ஆசிரியர் தினம்

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது நம் நாட்டு கலாச்சாரம்.
தெய்வத்துக்கும் முந்தைய‌ இடத்தை குருவுக்கு கொடுத்திருக்கின்றனர்.

எனது பெற்றோர் ஆசிரியர்கள். இதை நான் மிகவும் பெருமையோடு கூறிக் கொள்கிறேன்.

சில‌ வருடங்களுக்கு முன்பு ஒரு விடுமுறையில், நான் பிறந்த‌ வீடு சென்றிருந்த‌ சமயம் அது. ஓர் இனிய‌ மாலைப் பொழுதில் வாசலில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது. தொடர்ந்து காரிலிருந்து வாட்டசாட்டமாக‌ ஓர் இளஞர் இறங்கி வீட்டினுள் வந்து என்னிடம்,

''சார், இருக்காங்களா ?''

நானும் என் தந்தையை அழைக்கலானேன். வெளியே வந்து அவரைப் பார்த்த‌ என் தந்தைக்கு அளவில்லா ஆனந்தம்.

'' ஏ, குட்டியான்.........வா.......வா.......வா......
ராதா, இங்கே வா. யாரு வந்திருக்கா பாரு. நம்ம‌ குட்டியான்.''

அந்த‌ 'நம்ம‌' என்பதில் ஓர் அழுத்தம். வார்த்தைகளில் பரவசம். முகமும் அகமும் மலர‌ என் பெற்றோர் அவரிடம் அளவளாயினர்.

அவர் நல்ல‌ உயர் பதவியில் இருப்பதை அறிந்து தான் பெற்ற‌ மகனே பெரிய‌ பதவிக்கு வந்த‌தைப் போல‌ ஆனந்தம் அடைந்தனர். எத்துணை மலர்ச்சி அவர்கள் முகத்தில்......

அவர் சென்ற‌ பின்னரும் அன்று முழுவதும் அவர் படிக்கும் போது செய்த‌ குறும்புகளையும், துடுக்குத்தனத்தையும். மீண்டும் பேசிப்பேசி மகிழ்ந்தனர்.

அவர் மழலை மொழியில் கதைகளைக் கூறி கதையை முடிக்கும் போது,

'குட்டியான் வந்து தூக்கிட்டு போச்சு'

என்றபடியே கதையை முடிப்பதால் அந்த‌ மாணவருக்கு குட்டியான் என்ற‌ செல்லமாக‌ பெயர் சூட்டி அழைத்ததை என்னிடம் கூறி மகிழ்ந்தனர்.

ஒருவன் ஒரு நிறுவனத்தில் தொழில் கற்றுக் கொண்டு புதிதாக‌ அதுபோல‌ ஒரு நிறுவனத்தை தொடங்கும் போது அதை தனக்கு தொழில் போட்டியாகவே கருத‌ முடியும். அதன் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள‌ இயலாது.

ஆனால், தன்னிடம் கல்வி பயின்ற‌ ஒரு மாணவன் வாழ்வில் உன்னதமான‌ ஓர் இடத்தைப் பிடிக்கும் போது

" இவன் என்னோட‌ ஸ்டூடண்ட்"

என்று உள்ளத்தின் அடியாழத்திலிருந்து ஒரு தந்தையைப் போல‌ மனமார‌ மகிழ்பவரே ஆசிரியர்.
அதனால் தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்கிறோம்.

என் தந்தையைப் பற்றி நினைவு கூறும் அதேவேளையில், எனக்குக் கல்வி கற்றுத் தந்த‌ என் அன்புக்குரிய‌ ஆசிரியை பற்றிய‌ நினைவுகளையும் பகிர்ந்துகொள்கிறேன்.

சிஸ்டர் இன்பஜோதி மேரி

நான் பள்ளி இறுதி ஆண்டு படிக்கும் சமயம் எங்கள் பள்ளிக்கு புதிதாக‌ ஓர் ஆசிரியை மாற்றலாகி வந்தார். பார்க்க‌ மிகவும் அழகாக‌ இருப்பார். வெண்ணிற‌ ஆடையுடன் சாந்த‌ சொரூபமாக‌ இருப்பார். அவர் எங்களது வகுப்பு ஆசிரியராக‌ வந்து ஆங்கிலமும், அறிவியலும் நடத்தினார். அறிவியலில் சமன்பாடு சமன் செய்ய‌ அருமையாக‌ கற்றுக்கொடுப்பார். (படத்தில் இருப்பவர் அவரல்ல‌. அவரை போன்ற‌ அச்சு அசலான‌ தோற்றத்தில் இருந்ததால் கூகுளில் சுட்டது)

நான் வகுப்பில் மிகவும் நன்கு படிக்கக்கூடிய‌ மாணவியருள் ஒருத்தி. அதோடு கூடவே வயதிற்கேற்ற‌ குறும்பும் உண்டு. நான் உயரமாக‌ இருப்பதால் கடைசி பெஞ்சில் அமர்ந்து இருப்பேன் . பாடத்தைக் கவனிக்காமல் லாஸ்ட் பெஞ்ச் மாணவிகளோடு சேர்ந்து லூட்டி அடித்தவண்ணம் இருப்பேன். லாஸ்ட் பெஞ்ச் ஒழுங்கீனம் நு பேரு.... ஹி....ஹி....

முதல் மாதத்தேர்வு வந்தது. நான் வகுப்பில் மூணாவது ரேங்க் வாங்கியிருந்தேன்.
இவளா? எப்படி? இப்படி? அவருக்கு ஒரே ஆச்சரியம்.
"சிஸ்டர், நிகிலா நல்லா படிப்பா" தோழிகள் கோரஸாக‌ கத்த‌,

என்னை எழுப்பி செகண்ட் பெஞ்சில் சிஸ்டருக்கு நேரே கண் பார்வையில் அமர‌ வைத்தார்.
பாடம் நடத்து போது என்னைப்பார்த்தே நடத்த‌ ஆரம்பித்தார். என்னைப்பார்த்து இடையிடையே கேள்வி கேட்கலானார். நானும் ஒழுங்காகப் படித்தேன்.

மந்திர‌ வார்த்தை

நான் விடை கூறியதும் முதன்முதலாக‌ அவர் என்னைப் பற்றிக் கூறிய‌ அந்த‌ மந்திர‌ வார்த்தை என் மனதில் பசு மரத்தாணி போல‌ பதிந்துவிட்டது.

" ஏம் பிள்ளை....எவ்வளோ அருமையா படிச்சிருக்கா"

முகமலர‌ அவர் கூறிய‌ இந்த‌ வார்த்தை என்னுள் ஒரு மாயாஜாலத்தை உண்டுபண்ணியது.

நான் என்னை சிஸ்டரோட‌ பிள்ளையாகவே நினைக்க‌ ஆரம்பித்தேன். சிஸ்டர் சந்தோசப்பட வேணும் என்பதற்காகவே நன்றாகப் படிக்க‌ ஆரம்பித்தேன். பள்ளி இறுதித் தேர்வில் வகுப்பில் முதல் மாணவியாகவும் வந்தேன்.

நான் பாட்டி வீட்டில் தான் வளர்ந்தேன். பாட்டிம்மா தான் பிராக்ரஸ் ரிப்போட்டில் கையெழுத்திட்டு தருவாங்க‌.
" நீ நல்லா படிக்கணும்" அப்படீன்னு என்னை யாருமே சொன்னதில்லை. முதன்முதலா சொன்னது எங்க‌ சிஸ்டர் தான்.

இப்பவும் என் குழந்தைகளிடம் எங்க‌ சிஸ்டரைப் பற்றி பெருமையுட‌ன் நினைவுகூர்வது எனது வழக்கம்.

மீண்டும் பள்ளிக்கு போகலாம்.......

ஆண்டுகள் உருண்டோடின‌.சில‌ ஆண்டுகட்கு முன்பு நான் படித்த‌ பள்ளியில் ஒரு விழாவை எங்கள் பொறுப்பில் நாங்களே நடத்தும் வாய்ப்பு கிட்டியது. நானும் என் கணவரோடு விழாவுக்கு சென்றிருந்தேன்.

உள்ளே காலெடுத்து வைக்கு போதே மன‌மெல்லாம் பூரிப்பு.
'எங்க‌ ஸ்கூல்....எங்க‌ டீச்சர்.....என்னோட‌ ஃப்ரண்ட்ஸ்......
எங்க‌ ஏரியான்னு ஒரு பெருமையோடு என்னவரை ஒரு லுக் விட்டுகிட்டே போனேன்.

பள்ளிக்கூடம் சற்று மாறி இருந்தது. மாடியில் சில‌ வகுப்பறைகள் புதிதாக‌ முளைத்திருந்தன‌. மாணவியரின் சீருடை தாவணியில் இருந்து சுடிக்கு மாறி இருந்தது. சிஸ்டரின் அந்த‌ தூய‌ வெண்ணிற‌ ஆடை மாற்றப்பட்டு இளங்காவி வர்ண‌ சேலை அணிந்திருந்தனர்.

கலை நிகழ்ச்சிகள் நடந்தேறின‌. என் கண்களோ நான் படித்த‌ வகுப்பையே மொய்த்தவண்ணம் இருந்தது. வகுப்பினுள் செல்ல‌ ஏனோ பிடிக்கவில்லை.

என் உயிர் சயின்ஸ் சிஸ்டர் இல்லாமல்,
அருமையாக‌ கணிதம் நடத்தும் சுசீலா டீச்ச‌ர் இல்லாமல்,
மேப் வைத்தே பாடம் நடத்தும் ஜாய் டீச்ச்ர், மல்லிகா டீச்சர் இல்லாமல்,
வரிசையாகவே கேள்வி கேட்கும் தமிழ் டீச்ச்ர் செல்லத்தங்கம் இல்லாமல்,
இனிய‌ தோழிகள் வேல்விழி, ஜாஸ்மின், பாக்கியசீலி, மாலா, விமலா இல்லாமல்
என் வகுப்பு எனக்கு வெறுமையாகக் காட்சியளித்தது.

ஏனோ மனம் கனத்தது. கண்கள் பனித்தன‌.
உடன் பயின்ற தோழிகள்,
கற்றுக் கொடுத்த‌ தெய்வங்கள்
மீண்டும் வருவதாயின்
மீண்டும் பள்ளிக்குப் போகலாம்........

பின்குறிப்பு ;
இன்று பிதாவும் ஆசிரியருமான‌ என் தந்தையாரின் ஆறாம் ஆண்டு நினைவு நாள். அவருக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.
இப்போது திருச்சியில் கான்வென்ட் ல‌ இருக்கும் எங்க‌ சயின்ஸ் சிஸ்டர் இன்பஜோதி மேரிக்கு என்னோட‌ நமஸ்காரங்கள்.
வணங்குகிறேன் சிஸ்டர்.
குட் மார்னிங் டீச்ச‌ர் :))))

தோழிகளே நீங்க‌ படித்த‌ ஸ்கூலுக்கு மீண்டும் போயிருக்கீங்கள‌???

5
Average: 4.8 (6 votes)

Comments

மிக‌ அருமையான‌ பதிவு....காலையில் அறுசுவை தி|றந்தவுடன் உங்கள் பதிவை படித்ததில் மிகுந்த‌ சந்தோஷம்...முதலில் அப்பாவிற்கு எனது வணக்கங்கள்....நீங்கள் கூறியது முற்றிலும் உண்மையான‌ கருத்துக்கள்...

நானும் ஒரு ஆசிரியர்(கல்லூரி பேராசிரியர்)....காலக்கட்டாயத்தில் இப்பொழுது இல்லத்தரசி... என்னிடம் பயின்ற‌ மாணவர்கள் இப்பொழுது நல்லாதொரு வேலையில் இருப்பதை காண்பதற்கு மிகுந்த‌ சந்தோஷமாக‌ இருக்கிறது...மேலும் நிறைய‌ மாணவிகள் திருமணம் முடித்து குழந்தைகளுடன் காணும் போது அவளே ஒரு குழந்தை அவளுக்கு ஒரு குழந்தையா என்று ஆச்சரியமும் சந்தோஷமாகவும் இருக்கிறது....என் மாணவர்கள் மேடம் நீங்கள் இந்தியா வரும் போது கட்டாயம் தெரியப்படுத்துங்கள் நாம் எல்லோரும் ஒரு முரை சந்திப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள்...

ஆசிரியர் பணி என்பது மிகுந்த‌ உன்னதமான‌ பணி...உயர்வான‌ பணி...பலருக்கு அதன் அர்த்தம் புரியவில்லை...அருமை தெரியவில்லை....

நான் படித்த‌ பள்ளி , கல்லூரிக்கு நான் திரும்பவும் போகவில்லை....வேறு வேறு ஊருக்கு அப்பாவிற்கு பணியிட‌ மாற்றல்கள் கிடைத்ததால் போக‌ முடியவில்லை...ஆனால் நினைவுகளில் மூழ்கிவிடுவேன்...நானும் என் பிள்ளைகளிடம் அடிக்கடி சில‌ சம்பவங்களை கூறுவேன்....

காலையில் மிகுந்த‌ தலைவலியில் இருந்தேன்...உங்கள் பதிவு எனக்கு மிகுந்த‌ சந்தோஷத்தை கொடுத்தது....மிக்க‌ நன்றி நிகி...

உங்கள் எழுத்து நடை மிக‌ அருமை....

Expectation lead to Disappointment

முதலில் அப்பாவிற்கு வணக்கங்கள். அப்பாவை மகிழ்ச்சியூட்டிய‌ குட்டியானுக்கும் நன்றிகள்.

இந்த‌ வலைபதிவு படிக்கும் போது என் பள்ளி பருவத்தை அப்படியே நினைவுக்கு கொண்டு வருகிறது. நானும் அப்படியே உங்கள‌ மாறியே தான் இருந்தேன். டிட்டோ. கொஞ்சம் வாலு. நல்ல‌ உயரம். லாஸ்ட் பெஞ்ச். ஆனா நல்லா படிப்பேன். எப்ப‌ பாரு பேசிட்டே இருந்து டீச்சர்லாம் கீழ‌ வந்து உக்காருனு டெய்லி திட்டி என் இடமே கீழே மாறி விட்டது. அதை நான் எப்போவும் தவறா எடுத்துகல‌. ஃப்ர்ஸ்ட் பெஞ்ச் விட‌ முன்னாடி உக்காந்து இருக்கறதால‌ நாங்க‌ தான் ஃப்ர்ஸ்ட் பெஞ்ச்னு ஒரு நினைப்பு. என்னுடன் கீழே அமர்ந்திருக்கும் மற்ற‌ மாணவியருக்கும் பாடத்தை சொல்லி கொடுக்கும் வாய்ப்பும் கிட்டியது.

பத்தாவது இறுதி தேர்வில் ஸ்கூல் செகண்ட். என் டீச்சர் அனைவரும் பெருமை கொண்டனர். என்னை பார்த்து அல்ல‌. என்னுடன் கீழே அமர்ந்திருந்த‌ அனைவரையும் நான் படிக்க‌ ஊக்கமளித்து, பாடம் சொல்லி கொடுத்து தேர்ச்சி அடைய‌ செய்தேன் என்று. என் சக‌ தோழியரும் பாராடினர். அவர்களுக்கு ஒரு ஆசிரியை போல‌ என்னை நானே உணர்ந்தேன். அப்போது இருந்தே ஆசிரியை ஆக‌ வேண்டும் என்று ஒரு ஆசை. ஆனால் நிறைவேறவில்லை.

இன்னும் நிறைய‌ இருக்கு நிகி. எவ்ளோ வால் தனம். திட்டுகள், பாராட்டுகள். இன்றும் என் நினைவில் சிம்மாசனமாய் அமர்ந்திருக்கும் மோகனா டீச்சருக்கும் ரேச்சல் லீலா டீச்சருக்கும் மனமார்ந்த‌ நன்றிகள்.

எனக்கும் பள்ளி செல்லும் வாய்ப்பு கிட்டியது. என் ஆசிரியர் அனைவரும் என்னை நினைவில் வைத்திருந்தனர். அவ்வளவு அன்புடன் பேசி பெருமை கொண்டனர். ஆசிரியரும் நமக்கு இன்னுமொரு பொற்றோர் போல‌ தான்.

எல்லாம் சில‌ காலம்.....

அருமையான பதிவு. திரும்ப பள்ளி செல்ல வாய்ப்ப்ய் கிடைக்கல இது வரைக்கும். என் முதல் வகுப்பு டீச்சர் புஷ்பகாந்தி எங்க அன்பான மிஸ் அவங்க. 5 வகுப்பு வரை அவர்தான் வகுப்பு ஆசிரியர். அம்மா போன்றவர். ஆறாம் வகுப்பு அப்பறம் நாகரத்தினம் மிஸ்,தமிழ் மிஸ் ஆனந்தம்மாள்மிஸ் இவர்கள் நான் கால்குலேட்டர்ல போடற கணக்கை விட பாஸ்ட்டாக அவர் விடை சொல்லுவார்.ஸ்டெல்லாமிஸ் கணக்கு பாடமே மனப்பாடமாக போட வைக்கும் திறமையாணவர். இவர் வகுப்பில் அனைவரும் கணக்கில் 100% தேர்ச்சி, சயின்ஸ் மிஸ் ராஜேஸ்வரி என் பள்ளி வாழ்க்கையில் இவரிடம் மட்டுமே ஒரு முறை அடி வாங்கிருக்கேன். மறக்க முடியாத அம்மாக்கள் என்றுதான் சொல்லவேண்டும். ஆசிரியர் தினத்தில் அவர்களை வணங்குகிறேன்.

Be simple be sample

பதிவுக்கும் கருத்துக்கும் மிக்க‌ நன்றி.

//அவளே ஒரு குழந்தை அவளுக்கு ஒரு குழந்தையா// ம்... காலச்சக்கரம் வேகமாக‌ சுழலுகின்றது. மாற்றத்தை வரவேற்போம்.

பழைய‌ மாணவிகளை சந்திக்க‌ எளிதில் சந்தர்ப்பம் கிட்டாது. சந்திக்கும் போது அடடா என்னவொரு மகிழ்ச்சி. மீண்டும் அந்தக்கால‌ நினைவுகளில் மூழ்கி விடுவோம். அவளா இவள்னு ஆச்சர்யமா இருக்கும்.

//ஆசிரியர் பணி என்பது மிகுந்த‌ உன்னதமான‌ பணி...உயர்வான‌ பணி...பலருக்கு அதன் அர்த்தம் புரியவில்லை...அருமை தெரியவில்லை// ஆற‌ அமர‌ யோசித்துப் பார்த்தால் அதன் அருமையை ஒவ்வொருவரும் புரிந்துகொள்வார்கள்.
நமது இன்றைய‌ உயர்வில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது. ஒரு மாணவனை நல்வழிப்படுத்துவது பெற்றோருக்கு அடுத்து ஆசிரியரே..

//காலையில் மிகுந்த‌ தலைவலியில் இருந்தேன்...உங்கள் பதிவு எனக்கு மிகுந்த‌ சந்தோஷத்தை கொடுத்தது....மிக்க‌ நன்றி நிகி...//
ஆஹா!!! மனம் ஒரு விஷயத்தில் லயிக்கும் போது தலைவலி எல்லாம் பறந்து போகும். பழைய‌ நினைவுகளில் மூழ்கிவிட்டீங்க‌ :))
மாணவியாகவும், ஆசிரியராகவும் இர‌ண்டுவித‌ அனுபவம் உங்களுக்கு.:))

//உங்கள் எழுத்து நடை மிக‌ அருமை//
நன்றி. நன்றி மீனா:))

//நானும் அப்படியே உங்கள‌ மாறியே தான் இருந்தேன். டிட்டோ. கொஞ்சம் வாலு. நல்ல‌ உயரம். லாஸ்ட் பெஞ்ச். ஆனா நல்லா படிப்பேன். எப்ப‌ பாரு பேசிட்டே இருந்து டீச்சர்லாம் கீழ‌ வந்து உக்காருனு டெய்லி திட்டி என் இடமே கீழே மாறி விட்டது. அதை நான் எப்போவும் தவறா எடுத்துகல‌. ஃப்ர்ஸ்ட் பெஞ்ச் விட‌ முன்னாடி உக்காந்து இருக்கறதால‌ நாங்க‌ தான் ஃப்ர்ஸ்ட் பெஞ்ச்னு ஒரு நினைப்பு.//

சூப்பர் பாலா. எதையும் பாசிட்டிவா எடுத்துக்கறது ரொம்ப‌ பிடிச்சிருக்கு.
நீங்க‌ தான் ஃபர்ஸ்ட் மட்டுமல்ல‌ பெஸ்ட் ம் கூட‌.

//பத்தாவது இறுதி தேர்வில் ஸ்கூல் செகண்ட்.//
நீங்களுமா? நானும் வகுப்பில் ஃபர்ஸ்ட். பள்ளி அளவில் செகண்ட் தான். 'அ' செக்ஷன்ல‌ ஒரு தோழி என்னை விட‌ மூணு மார்க் அதிகமா எடுத்திருந்தாள். எனவே ஸ்கூல் செகண்ட் தான் நானும்:))

நான் மீண்டும் பள்ளிக்கு செல்லும் போது எனக்குக் கற்றுத் தந்த‌ டீச்சர்ஸ் யாருமே இல்லை. ரொம்பவும் ஏமாற்றமா இருந்துச்சு பாலா.:((

அப்போது தான் புரிந்துகொண்டேன். எனது பள்ளிக்கூடம் என்பது செங்கலும் பெஞ்சும் சேர்ந்த‌ கட்டடம் அல்ல‌. அது, என் உடன் படித்த‌ தோழிகளும், கற்றுக் கொடுத்த‌ ஆசிரியர்களும் தான் என்பதை....

//ஆசிரியரும் நமக்கு இன்னுமொரு பெற்றோர் போல‌ தான்.// இது நூற்றுக்குனூறு உண்மையான‌ வார்த்தை பாலா. நமது வளர்ச்சியைப் பார்த்து மகிழ்பவர்கள் அவர்கள்.

பதிவுக்கும், கருத்துக்கும் நன்றி தோழி.:))

//என் முதல் வகுப்பு டீச்சர் புஷ்பகாந்தி எங்க அன்பான மிஸ் அவங்க. 5 வகுப்பு வரை அவர்தான் வகுப்பு ஆசிரியர். அம்மா போன்றவர் .//

முதல் வகுப்பு எல்லாம் நினைவிருக்கா ரேவா. உங்களுக்கு நினைவாற்றல் அதிகம் தான்.: உங்களை நாலு வயசா கற்பனை பண்ணிப் பார்க்கிறேன்.:))) நாம் வீட்டில் இருக்கும் நேரத்தை விட‌ பள்ளியில் இருக்கும் நேரமே அதிகம். எனவே அவங்க‌ இன்னொரு அம்மா தான். சந்தேகமே இல்லை.

//நான் கால்குலேட்டர்ல போடற கணக்கை விட பாஸ்ட்டாக அவர் விடை சொல்லுவார்.ஸ்டெல்லாமிஸ் கணக்கு பாடமே மனப்பாடமாக போட வைக்கும் திறமையானவர் //.

எங்க‌ சுசீலா டீச்சரும் தான்... அவர் கணக்கு நடத்தும் விதமே தனி.. எல்லோருக்கும் புரியும் விதமா திரும்பத் திரும்ப‌ எளிமையா கத்துக் கொடுப்பாங்க‌. கணக்கு நடத்துவதில் அவருக்கு நிகர் அவரே தான்.

//சயின்ஸ் மிஸ் ராஜேஸ்வரி என் பள்ளி வாழ்க்கையில் இவரிடம் மட்டுமே ஒரு முறை அடி வாங்கிருக்கேன்//.

:(((((

//மறக்க முடியாத அம்மாக்கள் என்றுதான் சொல்லவேண்டும்.//
அதனால் தான் மாதா, பிதா, குரு நு சொல்றோம் இல்லியா ரேவா.

பதிவுக்கும், கருத்துக்கும் நன்றி ரேவா:))
.

சூப்பரா எழுதி இருக்கீங்க.

ஸ்கூல் எனக்கும் ரொம்ப பிடிச்ச விஷயம். சென்னையில இருந்தால் தவறாமல் எப்போதுமே ஓல்ட் ஸ்டுடென்ட்ஸ் டே அட்டன்ட் செய்வேன் :-)

உங்க அர்டிகில் படிக்கும் போது மலரும் நினைவுகள் வருது :-)

சூப்பர் (y)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

ஹாய்,
''''கற்றுக்கொடுத்த‌ தெய்வங்கள் மீண்டும் வருவதாயின் மீண்டும் பள்ளிக்கு போகலாம்'''உண்மையான‌ வார்த்தைக்கள். நானும் ஒரு ஆசிரியர் என்பதால், உங்கள் பதிவை படித்து பெருமிதம் அடைந்தேன். நன்றிமா.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

எப்படி இருக்கீங்க‌ பிந்து?
உங்களோடு பேசி ரொம்ப‌ நாள் ஆச்சு.

ஓல்டு ஸ்டூடன்ஸ் டே..........ஹூம் இதெல்லாம் எங்க‌ ஸ்கூல்ல‌ கிடையாது. பழைய‌ தோழிகள் எல்லோரையும் ரொம்பவே மிஸ் பண்ணுறேன்.:(( எல்லோரும் ஆளுக்கொரு பக்கம். எங்கேன்னு கூட‌ தெரியல‌.

மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.
பதிவுக்கும், பாராட்டுக்கும் நன்றி பிந்து:))

உங்க‌ கதைகளை Chillzee ல‌ அப்பப்போ படிச்சுட்டே இருக்கேன். வாழ்த்துக்கள் பிந்து.:))

ரஜினி டீச்ச‌ர்
உங்க‌ பதிவைப் பார்த்து ரொம்பவும் மகிழ்ச்சி.:))
எனக்குக் கற்றுக் கொடுத்த‌ ஆசிரியர்கள், தோழிகள் இல்லாமல் என்னோட‌ பள்ளி என்னோடதாகவே தெரியல‌. ரொம்ப‌ அன்னியமா உணர்ந்தேன். எல்லோரையும் பார்க்கணும் போல‌ இருக்கு......
மனத்திரையில் மலரும் நினைவுகளை படமாக‌ பார்க்கிறேன். அது தான் இயலும்.

நன்றி டீச்சர்.:))

நிகிலா மேடம் நல்ல பதிவு
ஆசிரியைர்கள் நம் வாழ்கைக்க்கு உதவியவர்கள்.என்ரும் அன்புடன் நினைவு வைத்து வணங்குவோஇம்

அன்பு பாரதி
சில‌ ஆசிரியர்களை என்றும் நம்மால் மறக்க‌ இயலாது. அவர்கள் வணக்கத்திற்கு உரியவர்கள்.
பதிவுக்கு நன்றி பாரதி:))

ரொம்ப அருமையான பதிவு,
சில மிஸ்க்கு என்ன ரொம்பவே பிடிக்கும்,
அவங்கள நான் எங்க பார்த்தாலும் பேசுவேன்,
சிலருக்கு அடையாளம் தெரியும் சிலருக்கு தெரியாது,

சில மிஸ் வீடு பக்கத்துல தான் இருந்தது அப்போ தீபாவளினா புது டிரஸ் போட்டு அம்மா செய்த பலகாரம் எடுத்துட்டு அவங்க வீட்டுக்கு போய்டுவோம், அவங்களும் மிஸ் மாதிரி இல்லாம ப்ரெண்ட் போல உன் ட்ரஸ் அழகா இருக்கு, இதான் என் புடவை நல்லா இருக்கானு கேட்டு எங்கள உட்காரவச்சு ஸ்விட்ஸ் கொடுப்பாங்க,
அவங்க பிள்ளைங்ககிட்ட இவங்க என் கிளாஸ் பிள்ளைங்கனு பெருமையா சொல்வாங்க,

அதே போல ஒரு டைம் டீச்சர்ஸ் டே க்கு 9 படிக்கும் ரொம்ப கிராண்டா கிளாஸ்ல நானும் என் பிரேண்ட்ஸும் அரேஞ்ச் பண்ணி இருந்தோம் அப்போ சந்தோசபட்டு தாங்க்ஸ் சொல்லிட்டு இனி இப்படிலாம் செலவு செய்யாதீங்க அதுக்கு பதிலா நல்லா படிச்சு நிறைய மார்க் வாங்குங்க அது தான் எனக்கு சந்தோசம்னு ராஜாமணி கிளாஸ் மிஸ் சொன்னாங்க, அதுக்கப்புறம் நீங்க மட்டும் படிச்சா போதாது உங்க கிளாஸ் ல சுமார படிக்கிறவங்களும் நல்லா படிக்க எதாவது பண்ணுங்க சொன்னாங்க, அப்ப முடிவு பண்ணி நாங்க ஒரு ஆறு பேரு எங்ககிட்ட யாரு படிக்க விரும்புறிங்களோ வாங்க படிக்கலாம் சொல்லி தர்றோம் சொன்னோம் அடுத்த எக்சாம்ல பெர்சன்ட்டேஜ் அதிகம் ஆகிடுச்சு.

இப்போலாம் நிறைய மிஸ் எங்க இருக்காங்கன்னே தெரில.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

அன்பு சுபி
நன்றி.
எந்த‌ மிஸ்ஸை ரொம்ப்ப பிடிக்குமோ அவங்க‌ பாடத்தை நல்ல‌ படிக்கத் தோணும் இல்லியா?...
//மிஸ் மாதிரி இல்லாம ப்ரெண்ட் போல உன் ட்ரஸ் அழகா இருக்கு, இதான் என் புடவை நல்லா இருக்கானு// ஆஹா இப்படி அனுபவம் எனக்கு இல்லை.. கொஞ்ச‌ நாள் மல்லிகா டீச்சர் வீட்டுக்குப் போய் படிச்சிட்டு வந்திருக்கேன். மற்றபடி எந்த‌ டீச்சர் வீட்டுக்கும் போக‌ சந்தர்ப்பம் கிடைக்கலை.

ஆனால், எங்க‌ வீட்டுக்கு எங்க‌ பெற்றோரோட‌ ஸ்டூடண்ஸ் நிறைய‌ வருவாங்க‌. பார்த்திருக்கேன்.

டீச்சர்ஸ் டே எல்லாம் கொண்டாடி இருக்கீங்களா.....குட் . ரொம்ப‌ நல்லபிள்ளைங்க‌ தான். ஆனாலும், அவங்க‌ நம்மகிட்ட‌ எதிர்பார்ப்பது நல்ல‌ மார்க்ஸ் தான்.:)))

ஆசிரியப் பணி தன்னலம் கருதாப் பணி
பகிர்வுக்கு நன்றி சுபி:)))

ஆசிரியர் தினம் பற்றிய அழகான பதிவு :))
எனக்கு தெரிந்து ஆசிரியர்கள் என்பவர்கள் மிகவும் பொறுமைசாலிகள். நல் வாழ்வின் வழிகாட்டிகள் என்றும் கூறலாம்.

நான் ப்ளஸ் டூ படித்து முடிக்கும் இறுதி நாளில் என்னுடைய ஆங்கில டீச்சர் எங்கள் அனைவரையும் வாழ்த்தி ஆசி கொடுத்துவிட்டு இறுதியாக கூறிய ஒரு விஷயம்; வாழ்வின் எந்த சூழலிலும் தற்கொலை என்னும் முடிவை மட்டும் கையாண்டு விடாதீர்கள். போராடி வாழ்ந்து பாருங்கள். வானத்தையும் வசப்ப்டுத்தி விடலாம் என்றார். பல நேரங்களில் தற்கொலை செய்து கொண்டவர்களைப் பற்றி படிக்கையில்/ கேள்விப் படுகையில் எனக்கு கிடைத்ததைப் போன்ற ஆசிரியை அவர்களுக்கு அமையவில்லையோ என எண்ணியுள்ளேன் :((

கல்லூரி இறுதியாண்டில் ஒரு ஆசிரியரின் அறிவுரை;
திருமணம் முடிந்த பின் கணவர் என்பவர் உன் பிறந்த வீட்டிற்க்கு போ என்று விரட்டி விட நேர்ந்தால், கணவரின் முகத்தைப் பார்த்து தைரியமாக, என் பெற்றோர் வீட்டிலிருந்து நான் Virgin ஆக உன் வீட்டிற்க்கு வந்தேன். என்னை மறுபடியும் Virgin ஆக உன்னால் அனுப்ப முடியுமா? அப்படியென்றால் செல்ல தயார் என்று சொல்லிப் பாருங்கள் என்றார் ))

கல்லூரியில் கற்றுக் கொடுத்த மற்றோரு ஆசிரியை குடும்பத்துடன் இங்குதான் வசித்து வருகிறார். எங்கள் கல்லூரியில் பயின்று இங்கு வசிப்பவர்கள் அனைவரும் எங்கள் டீச்சரை சென்று அடிக்கடி பார்த்து வருவோம். இந்த ஊரில் எங்களுக்கு ஒரு அம்மா வீடு மாதிரி அவங்க வீடு. அந்த அளவுக்கு எல்லோர் மேலும் அவருக்கு பிரியம். எங்கள் அனைவரின் குடும்பகளின் அனைத்து இன்ப துன்பங்களில் தவறாது பங்களித்து விடுவார். நல்ல தோழியும் கூட.

அன்பு வாணி

//ஆசிரியர்கள் என்பவர்கள் மிகவும் பொறுமைசாலிகள். நல் வாழ்வின் வழிகாட்டிகள்// உண்மை தான் வாணி.
நாம் நம் பெற்றோருடன் இருப்பதை விட‌ அதிகமான‌ நேரத்தை பள்ளியிலேயே செலவிடுகின்றோம். படிக்கும் போது நாம் நம் ஆசிரியர்களையே ரோல் மாடலாக‌ எண்ணுகிறோம்.

நல்ல‌ ஆசிரியர்கள் அமைந்தால் வாழ்க்கைப் பயணத்துக்கு நல்ல‌ ஒளிவிளக்கு மாதிரி. திறமை வாய்ந்த‌ சிற்பியைப் போல‌ நம்மை செதுக்குபவரும் அவரே.

வளர்ந்த‌ பின் ஆசிரியரும் நமக்கு நல்ல‌ தோழி தான்.

உங்களோட‌ கருத்துக்கு நன்றி வாணி:))

அன்பு நிகிலா,

நல்லதொரு பதிவு.

மற்ற தோழிகளும் உணர்வு பூர்வமாக பதிவிட்டிருக்காங்க.

டீச்சர் என்பவர் குழந்தைகளைப் பொறுத்தவரை ஒரு ஏஞ்சல்தான்.

ஸ்கூலுக்குப் போக ஆரம்பிச்சதும் டீச்சர் சொல்லியிருக்காங்க, மிஸ் சொன்னாங்க என்று பல் தேய்ப்பதில் ஆரம்பித்து, தூங்கப் போகும்போது ப்ரேயர் சொல்வது வரை, குழந்தைகளுக்கு வாழ்க்கைக் கல்வியை சொல்லித் தந்ததில் ஆசிரியர்களின் பங்கு நிறைய.

எல்லா ஆசிரியர்களுக்கும் வணக்கம்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு சீதா

//டீச்சர் என்பவர் குழந்தைகளைப் பொறுத்தவரை ஒரு ஏஞ்சல்தான்.// உண்மை தான் சீதா.
குழந்தைகள் அம்மா சொல்வதை விட‌ ஆசிரியர் சொல்வதையே வேத‌ வாக்காக‌ நம்புவார்கள். எங்க‌ மிஸ் எங்க‌ மிஸ் நு பெருமையா சொல்றாங்க‌. குழந்தைகளின் ரோல் மாடல் அவங்க‌ தான்.

பதிவுக்கு நன்றி சீதா:)