பூமரா(ர)ங்கள்

எப்போதோ படித்த ஈழத்து எழுத்தாளரொருவரது கதையொன்று நினைவில் வருகிறது. பெயர்... ம்ஹும்! எத்தனை நினைத்தும் நினைவுக்கு வர மறுக்கிறதே! கதை... ஒரு தாதியைப் பற்றி ஆரம்பித்திருந்தது. நடுத்தர வர்க்கத்தினர், திருமணம், இப்படி சில விடயங்கள் மட்டுமே நினைவிலிருக்கின்றன. அந்த நாவலுக்குப் முதலில் தெரிவு செய்திருந்த பெயர், 'பூமராங்கள்' எனவும் அதை ஆங்கிலப்படுத்தி எழுதி மீண்டும் படித்தால், 'பூமரங்கள்' என்பது போல வருமென்பதால் அதைத் தவிர்த்து வேறு தலைப்பொன்றைச் சூட்டியதாகவும் தன்னுரையில் எழுத்தாளர் குறிப்பிட்டிருந்தார். இதைப் படிக்கும் இலங்கையர் யாருக்காவது நூலின் பெயர், ஆசிரியர் பெயர் தெரிந்திருந்தால் சொல்லி உதவுங்களேன்!

மேலே படத்திலிருப்பது... 'பூமராங்'. 2007ல் அவுஸ்திரேலியா சென்றிருந்தபோது என் சின்னவர் வாங்கி வந்தார்.

பூமராங் - சரியானபடி வீசினால்... ஆபத்தான ஆயுதம். தாக்க வேண்டியதைத் தாக்கிவிட்டு வீசியவரிடமே திரும்ப வரும். படத்திலிருப்பது அலங்காரப் பொருள் மட்டும்தான். வீசிப் பார்த்தது கிடையாது. :-)

இங்கு வருடத்தில் பாதிக்கும் குறைவாகத்தான் தோட்டம் செய்ய முடிகிறது. ஊரிலானால் விதம் விதமாகப் பூச்செடிகள், கீரைகள், பழங்கள் என்று வருடம் முழுவதும் தோட்டம் போடலாம்.

ஊரில், வீட்டில் ஒரு நித்திய கல்யாணிச் செடி இருந்தது. அதை மெல்லிய தண்டுடன் அப்படியே உயர வளர்த்து குடை போல செதுக்கி வளர்த்துவந்தேன். என் நோக்கம் எனக்கு மட்டும்தான் தெரியும். நான் சொல்லாமல் பார்ப்பவர்களாகப் புரிந்து கொண்டால்தான் என் நோக்கம் நிறைவேறியதாகக் கொள்ளலாம்.

என் சின்னவர் மகா துருதுரு. அன்று நான் உள்ளே ஏதோ வேலையாக இருந்தேன். வெளி வாயிலில் செபா அயல் வீட்டாரோடு பேசிக் கொண்டு இருப்பது உள்ளேயிருந்த எனக்குத் தெரிந்தது.

வேலையில் மும்முரமாக இருந்தாலும் எப்பொழுதும் என் ஒரு கண் சின்னவர் மேலும் அவர் செய்யும் காரியங்களின் மேலும் இருக்கும். திடீரென்று தோட்டத்தில் ஒரு அசைவு... நித்தியகல்யாணிச் செடி குடைசாய்ந்தது. எப்படியென்று எட்டிப் பார்க்க, சின்னவர் தூங்குமான் போல அதில் தொங்கிக்கொண்டிருந்தார். பாரம் தாங்காத செடி வளைந்து, கிட்டத்தட்ட முறிந்துவிடும் நிலைக்கு வந்திருந்தது.

எத்தனை காலம் சிரமமெடுத்து வளர்த்த செடி அது. இப்படி நொடியில் உடைக்கப் போகிறாரே என்று சின்னக் கடுப்பு வர, நின்ற இடத்திலிருந்தே கத்திவிட்டேன். வார்த்தை தப்பாகி வந்து விழுந்துவிட்டது. ;) அது வேறு ஒன்றுமில்லை, "யார்டா உன்னை மரத்தை முறிக்கச் சொன்னது?" என்றேன். அது வாசலில் நின்று பேசிய இருவருக்கும் கேட்க அப்படியே திரும்பிப் பார்த்தார்கள்.

ஓடிப் போய் அவசரமாக வளைந்த செடியை நிமிர்த்தப் பார்த்தேன். சின்னவர் எனக்குப் போட்டியாக இன்னும் சத்தமாக, "...அன்ரிதான்...," என்றார். "அவதான் பூ பிடுங்கித் தரச் சொன்னவ," ஒரே சமயம் இரண்டு பூமராங் பறந்தது. நான் அனுப்பியது எனக்கும் அன்ரி அனுப்பினது திரும்ப அவருக்கும். :-)

நான் கேட்ட ஒரு கதை இச்சமயம் நினைவுக்கு வருகிறது. ஒரு மரண வீடு. துக்கம் விசாரிக்க வந்திருந்தவர்களுள் ஒருவர் அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்து அவசரமாக எழ முயல, மேலே சுவரில் அமைந்திருந்த தட்டு ஒன்று தலையில் இடித்துவிட்டதாம். அடி பட்டவர் வலி கொடுத்த கோபத்துடன் சட்டென்று, "எந்த மடையன் இதை இங்க கட்டி வைச்சது?" என்றிருக்கிறார். மரணித்தவர் கை தேர்ந்த மேசன். அது அவர் பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடு. :-)

இன்னொரு கதை. ஒரு திருமணப் பதிவு நிகழ்ச்சி. சாட்சிக் கையொப்பமிடச் சென்றவரது பெயர் வாயில் நுழையச் சிரமப்படும் விதமான பெயர். நான் அந்தப் பெயரில் வேறு யாரையும் கேள்விப்பட்டதில்லை இதுவரை. பதிவாளர் திரும்பத் திரும்பப் பெயரைக் கேட்டு, எப்படி எழுதுவது என்றும் விசாரித்து எழுதியிருக்கிறார். ஒரு ஆர்வக் கோளாறில், "தம்பிக்கு இந்தப் பேரை யார் வைச்சது? அப்படியென்றால் என்ன கருத்து?" என்றிருக்கிறார். ஏற்கனவே பலர் பார்வைபட நொந்து நூலாகியிருந்த சாட்சி, "பேர் வைச்ச மடையன் இந்தா நிற்கிறார், அவரையே கேளுங்க," என்றாராம். முன்னால் நின்றிருந்தவர்... அவரது தந்தையார். :-)

5
Average: 5 (2 votes)

Comments

நல்ல‌ நகைச்சுவை கதைகள்... பிடித்தது :) நான் நல்ல‌ மூட்ல‌ இருந்தா பிள்ளைகளை குர‌ங்குன்னு திட்ட‌ மனசு வராம‌ குர‌ங்குகுட்டி என்பேன்... இப்போ கொஞ்சம் வளர்ந்துட்டாங்க‌ தானே... "நீ மம்மி மன்கியா?"நு கேட்குறாங்க‌ ;) எனக்கே திரும்ப‌ வருது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பூமராங். இது சின்ன வயசுல ஜன்கிள் கார்ட்டூன் ல மோங்லி யூஸ் பண்ணுவான், அப்ப பார்த்தது.அதோட இங்க போட்டோல பார்க்கிறேன். அழகா இருக்கு. நமக்கு எல்லாமே பூமராங்கா திரும்பி வருது. எதை கொடுக்கிறோமோ அதுவே. ;)

Be simple be sample

//இது சின்ன வயசுல// அது சரி! இப்போ 60 ஆச்சுல்ல ரேவ்ஸ்சுக்கு!! ;)))

//நமக்கு எல்லாமே பூமராங்கா திரும்பி வருது. எதை கொடுக்கிறோமோ அதுவே. ;)// ஷா!! தத்துவம்! தத்துவம்! ;))))

போஸ்ட் எப்பவோ தட்டினது. இன்னொரு பெரிய பூமராங் இருந்துது. அதைத் தேடினேன், தேடினேன், தேடிக்கொண்டே இருந்தேன். அறுசுவைக்கு முகம் காட்ட வெட்கப்பட்டு எங்கோ காணாமல் போய்விட்டது. ;D ஒரு தடவை, அவுஸ்திரேலியப் பழங்குடியினர் பற்றிக் கற்பிக்கும் போது பாடசாலைக்கு எடுத்துப் போனேன். அங்கேயே பெட்டியில் விட்டிருக்க வேண்டும்.

நேற்று இந்த குட்டி பூமராங் கண்ணில் பட, படமெடுத்தாயிற்று. விட்டால் படம் எந்த நினைவுக் குச்சியில் இருக்கிறது என்பது நினைவிலிருந்து மறைந்து விடும். ;)))

‍- இமா க்றிஸ்

;))) நீங்க நல்ல மம்மி. அதே கேள்வி வேற மாதிரி வந்திருக்கு இங்க. :-) பெரிய மனுஷர் இப்போ. அவங்க கதையெல்லாம் பரப்புறது நல்லா இருக்காதுன்னு... நோ பகிர்வு. ;D

‍- இமா க்றிஸ்

//இப்போ 60 ஆச்சுல்ல ரேவ்ஸ்சுக்கு!!// ‍ ஹஹ்ஹஹா.... சிரிச்சு முடியலப்பா!! ரேவ்ஸ்... இதுவரை நீங்கள் சிக்காமல் இருந்தது இமாகிட்ட‌ மட்டுந்தேங்... இப்போது அங்கும் சிக்கிவிட்டீர்கள் போலிருக்கிறதே!!! அடியேன் மிகுந்த‌ மகிழ்ச்சியில் இருக்கிறேன். உண்மை உலகுக்கு தெரிந்து போயிற்று.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பூமராங் நானும் வீசி முயற்சித்திருக்கிறேன். ஆனால் ஒருமுறை கூட அது என் கைக்கு திரும்ப வந்தது இல்லை. ஆனால் நான் எங்க வீட்டு குட்டீஸ்க்கு சொன்னது, செய்தது எல்லாம் பலமுறை எனக்கே ஆப்பு வச்சிருக்கு. பல்பு வாங்கறதுதான் நமக்கு கை வந்த கலை ஆச்சே :)

ரேவ்ஸ் ஐயம் ஹேப்பி மக்கா ;)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இமா நல்ல பதிவு. நிஜ பூமராங்கின் வலியை விட, வீசும் வார்த்தைகளின் வலி கொடுமையானது. ஒரு வார்த்தையால் பிரிந்த குடும்பங்கள் நிறைய உண்டு. இதை லாவகமாக பேசி புரிய வைத்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

/இது சின்ன வயசுல// அது சரி! இப்போ 60 ஆச்சுல்ல ரேவ்ஸ்சுக்கு!! ;)))// அப்ப ரொம்ப குட்டி பாப்பாவா இருந்தேன். இப்ப பெரிய பாப்பாவா மாறிட்டேன். அதான் சொன்னேன். இப்பவும் மோங்லி பார்க்க பிடிக்கும். மனநிலை மட்டும் அதே.

என் வீட்டு கடைகுட்டி சொல்வார். அம்மா நான் சின்ன வயசுல அப்படின்னு பேச்சு ஆரம்பிப்பார். இப்போது அவருக்கு வயது 6. அவர் கூட பழகி எனக்கும் இப்படி வந்துடுச்சோ.

Be simple be sample

அடப்பாவிகளா. நாம சிக்கி சின்னாபின்னமா ஆகறதுல எம்புட்டு சந்தோஷம்.

Be simple be sample

//லாவகமாக பேசி// ஹா! போச்சுடா! :-) சும்மா சும்மா ஊகிச்சு வைக்கப்படாது. இமா ட்ராஃப்ட்ல ஏகத்துக்கும் போஸ்ட் தட்டி வைச்சிருக்கேன். படம் கிடைக்கிற ஆர்டர்ல பப்ளிஷ் பண்ணிருறது. பூமராங் சுவனியர் கண்ணில பட்டது மட்டும்தான் போஸ்ட்டுக்குக் காரணம். நம்புங்க.

மைண்ட் வாய்ஸ்.. ஹ்ம்! அறுசுவைக்கு நாலு நாளைக்கு லீவு போட்டுரலாமா இமா!!

‍- இமா க்றிஸ்

இமா எது சொன்னாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும் என்று நம்புபவள் நான்.
இமா எனக்கு பிடித்த வாசகம் அதை பின்பற்றுபவளும் தான். "நீங்கள் எதைச் செய்கிறீர்களோ (நன்மை/தீமை) அது இரு மடங்காக திருப்பி வரும்."
இமா ஒன்றுக்கு இரண்டு பூமராங் :)))

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

அன்பு இமா
// "யார்டா உன்னை மரத்தை முறிக்கச் சொன்னது?" // சின்னவர் தானாக‌ அந்தத் தவறைச் செய்யமாட்டார் என்ற‌ நம்பிக்கையா?
ஹா... ஹா...
எதைக் கொடுக்கிறோமோ அதுவே திரும்பக் கிடைக்கிறது. பூமராங் சக்தி வாய்ந்த‌ ஆயுதம் மட்டுமல்ல‌.. சக்தி வாய்ந்த‌ வார்த்தையும் தான்....

நான் இந்த அறுசுவைக்கு புதுசு உங்க கதை நன்றாக உள்ளது அக்கா.இது வாழ்க்கைக்கு மிகவும் பொருத்தமானது.

இன்றுதான் உங்கள் பதிவைப் பார்த்தேன். ஐந்து வருடங்களாக அறுசுவை பார்க்கிறீர்களா? நல்வரவு _()_ :‍)

//இது வாழ்க்கைக்கு மிகவும் பொருத்தமானது.// சும்மா எதையாவது தட்டி வைக்கிறேன். இங்கு உள்ள இடுகையில் சின்னதாக‌ நான் கற்ற‌ ஒரு பாடம், அவ்வளவுதான். :‍)

‍- இமா க்றிஸ்

//இமா எது சொன்னாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும்// அவ்வ்!! ;‍) நம்பி ஏமாந்துர‌ப் போறீங்க‌. :‍)

//"நீங்கள் எதைச் செய்கிறீர்களோ (நன்மை/தீமை) அது இரு மடங்காக திருப்பி வரும்."// உண்மைதான்.

‍- இமா க்றிஸ்

//சின்னவர் தானாக‌ அந்தத் தவறைச் செய்யமாட்டார் என்ற‌ நம்பிக்கையா?// :))) யோசிக்காமல் சொன்ன‌ வார்த்தை அது நிகி. அதுக்கு உடனேயே அனுபவிச்சாச்சு. :‍)

‍- இமா க்றிஸ்