பெண் குழந்தைக்கான‌ சேமிப்பு

அன்பு சகோதரிகளே,

எனக்கு சேமிப்பு மற்றும் திட்டமிடுதலில் சற்று ஆர்வம் அதிகம். இவை எனக்கு நிரம்ப‌ நாட்களாக இருந்துவரும் கேள்விகள். எனக்கு இரண்டு குழந்தைகள். (ஒரு ஆண் & ஒரு பெண்).

1. குழந்தை ஆண்/பெண் எதுவாக‌ இருந்தாலும் சேமிக்க‌ வேண்டியது அவசியம். ஆனால் நமது சமூகத்தை பொறுத்தவரை பெண் குழந்தைக்கு அதிகம் சேமிக்க‌ வேண்டும் என‌ நினைக்கிறேன். (Marriage expenses, Parental care while pregnancy etc)
உங்கள் கருத்து என்ன‌? அல்லது சிலர் சொல்வது போல் எதிர்காலம் வேறு மாதிரி இருக்குமா?

2. சரி, பெண் குழந்தைக்கு நகைகளுக்காக‌ சேமிப்பது என்றால் அதை பணமாக‌ சேர்ப்பது நல்லதா இல்லை தங்கமாகவே சேர்ப்பது நல்லதா? தங்கள் கருத்து என்ன‌?

3. அப்படி செய்தால் அது ஆண் குழந்தைக்கு பாகுபாடு பார்ப்பதாக‌ ஆகி விடாதா?

4. என் பெற்றோர்கள் எங்களுக்கு வீட்டு வரவு செலவு, கடன், முதலீடு ஆகியவற்றை வெளிப்படையாக‌ சொல்லி கொடுத்துதான் வளர்த்தார்கள். நானும் அப்படியே என் குழந்தைகளை வளர்க்க‌ விரும்புகிறேன். அவ்வாறு செய்யும் போது பெண்ணுக்கான‌ சேமிப்புகள் அதிகம் இருக்கும்பட்சத்தில், மகன் அதை எவ்வாறு எதிர்கொள்வார்? எங்களை கடன் வாங்க‌ வைத்து என் நாத்தனார்களுக்கு மாமியார் மாமனார் செலவு செய்யும் போது அது காலத்தின் கட்டாயம் என்று தெரிந்தாலும் நான் எரிச்சலடைவது போலதான் என் மருமகளும் நினைப்பாள்?

இந்த‌ ஏரியாவை சுற்றி எனக்கு நிறைய‌ கேள்விகள் இருக்கின்றன‌. இப்போதுதானே குழந்தைகளுக்கு 2 வயது ஆகிறது, இப்போது இதற்கு என்ன‌ அவசரம் என்று கேக்காதிர்கள். இந்த‌ விசயத்தில் உள்ள‌ தெளிவு புரிதல் இவற்றின் தாக்கம் என் இப்போதைய‌ சேமிப்பு, திட்டமிடல், குழந்தை வளர்ப்பு இவற்றில் இருக்கும் என‌ நம்புகிறேன். தங்கள் கருத்துகளை சொல்லுங்கள்.

1. //சிலர் சொல்வது போல் எதிர்காலம் வேறு மாதிரி இருக்குமா?// அப்படியேதான் இருக்கட்டுமே! உங்களுக்குப் பின் சேமிப்பை உங்கள் குழந்தைக்கு விட்டுப் போகப் போகிறீர்கள். சேமிப்பு என்பதில் பல வகை இருக்கிறது. :-)
இப்போது குழந்தைகளுக்கானதில் சிலவற்றை நறுக்கி... அதனால் மீந்து வருவதைச் சேமிப்பது. இதன் அவசியம் அந்தந்தக் குடும்பத்தைப் பொறுத்தது.
இப்போதும் கொடுக்கக் கூடிய சந்தோஷங்களெல்லாம் கொடுத்துக் கொண்டு சேமிக்கவும் முடிவது. இந்த இரண்டாவது பகுதியினர் சேமிக்காமல் இருக்க முடியுமா! அப்படியானால் செலவளித்தாக வேண்டும். தேவையற்ற செலவு அல்லது குழந்தையைக் கெடுக்கும் விதமாகவும் அமைந்துவும். அதை விட சேமித்து வைத்து பின்பு பயன்படுத்தக் கொடுக்கலாம். அதைத்தான் செய்யப் போகிறீர்கள். எதிர்காலம் எந்த மாதிரி இருந்தாலும் சேமிப்பு நல்லதே!

கேள்வி 3. - //அப்படி செய்தால் அது ஆண் குழந்தைக்கு பாகுபாடு பார்ப்பதாக‌ ஆகி விடாதா?// நீங்கள் பேசுவது உங்கள் சமுதாயத்தை மனதில் வைத்து அல்லவா? ஆகாது. உண்மையிலேயே நீங்கள் அப்படிச் செய்யவில்லையே! உங்கள் மகன் புரிந்துகொள்வார். தவிர... இதில் அவர் நலனும்தானே மறைந்திருக்கிறது. :-) தொடர்ந்து படியுங்கள்.

//நான் எரிச்சலடைவது போலதான் என் மருமகளும் நினைப்பாள்?// :-) ஒரு விஷயம் நீங்க நினைச்சுப் பார்க்காதது இருக்கு சொல்ல. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். நீங்க நிச்சயம் உங்கள் மகனுக்குச் சிரமம் கொடுக்கும் தாயாக இருக்க மாட்டீர்கள் உமா. உங்கள் எதிர்காலத்தைப் பற்றியும் ஒரு திட்டம் உங்களிடம் இருக்கும். அதற்காகவும் சேமித்து வைத்திருப்பீர்கள். உங்கள் மகளுக்காக ஏற்கனவே சேமிப்பு இருக்கும் பட்சத்தில்... மகனை என்ன கேட்கப் போகிறீர்கள்?

இருவருக்காகவும் சேமியுங்கள். அதே சமயம் உங்கள் முதுமைக்கும் சேர்த்துச் சேமியுங்கள்.

//2 வயது ஆகிறது, இப்போது இதற்கு என்ன‌ அவசரம் // இப்போதிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். வரும் வருடங்களில் இருவருக்கான செலவுகளும் அதிகரிக்கும். நேற்றுப் போலிருக்கும் விடயங்கள்... ஆகிப் பல வருடங்கள் ஆகிவிட்டது. காலம் ஓடுவது எப்படி என்பது புரிவதில்லை. சேமிப்புக்கு நல்ல நேரம் பார்க்கக் கூடாது.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்