ஆரோக்கியம் - நல்வாழ்வின் திறவுகோல்

ஆரோக்கியம்Nalvalvin Thiravukol

ஆரோக்கியம்

நம்மில் எத்தனை பேர், “எனக்கு உடலில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நான் முழு ஆரோக்கியத்துடன் சுகமாக இருக்கிறேன்.” என்று சொல்லக் கூடும்? இதுவரை அப்படி யாரையும் நான் காண வில்லை. ஒருவேளை இருந்தாலும், விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருப்பார்கள். ஆனால் உண்மை என்ன தெரியுமா? ஆரோக்கியத்தின் ரகசியமே இப்படி சொல்வதுதான். புரியவில்லையா? இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்.

நம் உடலின் செயல்பாடுகள் முழுக்க முழுக்க ஆழ்மனத்தின் கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கின்றன என்பதை ஏற்கனவே பார்த்தோம். உடலின் எந்தப் பகுதியில் பிரச்சினை என்றாலும், அதை உடனடியாக சரி செய்து மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரும் சக்தி, நம் ஆழ்மனத்திற்கு இயற்கையாகவே உண்டு. உடலின் தற்காப்புத் திறன்கள் பற்றி நவீன மருத்துவ உலகமும் நன்கு அறியும். அது செயல்படாமல் போகும் தருணங்களில் தான், நாம் வைத்தியரை நாடும் கட்டாயம் வருகிறது. நம் உடலுக்குள் அமைந்திருக்கும் அந்த அதிவல்லமை வாய்ந்த வைத்தியர், சமயங்களில் செயல்படாமல் போவதற்கு என்ன காரணம்? மீண்டும் நம் எண்ணங்கள் தான்…

சதாசர்வ காலமும் தன் உடல் உபாதைகளைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கும் சில நபர்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். எந்தப் பேச்சை எடுத்தாலும், கடைசியில் தனக்கு உள்ள ஏதேனும் ஒரு நோய், அல்லது வலி, அல்லது சக்தியின்மை, இவற்றில் வந்துதான் பேச்சை முடிப்பார்கள். அவர்களுக்கு எண்ணம் முழுவதுமே, தன் இயலாமையைப் பற்றியதாகத்தான் இருக்கும். எண்ணங்கள் எவையாயினும், நம் மனதை அதிக நேரம் ஆக்கிரமிக்கும் போது, அவை நம்பிக்கையாகி விடுகின்றன. அதாவது, “நான் ஒரு நிரந்தர நோயாளி” என்று சதா சர்வ காலமும் சிந்தித்துக் கவலைப் படுபவனுக்கு, அந்த எண்ணமே நம்பிக்கையாகி விடுகிறது. நாம் சென்ற வாரம் சொன்னபடி, நம் புற மனம் எதை உண்மையென்று நம்புகிறதோ, அதை ஆழ்மனம் கட்டளையாக பாவிக்கிறது. விளைவு, தன் எஜமானனின் கட்டளைக்கிணங்க, அவரை நிரந்தர நோயாளியாக வைத்திருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அதையெல்லாம் விசுவாசமாக செய்து கொண்டிருக்கிறது.

இப்போது மீண்டும் இரண்டாம் பத்தியில் அடிக்கோடிட்ட வாசகத்தைப் படித்துப் பாருங்கள். புரியும். உங்களுக்கு ஏற்படும் சிறு சிறு உபாதைகளைக் கண்டும் காணாமல் இருங்கள். வழக்கமாக செய்வதுபோல், சின்ன வலியைக் கூட, பூதக் கண்ணாடியை வைத்துப் பார்த்துப் பெரிதாக்கி, அதையே காரணமாக வைத்து வேலைகளை ஒத்திப்போடுவது, ஓரங்கட்டுவது, அல்லது அடுத்தவர்களிடம் ஒப்படைப்பது போன்ற செயல்கள், உங்களையும் அறியாமல் நீங்கள் உங்கள் நோய்க்கு வழங்கும் சிவப்புக் கம்பள வரவேற்பாக அமையும். வலித்தால்கூட, “என் அடிமை ஒரு கைதேர்ந்த வைத்தியன். அவன் இதை இன்று மாலைக்குள் சரி செய்து விடுவான். அவனிருக்க எனக்கென்ன கவலை? என் வேலையை நான் பார்க்கிறேன்" என்று நகைச்சுவையோடும், அதே சமயம் பெருமிதத்தோடும் எண்ணிக் கொள்ளுங்கள். அவ்வப்போது, “வலி இப்போது சற்றுக் குறைந்திருக்கிறது. வைத்தியர் தீவிரமாக வேலை செய்கிறார் போலும்” என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். அதிசயிக்கத் தக்க விதத்தில், அன்று மாலைக்குள் உங்கள் நோய் நீங்கிவிடும். இதில் முக்கியமான விஷயம், உங்கள் வலி அல்லது நோய் பற்றி, அடுத்தவரிடம் நீங்கள் புலம்பக் கூடாது. புலம்பலை இயல்பாகக் கொண்டவர்களுக்கு இது ஒரு பெரிய சவாலாக இருக்கும். ஆனால், முயற்சி செய்து பாருங்கள். உங்கள் நோய் வந்த வேகத்தில் காணாமல் போகும்போது, அந்த மகிழ்ச்சியை அடுத்தவரிடம் சொல்லிக் கொண்டாடுவீர்கள்.

சரி, நோய்களை நீக்கி ரட்சிக்கும் சக்தி படைத்த நம் ஆழ்மனம், நோய்களை வராமலே தடுத்தாலென்ன? இதுதான் நம் அடுத்த கேள்வி. அதுவும் சாத்தியமே. நாம் அந்த கட்டத்தை நோக்கித்தான் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். முதலில் இருக்கும் நோய்களை நீக்கும் பணி முடிய வேண்டும். அதற்குத்தான் மேற்சொன்ன பயிற்சி. எந்த அளவுக்கு நம் நோயைப் பற்றி நாம் நினைத்துக் கவலைப் படுகிறோமோ, அந்த அளவுக்கு அவை நம் உடலில் பலமாக வேரூன்றும். ஏற்கனவே நம் அறியாமை காரணமாகப் பல நோய்களை இப்படி நாம் வேரூன்ற வைத்திருப்போம். அவற்றை வேரறுக்கும் பணியில் நம் வைத்தியர் சிரத்தையாக இருப்பார்.

ஒவ்வொரு நோயையும் குணமாக்க, அதன் தீவிரத்துக்குத் தகுந்தாற்போல் காலமும் நம்பிக்கையும் தேவையாகிறது. உதாரணத்துக்கு, சாதாரண தலைவலி, ஜலதோஷம், போன்ற நோய்களை, ஒரே நாளில் போக்கிக் கொள்ளலாம். ஆனால் நாட்பட்ட நோய்களையும், தீவிர நோய்களையும் குணமாக்க, அதிக நம்பிக்கை தேவைப்படுகிறது. எனவே, எடுத்த எடுப்பில் “என் சர்க்கரை வியாதி இன்றே குணமாகிவிடும்” என்று சொல்லிக்கொண்டு, மாலையில் சென்று சோதித்துப் பார்க்காதீர்கள். ஏனெனில், சின்ன விஷயங்களை சோதித்துப் பார்க்கும்போது, உங்கள் புறமனம் ஒத்துழைக்க வாய்ப்புள்ளது. பெரிய விஷயங்களை உடனே மாற்ற முடியும் என நீங்கள் நினைத்தாலும், அறிவுஜீவியான உங்கள் புறமனம் அதைத் தீவிரமாக எதிர்க்கும். நினைப்பையே ஒப்புக் கொள்ளவில்லையென்றால், நம்புவது எப்படி சாத்தியம்? அதனால், அந்தக் கட்டளை உங்கள் அடிமையின் காதுகளுக்கு எட்டவே முடியாமல் போகும். ஆனால், நீங்களோ, ஆழ்மனதின் திறமையில் அவநம்பிக்கை கொள்ளத் தொடங்குவீர்கள். முதலுக்கே மோசமாய் முடியும். அதனால்தான் சிறிய உபாதைகளில் தொடங்கவேண்டும் என்றேன்.

உண்மை என்னவென்றால், நோய் எவ்வளவு தீவிரமாக இருப்பினும், அதை குணமாக்கப் போவதென்னவோ நம் ஆழ்மனம்தான். மருந்து, மாத்திரை, சிகிச்சை, இவையெல்லாம் எதற்காக? உங்கள் புறமனதை சமாதானம் செய்து, நோய் குணமாகிவிடும் என்று நம்ப வைப்பதற்காக. அந்த நம்பிக்கை வந்தவுடனே, உள்ளுக்குள் இருக்கும் வைத்தியருக்கு செய்தி சென்று சேர்ந்துவிடுகிறது - “நான் குணமாகப் போகிறேன்” என்று. அவரும் சிகிச்சையைத் தொடங்குகிறார். நாம் நினைத்தபடியே நம்மை குணமாக்குகிறார். அவ்வளவுதான்.

என் தோழி ஒருத்திக்கு நிகழ்ந்ததை சொல்கிறேன். அவளுக்கு சிறுவயதில் நீண்ட, அடர்ந்த, அழகிய கூந்தல் இருக்கும். ஒரு சமயத்தில், திடீரென்று வேகமாக முடி கொட்டி, பாதி கூட இல்லாமல் போய் விட்டது. தலையில் பொடுகுத்தொல்லையும் அதிகமாகிவிட்டதென்றும், எந்த ஷாம்பூவிற்கும் சரியாகவில்லை என்றும் புலம்பினாள். பின் சரும மருத்துவரைச் சென்று பார்த்தபோது, தலையில் வந்துள்ளது வெறும் பொடுகு இல்லையென்றும், சொரியாசிஸ் எனப்படும் சரும நோய் என்றும், இதற்கு நிரந்தர நிவாரணம் எதுவுமில்லையென்றும், கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஒரு விலையுயர்ந்த ஷாம்பூ உபயோகப்படுத்தும்படியும் எழுதிக் கொடுத்து அனுப்பிவிட்டார். இதனால் என் தோழி மிகவும் மனமுடைந்து போய் விட்டாள்.

அப்போதுதான் நான் மேற்சொன்ன சுய மருத்துவம் கற்றுக்கொண்டு சோதனை செய்து கொண்டிருந்த சமயம். அவளிடம் எவ்வளவோ முயற்சி செய்தேன். தலைச் சருமம் சரியாகிவிடும் என்று நம்பும்படி வாதாடினேன். ஆனால் அவளால் அது முடியவில்லை. “வைத்தியமே இல்லையென்று மருத்துவரே சொன்ன பின்பு, தானே சரியாகிவிடும் என்று எப்படி என்னால் நம்ப முடியும்?” என்று எதிர்க் கேள்வி கேட்டாள். “அப்படியானால் ஒன்று செய். அலோபதியைத் தவிர எத்தனையோ வைத்திய முறைகள் உலகில் உள்ளன. இந்த மருத்துவருக்குத் தெரியாமல் எவ்வளவோ இருக்கும். உனக்கு சரியான நிவாரணம் என்ன என்பதைக் காட்டிக் கொடுக்கும் படி உன் ஆழ்மனதிற்குக் கட்டளையிடு. அது நடக்கும்.” என்றேன். “என்னால் ஆழ்மனதிற்குக் கட்டளையெல்லாம் இட முடியாது. கடவுளை வேண்டுமானால் வேண்டிக் கொள்கிறேன்.” என்றாள். “இரண்டும் ஒன்றுதான். அதைச் செய்” என்றேன்.

இரண்டு வாரங்கள் கழித்து, அவளிடமிருந்து தொலைபேசி அழைப்பு. “யதேச்சையாக ஒரு நாள் யூட்யூபில் ஒரு வீடியோ பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அந்த விளம்பரம் கண்ணில் பட்டது. தலையில் ஏற்படும் சொரியாஸிஸ் நோயை குணப்படுத்துவது எப்படி என்பது. உடனே அதைப் போட்டுப் பார்த்தபோது, வேப்பெண்ணெய் ஒன்றுதான் அதற்கான சரியான நிவாரணம் என்பதை ஒரு ஆப்பிரிக்கப் பெண் விளக்கமாகச் சொன்னாள். உடனே ஆன்லைனில் வேப்பெண்ணெய் வரவழைத்து, சரியாக ஒரு வாரம் தான் உபயோகப் படுத்தியிருப்பேன். இப்போது என் தலைச்சருமம் பட்டுப் போல் ஆகிவிட்டது. பொடுகு இருந்த சுவடே இல்லை. என்னால் இதை நம்பவே முடியவில்லை. உன் ஆழ்மன வைத்தியம் செய்யவேண்டிய மாயத்தை, வெறும் வேப்பெண்ணெய் செய்துவிட்டது.” என்றாள்.

நான்– “உனக்கு வெறுமனே வந்திருக்க வேண்டிய நம்பிக்கையை, வேப்பெண்ணெய் கொடுத்திருக்கிறது. வேம்பின் மருத்துவ குணங்கள் பற்றி உனக்கு ஏற்கனவே தெரிந்திருந்ததால் அந்த நம்பிக்கை எளிதாக சாத்தியமாயிற்று. எப்படியும் இந்த சாதனையை நிகழ்த்தியது உன் நம்பிக்கைதான். வாழ்த்துக்கள்.” என்றேன்.

நம்பிக்கை என்ற மந்திரச் சொல்லில்தான் அடங்கியுள்ளது, நம் சோதனைகளின் வெற்றி. எனவே, உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த, கீழ்க்கண்ட பயிற்சியைத் தொடங்குங்கள்.

“என் உடல்நிலை நாளுக்கு நாள் முன்னேறி வருகிறது. என் ஆரோக்கியம் எனக்குத் திரும்பக் கிடைத்துவிட்டது.”

இந்த வாக்கியங்களை ஒரு மந்திரம்போல் மனப்பாடம் செய்து கொள்ளுங்கள். அடிக்கடி மனதுக்குள் ஒரே தொனியில், திரும்பத் திரும்ப இதைச் சொல்லிக் கொள்ளுங்கள். முடிந்தால், அடுத்தவரிடமும் சொல்லுங்கள். உடல் நலமின்மையைக் காரணம் காட்டி நீங்கள் ஒதுக்கி வைத்த வேலைகளை மீண்டும் செய்யத் தொடங்குங்கள். “இப்போது இந்த வேலை அவ்வளவு கஷ்டமாக இல்லை.”என்று சொல்லிக் கொள்ளுங்கள். உங்கள் பேச்சும் நடவடிக்கைகளும், நீங்கள் நலம் பெற்று விட்டதாக அடுத்தவர்களை நம்பவைக்கும் விதத்தில் இருக்க வேண்டும். அவர்களது நம்பிக்கை, உங்கள் நம்பிக்கைக்கு மறைமுகமாக உதவி செய்யும். “நான் ஒரு நோயாளி” என்ற சுய பச்சாதாபத்தை ஓட ஓட விரட்டுங்கள். உங்களைத் தொடர்ந்து நோயாளியாக வைத்திருக்கும் கயவன் அவன்தான். “நான் ஒரு பலசாலி. நோய்நொடிகள் என்னை நெருங்குவதற்கு அஞ்சும்” என்று எண்ணத்தொடங்குங்கள். அவ்வாறே ஆகும்.

உங்கள் உடல்நிலையில் ஏற்படும் சிறு சிறு முன்னேற்றங்களைக்கூட எண்ணிப் பார்த்துப் பெரு மகிழ்ச்சி கொள்ளுங்கள். மற்றவர்களோடு அதைப் பகிரும்போது தாராளமாக மிகைப்படுத்திச் சொல்லுங்கள். அதேசமயம் புதிதாக ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் கண்டுகொள்ளாமல் இருங்கள். தானாகவே சரியாகிவிடும் என்று நம்புங்கள்.

மனதில் காட்சிகளை ஓடவிட்டுக் கனவு காணும் முறையையும் நம் ஆரோக்கியத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக, மூட்டு வலியால் சரியாக நடக்கவே முடியாமல் அவதிப் படுபவர்கள், ஒரு பாடலைப் போட்டுவிட்டு, கண்ணை மூடி மனதுக்குள் நடனமாடலாம். (வயது பொருட்டே இல்லை. கனவுதானே? சீக்கிரம் குணமாக வேண்டும் என்றால் நல்ல குத்துப் பாட்டாகப் போட்டுக் கொண்டு துள்ளித் துள்ளி ஆடுங்கள்.)

இந்த முறைகளோடு கூட, உங்களுக்குத் தோன்றும் எந்த முறையிலும் நீங்கள் பயிற்சி செய்யலாம். நலமடைந்துவருகிறோம் என்ற நம்பிக்கையை உங்கள் ஆழ்மனத்திற்குத் தெரியப் படுத்துவதே நம் இறுதிக் குறிக்கோள். மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம். அதற்குள் உங்கள் அனுபவங்களை மறக்காமல், மறைக்காமல் பகிருங்கள். எல்லோருக்கும் உதவியாக இருக்கும்.

..தொடரும்

Comments

இதனை எழுதிவரும் கட்டுரையாளருக்கு எனது பாராட்டுக்கள். சொல்ல வேண்டிய விசயங்களை கோர்வையாக சொல்லி இருப்பதுடன் படிப்பவர்களுக்கு ஒரு உந்துதல் தரும் வகையில் சிறப்பாக எழுதி வருகின்றார். தொடர்ந்து ஆர்வமுடன் படித்து வருகின்றேன். இன்று மனிதர்களுக்கு இருக்கும் 90 சதவீத பிரச்சனைகள் உளவியல் சம்பந்தமானதுதான் இதை உணராத மக்கள் தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு தேடி தவறான இடம் நோக்கி போகின்றார்கள். மனதை ஆள்பவன் உலகை ஆளலாம் என்பதே உண்மை. இந்த கருத்தை வலியுறுத்தும்விதமாக கட்டுரை உள்ளது.

ஐயா, உங்கள் பாராட்டு எனக்கு கிரீடம் வைத்தது போல் பெருமையளிக்கிறது. நீங்கள் தொடர்ந்து படித்து வருவது அறிந்து மகிழ்ந்தேன். உறுப்பினராகப் பதிவு செய்து கொண்டு அதைத் தெரிவித்து என்னை ஊக்கப் படுத்தியமைக்கு ஆயிரம் நன்றிகள். உங்கள் ஆசீர்வாதம் என் எழுத்துக்கு மேலும் வலுவூட்டும். மிக்க‌ நன்றி!

ரொம்பவும் அருமை.
ஆழ்மனதிற்கு சக்தி அதிகம்.
நீ என்ன‌ நினைக்கிறாயோ அதுவாகின்றாய் என்று படித்திருக்கின்றேன். நாம் நம் மனதில் காட்சியாக‌ எதைப் பார்க்கிறோமோ அது உண்மையிலேயே நம் முன் தோன்றும். எனவே, எப்போதும் பாசிட்டிவ் சிந்தனையை வளர்க்க‌ வேண்டும் . பாசிட்டிவ்வாக‌ பேச‌ வேண்டும்.
என் தோழி ஒருத்தி அடிக்கடி நோய்வாய்ப்பட்டு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி வருவாள்.
நாங்கள் அவளை சந்திக்கும் போது அதைப் பற்றி விசாரிப்பதை அவள் விரும்ப‌ மாட்டாள்.
''ஜாலியா பேசலாம்னு வந்தால் நோயைப் பற்றி கேட்கிறீர்களே. வேறு விஷயம் பேசலாம்'' என்று கூறுவாள்.
கைவலி என்று கையை அசைக்காமல் வைத்திருந்தால் வலி அதிகப்படவே செய்யும். அதை விட்டு ம்... அது ஒண்ணும் பண்ணாது. தானே சரியாயிடும்னு நினைப்பவங்களுக்கு அதுவே சரியாயிடும்.

தொட‌ருங்கள் கனிப்ரியா ஆர்வமோடு படிக்கிறோம்.:))

தங்கள் இனிய பாராட்டுக்களால் எனக்கு ஊக்கமளித்தமைக்கு மிக்க நன்றி!அடுத்த வாரம் உறவுகள் குறித்து எழுதுகிறேன். படித்து உங்கள் கருத்தைத் தவறாமல் கூறுங்கள்...

ஹாய் கனிப்ரியா வாய்ப்பே இல்ல கட்டுரை அற்புதம்,என் கணவரும் நீங்கள் கூறியது போல தான் சொல்வார்கள் 'எண்ணங்களே வாழ்க்கை' என்ன அத நான் தான் கேக்க மாட்டேன். இப்ப தெரியுது அது எவ்ளோ பெரிய தப்புனு

புரிஞ்சுக்கிட்டா சந்தோஷம் தீபா. இனியாவது கணவர் பேச்சைக் கேளுங்க‌... :)