செல்வங்கள் - நல்வாழ்வின் திறவுகோல்

செல்வங்கள்Nalvalvin Thiravukol

செல்வங்கள்

மனமகிழ்ச்சிக்கான மிக முக்கியத் தேவைகளில் செல்வங்களும் சேரும். அதனால்தான் பெரியவர்கள் வாழ்த்தும்போது “பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க” என்று வாழ்த்தினார்கள். வறுமை பிரபஞ்சத்தின் கோட்பாடுகளுக்கு எதிரானது. எல்லோருக்கும் தேவையானதை விட அதிகமான செல்வங்கள் இங்கு கொட்டிக் கிடக்கின்றன. உண்மையில் நம் எண்ணங்களை சீரமைத்தால் அவற்றை இஷ்டம்போல் அனுபவிக்கலாம்.

வறுமைக்கான முக்கியக் காரணம், பணத்தைப் பற்றிய நம் தவறான கோட்பாடுதான். பணம் என்பது பாவத்தின் அடையாளமாக நமக்கு போதிக்கப் படுகிறது. பணக்காரனாக வேண்டும் என்று எண்ணுவது, பேராசையின் வெளிப்பாடாகக் கருதப் படுகிறது. ஏன் அப்படி எண்ண வேண்டும்? பணம் என்பது, வெறும் கருவி மட்டும்தான். ஒரு தீக்குச்சி எப்படி விளக்கேற்றவும், வீட்டை எரிக்கவும் பயன்படுகிறதோ, அப்படித்தான் பணமும் நல்ல வழிகளிலும், தீய வழிகளிலும் பயன்படுத்தப் படுகிறது. நமக்குத் தெரிந்த பணக்காரர்கள் ஒருவேளை தவறான மனிதர்களாக இருக்கலாம். அவர்கள் பணம் சேர்த்த விதமும் தவறாக இருக்கலாம். அதற்காகப் பணம் அப்படிப்பட்ட தன்மையுடையது என்றோ, பணம் இருந்தாலே பாவம் செய்யத் தூண்டும் என்றோ நினைப்பது தவறு.

எப்படி தன் நோயைப் பற்றியே நினைப்பவன் மேலும் மேலும் நோய்வாய்ப் படுகிறானோ, அப்படியே தன் வறுமையைப் பற்றியே சிந்திப்பவன் மேலும் மேலும் வறுமையில் மூழ்குகிறான். “என்னிடம் பணம் இல்லை. நான் வறுமையில் வாடுகிறேன். கடனில் மூழ்கிக் கொண்டிருக்கிறேன்.” என்பது போன்ற வாக்கியங்களை தயவுசெய்து பேசாதீர்கள். ஒரு சிலர், வசதி இருந்தால் கூட, தன்னடக்கம் காரணமாக, இப்படிப்பட்ட வார்த்தைகளைப் பேசுவார்கள். சிலர், “கண் பட்டு விடும்” என்று பயந்து, “என்னிடம் ஒன்றுமே இல்லை” என்று சொல்லிக் கொள்வார்கள். யாரையாவது சந்திக்கும்போது, “ எப்படி இருக்கிறாய்?” “ நன்றாக இருக்கிறாயா?” என்பது போன்ற சம்பிரதாய விசாரணைகளுக்கு, “ஏதோ இருக்கிறேன்....” என்று சலிப்பாக பதில் சொல்வார்கள். “ஏன் அப்படி சொல்கிறாய்?” என்று அடுத்தவர் கேட்டுவிட்டால் போதும். தன் பஞ்சப் பாட்டை ஆரம்பித்து விடுவார்கள். கேட்டவருக்கு “ஏன்டா கேட்டோம்!” என்று ஆகிவிடும்.

உண்மை எப்படி இருந்தாலும், யாராவது “எப்படி இருக்கிறாய்?” என்று விசாரித்தால், “நன்றாக இருக்கிறேன்...” என்று முகமலர்ச்சியுடன் பதில் சொல்லுங்கள். தன்னடக்கம் தேவைப் பட்டால், “ உங்கள் ஆசீர்வாதத்தால் நன்றாக இருக்கிறேன்.” என்று சந்தோஷமாகச் சொல்லுங்கள். அதை விடுத்து, அழுது வடியும் முகத்துடன் உங்கள் கஷ்டங்களைப் புலம்பத் தொடங்கினால், நாளை அவர் உங்களைப் பார்த்தால்கூடப் பார்க்காத மாதிரி போய் விடக் கூடும்.

நான் சிறுமியாக இருக்கும்போது, என் வீட்டுக்கருகில் ஒரு பெட்டிக் கடை இருக்கும். அந்தக் கடைக்காரர், எதைக் கேட்டலும், “இல்லை” என்று சொல்ல மாட்டார். ஒருநாள் என் அம்மா என்னைத் தேங்காய் வாங்கி வருமாறு அனுப்பினார். அந்தக் கடைக்காரரோ, தேங்காய் வேண்டுமென்று கேட்டால், “பச்சைமிளகாய் இருக்கு” என்று பதில் சொல்கிறார். காது கேட்கவில்லையோ என்று சந்தேகித்து நான் திரும்பத் திரும்பக் கேட்க, அவர் “பச்சை மிளகாய் இருக்கு கண்ணு. போய் அம்மா கிட்ட சொல்லு” என்று என்னைத் துரத்தி விட்டார். நான் நொந்து போய் அம்மாவிடம் நடந்ததைச் சொல்ல, அவர் சிரித்துவிட்டு விளக்கம் சொன்னார். “கடைக்காரர்கள் அப்படித்தான். வியாபாரம் நடக்கும் இடத்தில், “இல்லை” என்ற சொல்லை உச்சரிக்கக் கூடாதாம். இல்லாவிட்டால் கடையில் தரித்திரம் குடியேறி விடுமாம். அதனால் தேங்காய் இல்லை என்று சொல்வதற்கு பதிலாக, பச்சை மிளகாய் இருக்கிறது என்று சொல்வார்கள். நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும்.” என்றார். எனக்கு அப்போது வேடிக்கையாக இருந்தது. வளர்ந்த பின், அவரைப் பார்க்கும்போதெல்லாம், “மூடநம்பிக்கை கொண்ட மனிதர்” என்ற எண்ணம் வரும். ஆனால், அவரது நம்பிக்கையில் எவ்வளவு அர்த்தம் இருந்தது என்று பின்னர்தான் புரிந்து கொண்டேன்.

வார்த்தையில் என்ன இருக்கிறது? நெருப்பென்றால் வாயா சுடும்? இல்லை என்று சொல்வதால் இல்லாமை வந்துவிடுமா என்ன? என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், வார்த்தைகளுக்கும் வலிமை உண்டென்பது தான் நிஜம்.

எண்ணங்கள்தான் பெரும்பாலும் வார்த்தை வடிவம் பெறுகின்றன. ஆனால் வார்த்தைகளும் சில சமயங்களில் எண்ணங்களைத் தூண்டும் வேலையைச் செய்கின்றன. வறுமையைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்து, வளமையைப் பற்றிப் பேசுங்கள். “இல்லாததைப் பற்றி எப்படிப் பேசுவது?” என்பீர்கள். உங்களைவிடக் கீழே இருப்பவர்களைப் பாருங்கள். என் அம்மா என் சிறுவயதில் ஒரு பாடல் வரியை அடிக்கடி சொல்வார்.

“தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை அம்மா பெரிதென்று அகமகிழ்தல் வேண்டும்” என்பார்.

இது எந்தப் பாடலில் இருந்து எடுக்கப்பட்டது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் முற்றிலும் பொருள் பொதிந்த வரிகள். முந்தைய அத்தியாயத்தில் நாம் பார்த்தது போல, உங்களிடம் இருக்கும் சொற்ப உடமைகளுக்காகக் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். தினமும் மூன்று வேளையும் பசியின்றி உண்ண முடிகிறதே என்று சந்தோஷப் படுங்கள். குழந்தைகளுக்குக் கல்வி புகட்ட முடிகிறதே என்று மகிழுங்கள். இருப்பவற்றுக்கு நன்றி செலுத்துங்கள். இல்லாதவற்றை நினைத்து ஏங்குவதற்கு பதிலாக, அதையும் அனுபவிப்பதாக எண்ணிக் கனவு காணுங்கள். கனவுகளின் வலிமை நாம் அறிந்ததே. அதை ஏன் செல்வம் சேர்க்க நாம் பயன்படுத்தக் கூடாது?

உங்களுக்கு சுகபோகங்களில் நாட்டம் இருந்தால், அது குறித்து வெட்கமோ, அச்சமோ கொள்ளத் தேவை இல்லை. உங்கள் சுக சவுகரியங்கள் யாருக்கும் தீங்கிழைக்காத வரை, அவை உங்கள் பிறப்புரிமை என்றே சொல்லலாம். எனவே, கனவை இன்றே நீங்கள் தொடங்கலாம். தினமும் தூங்குவது வெறும் பாயாக இருந்தாலும், கனவில் நீங்கள் காண வேண்டியது, ஒரு பெரும் பணக்காரனின் குளுகுளு அறையும், படுத்தவுடன் ஆளை விழுங்கும் மெதுமெது மெத்தையும் தான். சுகமாக அந்தக் கனவோடு தூங்கிப் பழகுங்கள். சில ஆண்டுகளில் (உங்கள் கனவு வலிமையாக இருந்தால், சில மாதங்களில் கூட) நீங்கள் நிஜத்தில் அந்த சுகத்தை அனுபவிப்பது உறுதி.

சாத்தியக் கூறுகள் பற்றி யோசிக்க வேண்டிய வேலை உங்களுடையது அல்ல. அவற்றை அமைத்துக் கொடுக்கும் பொறுப்பை உங்கள் ஆழ்மனம் ஏற்றுக் கொள்ளும். கனவு காணும் வேலை மட்டுமே உங்களுடையது. அது சுகம்தானே? அதை ஏன் செய்யக் கூடாது? கனவு காண்பது மட்டுமல்ல. திட்டமிடுங்கள். “அடுத்த விடுமுறைக்கு, என் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு நான் தாஜ்மஹால் பார்க்கப் போவேன்.” “என் மகன் ப்ளஸ் டூ வில் நல்ல மதிப்பெண் பெற்று விட்டால், அவனுக்குப் பிடித்த ஐஃபோன் வாங்கிப் பரிசளிப்பேன்.” – இது போல, சில முடிவுகளைத் திட்டவட்டமாக மனதில் எண்ணிக் கொள்ளுங்கள். வெறும் முடிவுகள் மட்டுமல்ல. தாஜ்மஹால் போவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுங்கள் (வெளியில் சொல்லாமல்தான்). எப்படிப் போவது, யார்யாரை அழைத்துப் போவது, எத்தனை நாட்கள் ஒதுக்குவது, எங்கு தங்குவது, சுற்றிலும் பார்க்க வேண்டிய இடங்கள் எவை, என்பது போன்ற தகவல்களைத் திரட்டுங்கள். இந்தத் திட்டமிடல் எல்லாவற்றிலும், உங்களை ஒரு செல்வந்தராக எண்ணுங்கள். கஞ்சத்தனமாக இல்லாமல், தாராளமாக நிதி ஒதுக்குங்கள். (நிதி எப்படி வரும் என்பதைப் பற்றி யோசிக்க வேண்டாம். வரவேண்டிய நேரத்தில் தானாக வரும்.) அலுவலகத்தில் அந்த சமயத்தில் விடுப்பு கிடைக்குமா என்று யோசியுங்கள். உண்மையிலேயே வங்கியில் பணத்தை வைத்துக் கொண்டு திட்டமிடுபவன் எப்படி யோசிப்பானோ, அப்படியே இருக்க வேண்டும் உங்கள் எண்ணங்கள். பிறகு பாருங்கள். நீங்கள் திட்டமிட்டபடியே தாஜ்மஹால் சுற்றுப் பயணம் போகிறீர்களா இல்லையா என்று. நூற்றுக்கு நூறு நிச்சயமாய் அது நடக்கும் என்கிறேன் நான்.

கார் வாங்குவது உங்கள் நீண்டநாள் கனவாக இருந்தால், கண்களை மூடி உங்கள் கனவுக் காருக்குள் ஓட்டுநர் இருக்கையில் உங்களைப் பொருத்திக் கொள்ளுங்கள். கைகளும், கால்களும், ஏன், உங்கள் முழு உருவமும் அந்த சிலிர்ப்பை அனுபவிக்க விடுங்கள். இப்போது காரை ஸ்டார்ட் செய்து சாலையில் சீற விடுங்கள். அந்த அனுபவத்தை நொடிநொடியாக ரசியுங்கள் - நேரம் கிடைக்கும்போதெல்லாம். கார் ஓட்டிய திருப்தியோடு தினமும் தூங்குங்கள். நிச்சயம் விரைவில் உங்கள் கனவுக் கார் உங்கள் கைவரும்.

நம்மில் பெரும்பாலோர், இவைபோன்ற கனவுகளைக் காண அஞ்சுகிறார்கள். இருப்பதை வைத்துத் திருப்தியாக வாழ வேண்டும் என்று நம் பெற்றோர் நமக்கு சொல்லிக் கொடுத்ததுதான் அதற்குக் காரணம். இல்லாததை எண்ணி ஏங்குவதால், இருப்பதைக் கூட அனுபவிக்க முடியாமல் போய் விடும் என்று நாம் அச்சுறுத்தப் பட்டிருக்கிறோம். சுகபோகங்களை நினைத்துக் கனவு காண்பது பேராசை என்று கற்பிக்கப் பட்டிருக்கிறோம். அது அப்படியல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

ஏற்கனவே சொன்னதைப் போல், இருப்பதை நினைத்துத் திருப்திப் படுவது நல்லதுதான். ஆனால், “இதுவே போதும்” என்ற முறையில் அல்ல. “இது கிடைத்ததற்காக நான் மகிழ்கிறேன். கொடுத்த கடவுளுக்கு நன்றி” என்ற விதத்தில். அப்படி நினைப்பதால், மேலும் பல நன்றிகளை சொல்லும் வாய்ப்பை உங்கள் ஆழ்மனம் ஏற்படுத்திக் கொடுக்கும். இல்லாததை நினைத்து ஏங்குவதற்கும், இருந்தால் எப்படி இருக்கும் என்று கனவு காண்பதற்கும், நிறைய வித்தியாசம் இருக்கிறது. “இல்லையே” என்ற ஏக்கம் வருத்தம் தரக் கூடியது. “இருந்தால்...” என்ற கனவு மகிழ்ச்சி தரக் கூடியது. மேலும், கனவு காணும்போது, “கிடைத்துவிடும்” என்ற நம்பிக்கையும் அதில் அடங்கியிருக்கிறது. எனவே கனவு காணுங்கள். அச்சமின்றி, குற்ற உணர்வு ஏதுமின்றி, ஆசையோடு கனவு காணுங்கள்.

மற்றவரை மகிழ்விப்பதில் சுகம் காணும் இயல்பு உங்களுக்கு இருந்தால், இன்னும் நன்று. கேட்பவருக்கெல்லாம் தாராளமாக உதவி செய்து, அவர்களை மகிழ்விப்பது போல் கனவு கண்டு மகிழுங்கள். செல்வத்தை ஈர்க்க அது ஒரு சிறந்த வழியாகும்.

மற்றபடி, நீங்கள் விரும்பிய செல்வம் உங்களை வந்தடையும் வழி, உங்கள் இயல்புக்குத் தக்கபடியே இருக்கும். நீங்கள் சிறந்த மனப் பக்குவம் உடைய, நேர்மையான மனிதராக இருந்தால், உங்கள் செல்வமும் எந்த உறுத்தலுமின்றி, நேர்மையான வழியிலேயே உங்களை வந்தடையும். நேர்மையைப் பற்றிக் கவலைப் படாத மனிதர்களுக்கு, தவறான வழிகளிலும் பணம் சேரும் வாய்ப்பு உண்டாகும். இதைத்தான் நாம் பெரும்பாலும் பார்க்கிறோம். பணம் பற்றிய ஒரு எதிர்மறை எண்ணம் உருவானதற்கு இதுதான் காரணமும் கூட. எனவே, வசதிகளை விரும்பும் முன், அதற்கான தகுதியை மனதுக்கு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். நேர்மை, அன்பு, இரக்கம், உண்மை போன்ற நேர்மறை எண்ணங்களால் உங்கள் மனதை வலுப் படுத்திக் கொள்ளுங்கள். செல்வந்தராவதை உங்கள் பயிற்சியின் கடைசிப் படியாக வைத்துக் கொள்ளுங்கள்.

தொடரும்...

Comments

ஒவ்வொரு வரியையும் ரசித்து படித்தேன்...//வசதிகளை விரும்பும் முன், அதற்கான தகுதியை மனதுக்கு ஏற்படுத்தி கொள்ளுங்கள்// எவ்வளவு அருமையான வரிகள். உண்மையில் வாழ்வில் பிரச்சனையாக இருப்பதாக இங்கு வந்து சொல்பவர்கள் உங்கள் பதிவுகளை படித்தால் நிச்சயம் தெளிவு பெறுவார்கள்.. இன்னும் நிறைய நிறைய எழுத வாழ்த்துக்கள் கனி...

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

அன்புள்ள‌ கனிக்கு,
அருமையான‌ கட்டுரை, மனம் நினைப்பது தான் செயல்
வடிவம் பெரும் என்பதைத் தான் பெரியோர் மனம் போல‌ மாங்கல்யம் என்று கூறியிருப்பார்கள் போல‌. நல்ல‌ வார்த்தைகளையே பேசவேண்டும் அப்படிப்
பேசும்போது ததாஸ்து தேவதைகள் அவற்றை அப்படியே நடக்கட்டும் என்று
வானில் இருந்து வாழ்த்தும். ஆகையால் எப்போதும் நல்லதையே பேசவேண்டும்
கெட்டதை எப்போதும் பேசக்கூடாது என்று கண்டிப்பார்கள். அதனால்தான்
வள்ளுவரும்" உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் மற்று அது / தள்ளினும் தள்ளாமை நீர்த்து" என்று கூறினார் போல‌.
"தம்மின் மெலியாரை நோக்கித் தமது உடைமை
அம்மா! பெரிதென்று அகமகிழ்க‍_தம்மினும்
கற்றாரை நோக்கிக் கருத்தழிக‌, கற்றதெல்லாம்
எற்றே இவர்க்கு நாம் என்று" ****** நீதிநெறி விளக்கம் 14 வது பாடல்
பாடல் ஆசிரியர் குமரகுருபரர்.
கல்வியின் பெருமை பற்றிக் கூறி மேன்மேலும் கல்வியைக் கற்றுக் கொண்டே
இருக்கவேண்டும் என்று வலியுறுத்திய‌ பாடல்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

இனிமையான‌ வார்த்தைகளால் எப்போதும் பாராட்டி ஊக்குவிக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த‌ நன்றிகள் அபி... :)

அன்புள்ள‌ பூங்கோதை அம்மாவுக்கு, உங்கள் தமிழறிவு என்னை சிலிர்க்க‌ வைக்கிறது. நீண்ட நாட்களாக‌ இந்த‌ வரிகள் எந்தப் பாடலில் வருகின்றன‌ என்று தெரிந்து கொள்ள‌ ஆவல். நான் என்னிடம் இல்லாத‌ எதையாவது வேண்டும் என்று கேட்கும்போது என் அம்மா இதைச் சொல்லி என்னை அமைதிப் படுத்தி விடுவார்கள். அவர்களுக்கும் முழுப்பாடல் தெரியாது. இன்று தெரியப்படுத்திய‌ உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. கற்றறிந்த‌ உங்களைப் போன்றோரின் பாராட்டை நான் கடவுளின் ஆசியாகவே கருதுகிறேன். தொடர்ந்து வந்து எனக்கு ஆசி வழங்க‌ வேண்டுகிறேன். மிக்க‌ நன்றி...
அன்புடன்,
கனிமொழி