டிபனா அரிசி
சாதமா அரிசி
இனிப்பா, காரமா அரிசி
இப்படி எல்லா அயிட்டமும் அரிசியை வைத்தே தயாரிக்கிறோம். அரிசியின் உபயோகத்தைக் குறைத்து அந்த இடத்தில் சிறுதானியத்தை வைக்கலாமே.
சிறுதானியம் மருந்து அடிக்காமல் இயற்கையான முறையில் விளைவிக்கப்படும் ஒரு புன்செய் பயிர் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. இதில் பூச்சிக்கொல்லிகள் இருக்காது. ரசாயன உரமும் கிடையாது. இது ஒரு ஆர்கானிக் உணவாகும்.
சரி இந்த மாத மளிகை லிஸ்டில் இட்லி அரிசியை நீக்கிவிட்டு அந்த இடத்தை சிறுதானியத்தால் நிரப்புங்கள்.
சிறுதானியத்தில் செய்யப்படும் சுவையான, எளிமையான, ஆரோக்கியமான சில சிற்றுண்டி வகைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
முதலில் கம்பு ( pearl millet)
1, கம்பு புட்டு
கம்பு _ ஒரு கிலோ
காணம் _ கால் கிலோ (கொள்ளு)
சுக்கு _ நான்கு துண்டு
கம்பை சுத்தப்படுத்தி சிறிது சிறிதாக வாணலியில் இட்டு படத்தில் காட்டியபடி வறுத்துக் கொள்ளவும். காணத்தை வறுத்து சுளவில் கொட்டி ஒரு பாத்திரத்தால் நசுக்கி உடைத்து தோல் நீக்கி பின்னர் புடைத்து பருப்பை மட்டும் எடுத்துக் கொள்ளவும். இதோடு சுக்கு சேர்த்து மிஷினில் கொடுத்து சற்று பரபர என அரைத்து பத்திரப்படுத்தவும்.
தேவையான மாவில் உப்பு, தண்ணீர் தெளித்து பிசிறிக் கொள்ளவும். பின் மிக்சியில் ரெண்டு செகண்ட் ஓட்டி எடுத்தால் மாவு கட்டிகளின்றி பொலபொலவென்று மிருதுவாக உதிரும்.
அதை ஆவியில் வேக வைத்து எடுக்க சுவையான புட்டு ரெடி.
காணம் ரத்தக் குழாயில் படிந்திருக்கும் கொழுப்பை அகற்றும் வல்லமை படைத்தது.
கவனிக்க : அரிசி மாவை விட கம்பு மாவுக்கு சற்று தண்ணீர் அதிகம் தெளித்து பிசிறிக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் புட்டு வறண்டு இருக்கும்.
இதே மாவில் கொஞ்சம் சிறுபருப்பு வறுத்துப் போட்டு தேங்காய் துருவல், வெல்லம் சேர்த்து கொழுக்கட்டை செய்யலாம்.
எங்க பாட்டிம்மா இதே மாவில் எள் வறுத்துப் போட்டு வெல்லப்பாகு விட்டு உருண்டை பிடித்து வச்சிருவாங்க. எண்ணெயில்லாத ஆரோக்கியமான கம்புமாவுருண்டை. செய்து பாருங்க. சுவையான இனிப்பு ரெடி.
2, ராகி தோசை (finger millet )
இது அறுசுவைத் தோழிகள் அறிந்தது தான் எனினும், எனது செய்முறையைக் கூறுகின்றேன்.
கேழ்வரகு மாவை மிஷினில் நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
காலையில் ஐம்பது கிராம் உளுந்தம் பருப்பை நீரில் ஊறப்போடுங்கள். மதியம் மிக்சியில் போட்டு நன்கு அரைக்கவும். இதோடு ஒரு டம்ளர் கேழ்வரகு மாவைக் கலந்து உப்பு போட்டு புளிக்க விடுங்கள். ஆறு மணி நேரத்தில் நன்கு புளித்துவிடும். இரவு உணவுக்கு சுவையான மொறுமொறுப்பான ராகி தோசை ரெடி. வேலையோ எளிது. சுவையோ பெரிது.
படத்திலுள்ள ராகி தோசை என் பெண்ணுக்காக கோன் ஷேப்பில் மடித்து பரிமாறியதாக்கும்.:)
3, வரகு இட்லி (koda millet)
இட்லியை மட்டும் வரகரிசியில் செய்தால் தான் வெள்ளை வெளீரென அரிசி இட்லியைப் போல தோன்றும்.
வரகு _300 கிராம்
இட்லி அரிசி _ 100 கிராம்
அவல் _ இரண்டு மேசைக்கரண்டி
இவற்றை ஒன்றாக ஊறப்போடவும்
உளுந்தம் பருப்பு _ 100 கிராம்
வெந்தயம் _ கால் ஸ்பூன்
இவற்றை ஒன்றாக ஊறப்போடவும்.
கட்டாயம் நான்கு மணி நேரம் ஊறவிடுங்கள். அப்போது தான் இட்லி மிருதுவாக வரும். முதலில் உளுந்தை அரைத்து வழித்து எடுக்கவும். பின் அரிசி கலவையை அரைத்து இரண்டையும் சேர்த்து உப்பு சேர்த்து பிசைந்து புளிக்க வைத்து மறு நாள் இட்லி வார்க்க பஞ்சுப் போன்ற இட்லி ரெடி.
மீதி மாவில் மாலையில் தோசை வார்க்கலாம்.
கவனிக்க : வரகரிசி அரைக்கும் போது தண்ணீர் அதிகம் இழுக்காது. கவனமாக பார்த்து குறைவான அளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். ஃபிரிஜில் வைத்து மீதி மாவை உபயோகிக்க இயலாது. எனவே, ஒரு நாள் உபயோகத்திற்கு மட்டும் மாவு தயாரிக்கவும்.
4, பெசரெட்
வரகு _ அரை டம்ளர்
சிறுபயறு _ ஒரு டம்ளர்
ஊறவிட்டு அரைத்து ஒரு மணி நேரம் கழித்து ஆந்திராவின் பெசரட் வார்க்கலாம்.. நடுவில் ரவா உப்புமா வைத்து மடித்து எடுக்க ஹோட்டல் ரோஸ்ட் போல அசத்தலா வரும். வரகு இதற்கு பொருத்தமா இருக்கும்.
5, குதிரைவாலி ஆப்பம் ( Banyard millet)
http://www.arusuvai.com/tamil/node/29379
இதே முறை தானுங்க. பச்சரிசிக்குப் பதிலா குதிரைவாலி அவ்வளவு தான். சுவையிலோ மிருதுத் தன்மையிலோ சற்றும் குறையாமல் பூப்போல இருக்கும்.
6, தினை பணியாரம் ( Foxtail millet)
தினையரிசி _ முக்கால் டம்ளர்
பச்சரிசி _ கால் டம்ளர்
மூன்று மணி நேரம் ஊறவிட்டு தேங்காய் துருவல் இரண்டு மேசைக்கரண்டி போட்டு மிக்சியில் நன்கு அரைக்கவும். ஏழு மணி நேரம் புளிக்க விடுங்கள். பின், ஒரு சிறிய வாழைப்பழம், வெல்லம், சோடா உப்பு கலந்து குழிப்பணியார கல்லில் சில துளி நெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
வெளியே மொறுமொறுப்பாகவும் உள்ளே மிருதுவாகவும் மிக்க சுவையான பணியாரம் ரெடி. எளிமையான முறையில் செய்து விடலாம். படத்தைப் பார்த்தாலே மிருதுத்தன்மை புரியும்னு நினைக்கேன் :)
7, சாமை (Little millet)
சாமையரிசியில் வெண்பொங்கல் செய்ய பொருத்தமாக இருக்கும். பச்சரிசிக்குப் பதில் சாமை அவ்வளவுதான்.
இதே சாமையரிசியில் சர்க்கரைப் பொங்கல் செய்யலாம். தாராளமாக நெய் விட்டு செய்தால் சுவையோ பன்மடங்கு.
8, சோள அடை (Sorhum)
வெள்ளைச் சோளம் _ 2 டம்ளர்
கடலைப்பருப்பு _ 1 டம்ளர்
துவரம்பருப்பு _ 1 டம்ளர்
உளுந்தம்பருப்பு _ கால் டம்ளர்
மி. வற்றல் _ 10
காயம் சிறிது
ஊற வைத்து அரைத்து உள்ளி, கறிவேப்பிலை சேர்த்து உடனேயே அடை சுடலாம். மாவை நீர்க்க வைத்து மெல்லிய அடைகளாக எண்ணெய் விட்டு வார்க்க சூப்பர் சுவை போங்க.
காலை, இரவு உணவுக்கு அரிசியை தவிர்த்து சிறுதானியத்துக்கு மாறலாம். டிபனுக்காக அரிசி வாங்குவதை தவிர்த்து விடலாம்.
எங்க வீட்ல இப்போ சிறுதானிய டிபன் தான். அப்போ உங்க வீட்ல......
பின் சேர்க்கை :
எனது கம்பு புட்டு குறிப்பை செய்து பார்த்து அறுசுவைக்கு அனுப்பிய அன்புத் தோழி ரேவாவுக்கு நன்றி:))
http://www.arusuvai.com/tamil/node/32040 கம்பு புட்டு
http://www.arusuvai.com/tamil/node/32045 கேழ்வரகு தோசை
http://www.arusuvai.com/tamil/node/32053#comment-352936 வரகு பெசரட்டு
http://www.arusuvai.com/tamil/node/32065#comment-353013 சோள அடை
http://www.arusuvai.com/tamil/node/32073 தினைப் பணியாரம்
http://www.arusuvai.com/tamil/node/32132 கம்பு சாதம்
http://www.arusuvai.com/tamil/node/32145 குதிரைவாலி ஆப்பம்
http://www.arusuvai.com/tamil/node/32158#comment-353536 (கம்பு ஜூஸ்)
http://www.arusuvai.com/tamil/node/32299#comment-354438 (தினையரிசி கீரை அடை)
http://www.arusuvai.com/tamil/node/32353 (தினை பயறு இனிப்பு கஞ்சி)
http://www.arusuvai.com/tamil/node/32363 ( வரகு வெள்ளரி தோசை)
Comments
நிகி & ரேவ்ஸ்
நல்ல குறிப்புகள் நிகி :)
ரேவ்ஸ்... நேரம் கிடைச்சா இவற்றை ஒவ்வொன்றாக செய்து ஃபோட்டோவோட அறுசுவைக்கு அனுப்ப இயலுமா பாருங்கள் ப்ளீஸ் :) நிகி கோச்சுக்க மாட்டாங்க.
பலருக்கும் பயன்படும் குறிப்புகள் பகுதியில் இருந்தால்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
nikila thoozhi
wow... miga arumai. namma ooru saththu miguntha arisigalin variety dishes..
nikila
Naanum veetil siruthania unavukal seiven. anal neengal pala vagaikal thanthu asathi ullerkal. Varakarisilum pongol super a irrukum thozhi.
நிகி
அழகு தமிழ் & ஆரோக்கியமான குறிப்புகள். 5* :-)
- இமா க்றிஸ்
நிகி&வனி
எல்லா குறிப்பும் உபயோகமான ஆரோக்கியமான குறிப்புகள். மேலும் இது போல பல குறிப்புகள் குடுங்க. சூப்பர்.
வனி முயற்சி செய்யறேன்ப்பா.
Be simple be sample
நிகி அக்கா,
ஆஹா கலக்கிட்டீங்க போங்க,
எல்லா குறிப்பும் சூப்பர். ரொம்ப ஈசியா இருக்கு.
சிறு பயிறுனா பாசி பயிறு தானே, அப்புறம் நிகி அக்கா ஒரு டிஸ்சுக்கும் போஸ்ட்ல நம்பர்ஸ் அல்லது கோடு போட்டா இன்னும் நல்லா இருக்கும்.
(எனக்காக சிறு தானிய டிஷ் போஸ்ட் போட்டதுக்கு ஒரு ஸ்பெசல் தாங்க்ஸ்)
புக்மார்க் செய்தாச்சு.
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
Anyone give me recipe for kalyana veetu thakkali kuruma
Anyone give me recipe for kalyana veetu thakkali kuruma
Amirtha
கோச்சுக்கறதா?? சந்தோஷமே
அன்பு வனி
பாராட்டுக்கு மிக்க நன்றி.:)
//ரேவ்ஸ்... நேரம் கிடைச்சா இவற்றை ஒவ்வொன்றாக செய்து ஃபோட்டோவோட அறுசுவைக்கு அனுப்ப இயலுமா பாருங்கள் ப்ளீஸ் :) நிகி கோச்சுக்க மாட்டாங்க.//
கோச்சிக்கறதா ???? என்னோட குறிப்பு ரேவாவின் கைவண்ணத்தில் வருகை புரிந்தால் ரொம்பவே சந்தோஷப்படுவேன்.
//பலருக்கும் பயன்படும் குறிப்புகள் பகுதியில் இருந்தால்//
ஆம் வனி... நீங்க சொல்லுவீங்கன்னு தெரியும். எனவே, உங்களுக்காக இன்று ரெண்டு குறிப்பை அனுப்பிய பின்னரே உங்களுக்கு பதில் தட்டுகிறேன்.
மீதியை நம்ம ரேவா ரெடி பண்ணி புட்டு புட்டு வைக்க இருக்காங்க.:))
நன்றி ரேவா:)
வெரைட்டி டிஷ்
அன்பு நிஷா ஷாகுல்
பாராட்டுக்கு மிக்க நன்றி தோழி:)
"வாவ்" சொன்னா போதாது. அவசியம் செய்து பார்க்கணும்...
வரகரிசிப் பொங்கல்
அன்பு சிவரஞ்சனி
ஒவ்வொரு தானியத்திலும் ஒரு உணவு என்ற முறையில் சாமையில் பொங்கல் வைக்க சொன்னேன்.
இந்த வாரமே வரகரிசியிலும் நீங்க சொன்னபடி பொங்கல் செய்து பார்க்கிறேன்.
குறிப்புக்கு நன்றி தோழி:)
5 * சாக்லேட்
அன்பு இமா
//அழகு தமிழ் & ஆரோக்கியமான குறிப்புகள். 5* :-)//
அழகு தமிழ்... ஆகா !! பாராட்டுக்கு நன்றி.
ஃபைவ் ஸ்டாருக்கும் மிக்க நன்றி பா:))
புட்டு புட்டு வைக்கணும்.
அன்பு ரேவா
பாராட்டுக்கு மிக்க நன்றி.
முயற்சி செய்றேன் நு சொன்னா விட மாட்டோம்.
முதல்ல கம்பு புட்டுல இருந்து ஸ்டார்ட் பண்ணி வரிசையா அசத்துவீங்கன்னு எதிர்பார்க்கிறேன்.
உங்க கைவண்ணம் காண ஆவலுடன் இருக்கிறோம்:))
சிறுபயறும் பாசிப் பயறு ஒன்றே
அன்பு சுபி
பாராட்டுக்கு நன்றி.
ஈசியா இருக்குன்னு சொன்னதோடு நில்லாமல் செய்து பார்க்கணும்.
அப்புறம் சிறுபயறும் பாசிப்பயறும் ஒண்ணுதான் சுபி.
பாசிப்பயறு பயறு வகைகளின் ராணின்னு சொல்லுவாங்க. அதிலே, அத்தனை சத்து இருக்கிறது.
நான் பெசரெட்டு செய்யும் போது முந்தின இரவே ஊறப்போட்டு விடுவேன். காலையில் அரைக்க எடுத்தால் சிலவற்றில் லேசா முளை கூட வந்திருக்கும். அது ரொம்பவும் நல்லதுன்னு சொல்லுவாங்க.
நீங்க சொன்ன மாதிரி ஒவ்வொரு டிஷ்ஷுக்கும் நம்பர் போட்டாச்சு சுபி.
பதிவுக்கும், புக் மார்க் செய்ததுக்கும் நன்றி :))
லின்க்
அன்பு அமிர்தப்பிரியா
www.arusuvai.com/tamil/node/767
http://www.arusuvai.com/tamil/node/31050
http://www.arusuvai.com/tamil/node/7434
லின்க் போதுமா ??
தக்காளிக் குருமான்னு தேடுங்க . இன்னும் வரும்...................
நிகி
சூப்பரா இருக்கு இந்த வலைபதிவு. நிகி னாலே கலக்கல் தானே? இந்த முறையும் கலக்கிட்டீங்க. அருமையா இருக்கு. முடிந்தால் நானும் சில சிறுதானிய குறிப்புகளை செய்து அனுப்புகிறேன்.
நான் என் வீட்டில் வரகு சாமை தினை மூன்றும் கலந்து காய வைத்து மாவு அரைத்து வைத்துள்ளேன். இதனுடன் சிறிது உளுந்து மாவு உப்பு கலந்து இரவில் தோசையாக வார்ப்பது வழக்கம். சில நேரம் கேழ்வரகு மாவும் கலப்பது உண்டு. செரிமானம் எளிதாக இருப்பதால் அதிகமாக இரவில் சிறுதானிய தோசை தான்.
இந்த மாவு மிக உபயோகமாக உள்ளது. தேவைபடும் போது இதில் தண்ணீர் தெளித்து புட்டும் செய்கிறேன்.
எல்லாம் சில காலம்.....
சிறுதானிய மாவு
பாசத்திற்குரிய பாலா
பதிவிட்டு பாராட்டியமைக்கு நன்றி.:))
வரகு, சாமை, தினை கலந்த மாவா ?
சூப்பர். எல்லா சத்துக்களும் செறிந்தது ஆச்சே... வறுக்காமல் அப்படியே அரைக்கலாம் தானே. நானும் தயாரிக்கிறேன்.
எளிமையான எண்ணெய் இல்லாத சிறுதானிய குறிப்புகளை அனுப்புங்க பாலா. எல்லோருக்கும் பயன்படும்.
அன்பு ரேவா
http://www.arusuvai.com/tamil/node/32040
பதிவைப் படித்த வேகத்தில் கம்பு புட்டு செய்து குறிப்பு அனுப்பியதற்கு நன்றி.
புட்டு பார்க்கவே சூப்பரா வந்திருக்கு. குட்டீசுக்கு பிடிச்சதா? சொல்லுங்க....
நன்றி ரேவா:))
niki
Wow.. ningalum seydhu anupirukingalaa?? Great. Enna recipes seydhu anupirukinganu sollidunga, yaarum repeat pannidaama. Revs recipe linka post'laye edit panni potudunga. Padikiravanga adhai paarthaa seyya sulabama irukkum. Unga iruvar kuutu muyarchiyil attagasama kurippugal engalukku kidaippadhu magizchi. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
அன்பு வனி
நான் அனுப்பிய கேழ்வரகு உளுந்து தோசை வந்துவிட்டது.
இன்னும் வரகு பெசரெட்டு அனுப்பியிருக்கேன். (என்ன டீமுக்கு கொஞ்சம் எடிட்டிங் வேலை இருக்கும்னு நினைக்கேன்.)
ரெண்டு லின்க் ஐயும் போஸ்ட்ல போட்டுட்டேன் வனி.
உங்களோட அக்கறையான பதிவுக்கு மிக்க நன்றி வனி:))
சிறுதானியம்
அழகான குறி்ப்பு அக்கா
இதுபோல் சிறுதானிய உணவுகள் பற்றிய குறிப்பு௧ள் மேலும் அனுப்ப வேண்டுகிறேன்
ML
சிறுதானிய உணவுகள்
அன்பு கல்யாணி
இன்னும் விடுபட்ட குறிப்புகளை போட முயற்சிக்கிறேன். பதிவுக்கும் பாராட்டுக்கும் நன்றி கல்யாணி:))
Nigi
நிகி,
உங்கலுடைய குறிப்புகள் சூப்பர்.
என் வீட்டில் எப்போதும் இட்லி, தோசை தான். இதை எல்லாம் கண்டிப்பாக செய்வேன்.
திருமதி வடிவேல்
மிக்க நன்றி. சிறுதானியங்கள் சத்து மிக்கவை. முயற்சி செய்து பாருங்கள். சூப்பரா வரும்.
கம்பு ஜூஸ்
கம்பு ஜூஸ் ரொம்ப சுவையாக இருந்தது. செய்முறைக்கு நன்றி. நான் காலை 8 மணிக்கு ஊறவைத்து இரவு 8 மணிக்கு முளைகட்டி மறுநாள் காலை 8 மணிக்கு தயார் செய்தேன். ஆனால் மிகவும் லேசாகத்தான் முளை வந்திருந்தது. நன்கு முளை வர என்ன செய்ய வேண்டும். காலை உணவாக எடுத்துக்கொள்ள நான் எப்பொழுது \ எவ்வளவு நேரம் ஊற வைத்து எவ்வளவு நேரம் முளை கட்ட வேண்டும்?
அப்படியே இதை நீரிழிவு நோயாளிகள் அருந்தலாமா என்பதையும் சொல்லவும்.
அன்புடன்
ஜெயா
அன்பு ஜெயா
பாராட்டுக்கு நன்றி ஜெயா:)) உங்கள் பதிவை இப்போது தான் பார்த்தேன். தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன்.
நானும் நீங்கள் செய்தது போல தான் செய்தேன்.
//காலை உணவாக// ஜெயா நான் காலை காபிக்கு பதிலாக எடுத்துக் கொள்வேன்.
12 மணி நேரம் ஊற வைத்தாலே போதும். நன்கு ஊறிவிடும்.
அதிகமாக முளைக்கணும் என்றால் ஒரு நாள் முளைக்க விட்டுப் பாருங்கள் . அதாவது 24 மணி நேரம். தானியம் சிறிய அளவில் இருப்பதால் சிறிய முளை தான் வரும் வாய்ப்பு உள்ளது.
முளைக்க வைப்பதால் நார்ச்சத்து மிகுந்து மாவுச்சத்து போய் விடுவதால் நீரழிவு நோயாளிகளுக்கு ஏற்றதெனெ நினைக்கிறேன். தைரியமாக கொடுங்க :))
அன்புள்ள நிகிலா
நன்றி நிகிலா. பகலில் ஊறவைத்து இரவில் முளைக்கவிடும்போது (தொங்கவிட்டு), துணி உலர்ந்து போவதால் முளை சிறிதாக இருக்குமோ? அப்போ இரவில் ஊறவைத்து பகலில் முளைகட்டினால் ஒருவேளை கொஞ்சம் அதிகமாக முளை விடும் என நினைக்கிறேன். செய்து பார்க்கிறேன்.
நீரழிவு நோயாளிகள் தானியங்களை கூழ் வடிவில் அருந்தக்கூடாது என கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் கொஞ்சம் சந்தேகம்.
அன்புடன்
ஜெயா
அன்பு ஜெயா
துணி உலரக்கூடாது எனில் துணியை இரண்டு மடிப்பாக போடலாம். ஆனால், சிறியதாக முளை வந்தாலே போதும் ஜெயா. முளைக்க ஆரம்பித்தாலே எல்லாம் ஆக்டிவேட் ஆகி விடும்.
நீரழிவு நோயாளிகளுக்கு எளிதில் ஜீரணம் ஆகாத உணவு சாப்பிடச் சொல்லுவாங்க. எனவே, தான் கோதுமையைக் கூட தோசையாக சாப்பிடாமல் சப்பாத்தியாக சாப்பிடச் சொல்லுவார்கள். ஜீரணம் மெதுவாக நடப்பது நல்லது என்று.
அப்படியே கூழாக குடிப்பதுவும் கூடாதுன்னு சொல்லுவாங்க. கூழ் விரைவில் ஜீரணம் ஆகுமே.
ஆனால், பச்சையாகக் குடிப்பதால் மெதுவாகவே ஜீரணம் ஆகும்.
சாப்பிடலாம் என்றே நினைக்கிறேன். :)
இருப்பினும் டாக்டரிடம் தேவையெனில் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்களேன் ஜெயா. :)) .