பலவீனங்கள் - நல்வாழ்வின் திறவுகோல்

பலவீனங்கள்Nalvalvin Thiravukol

பலவீனங்கள்

பழக்க வழக்கங்கள் நம்மை அடிமைப் படுத்தும் தன்மையுள்ளவை. புகை பிடித்தல், குடிப்பழக்கம், அடிக்கடி டீ/காஃபி குடித்தல், சூதாட்டம், இப்படி எத்தனையோ விரும்பத்தகாத வழக்கங்கள் நம்மை அடிமைப் படுத்தி வைத்திருக்கலாம். அவற்றினின்று விடுபடுவது ஏதோ நடக்கவே நடக்காது என்று நமக்குத் தோன்றலாம். ஆனால் அது மிக எளிதாக சாத்தியமாகும். எப்படி என்று இன்று பார்க்கலாம்.

ஆழ்மனத் தடைகள்:

உண்மையில், பழக்கம் என்பது, திரும்பத் திரும்ப செய்வதன் மூலம் நம் ஆழ்மனத்திற்கு ஏற்கனவே இடப் பட்டுவிட்ட கட்டளையே தவிர வேறொன்றுமில்லை. அந்தப் பழக்கத்தை உடைத்தெறியத் தடையாக நிற்பதும் நம் ஆழ்மனம் தான். ஒரு பழக்கத்தை நாம் கடைப்பிடிக்கும்போது, அதை மிகவும் விரும்பி செய்கிறோம் என்பதுதான் பொருள். அந்த விருப்பம் நம் மனதில் இருந்து நீங்கும் வரை, ஆழ்மனம் அந்தப் பழக்கத்திலிருந்து நம்மை விடுவிக்காது. எவ்வளவுதான் முயன்றாலும், விருப்பம் கூடுமே ஒழியக் குறையாது. “இதை நான் மீண்டும் செய்ய மாட்டேன்.“ என்று பிரகடனம் செய்யும்போதே, “அய்யோ இனி என்னால் இதை செய்ய முடியாதே…. “ என்ற ஏக்கமும் வலியும் ஏற்படுவதை நீங்கள் உணரலாம். அப்படி ஏற்பட்டால், கூடிய விரைவில் உங்கள் வைராக்கியம் உடைந்து போகும் என்பது உறுதி. பிறகு அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட என்னதான் வழி? இதை ஒரு உதாரணம் மூலம் விளக்கினால் நன்கு புரியும் என நினைக்கிறேன்.

ஒரு சாதாரண மனிதனாக இருந்த அஷோக் (பெயர் கற்பனை), எப்படி குடிகாரனானான் என்று முதலில் பார்ப்போம். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த அஷோக், படித்து முடித்து, ஒரு நல்ல கம்பெனியில் வேலையும் பெற்று விட்டான். வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியாகத் தான் இருந்தான். புதிய வேலை கொஞ்சம் கடினமாக இருந்தது. மார்க்கெட்டிங் சம்மந்தப் பட்ட வேலை. அவனுக்குக் கொடுக்கப்பட்ட இலக்குகளை அவனால் முடிக்க முடியவில்லை. தொடர்ந்து மேலாளரிடம் திட்டு வாங்கினான். இதன் காரணமாக இரவில் தூக்கம் வராமல் தவிக்கலானான். ஒருநாள் மிகவும் சோகமாக அன்றைய வேலையை முடித்துவிட்டுக் கிளம்பும் நேரத்தில், உடன் பணிபுரியும் ராஜேஷ் அவனிடம் வந்தான். அவனுக்காகப் பரிதாபப் பட்டதோடு, கொஞ்சம் “சரக்கடித்தால்“ எல்லாம் சரியாகிவிடும் என்றான். சிறிது தயக்கம் இருந்தாலும், மனநிலையில் உடனடி மாற்றம் தேவைப்பட்ட காரணத்தால், அஷோக் ஒப்புக் கொண்டான். அன்று குடித்துவிட்டுத் தன்னை மறந்த நிலையில் தூங்கிப் போனான்.

மறு நாள் எழுந்தவுடன், முந்தைய நாள் நிகழ்வுகள் நினைவுக்கு வர, பல நாட்களுக்குப் பின் நன்றாகத் தூங்கியதற்காக சந்தோஷப்பட்டான். குடிப்பது மனதை லேசாக்கி கவலைகளை மறக்கச் செய்து தூங்கச் செய்கிறது என்று நம்பினான். அன்று முதல், தினமும் வேலை முடிந்தவுடன் ராஜேஷுடன் சேர்ந்து குடிப்பது அஷோக்கின் வழக்கமானது. சில நாட்களில், அவனது கெட்ட பழக்கம் மறைக்கப் பட்டு, அவனுக்குத் திருமணமும் செய்யப்பட்டது. மனைவிக்கு விஷயம் தெரிந்தவுடன், அவள் தினமும் அது குறித்து சண்டை போடத் தொடங்கினாள். அலுவலகப் பிரச்சினைகளோடு, வீட்டிலும் அவனுக்கு நிம்மதியில்லாமல் போனது. ஆனால், குடிப்பதன் மூலம், பிரச்சினைகளை மறந்து நிம்மதியாகத் தூங்கலாம் என்று அவன் நம்பியதால், அதை மட்டும் விடாது செய்துவந்தான். இதனால் மனைவிக்கும் அவனுக்குமான மனமுறிவு அதிகமாகிக் கொண்டே வந்தது.

விடுதலை

கடைசியாக, அஷோக்கின் மனைவி கோபித்துக் கொண்டு தன் தாய் வீட்டிற்குச் சென்றபின்னர், அஷோக் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தான். தன் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட விரும்பினான். ஆனால், அது அவ்வளவு எளிதாக இல்லை. சில நாட்கள் குடிக்காமல் இருப்பான். பிறகு அந்த ஆவல் அடக்க முடியாமல் போகும்போது, மீண்டும் குடிக்கத் தொடங்குவதோடு, முதலில் குடித்ததைவிட அதிகமாக, கட்டுப்பாடின்றிக் குடிப்பான். இது தொடர்ந்து நடந்து வந்ததால், ஒரு மன நல மருத்துவரின் ஆலோசனையை நாடினான். அவர் அவனிடம் “உன் மனைவியை நீ நேசிக்கிறாயா??“ என்று கேட்டார். அவன் தான் தன் மனைவியை மிகவும் நேசிப்பதாகவும், அவளோடு சேர்ந்து வாழவே குடிப்பழக்கத்திலிருந்து விடுபட விரும்புவதாகவும் தெரிவித்தான். அவர் அவனுக்கு கீழ்க்கண்ட பயிற்சியைக் கொடுத்தார்.

தினமும் அவன் வழக்கமாகக் குடிக்கும் நேரம் வரும்போது, வீட்டிலிருக்கும்படியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து, மனக் கண் முன்னே தன் மனைவியைக் கொண்டுவர வேண்டும். அவளோடு மகிழ்ச்சியாக இருந்த சமயங்களை நினைவுக்குக் கொண்டுவந்து, மனதை ஒரு நெகிழ்ச்சி நிலைக்குக் கொண்டு செல்லவேண்டும். பின்னர், தான் குடிப்பழக்கத்தை விட்டுவிட்டதால், மனம் மகிழ்ந்து தன் மனைவி தன்னைப் பாராட்டுவது போல் கற்பனை செய்யவேண்டும். மனைவியோடு சந்தோஷமாக எப்படியெல்லாம் வாழவேண்டும் என்று கற்பனை செய்தானோ, அதையெல்லாம் மனத்திரையில் பார்த்து ரசிக்க வேண்டும். இப்படியெல்லாம் கற்பனை செய்யும் போது, இவை நடக்கவில்லையே என்ற ஏக்கமோ, வருத்தமோ இல்லாமல், இனி வருங்காலத்தில் வரப்போகும் உறுதியான நிகழ்ச்சிகள் என்று மகிழ்ச்சியாக, அனுபவித்துப் பார்க்கவேண்டும். தனக்குப் பிறக்கப் போகும் குழந்தைகளோடு தானும் மனைவியும் விளையாடி மகிழ்வது போன்ற காட்சிகளையும் கண்டு களிக்க வேண்டும். குடிக்க வேண்டும் என்ற நினைவு தோன்றும்போதெல்லாம், அதைவிட வலிமையாக மனைவியுடனான இனிமையான எதிர்காலம் பற்றிய கனவு அவனை ஆட்கொள்ள வேண்டும். இப்படி மனக்காட்சியின் மூலம், ஒரு வலிமையான மாற்றுக் கட்டளையை ஆழ்மனதுக்கு அவன் அன்றாடம் அனுப்பிக் கொண்டிருந்தால், சில நாட்களில், குடிக்கும் எண்ணம் எழாமலே போய்விடும். இந்த முறையைப் பின்பற்றி அவன் வெற்றியும் கண்டான்.

அதாவது, ஒரு பலவீனம் உங்களைத் தாக்கும்போது, அதை நினைத்து நினைத்து வேதனைப் படுவதும், “இனி நான் குடிக்க மாட்டேன்“ என்று தனக்குத் தானே கூறிக்கொள்வதும், “குரங்கை நினைக்காமல் மருந்து சாப்பிட வேண்டும்“ என்பது போலத்தான். ஒன்றை செய்யக்கூடாது என்று நினைப்பதைவிட, வேறொன்றை செய்யவேண்டும் என்று அதைவிட பலமாக நினைப்பது பயனுள்ளதாக இருக்கும். அதுவும் உங்களுக்குப் பிடித்தமான, அதே சமயம் தீங்கில்லாத விஷயமாக இருந்தால், மிகவும் நன்றாக இருக்கும். மேற்கண்ட உதாரணத்தில், மனைவியுடன் சந்தோஷமாக வாழும் கனவு, அவனுக்குப் பிடித்தமான, அதே சமயம் நல்லதொரு விஷயமாக அமைந்ததால், அவன் வெற்றி பெற்றான். அவன் அந்தப் பயிற்சியை மேற்கொள்ளாமலிருந்தால், குறிப்பிட்ட நேரம் வந்தவுடன், அவன் மனம் குடிப்பதால் கிடைக்கும் சந்தோஷம் பற்றி அவனை நினைக்கத் தூண்டும். எவ்வளவுக்கெவ்வளவு அப்படி செய்யக் கூடாது என்று அவன் நினைக்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு வலிமையாக அந்த எண்ணம் அவனைத் துரத்தும். அதைவிட வலிமையாக அவனை ஈர்க்கக் கூடிய வேறு ஒரு நினைவு அவனை ஆட்கொள்ளும்போது மற்ற நினைவுகள் வலிமையற்றுப் போகின்றன.

எனக்குத் தெரிந்த ஒரு கல்லூரி மாணவன், கணக்கில் மிகுந்த ஆர்வம் உள்ளவன். புதிர்களுக்கு விடைகாண்பது அவனுக்குப் பிடித்த ஒரு பொழுதுபோக்கு. எப்படியோ அவனுக்கு புகை பிடிக்கும் பழக்கம் வந்துவிட்டது. அதிலிருந்து விடுபட முடியாமல் அவன் தவிப்பதும், அவனது பெற்றோர் அவனைக் கண்டபடியெல்லாம் திட்டித் தீர்ப்பதும், பார்க்கவே மிகவும் பாவமாக இருந்தது. ஒருநாள் அவனோடு பேசிக் கொண்டிருந்தபோது, ஒரு யோசனை தோன்றியது. “தம்பி, எப்போதெல்லாம் உனக்குப் புகைக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ, அப்போதெல்லம் மிகக் கடினமான ஒரு கணக்குப் புதிருக்கு விடை காண முயற்சி செய். அது உனக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு என்பதால், புகைப் பழக்கத்துக்கு சரியான மாற்றாக இருக்கும்.“ என்றேன். அவனும் ஒப்புக் கொண்டான். சில நாட்களிலேயே, அவன் புகைப் பழக்கத்திலிருந்து நிரந்தரமாக விடுபட்டதோடல்லாமல், கணக்குப் புதிர்களுக்கு விடையளிக்க ஒரு இணைய வலைப் பக்கத்தையும் சொந்தமாக நிறுவிக் கொண்டான். அதன் மூலம் அவனுக்கு வருமானமும் வரத் தொடங்கியபோது, அவனும் அவன் பெற்றோரும், அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

என் வாழ்க்கையிலேயே ஏற்பட்ட ஒரு சுவையான அனுபவம் பற்றிக் கூறுகிறேன். என் கணவர் திருமணமான புதிதில் மிகுந்த முன்கோபியாக இருந்தார். சிறு சிறு தவறுகளுக்குக் கூட, மிகவும் கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்துத் திட்டுவார். ஆரம்பத்தில், எனக்கும் கோபம் வரும். நானும் பதிலுக்கு சத்தம் போட, பெரிய சண்டையில் முடியும். என் மகள் பிறந்த பின், குழந்தையின் முன்னால் பெற்றோர் சண்டையிடுவது சரியல்ல என்று தோன்றியதால், நான் கோபத்தை அடக்கிக் கொண்டு மௌனம் காக்க ஆரம்பித்தேன். அதனால் சண்டைகள் தவிர்க்கப் பட்டாலும், அவரது போக்கில் மாற்றம் ஏதும் இல்லை. எத்தனையோ நற்குணங்கள் இருந்தாலும், இந்த ஒரு கெட்டபழக்கத்தால், எல்லோரிடமும் எரிந்து விழுந்து, கெட்ட பெயர் சம்பாதித்துக் கொள்கிறாரே என்று நினைத்தால் வருத்தமாக இருக்கும். அவர் நல்லகுணமாக இருக்கும்போது இதைப் பக்குவமாக எடுத்துச் சொன்னால், “நானும்தான் கோபப் படாமலிருக்க முயற்சி செய்கிறேன். முடியவில்லையே“ என்ற பதில்தான் வரும்.

என் மகளுக்கு ஒன்றரை வயது நடக்கும் போது, ஒருநாள் அவள் என் இடுப்பில் இருந்த சமயம், அவர் எதற்கோ கோபம் கொண்டு கத்தியபடியே என் அருகில் வந்தார். குழந்தை பயந்துபோய், வீறிட்டுக் கத்தத் தொடங்கி விட்டாள். அவளை சமாதானம் செய்வதற்குள், எங்களுக்குப் போதும் போதுமென்று ஆகிவிட்டது. அன்றிலிருந்து, அவர் அருகில் வந்தாலே, அவர் முகத்தை உற்று உற்றுப் பார்ப்பதும், பயந்து என்னிடம் ஓடி வருவதுமாக இருந்தாள். அதன் பின்னர், அவள் வேறு விளையாட்டுக்களில் மும்முரமாக இருந்தாலும், அவர் கோபத்தில் கத்தும் சத்தம் கேட்டால் உடனே பெருங்குரலெடுத்து அழத்தொடங்கினாள். அவர் குழந்தையின் இந்த நிராகரிப்பால், மிகவும் நொந்து போனார். கோபத்தின் உச்சியில் பயங்கரமாக இருக்கும் அவர் முகம், குழந்தையின் அழுகுரல் கேட்டவுடன், ஒருவித பயம் கலந்த ஏமாற்றத்திற்கு மாறுவதைப் பார்க்க, வேடிக்கையாக இருக்கும். சிரிப்பை அடக்கிக் கொள்வேன்.

ஆனால், யாராலும் மாற்ற முடியாது என்று நினைத்திருந்த அவரது முன்கோபம், குழந்தைப் பாசத்தால் ஒரே நாளில் மாறிப் போனதுதான் ஆச்சரியம். அதன் பின் தன்னையறியாமல் கத்திவிட்டால் கூட, குழந்தை அருகில் இருக்கிறாளா என்று அவர் சுற்றுமுற்றும் பார்க்க, நான் அவரது பயம் கண்டு விழுந்து விழுந்து சிரிக்க, அந்தக் கோபச் சூழலே மாறிவிடும். படிப்படியாக அவர் அந்த வழக்கத்திலிருந்து விடுபட்டு, பொறுமைசாலியாகிவிட்டார்.

எந்த ஒரு கெட்ட பழக்கத்திற்கும், ஒரு மாற்று உண்டு. அதுவும் நல்ல மாற்றாக இருக்க வேண்டும். அதைக் கண்டுபிடித்துவிட்டால், கெட்ட பழக்கத்திலிருந்து எளிதாக விடுபடலாம். வெறும் வைராக்கியம் என்று சொல்லிக் கொண்டு, விடமுடியாத அந்தப் பழக்கத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பது வைராக்கியத்தைத் தகர்த்துத் தவிடுபொடியாக்கிவிடும். உங்களிடம் இருக்கும் பலவீனங்களைக் கண்டறிந்து அவற்றைக் களைந்தெறிய முயற்சி செய்யுங்கள். அனுபவங்களை மறக்காமல் என்னுடன் பகிருங்கள்.

.. தொடரும்

Comments

தோழி கனிப்பிரியா நல்வாழ்வின் திறவுகோல் எனும் தொடர் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.முன்னைய பதிவுகளினையும் வாசித்திருக்கிறேன்.எனக்கு ஒரு
என்னையே பிடிக்காத‌ குணம் இருக்கிறது.எப்பொழுதும் எதிர்மறையாகவே சிந்திக்கிறது.இப்படி சிந்திப்பது தேவையற்றது என்பது எனக்கு நல்லாகவே தெரியும்.இருந்தாலும் திடிர் திடீரென‌ இப்படியான‌ சிந்தனைகள் என்னை துரத்திக்கொண்டேயிருக்கிறது.3 நாட்கள் நன்றாக‌ இருப்பேன் அடுத்த‌ 3 நாட்கள் மறுபடியும் தூரத்தும்.என் கணவர்கூட‌ கேட்பார் நன்றாகதானே இருந்தாய் திடிரென‌ ஏன் மனதை போட்டு குழப்புகிறாய் .இதனால் எனக்கு மகிழ்ச்சியாகவே இருக்க‌ முடிவதில்லை.உடற்சோர்வும் சில‌ நாட்களில் அதிகமாகவே இருக்கிறது.கடவுளை மனதாரா வணங்கியும் இதிலிருந்து என்னால் மீள‌ முடியவில்லை மருத்துவமனைக்கு போனால் மருத்துவர் உனக்கு ஒன்னுமேயில்லை நல்லத்தானே அம்மா இருக்கிறாய் என‌ கூறுவார்கள்.ஒருரிரு நாட்கள் ரொம்ப‌ மகிழ்ச்சியாக‌ இருந்தாலும் இந்த‌ மகிழ்ச்சி தேவையற்றது என‌ எனக்கு தோனும்.ஏன் இப்படி இருக்கிறது என‌ எனக்கே புரியவில்லை.வெளியிலிருந்து பார்ப்பவர்கள் அனைவருக்கும் நான் மகிழ்வாகவே இருக்கிறேன் என‌ தோன்றுகிறது ஆனால் நான்?? இந்த‌ எதிர்மறை எண்ணங்களில் இருந்து விடுபட்டு நிம்மதியாக‌ வாழ‌ ஏதாவது வழிமுறையிருந்தால் கூறுங்கள் தோழியே.உங்கள் பதிவில் பிடித்ததை
பின்பற்றுங்கள் என‌ கூறியிருக்கிறீர்கள்.இருந்தாலும் என் பிரச்சினைக்கு உங்களிடமிருந்து ஒர் நல்ல‌ பதிலை அறிவுரையை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
மிகவும் நன்றி தோழி

தளிர்

உங்கள் பிரச்சினைக்கு வேறு ஏதோ காரண‌ம் இருக்க‌ வேண்டும் எனத் தோன்றுகிறது. மகிழ்ச்சியாக‌ இருக்கவே அனைவரும் விரும்புவார்கள்.
//ரொம்ப‌ மகிழ்ச்சியாக‌ இருந்தாலும் இந்த‌ மகிழ்ச்சி தேவையற்றது என‌ எனக்கு தோனும்.ஏன் இப்படி இருக்கிறது என‌ எனக்கே புரியவில்லை.//
எனக்கும் புரியவில்லை. யோசித்து பதிலளிக்கிறேன். உங்களைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்தால் பதிலளிக்க‌ வசதியாக‌ இருக்கும். ஆனால் சொந்த‌ விஷயங்களை இப்படிப் பொது அரங்கில் கேட்பது தவறு என்பதால் கேட்க‌ வில்லை. இது போன்ற‌ மனநிலைக்கு என்ன‌ காரணம் என்று படித்துப் பார்க்கிறேன். பிறகு வருகிறேன். என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

கனிப்ரியா
ஓரு மனிதன் தனக்கு தேவையற்ற பழக்கவழக்கங்களிலிருந்து எப்படி விடுதலை பெறமுடியும் என்பதை உங்கள் கட்டுரைமூலமாக அழகாக விளக்கியிருக்கிறீர்கள்.. உண்மையில் அணைவரும் படித்து பயன்பெறவேண்டிய பதிவு
நன்றி கனிப்ரியா...

பரணிகா:)

அன்பு கனிபிரியா,

அற்புதமான‌ கருத்துக்கள். அனைவருக்கும் தேவையான‌ வழிகாட்டுதல்.

படிப்பதற்கு சுவாரசியமாகவும், எளிமையாகவும், ஆர்வத்தைத் தூண்டும் விதத்திலும் எழுதும் ஆற்றல் உங்களுக்கு வசப்பட்டிருக்கிறது.

6 பகுதிகளையும் தொடர்ந்து படிக்கிறேன், பல‌ முறை வாசித்துக் கொண்டிருக்கிறேன், அது மட்டுமல்ல‌, நீங்கள் சொல்லும் பயிற்சிகளையும் தொடர்ந்து செய்கிறேன்.

இன்னும் நிறைய‌ கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள‌ ஆவலாக‌ இருக்கிறது. இருந்தாலும் நேரம் இல்லாத‌ காரணத்தினால் அதிகம் டைப் செய்ய‌ முடியவில்லை.

தொடர்ந்து பின்னூட்டம் இடுவதற்கு எனக்கு சில‌ மாதங்கள் ஆகும். உங்களது எல்லாப் பகுதிகளிலும், (ஓரிரண்டு மாதங்களுக்குப் பிறகு,) எனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள நினைத்திருக்கிறேன். அவசியம் வருகிறேன்.

தொடர்ந்து எழுதுங்கள், உங்களது கருத்துக்கள், படிப்பவர்களின் சிந்தனையிலும் வாழ்க்கையிலும் நல்ல‌ மாற்றங்களையும் அருமையான‌ முன்னேற்றத்தையும் கொண்டு வரும் என்று உறுதியாக‌ நம்புகிறேன்.

மீண்டும் மீண்டும் மனம் நிறைந்த‌ பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

அன்புடன்

சீதாலஷ்மி

//உண்மையில், பழக்கம் என்பது, திரும்பத் திரும்ப செய்வதன் மூலம் நம் ஆழ்மனத்திற்கு ஏற்கனவே இடப் பட்டுவிட்ட கட்டளையே தவிர வேறொன்றுமில்லை//
உண்மை சிந்திக்க‌ வைக்கும் வரிகள்.
தொடருங்கள். தொடர்ந்து நாங்களும் வருகிறோம்.:))

நேரமில்லாத போதும் இதற்காக நேரம் ஒதுக்கி மனம் நிறையப் பாராட்டிய உங்களுக்கு மிக்க நன்றி சீதாலக்ஷ்மி. உங்கள் வாழ்த்துக்களால் புதிய பலம் கிடத்தது போல் உள்ளது...

வாரந்தோறும் பாராட்டி மனம் நிறைய வைக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் நிகிலா... நீங்கள் தரும் தைரியத்தில்தான் எழுத முடிகிறது... :)