீதி அனைத்தையும் ஒன்றாக‌ வறுத்து உப்பு சேர்த்து அரைத்தால் சுவையான இட்லி பருப்பு பொடி ரெடி.

எல்லாம் சில‌ காலம்.....

அருமையான உபயோகமான பதிவு நிக்கி.நன்றி வாழ்த்துக்கள்.நான் எங்கம்மா அனுப்பும் கறிமசால் பொடி குறிப்பு அனுப்பியுள்ளேன்.எல்லாரும் முயற்சிபன்னுங்க.
மல்லி:1கிலோ
காய்ந்தமிளகாய்: 3/4கிலோ
மிளகு: 200கிராம்
ஜீரகம்: 200கிராம்
சோம்பு: 100கிராம்
முந்திரி:20
கசகசா விரும்பினால் 50கிராம் அம்மா போடுவாங்க.
பட்டை ஒருவிரல் அளவு
கிராம்பு: 10ஏலம்10
இது எல்லாவற்றையும் வாசம் வரும்வறை வறுத்து மிஷினில் கொடுத்து அரைத்து சலித்து ஒரு கன்டெய்னர் அல்லது எவர்சில்வர் டப்பாவிலோ கொட்டி.குருமா.குழம்பு.சுக்கா ரோஸ்ட்.எல்லாவற்றுக்கும் பயன்படுத்தலாம்.

பாலநாயகி இட்லிபொடி குறிப்பு சூப்பர் நான் ட்ரைபன்ரேன்.
நான் அனுப்பு மசால்பொடி காற்றுபுகாமல்.தன்னீர் &கைபடாமல் யூஸ்பன்னா 6மாதம் இருக்கும்.நான் தேவைக்கு வச்சிகிட்டு மீதியை ஒரு பாலிதீன்பையில் போட்டு ஃப்ரிஜ்ல வச்சுப்பேன்.உங்க யாருக்கும் இந்த மசால் பிடிச்சா ட்ரைபன்னுங்கம்மா

2 பேர் தானே என்று கடையில் ரெடிமேட் தூள் வாங்குவது வழக்கம்,எனக்கு உங்களுக்கு மாதிரி செய்து அனுப்ப அம்மாவும் இல்ல.இந்த பதிவை பார்த்தா வீட்லயே செய்ய ஆசையாக இருக்கு,ம் try பண்ணுவோம்.

உபயோகமான பதிவு நிகிலா.

\\மஞ்சட்பொடியில் மரத்தூளும் கலருக்காக‌ கெமிக்கலும்//
\\மிளகாய்ப்பொடி . இதிலும் எடைக்காக‌ செங்கல் பொடி கலப்பதாக கூறுகின்றார்கள். கலருக்காக‌ சில‌ கெமிக்கல்ஸ்.//
ம்ம்ம்ம்...... ஆக மொத்தத்துல விலங்குகள் கூட உண்ண விரும்பாததையெல்லாம் நாம சாப்பிடறோம் :(
முழு மிளகுடன் பப்பாளி விதை சேர்ப்பதாகவும் கேள்விப் பட்டுள்ளேன்.

முழு கேழ்வரகு - வீட்டிலே எப்படி பவுடராக்குவது என்று சொன்னால் எனக்கு பயனளிக்கும்.
நன்றி

வானி கேழ்வரகு வீட்ல கழுவி காயவைத்து உரலில் போட்டு தீட்டி.பிறகு மிசினில் கொடுத்து அரைத்து மறுபடியும் அதை சல்லடையில் சலித்து வைத்துகொன்டால்.எல்லாவற்றுக்கும்.உபயோகிக்கலாம்.கம்பு சோளம்.எல்லாமே எங்கவீட்டில் இதே முறையில்தான் பயன்படுத்துவோம் நிக்கி நீங்க எப்படி செய்வீங்க சொல்லுங்க

அருமையான‌ பதிவு... வாழ்த்துக்கள்...

கறிமசால்‍‍‍‍‍‍‍‍ கரம் மசால் என்ன‌ வித்தியாசம்....கரம் மசால் செய்வது எப்படி.....

ராகி (கேழ்வரகு) வாங்கி முறத்தால் நன்கு புடைத்து கொள்ளவும்.. பின்பு நன்கு கழுவி கல் நீக்க‌ அரிக்க‌ வேண்டும்.... அதை துணியில் ஈரம் போக‌ காய‌ வைத்து மிஷினில் கொடுத்து அரைக்கவும்... பின்பு நன்கு ஆற‌ விட்டு சலித்து வைத்து கொள்ளலாம்... குழந்தைகளுக்கு கூழ் செய்ய‌ அப்படியே முழு ராகியை ஊற‌ வைத்து அரைத்து பாலெடுத்து கூழ் செய்தால் சுவையாக‌ இருக்கும்.....

கரம் மசாலா தூள் என்பது வெறும் பட்டை, கிராம்பு, சோம்பு, ஏலம், பிரியாணி இலை, ஜாதிபத்திரி, நட்சத்திர‌ மொக்கு, அன்னாசி மொக்கு போன்ற மசாலா பொருட்களை வறுத்து தூள் செய்வது.... கறி மசால் என்பது குழம்பு, கறி வகைகள் செய்யும் போது அரைக்கும் பொருட்களை தூள் செய்வது... மேலே சொல்லி இருப்பது போல‌,.........

Really super.thank u for this information...i'm a new member in this arusuvai.com .....

//மஞ்சள்,காயப்பொடி அரைப்பதில்லை இனி அதையும் செய்யனும்.//
அவசியம் தயார் பண்ணுங்க‌ ஃபிரிஜில் வைத்தால் அதுபாட்டுக்கு இருக்கும்.
ஆரோக்கியத்துக்கு ஆரோகியமும்.

பதிவுக்கு நன்றி சுவா:)

//ஆரோக்கியமான விடயம்//
ஆம்.. நம் ஆரோக்கியம் நம் கையில்
பதிவுக்கு நன்றி இமா. மீதியும் விரைவில் வரும்:)

கறி மசால் பொடி சூப்பர். இது எதிலேயெல்லாம் உபயோகிக்கலாம்.

எல்லாம் சில‌ காலம்.....

உங்க‌ இட்லி பருப்புப் பொடி அருமையான‌ குறிப்பு.:)
இது போல‌ பொட்டுக்கடலைப் பொடி சாதத்துக்கும், கறிவேப்பிலை பொடி இட்லிக்கும் நல்ல‌ பொருத்தமா இருக்கும். அதெல்லாம் போட்டால் பதிவு ரொம்ப‌ நீளமா ஆயிடும்னு விட்டுட்டேன் பாலா.
பருப்புப்பொடிக்கு நன்றி .
ஆமா பாலா ஒண்ணு கேட்க‌ மறந்துட்டேனே. உங்க‌ பச்சைப்பயறு உருண்டைக்கு தண்ணீர் அளவு கொஞ்சம் வேணுமே பாலா:))
எவ்வளவு சிறுபயறுக்கு எவ்வளவு தண்ணீர்னு சொல்லவே இல்லியே.....

ஆஹா... கறிமசால் பொடி குறிப்பு அருமை பா.

என்னோட‌ பாட்டிம்மா குறிப்பு காரகுழம்புக்கு பொருத்தம் என்றால், உங்களோட‌ அம்மாவின் குறிப்பு சிக்கன் , மட்டனுக்கு பொருத்தமா இருக்கும்.

நானும் தயார் பண்ணி வச்சிக்கறேன் நிஷா:)

//2 பேர் தானே என்று கடையில் ரெடிமேட் தூள் வாங்குவது வழக்கம்//
இனிமேல் நீங்களே ரெடி பண்ணுங்க‌ ஷிபா.
ஒரு முறை செய்தால் ஆறு மாதம் வச்சுக்கலாம். ஏர்டைட் கண்டெய்னர் ல‌ வச்சால் நல்லாவே இருக்கும்.
ட்ரை பண்ணுங்க‌ ஷிபா. நீங்க‌ செய்து அம்மாவுக்கு அனுப்புங்க‌. உங்க‌ கைவரிசையைப் பார்த்து அவங்க‌ சந்தோசப்படட்டுமே:))

//முழு மிளகுடன் பப்பாளி விதை சேர்ப்பதாகவும் கேள்விப் பட்டுள்ளேன்.//
உண்மை தான் வாணி. விரலால் அழுத்தினால் சட்டெனெ உடைந்தால் அது பப்பாளி விதை.

//முழு கேழ்வரகு - வீட்டிலே எப்படி பவுடராக்குவது என்று சொன்னால் எனக்கு பயனளிக்கும்//.

வாணி நான் மிஷினில் கொடுத்து தான் பவுடராக்குவேன். கல் நீக்கி லேசா வறுத்து மிக்சியில் போட்டு நன்கு அரைத்து சல்லடையில் சலித்துக் கொள்ளலாம். இது மிஷின் அளவுக்கு நைசா வருமான்னு தெரியலை. ஆனால், எல்லா உணவுமே செய்யலாம். நல்லா வரும் பா.
ட்ரை பண்ணுங்க‌ வாணி:)))

//கேழ்வரகு வீட்ல கழுவி காயவைத்து உரலில் போட்டு தீட்டி.பிறகு மிசினில் கொடுத்து அரைத்து மறுபடியும் அதை சல்லடையில் சலித்து வைத்துகொன்டால்.எல்லாவற்றுக்கும்.உபயோகிக்கலாம்.கம்பு சோளம்.எல்லாமே எங்கவீட்டில் இதே முறையில்தான் பயன்படுத்துவோம் நிக்கி நீங்க எப்படி செய்வீங்க சொல்லுங்க//

நிஷா முன்னாடி எங்க‌ பாட்டியும் கோதுமையை தீட்டி உமியை நீக்குவதை நானும் பார்த்திருக்கேன். ஆனால், இப்போது தீட்டினால் தவிடு நீங்கி விடும் சத்து போயிடும்னு சொல்றதால‌ தீட்டனும்னு அவசியம் இல்லை.

தவிர‌, இப்போது உரலும் இல்லியே. வருங்கால‌ சந்ததிக்கு உரல், திருவல் எல்லாம் படம் பிடிச்சி தான் காட்டணும் போல‌.

சுத்தப்படுத்தி மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்வேன் நிஷா. அதுவே போதும் பா. பதிவுக்கும் கருத்துக்கும் நன்றி நிஷா:)

//அருமையான‌ பதிவு..//
மிக்க‌ நன்றி ப்ரியா.:))

//கறிமசால்‍‍‍‍‍‍‍‍ கரம் மசால் என்ன‌ வித்தியாசம்....கரம் மசால் செய்வது எப்படி// .....உங்களுக்கு புரியும்படி தெளிவா தோழி ப்ரியா பதில் சொல்லியிருக்காங்க‌ பாருங்க‌......:)).....

ஆம் பிரியா .நானும் இப்படித்தான் ரெடி பணுகிறேன்.

//குழந்தைகளுக்கு கூழ் செய்ய‌ அப்படியே முழு ராகியை ஊற‌ வைத்து அரைத்து பாலெடுத்து கூழ் செய்தால் சுவையாக‌ இருக்கும்....//
குட்டிப் பாப்பாவுக்கு இப்படி செய்யலாம் ப்ரியா. என்னோட‌ குழந்தைகட்கு செய்திருக்கிறேன்.

கரம் மசாலா, கறி மசாலா விளக்கத்திற்கு நன்றி பிரியா.:))

ஓ...புது மெம்பரா... முதல் பதிவு எனக்குன்னு நினைக்கிறேன்.
ரொம்ப‌ சந்தோஷம் சித்ரா.:)) மிக்க‌ நன்றி

//கறி மசால் பொடி சூப்பர். இது எதிலேயெல்லாம் உபயோகிக்கலாம்.//
இது குருமா மற்றும் அசைவ‌ உணவுக்கு ஏற்றது பாலா.
நிஷா சொன்ன‌ முறையில் செய்து பார்த்து சொல்லுங்க‌ தோழி :)

நிக்கி கறிமசால்பொடி.எல்லாவற்றுக்கும்.அசைவம் மட்டுமல்ல.சைவ குருமாவுக்கும் பயன்படுத்தலாம்.
கேழ்வரகு இதுவறை அம்மா தீட்டிதான் செய்வாங்க.இன்னும் உரல் எங்கவீட்டில் உள்ளது.நான் உங்க முறையை அம்மாகிட்ட சொல்லி ட்ரை பன்னசொல்ரேன்.நன்றி நிக்கி

பாலா எல்லா கறி வகைக்கும் உபயோகபடுத்தலாம் நான் மீன்ரோஸ்ட் கூட இதில்தான் பன்னுவேன்

நிகி அறுசுவைக்கேற்ற அருமையானபதிவு. உங்க காரகுழம்பு பொடிதான்நாங்க அரைச்சு எல்லாத்துக்குமே யூஸ் பண்ணுவோம். எல்லா தோழிகளும் குடுத்துள்ள பொடி வகைகள் ரொம்ப உபயோகம்.

வாணி,பிரியா சொல்லிருக்கற மாதிரி அரைச்சு குடுத்தா குழந்தைகளுக்கு ரொம்ப நல்லது. உங்களுக்கு கூட குட்டிப்பாப்பாதானே இருக்கு.என் ட்வின்ஸ் பசங்க பிறக்கும்போது வெறும் 2 1/4கிலோதான் இருந்தாங்க.4மாதம் வரை வெயிட் போடவேயில்லை.5 மாத முடிவில் இந்த முறையில் கஞ்சி காய்ச்சு குடுத்ததும்,டாக்டரே ஆச்சர்ய படும் அளவுக்கு ஹெல்தி&புஷ்டி ஆகிட்டாங்க. நீங்களும் பாப்பாக்கு குடுங்க.

Be simple be sample

//கறிமசால்பொடி.எல்லாவற்றுக்கும்.அசைவம் மட்டுமல்ல.சைவ குருமாவுக்கும் பயன்படுத்தலாம்//

.அப்படீன்னா காய்கறி குருமா, தக்காளி குருமாவுக்கும் பொருத்தம்னு சொல்லுங்க‌. முட்டைக் குருமா கூட‌ ம் ....
நானும் முதல்ல‌ கொஞ்சமா ரெடி பண்ணிப் பார்க்கிறேன் நிஷா.

கேழ்வரகு தீட்டணுனு அவசியம் இல்லை நிஷா. கல் நீக்கி சுத்தப்படுத்தினால் போதும்.
அரிசி தவிட்டில் சத்து இருக்குன்னு சொல்ற‌ மாதிரி தானே இதுவும். மேல் தவிட்டில் சத்து இருக்குமே....

தகவலுக்கு நன்றி நிஷா:))