ஃபுட் ஃபோட்டோகிரஃபி

பல‌ காலத்துக்கு முன் ஃபோட்டோக்ராஃபி பற்றி மன்றத்தில் எழுதி இருந்தேன். அதில் இப்போது சிலவற்றை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்ள‌ விரும்புகிறேன். யாருக்காவது, முக்கியமா இங்கே புதிதாக‌ படத்துடன் குறிப்புகள் அனுப்புகிறவர்களுக்கு பயன்படக்கூடும் என்ற‌ எண்ணத்தில். எனக்கு இதில் அனுபவம் இல்லை. ஒரு ஐடியா மட்டுமே இருக்கிறது.

ஃபுட் ஃபோட்டோகிராஃபி... உணவை படம் எடுத்து அது நல்லா வரணும்னா முதல்ல அந்த உணவை நல்ல ப்ரெசண்ட் பண்ணனும். அது தான் முதல் முக்கியமான விஷயம். :)

அதை பற்றி தான் முதலில் பார்க்க போகிறோம்...

1. உணவை எந்த பாத்திரத்தில் வைக்கிறோம் என்பது ரொம்ப முக்கியம். வெள்ளை பாத்திரங்கள் எல்லா வகையான உணவுக்கும் ஓரளவு நல்லாவே செட் ஆகும். ஒரு சிலதுக்கு தான் வெள்ளை சரி வராது. அதனால் முடிந்தவரை கருப்பு மற்றும் வெள்ளை பாத்திரங்கள் வாங்கலாம்.

2. மிகப்பெரிய அளவிலான பாத்திரங்கள் தவிர்ப்பது நல்லது. முடிந்தவரை சிறியவை அல்லது மீடியம் சைஸ் பாத்திரங்கள் உணவை கச்சிதமாக காட்ட உதவும்.

3. ட்ரான்ஸ்பரண்ட் கண்ணாடி பாத்திரங்கள் பானங்கள் வைக்க சரி, ஆனால் உணவு வகைகள் வைக்க சரி வராது. காரணம் கீழே உள்ள பேக்ரவுண்டை அப்படியே மேலே காட்டும்.

4. உணவை எடுத்த உடனே படமெடுப்பது நல்லது. அதனால் தாமதமாகாமல் இருக்க முன்பே என்ன பயன்படுத்த போறீங்க உணவை அலங்கரிக்க என முடிவெடுத்து விடுங்கள்.

5. உணவில் என்ன பயன்படுத்தி இருக்கீங்களோ அதையே முடிஞ்சவரைக்கும் அலங்கரிக்க பயன்படுத்துங்க. அதில் இல்லாத விஷயங்களை பயன்படுத்தினால் பார்க்க அத்தனை சிறப்பாக இருக்காது. உணவில் சேர்த்தவை அல்லது உணவுடன் சேர்த்து பரிமாறும் பக்க உணவு போன்றவை தான் உணவை ப்ரெசண்ட் பண்ண நல்ல சாய்ஸ்.

6. பாத்திரத்தில் வைக்கும் உணவின் அளவை எப்பவும் மிதமா பார்த்துக்கங்க. ரொம்ப குறைவா இருந்தாலோ, ரொம்ப அதிகமா இருந்தாலோ நல்லா இருக்காது.

7. உணவை அலங்கரிக்க பயன்படுத்தும் விஷயங்கள் கலர் காம்பினேஷனும் பாருங்க. உதாரணமா நல்ல வெள்ளை உணவின் மேலே வெள்ளையாவோ அல்லது லேசான நிறத்தில் உள்ளவையோ நன்றாக எடுப்பாக தெரியாது.

8. உணவு வைக்கும் தட்டு முடிந்தவரை டிசைன் இல்லாதவையாக இருப்பது நல்லது. சில உணவுகளை பரிமாற சற்று பெரிய அளவிலான தட்டுகள் தான் நன்றாக இருக்கும். அவற்றுக்கு அதையே பயன்படுத்துங்க. மொத்தத்தில் உணவின் அளவு தட்டில் மிகவும் அதிகமாக இருப்பது போல் தெரியாமல் இருக்க வேண்டும். தட்டில் கொஞ்சம் ஃப்ரீ ஸ்பேஸ் இருப்பது அவசியம்.

9. உணவை அலங்கரிக்க எதை பயன்படுத்தினாலும் அது ஃப்ரெஷா இருக்கும்படி பார்த்துக்கங்க. உதாரணமா கொத்தமல்லி, கறிவேப்பிலை இல்ல எதாவது காய்கறி... எதுவா இருந்தாலும் ஃப்ரெஷா இருக்கணும்.

10. அசைவ உணவு படமெடுக்கும் போது ரொம்ப சமைக்கப்படவும் கூடாது, குறைவாகவும் இருக்க கூடாது. ரொம்ப ஓவர் குக் ஆன உணவு ட்ரையா தெரிய கூடும். அது போல் உணவுகளை சற்று முன்பே எடுத்து படமெடுத்த பின் மீதம் சமைப்பது நல்லது.

11. உணவை படமெடுக்க போகும் டேபிலை சுத்தம் செய்து தயாராக வையுங்கள். முடிந்தவரை அந்த மேசை வெளி வெளிச்சம் படும் இடமாக ஏதும் ஜன்னலோரம்/கதவோரம் இருந்தால் நல்லது (தேவையான‌ வெளிச்சத்தை செயற்கையாக‌ கொடுக்க‌ முடியாதபோது).

12. உணவை இயற்கையான வெளிச்சத்தில் படமெடுப்பது எப்போதுமே நல்ல ஃப்ரெஷ் லுக் கொடுக்க உதவும்.

13. வெய்யில் ஒரு பக்கமிருந்து வந்தால் அடுத்த பக்கத்தில் நிழல் விழாமல் இருக்க சின்ன முகம் பார்க்கும் கண்ணாடிகளை வைக்கலாம். அதில் வெளிச்சம் பட்டு ரிஃப்லக்ட் ஆகி மீண்டும் அடுத்த பக்கத்தில் உணவில் விழும். நிழலை தவிர்க்க உதவும்.

14. கேமராவின் மேக்ரோ மோட் உணவை அழகாக தெளிவாக காட்ட உதவும்.

15. உணவை சமைக்கும் போது படமெடுத்தால் ஆவி படுவது வழக்கம். அது சாதாரணம் டிஜிடல் கேமராவின் லென்ஸையும் பாதிக்கும் விஷயம். அதனால் எப்போதும் அடுப்பின் மேல் உள்ள எக்ஸாஸ்ட் ஃபேனை ஆனில் வையுங்கள். ஆவி வெளியேரும் திசைக்கு எதிர் திசையில் இருந்து படமெடுங்கள். போதிய வெளிச்சம் சமையலில் பட்டாலே ஆவி தெரியாது, க்ளாரிட்டி கிடைக்கும்.

16. எக்ஸாஸ்ட் ஃபேன் இப்படி இல்லை எனில் அடுப்பை விட்டு எடுத்து படமெடுத்துவிட்டு மீண்டும் வைக்க முடியுமா பாருங்கள். இது எல்லா உணவு வகையிலும் சாத்தியமில்லை.

17. கடைசியாக பரிமாறிய உணவில் ஆவி வருவது போல் கொடுக்க விரும்பினால் பின்னால் ஃபோட்டோவில் தெரியாதபடி செயற்கையாக செய்யலாம். உதாரணமாக டீ கப் பின்னால் ஒரு ஊதுபத்தி வைத்தால் அதில் இருந்து வரும் புகை முன்னால் இருந்து படமெடுக்கையில் டீயில் இருந்து வருவது போல் தெளிவாக இருக்கும். இது உணவுக்கு ஃப்ரெஷ் லுக் கிடைக்க உதவும்.

18. உணவை பல விதமாக அலங்கரிக்கலாம்... தட்டில் பரப்பி வைத்தோ, ஒன்றன் மேல் ஒன்றாக வைத்தோ, டயகனலாக வைத்தோ... இப்படி பல வகைகளில் வைத்து முதலில் பாருங்கள். எப்படி வைத்தால் அந்த உணவு நன்றாக தெரிகிறதென கவனியுங்கள்.

19. பல படங்கள், பல ஆங்கிலில் இருந்து எடுத்துப் பாருங்கள். வெவ்வேரு திசையில் இருந்து படும் வெளிச்சத்தில் ட்ரை பண்ணிப் பாருங்க. ஒரு உணவுக்கு 10 - 20 படமெடுக்கலாம்... தப்பே இல்லை. கேமராவில் பார்த்ததை விட சிஸ்டமில் போட்டு பார்த்தால் நீங்கள் எதிர் பார்க்காத ஒரு ஷாட் கூட மிக அழகாக தெரிய‌லாம்.

20. நீங்க படமெடுக்கும் ஆங்கிலில் பல இருக்கலாம்... உணவு ஒன்றன் பின் ஒன்றாக அடுக்க‌ப்பட்டது, வருசையாக ஹாரிசாண்டலாக அடுக்கி வைப்பது, ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்குவது, படத்தில் பாத்திரத்தை சற்று சாய்வாக காட்டுவது, மேலிருந்து படமெடுப்பது இப்படி நிறைய வகை இருக்கு.... ட்ரை பண்ணுங்க.

21. முடிந்தவரை உணவை மேலிருந்து கீழே உள்ள தட்டை எடுப்பதை தவிருங்கள். அது எல்லா உணவுக்கும் அழகு சேர்க்காது. ஒரு சில மட்டுமே அப்படி எடுத்தால் நன்றாக இருக்கும். முடிந்தவரை உணவை எப்போதும் தட்டின் / பாத்திரத்தின் பக்க வாட்டிலேயே எடுங்கள். அதாவது தட்டை தரையில் வைத்து எடுத்தால் தரை மட்டத்திலேயே கேமரா இருப்பது நல்ல ஃபோகஸ் கிடைக்கும். சில உணவுகளுக்கு தட்டை விட சற்று மேலே இருந்து ஃபோகஸ் செய்வது நன்றாக இருக்கும். சற்று உயரமே... மொத்தமாக அப்படியே மேலிருந்து எடுப்பதை தவிர்க்கவும்.

22. ஃபோட்டோவில் எப்போதுமே பாலன்ஸ் இருக்க வேண்டும். அதாவது உணவு ஒரு கப்பில் இருக்கு என வைப்போம். அந்த கப் புகைப்படத்தில் இடது பக்கமாக இருக்கு என வைப்போம். வலது பக்கம் என்ன இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். ஒரே பக்கமாக உணவு இருந்தால் மற்றொரு பக்கம் படத்தை பாலன்ஸ் செய்ய ஃப்ரேமுக்குள் தெரியும் படி ஏதேனும் இருக்க வேண்டும். உதாரணமாக அது ஒரு சூப் பவுல் என்றால் பக்கத்தில் வெற்றிடத்தில் ஒரு சூப் கரண்டி அல்லது நாப்கின் டவல் / பெப்பர் அன்ட் சால்ட் போன்றவை வைக்கலாம். அது படத்தில் பாலன்ஸ் கிடைக்க உதவும். இங்கே பாலன்ஸ் என்பது ஃப்ரேமுக்குள் வரும் பொருட்கள் பரவலாக இருப்பதை குறிக்கும்.

23. ஒரு வேளை அந்த கப் படத்தில் முன்னால் இருந்து பின்னால் வெற்றிடம் தெரிந்தாலும் அதே போல் பின்னால் ஏதும் கொண்டு வரலாம். இப்படி படத்தில் தெரியக்கூடிய வெற்றிடங்களை சரியாக ஏதேனும் கொண்டு நிரப்புவது படத்துக்கு அழகும் சேர்க்கும்.

24. தட்டின் கீழே என்ன கலர் பேக்ரவுண்ட் என்பதை உணவு மற்றும் தட்டின் கலரை சார்ந்து முடிவு செய்யுங்க. பொதுவா நான் உணவு பளிச்சுன்னு தெரிய தட்டும், பேக்ரவுண்டும் வெள்ளையாக இருப்பதை விரும்புவேன். தட்டில் உள்ள‌ உணவு ஆரஞ்சு கலர் என்றால் தட்டு வெள்ளையாகவும், தட்டுக்கு கீழே பேக்ரவுன்ட் ஆரஞ்சாகவும் கூட‌ இருக்கலாம். அழகாகவே இருக்கும். சில நேரம் நிறைய வண்ணங்கள் இருந்தாலும் உணவின் மேல் கவனம் போகாது, டைவர்ட் செய்யும். அதனால் முடிந்தவரை குறைந்த வண்ணங்கள் பயன்படுத்துவது நல்லது.

உதாரணமா கேரட் அல்வா நிறத்தில் பேக்ரவுண்ட் இருந்தால் வெள்ளை தட்டில் கேரட் அல்வா வைக்கும் போது வெள்ளை மற்றும் அரஞ்சு நிறம் மட்டுமே இருக்கும். அழகாக இருக்கும். சில நேரம் உணவை பளிச்சென காட்டும் படி மற்ற எல்லாம் ஒரே நிறத்தில் இருப்பது அழகு தரும். உதாரணமா இதே கேரட் அல்வா அருகில் தட்டு, பேக்க்ரவுண்ட், நாப்கின் டவல், ஸ்பூன் என எல்லாம் ஒரே நிறமாக (ஆரஞ்சு கலர் அல்ல), ஏதேனும் காண்ட்ராஸ்டிங் கலராக வைத்து பாருங்கள்... அது வித்தியாசமான அழகு தரும். உதாரணமா எதாவது வித்தியாசமான வயலட் ஷேட்ஸ் / ப்ரவுன் ஷேட்ஸ். எல்லாம் ஒரே நிறமாக இருக்க கூடாது, ஒரே நிறத்தில் வித்தியாசமான ஷேட்ஸாக இருக்க வேண்டும். இவை உங்கள் படங்களில் வித்தியாசம் காட்டும், அழகு சேர்க்கும்.

5
Average: 5 (4 votes)

Comments

ரொம்ப அனுபவித்து எழுதியுள்ளீர்கள். நன்றி. என்ன? காய்கரி? காய்கறி தானே.
அன்புடன்
சுபா

be happy

அன்புள்ள‌ வாணி
காய்கரி ‍____ கரி= சாட்சி/ அடுப்புக்கரி (சார்கோல்)/ தீய்ந்து போதல்
கறி____ கறி= காய்கள்/ பல்லால் சுரண்டுதல்/
சிரியவை___சிரி== புன்னகை / சிரிய‌ வை==பேச்சு வழக்கில்பேசும்போது
(make him to laugh)
சிறியவை___ சின்னது
பரிமாறுதல்__ பரி==குதிரை/ சில‌ இடங்களில் ஒருவிதக் கூடைக்குப் பேர்
பறிமாறுதல்___ நம்மிடம் இருப்பதைப் பிறருக்குத் தருதல்/
பறி==பூக்களைப் பறித்தல்/ காய் பறித்தல்
பிறரிடம் இருந்து எதையாவது பிடுங்கிக் கொள்வது
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

சுட்டிக்காட்டியமைக்கு மிக்க‌ நன்றி :) பழைய‌ பதிவில் இருந்து சிலவற்றை வெட்டி ஒட்டியதால் பிழைகள் பல‌ கண்ணில் படவில்லை. மேலோட்டமாக‌ பார்த்து சிலவற்றை சரி செய்திருந்தேன், நீங்கள் சொன்ன‌ பின் அதையும் சரி செய்தாச்சு.

பரிமாறுவது.... இது மட்டும் சரி தானோ என்று இன்னும் சந்தேகம். அறுசுவையில் எல்லா குறிப்பிலுமே இப்படி தான் பார்க்கறேன். தப்பா நினைக்காதீங்க‌, நான் அறுசுவை வந்து தான் இந்த‌ அளவாவது தமிழ் தட்ட‌ பழகி இருக்கிறேன். என் ஆரம்ப‌ கால‌ குறிப்புகள் பதிவுகளை படித்தவர்களுக்கு தெரியும். அதனால் இங்கே பார்த்து பழகியதை வைத்து தான் எது சரி எது தப்புன்னு பாதி மாத்திக்கிட்டேன். அப்படி இங்கே பார்த்து "பரிமாறுவது" என்று பழகினது தான்... இமா குறிப்பை கூட‌ ஒரு பார்வை பார்த்தேன் (என் ரொம்ப‌ காலத்து தமிழ் குரு). குழப்பம் தான் இன்னும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இடுகையை இன்னும் படிக்கவே ஆரம்பிக்கவில்லை வனி. சனிக்கிழமை வரை நீளமாக நேரம் கிடைக்காது. அதன் பின் படிக்கிறேன்.

உணவைப் பரிமாறுவது சரியேதான் வனி; சந்தேகம் வேண்டாம். உணவு மட்டும் என்றல்ல - கருத்துப் பரிமாற்றம், அன்பைப் பரிமாறிக் கொள்வது எல்லாம் ப'ரி'மாற்றம் தான்.

சிலேடையாகப் பார்த்தால் பரி + மாற்றம் - குதிரையை மாற்றி... அந்த மாதிரி ஏதாவது சொல்ல விரும்பினாலும் பயன்படுத்தலாம்.

//என் ரொம்ப‌ காலத்து தமிழ் குரு// ;))) குருவா!!! பாவம் இமா, அழப்போறாங்க. :-))

‍- இமா க்றிஸ்

மெதுவா வந்து படிங்கோ இமா... :) சந்தேகத்தை தீர்க்கும் பதிவுக்கு நன்றி.

நான் குரு என்று சொன்னா நீங்க‌ அழத்தான் வேணும், என்ன‌ பண்ண‌ ;) சிஷ்யபுள்ள‌ ரொம்ப‌ மக்காச்சே. ஆனாலும் ரொம்ப‌ காலமா குச்சி காட்டி இங்கும், தனிப்பட்ட‌ மெயிலிலும் எனக்கு திருத்தம் சொல்லி இந்த‌ அளவேனும் தமிழ் தட்ட‌ காரணம் நீங்க தானே. அப்போ குரு தான். சீதாவிடமும் உங்களிடமும் திருத்தம் செய்து தர‌ சொல்லி எத்தனை காலம் வேலை வாங்கிருக்கேன். நான் வாத்தியாரை மதிக்கும் நல்ல‌ பிள்ளையாக்கும் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஃபுட் ஃபோட்டோகிராஃபி
அருமை வனி.
அந்த‌ 13 வெயில் நிழல் விஷயம் புது ஐடியா.
பத்தி ஏற்றுவது
கலர் பேக்ரவுண்ட்
வெற்றிடத்தை நிரப்புவது
இயற்கையான‌ வெளிச்சம்
எல்லாமே படமெடுத்து அனுப்பும் தோழிகட்கு உதவும்.
பரிமாறிய‌ தக்காளி சாதமும் சூப்பர்.:))

அன்புள்ள‌ வனிதா, முதலில் உங்கள் பேரையே மாற்றியதற்கு மன்னிக்கவும்.
வனி தா மன்னிப்பைத் தா(தரவும்). உங்கள் கருத்து பேரகராதிப் படி சரியானதே. யாழ்ப்பாணப் பேரகராதியை உங்கள் கேள்வியால் மீண்டும் அலச‌ வாய்ப்பு வந்தது.
இங்கு சிலரின் எழுத்தால் எனக்கும் சிக்கலான‌ சந்தேகம் அதை விவரிக்க இங்கு
இயலாது. நல்ல‌ வேளையாக‌ அழுத்தம் திருத்தமாக‌ சொல்லாமல் போனேன்.
யாழ்ப்பாணப் பேரகராதிப் படி
பரிமாறுதல்___உட்கொள்ளுதல்/ ஊடாடுதல்/ கொடுத்துமாறுதல்/ திரிதல்/
நடமாடுதல்/ பங்கிடுதல்
இமாவிற்கும் என் நன்றிகள் உரித்தாகுக‌. குழப்பியதற்கு மன்னிக்க‌.
கணிணி தட்டச்சுக்கும் சாதா தட்டச்சுக்கும் உள்ள‌ வேறு பாட்டால் ஆரம்பத்தில்
மிகவும் தொல்லைஅடைந்துள்ளேன், எனது பழைய‌ பதிவுகளில் அது தெரியும்.
அறுசுவையில் இந்த‌ தட்டச்சு முறையை அட்மின் அறிமுகப் படுத்தியபின் தான்
எனக்கு நிம்மதியாச்சு. ஆனாலும் சிலஎழுத்துக்கள் சேர்த்து அடிக்கும்போது
வேறு எழுத்துக்கள் உருவாவதை எப்படி சீராக்குவது என்று இன்னும் எனக்குப்
புரியவில்லை. கணிணி (எதையோ தெரியாமல் தட்டிவிட‌) திடீர் திடீர் என்று
சில‌ வித்தை காட்டும் போது நொந்து நூலாகிப் போவது கொடுமை.
வாழும் நாளெல்லாம் கற்கும் நாள்களே.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

நல்ல பதிவு வனி. பின்பற்ற முயற்சிக்கிறேன்.

Be simple be sample

மிக்க‌ நன்றி :) ஐடியாவை ட்ரை பண்ணிப்பாருங்க‌... சும்மாவே உங்க‌ படங்கள் அசத்தல் தான்... இருந்தாலும் நாங்களூம் ஐடியா கொடுப்போம்னு கொடுக்க‌ வேண்டியது தான் வனி ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மன்னிப்பா??? பெரிவர்கள் இது போல‌ இந்த‌ சின்ன‌ பிள்ளைகளிடம் கேட்பதே தப்பாச்சே :) அதனால் தான் நான் என் பெயரை திருத்தவும் சொல்லவே இல்லை. ஆங்கிலத்தில் இருக்கும் என் பெயரை வனி என்றாலும் வாணி என்றாலும் சரியே.

சிரியா தொடர் எழுதினேனே... சிரியா ஒரு சிறிய‌ நாடு என்று தலைப்பில் முதல்ல‌, சிரிய‌ / சிறிய‌ வித்தியாசம் அதனால் தெரியும். காய்கறியும் இவ்வளவு குறிப்பு அனுப்பியதால் தெரியும். ஆனாலும் இன்னுமே பலதுக்கும் ஸ்பெல்லிங் தெரியாம‌ தப்பு பண்ணும் ஆள் தான் நான் :) அதனால் தட்டச்சு பண்ணதில் பிழை என்று சொல்லவே மாட்டேன். பழைய‌ இழையில் அவசரத்தில் செய்த பிழையோ, அல்லது தெரியாமல் தான் செய்திருந்தேனோ... அதுவும் நினைவில்லை ;) இப்போது காபி பேஸ்ட் செய்த‌ போது மேலோட்டமாக‌ வாசித்தேனே அன்றி கவனமாக‌ பிழை திருத்தவில்லை. இதை சொல்வதில் எனக்கு பிரெச்சனையும் இல்லை... ஏன்னா என் பிழையை நான் ஒத்துகிட்டதால் தான் பலர் சொல்லி இன்று இவ்வளவு பெரிய‌ பதிவெல்லாம் ஓரளவு குறைவான‌ பிழைகளோடு போடும் அளவு வந்திருக்கேன். திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட‌ வேண்டியவை தான். சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரேவதிக்கா... மன்னிக்கணும் முதல்ல‌, அந்த‌ பகுதியில் நீங்க‌ கேட்ட‌ சந்தேகங்களுக்கு இன்னும் விடையளிக்காமல் சுத்திட்டு இருக்கேன் :( இன்று ஒரு முக்கிய‌ வேலை இருக்கு, நாளை நிச்சயம் பதில் தருகிறேன் ரேவ்ஸ். மிக்க‌ நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என் போட்டோகிராஃபி குரு நீங்க‌ தான். உங்க‌ குறிப்பில் படங்கள் அழகாக‌ இருப்பதை பார்த்து தான் நான் அந்த‌ பொசிஷனில் படம் எடுக்க‌ பழகிக் கொண்டேன். என் குறிப்பில் ஒரு சில குறிப்பின் படங்கள் நன்றாக‌ இருக்கும் என‌ எண்ணுகிறேன்.

அட‌ மக்கா 17 வது குறிப்பில் உள்ளது போல் தான் படம் எடுத்து மக்களை ஏமாத்தறீங்களா? இருக்கு ஆனா இல்ல‌ அதுக்கு அர்த்தம் இது தானா? அக்கா ஜஸ்ட் கிட்டிங். சூப்பர் போட்டோகிராஃபி டிப்ஸ். உபயோகமான‌ பதிவு. அதுவும் முக்கியமா நம் அறுசுவை நேயர்களுக்கு, கலைஞர்களுக்கு.

எல்லாம் சில‌ காலம்.....