கனவுகள் - நல்வாழ்வின் திறவுகோல்

கனவுகள்Nalvalvin Thiravukol

கனவுகள்

ஆழ்மனக் கட்டுப்பாட்டுக்கு மிக முக்கியமான தேவை நம்பிக்கை என்று பார்த்தோம். நம்பிக்கை என்பது புறமனம் சம்மந்தப் பட்டது. அது எதையும் எளிதில் நம்பிவிடாது. தெளிவான ஆதாரங்கள் இல்லாமல் ஒரு நம்பிக்கையை வரவழைப்பது நடக்காத காரியம். அந்த இடத்தில்தான் கனவுகள் நம் உதவிக்கு வருகின்றன.

“கனவுகள் என்பவை நீங்கள் தூங்கும்போது காண்பவை அல்ல. உங்களைத் தூங்க விடாமல் செய்பவைதான் கனவுகள்” – என்று நம் அன்புக்குரிய அப்துல் கலாம் ஐயா சொன்னதை நீங்கள் அறிந்திருக்கலாம். இங்கு நாம் பேச இருப்பதும் அது போன்ற கனவுகள்தான். விழித்திருக்கும்போதே, நம் விருப்பங்களை மனத் திரையில் கற்பனைக் காட்சிகளாகக் கண்டு ரசிப்போமே, அந்தக் கனவுகள்தான். மேலோட்டமாகப் பார்க்கும்போது, கனவுகள் நம் உழைப்புக்குத் தேவையான உற்சாகத்தைக் கொடுக்கின்றன – என்ற அளவில்தான் நாம் கனவுகளை மதிக்கிறோம். ஆனால் அவை அதற்கும் மேலே, நம்ப மறுக்கும் புறமனத்தைச் சற்று ஏமாற்றி விட்டு, தற்காலிக நம்பிக்கையை நேரடியாக ஆழ்மனத்துக்குக் கொண்டு செல்லும் ஒரு மகத்தான வேலையைச் செய்கின்றன.

உதாரணத்துக்கு, எதிர்காலத்தில் ஒரு மருத்துவராக வேண்டும் என்ற ஆசை ஓர் ஏழை மாணவனுக்கு இருக்கலாம். அது நடக்க வேண்டுமென்றால், வெறும் கடின உழைப்பு மட்டும் போதாது. ஒருவேளை உழைப்பினால் அவன் தேவையான மதிப்பெண்களைப் பெறலாம். ஆனால், வசதியின்மை காரணமாக அந்த வாய்ப்பு அவனுக்குக் கிடைக்காமல் போகலாம். உழைப்போடு கூடக் கனவு சேரும்போது, அது அதிர்ஷ்டத்தைக் கூடவே கொண்டு வருகிறது. கனவு காண்பது ஒன்றும் கஷ்டமான வேலையில்லை. அவன் செய்யவேண்டியதெல்லாம், தினமும் ஒரு அரைமணி நேரம், தன்னை ஒரு மருத்துவராகக் கற்பனை செய்து, மனத்திரையில் அந்தக் காட்சிகளைக் கண்டு ரசிப்பதுதான்.

நோயாளிகள் தனக்காக நீண்ட வரிசைகளில் காத்திருப்பது போலவும், தான் அவர்களோடு பரிவுடன் உரையாடி சிகிச்சை கொடுப்பது போலவும், சுற்றிலும் ஒரு மருத்துவமனையின் சூழலை மனதுக்குள் கொண்டு வந்து, சிறு சிறு நிகழ்ச்சிகளைக் கற்பனையில் ஏற்படுத்தி, பார்த்து மகிழ வேண்டும். அவ்வாறு கற்பனையில் மனத்திரையில் அவன் ஓட்டிப் பார்க்கும் நாடகம், உண்மையல்ல என்பது அவனது புறமனதுக்குத் தெரியும். ஆயினும், எப்படி ஒரு கதைபடிக்கும்போது அல்லது திரைப்படம் பார்க்கும்போது எல்லாவற்றையும் மறந்து அந்தக் கதையோடு ஒன்றிப் போகிறோமோ, அதே போல், அந்த மனத்திரை நாடகமும் நம் புறமனதை சிறிது நேரம் ஏமாற்றி, நம் மனதில் ஓடும் கற்பனைக் காட்சிகள் உண்மையென்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தும். அந்தத் தற்காலிக நம்பிக்கை, தவறாமல் ஆழ்மனதைச் சென்றடையும். அந்த ஒரு துளி நம்பிக்கை கூட, தொடர்ந்து அடிக்கடி செய்யும்போது, ஆழ்ந்த நம்பிக்கையாக மாறும். அதன் வேலையைச் செய்யும். தேவையான நேரத்தில், தேவையான உதவி அந்த மாணவனுக்கு அதிசயக்கத்தக்க விதத்தில் எப்படியாவது வந்து சேரும். கட்டாயம் ஒருநாள் அவன் கனவு கண்டது போலவே அவன் மருத்துவனாவான்.

இப்படி நாம் நடத்த விரும்பும் அதிசயங்களை நம் மனத்திரையில் காட்சிகளாக ஓட்டிப்பார்த்து ரசிப்பதைத்தான் கனவு காணுதல் என்று குறிப்பிட்டேன். இது உண்மையில் மிக மிக சக்தி வாய்ந்த ஒரு வழிமுறை. எல்லா மனிதர்களுக்கும் இது இயற்கை அளித்த சக்தியாகும். விரும்பியோ விரும்பாமலோ, நம் மனம் இதுபோன்ற எண்ணற்ற காட்சிகளை நாள்தோறும் நமக்குக் காட்டித்தான் வருகிறது. ஆனால், கட்டுப்படுத்தப் படாத மனமானது, தான்தோன்றித்தனமாக அவ்வப்போது ஏற்படும் சிந்தனைகளின் ஒட்டத்திற்குத் தகுந்தவாறு, இந்தக் காட்சிகளை மாற்றிக் கொண்டிருக்கும்.

சில சமயங்களில், அன்றைய செய்தித் தாளில் ஒரு கோரமான விபத்தைப் பற்றிப் படித்திருப்போம். அதுபோன்ற ஒரு விபத்து நமக்கு ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்று கூட ஒரு கணம் நம் மனம் கற்பனை செய்து பார்க்கும். இந்தக் கற்பனைகள் தொடர்ந்தால் என்ன நடக்கும் என்பது தெரியாதவரை, நாம் எல்லோருமே இந்த சக்தியை இப்படித்தான் குழந்தையிடம் துப்பாக்கி கிடைத்ததுபோல் தாறுமாறாகப் பயன்படுத்தி வருகிறோம்.

ஆனால் இந்த சக்தியைப் பற்றித் தெரிந்தவர்கள், இதை முறையாகப் பயன்படுத்தி, எத்தனையோ நம்பமுடியாத சாதனைகளைப் படைத்துள்ளார்கள். சொல்லப் போனால், தகுதியே இல்லாத சிலர் கூட, பெரிய பெரிய பதவிகளில் இருப்பதையும், பெரிய வசதிகளைக் குவிப்பதையும், பேரும் புகழும் அடைவதையும் பார்த்திருப்பீர்கள். அவர்கள் அனைவரும், தெரிந்தோ தெரியாமலோ, பதவிகளையும், வசதிகளையும், பெயரையும், புகழையும், கற்பனை செய்து, அந்த சக்தியின் மூலம் அடைந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.

நினைத்ததை அடைவதற்கு, தகுதி முக்கியமல்ல. தாகம் முக்கியம். அந்த தாகம் அவர்களுக்குக் கனவைக் கொடுத்திருக்கும். கனவு அவர்களது ஆழ்மனத்தை உசுப்பி விட்டுக் கட்டளையிட்டிருக்கும். ஆழ்மனம் ஒரு கட்டளையை ஏற்றுக் கொண்டுவிட்டால், பிரபஞ்சம் முழுமையும் அதன் சக்திக்குத் தலைவணங்கி ஒத்துழைக்கும். கட்டளை நிறைவேறத் தேவையான நேரம், காலம், சூழ்நிலைகள் தன்னால் உருவாகும். விளைவு, கனவு கனவு நினைவாகிறது. எனவே, குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே இந்த வலிமையான ஆயுதம் பற்றி சொல்லிக் கொடுங்கள். தவறான சிந்தனைகளுக்கு மனதில் இடம் கொடுப்பது எப்படி ஆபத்தாக முடியும் என்பதை அவர்கள் அறிய வேண்டும். அதே சமயம், கனவு காண்பது எப்படி வெற்றிக்கு வழி வகுக்கும் என்பதையும் அவர்கள் அறிந்திருக்க வேண்டும். இயற்கையிலேயே குழந்தைகளுக்குக் கனவுகாணும் வழக்கம் அதிகம். அதை ஊக்குவிப்பதுடன், நெறிப்படுத்தவும் கற்றுக் கொடுத்துவிட்டால், நாளைய சாதனை நாயகர்கள் பட்டியலில் உங்கள் குழந்தைகள் நிச்சயம் இருப்பார்கள்.

இப்படிக் கனவுகளுக்காக நாம் ஒதுக்கும் நேரம், தூங்குவதற்கு சற்று முன் அமைந்தால், இன்னும் சிறப்பு. காரணம், கனவு காணும்போதே, உறக்கம் வந்துவிடுவதால், புறமனம் தன் வேலையை நிறுத்திவிட்டு, தூங்கச் சென்றுவிடுகிறது. இதனால், தூண்டப்பட்ட நம்பிக்கை, பல மணி நேரம் ஆழ்மனத்தை ஆக்கிரமிக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. பகலில் என்னதான் கனவு கண்டாலும், கனவு முடிந்தவுடன், புறமனம் அந்தத் தற்காலிக நம்பிக்கையைத் தகர்த்துவிட்டு, தன் இயல்பான அவநம்பிக்கையை வரவழைத்துக் கொள்கிறது. இதன் காரணமாக, ஆழ்மனத்தில் ஏற்பட்ட நம்பிக்கையின் வீரியம் குறைந்து போகிறது.

எனவே இனித் தூங்கத் தொடங்குமுன், உங்கள் எதிர்காலக் கனவை மனத்திரையில் ஓடவிட்டு, கற்பனைக் குதிரையைத்தட்டி விட்டு, சுகமாகத் தூங்குங்கள். சாத்தியமே இல்லாத சாதனைகள் கூட, சத்தியமாய் நடப்பதைக் காண்பீர்கள்.

..தொடரும்

Comments

:‍) கட்டுரை வழக்கம் போல‌ அருமை கனிப்ரியா.

‍- இமா க்றிஸ்

இமாம்மா சொன்னது போலத் தான் வழக்கம் போல தெளிவான பதிவு. அப்துல் கலாம் ஐயா சொன்னதின் சூட்சமம் இப்போ தான் தெரியிது. கண்டிப்பாக இதை பசங்களுக்கு வாசிச்சு காமிக்கிறேன்.

தொடர்ந்து கட்டுரையைப் படித்து கருத்து தெரிவித்தலுக்கு மிக்க‌ நன்றி இமா... உங்கள் அருமையான‌ வலைப் பதிவுகளைப் படித்துத்தான் எனக்கு அறுசுவையில் எழுதும் ஆர்வமே வந்தது. :)

கருத்துக்கு மிக்க‌ நன்றி தேவி! :) தொடர்ந்து படியுங்கள்.

உங்கள் கட்டுரை மிகவும் அற்புதமாக‌ இருக்கிறது.ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் இந்த‌ கட்டுரையை வாசிப்பதன் மூலம் வாழ்க்கையில் நல்ல‌ மாற்றத்தை கொண்டுவரலாம் என‌ நிச்சயமாக‌ உணரமுடிகிறது..நன்றி கனிப்ரியா
அருமையான‌ கட்டுரைக்கு...

பரணிகா:)

தங்கள் இனிய‌ கருத்துக்கு நன்றி பரணிகா. தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்களைத் தெரிவித்தால் மிக்க‌ மகிழ்ச்சியடைவேன். :)