
அப்பாடா!!! எவ்வளவு நாட்களாயிட்டுது வனி வலைப்பதிவிட்டு!! போட சரக்கில்லாமல் தான் சுத்திக்கிட்டிருந்தேன் ;) சும்மா நேரமில்லன்னு மட்டும் பொய் சொல்ல கூடாதில்ல. எல்லோரும் நலமா? என்னை யாரும் மறந்திருக்க மாட்டீங்க, அப்பப்ப தான் முகபுத்தகத்தில் வம்பிழுக்கறோமே. சரி அதை விடுங்க... நான் என்ன சரக்கு கிடைச்சுதுன்னு இந்த பக்கம் வந்தேன்னு யோசிக்கிறீங்க... இந்த தளம் முழுக்க பெண்கள் மட்டும் இல்லை தான், ஆனாலும் பெண்களுக்கான தளம், பெண்கள் அதிகம் உள்ள தளம் என்பதால், இந்த பதிவை இங்கே பதிவது தான் சரின்னு வந்தேன்.
ஒரு 2 நாள் இருக்குமோ? நினைவில்லை... யாரோ ஒரு நடிகையின் பேஜில் யாரோ அத்துமீறி அவரின் உடலை பற்றி கமண்ட் பண்ணதாகவும், அதற்கு அந்த நடிகை பதிலடி கொடுத்ததாகவும் பேசி இருந்தார்கள். இதில் தப்பா ஏதும் எனக்கு தெரியலங்க... பல பேஜ்ல இப்படி கண்டபடி கமண்ட் பண்ணிருந்தாலும் எப்படிடா இந்த பெண்கள் கண்டுக்காம இருக்காங்கன்னு நினைச்சிருக்கேன். ஒருவரிடமிருந்தாவது பதிலடி வந்ததே என மகிழ்ச்சி தான். ஆனா இதை பகிர்ந்த சில பேஜ்ல கீழே ஆண்கள் (??!! நம்ப முடியல) கொடுத்த கமன்ட் இருக்கு பாருங்க... சத்தியமா சொல்றேன், பாதிக்கு மேல் படிக்கவே முடியல, படிச்சதுல பாதிக்கு அர்த்தமே தெரியல. இப்படி கூடவாயா ஒரு பெண்ணை கெட்டவார்த்தை சொல்லி திட்டுவீங்க? காசுக்காக நடிக்க வந்தார்களே தவிற வேறு என்னப்பா அவர்கள் செய்கிறார்கள் என்று உங்களுக்கு நிச்சயம்?? என்ன வேண்டுமானாலும் பேசுவதா ஒரு பெண் பப்லிக்ல வந்தா? தன் உடலை பற்றி கமண்ட் பண்ண ஒருவரை தட்டிக்கேட்கும் உரிமை கூடவா ஒரு பெண்ணுக்கு மறுக்கப்பட்டிருக்கு நம்ம சமூகத்தில்? இப்படி நீங்க எல்லாம் பேசுறதால் தான் தனக்கு என்ன கொடுமை நடந்தாலும் வெளீயே சொன்னால் நம்மை தான் குறை சொல்வார்கள் என்று பல பெண்கள் நரகத்தில் வாழ்கிறார்கள், பல பெண்கள் தற்கொலை செய்கிறார்கள்.
இதை ஆணாதிக்கம் என்று சொல்ல எனக்கு மனமில்லை. ஆண் பெண்ணை விட ஒரு படி மேல், பெண் தனக்கு கட்டுப்பட்டவள் என்றெல்லாம் எண்ணினால் ஆணாதிக்கம் எனலாம். ஆனால் இது அப்படி அல்ல. அப்படி ஆணாதிக்கம் உள்ள ஆண்களை நானும் கண்டிருக்கிறேன், தமிழகத்தில் அதை காண்பது ஒன்று சிரமமும் இல்லை. ஆனால் அவர்கள் யாரும் ஒரு பெண்ணை இப்படி இழிவான வார்த்தைகளால் வசை பாடி நான் கேட்டதில்லை. தயவு செய்து உங்கள் தாய் தங்கை அக்கா மனைவி போன்றவர்களை எல்லாம் நீங்கள் உதாரணம் சொல்லி பேசாதீங்க... அது அவர்களுக்கு தான் அசிங்கம், பாவம் உங்களை உறவென சொல்வதால் அவர்கள் ஏன் அவமானப்படணும்? நிஜமாவே பெண்ணை மதிக்க தெரியாத மிருகங்கள் இன்று அதிகம் சுற்றுகிறதே!!! நீங்க இப்படி ஒரு பெண்ணின் படத்தில் கமன்ட் பண்ணிருக்கிறதை பார்த்தா உங்கள் அக்கா தங்கை மகிழ்வார்களா? நம்பமுடியவில்லையே. மனசாட்சியோட சொல்லுங்கப்பா... இந்த காலத்தில் உங்கள் வீட்டில் ஃபிட்டான சுடிதார், ஜீன்ஸ், டீ ஷர்ட், லெக்கிங் எல்லாம் போடும் பெண்கள் இல்லவே இல்லையா? எல்லோரும் தாவணியும் புடவையும் தான் போடுறாங்களா? அப்படி புடவையில் படம் போட்டால் கூட மற்ற பெண்களின் உடலைபற்றி கமன்ட் பண்ற ஆட்களையும் (ஆண்கள்னு சொல்லல... ஏன்னா அப்படி பட்டவர்கள் ஆண்களே இல்லை) பார்க்க தானே செய்யறோம்?? ஏன் இந்த வக்கிரம்?
தமிழர்களா இப்படி என்று கோபம் வருகிறது. பெண்ணியம் பேசுகிறவர்கள் ஆண்களுக்கு எதிரானவர்கள் அல்ல. பெண்களுக்கு துணையானவர்கள் மட்டுமே. பெண்களுக்கு தைரியமும், தன்னம்பிக்கையும், அவளுக்கு எதிரான சக்திகளிடம் இருந்து தன்னை காக்கும் துணிவையும் தருகிறவர்களே பெண்ணியவாதிகள். ஆனால் பெண்ணியம் பேசும் பெண்களை கண்டால் ஏன் விரோதி போல பார்க்க வேண்டும்? ஒரு பெண் சுய கவுரம் காத்தால் திமிர் பிடித்தவள் என்று சொல்லும் நம் சமூகம் என்று மாறும்? கடவுளே... முன் காலத்தை விட இன்று தான் பெண்களுக்கு எதிரான ஆட்கள் அதிகமாகிட்டாங்க போலிருக்கு. அடுத்த வீட்டு பெண் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசுவதா? தனக்கென வரும் போது தான் தெரியும் காய்ச்சலும் தலைவலியும்... நிச்சயம் இறைவன் புரியவைப்பான்.
எனக்கும் நிறையவே ஆண்கள் நண்பர்களாக இருக்கிறார்கள். கடவுள் அருளால் எல்லோரும் நல்ல குடும்பத்தை சேர்ந்த, பெண்ணை மதிக்க கற்றுக்கொடுத்த தாயின் பிள்ளைகள். பெண்களே... தயவு செய்து இப்படி பிள்ளையை வளர்த்துவிடாதீர்கள். இன்று நீங்கள் கற்றுத்தரும் பாடம் தான் நாளைய சமூகம். பெண்ணை மதிக்க கற்றுக்கொடுங்கள், மீறினால் தட்டிக்கேட்க தயங்காதீர்கள்... அது கணவனோ, பிள்ளையோ, அண்ணனோ, தம்பியோ... வீட்டில் உள்ள நாமே கேட்காமல் விட்டால் வேறு யார் கேட்பது?
Comments
வனி
நானும் அந்த போஸ்ட் பத்தி பார்த்தேன். ஆனா விளக்கமா படிக்கல. அதுக்கு பாராட்டின நடிகையும் சேர்த்து பேசறாங்க. எல்லா பெண்களும் வேலைக்கு போற மாதிரி அவங்களும் நடிகைன்னு ஒரு வேலை பார்க்கிறாங்க அவ்வளவுதான். பெண்கள் நடிக்கறது தவறான வேலைனா அப்ப நடிகர்களுக்கும் அதே பெயர்தானே வைக்க வேண்டும். நடிகைன்னு இல்ல பப்ளிக்ல எந்த பெண் பேசினாலுமே இது போல் கேவலமான பேச்சுக்கள் தொடர்கிறது. வெகு கேவலமாக அவள் உடல், ஒழுக்கம் சார்ந்தே பேசுகிறார்கள். அங்கு பதிவு போடணும்ன்னு நினைக்கும்போது இது போல் கேவலமானவர்கள் நம்மையும் நிச்சயமாக இப்படிதான் பேசுவாங்க.சமீபத்தில் ஒரு போஸ்ட் வந்தது லெக்கின்ஸ் போடலாமா ,வேண்டாமான்னு ஆனா இதுக்கு பதிவு போட்ட ஆண்கள் எல்லோருமே இதனாலதான் இந்தியாவை யாரும் மதிக்கறது இல்ல. நம்ம கலாச்சாரம் இவங்களால அழியுதுன்னு பேசறாங்க. அதற்கு சூடான பதில் குடுத்ததும்தான் என் மனம் அடங்கியது. பெண்கள் உடையால் தான் இவர்கள் பெருமை கொள்கிறார்களா. அவர்களிடம் வன்முறை காண்பிக்கும் போது எங்கே போகிறார்கள் இந்த கலாச்சாரத்தை கட்டி காக்கும் ஆண்கள்.
Be simple be sample
வனி
இனி வரும் நம் குழந்தைகளின் தலைமுறையை நாம் வளர்ப்பு முறையில் ஆண் பெண் பேதம் இல்லாமல் வளர்ப்பதுதான்.
Be simple be sample