வேப்பிலை காப்பு

வளைகாப்பு அன்று வேப்பிலை காப்பு எதற்காக போடுகிறார்கள்? குழந்தை இருப்பவர்கள் மட்டும் தான் வளையல் போட வேண்டுமா? குழந்தை இல்லாதவர்கள் வளையல் போட்டால் தோஷம் ஏற்படும் என்பது உண்மையா?

நாங்கள் வசிப்பது அமெரிக்காவில். நான் 8 மாத கர்ப்பம். என் கணவருடன் வேலை செய்பவரின் மனைவி என்னை விட 6 வயது மூத்தவர். அவருக்கு 33 வயது ஆகிறது. ஆனால் இன்னும் குழந்தை இல்லை. அடிக்கடி என் வீட்டிற்கு வந்து எனக்கு மட்டும் குழந்தை இல்லை என்று அழுது புலம்புகிறார். என் குழந்தை வயிற்றில் உதைப்பது வெளியில் நன்றாக தெரிகிறது. உடனே அந்த பெண் வயிற்றில் கை வைத்து அழுத்தி தொட்டு பார்க்கிறார். மீண்டும் அழுது புலம்புகிறார். சில நேரங்களில் அந்த பெண் என்னிடல் சரியாக பேசுவது கூட கிடையாது.

சில நேரத்தில் எனக்கு அந்த பெண்ணின் வருகை மிகுந்த மன வேதனையும் வெறுப்பும் தருகிறது. வளைகாப்பிற்கு அவரையும் வலையல் போட சொல்ல வேண்டுமாம். இல்லை என்றால் அந்த பெண் வரமாட்டேன் என்று சொல்கிறாள்.

பல நேரங்களில் அந்த பெண் என்னை ஒரு போட்டியாக நினைக்கிறாள். அந்த பெண்னை விட்டு விலகி இருந்தால் எனக்கு நிம்மதியாக இருக்கும் என்று தோன்றுகிறது. என் கணவருக்கும் இதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை.

நான் இனிமேல் இதை எப்படி சமாளிக்க வேண்டும்.

தோஷம் என்பதெல்லாம் பொய். விஷயம் என்னவென்றால் நீங்கள் அனுபவிக்கும் மன உளைச்சலை தடுப்பதற்க்கும், குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு மனதில் ஏற்ப்படும் ஏக்கம் அவர்களுக்குள் ஒரு வித சஞ்சலத்தை கொண்டு வரும். மேலும் மேலும் அவர்களுக்கு குழந்தை பேறு உண்டாவதை அது தாமதிக்கும். அதினால் தான் பெரியவங்க அப்படி சொல்லியிருக்கலாம்.
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இந்தப் பெண்ணின் போக்கு சரியில்லை, நீங்கள் இதை ஆரம்பத்திலே தள்ளி வைத்திருக்க வேண்டும். குழந்தை உதைக்கையில் வயிற்றைத் தொட்டுப் பார்த்து மகிழ்வது சரி. ஆனால் இப்பெண் பொறாமை படுவது போன்றுள்ளது. இது நட்பிற்க்கு நல்லதல்ல. வளைகாப்பு விஷயத்தில் தான் சொல்வதை நீங்கள் கேட்க்க வேண்டுமென நினைப்பவர், குழந்தை பிறந்த பின் உங்களுக்கு என்னன்னே மன உளைச்சல்களையெல்லாம் கொடுக்கப் போகிறாரோ தெரியவில்லை. குழந்தை பிறந்த பின் என்றே உள்ள டிப்ரஷன் சிலரை தாக்கும் வாய்ப்பிருக்க இவரால் உங்களுக்கு தொல்லைகள் கூட வாய்ப்புகள் அதிகம். உங்கள் / குழந்தையின் நலம் தான் முதலில், அதின் பின் தான் நட்பு என்பதை உங்கள் கணவரிடம் சொல்லிப் பாருங்கள். ஆனால் இப்போ நீங்க அவர்களை தவிர்ப்பதற்க்கு என்ன முடிவெடுத்தாலும் அது பிரச்சனையில் தான் முடியும். எனக்கு இப்படி ஒரு பெண்ணை தெரியும். அவள் ஃபோன் பண்ணினாலே பேச பயமாயிருக்கும். என் கணவர்தான் அவர் ஃபோன் அடித்தால் எடுக்காதே என்று எனக்கு சொல்லி விட்டார். ஆனாலும் விட மாட்டாள் பிரைவேட் நம்பரிலிருந்து அடிப்பார், சொல்லாமல் கொள்ளாமல் வீட்டுற்க்கு வந்து கதவை தட்டுவார், பகலில் குழந்தை தூங்கினால், நானும் ரெஸ்ட் எடுப்பது வழக்கம். ஆனால் என்னை தூங்க விடுவதில்லை. ஒரு நாள் வந்து குழந்தையை தான் தன் வீட்டிற்க்கு எடுத்து செல்ல வேண்டுமென்றார், எங்களுக்கு அதில் உடன்பாடில்லை. நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். கேட்கவே இல்லை. இன்னும் அவர் கொடுத்த தொந்தரவுகள் பல உண்டு. அவர் கணவர் நல்லவர், எங்களால் அவரிடம் சொல்வதென்றே தெரியவில்லை. மனைவியின் செயலை அவரிடம் சொன்னாலும் பிரச்சனையில் தன் முடியும். என் கணவரின் ஆலோசனையின் பேரில் அந்த தம்பதியரிடம் பேசுவதை நாங்கள் இருவரும் நிறுத்தி விட்டோம்.
மறுபடியும் சொல்கிறேன், தோஷம் என்றில்லை, அப்பெண்ணின் நடவடிக்கையை கருத்தில் கொண்டு எந்த முடிவும் எடுங்கள்.
ஆரோக்கியமான குழந்தைப் பெற்றெடுக்க வாழ்த்துக்கள்.

//வேப்பிலை காப்பு எதற்காக போடுகிறார்கள்?// தெரியாது.
//குழந்தை இருப்பவர்கள் மட்டும் தான் வளையல் போட வேண்டுமா? குழந்தை இல்லாதவர்கள் வளையல் போட்டால் தோஷம் ஏற்படும் என்பது உண்மையா?// இவையெல்லாம் வெறும் நம்பிக்கைகள் மட்டும்தான் சகோதரி. வளையல் போடுவதால் தாய்க்கு என்ன லாபம்? உள்ளே இருக்கும் குழந்தைக்குத்தான் என்ன லாபம்? இது போல எல்லாம் செய்யாதவர்களும் கூட சுகமாகக் குழந்தை பெற்றிருக்கிறார்கள் அல்லவா??? குழந்தை பெற்றுக் கொள்ளும் எல்லோருமே முதல் குழந்தை தரிக்கும் வரை குழந்தை இல்லாதவர்களாகத்தானே இருந்திருப்போம்!!!

//வளைகாப்பிற்கு அவரையும் வலையல் போட சொல்ல வேண்டுமாம். இல்லை என்றால் அந்த பெண் வரமாட்டேன் என்று சொல்கிறாள்.// அவர் கேட்பது நியாயம்தானே! கட்டாயம் அழைக்க வேண்டும் என்று அவர் கேட்கவில்லையே! அழைத்தீர்களானால்... இந்த விடயத்தை மறுக்கக் கூடாது என்கிறார், சரிதானே!

உங்கள் மனது சம்மதித்தால் அழைப்பு வையுங்கள். அல்லாவிட்டால் அழக்காமல் விட்டுவிடுங்கள்.

அழைத்து விட்டு இந்த ஒரு விடயத்தை மறுக்க வேண்டாம். இது 2015. மற்றவர்கள் முன்னால் மறுப்பீர்களானால், நீங்கள் செய்யும் காரியம் விழாவுக்கு வரும் மற்றவர்களால் விமர்சிக்கப்படலாம். அதுவும் உங்கள் மனதைப் பாதிக்கக்கூடும்.

‍- இமா க்றிஸ்

தோஷம் என்பதெல்லாம் சும்மா.
உங்களது நம்பிக்கையைப் பொறுத்தது.
மற்றபடி நீங்கள் சொல்வதைப் படித்தால்,, உங்களை அந்தப்பெண் போட்டியாக‌ நினைப்பது உண்மையானால், அந்தப் பெண்ணிடம் இருந்து விலகுவதே உங்களுக்கு நல்லது.

நீங்கள் பிரசவத்திற்கு இந்தியா வருவதானால் முன் கூட்டியே வருவதோடு
வளைகாப்பையும் இங்கேயே வைத்துக் கொள்ளலாமே. அவர்கள் நம்மவர்களா.
அப்படியானால் ஏதாவது ஒர் கோயில் பக்கம் அவர்களை வேண்டிக்கொள்ள‌ விரட்டி விடுங்கள். அறிவியல் பூர்வமாகவே வயிற்றுச் சிசுவுக்கு தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் துல்லியமாக‌ அறிந்து கொள்ளும் ஆற்றல் உண்டு. அனாவசியமாக‌
உங்கள் வயிற்றைத் தொட்டுத் தொட்டுப் பார்ப்பதை தயவு செய்து இனிமேல் எந்த‌ நிலையிலும் அனுமதிக்காதீர்கள். எங்க அம்மாவிடம் இதை பற்றிச் சொன்னதற்குக் கிடைத்த‌ பதில் இது. சிலரின் தவறான எண்ண‌ ஓட்டங்களும் தொடுகையும் கருவில் இருக்கும் குழந்தைக்கு ஆகாது. (பல‌ நேரங்களில் அந்தப்பெண் போட்டியாக‌ உங்களை நினைக்கிறாள் என்பதை நினைக்கும் போது) ஏதோ ஓர் உள்ளுணர்வு அவர்களுடைய‌ எண்ண‌ ஓட்டத்தை உங்களுக்கு உணர்த்தி உள்ளது, என்பது புரிகிறது. உங்கள் பெற்றோரிடம் கலந்து பேசுங்கள்.என் ஆலோசனை தயவு தாட்சண்யம் இன்றி உங்கள் குழந்தையின்
நன்மைக்காக‌ அவர்களை முழுமையாக‌ வெட்டி விடுதலே நல்லது.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

Hi thozhi,
Kavalapadatheenga. Ungal vayirai thottu paarpathal ondrum agathu. Oru nimidam avargalaiyum ninaiyungal. Paavam avarum oru Penn thane. Namma avargalai itharkaga vilaka koodathu. Kulanthaikana thavipil apadi alukirargal. Kadavul kudutha parisu kulanthai. Avargalum oru pillai petral ipadiye iruka maatargal. Mannithu vidungal. Naam manathai amaithiyaga vaithu kolla vendum. Positive thinking iruka vendum. Avargalai patri kavalai pattu konde negative environment create panikatheenga. Ungaluku nala padiyaga iraivan arulal kulanthai piraka vaalthukal.

அனு ஆரோக்கியமாக குழந்தை பெற்றெடுக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்!.

வேப்பிலை காப்பு முதலில் அவ்வளவாக அணிவது இல்லை. இப்பொழுதெல்லாம் பரவலாக இம்முறை காணப்படுகிறது. வேப்பிலையின் கசப்பு தன்மை நோய்க்கிருமிகளை அண்டவிடாமல் தவிர்க்கும் என்ற எண்ணம் என நினைக்கிறேன். எனக்கு அதனைப் பற்றி வேறொன்றும் தெரியவில்லை.
நீங்கள் எழுதியிருக்கும் மற்ற விஷயங்களைப் பற்றி ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
தோழி! //உடனே அந்த பெண் வயிற்றில் கை வைத்து அழுத்தி தொட்டு பார்க்கிறார். மீண்டும் அழுது புலம்புகிறார்.//உங்களின் நெருங்கிய தோழியாக இருப்பார் என நினைக்கிறேன். ஏனெனில் இது போல உரிமையுடன் பழகுவதைக் கொண்டு அவ்வாறு நினைக்கிறேன். உதாரணமாக தோள் தொட்டு உரிமையுடன் பேசுவது கூட நமக்கு பிடித்த தோழியாக இருந்தால் தான் பேசுவோம். இல்லாவிட்டால் ஒரு புன்னகையுடன் நிறுத்திவிடுவோம்.
அவருக்கு குழந்தையின் மீது உள்ள அதீத ஆசையும், உங்களின் நட்பின் மீது கொண்ட உரிமையுமே அவ்வாறு செய்ய தோன்றியிருக்கும். இதே வேறு ஒருவராக இருப்பின் பொறாமைப் படுவதாக எண்ணலாம் என நினைத்து அவ்வாறு செய்யமாட்டார்.
அழுது புலம்புவது என்பது இல்லாத ஒன்றை நினைத்தால் யாருக்குமே அழுகை வரத்தான் தோணும்பா. அதுவே மூன்றாம் மனிதராக இருப்பின் ஒரு கெத்தாக பேசிவிட்டு நகர்ந்துவிடுவர். அல்லையேல் அதனைப் பற்றிய பிரக்ஞை இல்லாதது போல் காட்டிக்கொண்டு கடந்துவிடுவர். நீங்கள் அவரின் உயிர்த்தோழி என நினைத்து தன் கஷ்டத்தைக் கரைக்க நினைத்து அழுதிருப்பார்.

சில விழாக்களில் அனைவரும் முக்கியத்துவம பெற்றவர்களாகி விட முடியாது. அதுவே நம் நெருங்கிய உறவின், நட்பின் விழாவாக இருப்பின் அதில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும் என்னும் ஆவல் அதிகமாக இருக்கும். அதன் காரணமாக அவ்வாறு கூறியிருப்பார். இந்த விஷயத்தினால் எதுவும் நடக்காது தோழி. நான் கர்ப்பம் தரித்திருக்கிறேன் என்பதை முதன்முதலில் உறுதிப்படுத்திக் கூறிய மருத்துவருக்கு நீண்ட வருடங்களாகியும் குழந்தையில்லை. ஆனால் அவரிடம் என்போன்று நிறையப்பேர் சென்று மருத்துவம் செய்து நல்லபடியாக குழந்தை பெற்று உள்ளனர்.

நீங்கள் அவரிடம் கனிவாக பேசி புரியவையுங்கள், உங்களின் இச்செயல் எனக்கு பிடிக்கவில்லையென்று. ஆனால் மீண்டும் நட்பு தழைக்கும் என்பது ஐயமே!
நம் மனம்தான் தோழி அனைத்தையும் ஆட்டிப்படைக்கும் குரங்கு. அதனை நாம் கன்ட்ரோல் பண்ணிவிட்டாலே போதும்.
குழந்தையில்லாதவர்கள் குழந்தையை தொட்டால் பாவம், பார்த்தால் பாவம் என்பதெல்லாம் நம் மனம் சம்பந்தப்பட்டதே. நீங்கள் இதனைச் சொல்லவில்லை. ஆனால் அடுத்து மனதில் இது போல தோன்றலாம். அதனை தோன்ற விட்டுவிடாதீர்கள்.
நன்கு கரு கருவென தலைமுடி பெற்றவர்கள், ஏதோவொரு காரணத்தினால் முடிகொட்டி கறிவேப்பிலை குச்சி போல ஆகிவிடும். அதுக்கு இன்னார் என் முடியப்பாத்து அப்பா..எவ்வளவு முடினு சொன்னாங்க, அதுல போனதுதான் இன்னும் கொட்டிக்கிட்டே இருக்கு என்று கூறக் கேட்டதுண்டு. அது முடி கொட்டுதேனு கவலை அதிகமாக அதிகமாக இன்னும் நிறையக் கொட்டத்தான் வாய்ப்புண்டு.

உங்கள் நெருங்கிய தோழியாக அவரை நினைத்தால் நேரிடையாக அவரிடம் சொல்லுங்கள், நீ அழும் சத்தம் வயிற்றில் இருக்கும் சிசுவுக்கும் கேட்கும், அதனால் சந்தோஷமாக பேசியும், சிரித்தும் இருப்போம், உனக்கு குழந்தை பிறக்கும் போது பிறக்கட்டும். அதற்காக கவலையை விட்டு அமைதிகாக்கும் படி கூறுங்கள் தோழி!!

நான் கூறியதில் தவறாக தோன்றுவதை விட்டுவிடுங்கள். பிடித்ததை எடுத்துக்கொள்ளுங்கள்.
மீண்டும் உங்களுக்குஎன் வாழ்த்துக்கள். உங்களின் தோழியும் விரைவில் நல்லசெய்தி சொல்ல பிரார்த்தனைகள்!!.

வெற்றி பெற்ற பின், தன்னை அடக்கி வைத்துக் கொள்பவன், இரண்டாம் முறை வென்ற மனிதனாவான்.

என்றும் அன்புடன்
சிவிஸ்ரீ

// வளையல் போடுவதால் தாய்க்கு என்ன லாபம்? உள்ளே இருக்கும் குழந்தைக்குத்தான் என்ன லாபம்? // இதில் லாப நஷ்டம் எங்கே வந்தது? :) வளைகாப்பு என்பது தாய்க்கும் சேய்க்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஒரு நிகழ்வு, வளைகாப்பு செய்து, பெண்களை அழைத்து கர்ப்பிணிக்கு வளையல் போடச் செய்வதென்பது, வளைகாப்புக்கு வந்தவர்கள் (குறிப்பாகப் பிள்ளை பெற்ற பெண்கள்) கர்ப்பிணியை மனதார வாழ்த்துவதற்காகவும், வளையலின் ஓசையை வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை கேட்பதற்காகவும்தான் என்று எங்க வீட்டுப்பெரியவர்கள் சொல்லியிருக்காங்க! :) 7 மாதத்திற்குப் பிறகு உள்ளே இருக்கும் குழந்தை வெளியுலகில் ஏற்படும் சத்தங்களை எல்லாம் நன்றாக கேட்க ஆரம்பித்துவிடும். அம்மாவின் கையில் கேட்கும் வளையோசை குழந்தைக்கு சந்தோஷமா இருக்குமாம். கூடவே கையில் போட்ட வளையல் உடையாமல் நறுவிசா வேலை செய்யணும் என்றும் கர்ப்பிணிக்குச் சொல்வதும் உண்டு. சும்மா கையை அசைக்கையிலேயே அந்தக் கலகல சத்தம் ஒரு சந்தோஷத்தைக் கொடுக்கும் இமா! :)

//இது போல எல்லாம் செய்யாதவர்களும் கூட சுகமாகக் குழந்தை பெற்றிருக்கிறார்கள் அல்லவா??? // கட்டாயம்!! வளைகாப்ப்பு என்பது கட்டாயம் இல்லையே..நம் மனத் திருப்திக்கும் சந்தோஷத்துக்கும் செய்யும் ஒரு சடங்கு, அவ்வளவுதான்!

//குழந்தை பெற்றுக் கொள்ளும் எல்லோருமே முதல் குழந்தை தரிக்கும் வரை குழந்தை இல்லாதவர்களாகத்தானே இருந்திருப்போம்!!!// ஆஹா..ஆஹா..எங்கேயோஓஓஓஓஓ போயிட்டீங்க போங்க! ;) :) என்ன ஒரு அனாலிஸிஸ்!! :) ;)

அனு தினேஷுக்கு, அந்தப் பெண்ணின் செய்கைகள் உங்களை இந்த அளவு தொந்தரவு செய்கிறது என்றால் நேரடியாக அவரிடமே "உங்கள் நடவடிக்கைகள் எனக்குப் பிடிக்கவில்லை. தயவு செய்து இப்படி செய்யாதீர்கள்" என்று சொல்லுங்க. அதைக் கேட்டு ஒதுங்கிகொள்பவர் எனில் இது உதவலாம். அப்படி ஆகாது எனில் உங்க கணவருடன் ஆலோசித்து அவர்களிடம் பேச்சுவார்த்தையைக் குறைத்துக்கொள்ளுங்கள் அல்லது நிறுத்திடுங்க.

//குழந்தை இருப்பவர்கள் மட்டும் தான் வளையல் போட வேண்டுமா?// குழந்தை பெற்றவர்கள் வளையல் போடுவது என்பது அனுபவஸ்தர்கள் வாழ்த்தையும் ஆசியையும் தெரிவிக்க என்பதாகத்தான் நான் நினைக்கிறேன். வேறு காரணமும் இருக்கலாம்!

//குழந்தை இல்லாதவர்கள் வளையல் போட்டால் தோஷம் ஏற்படும் என்பது உண்மையா? // இதில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லைங்க. எனக்கும் யு.எஸ். ல தான் வளைகாப்பு நடந்தது. எங்கள் நண்பர்கள் எல்லாரையும்தான் அழைத்தோம், (நீங்கள் சொல்வது போலவே என்னை விடவும் 6 வயது பெரியவர்) என் கணவருடன் வேலை செய்பவரின் மனைவியும் வந்தார், வளையல் போட்டார். இப்பொழுதும் என் பெண்ணுக்கு அந்த "ஆன்ட்டி" மீது ஸ்பெஷல் பாசம், யாரிடமும் போக மாட்டாள்..ஆனால் அவரிடம் போவாள். எல்லாத்துக்கும் மனசுதாங்க காரணம். என் தோழிக்கு மிக நல்ல மனது, ஆனால் கடவுள் அவருக்கும் இன்னமும் குழந்தையைக் கொடுக்கவில்லை. :(

அந்தப் பெண்ணுடனான உறவை டேக் இட் ஈஸியா எடுத்துக்க முடியும்னா நட்பைத் தொடருங்க. இல்லையெனில் அந்த நட்பைக் கத்தரிப்பதே நல்லது. உங்க குழந்தை வயிற்றுக்குள் இருக்கும் இந்தக் காலத்தை சந்தோஷமா அனுபவியுங்க. நல்லபடியா பிள்ளையைப் பெற்றெடுக்க வாழ்த்துக்கள்!

அன்புடன்,
மகி

மேலும் சில பதிவுகள்