திறமைகள் - நல்வாழ்வின் திறவுகோல்

திறமைகள்Nalvalvin Thiravukol

திறமைகள்

மனிதர்கள் அனைவரும் ஒரே அளவு திறமைகளுடன் இருப்பதில்லை. சில திறமைகள் பிறப்பால் வழி வழியாக வருபவை. சில திறமைகள் நாமே வளர்த்துக் கொள்பவை. எதற்குமே லாயக்கில்லாதவர் என்று ஒதுக்கப் படும் நபர்களிடம் கூட, ஏதேனும் சில திறமைகள் அவருக்கே தெரியாமல் ஒளிந்திருக்கும். ஒருவரது திறமை குடத்திலிட்ட விளக்குப் போல் யாருக்கும் தெரியாமல் அழிந்து போவதற்கும், குன்றிலிட்ட விளக்குப் போல் அனைவராலும் கண்டு வியக்கப் படுவதற்கும், அடிப்படைக்காரணம் என்ன? வழக்கம்போல், அவரவரது ஆழ்மனமும் நம்பிக்கையும்தான்.

உண்மையில், உங்களால் வளர்த்துக் கொள்ள முடியாத திறமைகள் என்று எதுவுமே இல்லை. ஏனென்றால், சர்வ வல்லமை வாய்ந்த பிரபஞ்ச சக்தியின் ஒரு சிறு துளிதான் நீங்கள். உங்கள் ஆழ்மனத்தில் பொதிந்து கிடக்கும் சக்திகள், உங்கள் புறமனத்தால் தட்டி எழுப்பப் படும்பொழுது, அனைவரும் வியக்கும்படியாக உங்கள் திறமைகள் வெளிப்படுகின்றன. அவ்வளவுதான். புதிதாக எதுவும் வெளியிலிருந்து வரவில்லை. பிறரிடம் இருக்கும் எதுவும் உங்களிடம் இல்லாமல் போனதும் இல்லை. நீங்கள் அவை இருப்பதாக நம்பாமல் போனதுதான் குறை.

ஆழ்மனத்தை உசுப்ப நாம் என்னென்ன செய்ய வேண்டும்? வழக்கம் போலத்தான். உங்களிடம் உள்ள குறைகளைப் பற்றி எப்போதும் யோசிக்காதீர்கள். (நான் சொல்வது, திறமைகள் குறித்த குறைகள். மற்றபடி, எண்ணங்களிலுள்ள குறைகளை அவ்வப்போது ஆராய்ந்து நீக்க வேண்டும். அதுதானே நம் பயிற்சியே…J) உங்கள் திறமைகளைக் கண்டறிந்து தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். யாராவது உங்களைப் பாராட்டினால், வெளியில் தன்னடக்கம் காட்டினாலும், உள்ளே உங்களுக்கு நீங்களே ஒரு சபாஷ் போட்டுக் கொள்ளுங்கள்.

உண்மையில், உங்களிடம் ஏதோ ஒரு குறை இருப்பதாக நீங்கள் கருதினால், துரதிர்ஷ்ட வசமாக, அவ்வாறு நீங்கள் நம்பவைக்கப் பட்டிருக்கிறீர்கள் என்றுதான் பொருள். அந்த நம்பிக்கையை என்று நீங்கள் உடைத்தெறிகிறீர்களோ, அன்று அந்தக் குறை உங்களிடமிருந்து காணாமல் போகிறது. ஏனெனில், முழுமையின் உருவம் நீங்கள். குறை எப்படி இருக்க முடியும்? நம் அறியாமையின் காரணமாக, நாமே நம் குழந்தைகளிடம் குறைகள் கண்டுபிடித்து, அவர்களையும் அவ்வாறு நம்ப வைக்கிறோம். இனிமேலாவது, குழந்தைகளிடம் அவர்களது திறமைகளை மட்டும் சுட்டிக்காட்டுங்கள். பாராட்டுங்கள். அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுங்கள். அப்படியே அவர்களிடம் ஏதாவது குறை இருப்பதாக நீங்கள் நம்பினால், அவர்களிடம் அதற்கு எதிர்மறையான கருத்தைக் கூறுங்கள். உதாரணத்திற்கு, உங்கள் குழந்தைக்கு ஞாபக மறதி அதிகம் என்று தோன்றினால், அதை தயவு செய்து அவர்களிடம் சொல்லாதீர்கள். யாரிடமுமே சொல்லாதீர்கள். ஏனெனில், அவன் படித்த பாடங்களை மறப்பது, பாடத்தில் அவனுக்கு ஆர்வமில்லாததால் தானே ஒழிய, ஞாபக சக்தியில் உள்ள குறையினால் அல்ல. உண்மையில், நீங்கள் அப்படி சொல்லிக் கொண்டு, வல்லாரைக் கீரையும் வெண்டைக்காயும் சமைத்து சமைத்துக் கொடுத்தால், ஒவ்வொரு முறையும் அவன் தன் குறையைப் பற்றி ஆழ்மனத்துக்கு சொல்லி உறுதி செய்து கொள்வான். பின்னர் நிலைமை இன்னும் மோசமாகத்தான் போகும்.

அதற்கு பதிலாக, அவர்கள் ஆர்வம் காட்டும் சில விஷயங்களில் அவர்களுக்கு அபாரமான ஞாபகசக்தி இருக்கும். அப்படிப்பட்ட விஷயங்களைக் கண்டுபிடியுங்கள். அவர்கள் எதேச்சையாக அப்படி எதையாவது நினைவு கூரும்போது, அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். “அப்பா, எவ்வளவு நாள் கழிச்சு இதை இன்னும் ஞாபகம் வச்சிருக்கே…“ என்று வியப்பை தாராளமாகக் காட்டுங்கள். நான்கு தடவை இப்படி செய்தால், அவனும் தன் ஞாபக சக்தியை நம்பத்தொடங்குவான். ஒருவேளை அவனே உங்களிடம் “படிச்சதெல்லாம் மறந்து போகுதும்மா!“ என்று புலம்பினால் கூட, அது மறதியல்ல என்றும், ஆர்வக் குறைபாடு என்றும் புரிய வையுங்கள். ஏற்கனவே நீங்கள் அவனது ஞாபக சக்தியை சுட்டிக்காட்டிய தருணங்களை ஞாபகப் படுத்துங்கள். “நீ மட்டும் நினைத்தால், இந்தப் பாடமெல்லாம் உனக்கு சுண்டைக்காய் போலடா மகனே!! “ என்று சொல்லி அவன் உற்சாகத்தை ஊற்றெடுக்கச் செய்யுங்கள். பின்பு பாருங்கள். வல்லாரையாவது, வெண்டைக்காயாவது… அம்மாவும் அப்பாவும் தான் அவன் மறதிக்கு மருந்து.

உங்களை நீங்களே மெச்சிக் கொள்வதில் தவறேதும் இல்லை. அடக்கம் வெளியில் இருந்தால் போதும். திறமைசாலிகளிடம் உள்ள கர்வம் கூட ரசிக்கப் படுவதுண்டு. பாரதியின் கவிதைகளை ரசிப்பவர்களுக்கு அது புரியும். (நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி, எனை சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்…) ஏன், கண்ணதாசன், வைரமுத்து, கிட்டத்தட்ட நல்ல கவிஞர்கள் எல்லோருக்குமே அது உண்டு. (அதற்காக கர்வம் பிடித்தவர்கள் எல்லோருமே நல்ல கவிஞர்கள் என்று நான் சொல்லவில்லை… J).

அடுத்தவர்களை நீங்கள் குறைத்து மதிப்பிடாதவரை, கர்வம் நல்லதுதான். “என் வீட்டை நான் எப்படி வைத்திருக்கிறேன் பார்!!“ என்ற கர்வம் ஒரு குடும்பத் தலைவியிடம் இருந்தால், அந்த வீட்டுக்கு அது நல்லது. அதற்காக அடுத்த வீட்டுக்குள் எட்டிப் பார்த்து, “அய்யய்யே… என்னதிது வீட்டை இவ்வளவு கேவலமா வச்சிருக்கீங்க….“ என்று குற்றம் காண்பது கூடாது. அது உங்களைப் பற்றிய மோசமான அபிப்பிராயத்தை மற்றவரிடம் ஏற்படுத்திவிடும். பிறகு “உறவுகள்“ பற்றிய நம் கோட்பாடு என்னாவது?

ஒரு தலை சிறந்த மேடைப் பேச்சாளர், தன் புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார். “முதல் நாள் நான் மேடையேறப் போகும் சமயம்… என் புத்தகங்களைப் படித்து என்மேல் சிறந்த அபிப்பிராயம் கொண்டிருந்த மக்கள், என் பேச்சும் அவ்வாறே சுவாரஸ்யமாக இருக்கும் என நம்பி அந்த அரங்கில் பெருந்திரளாகக் கூடியிருந்தனர். மறைவிலிருந்து கூட்டத்தைப் பார்த்த எனக்கு, எங்கிருந்தோ அச்சம் வந்து அப்பிக் கொண்டது. இவ்வளவு பெரிய கூட்டத்தில், எந்த தைரியத்தில் நான் பேச ஒப்புக்கொண்டேன்? ஒருவேளை நான் சரியாகப் பேசாமல் போனால், மக்கள் என்மீது வைத்திருக்கும் நன்மதிப்பு என்னாவது? இவ்வாறு நினைத்த மறுகணம், கண்கள் இருண்டு, நாவறண்டு, இதயம் படபடத்து, மயக்கம் வருவது போல் ஆகிவிட்டது. பிறகு மேடைக்குப் பின்னாலிருந்த தனிமையான இடத்துக்குச் சென்றேன். கண்களை மூடி, கொஞ்சம் மூச்சை இழுத்து விட்டு ஆசுவாசப் படுத்திக் கொண்டேன். பிறகு மனக்காட்சியில் நிரம்பி வழியும் அரங்கைக் கண்டேன். என் பேச்சில் கட்டுண்டு சிலைபோல் அமர்ந்திருக்கும் ரசிகர்களைக் கற்பனையில் கண்டேன்.. அவ்வப்போது அரங்கத்தை அதிரடிக்கும் கைதட்டல்களை மானசீகமாகக் கேட்டேன். என் எழுத்துக்கு ஏற்கனவே வந்து குவிந்த பாராட்டுக் கடிதங்களை ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்துப் பெருமிதப் பட்டேன். விரைவில் என் அச்சத்தின் அறிகுறிகள் காணாமல் போயின. என் மனக்காட்சியை உடனே நேரில் காண ஆர்வம் கொண்டேன். அன்றைய உரை இதற்கு முன்பில்லாத பெரும்புகழை எனக்குப் பெற்றுத் தந்தது.“ இங்கு அவரது அச்சம் நீக்கிய அருமருந்து எது? தன் புகழ் குறித்த அவரது கர்வம், ஆர்வத்தைத் தூண்டிவிட்ட மனக் காட்சிகள் – இரண்டும்தான்.

எனவே இனி யாராவது உங்களுக்குத் திறமையில்லை என்று இடித்துரைத்தால், அதற்கு வார்த்தைகளால் பதில் சொல்லாதீர்கள். உங்கள் திறமைகளாலேயே பதில் சொல்லுங்கள். “என்னால் முடியாதது என்று எதுவுமே இல்லை. விரும்பும் எதையும் என்னால் செய்ய முடியும்..“ என்று உங்களுக்கு நீங்களே அடிக்கடி நினைவூட்டிக் கொள்ளுங்கள். பள்ளியிலிருந்து படிக்க லாயக்கில்லாதவன் என்று துரத்தப்பட்டவர்தான் பின்னாளில் அற்புதமான விஞ்ஞானியாகக் கொண்டாடப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசன் என்பதை அடிக்கடி எண்ணிக் கொள்ளுங்கள். அடுத்தவருக்கு உங்கள் திறமையில் சந்தேகம் இருக்கலாம். அந்த சந்தேகங்களை உங்கள் மனதில் ஒரு போதும் நுழைய விடாதீர்கள். உங்கள் ஆழ்மனதின் எல்லையற்ற சக்தியில் எப்போதும் நம்பிக்கை கொண்டவராக இருங்கள். உங்களை வெல்ல இங்கு ஒருவரும் இல்லை…

தொடரும்...

Comments

என் அன்புக்குரிய தோழியர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்... சும்மாவே எல்லோரும் சமைத்து அசத்தும் சமையல் ராணிகள். தீபாவளி வந்துட்டா கேக்கவா வேணும்? ம்ம்ம்ம்ம்... அசத்துங்க...சமையலில் உங்க திறமையை தாராளமாக் காட்டத்தான் இந்த வாரம் திறமைகள் பத்தி எழுதியிருக்கேன்.குதூகலமாக் கொண்டாடி மகிழ என் வாழ்த்துக்கள்...

அன்புடன்,
கனிமொழி

முதலில் உங்களுக்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.. கட்டுரை வழக்கம் போல அருமை.. நன்றி.. கட்டுரைக்கு வாழ்த்துக்கள்...

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

தீபாவளி பரபரப்பிலும் என் கட்டுரைக்கு நேரம் ஒதுக்கிப் படித்து, இனிய வார்த்தைகளால் பாராட்டிய உங்களுக்கு மிக்க நன்றி அபி...

ur message very nice .