நல்வாழ்வின் திறவுகோல் - பாகம் 1

நல்வாழ்வின் திறவுகோல்Nalvalvin Thiravukol

வணக்கம். வாழ்க்கையில் நமக்கு நடக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் நாம் விதியையும், கர்ம வினைகளையும், கிரகங்களின் சுழற்சியையும் காரணமாக நினைக்கிறோம். நமக்கு நடப்பவை எல்லாமே நம் எண்ணங்களின் விளைவுகள்தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்தக் கோட்பாட்டை எத்தனையோ முன்னோர்கள் சொல்லிவிட்டுப் போனாலும், நாம் அதைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டோம்.

பொதுவாக “மனம்போல் வாழ்வு”, “கெடுவான் கேடு நினைப்பான்” என்பது போன்ற பழமொழிகளை நாம் எப்படிப் புரிந்துகொள்கிறோம்? நம்மை நல்லவர்களாக வாழவைக்க நம் முன்னோர்கள் சொல்லி வைத்த நெறிமுறைகள் என்றே நினைக்கிறோம். ஆனால், நம் எண்ணங்கள் நம் வாழ்க்கையை எப்படி நேரடியாகவே பாதிக்கின்றன என்பதை இப்போது அறிவியல் பூர்வமாக மேலை நாட்டவர் நிரூபித்து வருகின்றனர்.

நம் சிந்தனைகளை நல்லவை என்றும் கெட்டவை என்றும் இரண்டு விதமாகப் பிரிக்கலாம். இவ்விரண்டு வித சிந்தனைகளும் எல்லா மனிதர்களுக்கும் இயல்பாக வருபவைதான். அவற்றை அடையாளம் கண்டு இனம் பிரிப்பதில்தான் நம் திறமை உள்ளது. அன்பு, பாசம், நட்பு, மகிழ்ச்சி, பெருமை, உற்சாகம், உதவி மனப்பான்மை போன்றவை நல்ல சிந்தனைகள் என்றும், கோபம், வெறுப்பு, பகை, அச்சம், கவலை, துக்கம், பொறாமை, தாழ்வு மனப்பான்மை, சுய பச்சாதாபம், போன்றவை கெட்ட சிந்தனைகள் என்றும் கொள்ளலாம்.

ஆனால் நிமிடந்தோறும் ஆயிரம் சிந்தனைகள் வந்து போகும் நம் மனதில், நல்ல சிந்தனைகளையும் கெட்ட சிந்தனைகளையும் இனம் கண்டுபிடிப்பது நடக்கக் கூடிய காரியமா என்ன? ஆனால் அதற்குக் குறுக்கு வழி ஒன்று உள்ளது. அதுதான் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நாம் எவ்வாறு உணர்கிறோம் என்று கண்டறிவது. அதாவது, நல்ல சிந்தனைகள் நம் மனதில் ஓடிக்கொண்டிருக்கும்போது நாம் மிகவும் சுகமாக உணர்வோம். நம் மகிழ்ச்சி அதைக் காட்டிக் கொடுத்துவிடும். அச்சம், கவலை, கோபம், பொறாமை, குற்ற உணர்வு போன்ற எதிர்மறை சிந்தனைகள் நம் மனதில் ஓடும்போது, அசௌகரியமாக உணர்வோம். எதிர்மறை உணர்வுகள் நம்மைத் தாக்கும்போது, நாம் சுதாரித்துக் கொள்ள வேண்டும். உடனடியாக நம் சிந்தனைகளை ஆராய்ந்தோமானால், தீய சிந்தனைகள் நம் மனதை ஆக்கிரமித்திருப்பதைக் காணலாம். அப்படிப்பட்ட சமயங்களில், அந்த சிந்தனையின் ஓட்டத்திலிருந்து உடனடியாக விடுபடுவதும் ஒரு பெரிய சவால்தான். ஏனென்றால், சிந்தனைகளின் போக்கை மாற்றுவதென்பது சுலபமான காரியமல்ல.

தவறான சிந்தனைகளின் பிடியில் இருக்கும்போது, அதிலிருந்து எப்படியாவது விடுபட வேண்டும் என்ற வலுவான எண்ணம் முதலில் நமக்கு எழவேண்டும். அதன்பின், நமக்கு மிகவும் பிடித்தமான, நல்ல விஷயங்கள் எதையாவது வலுக்கட்டாயமாக நம் நினைவுக்குக் கொண்டுவரவேண்டும். உதாரணத்துக்கு, உங்கள் வீட்டுக் குழந்தைகளோடு நீங்கள் விளையாடிய நினைவுகள், மலர்கள் பூத்துக் குலுங்கும் பூந்தோட்டம், அருவியில் நீராடிய அனுபவம், நண்பர்களுடன் பொழுது போக்கிய நினைவுகள், நீங்கள் பெருமையாக உணர்ந்த தருணங்கள், இப்படி எதை வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால், உடனடியாக ஒரு நல்ல பாடலைப் போட்டுக் கேட்கலாம். அல்லது உங்கள் சிந்தனையைத் தொடரமுடியாத விதத்தில் ஏதேனும் ஒரு பணியில் ஈடுபடலாம். இதன்மூலம் தவறான உணர்வுகளின் தாக்கத்திலிருந்து நீங்கள் விடுபட முடியும்.

ஆரம்ப காலங்களில் இப்படி சிந்தனையோட்டத்தை இனம் கண்டு தவிர்ப்பதும், மாற்றுவதும் மிகவும் கடினமாகத் தெரியும். காட்டு வெள்ளத்தில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கும். ஆனால் நீங்கள் இதைப் பிடிவாதமாகத் தொடரும்போது, பழகி விடும். மேலும், எதிர்மறை உணர்வுகளை உங்களால் சற்று நேரம் கூடத் தாங்க முடியாத நிலை ஏற்படும். இந்த நிலை வந்துவிட்டால், உங்கள் முயற்சியில் நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள் என்று பொருள். அதன் பிறகு உங்கள் வாழ்க்கையில் எல்லாம் நல்லபடியாகவே நடக்கும். எண்ணங்களின் போக்கிற்கும், நம் வாழ்க்கையின் போக்கிற்கும் உள்ள நேரடித் தொடர்பை நீங்கள் உணரத் தொடங்குவீர்கள். வாழ்க்கை இன்பமயமாக மாறி விடும்.

ஆக, விதியின் போக்கை மாற்றும் வல்லமை உங்கள் எண்ணங்களுக்கு உண்டு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இந்தப் புரிதல் மட்டுமே உங்கள் நல்வாழ்க்கைக்கான திறவுகோல். அதைக் கடவுள் உங்களிடமே கொடுத்துள்ளார். பயன்படுத்தக் கொஞ்சம் பயிற்சி மட்டும் தேவை. அதையும் இன்றே தொடங்குங்கள்.

..தொடரும்

Comments

கவிப்ரியா அறுசுவைக்கு வரவேற்கிறேன். பதிவு அருமை.
முதல் பதிவே வாழ்க்கையை நெறிப்படுத்துவதான நல்ல ஒரு தூண்டுகோளாக இருக்கு. நிறைய சிந்திக்கவச்சிட்டீங்க. முயற்சிக்கிறேன்.
தொடர்ந்து வரவிருக்கும் பதிவுகளை படிக்க ஆர்வமா இருக்கு

முதல் பதிவுக்கு வாழ்த்துக்கள் கனிப்ரியா மேடம்!

நீங்கள் எழுதிய விஷயமும், எழுதிய விதமும் ரொம்ப நல்லா இருக்கு. இன்னும் நிறைய எழுதுங்க.
படித்ததும் எனக்குள் இருக்கும் நல்ல சிந்தனை & கெட்ட சிந்தனை என்னென்னவென யோசிக்க ஆரம்பிச்சுட்டேன். வாழ்க்கை இன்பமயமாக நானும் நீங்க சொன்னபடி பயிற்சியை முயற்சி செய்கிறேன். உங்களின் அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்...
மீண்டும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

-> ரம்யா

வெகு அருமை உங்கள் கட்டுரை. அடுத்த‌ பாகம் எப்பொழுது என்கிற‌ எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

என் கட்டுரையை அங்கீகரித்துப் பிரசுரம் செய்த‌ அறுசுவைக் குழுவினருக்கு ஆயிரம் நன்றிகளை சமர்ப்பிக்கின்றேன்.
கட்டுரையைப் படித்துப் பாராட்டிய‌ நல்லுள்ளங்கள் அனைத்துக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
என் எழுத்தினால் உங்கள் வாழ்க்கையில் நல்ல‌ மாற்றங்கள் வருமானால், அதைவிட‌ சிறந்த பரிசு எனக்கு வேறேதும் இருக்க‌ முடியாது. எழுத்தனுபவம் எனக்கு முற்றிலும் புதிது என்பதால், தவறுகள் இருப்பினும் தயங்காமல் சுட்டிக் காட்டுங்கள்.
நன்றி தேவி விஜயசேகர், நன்றி ரம்யாசரண், நன்றி இமா க்றிஸ்... :)

கனிப்ரியா முதலில் உங்களுக்கு நன்றி :) வரிகள் ஒவ்வொன்றும் சிந்திக்கவும், சிந்தனைகளை சீர்படுத்துவதாகவும் உள்ளன. எதிர்வரும் பாகங்களுக்காக காத்திருக்கிறேன்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அழகான ஆழமான் சிந்தனை வரிகள்.எழுத்தாளர் போல் உள்ளது. மேலும் தொடர வாழ்த்துக்கள்

Be simple be sample

மிக்க‌ நன்றி அருள் சிவம்! மிக்க‌ நன்றி ரேவதி!

தங்கள் இனிய‌ பாராட்டு எனக்கு ஊக்கமளித்து மேலும் எழுதத் தூண்டுகிறது. :)

கனிப்ரியா அவர்களுக்கு,
முதலில் உங்கள் பணி தொடர‌ வாழ்த்துக்கள். அடுத்து நீங்கள் ஆரம்பித்து வைத்திருக்கும் பயிற்சிக்கு நன்றிகள்.
நிச்சயமாக‌ எண்ணம் நேர்மறையாக‌ இருந்தால் நடப்பதெல்லாம் நேர்மறையாகவே மனது ஏற்றுக்கொள்ளும்.
நன்றி!

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க‌ நன்றி மெர்சி... தொடர்ந்து படிக்குமாறு வேண்டுகிறேன்.

கட்டுரை ரொம்ப நல்லா இருக்குங்க.
படிக்க ரொம்ப சுவாரஸ்யமாக இருக்குங்க.
வாழ்த்துக்கள்.

நட்புடன்
குணா